செவ்வாய், 16 ஜூன், 2015

ஒருவரிக்கதைகள்!

என்றோ ஒருநாள் எழுதிய ஒருவரிக்கதைகளின் தொகுப்பு!
1.  கதவைத்திறந்தபோது கத்தியோடு பாய்ந்தவன், என் கழுத்தை அறுக்கப் பதறி விழித்தேன். கதவு தட்டப்பட்டது!

2.    கங்கிராட்ஸ், நீங்க அப்பா ஆகப்போறீங்க,கணவன் ஊரிலில்லாதபோது துணைக்குவந்த சினேகிதனுடன் சகஜம் அறுத்தார் அவசரக்குடுக்கை மருத்துவர்

3.    வலிக்கிறது டாக்டர் என்றது ஆடப்ஸி டேபிளில் பிணம்!!

4.    விளக்கைப் போட்டவுடன், இருட்டிலிருந்து வந்தவன் கை துப்பாகி என்னை நோக்கி வெடிக்க, டிவியை அணைத்துவிட்டுப் போய்ப் படுத்தேன்.

5.    கதவு தட்டும் சத்தம் கேட்டுப் பழக்கதோஷத்தில் பதறி எழுந்தது கேட் கீப்பர் பிணம், சவக்குழியில்!

6.    விஷம் கலந்த பாலை குடிக்க எடுத்தபோது, தடாலென்று உள்ளே வந்து பிடுங்கிக்குடித்தான் குடிகாரக் கணவன். விடுதலைப் புன்முறுவல் மனைவியிடம்!

7.    ரொம்பக் குளிருது. போர்வை கொடு!! குரல் கேட்டுச் செத்துப்போனான் பிணவறைக் காவலாளி

8.    சட்டென்று முகத்தில் விழுந்த அறையில் சுதாரித்து, அறைந்த கையை இறுகப்பற்றி, அவன் முகத்தில் முத்தமிட சிரித்தான் குழந்தை.


9.    இந்த உறவு தரும் உளைச்சல் இனி வேண்டாமென்று சாந்தி கதவை முகத்தில் சார்த்த, வெறுப்போடு வீட்டுக்கு வந்தபோது, டேபிளில் படபடத்தது மனைவி கடிதம்!

10.  மலை முகட்டில் கைகோர்த்து நின்ற ஆணும் பெண்ணும் பயத்துடன் கண்மூடிச் சேர்ந்தே குதிக்க, சரியாகப் பத்தாவது விநாடி, பாரசூட் விரிந்தது.

11.  இன்று நேரில் வந்து என்னுடன் பேசிய ஏசு, நான் உமாசங்கர் சொல்வதைப்போல் கொடுமையானவன் இல்லை என்று கண்ணீர் மல்க கதறி அழுதார்!

12.  அப்பா பார்த்தால் அவ்வளவுதான்" என்று அவள் கெஞ்சக்கெஞ்ச, மழை இருண்ட மொட்டை மாடியில் புடவையை இழுத்து,
மடிக்க ஆரம்பித்தான் - கொடியிலிருந்து.

13. மனைவி வருமுன் அவசரமாய் "சுதா,ப்ளீஸ் ஒன்னே ஒன்னு", உதட்டில் வைக்கையில் வந்தவள், சுதாகரை முறைத்தவாறே சிகரெட்டைப் பிடுங்கி எறிந்தாள்!
14. சுற்றி வளைத்தவர்களிடம் பதறிச் சொன்னது, வினோத வாகனத்தில் வந்த வித்தியாச உருவம்,"நான் பூமியிலிருந்து வருகிறேன், என் பெயர் மனிதன்"
15. ஆற்றில் கவிழ்ந்த பேருந்திலிருந்து தவித்து வெளியேறி தண்ணீருக்குமேல் நீண்ட தலைக்கு நேராய் வாயைப் பிளந்தது பசித்த முதலை.
16. மனைவிக்காகப் பார்க்கப் பொறுமையின்றி கதவைத்தாளிட்டு, வாகாகப்பிடித்துக் கத்தியால் கண்ணீர் வழிய வழிய அறுத்தான்,ஆம்லெட்டுக்கு வெங்காயத்தை!
  
17.  என்ன பிரச்னை என்ற மனநல மருத்துவரிடம், சமயத்தில் சம்பந்தமே இல்லாமல் பிதற்றுகிறார் என்று கையைக் காட்டினார்கள் மூவரும் -ஒருவருக்கொருவர்.

18.   மலைப்பாதைக் கார் விபத்தில் தப்பித்து ஓரமாய் நின்று கடவுளுக்கு நன்றி சொல்ல அண்ணாந்தபோது நிலச்சரிவில் உருண்டு தலையில் விழுந்தது பாறை.

19.   "நாளை என்னைக் கொல்லப்போவதாய் அவனிடம் சொன்னாயா" என்று தனியே கேட்டபோது, சிரித்துக்கொண்டே, "அதை நேற்றுச் சொன்னேன்" என்று கத்தியை உருவினான்

20.   பொய்யே கலக்காமல் ஒரு உண்மைக்கதை கேட்டபோது, "இதை எழுதியவன், படிப்பவர்கள் எல்லோருமே, ஒருநாள் கட்டாயம் செத்துப்போவார்கள்" என்று எழுதினேன்

21.   மளமளவெனத் தண்ணீர் புக, சரிந்து கவிழ்ந்த கப்பலுக்கு பதிலாக வேறு பேப்பரில் செய்ய ஆரம்பித்தான் மகன்

22.   பிறந்தபோதே மீசையிருந்தது சுப்பிரமணிக்கு- எங்கள் வீட்டுப்பூனை!

23.  பக்கத்துவீட்டில் குடிவந்த அழகுப் பெண்ணிடம் தயங்கித் தயங்கிக் கேட்டேன், நீங்க எந்தக் காலேஜ்? "QMC", "நீங்க?" "WCC"


24.  ஆபீஸில் புதிதாகச்சேர்ந்த பேரழகி விமலாவிடம் மூன்றுநாளாய் யோசித்துத் தயங்கிக் கேட்டேவிட்டேன், கையெழுத்துப்போட என்னிடம் வாங்கிய பேனாவை

25.  இந்தக் காதலர்தினத்தன்றாவது நான் பலவருடமாக நீ சொல்லிக் கேட்க ஆசைப்பட்ட அந்த மூன்று வார்த்தையைச் சொல்லமாட்டாயா- நான் ஊருக்குப் போறேன்


26.  உலகின் கடைசி மனிதன் ஆராய்ச்சிக்கூட மேஜையில் கிடத்தப்பட்டான்!


27.  உலகின் கடைசி மனிதனின் மொபைல் ஒலித்தது!


28.  உலகின் கடைசிமனிதன் பசி தாங்கமுடியாமல், பதுக்கிவைத்த பணத்தைத் தின்றுகொண்டிருந்தான்!


29.  எவனோ திருட்டுப்பயல் பறித்துப்போய்விட்டான் நான் நாளை விடிகாலை இருட்டில் பறித்துக்கொள்ளலாம் என்று விட்டிருந்த பக்கத்துவீட்டுப் பப்பாளியை.


30.  பிறந்ததிலிருந்து உன்னுடனே பயணிக்கிறேன், இன்றுதான் சந்திக்கும்நாள் வந்தது- புன்னகைத்துக் கை குலுக்கியது..... மரணம்!


31.  உனக்கான நாள் வந்ததென்று கைபிடித்துக் கூட்டிப்போனவனை நம்பாமல், திரும்பித்திரும்பிப் பார்த்தவாறே போனேன் என் உடலை!


கொஞ்சம் இதிகாச ஒற்றை வரி!வளைக்கச் சொன்ன வில்லை முறித்த கறுத்த முரடனை மணக்க மறுத்தாள் சீதை. கதைக் கரு கலைந்ததென்று கலங்கி அழுதார் வியாசர்!

சீதை தீக்குளித்தாள், சேதி கேட்ட அகலிகை, வரம் மறுத்துக் கல்லானாள்!!

கைகேயி வாங்கிய வரத்தால் பாவம், ஊர்மிளைக்குப் பெரும் சாபம்!

அப்பா வீட்டுக்குப் போகிறேன், உன்னோடு காடு வரச் சம்மதமில்லை - கிளம்பிப்போனாள் சீதை. கதை புரியாமல் குழம்பித்தவித்தார் வால்மீகி!!

அவதாரம் மானிட அரிதாரம் பூசி ஆடிய நாடகம் வெறுத்துக் கானகம் ஏகினாள் சீதை! வெள்ளாவியில் வெளுத்தது அயோத்தியின் மானம்!!

காப்பாற்றத் துப்பில்லாத கணவன்களைத் துறந்து கர்ணனிடம் சரண்டைந்தாள் பாஞ்சாலி!

புடவை தொட்ட கரம் அறுத்தாள் பாஞ்சாலி! தலை குனிந்தான் தருமன்! விதிர்த்தது கௌரவர் சபை! ஆரம்பிக்காமலே முடிந்தது பாரதம்!

ஆபுத்திரனின் அமுதசுரபி அடகுக் கடையில். மணிமேகலையோ பசி மயக்கத்தில்!

கானல்வரியில் எழுதப்பட்டது கோவலன் காதையின் கடைசி வரி!

கண்ணகியோடு ஊட மாதவி கிடைத்தாள். மாதவியோடு ஊடலில் மரணம் கிடைத்தது. கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக