புதன், 15 ஏப்ரல், 2015

காதலின் கதை!

காதலின் கதை!மதுரை 2015

எவ்வளவு பெரிய ரகசியத்தை தன்னிடமிருந்து மறைத்திருக்கிறான் தன் கணவன்.

போரடிக்கிறது என்று அவன் பீரோவை சுத்தம் செய்கையில், துணிகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த பழைய டைரியை பார்த்தபோது ஸ்வேதாவுக்கு முதலில் படிக்கத் தோன்றவில்லை.

திருமணம் முடிந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை. தேன் கலந்த நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை.

திருமண வாழ்வின் முதலிரவில்தன வாழ்வின் எல்லா ரகசியங்களையும் சொல்லிக் கலங்கியபோது அரவணைத்துச் சிரித்தவன், முதலில் படித்தது அவள் உடலின் ரக்சியங்களைத்தான்.

தன உடலில் இத்தனை இடங்களில் பூப் பூக்கும் என்பதை அவளே அறியவைத்தபின், அசந்து உறங்கப்போகும்போது, ஸ்வேதா கேட்டாள், "நீங்கள் சொல்ல இதுபோல் எதுவுமே இல்லையா?"

"இன்னும் ஒருமுறை திறந்துகாட்டுமளவு நான் எதையும் மறைக்கவில்லையே" என்று குறும்பாகக் கண்ணடித்துச் சிரித்தவன், மீண்டும் ஒருமுறை அவளை இழுத்துத் தன்மேல் சரித்துக்கொண்டான்.

மணவாழ்க்கை இத்தனை பெரிய சுகமும், சுவையுமாய் இருக்கும் என்பதை யார் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்கமாட்டாள். 

வீட்டிலிருக்கும்போதெல்லாம்  ஒரு நாய்க்குட்டிபோல் அவளை உரசிக்கொண்டே இருப்பான். ஸ்வேதாவுக்குத்தான் அவன் மூச்சுக் காற்றுப் படும் இடங்களெல்லாம் சூடாகும், அதை நினைக்கும்போதெல்லாம் முகமே சிவந்துபோகும்.

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் ….” என்று காதோரம் பாரதியை கிசுகிசுக்கும்போது பற்றவைக்கும் சூடு, ஆட்டம் முடிந்து, “உன்கூந்தல் ஆடை விலக்கி உறங்கப்போகும் எனக்குப் போர்வையாய்ப் போர்த்து என்று சொந்தக் கவியில் தணியும்போது, அயர்வை மீறி சந்தோசம் பொங்கும்!

நம்பவே முடியாத அத்தனை சுகவாழ்க்கை இந்தப் பொய்யின் அடித்தளத்திலாதான் அறியாத ரகசியங்களே தன கணவனிடம் இல்லை என்று நம்பியிருந்தது எத்தனை முட்டாள்தனம்!

அவன் டைரியில் இருந்த கடிதம்,
"நேற்று, நாங்கள் ஒரு தவிர்க்கமுடியாத கணத்தில் எங்களை இழந்தோம். ஆனால், இன்று நடந்த ஒரு சம்பவம், இனி அவளை நான் எதிர்கொள்ளவே முடியாத தளத்துக்கு என்னை இட்டுச் சென்றுவிட்டது…….." என்று அவளுக்கு மிகப் பரிச்யமான அவளின் கிருஷ்ணாவின் கையெழுத்தில் ஓடியது!


சென்னை 2012
அன்றைக்கு காலையிலேயே ஏதோ சொல்லியது கிருஷ்ணாவுக்கு, இன்றைக்கு உனக்கு அதிர்ஷ்ட நாள் என்று. 
வண்டியை  சர்வீஸுக்கு விட்டவன், மரியாதையாக  ஆட்டோ பிடித்துப் போகாமல், டவுன் பஸ்ஸில் ஆபீசுக்குப் போக முடிவெடுத்து டெர்மினஸ்ஸில் ஏறியதால் உட்கார  கிடைத்தது அதிர்ஷ்டம். 
அதிலும், அந்த மயில் கழுத்துக் கலர் சேலை பேரழகி அவன் அருகே வந்து நின்றது பேரதிர்ஷ்டம். 

ஆண்களும் பெண்களுமாய் அடைத்துக்கொண்டு நின்ற பஸ்ஸில், அந்தப் பெண் தடுமாறிக்கொண்டு நின்றபோது, கண்களுக்கு மிக அருகே பளிச்சிட்ட  அவள் எலுமிச்சை இடை மின்னலை பார்க்காததுபோல் முகத்தை வைத்துக்கொள்ள அவன் போராட வேண்டியிருந்தது. 

சரியாக அவன் கண்ணின் மட்டத்தில் பட்ட காட்சியும், அவள் கூந்தல் மல்லிகையின் மெல்லிய சுகந்தமும், அந்த இடுப்பின் பொடி வியர்வையும் அவனை வேறுபக்கம் திரும்பவிடாமல் சதி செய்த வேலையிலா அந்த சைக்கிள்காரன் குறுக்கே வரவேண்டும்?

சடக்கென்று பிடித்த ப்ரேக்கில் வண்டி குலுங்கியபோது, ஒரு பஞ்சுப்பொதி தன் முகத்தில் மோதியதும், அதன் வியர்வை ஈரத்தில் தன இதழ் பதிந்ததும், அந்தப் பொன் வயிற்றோடு சேர்த்து அவன் தலையை அந்த மயில் கழுத்து நிற சேலை மூடியதும்,.... 

அன்றைகுக் கிருஷ்ணன் அவளை மனதுக்குள் சுமந்துகொண்டுதான் அலுவலகத்துக்குள் நுழைந்தான்.

வேலையில் மூழ்க முயன்றவனை, அந்த இடுப்பில் பதிந்த ஈர முத்தம் கை பிடித்து இழுக்க, இரண்டுமணி நேரம் எப்படி ஓடியது என்று தெரியவில்லை.

பன்னிரண்டு மணியளவில், GM  இன்டர்காமில் அழைத்தபோதும் சுவாரஸ்யம் இல்லாமல்தான் உள்ளே போனான்.

"மீட் மிஸ் ஸ்வேதா, உங்கள் டிபார்ட்மெண்டுக்கு புது ரெக்ரூட். உங்களுக்குக் கீழேதான் மூன்று மாத ட்ரைனிங்!"

பஸ்ஸில் பார்த்த அதே தேவதை. 

இடை பதிந்த இதழ் குறுகுறுக்க, அவளைப் பார்த்து, "வெல்கம் மிஸ் ஸ்வேதா" என்றவனை தீயாய் முறைத்தாள்.

சில நாட்களிலேயே, பஸ்ஸில் நிகழ்ந்தது தற்செயல் என்று புரிந்து சமாதானமான ஸ்வேதாவை கிருஷ்ணாவின்  நேரான அணுகுமுறைகளும், ஆறடி உயரமும், சீக்கிரத்திலேயே வசமிழக்க வைத்தன.

அன்று மதியம், கேண்டீனில் மெதுவாக அவன் கையை முதல்முறையாகத் தொட்டு, "கிருஷ்ணா" என்று குழைந்தபோது, நேரிடையாக வந்தது அவன் குரல்.
"நீ என்ன ஜாதி?"

தாக்கப்பட்டவள் போல் விருட்டென்று எழுந்துபோனவளை யோசனையோடு சலனமே இல்லாமல் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் கிருஷ்ணா.

ஒருவார மௌனப் போராட்டத்துக்குப்பின், கிருஷ்ணாவே, அவளிடம் கேட்டான், "ஸ்வேதா, இன்று மாலை நான் உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்!"

மறுப்பேதும் சொல்லாமல் தலை ஆட்டிய தன்னையே புரியாமல் உட்கார்ந்திருந்தாள் ஸ்வேதா!

மாலை, பாலிமரின் ஒதுக்குப்புறமான மேஜையில் உட்கார்ந்தவுடன் ஸ்வேதா அடக்கமுடியாமல் கேட்டாள்.

அன்னைக்கு ஏன் அப்படிக் கேட்டீங்க கிருஷ்ணா!"

"இன்னைக்கும் அதேதான் கேட்கப்போகிறேன் ஸ்வேதா!"

எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. 
உனக்கும் என்னைப பிடிச்சிருக்குன்னு தெரியும்.

ஆனால், எனக்கு கல்யாணத்தில் முடியாத காதலில் நம்பிக்கை இல்லை!

"என் ஜாதி இது
உன் ஜாதி குறித்து எனக்குக் கவலை இல்லை. 
ஆனால், என்ன எதிர்ப்பு வந்தாலும், உன்னால் எதிர்த்து நின்று என்னைக் கைபிடிக்க முடியுமானால், காதலிக்கலாம். 
வெறும் டைம் பாஸ் காமத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. 
இல்லை என்றால் நட்பாய்த் தொடரலாம்"

கண்கள் தளும்ப அத்தனை பேர் பார்ப்பதையும் மறந்து, "உன்னை விடமாட்டேன்டா" என்று உதட்டில் முத்தமிட்டுக் கண்ணீரோடு சிரித்தாள் ஸ்வேதா!

இருட்டுமூலை திரைப்படங்களில்கூட கண்ணியம் காக்கும் அவன் குணம் ஸ்வேதாவுக்கு அவன்மேல் ஈர்ப்பை அதிகப்படுத்த
வந்தது கிருஷ்ணாவின் பிறந்த நாள்.

ஸ்வேதாவின் வற்புறுத்தலில் சில்வர் சேண்ட்ஸ் ரிஸார்ட்ல்  ட்ரீட்!

கடல் காற்றும், நிலவும், தனிமையும், நெருக்கமும் , ஸ்வேதாவின் தகிக்கும் இளமை சுகந்தமும், இளமையும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் தளர்த்த, உடைகளும் தளர்ந்தன.

ஸ்வேதா மயக்கத்தின் கிறக்கத்தில் உறங்கிப்போக, குற்ற உணர்ச்சியில் உறக்கம் கொள்ளாமல் விழித்தே இருந்தான் கிருஷ்ணா!

மறுநாள் காலைகண்கள் தளும்ப ஸ்வேதாவிடம் மன்னிப்புக் கேட்டான் கிருஷ்ணா!
உதட்டால் ஒற்றி மன்னித்தாள் ஸ்வேதா.

அன்று மாலை பீச்சில் தனிமையில் ஸ்வேதாவிடம்,
"உன்னிடம் கொஞ்சம் தீவிரமாகப் பேசவேண்டும்.
இதுவரை, என் வாழ்க்கையை ஒழுக்கத்துடன் திட்டமிட்டே கழித்துவிட்டேன்.
நேற்று நடந்தது என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
நாளை நான் ஊருக்குப் போகிறேன். 
என் தந்தை ஒரு முரட்டு ஆத்மா! 
எது நடந்தாலும், அனுமதியோடுதான் வருவேன்!"

"நேற்று நடந்ததை ஒரு பாவ மன்னிப்பு போல் என் நெருங்கிய நண்பனுக்கு மட்டும் எழுதியிருக்கிறேன்.
நம் திருமணத்துக்கு முன் எனக்கு ஏதும் நடந்தாலும் உனக்கான பாதுகாப்புக்கும் அவன் உறுதுணை வருவான்" 

சொன்னவனைக் கண்ணீரோடும், பயத்தோடும் கட்டிப் பிடித்து
"நாம் கண்டிப்பாக சேருவோம் கிருஷ்ணா, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தைரியமாப் போங்க. உங்க அப்பா நிச்சயம் நம்ம கல்யாணத்துக்கு ஒப்புக்குவார்!
அப்படியே எது நடந்தும், உங்களால் அவர்களை எதிர்த்து வரமுடியாவிட்டாலும், உங்களைத் தப்பா நினைக்கமாட்டேன் கிருஷ்ணா" என்றவளை, முதல் முறையாகத் தானே இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் கிருஷ்ணா!

அதுதான் அவனை கடைசியாக உயிரோடு பார்த்தது.

ஊருக்குப் போனவன் மொபைல் மறுநாளிலிருந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருக்க, பத்துநாள் கழித்து அலுவலகத்துக்குத் தகவல் வந்தது, அவன் இறந்து எட்டு நாட்கள் ஆனதாக!

அவன் பொருட்களை வாங்கிப்போகக்கூட யாரும் வரவில்லை.

மதுரை 2015


மனது முழுக்க நொறுங்கிப்போய் வேலையை ரிசைன் செய்து சொந்த ஊருக்கே வந்து, கடந்த வருடங்களில்  மனத்தைக் கொஞ்சம் தேற்றி, விடாப்பிடியாக மல்லுக்கு நின்ற ரமேஷின் பெற்றோர்கள் பிடிவாதத்தால், இதோ இப்போது, திருமதி ரமேஷ்.

முதலிரவில், கிருஷ்ணா பற்றி சில்வர் சேண்ட்ஸ் நிகழ்வு தவிர எல்லாம் சொல்லி அழுதபோதும் தெரியும் என்று ஒரு வார்த்தை சொல்லாத ரமேஷின் டைரியில், கிருஷ்ணா எழுதிய கடிதம்.

அவனது உயிர் நண்பன் ரமேஷ்தானா!

கடவுளே, இப்போது நான் ரமேஷை எப்படி எதிர்கொள்வது?

மாலை அலுவலகம் விட்டு வந்த ரமேஷ், உற்சாகத்தில் அவளை அள்ளித் தூக்கினான். 
"அடுத்த மாதம் மொரீசியஸ் போறோம், ரெண்டாவது ஹனிமூன்!"

சுரத்தில்லாம ஏதோ பதில் சொன்னவளை ஆச்சர்யமாகப் பார்த்தவன் கண்ணில் பட்டது, வேண்டுமென்றே மேஜையில் வைத்திருந்த அவன் பழைய டைரி.

இரவு படுக்கையறைக் கதவைத் தாளிடும்வரை அவனும் எதுவும் பேசவில்லை.

தயங்கித் தயங்கிப் படுக்கையில் அமர்ந்தவள் மெதுவாகக் கேட்டாள். "உங்களுக்குக் கிருஷ்ணாவைத் தெரியும் என்று ஏன் என்கிட்டே சொல்லலை?"

அவளை இழுத்து நெஞ்சில் சாய்த்தவன் கேட்டான்
"உன் குற்ற உணர்ச்சி தூண்டப்படுவதில் நமக்கு என்ன லாபம்?
என்றோ, இளமைக்குறுகுறுப்பில் நேசத்தின் உச்சத்தில் நடந்துபோன உடல் பங்கீடு இன்றைக்கு எனக்கு விவாதப் பொருளுமல்ல!
மனைவியின் கடந்த காலத்தை தோண்டிக்கொண்டிருந்து இன்றைக்கு கிடைக்கும் இந்த சொர்க்கத்தை இழக்குமளவு நான் முட்டாளுமல்ல!"

சொல்லிக்கொண்டே அவன் தொட்ட இடத்துக்கு முகம் சிவந்து
"ஆனால்...." என்று ஆரம்பித்தவளின் வாயை அடைத்தது அவன் இதழ்.

இரண்டு நிமிடம் கழித்துப் புன்னகையோடு கையை நகர்த்தியவன் கேட்டான்,
"இதுக்கு ஒரு சின்ன ஜிப் வைக்கமாட்டானா"


"ச்ச்ச்ச்சீய்ய்ய்ய்"
மொத்த உடலும் வெட்கத்தால் சிவந்தாள் ஸ்வேதா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக