வியாழன், 9 ஏப்ரல், 2015

செம்மரக் கடத்தலும் சில கேள்விகளும்.


பொதுவாகவே, தமிழன் எளிதில் உணர்ச்சிவசப் படுபவன், அதைவிட எளிதாய் அதை மறந்து அடுத்ததைத் தேடுபவன்.

ஏதாவது உணர்ச்சியைத் தூண்டுவதாய் நடக்கையில், ஒரு நாளாவது தாமதித்துப் பதிவது கொஞ்சம் தெளிவைத் தரும் என்பது என் எண்ணம்.

"ஆந்திர"ப் போலீஸ் 20 "தமிழர்களை" சுட்டுக்கொன்றுவிட்டது என்பது நிச்சயம் வருந்தற்குரியதே.

இதை அடிப்படையாய்க் கொண்டு  ஒரு சுவாரசியமான திரைக்கதைப் புனைவும் படிக்க நேர்ந்தது.

எதிர்பாராமல் ஒரு உயிர் பிரிவதும், அதனால் ஒரு குடும்பமே நிலைகுலைந்து போவதும் மிகக் கொடுமையான விஷயம்.

ஒரு குடும்பத்தின் தலைவன் இறப்பிற்கு எந்த நஷ்டஈடும் ஈடாகாது.
இருப்பினும், உணர்ச்சிவசப் படுவதை ஒதுக்கி, சில அடிப்படைக் கேள்விகள்.

1. அவர்கள் செய்வது என்னதென்று அவர்கள் அறியாததா?
2. வறுமை, நிர்பந்தம், என என்ன காரணம் கூறினும், சட்டவிரோதமான செயலில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியுமா?
3. வறியவர்கள் பலரும் நேர்மையான வழியில் உழைக்கையில், இவர்கள் தேர்ந்தெடுத்த வழி தவறல்லவா?
4. ஒருநாள் கூலியாக பத்தாயிரம் ருபாய் வரை கிடைக்கும் எனில், அதன் ஆபத்து அவர்கள் அறியாததா?
5. காடு புகுந்து மரம் திருடுவது, வீடு புகுந்து கொள்ளையடிப்பதற்குக் குறைவானதா?

இது ஒருபுறம்.

அவர்களை கைது செய்து அடித்தே கொன்றதாக சில செய்திகள் கூறுகின்றன. அந்தப் புகைப்படங்கள் பார்க்கும்போது, ஒரு செட் அப் தன்மை தெரிவதையும் தவிர்க்கமுடியவில்லை.

1. அவர்கள் செய்தது குற்றமே ஆயினும், சுற்றிவளைத்து சுட்டுக்கொல்ல என்ன காரணம்?
2. ஒருவரைக்கூடவா உயிரோடு பிடிக்கமுடியவில்லை?
3.  அவர்களை உயிரோடு பிடித்தால், வாக்குமூலங்கள் யாரைக் கை காட்டும் என்று போலீஸ் பயந்தது?
4. இதைப் படிக்கும் யாருக்காவது, செம்மரக் கட்டைகளை எங்கு ரகசியமாக விற்கவேண்டும் என்று தெரியுமா? கோடிகோடியாகப் புரளும் கள்ளச் சந்தையில், இந்தக் கூலிகளா விற்றுப் பணம் பார்த்தார்கள்?
5. டன் கணக்கில் மரங்கள் கடத்தப்படுவதை எந்த நெட் ஒர்க்கும் இல்லாமல் செய்வது சாத்தியமா? இதன் வேர்கள் காவல்துறையும், அவர்களை ஏவும் துரைகளும் அறியாததா?
6. வீரப்பன் கொல்லப்பட்டு இத்தனை ஆண்டுகளில், அந்த சந்தன மரங்களும், தந்தங்களும் எப்படி, யாரால்சர்வதேச சந்தையில் விற்கப்பட்டன என்பதுகுறித்து ஏதாவது விசாரணைகள் நடந்து, ஒருவராவது கைது செய்யப்பட்டாரா?
7. காட்டில் சுற்றித் திரிந்த வீரப்பன் தனி மனிதனாக சர்வதேச சந்தையில் வியாபாரம் செய்தானா? அவனை சுட்டுக்கொன்ற காவல் துறைக்கும், வீரப்பர் என்று அன்போடும் மரியாதையோடும் அழைத்த தமிழினத் தலைவர்களுக்கும், வீரப்பனை சாதி காட்டி தூக்கிப் பிடித்த சமூகக் காவலர்களுக்கும், சாராயம் விற்கும் அன்னைக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் அந்தக் கொள்ளையில் பங்கில்லையா?
8. ஒற்றை வீரப்பன் கொலையில் எத்தனை உண்மைகள் புதைக்கப்பட்டன?
9. இந்த செம்மரக் கடத்தல் விஷயமும் அப்படி இந்த இருபதுபேர் கொலைக்குப் பின் எரிக்கவோ, புதைக்கவோ படுமா?
10. இதை, செத்தவன் தமிழன் என்று உணர்வுகளை உசுப்பி, மடை மாற்றும் சாமார்த்தியசாலிகள் யார்?

தமிழன் என்ற உணர்வில்லை என்ற விமர்சனங்களுக்கு!

1. முதலில், இதற்கு எந்தத் தமிழன் போராடவேண்டும்? அதிமுக தமிழனா, திமுக தமிழனா, தேசியத் தமிழனா, ஆதித் தமிழனா, இல்லை சாராயக் கடைவாழும் மீதித் தமிழனா, ஏசி அறையில் உட்கார்ந்து இதை எழுதும் இணையப் போர்வீரனா?
2. இவர்கள் யாரையும் இணைக்கும் சரடு இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை என்பது யாருக்கும் தெரியாததா?
3. தமிழன் என்ற ஒரு பொது இனம் இல்லாமல் அடித்த நம் அரசியல்வாதிகளின் நோக்கமே இதுதானே? வெறும் அறிக்கைப் போர், உணர்வுத் தூண்டல், அது அடங்கியபின் கொல்லைப் புறமாக வரும் கொள்ளைப் பணத்தில் பங்கு. இதுதானே இன்றுவரை நடக்கிறது? இது இப்போதுமட்டும் மாறுமா?
4. காவிரியாகட்டும், முல்லைப்பெரியாறு ஆகட்டும், எதிலாவது தமிழன் குரல் ஒருமித்து ஒலிக்க அரசியல்வாதிகள் அனுமதித்திருக்கிறார்களா?
5. தமிழன் ஒற்றுமை லட்சணம் தெரிந்ததால்தான், எல்லா நாய்களும் தமிழனைக் கண்டால் காலைத் தூக்குறது என்பது எந்தத் தலைவருக்கும் தெரியாதா? அந்த ஒருங்கிணைப்பை, சுய லாபம் கருதாது முன்னெடுக்கும் தலைவன் யாராவது கண்ணுக்கெட்டிய தூரம் தெரிகிறானா?

என்னிடம் வெறும் கேள்விகள் மட்டுமே இருக்கின்றன!
(இலங்கைத் தமிழர், மீனவர் பிரச்சினை குறித்தும் என் கேள்விகள் பின்னர்!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக