இப்படித்தான் ஆரம்பித்தது மன்மத வருடம்!
ஒருவாரமாக வீட்டில்
ஒரே தொல்லை.
"ஏங்க, அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்காரன் வேற போன்
பண்ணிக்கிட்டே இருக்கான். ஒருநாள் ஆபீஸுக்கு லேட்டாப் போனா என்ன? அந்த மெடிக்கல் டெஸ்டை முடிச்சுக்
குடுத்துடுங்களேன். ஒரு மணிநேர வேலைதானே!"
எனக்கு இந்த
ஆஸ்பத்திரி, டாக்டருங்களை எல்லாம்
பார்த்தாலே கொஞ்சம் அலர்ஜி.
ஏதோ, இந்த நர்ஸுங்க இருக்கவும், கொஞ்சம் மனசத் தேத்திக்கிட்டுப் அங்கெல்லாம் போகமுடியுது!
நடுவே எனக்கு இன்னொரு
டவுட் வேற!!
அம்மணி ஏன் இவ்வளவு
வேகமா இருக்கா? இந்த
இன்சூரன்ஸ் கம்பெனி படுபாவி டெத் பெனிபிட் பத்தி ரொம்ப சொல்லிட்டானோ!
கெடைக்கிற அரை
சாப்பாட்டுக்கும் ஆப்பு வச்சுக்க வேண்டாம்ன்னு வாயை மூடிக்கிட்டு நாளைக்கு,
நாளைக்குன்னு தள்ளிக்கிட்டே வந்தேன்!
சரியா வந்தது புது
வருஷம்!
நாளைக்கு லீவுதானப்பா?
அப்படின்னு பொண்ணு போன்ல கேட்கும்போதே
சுதாரிச்சிருக்கணும்!
"ஆமா செல்லம்"ன்னு
சொன்ன மறு நொடி, போன் அம்மணி கைல!
ஸ்பீக்கர் போட்டுப்
பேசியிருக்குதுக போல!
அப்போ நாளைக்கு CK
ஹாஸ்பிடல்ல அப்பாயின்மெண்ட் வாங்கிடறேன்.
"இல்லம்மா,
நாளைக்கு ..... "போன கட்டாகி
காத்துகிட்ட பேசிட்டிருந்திருக்கிறேன்.
சரி, காலை சுத்துன பாம்பு கடிக்காம விடாதுன்னு,
- ஐயா நான் இன்சூரன்ஸ் கம்பெனியைச
சொன்னேன் சம்சாரத்தை அல்ல, - வீட்டுக்குப் போனதும் “மறுநாள் எத்தனை மணிக்கு ஆஸ்பத்திரிக்குப் போகணும்"னு கேட்டா,
"காலைல
ஏந்திருச்ச உடனே, தண்ணி கூடக்
குடிக்காம வெறும் வயித்தோட போகணும்!"
"அப்போ சட்டை போடக்கூடாதா"
ன்ன மொக்கைக்கு, தீக்காயம் ஆகாம
தப்பிச்சது போனஜென்மத்துப் புண்ணியம்!
“சரி, காலைல ஆறு மணிக்கெல்லாம் போயிட்டு வந்து, புது வருஷம், பிள்ளைகளுக்கு ஏதாவது ஸ்வீட்
பண்ற வழியைப் பாருங்க!
காலைல
எந்திருச்சு தூங்கறவங்களத் தொந்தரவு பண்ணாம, நீங்களே கதவைப் பூட்டிக்கிட்டுப்
போய்டுங்க!”
இருபத்தஞ்சு
வருசத்துக்கு இதுகூடப் பழகலன்னா எப்படி?
தலை தன்போக்குல ஆடுது –வழக்கம்போல. சரின்னுதான் அர்த்தம்!
காலைல எதுக்கும்
இருக்கட்டும்ன்னு பெர்ப்யூம் கொஞ்சம் தெளிச்சுக்கிட்டு, திண்டல் முருகனை அதிகாலைலயே தொந்தரவு பண்ண வந்திருந்த
பட்டுப் புடவைகள சேவிச்சுக்கிட்டு பதினைஞ்சு கிலோமீட்டர் போய் CK ஹாஸ்பிடல் வாசல்ல வண்டிய நிறுத்தி, மூஞ்சியத் தொடச்சுக்கிட்டா, வாட்ச்மேன் படுபாவி நமுட்டு சிரிப்பு
சிரிச்சுக்கிட்டு சொல்றான், “லேப்
டெக்னீசியனுக்கு எங்க சித்தி வயசு”ன்னு!
என்னடா, மன்மத வருஷம் இப்படி ஆரம்பிக்குதுன்னு
எரிச்சலோட லேபுக்குப் போனா, வாட்ச்மேன்
மூதேவி பொய் சொல்லியிருக்கு.
அங்கிருந்த
ஆயாவுக்கு எங்க பாட்டிவயசு!
எங்க வேணும்னாலும்
குத்திக்கங்கன்னு வெறுப்பா கைய நீட்டினா, அரைலிட்டர் சிரிஞ்சு நிறைய ரத்தத்தை உறிஞ்சிக்கிட்டு (அடிப்பாவி, எங்க வீட்டு மொத்தக் கொசுவுக்கும், ஒரு மாசத்துக்கு ஆகாரம்), கையில ஒரு பாட்டிலைக் கொடுத்து, ரெஸ்ட் ரூமுக்குக் கை காமிச்சது பாட்டி.
உள்ளே போய் கதவை
சாத்துனா, இருட்டு மூஞ்சில
அடிக்குது!
பொக்கிஷம் மாதிரி
பாட்டிலைக் கொண்டுவந்து வெச்சுட்டு, “ஏம்மா, உள்ள லைட்டுப்
போடக்கூடாதா”ன்னு கேட்டா, கெழவிக்கு குசும்பு, “ஏன், இருட்டுல
பைப்புத் தண்ணியப் புடிச்சுக்கிட்டு வந்துட்டியா” ங்குது.
அது வம்சத்தையே
மனசுக்குள்ள திட்டிக்கிட்டே, “எதுக்கும்,
ப்ரக்னன்சி டெஸ்ட்டும்
பாத்துருங்க” ன்னு பதிலுக்கு சொல்லிட்டு வந்துட்டேன்.
அடுத்தது, ECG
அக்கப்போரு எங்கேன்னு பார்த்து, முதல் மாடிக்குப்போனா, ……..
ஆஹா! பாரதியார்
வாழ்க!
கேரள நாட்டிளம்
பெண்கள் பட்டாளமே அங்கதான் இருக்கு!
ச்சே நல்ல டி ஷர்ட்டா
போட்டுக்கிட்டு வந்திருக்கலாமோன்னு அப்பத்தான் தோணிச்சு.
சரி, எப்படியும் கழட்டத்தானே சொல்லப்போறாங்க அப்படின்னு
(வக்கிரமா நினைக்காதீங்க பாவிகளே) உள்ள போனதும் ஆர்வக்கோளாருல, எங்க படுக்கணும்னு கேட்டது தப்பாங்க, சேச்சிங்க கூட்டமா மொறைக்குதுங்க!
நம்ம ராசி, உள்ளதுக்குள்ளயே அழகான பொண்ணு ஜொல் - சீ - ஜெல்
எடுத்துக்கிட்டு பக்கத்துலவந்தப்போ, காக்க காக்க கனகவேல் காக்கன்னு வெட்கத்துல, கண்ணை நல்லா தெறந்து வெச்சுக்கிட்டு திண்டல்
முருகனுக்கு மனசுக்குள்ள ஒரு பெரிய நன்றி சொல்லிக்கிட்டேன்.
மொதல்ல ஒரு மெஷின்ல
எடுத்துட்டு, இன்னொரு மெஷின்ல
கனெக்ட் பண்ணி, மூச்சை நல்லா
இழுத்துப் பிடிங்க அப்படின்னுது அந்த ஸ்ரீதிவ்யா!
மொதல்லையே அப்படித்தான்
இருக்கேன்றது அதுக்குத் தெரியல பாவம் (தொப்பை தெரியக்கூடாது பாருங்க!)
எடுத்து முடிச்சு,
ரிப்பன் ரிப்பனா கத்திருச்சு ஓட்டும்போது
எதுக்கு சேச்சி ரெண்டு மெஷின்ல எடுத்தீங்க அப்படின்னா, "மொத மெஷின் வொர்க் பண்ணல"
ரிப்போர்ட்ட கைல கொடுத்துட்டு,
பத்துமணிக்கு மேல, இந்த ரிப்போர்ட், லேப் ரிப்போர்ட் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு,
டாக்டரம்மாவ வந்து பாருங்க
அப்படின்னு சொன்ன சேச்சிக்கு, இருக்கட்டும்ன்னு
ஒரு ஹேப்பி விஷு சொல்லிட்டு, வர்ற
வழியில ஒரு கும்பகோணம் பில்டர் காப்பி குடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா, குடும்பமே அனந்த சயனத்துல இருக்கு!
தலையெழுத்த
நொந்துக்கிட்டு, ஹிண்டு சித்திரை
மலரை எடுத்துக்கிட்டு ரெஸ்ட் ரூம் போய் செட்டில் ஆனா, பையன் கதவ ஒடைக்கிறான் - "சீக்கிரம் வாப்பா.
பாத்ரூமுக்கு புக்கை எடுத்துக்கிட்டுப் போகாதேன்னு எத்தனை தடவை சொல்றது"ன்னு
காலங்கார்த்தால, ஞானோபதேசம் வேற!
தமிழனுக்கு எப்போதான்
சுதந்திரம் கிடைக்குமோன்னு வெளியவந்தா, பெண்டாட்டித் தெய்வம் கேட்குது, "என்ன ஆச்சு மெடிக்கல் டெஸ்ட்?"
மாமனாருக்கு
அப்புறம், சனி நிரந்தர
வாசம், நம்ம நாக்குலதானே!
கிரீன் டீக்கு
ஆசைப்பட்டு ECG வைபோகத்தை
ஏகப்பட்ட பில்ட் அப் கொடுத்து சொல்லித் தொலைச்சத்துக்கு கை மேல பலன்.
"சிவா, பத்துமணிக்கு அப்பகூட நீயும் போறியா?"
ரெட்ட ரெடியா வந்து
நிக்குது வாரிசு!
பொண்டாட்டிகிட்ட
உண்மை பேசுனா என்ன ஆகும்னு பார்த்துக்குங்க!
சரின்னு, ECG ரிப்போர்ட்ட வச்சு சீரியஸா பார்த்துக்கிட்டிருந்தா,
பொண்ணு மெதுவா கேட்டா - "அதுல என்னப்பா பார்க்கறே?"
"இல்லடா, ரெண்டு மெசின்ல எடுத்தாங்க, ஆனா, ஒரு கோடு கூட நேரா இல்லை எல்லாமே மேலும் கீழுமா இருக்கு" அப்படின்னு சீரியஸா
சொன்னா, முதுகுலையே ஓங்கி ஒன்னு
வைச்சுட்டு தூ ன்னு துப்பிட்டு தூரப் போய்ட்டா!
பத்து மணிக்கு,
எதுக்கு வம்புன்னு, கொஞ்சம் சுமாரான சட்டையையே போட்டுக்கிட்டு (வருஷப்
பொறப்பு, செவ்வாய்க்
கிழமை வேற, ஷேவ்
பண்ணவேண்டாம் - அம்மணி திருவாய்மொழி - ECG கதை விளைவு), மறக்காம, ஜேம்ஸ்பாண்ட் – The spy who loves me ஐ
கையோட கூட்டிக்கிட்டு அடுத்த பயணம்!
லேப்ல போய்
பாட்டிகிட்ட ரிப்போர்ட்ட வாங்கிக்கிட்டு ரிசப்ஷன்ல கொஞ்சம் லட்சணமாய் தெரிஞ்ச
பொண்ணுகிட்ட வந்து கொடுத்தா, இன்னொரு
பைங்கிளையக் கூப்பிட்டு, BP எடுத்துட்டு,
மேட்ரன் கிட்ட கூட்டிக்கிட்டுப் போன்னு
சொன்னா, “வாங்கண்ணா”ன்னு காத்தப் புடுங்குது ஈரோட்டுப் பைங்கிளி!
BP எடுத்துட்டு,
80/120 அப்படின்னு சொன்ன நர்ஸ் கிட்ட,
நார்மல் எவ்வளவுன்னு கேட்டா, நீங்க நார்மலாத்தான் இருக்கீங்க அப்படின்னுச்சு!
“என்னை நார்மல்ன்னு சொன்னோ மொத ஆளு நீங்கதான்” அப்படின்னு வழிஞ்சதுக்கு அந்தப் பொண்ணு சிரிச்சத நல்லவேளை, டீவீ ல நயன்தாராவை பார்த்துக்கிட்டிருந்த பையன்
கவனிக்கல!
அடுத்த சோதனை,
ஹைட் பார்க்கறதுல ஆரம்பிச்சது.
தலைக்கு மேல தொங்கிய
அளவைப் பார்க்க எதிர்ல கிட்ட்ட்ட்ட வந்து எக்கிப் பார்த்தும் எட்டாத அந்தத்தலையிலிருந்து
வந்த ஷாம்பூ வாசமும், கலைந்திருந்த
சட்டை பட்டனும்....
ஈஸ்வரா, இது
என்ன சோதனை!
நானே
பார்த்துசொல்றேன் அப்படின்னு நகந்துக்கிட்டேன். பின்ன, பையன் பக்கத்துல நிற்கும்போது என்ன செய்ய,
ஆனாலும்
சொல்லிட்டேன்- இப்போ BP பார்த்திருந்தீங்கன்னா
180/220 இருந்திருக்கும்!
வெட்கப்படும்போது
ஈரோட்டுப் பெண்கள் தனி அழகு.
காம்ப்ளான் குடிங்கம்மா,
நல்லா வளருவீங்க அப்படின்னு பொதுவா
சொல்லிட்டு, மேட்ரன் கிட்டப்போனா,
அது அந்த பார்ம்அ வைச்சுக்கிட்டு ஆயிரம்
கேள்வி கேட்குது.
எப்பவாவது ஆபரேசன்
பண்ணீருக்கா ? - இல்லைங்க நான்
பொறந்தது கூட நார்மல் டெலிவரிதான்!
எங்காவது அடி
பட்டிருக்கா- இல்லைங்க, சம்சாரம் கூட
அடிக்கறதில்லை!
வயத்துவலி ஏதாவது -
இல்லைங்க
ஒட்டுக்குடல் ஆபரேஷன்
ஏதாவது - இல்லைங்க, ஆண்டவன்
அனுப்பிச்ச ஒரிஜனல் ஸ்பேர் பார்ட் எதுவும் இன்னும் மாத்தல!
சுகர் - இல்லை
BP - இல்லை
பல் வலி - இல்லை
என்னம்மா இது ரேஷன்
கடையா, எதுவுமே இல்லைங்கறீங்க! (
வீட்டுக்குப் போய் மகன் சொன்னது - அப்பாவுக்கு எதுவுமே இல்லையாம்மா - அறிவு கூட! -
கொலைகாரக் குடும்பம்)
சரி, ரெண்டு அடையாளம் சொல்லுங்க! - "முழங்கையில
மச்சம்!"
வேண்டாம்
பார்க்கறமாதிரி இடத்துல சொல்லுங்க, மூஞ்சில
ஏதும் இல்லையா!
நீங்களே
பார்த்துக்குங்க!
புதைபொருள் ஆராய்ச்சி
மாதிரி ரெண்டுபேரும் என் மூஞ்சிய உத்துப் பாக்குதுங்க!
"அப்புடிப் பாக்காத
மயிலு, எனக்கு வெக்கமா இருக்கு!"
சிரிச்சு சிரிச்சு
ரெண்டுபேருக்கும் மொகமே செவந்திருச்சு- பையனுக்கு கோபத்துல!
தேங்க்ஸ் சொல்லிட்டு
மனசே இல்லாம எழுந்திருச்சு டாக்டரம்மா ரூமுக்குப் போனா, அங்க இருந்த டாக்டருக்கு ரொம்பச் சின்ன வயசு
அநேகமா, என் மாமனாருக்கு கிளாஸ் மேட்டா இருக்கும்!
தலை விதியேன்னு அது
ரிப்போர்ட் எல்லாம் பார்த்து, கையெழுத்துப்
போட்டுட்டு, நீங்க போலாம்ன்னு
தலைய ஆட்டினதும், மெதுவா கேட்டேன்,
“அந்த இன்ஸூரன்ஸ் பணம் எப்ப தருவீங்க!”
அநேகமா CK ஆஸ்பத்திரியில என்னை இந்த வருஷம் முழுக்க மறக்க
மாட்டாங்க!
பி கு:
திரும்பி வர்ற வழியில
திண்டல் கோவில்ல இருந்து நேரா வண்டியில விழுந்த பெண்ணை, நீ புஷ்பா மகளானனு கேட்க வாய் திறந்தா, பின்னாடி வந்தது காஞ்சனா பொண்ணோ?
போங்கப்பா!
ஈரோட்டுல
எத்தனை கொசுவர்த்தி!