ஒரு சமுதாயக் குற்றம் செய்ததுபோல் உள்ளுக்குள்
உறுத்திக்கொண்டே இருக்கும் உணர்ச்சியின் வெளிப்பாடே இந்தப்பகிர்வு.
அதற்குமுன்,
நான் கேள்விப்பட்ட ஒரு வியாபார விளம்பரத்தை
உங்களோடு பகிர்ந்துகொள்ள விருப்பம்.
தமிழக வரைபடத்தில் ஒரு சின்ன குண்டூசி முனையளவே உள்ள ஒரு சிற்றூர்
குளித்தலை. அங்கே, ஒரு விளம்பரம்!
"எங்களிடம் ஐந்து லட்ச ரூபாய்
டெபாசிட் செய்தால், ஐந்து வருடங்களில் அந்தப்பணம் ஆறு இலட்சமாகத்
திருப்பித்தரப்படும். மேலும் டெபாசிட் செய்தவுடன் ஒரு பிளாட் உங்கள் பெயரில் பதிவு
செய்து கொடுக்கப்படும்."
இது என்ன விளம்பரமாக
இருக்க முடியும் என்று யூகிக்க முடிகிறதா?
ஆரம்பித்து இரண்டே வருடங்கள் ஆன ஒரு கல்வி வியாபார
நிறுவனத்தின் விளம்பரமே அது.
KG முடித்த
குழந்தைகளுக்கு தலா 500 ரூபாய்
வசூல் செய்து, பட்டமளிப்பு
விழா நடத்திய கையோடு, முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களிடமிருந்து
வசூல் அறுவடைக்கு அந்த விளம்பரம்.
முதல் வகுப்பில்
மட்டும் ஆறு பிரிவுகள், தலா
ஐம்பது மாணவர்கள்.
அதிகமில்லை நண்பர்களே,
வசூல் இலக்கு, முதல் வகுப்பு மாணவர்களிடமிருந்து மட்டும் பதினைந்து கோடி ருபாய்.
இலக்கின் பெரும்பகுதி
அடைந்துவிட்டதாகத் தகவல்!
அப்பட்டமாய்,
வியாபாரமாகவே ஆக்கப்பட்டுவிட்ட
நம் கல்வி, ரியல் எஸ்டேட்
வரை உள்ளே இழுக்க ஆரம்பித்துவிட்டது.
இன்றைக்கு, ஒரு LKG சேர்க்கைக்கு ஒரு லட்சம் நன்கொடை என்பது மிகக் குறைந்த
தொகை.
அதற்குமேல், அந்தப்பள்ளி அளிக்கும் ஏசி போன்ற ஆடம்பரங்களுக்கு
ஏற்றவாறு தொகை மாறுபடும்.
இது இன்றைய
தமிழ்நாட்டு நிலை.
ஆறாம் வகுப்பு
முடித்த என் மகனுக்குப் போனவருட கல்வி, இன்னபிற கட்டணங்கள் ஈரோடு போன்ற சிறு நகரத்தில் ஒன்றேகால் லட்சத்துக்கு மேல்!
இதில் எனக்கு கிடைத்த
சில அனுகூலங்கள்??!
1. அந்த வகைப்
பள்ளிகளில், அதுதான்,
குறைந்த கட்டணம் உள்ள பள்ளி.
2. என்
மகன், பள்ளி செல்லும்
வாகனத்திலிருந்து, படிக்கும்
வகுப்புவரை ஏசியில் இருந்துவிட்டு, இயற்கை சீதோஷ்ணத்தை எதிர்கொள்ளச் சினுங்குகிறான்.
3. பள்ளியில்
கட்டாயமாக்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டு, ஒரு வருடத்தில் நான்கு கிலோ எடை இழந்தான்.
4. நான்
ஈரோட்டில் எந்தக் கடைகளில் பள்ளி ப்ராஜெக்ட் ரெடிமேட் ஆகக் கிடைக்கும் என்று
அறிந்துகொண்டேன்.
5. என்
மனைவி, பெற்றோர் ஆசிரியர்
மீட்டிங்கள் தந்த அனுபவத்தில், தன் தவறுகளையும், குறைகளையும்
எப்படி மற்றவர்கள் மேல் சுமத்துவது என்பதைக் கற்றுக்கொண்டார்.
இந்த வருடம் கோவை செல்வது என்ற முடிவெடுத்தபின்,
கோவையில் இதைவிடக் குறைந்த கட்டணம் உள்ள
ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்புக்கு அட்மிசன் பெற்றுவிட்டேன்.
(இதில் என் பங்கு
ஏதுமில்லை! என் மனைவி, ஆச்சர்யப்படத்தக்க வகையில் அவரது கல்லூரி நண்பர்கள் மூலம் -25 வருடங்களுக்குப்பின் - இதை சாதித்தார்!)
சரி,
இனி எழுத ஆரம்பித்த
முதல் வரிக்கு வருவோம்!
இன்றைக்கு மாதம்
எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், இந்தப் பள்ளி, கல்லூரிக்
கட்டணங்களுக்குக் கடன் வாங்காதவர்கள் யாரேனும்
உண்டா, இதைப் படிப்பவர்களில்?
மாதம் அரை லட்சம்
சம்பளம் வாங்கும், வேறு பின்புலம் ஏதும் இல்லாத என் நண்பர் ஒருவர்
என்னிடம் மிகவும் வருத்தப்பட்டார்.
தன் மகனை, தன் குடியிருப்பில் உள்ள அவன் தோழர்களைப்போல உயர்வான பள்ளியில்
படிக்கவைக்கமுடியவில்லை. அது தன் மகனின் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிட்டதாகவும், அதைப் போக்க முடியாமலும்,
அந்த உயர்பள்ளியில் படிக்கவைக்க கல்விக் கட்டணம் கட்டும்
வசதியின்றித் தான் தூக்கமின்றித் தவிப்பதாகவும் கிட்டத்தட்ட ஒருமணி நேரம்
புலம்பித் தள்ளிவிட்டார்.
இத்தனைக்கும் அவர்
மகன் படிக்கும் பள்ளி ஆண்டுக் கட்டணம் இரண்டு லட்சத்துக்கு மேல்.
அப்போது மற்ற பள்ளிகளின் கட்டணங்களை நீங்களே
யூகித்துக்கொள்ளுங்கள்!
சீருடை என்பதே
மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடாது என்று ஏற்படுத்தப்பட்டது!
இன்று மாணவனின் சீருடை பார்த்தே, அவன் எந்தப்பள்ளி என்று உயர்வு தாழ்வு கண்டறிந்து பழகும்
நிலைமை!
இப்படி இளமையிலையே
பிஞ்சு உள்ளங்களில் வேறுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் உருவாக்கும் இந்த
நச்சுக் கலாசாரத்தின் ஒரு அங்கமாக, நானும் இன்றுவரை
இருப்பதுதான் நான் உணர்ந்த சமுதாயக் குற்றம்!
ஒரு மாணவனின்
பள்ளிப்படிப்பை முடிப்பதற்குள்,
( 14 வருடங்கள், சராசரியாக இரண்டரை லட்சம் என்ற கணக்கில்) ஏறத்தாழ முப்பத்தைந்து
லட்சங்களை செலவழிக்கிறோம்.
அதன்பின்
கல்லூரிகளில் கொட்டிக்கொடுப்பது தனி!
இதுபோக வருடம்
தோறும் எட்டாம் வகுப்புக்கு மேல் உள்ள
பிள்ளைகளுக்கு, வெளிநாட்டுச் சுற்றுலா ஏறத்தாழ கட்டாயம் - ஒவ்வொரு வருடமும்.
கூடப் படிக்கும்
மாணவர்கள் அனைவரும் செல்வதால், மகனின் திருப்திக்கு, வட்டிக்குப் பணம் வாங்கிச் சுற்றுலா அனுப்பிய பெற்றோர்கள் பலர்.
இந்த விரலுக்கு மீறிய
வீக்கத்துக்குப் பெற்றோரைத் துரத்துவது எது?
இந்த மாய வலையை உடைத்து, கல்விக்கூடங்களை அரசுடமை ஆக்க அரசை வலியுறுத்துவோம்.
திட்டமிட்டுப்
படுகொலை செய்யப்பட்ட அரசுப்பள்ளிகளின் நிலையும், இந்த, படிப்பைத் தவிர பகட்டை சொல்லித்தரும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப்
படிக்க வைப்பதுதான் தங்களுக்குப் பெருமை என்ற போலி கௌரவ மனப்பான்மையை நடுத்தர, உயர்தட்டு மக்கள் மனதில் விதைத்த பிரச்சாரங்களும்தான்!
இது இன்று எல்லா
மட்டங்களிலும் புரையோடிப் போய்விட்டது.
இதற்கு யாரை நோவது?
ஒரு சின்னக் கணக்கு!
LKG முதல் பத்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும்
நான்கு பிரிவுகள், அவற்றில் ஒவ்வொன்றிலும் நாற்பது மாணவர்கள்
என்பது ஈரோட்டு சராசரி. அதன்பின் +2 வில் ஒவ்வொரு
குரூப்பிலும் இரண்டு பிரிவிகள் என எட்டுப் பிரிவுகள், அதிலும் ஒவ்வொன்றிலும் நாற்பது மாணவர்கள்.
(12 x 4 x 40) + (2
x 4 x 2 x 40) = மொத்தம் 2560 மாணவர்கள்!
இதை 2000 என்று எடுத்துக்கொண்டு, சராசரி கட்டணம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் என்று
எடுத்துக்கொண்டால், ஆண்டு வருமானம் 30 கோடி!
இந்தக் கணக்கில் நன்கொடைகள்
மற்றும் விடுதிக் கட்டணங்கள் சேர்க்கப்படவில்லை!
இந்தப் பள்ளி ஆசிரியர்கள் பெரும் சம்பளம், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பெறுவதில் ஐந்தில் ஒரு பங்கு இருந்தால் அதிகம்!
அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசுக்கு
முடியாத காரியமல்ல!
எலைட் சாராயக் கடைகளைத் திறக்கத் திட்டம் தீட்டும் அரசுக்கு, பள்ளிகளை எலைட் தரத்துக்கு உயர்த்தத் தெரியாதா?
50% மாணவர்களுக்கு இலவசக்கல்வியை அரசு அளிக்கட்டும். மீதியுள்ள 50 % மாணவர்களிடம் நியாயமான கட்டணத்தை வசூலிக்கட்டும்.
அரசுப்பள்ளிகளின்
கல்வித் தரத்தை கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தி, தேர்ச்சி விகிதம்
குறையும் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும்!
அரசு ஊழியர்களின்
பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் படிப்பதைக் கட்டாயமாக்கட்டும்.
இதன் முதல் கட்டமாக, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவ, இன்ஜினியரிங் தொழிற்கல்வி நிறுவனங்களில் இடம் அளிக்கட்டும்!
சாராயக்கடை நடத்திய
எல்லோரும் இன்று கல்வி வள்ளல்கள் அவதாரம் எடுத்திருக்கும் நிலையில், கல்வி வள்ளல் ஆகும் அந்த அடிப்படைத் தகுதியும் நம் அரசாங்கத்துக்கு உண்டு!
இதற்கு ஒரு இயக்கத்தை
முன்னெடுக்க நாம் முயலுவோம்.
கொஞ்சநாள் நடிகனுக்கும், அரசியல்வாதிக்கும் கொடி பிடிப்பதை விட்டு நாம் சந்தத்திக்காக நாம் சற்றே
சிந்திப்போம்.
உங்கள்
ஆக்கப்பூர்வமான விவாதங்களையும் ஆலோசனைகளையும் வேண்டி…..!
No comments:
Post a comment