புதன், 1 ஏப்ரல், 2015

துரோகத்தின் விலை -2

லட்சுமி!

கோவை ஏர்போர்ட் வரும்வரை லட்சுமி எதுவுமே பேசவில்லை.
உள்ளுக்குள் குமுறிக்கொண்டு வந்த இயலாமை, கோபம், வருத்தம் எதையும் முகத்தில் காட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

எவ்வளவு கேவலமாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம்.

படித்த படிப்பும், அப்பா கொடுத்த தைரியமும் இப்படி ஒருவன் காலடியில் நாய்போல் சுருண்டுகிடக்கவா?

தன்னை எவ்வளவு சுலபமாக முட்டாள் ஆக்கியிருக்கிறார்கள் இந்த இரண்டு ஆண்களும், அவர்களை கண்ணை மூடிக்கொண்டு என்னை ஏமாற்று, ஏமாற்று என்று தேடிப்போய் ஏமாந்திருக்கிறோமே என்று தன்மீதே வெறுப்பாய் வந்தது.

தான் பரமசிவத்தின் மகள் என்பதை இந்த இரண்டு ஆண் ஓநாய்களுக்கும் புரியவைக்கவேண்டும்

அதுவரைக்கும் அவர்கள் வழியிலேயே முட்டாளைப்போல் நடித்தே சாதிக்கவேண்டும்!

சென்னைக்கு விமானம் கிளம்பியவுடன், வரதராஜனிடம் மெதுவாகக் கேட்டாள்.
அங்கிள், உங்களுக்கு அப்பாவோட எத்தனை வருஷ பழக்கம்?”
அது இருக்கும் ஏறத்தாழ பத்து  வருஷம். இப்போ உங்க அப்பா போய்க்கூட பத்து வருஷமா நம்ம கம்பெனிக்கு நான்தானே லீகல் அட்வைசர்.
ஏம்மா?”
ஒன்னும் இல்ல அங்கிள், உங்களுக்கு என் மேல எவ்வளவு அக்கறை இருந்தா, இப்படி விடிய விடிய எனக்காக அலைவீங்க!

ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். உண்மையை சொல்லனும்னா இன்னைக்கு நீங்கதான் என் கண்ணைத் திறந்தீங்க.
நான் பாட்டுக்கு அவர்கிட்ட அன்னைக்கே சண்டைப் போட்டு அழுதிருந்தா, இன்னைக்கு இப்படி ஒரு தெளிவு வந்திருக்காது இல்லையா.

எனக்கு இன்னொரு உதவி செய்யணும் நீங்க.

சொல்லும்மா, நீ என் மகள் மாதிரி! உனக்கு இல்லாத உதவியா!

நான் சாயங்காலம் உங்க ஆபீஸுக்கு வர்ரேன்.

என் மேல இவ்வளவு பிரியம் வெச்சிருக்கற சிவாவுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுக்க உங்க உதவி தேவை.

சொல்லிக்கொண்டே புன்னகைத்த லட்சுமி, சென்னை வரும்வரை வேறு எதுவும் பேசவில்லை.

ஏர்போர்டுக்கு வந்த வண்டியில், வரதராஜனை வீட்டில் இறக்கிவிட்டு, வீட்டுக்கு வரும்போது மணி பத்து. பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கூடம் போய் வீடே அமைதியாக இருந்தது.

ஒரு அரை மணி நேரம், தலை சாய்த்துப் படுத்தவள் கண்களுக்குள் நேற்றிரவு நடந்தது நிழலாடியது.

வரதராஜனின் மனைவி கண்ணீருடன் கைபிடித்துச் சொன்ன டெலிபோன் உரையாடல், அவளை மனதளவில் தயார் செய்திருந்தாலும், நேற்றிரவு, தன வருகையை எதிர்பார்த்தே திட்டமிட்டு நடித்ததும், வரதராஜன் முன்பே, தன்னை, ஆறுதல் சொல்வதாய்க் கட்டியணைத்த சிவராமன் முகத்துப் புன்முறுவலும், கண்ணடிப்பும், பக்கவாட்டுக் கண்ணாடியில் பிரதிபலித்ததும் அவளைக் குமுற வைத்துவிட்டது.

தான் முன்பே அந்த ஹோட்டலின் கெஸ்ட் லிஸ்டை ஊட்டியில் இருக்கும் தன் கல்லூரிதோழி மீரா மூலம் வாங்கிவிட்டதையோ,
அதில், Mrs & Mr. சிவராமன் என்ற புக்கிங் இருந்ததையோ, அவள் யாரிடமும் சொல்லவில்லை.

ஆண் என்ற திமிரும், தான் எது செய்தாலும் பெண் அடங்கித்தான் போகவேண்டும் என்ற தலைகனமும் இவர்களை எப்படி ஒரு நாடகம் நடத்தவைத்திருக்கிறது.

எரிவதை அணைத்தால், கொதிப்பது அடங்கிவிடும்.
அதற்கான வழிமுறைகளை இனி, தாமதம் இன்றி செய்யவேண்டும்.

துரோகம் எப்படி வலிக்கும், அதற்கான தண்டனை என்ன என்பதை, சிவராமன் உணர்ந்தே ஆகவேண்டும்.

தன் மற்றொரு கல்லூரித் தோழியின் கணவர், ஆடிட்டர் ரவியிடம், மறுநாள் காலை சந்திக்க நேரம் கேட்டவள், மாலைவரை அமைதியாக, ஏன், நிம்மதியாகக்கூட, உறங்கினாள்.

மாலை வரதராஜனை பார்க்கப் போனபோது, அவர் முகத்தில் குழப்பம் தெரிவதைப் பார்த்து திருப்தியாகப் புன்னகைத்துக்கொண்டாள்.

அங்கிள், நம் இரண்டு நிறுவனங்களுக்கும் நீங்கள்தானே லீகல் அட்வைசர்?, அதில் யார் யாருக்கு எத்தனை சதவீதம் பங்கு?”

கேள்வியே தப்பு லட்சுமி, இப்போது இரண்டும் இணைந்து ஒரே லிமிடட் கம்பெனியாக இருக்கின்றன.

உன் அப்பாவின் உயில்படி, லட்சுமி எக்ஸ்போர்ட்ஸ் பங்குகள் தொண்ணூறு  சதவிகிதம் உன் பெயரிலும், அதோடு இணைந்த சிவா எக்ஸ்இம் பங்குகள் சிவராமன் பெயரில் பாதியும், உன்  பெயரில் பாதியும் இருந்தன.

அளவில் பெரியதான லட்சுமி எக்ஸ்போர்ட்ஸ் ல் இணைகையில், இந்தப் பங்குகள், இரண்டுக்கு ஒன்று என்ற அளவில் மாறியதால்,
இன்றைய தேதியில், உன்பெயரில் எழுபத்தியேழு சதவீத பங்குகளும், சிவராமன் பெயரில் பதினாறு சதம் பங்குகளும், மற்றவர்களிடம் ஏழு சதவிகித பங்குகளும் இருக்கின்றன.

என்ன விஷயம் லட்சுமி, எதற்காக இத்தனை விசாரணை?”

இப்போ சிவராமன்தானே எம் டி?”

இதில் என்ன சந்தேகம்? வருடம்தோறும் நடக்கும் போர்ட் மீட்டிங் ஒரு சடங்குதானே! அதில் உன்னுடையதும் அவரதுமான பங்குகளின் அடிப்படையில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படும் எம் டி அவர்தானே!

நான் அவருக்கு ஓட்டுப் போட மறுத்தால்?”

சிரித்துக்கொண்டுதான் கேட்டாள்.

வரதராஜனின் முகம் விழுந்துபோனது.

ஒரு நொடியில் சுதாரித்துக் கொண்டவர்,
நீ அல்லது நீ கை காட்டுபவர்தான் எம் டி யாக இருக்கமுடியும்.
ஏன் கேட்கிறாய் லட்சுமி?”

இல்லை அங்கிள், என்மீது அவர் எத்தனை பிரியம் வைத்திருக்கிறார் என்பதை நீங்களே பார்த்தீர்கள். அவரை எவ்வளவு தவறாக நான் சந்தேகப்பட்டும், அவர் எப்படி நிதானமாக நடந்துகொண்டார்!

அவருக்கு ஒரு பரிசு தரவேண்டாமா?”

என் பெயரில் இருக்கும் பங்குகளை அவர் பெயருக்கு மாற்ற ஏற்பாடு செய்யுங்கள்.

இது அவருக்குத் தெரிய வேண்டாம்.

இந்த வருடம் போர்ட் மீட்டிங் நடக்க இன்னும் எத்தனை மாதம் இருக்கிறது அங்கிள்மூன்று மாதம்தானே, அதற்குள் பங்குகளை மாற்ற எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடுங்கள்.

இந்த போர்ட் மீட்டிங்கில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நானும் கலந்துகொள்கிறேன்.  அதில் வைத்து, அத்தனை ஷேர் ஹோல்டர் முன்னாலும், என் பங்குகளை அவர் பெயரில் மாற்றக் கையெழுத்துப் போடுகிறேன்.

இதுதான் அவர் அன்புக்கு நான் தரும் பரிசு.
சரிதானே அங்கிள்!
கண்ணடித்துச் சிரித்தபடி எழுந்தாள் லட்சுமி.

மறுநாள் தோழியின் கணவர் ரவியைப் போய்ப் பார்த்தபோது, தன மனதில் உள்ள திட்டத்தை தெளிவாக விளக்கியவள், ஊட்டியில் நடந்த கதையை அவர்கள் இருவருக்கும் யாருக்கோ நடந்ததுபோல் உணர்ச்சியே இல்லாமல் விவரிக்கும் அளவுக்கு தெம்பாகவே இருந்தாள்.

பொங்கித் தீர்த்த தோழியைத்தான் பெரும்பாடுபட்டு சமாதானப்படுத்த வேண்டி வந்தது.

மூவருமாக, ரவியின் நண்பர் ஒரு வக்கீலைப் பார்க்கப்போனபோது, அவர் பெயர்ப் பலகையைப் பார்த்து அத்தனை துக்கத்திலும், கோபத்திலும் புன்னகைத்துக்கொண்டாள்.

ஏறத்தாழ இரண்டுமணிநேர தீவிர டிஸ்கசனுக்குப் பிறகு, தோழிகள் இருவரும், அவர்களின் இன்னொரு தோழியான பிரபல நரம்பியல் மருத்துவரைப் பார்க்கப்போனார்கள்.

இரவு வீட்டுக்கு வரும்போது, அசதியை மீறிய திருப்தியும், நிம்மதியும் லட்சுமிக்கு.

பிள்ளைகளைக் கட்டிக்கொண்டு நிம்மதியாகத் தூங்கினாள்.

வெள்ளிக்கிழமை காலை தேன் குடித்த நரிபோல வந்த சிவராமனைப் பார்க்கவே குமட்டிக்கொண்டு வந்ததை, கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள்.

கண்டிப்பாக வரதராஜன் சொல்லியிருப்பார் என்று தெரியும்.
மகிழ்ச்சி முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

பிள்ளைகள் பள்ளிக்குப் போனதும், பகலென்றும் பாராமல் மேலே வந்து விழுந்தவனை, உடல் நிலையக் காட்டி நாசூக்காக விளக்கி எழுந்துபோனவள், வேலைக்காரியைப் போகச்சொல்லிவிட்டு, தன கையாலேயே சூப் தயாரித்துவந்து கொடுத்தாள்.

Dimenhydrinate  என்றிருந்த மாத்திரைகள் கூடவே மிகக்குறைந்த அளவு opioid தினமும் இரண்டாய்க் கரைந்தன.

சிவராமன் மற்றபடி நலமாகவே இருந்தாலும்,
படுக்கையில் பழைய உற்சாகம் வேகமாகக் குறைந்து, ஒரே மாதத்தில் ஈடுபாடே இல்லாமல் போய் தள்ளிப் படுப்பதையும், அந்த சமயங்களில் இயலாமையும் தீவிர தாழ்வு மனப்பான்மையும் சிவராமனை ஆட்டிப் படைப்பதையும் புன்னகையுடன் கவனித்துவந்தாள்.

ஒருமுறை, தன்னையும் அறியாமல் நித்யாவிடம் அவர் போனில் சீறியதையும் கவனிக்கத் தவறவில்லை.

இடையே, ஆடிட்டர் ரவியும், அந்த வக்கீலும், எல்லா சட்ட சம்பந்தமான வேலைகளையும் முழு வேகத்தில் செய்துவர,
ஒருபுறம் அப்பாவி வரதராஜனும், தன பங்குக்கு ஷேர் மாறுதலுக்கான எல்லாப் பேப்பர்களையும் தயார் செய்துவைத்தார்.

இந்த வருடம் போர்ட் மீட்டிங்கிற்குத் தானும் வருவதாய் லட்சுமி சொன்னபோது, மிகையாக ஆச்சரியப்பட்டான் சிவராமன்.

மனதுக்குள் அந்த நடிப்பு வெறுத்து வழிந்தாலும்,
ஏன், நான் வரக்கூடாதா”, என்று கொஞ்சலாகக் கேட்டாள் லட்சுமி.

அந்த மகத்தான போர்ட் மீட்டிங் நாளும் வந்தது.

முந்தையநாள் வரதராஜன் தந்த காகிதங்களை ஒரு கைப்பெட்டியில் எடுத்துக் கொண்டு, பட்டுப் புடவையில் தேவதைபோல் கிளம்பிய லட்சுமியை ஆச்சரியமாகப் பார்த்தார் சிவராமன்.

சரியாக நான்கு மணிக்கு போர்ட் மீட்டிங் ஆரம்பித்தது
.
லட்சுமி ஒருபுறமும், லீகல் அட்வைசர் வரதராஜன் மறுபுறமுமாக நடுநாயகமாக் கம்பீரமாக உட்கார்ந்திருந்த சிவராமனைப் பார்க்கையில், பழைய அன்பில் ஒருகணம், லட்சுமிக்கு மனம் கசிந்தது.

வழக்கமான சம்பிரதாய ஆண்டறிக்கை வாசிப்புக்குப்பின், வரதராஜன், இந்தவருடம், சேர்மன் மற்றும் மானேஜிங் டைரக்டர் பதவிக்கும், இதர லீகல் அட்வைசர் மற்றும் ஆடிட்டர் நியமனம் பற்றியுமான தீர்மானத்தை வாசிக்க எழுந்தபோது,
லட்சுமி அவரை அழுத்தமாகக் கையமர்த்தினாள்.

சிவராமனும், வரதராஜனும் ஒருவரைஒருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொள்வதை ஓரக்கண்ணால் பார்த்தவாறே எழுந்த லட்சுமி,
ஓரமாக நின்ற அலுவல் உதவியாளரை அழைத்து, வெளியே, ரிசெப்ஷனில் காத்திருக்கு இருவரை உள்ளே அழைத்துவரச் சொன்னாள்.

புதிராகப் பார்த்த அனைவரையும், திகைத்துப் பார்த்த சிவராமன், வரதராஜனையும் அலட்சியப்படுத்திவிட்டு, உள்ளே நுழைந்த இருவரையும் அமரப் பணித்தாள்.

அவர்களை யாருக்கும் அறிமுகம் செய்யாமல் பேச ஆரம்பித்தாள்.

என் தந்தையின் உழைப்பில் விளைந்த கம்பெனி இது.
அவர் இருந்த இடத்தில் இன்று என் கணவர் இருக்கிறார். அவரது நிர்வாகத் திறமை நீங்கள் அனைவரும் அறிந்ததே. பத்தாண்டு கால அவரது உழைப்பை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.
ஆனால்,
அவரது இன்னொரு திறமை பற்றி நான் சொல்லியாகவேண்டிய நாள் இன்று.
மூன்று மாதங்களுக்குமுன், என் கணவரும், உங்கள் C.M.D. யுமான திரு. சிவராமன் அவர்கள் எனக்கு ஊட்டியில் வைத்து ஒரு பரிசு கொடுத்தார். எந்த மனைவிக்கும் கணவன் கொடுக்கமுடியாத பரிசு.
அதற்கு உறுதுணை, என் தகப்பனின் பத்தாண்டு நண்பர், நம் லீகல் அட்வைசர் திரு. வரதராஜன் அவர்கள்.
ஆனால் அது கொஞ்சம் இல்லீகல் அட்வைஸ் என்பது அவருக்கு வயதானதால் புரியவில்லை.
அந்தப் பரிசு என்னவென்று நான் இப்போது உங்களுக்குச் சொல்லவேண்டியது அவசியம் என்று திரு. சிவராமன் அவர்கள் நினைத்தால், அதைச் சொல்வதில் எனக்கொன்றும் தயக்கம் இல்லை.

சொன்னவாறே, கம்பீரமாக சிவராமனையும், வரதராஜனையும் பார்த்தாள்.
இருவர் முகமும் இருண்டுபோய் உட்கார்ந்திருந்தார்கள்.

இடையில், இந்த மூன்றுமாத மறைமுக வைத்தியத்தில், எனக்கு மட்டுமல்ல, இனி எந்தப் பெண்ணுக்கும் அவர் பரிசே கொடுக்கமுடியாத நிலையை அடைந்திருக்கிறார். 
அதற்க்கு என் மருத்துவத் தோழிக்கு நன்றி.

இன்று அந்தப் பரிசுக்கு நான் நன்றி சொல்லும் நாள்.

என் தந்தை உழைத்துச் சேர்த்த சொத்தை அவர் பேரன்களுக்குக் கொண்டு சேர்க்கும் கடமை இந்த நிறுவனத்தின் பெரும் பங்குதாரரான எனக்கு இருக்கிறது.

எனவே, இந்த நிதியாண்டுமுதல், இந்த நிறுவனத்தின் C.M.D. பதவிக்கு நான் போட்டியிடுகிறேன்.
என் M.B.A. படிப்பு அதற்கு உதவும் என்று நான் நம்புகிறேன்.
இந்த மாறுதலுக்கான அனைத்து சட்ட உதவிகளையும், நம் புது ஆடிட்டர், திரு. ரவி அவர்கள் ஏற்பாடு செய்வார்.
முதுமை காரணமாக இந்த வருடத்திலிருந்து நம் சட்ட ஆலோசகர் பொறுப்பிலிருந்து விடைபெறும் வரதராஜன் அவர்கள், மூன்று மாதம் முன்பு கம்பெனியிடமிருந்து கடனாகப் பெற்ற ஐந்து லட்ச ரூபாயை இன்னும் இரு தினங்களுக்குள் திருப்பிச் செலுத்துவார்.
அப்படித்தானே அங்கிள்?

இருண்டுபோன முகத்துடன் மௌனமாகத் தலை அசைத்தார் வரதராஜன்.

C.M.D. பதவியிலிருந்து ஓய்வுபெறும் திரு. சிவராமன், வெறும் ஷேர் ஹோல்டராக, நம் அடையாறு கெஸ்ட் ஹவுசில் ஓய்வில் இருப்பார்.

உங்களுக்கு நம் புது ஆடிட்டரையும், சட்ட ஆலோசகரையும் அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

புதிதாக உள்ளே நுழைந்த இருவரும் எழுந்து நிற்க, லட்சுமி தொடர்ந்தாள்,

மீட் அவர் ஆடிட்டர், மிஸ்டர் ரவி
அண்ட்
லீகல் அட்வைசர்,  

மிஸ்டர்  நித்யானந்தம் சாரி - நித்யா!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக