செவ்வாய், 19 நவம்பர், 2019

ஆண்களுக்கு ஒரு சின்னப் பகிர்வு!


என் சக தோழர்களுக்கு!! 

பெண்களுக்கு எழுதுவது என்னவோ, சுலபமாக இருந்தது!
மேலும், அதற்கு ஒரு தூண்டுதலும் இருந்தது!

ஆண்களுக்கு என்னும்போது, ஒரு உபதேசத் தொனி வந்து வார்த்தைகளில் உட்கார்ந்துகொள்கிறது!

இரண்டு நாள் யோசித்தும் ஸ்டார்ட் அப் லைன் கிடைக்காமல் திண்டாடி, இன்று ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிடுவது என்று இலக்கே இல்லாமல் ஆரம்பித்துவிட்டேன்

எல்லா நிகழ்வுகளிலும், எளிதில் குற்றம் சுமத்தப்பட்டு, கொஞ்சம் இறுகிப்போயே வளர்கின்றன ஆண் குழந்தைகள்.

இன்னுமே, பெண் தோழமை என்பது ஒரு விலக்கப்பட்ட கனியாகவே பல ஆண்களுக்கு!

நகர்ப்புற, படித்த சூழலில் வளரும் ஆண் குழந்தைகள் அவ்வளவாகத் தனிமைப் படுத்தப்படுவதில்லை. ஆனால் இன்றுமே, ஒரு வயதுக்குமேல், அம்மா மடி என்பது பையன்களுக்கு தவிர்க்கப்பட்ட லக்சுரி ஆகிவிடுகிறது. பெண் குழந்தைகள் அந்தவகையில் பாக்கியசாலிகள்!

ஆண்களைக் கண்டித்து வளர்க்கவேண்டும், அவனுக்கென்ன ஆண்பிள்ளை என்ற இரண்டு முரண்பாடான எல்லைகளுக்குள்ளும் முரண்பட்டே நகர்கிறது ஆண்களின் உலகம்.

மேலும், இரண்டு தலைமுறையாகத்தான் கூட்டைவிட்டு வெளியே வரும் பெண்களுக்கு சில விதிமுறைகளை சொல்லிக் கொடுப்பதும் சுலபமாக இருக்கிறது. 

ஆண், ஏற்கனவே, சுதந்திரமாகத் திரிந்து பழகியவன். தன் வழிகளைத் தானே கண்டறியும் சுதந்திரம் அவனுக்கு பல நூற்றாண்டுகளாய் !
எனவே, கொஞ்சம் அடக்கி  வாசிக்கவே தோன்றுகிறது.

முன்னுரை போதும் என்று, கொஞ்சம் தயக்கத்துடனே அடுத்த அடி எடுத்து வைக்கிறேன்.

கல்வி பற்றி பெண்ணுக்குச் சொன்னதில் ஒரு துளி மாற்றும் இன்றி ஆணுக்கும். 

நீங்கள் எந்தத்துறையிலும்,விருப்பமும் ஈடுபாடும் இருந்தால் முன்னுக்கு வர முடியும். ஆனால், ஏதோ ஒரு துறையில், உங்களால் முடிந்த அளவுக்கு qualify ஆகிக்கொள்ளுங்கள். 

நாளை நீங்கள் வேறுதுறைகளில்கூடத் தைரியமாக முயலப் பின்புலமாகவும், விதிவசமாக முயற்சியில்  தோற்றுப்போனாலும், வாழ்க்கையை வெல்லும் துணையாக  உங்கள் கல்வித் தகுதி, உங்களை எல்லா நிலையிலும் கரையேற்றும்!

என்னதான் ஆணும் பெண்ணும் சமம் என்று வாய்கிழியப் பேசினாலும், பெண் சம்பாதிக்க, ஆண் வீட்டிலிருக்க நேர்வதை சிலநாட்கள் கூட இந்த சமூகம் ஏற்பதில்லை. எனவே, உத்தியோகம், சம்பாத்தியம் புருஷலட்சணம் என்பது இன்னும் சில தலைமுறைகளுக்கேனும் மாறுவதில்லை. அதற்கு, கல்வி மட்டுமே ஒரே வழி!

இந்த ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்வதற்கு காரணம் இருக்கிறது. 
ஆண்களுக்கு மற்ற காலகட்டங்களைவிடவே படிக்கும் காலத்தில்தான் தடைகளும் மடை மாற்றிகளும் அதிகம். 

"ஆண்பிள்ளையாய் இருந்தால்",  "நீ ஒரு பொட்டைடா"
 - இந்த இரண்டு phraseகளையும் தாண்டிவர மிகப் பிரயத்தனப்படும் வயது இது.

எல்லாக் கெட்ட பழக்கங்களும் இந்த இரு வார்த்தைகள் இல்லாமல் திணிக்கப்படுவதில்லை!

இதில் ஊடகங்களும், திரைப்படங்களும் ஆணுக்கு இலக்கணமாய்க் காட்டும் விஷயங்கள் வேறு!
பெண்ணை விட நிச்சயம் அதிக சுதந்திரம் இருப்பது வரமாய் இல்லாமல் சாபமாய் அமைவது இந்த 15- 18 வயதுகளில்தான்!

இந்த வயதில் தேர்ந்தெடுக்கும் பழக்கங்களே நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன!

மேலும் அதன்பின் வரும் எத்தனை ஆண்டுப் பெருவாழ்வுக்கும் அடித் தளமும் அஸ்திவாரமும் இந்த வருடங்களே!.

நாம் கட்டமுயலும்  கோபுரமோ, மாளிகையோ, உருப்பெற வைப்பதும்  குப்பைமேடாகாமல் வடிவமைப்பதும் இந்தப்பருவத்திலேயே.

துரதிர்ஷ்ட வசமாக, போதுமான மன வலிமையும் உறுதியும் இல்லாத வயதும் இதே!

இந்த அகவை உள்ள மகன் இருக்கும் தகப்பன்கள், தன மகனுக்குத் தன்னை ஒரு நம்பகமான தோழனாய் உணரவைப்பது மிகத் தலையான கடமை.

அவன் தோளில் கைபோட்டு நடக்க முயவது மத்திமம்.
நம் தோளில் அவன் கைபோட அனுமதிப்பது உத்தமம்.

நல்ல தோழமையும் புரிதலும் வீட்டுக்குள் கிடைக்கப்பெறும் குழந்தைகள் திசை மாறும் வாய்ப்புக்கள் மிகக் குறைவு.

இந்த உலகம், எதையும் எவருக்கும் கற்றுக்கொடுக்காமல் விடப்போவதில்லை! 
அதை தவறான முறையில் தவறான ஆட்களிடம் கற்க நேராமல் பெற்றோரே நன்மை தீமை சொல்லித் தருதல் நலம்.

பெண் தோழமை என்பது தாண்டி, உடல்கூறு வேறுபாடுகள் குறுகுறுப்பும் கிளர்ச்சியும் ஏற்படுத்தும் வயதும் இதே.

போதாக்குறைக்கு, நம் திரைப்படங்கள் காட்டும் முட்டாள்தனமான காதலற்ற காதல்கள்! 
"மச்சி அவ உன்னைதான்டா பாக்கறா" போன்ற தோழமை உசுப்பேற்றல்கள்.

பெண்ணை ஒரு காமம் தணிக்கும் கருவியாகவோ, உங்கள் இச்சைகளைப் பூர்த்தி செய்யும் இயந்திரங்களாகவோ பார்க்காதீர்கள். 
இத்தனை நாள் அடக்கி வைக்கப்பட்ட சுதந்திரம் கிடைத்த மகிழ்வில், பெண்கள் சில நேரங்களில் எல்லை மீறினும், அதைப் புரிந்துகொள்ளும் பக்குவப்பட்ட மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

காலகாலமாக அவர்களை அடக்கிவைத்திருந்ததற்கு நாம் செய்யும் சின்னப் பரிகாரம் இது!

பெண்ணை நேசிப்பதும், உடலாலும் மனதாலும் வலிமை குறைந்த அவளுக்கு அரணாய் இருத்தல் நல்ல ஆணுக்கு அழகு. 

எந்த ஒரு  பெண்ணும், ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது  அன்பும், தன் அன்புக்கு சின்ன அங்கீகாரமும்தான்!

பெண்ணை பூமிக்கு ஒப்பிடுவது ஒரு விஷயம் கருதியே!
அவளிடம் சிறிது அன்பையும் அக்கறையையும் விதையுங்கள!
படி நெல் விதைத்த இடத்தில் பொதி நெல் அறுக்கலாம்!

இன்னொரு மிக முக்கியமான விஷயம்! உங்களில் பெரும்பாலோர், உங்கள் நண்பர்களிடம் உங்கள் ஆண்மையை நிரூபிக்கக் கற்றுக்கொள்ள நேரும் பழக்கம் குடி!

இது பாரின் சரக்கு! இது உடலுக்கு நல்லது! வெள்ளைக்காரன் தண்ணியே குடிப்பதில்லை என்ற எல்லா சப்பைக்கட்டுக்களையும் மீறி, குடி உன்னை உருக்குலைக்கும் என்பது உண்மை!

குடித்தால் கவலை மறையும், கம்பெனி கொடுக்க, சோசியல், பார்ட்டிகொஞ்சமாகத்தான் குடிக்கிறேன் தவறில்லை என்று ஆயிரம் காரணங்கள்.

கொஞ்சமாகக் குடித்தால் விஷம் விஷமில்லையா?

சாராயம் குடித்தால்தான் சோசியல் ஸ்டேட்டஸ் கிடைக்கும் என்பது இன்னொரு அபத்தம்.

ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக்கொண்டு குடி தரும் நன்மை தீமைகளை உங்களுக்காக எழுதிப்பாருங்கள்! நீங்கள் நன்மை என்று சொல்லும் எதுவும், எத்தனை அபத்தம் என்பது உங்களுக்குப் புரியும்.

நூறு சதவிகிதம் ஸ்டைலுக்காக ஆரம்பிக்கும் ஒரே கொடுமைப் பழக்கம் புகை! இது உங்களோடு, உங்கள் கூட இருப்பவர்களுக்கும் குழி தோண்டும் பழக்கம்!

சிகரெட் பிடித்த வாயோடு, உங்கள் குழந்தைக்கு ஒரு முத்தம் ஆசையாய்த் தரமுடியுமா உங்களால்?

எதையும் பெண்ணோடு இணைத்துச் சொன்னால் நமக்கு சுலபமாகப் புரியும்!

சிகரெட், மது இரண்டில் எதுவோ, அல்லது இரண்டுமோ உங்கள் பழக்கமானால், ஒரு சின்னக் கேள்வி!

எத்தனையோ ஆசைகளோடு உங்களை நம்பிக் கரம் பிடித்தவளுக்கு உங்கள் அருகாமை பிடிக்கவேண்டாமா?

ஒரு தாங்க முடியாத முகச் சுளிப்போடுதான் கூடல் சுகம் பெற நேரவேண்டுமா  அந்தப் பெண்ணுக்கு?

சுகிக்கும் பொழுதுகள் கூட சகிக்கும் பொழுதுகள்தானா?

அழுகிப்போன நேற்றைய குப்பையை தலையணையில் பரப்பி வைத்து ஒரு இரவு மட்டும் அதில் படுத்துத் தூங்கிப்பாருங்கள். உங்கள் மனைவியின் அவஸ்தை உங்களுக்குப் புரியும்!

என்றைக்காவது உனக்கும் திருப்தியா என்று கேட்கும் நல்ல கணவனா நீங்கள்? அப்படியானால் உங்கள் மனைவியிடம் இதைப்பற்றி மனம் விட்டுக் கேட்டுப்பாருங்கள். 
அவர் தயங்கித் தயங்கிச் சொல்லும் உண்மை உங்களை முகத்தில் அறையும்!

குடி குடியைக் கெடுக்கும் என்பதும், புகைப்பழக்கம் உடல்நலத்துக்குக் கேடு என்பதும் அந்த பாட்டிலுக்கும் அட்டைப் பெட்டிக்கும் சொன்ன சேதியல்ல!

உங்கள் ஆரோக்கியத்தில்தான் உங்கள் அன்புக்குரிய, உங்களை நம்பி வாழும் உயிர்களின் வாழ்க்கை பிணைக்கப்பட்டிருக்கிறது!

இன்றைய இளைஞர்கள்  சந்திக்கும் இன்னொரு முக்கியமான பிரச்னை, ஐடி கலாச்சாரமும் வெளி உலகமும்.

இரண்டும் ஒன்றுக்கொன்று எப்போதுமே பொருந்திப்போகாத துருவங்கள்.

இரவுபகல் பாராது ஓயாத உழைப்பு, டார்கெட், டைம் லிமிட் என்று எப்போதும் ஒரு குக்கருக்குள் குடியிருக்கும் நிலை இன்றைய ஐடி இளைஞர்களின் சாபம்.

டாலர்களிலும் யூரோவிலும் பேசிக்கொண்டும், இந்தியப் பணத்தைக்கூட ஐஎன்ஆர் என்று சொல்லும் மாய உலகம்!

அதிலிருந்து வெளியே வரும் எல்லோராலும் வெளியுலக நிதர்சனங்களை  எதிர்கொள்ள முடியவில்லை!

இது மண்ணில் வேர் பிடிக்காத நீர்த் தாவர நிலை. மிதக்கும் இடமும் சொந்தமில்லை, கரை இறங்கவும் மனமில்லை என்ற திரிசங்கு நிலை!

இது வேர்களை மறந்ததால் வரும் நிலை.

குளிரூடப்பட்டு, இரவும் பகலும் வெயிலும் இருளும் ஒன்றுபோல் மழுங்கடிக்கப்பட்டு, நுனிநாக்கு  ஆங்கிலத்தில் பேசித்திரியும் அந்தக்குட்டி உலகம், நாம் நடந்து திரிந்து வாழ்ந்த இதே உலகத்தில் ஒரு ஓரத்தில்தான் இருக்கிறது என்பதை உணருங்கள்.

உங்கள் கால்களைத் தரையில் ஊன்றி நடங்கள், விழ நேராது! 
தவறி விழுந்தாலும் அடி பலமாய் இருக்காது!

நன்றி!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக