வெள்ளி, 26 ஜூன், 2015

என் பார்வையில் கலைஞர்!

என் பார்வையில் கலைஞர்!கல்லூரியில் தமிழ் மன்ற விழா! 
மொத்தக் கல்லூரியும் ஆடிட்டோரியத்தில்! 
பெயருக்குக் கூட ஒரு கட்சிக்கொடி இல்லை! 
கூட வந்திருந்த வேளாண்மைத்துறை அமைச்சரின் அழகு அவ்வப்பொழுது விசிலைப் பறக்கவிட்டது! அதையும் புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தார் அப்போதைய முதல்வர்!
மெல்ல நடந்து  மைக்கின் அருகே நின்று, அந்தப் பிரசித்திபெற்ற வார்த்தையோடு பேச்சை ஆரம்பித்தார்!
என் அன்பு உடன்பிறப்புக்களே!

அதன்பின் ஏறத்தாழ இரண்டு மணிநேரம் மந்திரித்து விட்டதுபோல் மகத்தான அமைதி - ஈரோடு வட்டாரத்திலிருந்த கல்லூரிகளின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அந்த இடத்தில் அசையாது உட்கார்ந்திருக்க, கையில் ஒரு சிறு குறிப்பும் இல்லாமல், ஒரு அருவிபோல் பொழிந்தது தமிழ் வெள்ளம்!

"யாயும் ஞாயும் யாரோ கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்!
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே"

இப்படி ஆரம்பித்து

செம்மண் நிலத்தில் மழை பொழிந்தால் - அந்த
நிலத்தொடு கலந்த நீரில்
சிவப்பு வண்ணத்தைப் பிரிக்க முடியாதன்றோ!
அஃதேபோல் நமது
நெஞ்சங்கள் இரண்டும் இணைந்துவிட்டன!

என்று முடிப்பதற்குள் எத்தனை இலக்கியங்கள் உள்ளே நுழைந்தன, களிநடம் புரிந்தன, எதுவும் அந்த மந்திரக்கணத்தில் நியாபகம் இல்லை!
இடையிடையே மறைமுகமாகத் தூவப்பட்ட அரசியல் வெடிகள்!

அன்று கலைஞருக்கு அடையாளம் அந்தத் தமிழ்!

உரை முடித்துப் புறப்படுமுன் எங்களோடு சின்ன உரையாடல்!
தமிழ் மன்றத்தில் ஈடுபாடுமாணவர் தலைவனுக்கு ஆப்தன் என்ற உரிமையில் சற்றே அருகே இருக்க எனக்கு வாய்ப்பு!

இது நடந்து ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து, எங்கள் ஊரில் ஒரு திருமணத்துக்கு வருகை! 
அந்த இடத்தின் மையப் புள்ளிக்கு நெருக்கம் என் தந்தை!
அவரோடு ஒரு ஓரத்தில் நான்!

தம்பி, சிக்கைய நாயக்கர் கல்லூரியில் உங்களை சந்தித்திருக்கிறேனே!
மிரளவைக்கும் நினைவாற்றல்!
                             
தினசரி, ஒரு முதல்வர் சந்திக்கும் எத்தனை முகங்களின் ஓரத்தில், என்றோ, ஒரு வருடம் முன்பு மிகச் சில நிமிடங்கள் ஒரு பெரும் கூட்டத்தில் சந்தித்த முகம் நினைவிருக்கும் ஆற்றல் வரம்!

இன்னுமொரு சம்பவம்! 
சென்னிமலையில் ஒரு ஏழை மாணவனுக்குக் கல்லூரி அட்மிஷன்!

எங்கள் தறிப்பட்டறையில் வேலை  செய்யும் ஒரு முதிய பெண்மணி, நான் போய் முதல்வரைப் பார்த்துப் பேசிவருகிறேன் என்று புறப்படுகிறார்!
இன்றுபோல் தொலைபேசி வசதிகள் இல்லாத காலம்!
நேராகக் கலைஞர் வீட்டுக்கே சென்று, அங்கேயே குளித்து, சாப்பிட்டு, அனுமதிக் கடிதம் வாங்கிவந்தபோதுநம்பிக்கை இல்லாமல் கேலிப் புன்னகை செய்த எனக்கு செவிட்டில் அறைந்தாற்போல் இருந்தது.

இது, இந்தத் தலைமுறையில் கலைஞரைப் பார்க்கும் யாராலும் நம்ப முடியாத அப்பட்டமான நிஜம்!

தன்னுடைய நல்ல பக்கங்களை, தன் செய்கைகளாலேயே மறக்கடித்த பெருமை கலைஞருக்கு உண்டு!

ஒவ்வொரு ஊரிலும் அடிமட்டத் தொண்டன்வரை பெயர்சொல்லி அழைக்கும் கட்டமைப்பும், அரவணைப்பும் ஒருகாலத்து கலைஞரின் அடையாளம்!அவரை ஒரு இலக்கியவாதியாக இன்றும் சிலர் ஏற்க மறுப்பதுண்டு! ஒருவேளை அவர்கள் தேடும் "சுத்த இலக்கியம்" அவரிடம்  இல்லாதிருக்கலாம்! ஆனால் என்போல் பலருக்கும் தமிழ் இலக்கியங்களை எளிமையாய் அறிமுகப்படுத்தியவர் அவர்!
புறநானூறும் சிலம்பும் குறளும் அவர் இல்லாமல் எங்களை இவ்வளவு ஈர்த்திருக்காது!

துள்ளல் நடையில் அவரது காவியங்களைப் படிக்காது என் பருவத்து ஆட்களின் இளமை கடந்திருக்காது!

எல்லாக் கேள்விகளுக்கும் அவரது நகைச்சுவை கலந்த உடனடி பதில்கள்!
எல்லோரிடமும் மரியாதை காட்டும் மாண்பு!

கோபத்தோடு வாதிட்டவரையும் புன்னகையோடு அமரவைக்கும் தமிழ்!
இது ஒரு பக்கம்!


அண்ணாவுக்குப் பின் யார் என்ற கேள்விக்கு, எல்லோரும் யாரைக் கை காட்டினார்களோ, அவரை வைத்தே தன்னை சுட்டவைத்த சாதுர்யம்!
அது சரிதான் என்று நிரூபித்த திறன் வாய்ந்த நிர்வாகம்!

நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது வெளிப்பட்ட மகத்தான நெஞ்சுரம்! 

அன்று ஆட்சியில் இருந்த மற்ற மாநில முதல்வர்களைப்போல் மத்திய அரசு ஏவிய வேலைகளைச் செய்திருந்தால் ஆட்சியைத் தக்கவைத்திருக்க முடியும் என்ற நிலையில் துச்சமாக ஆட்சியை உதறிய நெஞ்சுரம்!

ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவு வாழ்க்கைக்கு தைரியமாக  உதவிய ஒரே தென்னகத் தலைவர்!

நெருக்கடி நிலையில் அவர் இழந்தவை அதிகம்! சிறை சென்ற அன்பு மகன் ஏறத்தாழக் குற்றுயிராய் வந்தது உட்பட! 
இன்றுபோல் சிறையில் வசதிகள் அனுபவிக்கவில்லை ஸ்டாலின்!
சிட்டிபாபு இல்லாவிட்டால் ஸ்டாலினுக்கு இன்னும் சில நாட்களில் நாற்பதாவது நினைவுநாள்!

அந்தக் கொடும் காலகட்டத்திலும் சற்றும் தன் மனம் கலங்காத தலைவன் கலைஞர்!

தமிழும் தமிழனும் உயர, துடிப்பாய் நின்ற, கொள்கை உறுதி கொண்ட தலைவர்!

இந்தக் கட்டுரை இதோடு முடிந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும்!

காலம் காரணமே இல்லாமல் சில கொடூர மாற்றங்களை செய்துகொண்டேதான் இருக்கிறது! 

முத்தமிழ் வித்தகரையும் ஒரு வித்தைக்காரனாய் ஆட்டுவித்தது காலம்!

கழகத்தைத் தன் குடும்பமாய் நினைத்தவர் கலைஞர் என்பதை அவரது தீவிர எதிரிகளும் மறைமுகமாகவாவது ஒப்புக்கொள்வர்!

குடும்ப அக்டோபஸ் கொஞ்சம் கொஞ்சமாக கட்சியை வளைப்பதை கையாலாகாது வேடிக்கை பார்த்ததோடு அதை  ஊக்குவிக்கும் நிலைக்கு அவர் போனது தமிழனின் சாபம்!

கலைஞரின் சிலநூறு படைப்பு விருந்தின் இடையே, "போலீஸ்காரன் மகள்" போன்ற நரகல்களும் இருப்பதுபோல்அவர் அரசியல் வாழ்க்கையிலும் சில!

துரதிர்ஷ்டவசமாக அவரது எதிரிகள் யாவரும் அவரால் உருவாக்கப் பட்டவர்களே! புரட்சி நடிகர் முதல் புரட்சிக் கலைஞர் வரை!

இலாகா இல்லாத மந்திரியாய் எப்போதும் தன் கையருகே வைத்திருக்க வேண்டிய எம்ஜியாரை சீண்டியதில் ஆரம்பித்தது அவர் முதல் சரிவு!

இதயக்கனி காற்றில் கரையும்வரை இவருக்கு முதல்வர் நாற்காலி எட்டாக்கனி!

அதிலும் பாடம் கற்காமல், ஒருநாள் காத்திருக்கப் பொறுமையின்றி ஜெயலலிதாவின் ராஜினாமாக் கடிதத்தை இவர் வெளியிட, சீண்டப்பட்டு சிலிர்த்து எழுந்து மீண்டும் துளிர்த்தது இரட்டை இலை!

ஜாதியில்லை மதமும் இல்லை என்று முழங்கியவாரே, ஜாதிக்கட்சிகளையும் மதவாதக் கட்சிகளையும் ஒவ்வொரு தேர்தலிலும் வளர்த்துவிட்டவர் கலைஞர்!

எல்லாக் கோடரிகளும் தீட்டிய மரத்தையே பதம் பார்த்தன!

வெறும் பேச்சு வன்மையால் மட்டும் ஆட்சி நடத்த முடியாது என்று உணர்ந்தபின், பல தொழில் முயற்சிகளோடு, மதுக் கடைகளையும் திறந்து, தமிழனின் சீர்கேட்டுக்கு முதல் விதை விதைத்தவர் கலைஞர்!

தள்ளாத முதுமையிலும், வீடுதேடி வந்து காலில் விழுந்த ராஜாஜியின் குரல் இவர் காதில் விழவே இல்லை!

சர்க்காரியா கமிசன் என்ற ஒற்றை ஆயுதம்கொண்டு, தன் விருப்பத்துக்கும் இவரை ஆட்டுவித்தார் இந்திரா!
ஊழலில் சுகம் கண்ட குடும்பமும் நெருக்கடிதர, நெருக்கடி நிலைமைக்குப் பணியாத நெஞ்சுக்கு நீதி, சந்தனம் விட்டு மெல்லமெல்ல சகதிக்குள் விழுந்தது!

இன்றுவரை ஊழலுக்கு சிறை சென்றதில்லை, "தேர்தலில் வென்று" ஐந்துமுறை தமிழக முதல்வரான கலைஞர்!

ஆனால் அவரை ஊழலுக்கு அடையாளமாகவே இன்றைய தலைமுறை அறிய நேர்ந்தது அவலம்!

அதன் காரணங்களை நன்கு அறிவார் அரசியல் சாணக்கியர்! ஆனால் கடிவாளம் இப்போது அவர் கையில் இல்லை!

கடந்த இரு பொதுத் தேர்தல்களிலும், திமுக பிற கட்சிகளிடம் கூட்டணிக்குத் தூது போகும் நிலைமைக்குத் தள்ளப்பட்ட அவலம் இந்தப் பொதுத் தேர்தலுக்கு யாருமே நம்மை அண்டமாட்டார்கள் என்ற அச்சத்தில் கிடைத்த இடத்திலெல்லாம் துண்டுபோட்டு வைக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது!

விஜயகாந்த் வைகோ போன்ற உதிரிகளை எல்லாம் ஸ்டாலின் போய்ப் பார்த்த மறுநாளே, இவர் கூட்டணி பற்றிக் கோடிகாட்டி அறிக்கை விடுவதும், அவர்கள் அதை மறுத்து அறிக்கை விடுவதும் திமுக வரலாற்றில் காணாதது.

இந்த  நிலைக்கு என்ன காரணம் என்பது கலைஞருக்குத் தெரியும். 

ஆனால் களையெடுக்கும் நிலையில் அவர் இல்லை என்பது எதார்த்தம்.
தலைமையின் குடும்பத்தின்மீது ஊழல் புகார்கள் குவிய ஆரம்பித்ததும், மாவட்டச் செயலாளர்கள் குறுநில மன்னர்கள் ஆகினர்.
வீரபாண்டி ஆறுமுகம், ஈரோடு ராஜா இவை சில உதாரணங்கள்.
இது, அரசியல் செய்வதை விட்டு, கட்சியைக் காக்கப் போராடும் நிலைக்கு கலைஞரைத் தள்ளிவிட்டது!

எனவேதான் ஆர் கே நகர் தேர்தலில், குமாரசாமியின் தீர்ப்பைப் பற்றி மக்கள் மன்றத்தில் விளாசக் கிடைத்த வாய்ப்பை வியாக்கியானம் பேசி நழுவவிட நேர்ந்தது!

முகவும் திமுகவும் தோல்விக்கு அஞ்சியதில்லை என்பதை நாம் அவருக்கு நினைவு படுத்த வேண்டியதில்லை!

இன்னொரு இமாலயச் சறுக்கல் இலங்கை விவகாரம்!

எம்ஜியாரை அண்டி நின்ற பிரபாகரன் முதல் கோணல்! அதன்பின் முற்றிலுமே கோணலாய்ப் போனது!

எதிர்க் கட்சிகளுக்கு அரசியல் ஆதாயம் தரக்கூடாது என்ற அச்சத்தில்  அவர் பதவி ஏற்றபோதெல்லாம் விடுதலைப் புலிகளின் அட்டகாசங்களை தமிழகத்தில் கண்டும் காணாதிருக்க ஆரம்பித்தது ராஜீவ் காந்தி படுகொலையிலும், அதன் மறைமுகப்பழி சுமந்து தேர்தலில் படுதோல்வி காணவும் வழி செய்தது!

மத்திய  அரசியல்வாதிகள், அரசுடனான லாபிக்கு கனிமொழியையும் மாறனையும் நம்பியதன் வினை, அந்த இரண்டுமணிநேர உண்ணாவிரத நாடகமும், தொடர்ந்த போர்நிறுத்த அறிவிப்பும்!

இலங்கைப் பிரச்சினையில் எல்லாக் கட்சிகளுமே நாடகம் ஆடுகின்றன! மற்றவர்கள் எல்லோரும் பலன்களை அறுவடை செய்ய, இவர் மட்டும்  இழந்தவையே அதிகம்!

அரைகுறைத் தாமரைகளும், ஆதாயக் கணக்குப்போடும் சீமான்களும்  அவமானப் படுத்தும் நிலைக்குத் தன்னை இறக்கிக் கொண்டது அவர் பிழை!

ஜாதிக்கட்சிகளை உரமிட்டு வளர்த்தது, மத விவகாரத்தில் சிறுபான்மை வாக்குக்காக துடுக்குத் தனமாகப் பேசுவது போன்றவற்றை உங்கள் பழைய வரலாறு அறியாத  தலைமுறை ரசிக்கவில்லை தலைவரே!

உங்கள் பழைய நிறைகளும் இன்றைய குறைகளும் எங்களுக்குத் தெரியும்!
அதிலும் என் தகப்பனுக்குத் தெரிந்ததில் பாதிதான் தெரியும் 

ஆனால் என் மகனுக்கும் மகளுக்கும் இன்றைய கனிமொழி, அழகிரியின் தகப்பனையும், தயாநிதியின் மாமனையும், ஆ ராசாவின் காவலரையும்தான் தெரியும்.

உங்கள் சமூக நீதிக்கான போராட்டங்களும், கொள்கை உறுதியும் அவர்களுக்குப் பழங்கதை!

ட்விட்டர் வரை ஹை டெக் ஆக  ,இயங்கவும், இந்தத் தள்ளாத வயதிலும் தினசரி பதினெட்டு மணி நேரம் உழைக்கவும் முடிந்த உங்களுக்கு, உங்களையும் உங்கள் கட்சியையும் புதுப்பிக்கத் தெரியாமல் இருக்காது!

தகுதிக்குமேல் பேராசை கொள்ளும் உங்கள் சுற்றங்களும், நீங்கள் நம்பாதவனாக காட்டிக்கொள்ளும் கடவுளும் உங்களை அதைச் செய்ய உதவட்டும்!

உங்கள் நூறாவது வயதில், ஏழாவது முறையாக முதல்வர் பதவியேற்க காலம் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!                                                                                                                                                                                         

திங்கள், 22 ஜூன், 2015

சடங்குகள் பிணைக்கும் உறவு!

தங்கை மகன் திருமணத்தில் கற்றதும் பெற்றதும்!நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு திருமணத்தில் எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்றேன்!. 
பல சடங்குகள் மறந்தே போய்விட்டன!
அப்பாவும் அம்மாவும் சொந்த ஊரில் இருப்பதில் இது ஒரு சௌகரியம். எல்லா நல்லது கெட்டதும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

மிக நெருங்கிய சொந்தமாக இருந்தால், ரிசப்ஷனுக்கோ, முகூர்த்தத்துக்கோ போய்த் தலையைக் காட்டிவிட்டு வருவதோடு சரி!

கொஞ்சம் கொஞ்சமாக இந்த சடங்குகள் எல்லாம் மறந்து போயிருந்தபோது சந்தோஷின் திருமணம்.

சந்தோஷ்
தங்கை மகன். 
அவன் பிறந்த தினம் இன்றும் நினைவிருக்கிறது.
ஆயா- அப்பாவின் அம்மா - உடல்நிலை கருதி பதினேழு வயதில் தங்கைக்குத் திருமணம், பதினெட்டில் சந்தோஷ் குமார் பிறந்தான்.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நான்சந்தோஷமும் பரவசமுமாக, என் அம்மாவின் கையை மீறி, பிரசவ அறையிலிருந்து நர்ஸ் கொண்டுவந்து நீட்டிய குழந்தையை கையில் ஏந்திக்கொண்டேன்.

என் கை வழி உலகை அடைந்தவன் என்று அவன் மீது எப்போதுமே எனக்குத் தனிப் பிரியம்!

அதற்கு ஏற்றாற்போல் பத்துவருட மேல்நாட்டு வாழ்க்கையிலும், ஒரு சிறு கெட்ட பழக்கம் கூட இல்லாமல், வெளிநாட்டு வாழ்க்கை, கை நிறைய சம்பாத்தியம் தந்த கர்வம் துளியும் தலைக்கு ஏறாமல், அதே எளிமையும் இனிமையுமான என் தங்கை மகனைப் பார்க்கும்போதெல்லாம், பெருமிதமும் அன்பும் என் மனதில் நிறையும்!

இரண்டு வருடங்களாகத் தேடி, ஒருவழியாய்ப் பெண் அமைந்து, இதோ, இன்று தாய் மாமன் மனை வைக்கும் நாள்!

மாலை நடைபெறும் விஷேசத்துக்கு, உள்ளூருக்குள் எல்லா சொந்தக்காரர்களின் வீட்டுக்கும் நேரில் போய் அழைத்து வர வேண்டும்.

முகப்பில் சிறிதாக இருந்தாலும், உள்ளுக்குள் நீளமாக இருக்கும் அந்த வீடுகள் அனைத்தும் எனக்கு அத்துபடி!

அந்த சின்னஞ்சிறு கிராமத்தின் தேரோடும் நான்கு தெருக்களில், இரண்டு தெருக்களில், அநேகமாக எல்லா வீடுகளும், என் சொந்தக்காரர்கள்தான். 

சிறு வயதில் ஓடி விளையாடிய எல்லா வீட்டுக்கும் நீண்ட நாட்களுக்குப்பின் செல்லும் பரவசம்!

அந்த பரபரப்பும், மகிழ்ச்சியும், முதல் வீட்டுக்குள் நுழையும்போதே இற்றுப்போனது!

அநேகமாக, எல்லா வீடுகளும் ஏகதேசம் இருண்டுபோய் ஒரே ஒரு ட்யூப் லைட் மட்டும் எரிந்துகொண்டிருந்தது. அந்த அரைகுறை வெளிச்சமே, அந்த வீடுகளுக்கு ஒரு அமானுஷ்யத்தைக் கொடுத்தது!

அத்தனை பெரிய வீடுகள் எல்லாவற்றிலும், அறுபது, எழுபதைக் கடந்த முதியவர்கள் மட்டும். அதிலும் சில வீடுகளில், வயதான பாட்டிகள் மட்டும் தனிமையில்!

தவறாமல் எல்லா வீட்டிலும் ஒரு மகனோ, மகளோ, அல்லது இருவருமோ, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய் என்று போயிருந்தார்கள்!

எல்லாவீடுகளிலும், தவறாது ஒரு எல்சிடி டிவி! 21 இன்ச் முதல் 50 இன்ச் வரை! பிள்ளைகள் போயிருக்கும் நாட்டையும் வேலையையும் பொறுத்து!
எல்லா வீட்டிலும் டிவியில் ஏதோ ஒரு நாடகம் சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது- பார்ப்பாரில்லாமல்!

ஒரு வீட்டில் சொல்லியே விட்டேன்- அந்த டிவியை நிறுத்துங்களேன்!

"இருக்கட்டும்பா. அது ஏதாவது பேசிக்கிட்டே இருந்தா, கூட ஒரு ஆள் இருக்கற மாதிரி இருக்கு!"

ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கையில், முதியோர் இல்லம் என்பது அப்படி ஒன்றும் தவறான வழி என்று படவில்லை!

யாருமில்லாத வீட்டில், மருந்து மாத்திரை கவரும், மடக்கு கட்டிலும், கூட ஒரு ஒற்றை கிழவனோ, கிழவியோ மட்டும் துணைக்கு இருக்க, பெரிய வீட்டில் தடுமாறிக்கொண்டு இருப்பதை விட, இந்த சொந்த ஊர், சொந்தவீடு போன்ற வெட்டி செண்டிமெண்ட் இல்லாமல் ஒரு முதியோர் காப்பகத்தில், துணையுடன், நல்ல வசதிகளுடன் இருப்பது தவறில்லை என்றே படுகிறது!

வியாபாரம், விவசாயம் என்று தவிர்க்க முடியாது ஊருக்குள் தங்கிவிட்ட ஒரு மிகச் சில குடும்பங்களைத் தவிர யாருமே இல்லாமல் சிதிலமடைந்துகொண்டு வருகின்றன நம் கிராமத்து வீடுகளும், முதியோரும்!

இதுபோல் யாராவது ஏதாவது அழைப்பு என்று வரும் சில நிமிடங்களே அவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதல் தரும் கணங்கள்!

இதில் இன்னும் ஒரு அவலம், இதுவரை மூன்று சாவு சடங்குகள் ஸ்கைப் மூலம் மகன்களால் பார்க்கப்பட்டு, இங்கிருக்கும் பங்காளிகளால் நடத்தப்பட்டிருக்கின்றன!

உள்ளூரில் தங்கிப்போன சில இளைஞர்கள் இன்னும் இவர்களையெல்லாம் ஒரு தார்மீகக் கடமைபோல் பார்த்துக்கொள்வதும், அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ வாழும் (?) அவர்களின் வாரிசுகளுக்கு நிலவரங்களை எடுத்துச் சொல்வதையும் ஒரு சேவைபோல் செய்து வருவது இன்னும் நம் சமுதாய அமைப்பின் மேல் மதிப்பையே கூட்டுகிறது!

இன்றைக்கு அந்த ஊரில் இருக்கும் எங்கள் சொந்தக்காரர்களின் சராசரி வயது நிச்சயம் அறுபதுக்கு மேல்தான் இருக்கும்.

இதில் இன்னொரு சோகம் என்னவென்றால், அத்தனை பெரிய வீடுகள் பராமரிக்கவும் ஆளின்றி, விற்றுவிட்டுப் போகவும் மனமின்றி, படிப்படியாகச் சிதைந்து வருவதுதான்.

அந்த மனிதர்கள் வெளிநாட்டு வருமானம் மூலம் பொருளாதார ரீதியாக செழிப்படைந்து வந்தாலும், அந்தத் தெரு அடைந்திருக்கும் மாற்றம் முகத்தில் அறைகிறது.

ஜவுளிக்கடை, காபிக்கடை மளிகைக்கடை என்று ஒவ்வொன்றாக உரிமையாளர்களின் முதுமை காரணமாக மூடப்பட்டு, வெறும் வீடுகளும் கதவுகள் எந்நேரமும் அடைக்கப்பட்டே இருண்டு கிடக்கிறது அந்த வீதி. 

அவ்வப்போது கதவுகள் திறக்க நேர்கையில் அலறும் டிவி சத்தங்கள் தவிர, எந்த மனித முகங்களும் காணக்கிடைக்கவில்லை.

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்வரை, எந்நேரமும் கிண்டலும் கேலியுமாக ரகளையாக இருந்த மாலைகள் மௌனப்போர்வையில்!   

அழைக்கப்பட்ட அத்தனை பேரும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வந்திருந்தார்கள் - ஒருவேளை அவர்களுக்கு, தங்கள் சொந்தங்களைக் காண இதுவே ஒரு கடைசி வாய்ப்போ என்ற பதட்டம் கூடக் காரணமாக இருக்கலாம்!

இன்னொரு விஷயமும் காணக்கிடைத்தது!

அயல்நாட்டிலிருந்து இந்தத் திருமணம் கருதியே வந்த ஒரு முக்கிய சொந்தத்தின் குழந்தைகள், சக வயதேயான தங்கள் சொந்த சித்தப்பா, அத்தை குழந்தைகளிடம்,
Oh yah, you are Ramesh?
Great! 
Mom used to talk about your parents !
It is a pleasure seeing you all!!
 என்று நீட்டி முழக்கிக்கொண்டிருந்ததையும், அந்த ஊர் மண்ணைத் தாண்டாத அந்தக் குழந்தைகளும் சற்றும் சளைக்காமல் ஏதோ ஒன்றை ஆங்கிலத்தில் பேச, சட்டென்று ஒன்றுக்கொன்று தோளில் கை போட்டுக்கொண்டு விளையாடக்கிளம்பியதும் ஒரு தனிக் கவிதை!

ஐந்து நாள் வைபவமாக ரசனையாய்  நடந்தது திருமணம்.

சின்னச்சின்ன மனஸ்தாபங்களோடு முகம் திருப்பிப்போன சொந்தங்கள் மெல்ல மெல்ல பழைய இயல்புக்கும் ஒட்டுதலுக்கும் உரிமையோடு திரும்பியது இதில் இன்னொரு விசேஷம்!

ஏறத்தாழ மொத்தக் குடும்பமும் (எங்கள் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை நூறைத் தாண்டும் - உதிர்ந்த கிளைகள் போக!) ஒன்று கூடி பேசிப்பேசி சலித்ததும், களித்ததும், அநேகமாக நீண்ட நாட்களுக்குப்பின் இதன் காரணம் சந்தோஷ் மீதிருந்த எல்லோருடைய அன்பு!.

இன்னும் என்னைத் தங்கம் என்று வாஞ்சையோடு கூப்பிடும் சிலர் கண்ணில் நான் இன்னும் சின்னப் பையன்தான்.
அதனால்தான் பெண்களும் சிறுவர்களும் குழந்தைகளும் இருக்கும் இடத்தின் மையத்திலேயே மொத்த வைபவத்திலும் நான் இருந்தேன்!
இதே என் சக வயது அத்தை மகன் என் மனைவியிடம் சொன்னது வேறு தொனி! "இன்னும் உன் வீட்டுக்காரன்  ஒரு சீரியஸ்நெஸ் இல்லாமல் விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறானே!"

இருந்துவிட்டுப் போகிறேனே!

பாவம் சிலர் சீக்கிரம் மனதால் மூப்படைந்துபோகிறார்கள்!

இன்னும் ஒரு வருடத்துக்கு நினைத்துப் புன்னகைக்கப் பல விஷயங்கள்! - கூடிக்கூடிப் பழங்கதை பேசியதும், அடுத்த தலைமுறை புரிதலைத் தொடர்ந்ததும்,அறுந்தே போயின என்றிருந்த உறவுச் சங்கிலிகள் இறுகப் பிணைந்திருந்ததை உணர்ந்தது என!

என்றாலும் சின்னச் சின்ன உறுத்தல்களுக்கும் குறைவில்லை!

1. கேட்டரிங் படிப்பே என்றாலும் ஏட்டுச் சுரைக்காய் நிச்சயம் கறிக்கு உதவாது! உள்ளூர் சமையல்காரனை விட்டு, தங்கை மகள் கிளாஸ் மேட் என்று ஸ்டார் ஹோட்டல் சமையல்காரர்களிடம் சமையலை ஒப்படைத்தது கொஞ்சம் பல்லிளித்துவிட்டது!

2. சொந்தம் இல்லாது, வெளியே பெண் எடுத்து / கொடுத்துத் திருமணங்கள் நடப்பது அதிகரித்துவிட்டபோதிலும் நான் அப்படிக் கலந்து கரைந்தது இந்தத் திருமணத்தில்தான்.

மாப்பிள்ளை வீடு, பெண் வீடு இரண்டுமே சொந்தக்காரர்களாய் இருக்கும் திருமணங்களின் கலகலப்புக்கும் இரண்டில் ஒரு தரப்பு அன்னியமாக இருப்பதற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது.

தண்ணீரும் எண்ணையும்போல ஒட்டாமல் இரண்டு தனித் தனி குழுக்கள் இருப்பது கண்கூடாய்த் தெரிந்தது!

ஒரு கேலிப்பேச்சோ, உரத்த சிரிப்போ, அந்நியர்கள் முன் அவ்வளவு இயல்பாய் இருப்பதில்லை!

மேலும் இதுபோல் பையனும் பெண்ணும் வெளிநாட்டில் தங்கிவிடப்போகும் திருமணங்களில், இரண்டு பிரிவுகளும் செம்புலப்பெயல் நீர்போல் (!) கலப்பதற்கு எதிர் காலத்திலும் வாய்ப்புகளே இல்லை!

3. இந்த ரிசப்சனுக்கு வந்தால் திருமணத்துக்கு வரவேண்டாம் என்ற கலாச்சாரம் நல்லவேளையாக இன்னும் கிராமங்களில் பரவவில்லை!

பார்க்கும் நேரமெல்லாம் மண்டபம் நிறைந்தே இருந்தது!

பாவம்! பெண் வீட்டார்தான்  விருந்தாளி போல் வந்து போனார்கள்!

சரி, சொந்தத்தில் திருமணங்கள் செய்வதில் பிரச்னையே இல்லையா?

இருக்கின்றன,

ஆனால்
அவை வேறு விதமானவை!

நிச்சயம் இவற்றைவிட எளிமையானவை!


சனி, 20 ஜூன், 2015

விஜய் ரசிகனும், அஜீத் ரசிகையும்!

தலையா, தளபதியா?விஜயாவுக்கும், அஜய்க்கும் அன்று காலைதான் திருமணம் முடிந்திருந்தது!

பெற்றவர்கள் பார்த்துச் செய்துவைத்த திருமணம் ஆனாலும் ஒருவர் புகைப்படம் பார்த்த மற்றொருவர் கிறங்கிப்போய் ஏறத்தாழ சொர்க்கத்தில் மிதந்துகொண்டிருந்தார்கள்!

அஜய் அமெரிக்காவில் கை நிறைய சம்பாதிக்கும் எஞ்சினீயர்.
விஜயா குவைத் வாழ் சாப்ட்வேர் எஞ்சினீயர்.

இருவரும் ஒருவருக்காகவே மற்றவர் படைக்கப்பட்டதுபோல அத்தனை பொருத்தமான அழகு.

நகரின் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டலில் முதலிரவுக்கான ஏற்பாடு! 
சுவீட் ரூம் தேவலோகம்போல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அறைக்கதவை தாளிட்ட விஜயா, “கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருக்கலாமே ப்ளீஸ் என்றாள் கொஞ்சலாக! - அஜய் கண்ணில் வழிந்த காமத்தைக் காணாதவள் போல்!

சிறிதுநேரம் ஒருவரைப் பற்றி மற்றவர் விசாரித்து, பின் மெல்ல, ஆவலோடு அவள் கையைப் பற்றிய அவன் கேட்டான்
உனக்கு எந்த ஹீரோ பிடிக்கும்!

சட்டென்று தயங்காமல் அவள் சொன்னாள் - அஜீத்!

அவன் முகம் மெல்ல இருண்டது

அதை கவனிக்காமல் அவள் கேட்டாள் - உங்களுக்கு?

கொஞ்சம் வேகமாகவே பதில் வந்தது- விஜய்தான் எப்போதும் என் உயிர்.

தீயைத் தொட்டதுபோல் கையை உருவிக்கொண்ட அவள் அவனை ஒரு வினோதமான ஜந்துவைப் பார்ப்பதுபோல் பார்த்தாள்.

விஜய்யா? அவனெல்லாம் ஒரு நடிகனா?

அவன் குரல் உயர்ந்தது  ------ குஞ்சு, உனக்கென்னடி தெரியும் விஜய்யைப் பற்றி?

டீயா? -----------குஞ்சுதானே நீ, உன் புத்தி அப்படித்தான் இருக்கும்!

அறிவு கெட்டவளே என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசு. என் தளபதியை ஏதாவது சொன்னால் நான் மனுசனா இருக்கமாட்டேன்!

போடா, இப்போ மாத்திரம் நீ மனுசனா என்ன, ஸ்கூல் பாய்!

என்னடி வாய் நீளுது? அஜீத் பிடிக்கும்ன்னு வெட்கமில்லாமல் சொல்லுற நீயெல்லாம் நல்ல குடும்பத்திலிருந்தா வந்திருக்கமுடியும் ?

போடா கேடு கெட்டவனே? உனக்கு கல்யாணம் ஒரு கேடா? உங்க அம்மா எவ்வளவு கேவலமானவன்னு போய்ப் பாரு!

போடி நாயே, உங்க அப்பன் மாதிரி ஊர் மேயுற புத்தி எங்க பரம்பரைக்கே கிடையாது!

நீ அமெரிக்காவுல பிச்சைதானே எடுக்கிறாய் பரதேசி நாயே!

இன்னொரு தடவை ஏதாவது பேசினா, உன் பல்லு உடையும் பொறுக்கி மு---


 -------------------------


--------------------------


பழம் நறுக்க வைத்த கத்தி அவள் கையில், லைட் ஸ்டாண்ட் அவன் கையில்!

சத்தம் கேட்டு ஓடிவந்த ஹோட்டல் சிப்பந்திகள் கதவைத் தட்ட, மேற்கொண்டு அசம்பாவிதம் தடுக்கப்பட்டு,மறுநாள் பரஸ்பர விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது!
இது நடக்காதா என்ன?

செவ்வாய், 16 ஜூன், 2015

ஒருவரிக்கதைகள்!

என்றோ ஒருநாள் எழுதிய ஒருவரிக்கதைகளின் தொகுப்பு!
1.  கதவைத்திறந்தபோது கத்தியோடு பாய்ந்தவன், என் கழுத்தை அறுக்கப் பதறி விழித்தேன். கதவு தட்டப்பட்டது!

2.    கங்கிராட்ஸ், நீங்க அப்பா ஆகப்போறீங்க,கணவன் ஊரிலில்லாதபோது துணைக்குவந்த சினேகிதனுடன் சகஜம் அறுத்தார் அவசரக்குடுக்கை மருத்துவர்

3.    வலிக்கிறது டாக்டர் என்றது ஆடப்ஸி டேபிளில் பிணம்!!

4.    விளக்கைப் போட்டவுடன், இருட்டிலிருந்து வந்தவன் கை துப்பாகி என்னை நோக்கி வெடிக்க, டிவியை அணைத்துவிட்டுப் போய்ப் படுத்தேன்.

5.    கதவு தட்டும் சத்தம் கேட்டுப் பழக்கதோஷத்தில் பதறி எழுந்தது கேட் கீப்பர் பிணம், சவக்குழியில்!

6.    விஷம் கலந்த பாலை குடிக்க எடுத்தபோது, தடாலென்று உள்ளே வந்து பிடுங்கிக்குடித்தான் குடிகாரக் கணவன். விடுதலைப் புன்முறுவல் மனைவியிடம்!

7.    ரொம்பக் குளிருது. போர்வை கொடு!! குரல் கேட்டுச் செத்துப்போனான் பிணவறைக் காவலாளி

8.    சட்டென்று முகத்தில் விழுந்த அறையில் சுதாரித்து, அறைந்த கையை இறுகப்பற்றி, அவன் முகத்தில் முத்தமிட சிரித்தான் குழந்தை.


9.    இந்த உறவு தரும் உளைச்சல் இனி வேண்டாமென்று சாந்தி கதவை முகத்தில் சார்த்த, வெறுப்போடு வீட்டுக்கு வந்தபோது, டேபிளில் படபடத்தது மனைவி கடிதம்!

10.  மலை முகட்டில் கைகோர்த்து நின்ற ஆணும் பெண்ணும் பயத்துடன் கண்மூடிச் சேர்ந்தே குதிக்க, சரியாகப் பத்தாவது விநாடி, பாரசூட் விரிந்தது.

11.  இன்று நேரில் வந்து என்னுடன் பேசிய ஏசு, நான் உமாசங்கர் சொல்வதைப்போல் கொடுமையானவன் இல்லை என்று கண்ணீர் மல்க கதறி அழுதார்!

12.  அப்பா பார்த்தால் அவ்வளவுதான்" என்று அவள் கெஞ்சக்கெஞ்ச, மழை இருண்ட மொட்டை மாடியில் புடவையை இழுத்து,
மடிக்க ஆரம்பித்தான் - கொடியிலிருந்து.

13. மனைவி வருமுன் அவசரமாய் "சுதா,ப்ளீஸ் ஒன்னே ஒன்னு", உதட்டில் வைக்கையில் வந்தவள், சுதாகரை முறைத்தவாறே சிகரெட்டைப் பிடுங்கி எறிந்தாள்!
14. சுற்றி வளைத்தவர்களிடம் பதறிச் சொன்னது, வினோத வாகனத்தில் வந்த வித்தியாச உருவம்,"நான் பூமியிலிருந்து வருகிறேன், என் பெயர் மனிதன்"
15. ஆற்றில் கவிழ்ந்த பேருந்திலிருந்து தவித்து வெளியேறி தண்ணீருக்குமேல் நீண்ட தலைக்கு நேராய் வாயைப் பிளந்தது பசித்த முதலை.
16. மனைவிக்காகப் பார்க்கப் பொறுமையின்றி கதவைத்தாளிட்டு, வாகாகப்பிடித்துக் கத்தியால் கண்ணீர் வழிய வழிய அறுத்தான்,ஆம்லெட்டுக்கு வெங்காயத்தை!
  
17.  என்ன பிரச்னை என்ற மனநல மருத்துவரிடம், சமயத்தில் சம்பந்தமே இல்லாமல் பிதற்றுகிறார் என்று கையைக் காட்டினார்கள் மூவரும் -ஒருவருக்கொருவர்.

18.   மலைப்பாதைக் கார் விபத்தில் தப்பித்து ஓரமாய் நின்று கடவுளுக்கு நன்றி சொல்ல அண்ணாந்தபோது நிலச்சரிவில் உருண்டு தலையில் விழுந்தது பாறை.

19.   "நாளை என்னைக் கொல்லப்போவதாய் அவனிடம் சொன்னாயா" என்று தனியே கேட்டபோது, சிரித்துக்கொண்டே, "அதை நேற்றுச் சொன்னேன்" என்று கத்தியை உருவினான்

20.   பொய்யே கலக்காமல் ஒரு உண்மைக்கதை கேட்டபோது, "இதை எழுதியவன், படிப்பவர்கள் எல்லோருமே, ஒருநாள் கட்டாயம் செத்துப்போவார்கள்" என்று எழுதினேன்

21.   மளமளவெனத் தண்ணீர் புக, சரிந்து கவிழ்ந்த கப்பலுக்கு பதிலாக வேறு பேப்பரில் செய்ய ஆரம்பித்தான் மகன்

22.   பிறந்தபோதே மீசையிருந்தது சுப்பிரமணிக்கு- எங்கள் வீட்டுப்பூனை!

23.  பக்கத்துவீட்டில் குடிவந்த அழகுப் பெண்ணிடம் தயங்கித் தயங்கிக் கேட்டேன், நீங்க எந்தக் காலேஜ்? "QMC", "நீங்க?" "WCC"


24.  ஆபீஸில் புதிதாகச்சேர்ந்த பேரழகி விமலாவிடம் மூன்றுநாளாய் யோசித்துத் தயங்கிக் கேட்டேவிட்டேன், கையெழுத்துப்போட என்னிடம் வாங்கிய பேனாவை

25.  இந்தக் காதலர்தினத்தன்றாவது நான் பலவருடமாக நீ சொல்லிக் கேட்க ஆசைப்பட்ட அந்த மூன்று வார்த்தையைச் சொல்லமாட்டாயா- நான் ஊருக்குப் போறேன்


26.  உலகின் கடைசி மனிதன் ஆராய்ச்சிக்கூட மேஜையில் கிடத்தப்பட்டான்!


27.  உலகின் கடைசி மனிதனின் மொபைல் ஒலித்தது!


28.  உலகின் கடைசிமனிதன் பசி தாங்கமுடியாமல், பதுக்கிவைத்த பணத்தைத் தின்றுகொண்டிருந்தான்!


29.  எவனோ திருட்டுப்பயல் பறித்துப்போய்விட்டான் நான் நாளை விடிகாலை இருட்டில் பறித்துக்கொள்ளலாம் என்று விட்டிருந்த பக்கத்துவீட்டுப் பப்பாளியை.


30.  பிறந்ததிலிருந்து உன்னுடனே பயணிக்கிறேன், இன்றுதான் சந்திக்கும்நாள் வந்தது- புன்னகைத்துக் கை குலுக்கியது..... மரணம்!


31.  உனக்கான நாள் வந்ததென்று கைபிடித்துக் கூட்டிப்போனவனை நம்பாமல், திரும்பித்திரும்பிப் பார்த்தவாறே போனேன் என் உடலை!


கொஞ்சம் இதிகாச ஒற்றை வரி!வளைக்கச் சொன்ன வில்லை முறித்த கறுத்த முரடனை மணக்க மறுத்தாள் சீதை. கதைக் கரு கலைந்ததென்று கலங்கி அழுதார் வியாசர்!

சீதை தீக்குளித்தாள், சேதி கேட்ட அகலிகை, வரம் மறுத்துக் கல்லானாள்!!

கைகேயி வாங்கிய வரத்தால் பாவம், ஊர்மிளைக்குப் பெரும் சாபம்!

அப்பா வீட்டுக்குப் போகிறேன், உன்னோடு காடு வரச் சம்மதமில்லை - கிளம்பிப்போனாள் சீதை. கதை புரியாமல் குழம்பித்தவித்தார் வால்மீகி!!

அவதாரம் மானிட அரிதாரம் பூசி ஆடிய நாடகம் வெறுத்துக் கானகம் ஏகினாள் சீதை! வெள்ளாவியில் வெளுத்தது அயோத்தியின் மானம்!!

காப்பாற்றத் துப்பில்லாத கணவன்களைத் துறந்து கர்ணனிடம் சரண்டைந்தாள் பாஞ்சாலி!

புடவை தொட்ட கரம் அறுத்தாள் பாஞ்சாலி! தலை குனிந்தான் தருமன்! விதிர்த்தது கௌரவர் சபை! ஆரம்பிக்காமலே முடிந்தது பாரதம்!

ஆபுத்திரனின் அமுதசுரபி அடகுக் கடையில். மணிமேகலையோ பசி மயக்கத்தில்!

கானல்வரியில் எழுதப்பட்டது கோவலன் காதையின் கடைசி வரி!

கண்ணகியோடு ஊட மாதவி கிடைத்தாள். மாதவியோடு ஊடலில் மரணம் கிடைத்தது.