சனி, 9 மே, 2015

முப்பாலில் இருந்தும் முதல் நூறு!

140 என்ற எல்லைக்குள், குறளும் விளக்கமும்! முயன்றிருக்கிறேன்! தங்கள் விமர்சனங்கள் என்னை 1330க்கு ஊக்கப்படுத்தும்- நன்றி!!
30.1.2015 முதல் 

1.    செல்லச் சண்டைகள், அதனிலும், சண்டைக்குப் பின்னான கூடல், காதலில் பேரின்பம்! (ஊடுதல் காமத்துக்கின்பம், அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின்.-1330)

2.    எழுத்துக்கள் தொடங்குவது அகரத்தில், உலகம் தொடங்குவது அன்னை, தந்தை எனும் தெய்வத்தில்! (அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு-1)

3.      நல்ல-படை,மக்கள்,செல்வம்,அமைச்சர், நட்பு,பாதுகாப்பு ஆறும் அமைந்த அரசன் ஆண் சிங்கம்! (படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசரு ளேறு- 381)
  
4.    அழகியவள் ஊடல் கொள்ள, இரவு நீளட்டும் - ஊடல் தணிக்க நான் கெஞ்சிக்கொஞ்சும் இன்பம் நீடிக்க! (ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா-1329)

5.    தூய்மையான அறிவு வடிவான இறைவனடி பணிந்து தொழாவிடில், கற்ற கல்வியால் என்ன பயன்? (கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் -2)
  
6.    அஞ்சாமை, கொடை, அறிவு, ஊக்கம்- நான்கும் குறைவின்றி இருப்பது அரசனின் பண்பு! (அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு-382)
7.    நெற்றி வியர்க்கப் பெற்ற கூடல் சுகத்தை, ஊடல் கொண்டு,அதிகமாய்ப் பெறுவோம்! (ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு-1328)

8.    விருப்பு வெறுப்பற்ற இறைவனடி பணிந்து நடப்போரைத் துன்பங்கள் நெருங்குவதில்லை (வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல-4)

9.    ஆட்சியாளருக்கு, காலம் தவறாமை, கல்வி, துணிச்சல் என மூன்று பண்புகளும் தேவை. (தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு – 383)

10. தம் மனமெனும் மலரில் வாழும் இறைவன் திருவடி நினைப்பவர் இவ்வுலகில் நீடூழி வாழ்வர். (மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்-3)

11.  ஊடலில் தோற்றவரே வென்றவர் என்பது ஊடலின் பின் வரும் கூடலின்பத்தில் உணரப்படும். (ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப்படும்- 1327)


12. உண்பதைவிட, முன்பு உண்டது செரித்தல் சுகம். காதலில் கூடிக்களிப்பதைவிட ஊடுவது இன்பம். (உணலினும் உண்ட தறலினிது காமம் புணர்தலும் ஊடல் இனிது-1326)

13. அறநெறி தவறாது, தவறுகள் நீக்கி, வீரத்தோடு மானமும் பெரிதெனக் கொண்டவனே நல்ல அரசன். (அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு-384)

14. இறைவனின் மெய்ப்புகழ் நாடுவோரை நன்மை தீமை இரு வினைகளும் பாதிக்காது. (இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு-5)
15. நிதிஆதாரம் வகுத்து, வந்ததைக் காத்து, மக்கள் மேன்மைக்கு செலவிடல் அரசுக்கு அழகு. (இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலும் வல்ல தரசு-385)
16.  தன்மீது தவறின்றியும் காதலியின் ஊடலால் அவளை நீங்கியிருத்தல் ஒரு இன்பம். (தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து-1325)
17. ஐம்புலன் அடக்கி, பொய்யில்லா ஒழுக்கத்தோடு வாழ்பவர் நீண்ட புகழ் அடைவர். (பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்-6)
18. காட்சிக்கு எளிமையும் கடுஞ்சொல் கூறாமையும் கொண்ட அரசனின்ஆட்சி விரிவடையும். (காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேன் மீக்கூறும் மன்னன் நிலம்-386)
19. இறுகத் தழுவி விலகாதிருக்கவும், அதனால் என் உள்ள உறுதி உடைபடவும் ஊடலே காரணம். (புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை-1324)
20. இணையில்லா இறைவன் திருவடி பற்றுவோர் தவிர, பிறர் தம் மனக்கவலை தீராது. (தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது-7)
21. இன்சொல்லுடன் பொருள் தந்து குடிகளைக் காக்கும் அரசுக்கு உலகே வசமாகும் (இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு-387)
22. நிலம் கலந்த நீர்போல் மனம் கலந்தவருடன் ஊடல்கொள்வதைவிட சொர்க்கம் இல்லை. (புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து-1323)
23. அறக்கடலாகிய இறைவன் திருவடி சேராத மற்றோர் பிறவிக்கடலைக் கடத்தல் கடினம். (அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது-8)
24. நீதி வழுவாது குடிகளைக்காக்கும் அரசன் மக்களால் இறையெனப் போற்றப்படுவான். (முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும்-388)

25. காதலர் அன்பு சற்று வாடக் காரணமாயினும் ஊடல் தரும் சிறு துன்பம் பெருமைக்குரியது. (ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும்-1322)

26. இறைவன் திருவடி வணங்காத தலைகள் இயங்காத ஐம்புலன்போல் உடலோடு இருந்தும் பயனற்றவை (கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை-9)

27. குறைகள் சொல்பவர் நியாயமும் மதித்து நடக்கும் அரசனை, உலகமே பணியும். (செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு-389)

28.  காதலர்மீது தவறில்லா நிலையிலும் ஊடல்கொள்வது, செல்லமாய் அவர் நேசம் வளர்க்கும் வழி. (இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு-1321)
29. இறைவன் திருவடி பற்றுவோர் பிறவிக்கடலைக் கடப்பர். மற்றோர் அதில் மூழ்கி உழல்வர். (பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்-10)
30. கொடை, அருள், நெறியாட்சி, குடிகளைக் காத்தல் உள்ள அரசு ஒளியுற்றுவிளங்கும் (கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி-390)
31. இமைக்காது அவளை ரசித்தாலும், எவளை ஒப்பிட்டாயென சினம் கொள்வாள். (நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று-1320)
32. உலகம் வாழ்வதே பருவத்தில் பொழியும் மழையால்.எனவே, மழை அமுதமெனப் போற்றப்படுகிறது. வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று-11
33. கற்பதைப் பிழையின்றிக்கற்று, அந்த நெறிப்படி நல்வாழ்வு வாழவேண்டும். (கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக- 391.)
34. ஊடலின்போது பணிந்து கொஞ்ச,எவளிடமும் நீ இப்படித்தானோ என கோபம்கொள்வாள். (தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று-1319)
35. உணவை விளைவிக்க உதவுவது மட்டுமன்றி, தானே உணவாகவும் விளங்குவது மழை. (துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை-12)
36. எண்ணும் எழுத்துமான கல்வியறிவு வாழும் மனிதருக்கு இரு கண்களைப் போன்றது. (எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழும் உயிர்க்கு-392)
37. தும்மலை அடக்கக்கண்டு, எவள் நினைத்ததை என்னிடம் மறைத்தாய் என ஊடலில் அழுதாள். (தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல் எம்மை மறைத்தீரோ என்று-1318)
38. கடல்நீர் சூழ இருந்தாலும், மழை பொய்த்தால் உயிர்கள் பசியில் வாடும். (விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி-13)
39. கற்றவரே கண்ணுடையார். கல்லாதோருக்கு அறிவு நோக்கு இல்லா இருகண்களும் புண். (கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்-393)
40. நான் தும்ம,தானே வாழ்த்தி, உடனே,யார் நினைக்கத் தும்மினாயென அழுதாள். (வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று-1317)
41. வாரி வழங்கும் மழை வளம் குன்றினால் உழவர்கள் ஏர் பூட்டி உழுது பயன் ஏதுமில்லை. (ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்-14)
42. மகிழ்வாய்ப் பழகி, பிரிகையில் அதை எண்ணித் துயருறும்படி நடத்தல் அறிஞர்க்கு அழகு. (உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்-394)
43. உன்னை நினைத்தேன் என,இடையே மறந்து, இன்று நினைத்தாயா? என ஊடினாள். (உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புறத்தக் அகன்ற-1316)
44. கெடுப்பதும், வளம்குன்றிக் கெட்டவருக்குப் பெய்து கொடுப்பதும் மழை. (கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை-15)
45. செல்வர்முன் ஏழைபோல், ஆசானைப் பணிந்து கற்பவர் உயர்ந்தோர் மற்றோர் இழிந்தோர் (உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்-395)
46. இப்பிறவியில் பிரியமாட்டோமென,ஆயின்,வரும்பிறவியில் பிரிவோமோ என்றழுதாள் காதலி (இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்-1315)
47. வான்மழை வீழாதுபோனால், புவியில் பசும் புல்லும் துளிர்க்கக் காணமுடியாது. (விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது-16)
48. மணலில் தோண்டிய அளவு நீர் ஊறுவதுபோல் கல்வி கற்கும் அளவுக்கு அறிவு பெருகும். (தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு-396)
49. யாரைவிடவும் உன்னைக் காதலிக்கறேன் எனக்கொஞ்ச,யாரைவிட என்றது யாரை என்று ஊடினாள். (யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று-1314)
50. கடல்நீர் மேகமாகி மீண்டும் மழையாகப் பெய்யாவிடில் கடலும் வற்றிப்போகும். (நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்-17)
51. எங்கு சென்றாலும் சிறக்கவைக்கும் கல்வியை சாகும்வரை கல்லாதவரை என்ன சொல்ல? (யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு-397)

52. கொடிமலரை அழகாய்ச் சூட்டிவர, எவளுக்குக் காட்டச் சூடினாய் என்று ஊடினாள் (கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று-1313)

53. வானம் பொய்க்குமானால், வானுறையும் தெய்வத்துக்கே, பூஜை ஏது?திருவிழாதான் ஏது? (சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு-18)

54. ஒருவன் ஒரு பிறப்பில் கற்ற கல்வி, அவன் ஏழு பிறவிக்கும் உதவத் துணையாய் வரும். (ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து-398)

55. ஊடலின்போது, நீடூழிவாழ வாழ்த்துவேன் என்று பொய்யாய்த் தும்மினான் காதலன். (ஊடி இருந்தேமாத் தும்மினார் யார்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து-1312)

56.  மழை பெய்யாவிடில் உலகில் பிறர்க்கான தானமும், தனக்கான தவமும் lகெட்டுப்போகும். (தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்-19)
57. தான் இன்புற்ற கல்வி உலகை இன்புறுத்தக் கண்டு அறிஞர்,மேலும் கல்வியை விரும்புவர். (தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்-399)
58. எல்லாப்பெண்ணும் காமக்கண்ணால் உண்ட மார்பை பாவை நான் தழுவமாட்டேன். (பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற்கு பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு-1311)
59. மழை நீரின்றிப் போனால் உலகில் வாழமுடியாமல் ஒழுக்கமும் கூடக் குறைந்துபோகும். (நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு-20)
60. கல்வியைப்போல் அழிவற்ற செல்வம் உலகில் வேறு எதுவுமில்லை. (கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை-400)
61. ஊடல் தணிக்காது என்னை வாடவிடுபவனை நெஞ்சம் கூடத்துடிப்பதற்கு அவன்மீதான ஆசையே காரணம். (ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம் கூடுவேம் என்ப தவா-1310)
62. ஒழுக்கத்தில் உயர்ந்த பற்றற்வர்கள் பெருமையை உயர்ந்தவை என்று நூல்கள் கூறும் (ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு-21)
63. நல்ல நூலறிவின்றிக் கற்றவர்சபையில் பேசுவது, கட்டம் வரையாது தாயம் ஆடுதல்போல. (அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்-401)
64. நிழலில் இருக்கும் நீர்போல் குளிர்ச்சியும் இனிமையுமானது அன்புள்ளவரிடம் கொள்ளும் ஊடல். (நீரும் நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது-1309)
65. பற்றற்றவர் பெருமை எண்ணில் அளப்பது,உலகில் இறந்தவரை எண்ணமுயல்வதற்குசமம். (துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று-22)
66. கல்லாதவர் உரையை விரும்புவது, மார்பில்லாப் பெண் மேல் ஆசைப்படுவதுபோல. (கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று-402)
67. தமக்காக நாம் வருந்துவதை அறிகின்ற காதலர் இல்லாமல் வீணில் வருந்துவதால் என்ன பயன்? (நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் காதலர் இல்லா வழி-1308)
68. நன்மை தீமை இரண்டும் ஆய்ந்தறிந்து நல்லறம்புரிபவர் பெருமை இந்த உலகில் உயர்ந்தது. (இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு-23)
69. கற்றவர்முன் வாய்மூடி அமைதியாயிருந்தாலே கல்லாதவரும் நல்லவரென மதிக்கப்படுவர். (கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின்-403)
70. கூடல் இன்பம் அதிகநேரம் நீடிக்காதோ என்ற ஏக்கம், ஊடலைவிடவும் துன்பம் தருவது. (ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று-1307)
71. அறிவென்ற ஆயுதத்தால் ஐம்புலனும் அடக்குபவன், துறவுக்கு விதையாவான் (உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து-24)
72. கல்லாதவன் அறிவாளியாய் இருந்தாலும் அவனைக் கல்வியில் சிறந்தவனாய் ஏற்கமாட்டார்கள் (கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங் கொள்ளார் அறிவுடை யார்-404)
73. ஊடலும் செல்லக்கோபமும் இல்லாத காமம் அழுகிய பழமும், பிஞ்சும்போல் பயனற்றது (துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று-1306)
74. ஐம்புலன் அடக்கி ஆள்பவர்தம் வல்லமைக்கு வானோர் தலைவன் இந்திரனே சான்றாவான் ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி-25)
75. கல்லாதவன் போடும் தற்புகழ்ச்சி வேடமெல்லாம் கற்றவர்முன் பேசும்போது கலைந்துபோகும். கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்-405)
76. மலர்விழி மங்கையர் கொள்ளும் அன்பு கலந்த ஊடல், காதல் கொண்ட பண்புள்ள ஆணுக்கு அழகு (நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை பூவன்ன கண்ணார் அகத்து-1305)
77. அரிதான செயல்களைச் செய்துமுடிப்பவரே உயர்ந்தவர்.அதை முயலாதவர் என்றும் சிறியவரே. (செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்-26)
78. கல்லாதவர்கள் ஏதும் விளையாத களர்நிலம் போல, உயிரற்ற நடைப்பிணம் போன்றவர்கள். (உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர்-406)
79. ஊடல் கொண்டவர்மீது அன்பு காட்டாதிருப்பது, ஏற்கனவே வாடிய கொடியை வேரோடு அறுப்பதுபோலாகும். (ஊடி யவரை உணராமை வாடியற்ற வள்ளி முதலரிந் தற்று-1304)
80. ஐம்புலன்களின் ஆற்றலைப் புரிந்து, அவற்றை அடக்கி ஆள்பவனுக்கு இந்த உலகமே வசமாகும் (சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்கே உலகு-27)
81. நுட்பமான நூலறிவற்றவன் அழகும் வளர்ச்சியும் மண்ணால் செய்த பொம்மை போன்றதேயாகும். (நுண்மான் நுழைபுல மில்லான் எழினலம் மண்மாண் புனைபாவை யற்று-407)
82. ஊடல்கொண்டவரைக் கொஞ்சிக் கூடாமல் விடுவது அவர் துன்பத்தை அதிகரிக்கும். (அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்-1303)
83. மொழிவன்மை உடைய சான்றோர்கள் பெருமையை, உலகில் நிலைத்திருக்கும் அவர் மறைமொழி காட்டும் நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்-28)
84. மூடர்களிடம் சேரும் செல்வம், நல்லவரை வாட்டி வதைக்கும் வறுமையினும் மிகக் கொடியது. (நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு-408)
85. உணவில் உப்புபோல ஊடல் அளவோடிருக்கவேண்டும். மிகுதியானால் கூடல் இன்பம் ருசிக்காது (உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்-1302)\
86. நல்ல குணம்என்ற மலையேறி நிற்கும் உயர்ந்தவர் கொண்ட கோபம் நீண்டநேரம் இருக்காது (குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது-29)
87. கற்பதறால் வரும் உயர்வு, பிறப்பாலான உயர்வு தாழ்வை அழித்துவிடும். (மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு-409)
88. ஊடலால் அவனடையும் வேதனையை ரசித்துப்பார்க்கக் கொஞ்சநேரம் தழுவாமல் தவிக்கவிடு. (புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது-1301)
89. எல்லா உயிர்களிடத்தும் சம அன்பும் கருணையும் கொண்டவரே அந்தணர் ஆவார். (அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்-30)
90. நூலறிவு பெற்றவருக்கும், பெறாதவருக்குமான வேறுபாடு, மனிதனுக்கும் விலங்குக்குமானதுபோல. (விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்-410)
91. நம்முடைய நெஞ்சே நமக்கு உறவாயில்லாதபோது, மற்றவர் நம்மிடம் விலகியிருப்பது எளிதுதானே? (தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி-1300)
92. சிறப்பும் செல்வமும் தரும் நல்லறத்தைவிட உயிர்களுக்கு வேறெது நன்மை தரும்? (சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு-31)
93. கேள்வியறிவு என்ற செல்வமே எல்லாச் செல்வங்களையும் விடச் சிறந்ததாகும் (செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை-411)
94. துன்பம் வருகையில் தன் நெஞ்சே துணை நில்லாவிடில் வேறு யார் துணையாக நிட்பார்? (துன்பத்திற் குயாரோ துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி-1299)
95. அறம் செய்வதுபோல் நன்மையுமில்லை, அறம் செய்யாது விடுவதுபோல் ஒரு தீமையுமில்லை (அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு-32)
96. செவிக்கு உணவான நல்ல விஷயங்கள் கிடைக்காதபோது வயிற்றுக்கும் சிறிது உணவிடப்படும் (செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்-412)
97. ஊடலில் காதலனை இகழ்வது தனக்கே இழிவென அவனைப் புகழ்ந்து உருகும் என் நெஞ்சம் (எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு-1298)
98. எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அறவழி வாழ்வதே மிகச்சிறந்த வாழ்க்கை முறையாகும். (ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்-33)
99. செவியுணவான கேள்விச்செல்வம் நிரம்பியவர் அவியுண்டு வாழும் தேவருக்கு சமம். (செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து-413)
100.      அவனை மறக்க முடியாமல் தேடியலையும் என் நெஞ்சும் நானும் நாணத்தை மறந்துவிட்டோம். (நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென் மாணா மடநெஞ்சிற் பட்டு-1297)
101.       
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக