புதன், 27 மே, 2015

காசு வெறி பிடித்த கிழவர்!

இளையராஜாவின் காசு வெறி!இரண்டு நாட்களுக்கு முன் ஒரு நண்பர் ஒரு அழகான பதிவை எழுதியிருந்தார். Love you Raja என்று ஆரம்பித்து, Hate you Raja என்று முடித்திருந்தார்!
அது  முழுக்க அவர் விருப்பம்! ஆனால், அதற்கு அவர் சுட்டியிருந்த காரணங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை.

ஆரம்பிக்கும்போதே, சாதுர்யமாக இளையராஜா சமீபகாலமாக இசையமைத்த "தமிழ்படங்கள்" தோல்விப்படங்கள் என்று நிறுவியிருந்தார் சென்ற ஆண்டின் அத்தனை வெள்ளிவிழாப் படங்களுக்கு இடையே திருஷ்டிப் பரிகாரமாக இவை இருந்துவிட்டுப் போகட்டுமே!
அதன்பின் இளையராஜாவின் அறிக்கை ஒன்றை இணைத்துள்ளார்!அதற்கு அவர் தரும் விளக்கம்- அவர் வார்த்தைகளில்!

அதாவது இனிமேல் பேருந்துகளில் ராஜா பாடல்கள் போட கூடாது. டீக்கடைகளில் போட கூடாது. கல்யாணம், காது குத்து ஏன் பப் டிஸ்கோதே வரை எங்கேயும் போடக்கூடாது. எங்கெல்லாம் ராஜா பாடல்கள் கேட்டு நம் பால்யத்தை மீட்டெடுத்தோமோ, அங்கெல்லாம் ஒலிக்க கூடாது. ஏனெனில் அவை சட்டப்படி தவறு. ராஜாவின் 9000 பாடல்களையும் எம்பி3 வடிவில் தரவிறக்க கூடாது. எல்லாவற்றையும் முறையான சிடிக்களாக ராஜாவே வெளியிடுவார். அதில் மட்டுமே கேட்கவும். இதுதான் விஷயம்.

எவ்வளவு நேர்மையான விளக்கம்!  
விசிடி யில் படம் பார்க்காதேகாசு கொடுத்து தியேட்டரில் பார் என்பதை, இனி படமே பார்க்கக் கூடாது என்று தடைபோடுவதாக அர்த்தப்படுத்திக்கொள்வார்போலும். 

பார்த்தால் திருட்டுத் தனமாகத்தான் பார்ப்பேன் காசுகொடுத்துப்பார்க்கவே மாட்டேன் என்று ஒரு படைப்பாளியாக அவர் சொல்கிறாரா?

அந்த அறிக்கை இனி என் பாடல்களை யாரும் ஒலி/ஒளிபரப்பக்கூடாது என்று சொல்வதாக என் எளிய புரிதலுக்கு எட்டவில்லை!

நேற்று வரை சட்டத்தை மறந்து எல்லா அரசியல், பொது விஷயங்களை அறம்/தர்மம் சார்ந்து அலசிய ராஜா ரசிக நண்பர்கள் திடிரென சட்ட வல்லுநர்கள் ஆகிவிட்டனர். ராஜா கேட்பது சரிதானே என்கிறார்கள். நீங்கள் வைத்திருக்கும் சவுண்ட்கிளவுட் லிஸ்ட் கூட தவறு டோழர் என்றால் அழித்துவிடுவேன் என்கிறார்கள். எல்லா பாடல்களையும் இனி ஐட்யூன்ஸ் வழி முறைப்படி காசு கட்டி வாங்குவார்களாம். நான் இதுவரை பழகிய எல்லா ராஜா ரசிகர்களும் திருட்டு MP3க்களில்தான் ரசிக்கிறார்கள். அப்போதெல்லாம் யாருக்குமே உறைக்கவில்லை. சட்டப்படி என்றால் ஜெயா தீர்ப்பு கூடத்தான் சட்டப்படி சரி. அப்படியா இத்தனை நாள் பேசினார்கள்? அதெல்லாம் தெரியாது. ராஜா சொல்லிவிட்டார்.

இந்தப்புலம்பல் எதுகுறித்து என்பது வெட்டவெளிச்சம்! 
இத்தனை நாள் நான் திருட்டுத்தனமாகத்தானே அனுபவித்துக்கொண்டிருந்தேன். இப்போது வந்து காசு கேட்கிறாயே - உன் ரசிகர்களும் கூச்சமில்லாமல் அதை ஆமோதிக்கிறார்களே - இதுதானே  இதன் அர்த்தம்?
இங்கே எதற்கு ஜெயலலிதா வந்தார்திசை திருப்பவா?


ரேடியோ மிர்ச்சியில் ஒரு நிகழ்ச்சி. எல்லாமே ராஜா பாடல்கள். அந்த பாடல்களை ஒலிபரப்ப காசு கொடுக்கிறது மிர்ச்சி. தலைப்பு நீங்க..நான்..ராஜா சார்”. இந்த தலைப்பில் வரும் ராஜா சாருக்கு என தனியாக பணம் கொடுக்க வேண்டுமாம்? கேட்டால், அந்த தலைப்பை வைத்து காசு சம்பாதிக்கிறதாம் மிர்ச்சி.

அதில் நீங்க, நான் இரண்டும் ப்ராண்டா அல்லது ராஜாசார் என்பது ப்ராண்டா
அந்தத் தலைப்பு வைக்க என்னிடம் முறையான அனுமதி கேள் என்று சொல்வது தவறா? நாளை நான் கார்க்கிபாவா என்று தலைப்பிட்டு எழுதினால் இவர் கேட்கமாட்டாரா?

நாற்பது  வருடமாக சமூகத்துக்கு உழைத்தார் என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை! அப்படிச் சொல்லியிருந்தால் அது அவர் இசை பற்றித்தான் இருக்கமுடியும் என்று குழந்தைகூடச் சொல்லும். 
இளையராஜா ரோடு போட்டார். மரம் நட்டார் என்று யாரும் சொல்லவில்லை! நண்பருக்கு வேறு ஏதோ குழப்பம்!
அது இப்படி வெடிக்கிறது!

யார் சமூகத்திற்கு உழைத்தவர்? தானொரு தலித் என்ற அடையாளத்தை மறைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை தொடர்ந்து செய்து வரும் ராஜா சமூக சேவகரா? போற்றி பாடடி பெண்ணே.. தேவர் காலடி மண்ணேஎன லஜ்ஜையின்றி தன் பாட்டனும், பூட்டனும் பட்ட அவஸ்தை மறந்து இசையமைத்த ராஜா சமூக சேவகரா? ராஜா மகா கலைஞன். யுக புருஷன். சரிதான். சமூக சேவகர் என்றால் அவ்வளவுதான்.

ராஜா தான் ஒரு தலித் என்று கழுத்தில் கட்டிக்கொண்டு அலையவேண்டும் என்று நண்பர் விரும்புகிறாரா?  
சாதி அடையாளம் தொலைக்க எல்லோரும் போராடும் காலகட்டத்தில் ஒருவர் எந்நேரமும் தன்னை ஒரு தலித் என்று அடையாளப்படுத்திக்கொண்டே இருக்க நிர்ப்பந்திப்பது  என்ன ஒரு மனநோய்க் கூறு?

இளவயதில் சாதி அடையாளத்தால் அவமானப்பட்ட எந்த சராசரி மனிதனும், வளர்ந்து வசதி வாய்ப்பை அடைந்தவுடன் அதை மறைக்கவும், மறுக்கவும்தானே விரும்புவர்?
இட ஒதுக்கீட்டில் மாவட்ட ஆட்சியாளர் , மருத்துவரானவரை ஜாதி கேட்பாரா இவர்?

இளையராஜா தன் ஜாதியைப் பயன்படுத்தியா உயர்ந்தார்?

இசையமைக்க சாதிவாரி கோட்டா இருப்பது இவருக்கு மட்டும் தெரிந்திருக்கிறது போல!

இதில் இளையராஜாவை இவரே சமூக சேவகர் என்று உருவகப் படுத்துவதாகப் புனைந்துகொண்டு, வசதியாகத் தாக்குகிறார்! 

இவர் பிரச்னை ராயல்டி அல்ல. வேறு ஏதோ எதிர்பார்ப்பு நிறைவேறாத ஆதங்கம் இப்படி வெடிக்கிறது! தேவர் மகன் நேற்று வந்த படமல்ல!
Love you Raja என்று T ஷர்ட் மாட்டிக்கொண்டு கோடம்பாக்கத்தில் குறுக்கும் நெடுக்கும் அலைந்த  நோக்கம் நிறைவேறாத எரிச்சலோ?

பாப் மார்லியோட ஒப்பிடுகிறார்கள். கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்த சோனி நிறுவனத்தை போடா என சொல்லிவிட்டு தன் பாடல்களை எல்லோருக்குமென அறிவித்த அவன் எங்கே? இந்த வயதிலும் காசு தேடும் இவர் எங்கே? கலையை ரசிப்பதற்கும், கலைஞனை ரசிப்பதற்கும் எங்களுக்கு பாடம் எடுக்காதீர்கள்.

இது அடுத்த வயற்றெரிச்சல்! பாப் மார்லியோடு யாரும் ஒப்பிடவில்லை! இவரே ராஜாவை ஒப்பிட்டு பாப் மார்லியை கடவுளாக வியக்கிறார்!

இன்று வரை பாப் மார்லியின் ராயல்டி வழக்குகள் தீர்ந்த பாடில்லை.

இறந்த போது (1981) பாப் மார்லியின் சொத்து மதிப்பு 30 மில்லியன் டாலர்கள். ராயல்டி மூலம் ஈட்டியதுதான். அவர் வலம் வந்து கொண்டிருந்தது பி.எம்.டபுள்யூ காரில். அதுவும் ராயல்டியில் சம்பாரித்ததுதான். இறந்த பிறகு அவரது, எஸ்டேட் என்றழைக்கப்படும் குடும்பத்துக்கு (மனைவி ரீட்டா மார்லி, அவர்களது 4 குழந்தைகள். பிற 7 பெண்கள் மூலமாக பிறந்த 7 குழந்தைகள்) கிடைத்துக்கொண்டிருந்த ராயல்டி வருடத்துக்கு 2.5 மில்லியன் டாலர்கள்.
மார்லி ராயல்டி வேண்டாமென்றெல்லாம் சொல்லவில்லை. யாருக்கு ராயல்டி செல்ல வேண்டும் என்று தெளிவாக சொல்லவில்லை அவ்வளவுதான்.
கெய்மன் ரெகார்ட்சிடமிருந்து அவ்வளவு எளிதில் காசு பெயராது. அதுவரையுமே சரியாக ராயல்டி தரவில்லை. அதனால் இந்த பாடலுக்கு இசையமைத்தவர் என்று சூப் கடை வைத்திருந்த தன் நண்பர் வின்சண்ட் ஃபோர்ட் பெயரை போட்டுக் கொண்டார். அதனால் அந்த பாடலின் காப்புரிமை, ஒப்பந்தப்படி ஐலண்ட் ரெகார்டிங்குக்கு சென்று விட்டது. ஐலண்ட் ரெகார்ட்சிடமிருந்து பலவருடங்களாக வந்த கொண்டிருக்கும் ராயல்டி காசில்தான் நண்பரின் சூப் கடை பிழைத்தது. பாடலின் முழு உரிமை கெய்மனுக்கா ஐலண்டுக்கா என்கிற வழக்கு சென்ற வருடம் வரை இருந்தது. இன்று மார்லியின் புகைப்படங்கள் வரை காப்புரிமைக்குட்பட்டது. மார்லி பிராண்ட் கஞ்சாவே இருக்கிறது

இதை இன்னொரு நண்பர் சுட்டியவுடன்,
இவ்வளவு கேவலமானவருடனா இளையராஜாவை ஒப்பிட்டீர்கள் என்று அப்படியே நிறம் மாறுகிறார். 
எனில், பாப் மார்லே பற்றி இவர் தெரியாமலே அள்ளிவிட்டிருக்கிறார்! நோக்கம், எப்படியாவது ராஜாவை யாருடனாவது ஒப்பிட்டு சிறுமைப்படுத்துவது.

இத்தனை வயதில் காசுக்கு அலைகிறார் என்பது அடுத்த குற்றச்சாட்டு! 

யார் காசுக்கு யார் அலைகிறார்கள்?
அவர் உழைப்பை விற்று ஊரில் உள்ளவன் எல்லாம் காசு பார்ப்பான், அதில் அவருக்கு உள்ள உரிமையைக் கேட்டால் காசுக்கு அலைபவர்! 
மற்ற இசையமைப்பாளர்கள் இலவசமாக இசை அமைக்கிறார்களா?
உன் உழைப்புக்கு நான் உரிமை கொண்டாடினால் காசுக்கு அலைபவன். 
தன் பெயரை சொல்லி சம்பாதிப்பவர்களிடம் சிறு அங்கீகாரம் கேட்கிறார்! சமகால இசையமைப்பாளர்களில் யார் காசில் கெட்டி, யார் பக்காவாக ராயல்டி விஷயத்தில் சட்டபூர்வமாக காசை அள்ளுகிறார்கள் என்பதை குழந்தைகூட அறியும்! 
அங்கு ஏதும் கேள்வி கேட்கப்பட்டதா? 
படைப்பாளிக்கு தன் படைப்பில் உரிமை இல்லையா?
இவர்கள் எல்லாம் ஊருக்கு உழைத்துக்கொடுத்து, காற்றை உண்டு வாழ்கிறார்கள் போலும்!

ராஜாவை தமிழினம் ஓர் அடையாளமாக பார்க்கிறது. இந்த சூழலில் அவர் படைப்புகள் நாட்டுமையாக்கப்பட வேண்டும்.குறைந்தபட்சம் தங்குதடையின்றி எல்லோருக்கும் சென்று சேரும் வகையில் இருக்க வேண்டும். ராஜா படம் போட்ட டீஷர்ட் நிறுவனம் கூட அவருக்கு பணம் தர வேண்டுமென்றால், டீ ஷர்ட்டே கிடைக்காமல் தான் போகும். 30 வயது இளைஞன் ஈகோவோட அலைவதை ரசிக்கலாம். 75 வயதில் ஈகோ, கர்வமும், அகந்தையும் சகிக்கவில்லை.ஒவ்வொரு மேடைப்பேச்சிலும் ராஜா வெறுப்பைதான் சம்பாதிக்கிறார். இவருக்கு ஆன்மீக ஞானம் எல்லாம் வாய்ப்பே இல்லை என ரமணர் எப்போது சொல்லியிருப்பார் என நம்புகிறேன். இத்தனை மோசமான ஒரு மகா கலைஞனை பற்றி நான் படித்ததே இல்லை.

இத்தனை மோசமானவரைத்தான் லவ் யூ என்று பனியனில் எழுதிக்கொண்டு அலைந்தார் நண்பர் - அவர் உழைப்புக்குக் காசு கேட்கும்வரை!
அதுவரை அவர் ஒரு ஆன்மீகவாதி!

தன் மனசாட்சிக்கு மாறுபடாமல், வந்த வாய்ப்புகளை (பாலச்சந்தர், ரஜினி உட்பட) உதறித் தள்ளிவிட்டு, அதன் விளைவுகளை யாரிடமும் போய் பல்லிளித்துக் கெஞ்சாமல் ஏற்றுக்கொண்ட வித்தை கர்வம் இன்றைக்கு தலைகனமாகப் பார்க்கப்பட்டால், பார்க்கும் கண்ணில்தான் கோளாறு!

யாரிடமும் வாய்ப்புக்குக் கெஞ்சாமல், போலிப் பணிவு காட்டாமல், தலை நிமிர்ந்து நிற்பவனுக்கு காசு வெறி என்று தூற்றுபவர்களின் உளப்பாங்கு தீவிர பரிசோதனைக்கு உட்பட்டது.

அவர் பிராண்டை வியாபாரம் செய்து காசு பார்க்க நினைக்கும் அந்த கும்பல் அவரது மகளும், மகனும் என்றால், அந்த உரிமை உங்கள் எல்லோரையும் விட அவர்களுக்கு உண்டு

இந்த நாட்டுடைமை விஷயத்தை இளையராஜா பாடல்களைப் பண்ணுவதைவிட, ராமசாமி நாயக்கரின் கருத்துக்களை அழுத்தி வைத்து உட்கார்ந்து நோகாமல் காசு பார்க்கும் வீரமணியாரிடமிருந்து ஆரம்பியுங்கள். அதுதான் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தேவை.

இந்த பேராசை பிடித்த திமிர்பிடித்த தலித் கிழவனின் உழைப்பில் குளிர் காயாதீர்கள்! 
அதை அவரது குழந்தைகளுக்கு அவர் கொடுப்பதைக் கேட்கும் உரிமை உங்களுக்கு இல்லை!

நேர்மையான ரசிகனை மாபியா, பஜனை கோஷ்டி என்பதை விட்டு, உங்கள் விமர்சனத்தின் உண்மையான நிறத்தை ஆராயுங்கள்!

முடிந்தால் கொஞ்சநேரம் ராஜா பாட்டுக் கேளுங்கள். மனம் ஒரு நிலைப்பட்டு சாந்தமாகும்!

அதைவிட்டு, போலிப் புகைப்படங்களை வெளியிட்டு , உங்கள் அசிங்கமான மனநிலைகளை வெளிச்சப் படுத்தாதீர்கள்!

இந்தப் பதிவுக்கு சம்பந்தப்படாத ஒரு பழைய விஷயம்.

காலை 10 மணி!

ஹல்லோ, இளையராஜா இருக்காருங்களா?
இல்லைங்க சார் அவர் ரெக்கார்டிங் போயிருக்கிறார்.
எப்போ வருவார்?
ஒரு எட்டு மணிக்கு மேல் ட்ரை பண்ணுங்க!
நீங்க யாரு? அவர்கிட்ட ஏதாவது சொல்லணுமா?
இல்லை நான் அவர் கிட்டயே பேசிக்கிறேன். (ரத்தம் இன்னும் கொஞ்சம் இளமையாக இருந்த திமிர்)

இரவு 9 மணி!

ஹல்லோ, ராஜாசார் இருக்காரா?
சொல்லுங்க நான் ராஜாதான் பேசறேன்.
ஐயா, எங்க இசைப்பள்ளி மாணவர்கள் பாடி ஒரு சி டி வெளியிடணும், நீங்க வரமுடியுமா?
மன்னிச்சுக்குங்க தம்பி, நான் வெளி ப்ரோக்ராம் எதுவும் ஒத்துக்கறதில்லை. பிள்ளைகளுக்கு என் ஆசிகளைச் சொல்லுங்க.
வேற ஏதாவது உதவி வேணுமா தம்பி!
இல்லைங்க ரொம்ப நன்றி!

இது அந்த ஈகோ பிடித்த கிழவனுக்கும் எனக்குமான உரையாடல்!

இந்த ப்ரொக்ராமுக்கு ஒரு பணிவு இசையை அழைக்க, பீ ஏவை தாண்டி பேசமுடியவில்லை!
வர இசைந்த ஜேசுதாஸ் கேட்டது அதிகமில்லை- ஒரு லட்சம் + செலவுகள்!
இது சும்மா தகவலுக்காக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக