வெள்ளி, 26 ஜூன், 2015

என் பார்வையில் கலைஞர்!

என் பார்வையில் கலைஞர்!கல்லூரியில் தமிழ் மன்ற விழா! 
மொத்தக் கல்லூரியும் ஆடிட்டோரியத்தில்! 
பெயருக்குக் கூட ஒரு கட்சிக்கொடி இல்லை! 
கூட வந்திருந்த வேளாண்மைத்துறை அமைச்சரின் அழகு அவ்வப்பொழுது விசிலைப் பறக்கவிட்டது! அதையும் புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தார் அப்போதைய முதல்வர்!
மெல்ல நடந்து  மைக்கின் அருகே நின்று, அந்தப் பிரசித்திபெற்ற வார்த்தையோடு பேச்சை ஆரம்பித்தார்!
என் அன்பு உடன்பிறப்புக்களே!

அதன்பின் ஏறத்தாழ இரண்டு மணிநேரம் மந்திரித்து விட்டதுபோல் மகத்தான அமைதி - ஈரோடு வட்டாரத்திலிருந்த கல்லூரிகளின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அந்த இடத்தில் அசையாது உட்கார்ந்திருக்க, கையில் ஒரு சிறு குறிப்பும் இல்லாமல், ஒரு அருவிபோல் பொழிந்தது தமிழ் வெள்ளம்!

"யாயும் ஞாயும் யாரோ கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்!
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே"

இப்படி ஆரம்பித்து

செம்மண் நிலத்தில் மழை பொழிந்தால் - அந்த
நிலத்தொடு கலந்த நீரில்
சிவப்பு வண்ணத்தைப் பிரிக்க முடியாதன்றோ!
அஃதேபோல் நமது
நெஞ்சங்கள் இரண்டும் இணைந்துவிட்டன!

என்று முடிப்பதற்குள் எத்தனை இலக்கியங்கள் உள்ளே நுழைந்தன, களிநடம் புரிந்தன, எதுவும் அந்த மந்திரக்கணத்தில் நியாபகம் இல்லை!
இடையிடையே மறைமுகமாகத் தூவப்பட்ட அரசியல் வெடிகள்!

அன்று கலைஞருக்கு அடையாளம் அந்தத் தமிழ்!

உரை முடித்துப் புறப்படுமுன் எங்களோடு சின்ன உரையாடல்!
தமிழ் மன்றத்தில் ஈடுபாடுமாணவர் தலைவனுக்கு ஆப்தன் என்ற உரிமையில் சற்றே அருகே இருக்க எனக்கு வாய்ப்பு!

இது நடந்து ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து, எங்கள் ஊரில் ஒரு திருமணத்துக்கு வருகை! 
அந்த இடத்தின் மையப் புள்ளிக்கு நெருக்கம் என் தந்தை!
அவரோடு ஒரு ஓரத்தில் நான்!

தம்பி, சிக்கைய நாயக்கர் கல்லூரியில் உங்களை சந்தித்திருக்கிறேனே!
மிரளவைக்கும் நினைவாற்றல்!
                             
தினசரி, ஒரு முதல்வர் சந்திக்கும் எத்தனை முகங்களின் ஓரத்தில், என்றோ, ஒரு வருடம் முன்பு மிகச் சில நிமிடங்கள் ஒரு பெரும் கூட்டத்தில் சந்தித்த முகம் நினைவிருக்கும் ஆற்றல் வரம்!

இன்னுமொரு சம்பவம்! 
சென்னிமலையில் ஒரு ஏழை மாணவனுக்குக் கல்லூரி அட்மிஷன்!

எங்கள் தறிப்பட்டறையில் வேலை  செய்யும் ஒரு முதிய பெண்மணி, நான் போய் முதல்வரைப் பார்த்துப் பேசிவருகிறேன் என்று புறப்படுகிறார்!
இன்றுபோல் தொலைபேசி வசதிகள் இல்லாத காலம்!
நேராகக் கலைஞர் வீட்டுக்கே சென்று, அங்கேயே குளித்து, சாப்பிட்டு, அனுமதிக் கடிதம் வாங்கிவந்தபோதுநம்பிக்கை இல்லாமல் கேலிப் புன்னகை செய்த எனக்கு செவிட்டில் அறைந்தாற்போல் இருந்தது.

இது, இந்தத் தலைமுறையில் கலைஞரைப் பார்க்கும் யாராலும் நம்ப முடியாத அப்பட்டமான நிஜம்!

தன்னுடைய நல்ல பக்கங்களை, தன் செய்கைகளாலேயே மறக்கடித்த பெருமை கலைஞருக்கு உண்டு!

ஒவ்வொரு ஊரிலும் அடிமட்டத் தொண்டன்வரை பெயர்சொல்லி அழைக்கும் கட்டமைப்பும், அரவணைப்பும் ஒருகாலத்து கலைஞரின் அடையாளம்!அவரை ஒரு இலக்கியவாதியாக இன்றும் சிலர் ஏற்க மறுப்பதுண்டு! ஒருவேளை அவர்கள் தேடும் "சுத்த இலக்கியம்" அவரிடம்  இல்லாதிருக்கலாம்! ஆனால் என்போல் பலருக்கும் தமிழ் இலக்கியங்களை எளிமையாய் அறிமுகப்படுத்தியவர் அவர்!
புறநானூறும் சிலம்பும் குறளும் அவர் இல்லாமல் எங்களை இவ்வளவு ஈர்த்திருக்காது!

துள்ளல் நடையில் அவரது காவியங்களைப் படிக்காது என் பருவத்து ஆட்களின் இளமை கடந்திருக்காது!

எல்லாக் கேள்விகளுக்கும் அவரது நகைச்சுவை கலந்த உடனடி பதில்கள்!
எல்லோரிடமும் மரியாதை காட்டும் மாண்பு!

கோபத்தோடு வாதிட்டவரையும் புன்னகையோடு அமரவைக்கும் தமிழ்!
இது ஒரு பக்கம்!


அண்ணாவுக்குப் பின் யார் என்ற கேள்விக்கு, எல்லோரும் யாரைக் கை காட்டினார்களோ, அவரை வைத்தே தன்னை சுட்டவைத்த சாதுர்யம்!
அது சரிதான் என்று நிரூபித்த திறன் வாய்ந்த நிர்வாகம்!

நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது வெளிப்பட்ட மகத்தான நெஞ்சுரம்! 

அன்று ஆட்சியில் இருந்த மற்ற மாநில முதல்வர்களைப்போல் மத்திய அரசு ஏவிய வேலைகளைச் செய்திருந்தால் ஆட்சியைத் தக்கவைத்திருக்க முடியும் என்ற நிலையில் துச்சமாக ஆட்சியை உதறிய நெஞ்சுரம்!

ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவு வாழ்க்கைக்கு தைரியமாக  உதவிய ஒரே தென்னகத் தலைவர்!

நெருக்கடி நிலையில் அவர் இழந்தவை அதிகம்! சிறை சென்ற அன்பு மகன் ஏறத்தாழக் குற்றுயிராய் வந்தது உட்பட! 
இன்றுபோல் சிறையில் வசதிகள் அனுபவிக்கவில்லை ஸ்டாலின்!
சிட்டிபாபு இல்லாவிட்டால் ஸ்டாலினுக்கு இன்னும் சில நாட்களில் நாற்பதாவது நினைவுநாள்!

அந்தக் கொடும் காலகட்டத்திலும் சற்றும் தன் மனம் கலங்காத தலைவன் கலைஞர்!

தமிழும் தமிழனும் உயர, துடிப்பாய் நின்ற, கொள்கை உறுதி கொண்ட தலைவர்!

இந்தக் கட்டுரை இதோடு முடிந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும்!

காலம் காரணமே இல்லாமல் சில கொடூர மாற்றங்களை செய்துகொண்டேதான் இருக்கிறது! 

முத்தமிழ் வித்தகரையும் ஒரு வித்தைக்காரனாய் ஆட்டுவித்தது காலம்!

கழகத்தைத் தன் குடும்பமாய் நினைத்தவர் கலைஞர் என்பதை அவரது தீவிர எதிரிகளும் மறைமுகமாகவாவது ஒப்புக்கொள்வர்!

குடும்ப அக்டோபஸ் கொஞ்சம் கொஞ்சமாக கட்சியை வளைப்பதை கையாலாகாது வேடிக்கை பார்த்ததோடு அதை  ஊக்குவிக்கும் நிலைக்கு அவர் போனது தமிழனின் சாபம்!

கலைஞரின் சிலநூறு படைப்பு விருந்தின் இடையே, "போலீஸ்காரன் மகள்" போன்ற நரகல்களும் இருப்பதுபோல்அவர் அரசியல் வாழ்க்கையிலும் சில!

துரதிர்ஷ்டவசமாக அவரது எதிரிகள் யாவரும் அவரால் உருவாக்கப் பட்டவர்களே! புரட்சி நடிகர் முதல் புரட்சிக் கலைஞர் வரை!

இலாகா இல்லாத மந்திரியாய் எப்போதும் தன் கையருகே வைத்திருக்க வேண்டிய எம்ஜியாரை சீண்டியதில் ஆரம்பித்தது அவர் முதல் சரிவு!

இதயக்கனி காற்றில் கரையும்வரை இவருக்கு முதல்வர் நாற்காலி எட்டாக்கனி!

அதிலும் பாடம் கற்காமல், ஒருநாள் காத்திருக்கப் பொறுமையின்றி ஜெயலலிதாவின் ராஜினாமாக் கடிதத்தை இவர் வெளியிட, சீண்டப்பட்டு சிலிர்த்து எழுந்து மீண்டும் துளிர்த்தது இரட்டை இலை!

ஜாதியில்லை மதமும் இல்லை என்று முழங்கியவாரே, ஜாதிக்கட்சிகளையும் மதவாதக் கட்சிகளையும் ஒவ்வொரு தேர்தலிலும் வளர்த்துவிட்டவர் கலைஞர்!

எல்லாக் கோடரிகளும் தீட்டிய மரத்தையே பதம் பார்த்தன!

வெறும் பேச்சு வன்மையால் மட்டும் ஆட்சி நடத்த முடியாது என்று உணர்ந்தபின், பல தொழில் முயற்சிகளோடு, மதுக் கடைகளையும் திறந்து, தமிழனின் சீர்கேட்டுக்கு முதல் விதை விதைத்தவர் கலைஞர்!

தள்ளாத முதுமையிலும், வீடுதேடி வந்து காலில் விழுந்த ராஜாஜியின் குரல் இவர் காதில் விழவே இல்லை!

சர்க்காரியா கமிசன் என்ற ஒற்றை ஆயுதம்கொண்டு, தன் விருப்பத்துக்கும் இவரை ஆட்டுவித்தார் இந்திரா!
ஊழலில் சுகம் கண்ட குடும்பமும் நெருக்கடிதர, நெருக்கடி நிலைமைக்குப் பணியாத நெஞ்சுக்கு நீதி, சந்தனம் விட்டு மெல்லமெல்ல சகதிக்குள் விழுந்தது!

இன்றுவரை ஊழலுக்கு சிறை சென்றதில்லை, "தேர்தலில் வென்று" ஐந்துமுறை தமிழக முதல்வரான கலைஞர்!

ஆனால் அவரை ஊழலுக்கு அடையாளமாகவே இன்றைய தலைமுறை அறிய நேர்ந்தது அவலம்!

அதன் காரணங்களை நன்கு அறிவார் அரசியல் சாணக்கியர்! ஆனால் கடிவாளம் இப்போது அவர் கையில் இல்லை!

கடந்த இரு பொதுத் தேர்தல்களிலும், திமுக பிற கட்சிகளிடம் கூட்டணிக்குத் தூது போகும் நிலைமைக்குத் தள்ளப்பட்ட அவலம் இந்தப் பொதுத் தேர்தலுக்கு யாருமே நம்மை அண்டமாட்டார்கள் என்ற அச்சத்தில் கிடைத்த இடத்திலெல்லாம் துண்டுபோட்டு வைக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது!

விஜயகாந்த் வைகோ போன்ற உதிரிகளை எல்லாம் ஸ்டாலின் போய்ப் பார்த்த மறுநாளே, இவர் கூட்டணி பற்றிக் கோடிகாட்டி அறிக்கை விடுவதும், அவர்கள் அதை மறுத்து அறிக்கை விடுவதும் திமுக வரலாற்றில் காணாதது.

இந்த  நிலைக்கு என்ன காரணம் என்பது கலைஞருக்குத் தெரியும். 

ஆனால் களையெடுக்கும் நிலையில் அவர் இல்லை என்பது எதார்த்தம்.
தலைமையின் குடும்பத்தின்மீது ஊழல் புகார்கள் குவிய ஆரம்பித்ததும், மாவட்டச் செயலாளர்கள் குறுநில மன்னர்கள் ஆகினர்.
வீரபாண்டி ஆறுமுகம், ஈரோடு ராஜா இவை சில உதாரணங்கள்.
இது, அரசியல் செய்வதை விட்டு, கட்சியைக் காக்கப் போராடும் நிலைக்கு கலைஞரைத் தள்ளிவிட்டது!

எனவேதான் ஆர் கே நகர் தேர்தலில், குமாரசாமியின் தீர்ப்பைப் பற்றி மக்கள் மன்றத்தில் விளாசக் கிடைத்த வாய்ப்பை வியாக்கியானம் பேசி நழுவவிட நேர்ந்தது!

முகவும் திமுகவும் தோல்விக்கு அஞ்சியதில்லை என்பதை நாம் அவருக்கு நினைவு படுத்த வேண்டியதில்லை!

இன்னொரு இமாலயச் சறுக்கல் இலங்கை விவகாரம்!

எம்ஜியாரை அண்டி நின்ற பிரபாகரன் முதல் கோணல்! அதன்பின் முற்றிலுமே கோணலாய்ப் போனது!

எதிர்க் கட்சிகளுக்கு அரசியல் ஆதாயம் தரக்கூடாது என்ற அச்சத்தில்  அவர் பதவி ஏற்றபோதெல்லாம் விடுதலைப் புலிகளின் அட்டகாசங்களை தமிழகத்தில் கண்டும் காணாதிருக்க ஆரம்பித்தது ராஜீவ் காந்தி படுகொலையிலும், அதன் மறைமுகப்பழி சுமந்து தேர்தலில் படுதோல்வி காணவும் வழி செய்தது!

மத்திய  அரசியல்வாதிகள், அரசுடனான லாபிக்கு கனிமொழியையும் மாறனையும் நம்பியதன் வினை, அந்த இரண்டுமணிநேர உண்ணாவிரத நாடகமும், தொடர்ந்த போர்நிறுத்த அறிவிப்பும்!

இலங்கைப் பிரச்சினையில் எல்லாக் கட்சிகளுமே நாடகம் ஆடுகின்றன! மற்றவர்கள் எல்லோரும் பலன்களை அறுவடை செய்ய, இவர் மட்டும்  இழந்தவையே அதிகம்!

அரைகுறைத் தாமரைகளும், ஆதாயக் கணக்குப்போடும் சீமான்களும்  அவமானப் படுத்தும் நிலைக்குத் தன்னை இறக்கிக் கொண்டது அவர் பிழை!

ஜாதிக்கட்சிகளை உரமிட்டு வளர்த்தது, மத விவகாரத்தில் சிறுபான்மை வாக்குக்காக துடுக்குத் தனமாகப் பேசுவது போன்றவற்றை உங்கள் பழைய வரலாறு அறியாத  தலைமுறை ரசிக்கவில்லை தலைவரே!

உங்கள் பழைய நிறைகளும் இன்றைய குறைகளும் எங்களுக்குத் தெரியும்!
அதிலும் என் தகப்பனுக்குத் தெரிந்ததில் பாதிதான் தெரியும் 

ஆனால் என் மகனுக்கும் மகளுக்கும் இன்றைய கனிமொழி, அழகிரியின் தகப்பனையும், தயாநிதியின் மாமனையும், ஆ ராசாவின் காவலரையும்தான் தெரியும்.

உங்கள் சமூக நீதிக்கான போராட்டங்களும், கொள்கை உறுதியும் அவர்களுக்குப் பழங்கதை!

ட்விட்டர் வரை ஹை டெக் ஆக  ,இயங்கவும், இந்தத் தள்ளாத வயதிலும் தினசரி பதினெட்டு மணி நேரம் உழைக்கவும் முடிந்த உங்களுக்கு, உங்களையும் உங்கள் கட்சியையும் புதுப்பிக்கத் தெரியாமல் இருக்காது!

தகுதிக்குமேல் பேராசை கொள்ளும் உங்கள் சுற்றங்களும், நீங்கள் நம்பாதவனாக காட்டிக்கொள்ளும் கடவுளும் உங்களை அதைச் செய்ய உதவட்டும்!

உங்கள் நூறாவது வயதில், ஏழாவது முறையாக முதல்வர் பதவியேற்க காலம் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!                                                                                                                                                                                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக