தங்கை மகன் திருமணத்தில் கற்றதும் பெற்றதும்!
நீண்ட
வருடங்களுக்குப் பிறகு ஒரு திருமணத்தில் எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்றேன்!.
பல சடங்குகள் மறந்தே போய்விட்டன!
அப்பாவும் அம்மாவும்
சொந்த ஊரில் இருப்பதில் இது ஒரு சௌகரியம். எல்லா நல்லது கெட்டதும் அவர்கள்
பார்த்துக்கொள்வார்கள்.
மிக நெருங்கிய
சொந்தமாக இருந்தால், ரிசப்ஷனுக்கோ,
முகூர்த்தத்துக்கோ போய்த் தலையைக்
காட்டிவிட்டு வருவதோடு சரி!
கொஞ்சம் கொஞ்சமாக
இந்த சடங்குகள் எல்லாம் மறந்து போயிருந்தபோது சந்தோஷின் திருமணம்.
சந்தோஷ்?
தங்கை மகன்.
அவன் பிறந்த தினம் இன்றும்
நினைவிருக்கிறது.
ஆயா- அப்பாவின் அம்மா - உடல்நிலை கருதி பதினேழு வயதில் தங்கைக்குத் திருமணம், பதினெட்டில் சந்தோஷ் குமார் பிறந்தான்.
கல்லூரியில்
படித்துக்கொண்டிருந்த நான், சந்தோஷமும் பரவசமுமாக, என் அம்மாவின் கையை மீறி, பிரசவ அறையிலிருந்து நர்ஸ் கொண்டுவந்து நீட்டிய குழந்தையை கையில்
ஏந்திக்கொண்டேன்.
என் கை வழி உலகை அடைந்தவன் என்று அவன் மீது எப்போதுமே எனக்குத்
தனிப் பிரியம்!
அதற்கு ஏற்றாற்போல்
பத்துவருட மேல்நாட்டு வாழ்க்கையிலும், ஒரு சிறு கெட்ட பழக்கம் கூட இல்லாமல், வெளிநாட்டு வாழ்க்கை, கை நிறைய சம்பாத்தியம் தந்த கர்வம் துளியும் தலைக்கு
ஏறாமல், அதே எளிமையும் இனிமையுமான
என் தங்கை மகனைப் பார்க்கும்போதெல்லாம், பெருமிதமும் அன்பும் என் மனதில் நிறையும்!
இரண்டு வருடங்களாகத்
தேடி, ஒருவழியாய்ப் பெண் அமைந்து,
இதோ, இன்று தாய் மாமன் மனை வைக்கும் நாள்!
மாலை நடைபெறும்
விஷேசத்துக்கு, உள்ளூருக்குள்
எல்லா சொந்தக்காரர்களின் வீட்டுக்கும் நேரில் போய் அழைத்து வர வேண்டும்.
முகப்பில் சிறிதாக
இருந்தாலும், உள்ளுக்குள் நீளமாக
இருக்கும் அந்த வீடுகள் அனைத்தும் எனக்கு அத்துபடி!
அந்த சின்னஞ்சிறு
கிராமத்தின் தேரோடும் நான்கு தெருக்களில், இரண்டு தெருக்களில், அநேகமாக
எல்லா வீடுகளும், என் சொந்தக்காரர்கள்தான்.
சிறு வயதில் ஓடி
விளையாடிய எல்லா வீட்டுக்கும் நீண்ட நாட்களுக்குப்பின் செல்லும் பரவசம்!
அந்த பரபரப்பும்,
மகிழ்ச்சியும், முதல் வீட்டுக்குள் நுழையும்போதே இற்றுப்போனது!
அநேகமாக, எல்லா வீடுகளும் ஏகதேசம் இருண்டுபோய் ஒரே ஒரு
ட்யூப் லைட் மட்டும் எரிந்துகொண்டிருந்தது. அந்த அரைகுறை வெளிச்சமே, அந்த வீடுகளுக்கு ஒரு அமானுஷ்யத்தைக் கொடுத்தது!
அத்தனை பெரிய வீடுகள்
எல்லாவற்றிலும், அறுபது, எழுபதைக் கடந்த முதியவர்கள் மட்டும். அதிலும் சில வீடுகளில், வயதான பாட்டிகள் மட்டும் தனிமையில்!
தவறாமல் எல்லா
வீட்டிலும் ஒரு மகனோ, மகளோ,
அல்லது இருவருமோ, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய் என்று
போயிருந்தார்கள்!
எல்லாவீடுகளிலும்,
தவறாது ஒரு எல்சிடி டிவி! 21 இன்ச் முதல் 50 இன்ச் வரை! பிள்ளைகள் போயிருக்கும் நாட்டையும்
வேலையையும் பொறுத்து!
எல்லா வீட்டிலும்
டிவியில் ஏதோ ஒரு நாடகம் சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது- பார்ப்பாரில்லாமல்!
ஒரு வீட்டில் சொல்லியே விட்டேன்- அந்த டிவியை நிறுத்துங்களேன்!
"இருக்கட்டும்பா.
அது ஏதாவது பேசிக்கிட்டே இருந்தா, கூட
ஒரு ஆள் இருக்கற மாதிரி இருக்கு!"
ஒரு நிமிடம்
யோசித்துப் பார்க்கையில், முதியோர்
இல்லம் என்பது அப்படி ஒன்றும் தவறான வழி என்று படவில்லை!
யாருமில்லாத வீட்டில்,
மருந்து மாத்திரை கவரும், மடக்கு கட்டிலும், கூட ஒரு ஒற்றை கிழவனோ, கிழவியோ மட்டும் துணைக்கு இருக்க, பெரிய வீட்டில் தடுமாறிக்கொண்டு இருப்பதை விட,
இந்த சொந்த ஊர், சொந்தவீடு போன்ற வெட்டி செண்டிமெண்ட் இல்லாமல் ஒரு
முதியோர் காப்பகத்தில், துணையுடன்,
நல்ல வசதிகளுடன் இருப்பது தவறில்லை என்றே
படுகிறது!
வியாபாரம், விவசாயம் என்று தவிர்க்க முடியாது ஊருக்குள்
தங்கிவிட்ட ஒரு மிகச் சில குடும்பங்களைத் தவிர யாருமே இல்லாமல் சிதிலமடைந்துகொண்டு
வருகின்றன நம் கிராமத்து வீடுகளும், முதியோரும்!
இதுபோல் யாராவது
ஏதாவது அழைப்பு என்று வரும் சில நிமிடங்களே அவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதல் தரும்
கணங்கள்!
இதில் இன்னும் ஒரு
அவலம், இதுவரை மூன்று சாவு
சடங்குகள் ஸ்கைப் மூலம் மகன்களால் பார்க்கப்பட்டு, இங்கிருக்கும் பங்காளிகளால் நடத்தப்பட்டிருக்கின்றன!
உள்ளூரில் தங்கிப்போன
சில இளைஞர்கள் இன்னும் இவர்களையெல்லாம் ஒரு தார்மீகக் கடமைபோல்
பார்த்துக்கொள்வதும், அமெரிக்காவிலோ,
ஆஸ்திரேலியாவிலோ வாழும் (?) அவர்களின் வாரிசுகளுக்கு நிலவரங்களை எடுத்துச்
சொல்வதையும் ஒரு சேவைபோல் செய்து வருவது இன்னும் நம் சமுதாய அமைப்பின் மேல்
மதிப்பையே கூட்டுகிறது!
இன்றைக்கு அந்த ஊரில்
இருக்கும் எங்கள் சொந்தக்காரர்களின் சராசரி வயது நிச்சயம் அறுபதுக்கு மேல்தான்
இருக்கும்.
இதில் இன்னொரு சோகம்
என்னவென்றால், அத்தனை பெரிய வீடுகள் பராமரிக்கவும் ஆளின்றி, விற்றுவிட்டுப் போகவும் மனமின்றி, படிப்படியாகச் சிதைந்து
வருவதுதான்.
அந்த மனிதர்கள்
வெளிநாட்டு வருமானம் மூலம் பொருளாதார ரீதியாக செழிப்படைந்து வந்தாலும், அந்தத் தெரு அடைந்திருக்கும் மாற்றம் முகத்தில் அறைகிறது.
ஜவுளிக்கடை, காபிக்கடை மளிகைக்கடை என்று ஒவ்வொன்றாக உரிமையாளர்களின் முதுமை காரணமாக
மூடப்பட்டு, வெறும் வீடுகளும் கதவுகள் எந்நேரமும்
அடைக்கப்பட்டே இருண்டு கிடக்கிறது அந்த வீதி.
அவ்வப்போது கதவுகள் திறக்க
நேர்கையில் அலறும் டிவி சத்தங்கள் தவிர, எந்த மனித முகங்களும்
காணக்கிடைக்கவில்லை.
ஒரு பத்தாண்டுகளுக்கு
முன்வரை, எந்நேரமும் கிண்டலும் கேலியுமாக ரகளையாக இருந்த மாலைகள்
மௌனப்போர்வையில்!
அழைக்கப்பட்ட அத்தனை
பேரும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வந்திருந்தார்கள் - ஒருவேளை அவர்களுக்கு, தங்கள் சொந்தங்களைக் காண இதுவே ஒரு கடைசி வாய்ப்போ என்ற பதட்டம் கூடக்
காரணமாக இருக்கலாம்!
இன்னொரு
விஷயமும் காணக்கிடைத்தது!
அயல்நாட்டிலிருந்து
இந்தத் திருமணம் கருதியே வந்த ஒரு முக்கிய சொந்தத்தின் குழந்தைகள், சக வயதேயான தங்கள் சொந்த சித்தப்பா, அத்தை குழந்தைகளிடம்,
Oh yah, you are
Ramesh?
Great!
Mom used to talk
about your parents !
It is a pleasure
seeing you all!!
என்று
நீட்டி முழக்கிக்கொண்டிருந்ததையும்,
அந்த ஊர் மண்ணைத் தாண்டாத அந்தக்
குழந்தைகளும் சற்றும் சளைக்காமல் ஏதோ ஒன்றை ஆங்கிலத்தில் பேச, சட்டென்று ஒன்றுக்கொன்று தோளில் கை போட்டுக்கொண்டு விளையாடக்கிளம்பியதும்
ஒரு தனிக் கவிதை!
ஐந்து நாள் வைபவமாக
ரசனையாய் நடந்தது திருமணம்.
சின்னச்சின்ன
மனஸ்தாபங்களோடு முகம் திருப்பிப்போன சொந்தங்கள் மெல்ல மெல்ல பழைய இயல்புக்கும்
ஒட்டுதலுக்கும் உரிமையோடு திரும்பியது இதில் இன்னொரு விசேஷம்!
ஏறத்தாழ மொத்தக்
குடும்பமும் (எங்கள் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை நூறைத் தாண்டும் - உதிர்ந்த
கிளைகள் போக!) ஒன்று கூடி பேசிப்பேசி சலித்ததும், களித்ததும், அநேகமாக நீண்ட நாட்களுக்குப்பின் இதன் காரணம் சந்தோஷ் மீதிருந்த
எல்லோருடைய அன்பு!.
இன்னும் என்னைத்
தங்கம் என்று வாஞ்சையோடு கூப்பிடும் சிலர் கண்ணில் நான் இன்னும் சின்னப்
பையன்தான்.
அதனால்தான் பெண்களும்
சிறுவர்களும் குழந்தைகளும் இருக்கும் இடத்தின் மையத்திலேயே மொத்த வைபவத்திலும்
நான் இருந்தேன்!
இதே என் சக வயது
அத்தை மகன் என் மனைவியிடம் சொன்னது வேறு தொனி! "இன்னும் உன்
வீட்டுக்காரன் ஒரு சீரியஸ்நெஸ் இல்லாமல்
விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறானே!"
இருந்துவிட்டுப்
போகிறேனே!
பாவம் சிலர் சீக்கிரம் மனதால் மூப்படைந்துபோகிறார்கள்!
இன்னும் ஒரு
வருடத்துக்கு நினைத்துப் புன்னகைக்கப் பல விஷயங்கள்! - கூடிக்கூடிப் பழங்கதை பேசியதும், அடுத்த தலைமுறை புரிதலைத் தொடர்ந்ததும்,அறுந்தே போயின என்றிருந்த உறவுச் சங்கிலிகள் இறுகப் பிணைந்திருந்ததை உணர்ந்தது என!
என்றாலும் சின்னச்
சின்ன உறுத்தல்களுக்கும் குறைவில்லை!
1. கேட்டரிங் படிப்பே
என்றாலும் ஏட்டுச் சுரைக்காய் நிச்சயம் கறிக்கு உதவாது! உள்ளூர் சமையல்காரனை
விட்டு, தங்கை மகள் கிளாஸ் மேட்
என்று ஸ்டார் ஹோட்டல் சமையல்காரர்களிடம் சமையலை ஒப்படைத்தது
கொஞ்சம் பல்லிளித்துவிட்டது!
2. சொந்தம் இல்லாது,
வெளியே பெண் எடுத்து / கொடுத்துத்
திருமணங்கள் நடப்பது அதிகரித்துவிட்டபோதிலும் நான் அப்படிக் கலந்து கரைந்தது
இந்தத் திருமணத்தில்தான்.
மாப்பிள்ளை வீடு,
பெண் வீடு இரண்டுமே சொந்தக்காரர்களாய் இருக்கும்
திருமணங்களின் கலகலப்புக்கும் , இரண்டில் ஒரு தரப்பு அன்னியமாக இருப்பதற்கும்
நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது.
தண்ணீரும்
எண்ணையும்போல ஒட்டாமல் இரண்டு தனித் தனி குழுக்கள் இருப்பது கண்கூடாய்த்
தெரிந்தது!
ஒரு கேலிப்பேச்சோ,
உரத்த சிரிப்போ, அந்நியர்கள் முன் அவ்வளவு இயல்பாய் இருப்பதில்லை!
மேலும் இதுபோல்
பையனும் பெண்ணும் வெளிநாட்டில் தங்கிவிடப்போகும் திருமணங்களில், இரண்டு பிரிவுகளும் செம்புலப்பெயல் நீர்போல்
(!) கலப்பதற்கு எதிர் காலத்திலும் வாய்ப்புகளே இல்லை!
3. இந்த ரிசப்சனுக்கு
வந்தால் திருமணத்துக்கு வரவேண்டாம் என்ற கலாச்சாரம் நல்லவேளையாக இன்னும்
கிராமங்களில் பரவவில்லை!
பார்க்கும்
நேரமெல்லாம் மண்டபம் நிறைந்தே இருந்தது!
பாவம்! பெண்
வீட்டார்தான் விருந்தாளி போல் வந்து
போனார்கள்!
சரி, சொந்தத்தில் திருமணங்கள் செய்வதில் பிரச்னையே
இல்லையா?
இருக்கின்றன,
ஆனால்
அவை வேறு விதமானவை!
நிச்சயம் இவற்றைவிட எளிமையானவை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக