வியாழன், 2 ஜூலை, 2015

என் பார்வையில் புரட்சித் தலைவி!

என் பார்வையில் புரட்சித் தலைவி.
ஜூன் 24, 1991, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம்! மண்டபத்துக்கு உள்ளும் வெளியிலும் பெரிதாக எந்த ஆடம்பரங்களும் இல்லை! 
மேடையில் முதல்வரோடு, பதவியேற்கும் எல்லா அமைச்சர்களுக்கும் அருகருகே நாற்காலிகள் போடப்பட்டிருந்தன! 
முதலில் முதலமைச்சர் பதவிப் பிரமாணம் ஏற்றபின், ஒவ்வொரு அமைச்சராகப் பதவியேற்கச் செல்கையில், முதல்வருக்கு மரியாதை நிமித்தம் ஒரு வணக்கம் செலுத்த, அவரும் பதிலுக்குப் புன்னகைத்து வணங்கினார்.

செங்கோட்டையன் முறை வந்ததும், அந்த முதல் திருப்பம்!
முதல்வர் நாற்காலி அருகே சென்றவர், தடாலென்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்!

அரசு உயர் அதிகாரியான சித்தப்பா உபயத்தில், அவர் அருகே நான்காவது வரிசையில் உட்கார்ந்திருந்த எனக்கு முதல்வரின் முகத்துத் திடுக்கிடல் தெளிவாகத் தெரிந்தது!

அதன்பின் பதவியேற்க வந்த அனைத்து அமைச்சர்களும், வேறு வழியே இல்லாமல் வரிசையாகக் காலில் விழுந்து எழுந்தபோது முதல்வரின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை!

ஜெயலலிதா பற்றிய ஒரு பதிவு இப்படி ஆரம்பிப்பதே நம்பமுடியாமல்தான் இருக்கும்!
ஜெயலலிதாவின் முதல் பதவியேற்பு வைபவம் இப்படித்தான் நடந்தது!

அடுத்து,
சட்டமன்றத்தில் முதல்வரின் ஜாதியைக் குறிப்பிட்டு ஒரு திராவிடக்கொழுந்து ஏதோ பேச
கணீரென்று வந்தது எதிர்குரல்!

ஆமாம்! நான் பாப்பாத்திதான் அதற்கென்ன இப்போது?”

பார்ப்பன எதிர்ப்பே திராவிடக் கொள்கை என்ற மனநிலை கொண்ட கட்சித் தலைமையின் இந்த பதில், தைரியத்தின் உச்சம்!

ஜெயேந்திர சரஸ்வதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டார்! ஒரு தீபாவளியன்று காலை என் வீட்டு டிவி சொன்ன நம்பமுடியாத தகவல்!
இந்த தைரியம்தான் ஜெயலலிதா!

சிறுவயது முதலே நான் ஆசைப்பட்டது எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை! நான் அரசியலுக்கு வந்ததே விருப்பம் இல்லாமல்தான்.... என்பதோடு மேலும் பல விஷயங்களை அவர் ஒரு பத்திரிகை தொடரில் எழுதியிருந்தார்.

அதில் இருந்த அவர் சொந்த விஷயங்கள் நமக்குத் தேவையில்லை!

ஆனால், அவரது சொந்த  வாழ்க்கையில் தலையிட்டு அவரை அரசியலுக்கு இழுத்துவந்த எம்ஜியாரே அவரை கட்சியை விட்டு விலக்கி வைத்ததும், கட்சிக்காரர்கள் யாரும் அவரைத் தொடர்பு கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டதும் தமிழகம் பார்த்த காட்சிகள்.

ராஜாஜி ஹாலில் எம்ஜியார் உடல் வைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்களில் மிக நேர்த்தியாகப் போடப்பட்டது இவரது அரசியல் அடித்தளம்.

எம்ஜியாரின் மனைவியா அல்லது அவரது மனைவி என்றும் மகள் என்றும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தன்னைத்தானே கூறிக்கொண்ட ஜெயலலிதாவா என்ற கேள்வி வந்தபோது
ஜானகிக்குத் துணை நின்றது நால்வர் அணி. 
ஜெ வுக்கு அடைக்கலம் கொடுத்து அரவணைத்தவர்கள் திருநாவுக்கரசும், கே.கே.எஸ்.எஸ்.ஆரும்! 

(திருநாவுக்கரசரை விரட்டியடித்ததும், K.K.S.S.R.R. மனைவியுடன் வந்து காலில் விழ, அதைப் பின்னாலிருந்து புகைப்படம் எடுக்கச் செய்து டெல்லி பத்திரிக்கைகள் வரை பதிப்பிக்கச் செய்ததும், பிற்கால வரலாறு)

மக்கள் இரண்டு அணிகளையும் முற்றாக நிராகரித்தனர்

அவர்களுக்கு எம்ஜியார் என்றால் இரட்டை இலைதான். 

இரட்டைப் புறாவும், சேவலும் சூரியனில் பொசுங்க, ஜானகி ஒதுங்க, உத்வேகம் பெற்ற ஜெ (வழக்கம்போல் உபயம் கலைஞரின் அவசரம்) ராஜீவ் காந்தி தயவால் இரட்டை இலைக்கு சொந்தக்காரரானார்.

கலைஞர், எம்ஜியார் என்ற இரண்டு திராவிட இயக்க முதல்வர்களின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருந்த என் போன்ற சிலருக்கு, இவரால் சில நல்ல மாற்றங்கள் வரும் என்ற ஒரு நப்பாசை!

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதால் எழுந்த அனுதாப அலை, அதனால் திமுக மீது எழுந்த வெறுப்பு இவை இரண்டும் சேர்ந்து ஜெயை முதல்வராக்கியிருந்தன!

தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு நடிகரின் ஜோடியாக நடித்த நடிகை என்ற தகுதியோடு ஒரு பெண்மணி தமிழகத்தின் மிக இளம் வயது முதல்வராகப் பதவியேற்றார்! 
இது தமிழர்களின் திரைக் காதலுக்கு இது இன்னுமொரு உதாரணம்!

பதவி ஏற்றபின்பு சில நாட்களிலேயே தெரிந்தது, அவருக்கு இருப்பது துணிச்சல் அல்ல, அகம்பாவம் என்பது!

தன்னோடு தேர்தலில் தோளோடு தோள் நின்ற தோழமைக்கட்சியினரைப் பார்த்து அன்போடு சொன்னார்! உங்கள் தலைவர் சாவுக்கும், என் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

தமிழக மண்ணில் ரத்தம் சிந்திய ராஜீவ் மீண்டும் ஒருமுறை மரித்தார்!

மன்னார்குடியிலிருந்து சென்னை வந்து வீடியோ கேசட் லெண்டிங் லைப்ரரி நடத்திவந்த ஒரு அம்மையார் உடன்பிறவா சகோதரி ஆனார். தமிழகத்துக்கு நிரந்தர இருண்டகாலம் ஆரம்பித்தது!

உலக வரலாற்றிலேயே முதல்முறையாக, முப்பது வயது நெருங்கும் ஒருவர் வளர்ப்புமகனாகத் தத்தெடுக்கப்பட்டு, கின்னஸ் சாதனையாகப் பதியுமளவு ஆடம்பரத்தின் உச்சமாக ஒரு திருமணம் நடந்ததை, தமிழகம் காய்ந்த வயிறோடு வேடிக்கை பார்த்தது!

மன்னர் ஆட்சி கால ஆடம்பரங்களை நேரில் பார்க்கும் துர்ப்பாக்கியமான அதிர்ஷ்டம் தமிழனுக்கு வாய்த்தது!

நடமாடும் நகைக்கடைகளாக இரண்டு பெண்மணிகளும் வலம் வர, அரசு யந்திரம் ஒரு தனி நபர் திருமணத்துக்காக பம்பரமாய்ச் சுழன்றது!

நகைகள் பற்றி விமர்சனம் வந்தபோது, அவரது அடிப்பொடிகள் அவை வேதவள்ளித் தாயாருக்கு மைசூர் மகாராஜா கொடுத்தவை என்று வியாக்கியானம் செய்தன. (அந்த விளக்கத்தை ஏனோ. வருமான வரித் துறைக்கும், சொத்துக் குவிப்பு வழக்கிலும் சொல்லமறந்தார் புரட்சித் தலைவி!)

அதன்பின் ஆரம்பமானது அதிகார அதகளம். 
ஆட்டோ குண்டர்களால் விரட்டித் தாக்கப்பட்ட TN சேஷன்
மகளிர்  அணி ஆபாச நடனத்தில் கலங்கி ஓடிய சு.சாமி என்று தமிழகம் அரசியல் வன்முறைக்குப் புது வடிவம் கண்டு மிரண்டது!

மிரட்டப்பட்டதால் சொத்தை இழந்து தவித்தவர்கள் வரிசையில், சாதாரணர்களோடு பாலு ஜுவெல்லர்ஸ் அதிபரும் கங்கை அமரனும் சேர, வேடிக்கை பார்த்த மகாஜனங்கள் வாயடைத்துப் போனார்கள்!

TANSI நில விஷயத்தில் அரசு ஊழியர் அரசு சொத்தை வாங்கக்கூடாது என்று கசப்பான அறிவுரை சொன்ன ஆடிட்டர் செருப்படி பட்டதும், ICCU க்குள் செருப்போடு வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அப்போலோ மருத்துவமனை டாக்டர் அறை வாங்கியதும் அவரது தனிப்பட்ட வன்முறை வடிவங்கள்!

ஒரு சர்வாதிகாரி எப்படி நடந்துகொள்வார் என்பதை கண்கூடாக நடத்திக் காட்டினார்! 
சசியுடன் ஏற்பட்ட மோதலில், வளர்ப்பு மகனையே கஞ்சா வழக்கில் உள்ளே தள்ளினார்.
அதே சசி வேண்டுதலில், நடராஜனோடு நெருக்கம் காட்டிய செரீனா மூட்டை மூட்டையாக கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நாடகமும் நடந்தது!

டான்சி வழக்கு அவர் பதவியைப் பறித்து உள்ளே தள்ளியது!

அந்த ஆவணத்தில் இருந்த கையெழுத்தை நான் போடவில்லை என்ற சிறுபிள்ளை விளையாட்டை கோர்ட் ஏற்றுக்கொள்ளவில்லை!

அந்த வழக்கு, கோவை வேளாண்கல்லூரி மாணவிகள் மூவர் உயிரை நெருப்பில் காவு வாங்கியது! அந்தக் கோரதாண்டவம் ஆடிய கட்சிக்காரர்களின் வழக்கை, அதிமுக வெட்கமில்லாமல் கடைசிவரை நடத்தியது!

டெல்லியில் நடந்த பேரங்கள் சரியாக வேலை செய்தன!

டான்சி நிலத்தை திருப்பித் தருவதாக அவர் சொன்னதை ஏற்று, உச்ச நீதிமன்றம், ஜெ குற்றவாளி எனினும், கடும் கண்டனங்களுடன் அவரை விடுதலை செய்வதாக அறிவித்தது! மேலும், அவரை அவரது மனச் சான்றின்படி(!!) நடந்துகொள்ள அறிவுறுத்தியது! 
இப்படி ஓர் வினோதமான தீர்ப்பு அதற்கு முன்னும், பின்னும் இதுவரை வந்ததில்லை!

இது நீதித்துறை மீதிருந்த மிகச் சிறிய அச்சத்தையும் சுத்தமாகத் துடைத்துப் போட்டது!
(அதுதான் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்புக்கு, தயிர் சாதத்துடன் தனி விமானத்தில் அவரை சந்தோஷமாகப் போகச் செய்தது!)

அடுத்துவந்த தேர்தலில் மக்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டார் ஜெ!

அதுவரை அன்புச் சகோதரியாகத் தன்னை அறிவித்துக்கொண்ட அவர், சிறை வாசத்துக்குப்பின் நகைகள் அணிவதில்லை என்றும், எனக்கு குடும்பமா, வாரிசா தமிழக மக்கள்தான் என் குழந்தைகள் என்று வசனம் பேசினார்! 
எப்போதும் நடிப்பிலும், நடிகர்களிடமும் ஏமாறும் ஆட்டுமந்தைகள் அனுதாபத்திலும், அம்மா வேடத்திலும் மயங்கி, மீண்டும் ஒருமுறை அசுர பலத்துடன் ஆட்சியில் அமர்த்தின!

எதிர்க்கட்சி அந்தஸ்தை நீண்ட வருடங்களுக்குப்பின் பெற்ற விசுவாசத்தை காங்கிரஸ் இப்படிக் காட்டியது!
2001ம் வருடம் பிரதான எதிர்கட்சித் தலைவராய் இருந்த S.R. பாலசுப்பிரமணியம் சட்டசபையில் உங்கள் மீது திமுக அரசு போட்ட சொத்துக் குவிப்பு வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தீர்மானம் கொண்டுவாருங்கள், எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்களும் அதை ஆதரிக்கிறோம்! என்று பேசினார்!

விநாஸ காலே விபரீத புத்தி!

கர்வம் தலைக்கு ஏறிநின்ற நம் முதல்வர் அன்போடு தன தோழமைக் கட்சித் தலைவருக்கு பதில் சொன்னார்!

உங்கள் அறிவுரையும் ஆதரவும் எங்களுக்குத் தேவை இல்லை! என்ன செய்யவேண்டும் என்பதை எனக்கு நீங்கள் சொல்லித்தர வேண்டியதில்லை!
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுபடக் கிடைத்த மிக எளிய வாய்ப்பை தான் என்ற தலைகனத்தில் இழந்தார்! 

அதன்பிறகும், வழக்கை விரைந்து முடிக்காமல், அதன் வலுவான ஆவண ஆதாரங்களுக்கு அஞ்சி பதினெட்டு வருடம் இழுக்கடித்தும், இன்னும் உள்ளே வெளியே விளையாட்டை பரிதாபமாக விளையாடிக்கொண்டிருக்கிறார்!

நேர்மையாக நடந்தால் இதன் இறுதித் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும்.

திரும்பத் திரும்ப சிறை வாசங்களும், தோல்விகளும் அவரைப் பண்படுத்தியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்குவதை அவர் வழக்கமாகவே வைத்துக்கொண்டார்! 

இன்னும் இன்னும் என்று அவர்  ஆணவமும் அகந்தையும் உயர்ந்துகொண்டே போவது கண்கூடு!

முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பேயி அவர்கள் தற்போது அனைத்தையும் மறந்துபோன ஒரு குழப்பமான நிலையில் இருப்பதாக ஒரு வருத்தமான செய்தி! அவர் எதை மறந்தாலும், ஜெயுடனான பதின்மூன்று நாள் கூட்டணி தந்த மன உளைச்சலை மறந்திருக்க மாட்டார்!

ஒருவரை அமைச்சர் ஆக்குவது கட்சித் தலைமை என்ற வகையில் அவரது முழு உரிமை!
ஆனால், ஒரு அமைச்சரை பதவியிலிருந்து தூக்கியடிக்கும்போது, அதன் காரணத்தைத் தெரிந்துகொள்ள அந்த அமைச்சரை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நிச்சயம் தார்மீக உரிமை உண்டு!

இன்றுவரை அந்தப் பகடைக் காய்களுக்கோ, ஆட்டத்தை வேடிக்கை பார்க்கும் மந்தைகளுக்கோ அதற்கான காரணங்கள் சொல்லப்படுவதே இல்லை!

திமுக போலில்லாமல் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் என்பது இவரது பெருமையாகச் சொல்லப்படுகிறது! 
அந்தப்பதவி எத்தனை நாள் என்பது யாருக்குமே தெரியாத ரகசியம்!

தன்னைச் சுற்றித் துதிபாடிகளையும், அடிமைகளையும் மட்டுமே வளர்த்துக்கொண்ட அவர், திறமையானவர்களை ஒருபோதும் வளர விட்டதில்லை!

அடிமைகளும், காதுகள் கூசுமளவுக்கு அவரைப் புகழ்ந்து தங்கள் விசுவாசத்தைக் காட்டினர்
.
ஒரு கட்டத்தில் அவை எல்லாவற்றையும் அவர் உண்மை என்று நம்பத் தொடங்கினார்!

தன் அரசியல், இன வெறுப்புகளுக்கு ஜெயலிதாவை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஒரு கோமாளிப் பத்திரிகை ஆசிரியர், இதற்கு முந்தைய தேர்தலில் அவர் பிரதமர் ஆவதற்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகத் தன கோணல் புள்ளிவிவரங்களால் கொளுத்திப்போட, தன் அரசியல் ஆசானின் வார்த்தையை மலைபோல் நம்பி, அப்போதே பிரதமர் ஆனதுபோல் நடந்துகொள்ள ஆரம்பித்தார்!

அடிமைகளும், அவரை வருங்காலப்பிரதமரே என்று ச்ந்து முனையெல்லாம் தட்டிகள் வைத்தனர்! 
ஒபாமா முதல் போப்பாண்டவர் வரை அவரிடம் வந்து ஆலோசனைகளும் அறிவுரைகளும் பெற்றுச் சென்ற வாசகங்களை பூரிப்புடன் ஏற்றுக்கொண்டார் அம்மா!
கனவுகளில் வாழ்வது அவருக்கு இனிமையாக இருந்தது!

அதன் எதிரொலிதான் இந்தத் தேர்தலில் ஓங்கி ஒலித்த, மோடியா, லேடியா கோஷம்!

குன்ஹா கொடுத்த அதிர்ச்சிவைத்தியம்தான் இப்போது தமிழிசையும், தங்கத் தாயும் நடத்தும் நான் நோகாமல் அடிக்கிறேன், நீ ஓயாமல் அழு என்ற நாடகம்! இந்த மோடி மஸ்தான் வேடிக்கையையும் கைதட்டி ரசிக்கிறது சாராயத்தில் தள்ளாடும் தமிழகம்!

அவர் திருந்திவிட்டார் என்பதன் நேரடி அடையாளம்தான் RK நகர் இடைத் தேர்தலில், ஒரு வாக்குச்சாவடியில் 112  சதவிகித வாக்குகள்!

இந்தப் பதிவின் தொனி எத்தனை முயன்றும் சாந்தமாக வர மறுக்கிறது! இத்தனைக்கும் நான் எந்தக் கட்சியையும் ஆதரிக்காதவன்.

காரணங்கள்!

1. வெறுப்பு அரசியல்: கருணாநிதி  கொண்டுவந்த நல்ல திட்டங்கள் பலவற்றையும், அவை கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காகக் குழிதோண்டிப் புதைத்தது!
2. தமிழர்கள் உயிரும் உணர்வும் கொன்றழிக்கும் மதுவிலக்கு ரத்து என்பதை மட்டும் ஒரு மாபியா குடும்பத்தின் வசதிக்காக மேன்மேலும் மேம்படுத்தி, இன்று டாஸ்மாக் வருமானம் ஒன்றே பிரதானமாக சாராயம் விற்றுப் பிழைக்கும் அரசாங்கத்தை நடத்துவது!
3. முதலீட்டார்கள் கூட்டத்தை நடத்தாமலே ஒத்திவைத்து தமிழகத் தொழில் வளத்தை குழி தோண்டிப் புதைத்தது!
4. மக்கள் வரிப்பணத்தில் உருவான அண்ணா நூலகத்தை மூடத் துடித்து, முடியாமல் அதன் குரல்வளையை நசுக்கிக்கொண்டிருப்பது! ஒரு லட்சம் புத்தகங்களோடு எரிந்துபோன யாழ்ப்பாண நூலகத்தின் நிலைக்கு அதைத் தள்ளிச் செல்வது!
5. வெற்று ஈகோ காரணமாக, தலைமைச் செயலகக் கட்டிடத்தை மருத்துவமனை ஆக்கியது!
6. மழைநீர் சேகரிப்பு, தொட்டில் குழந்தை, மகளிர் காவல் நிலையம் என்ற சாதனைகளைத் தவிர (அதிலும், மழைநீர் சேகரிப்புத் திட்டம் மரணித்துவிட்டது) வேறு எந்த நலத் திட்டங்களையும் கொண்டுவராதது!
7. அடிமைகளாய் நடிக்கும் ஓநாய்களை வளர்த்துவிடுவது! எத்தனை நாள் பதவி நீடிக்கும் என்ற உத்தரவாதம் இல்லாத நிலையில் போலீஸ் துணையுடன் எங்கள் பகுதி அமைச்சர் ஆடும் அராஜக நாடகம் ஒருசோற்றுப் பதம்!
8. சகிப்புத் தன்மை சிறிதும் அற்று, தன்னை ஒரு மகராணிபோல் சர்வாதிகாரிபோல் நினைத்துக்கொண்டு சட்டமன்றத்தை துதிபாடும் கூடமாக ஆக்கியது! ஒரு ஆரோக்கியமான  விவாதம் கூட நடந்துவிடாமல் எந்த அமைச்சரையும் துறை ரீதியாகப்  பேசவிடாதது!
9. எதிர்க் கட்சியினரையும், கூட்டணிக் கட்சியினரையும் பேசவே விடாமல், எப்போதாவது தவிர்க்க முடியாத சமயத்தில் பயன்படுத்தும் விதி 110ன் கீழ் எல்லா அறிவிப்புகளையும் செய்வது. அதில் ஐந்து விழுக்காடு கூட நிறைவேற்றாமல் அது குறித்துக் கேட்பவர்களை அருவெறுப்பாக ஊளையிட்டு உட்காரவைக்கும் அராஜகத்தை ரசிப்பது!
10. அண்டை மாநில உறவுகளை, துடுக்குத்தனமாகப் பேசி சீர்கெடச் செய்தது! (நல்லவேளை, இவர் கனவு காண்பதுபோல் பிரதமர் ஆகியிருந்தால், இந்நேரம் இந்தியா வைத்திருப்பதாகச் சொல்லும் எல்லா அணு ஆயுதங்களையும் பயன்படுத்தியிருப்பார்)

வேண்டாம்! இந்தப்பட்டியல் முடிவிலியாக நீண்டுகொண்டே போகும்.

இத்தனை அவலங்களையும், இனப்பற்றோ, பணப்பற்றோ காரணமாக, கண்டுகொள்ளாமலே கடக்கின்றன நம் அறிவுசால் ஊடகங்கள்!

தமிழக மக்களின் தலையெழுத்து கொஞ்சமாவது நன்றாக இருக்குமானால், இவர் கொடநாட்டிலோ, புழலிலோ, கொஞ்சநாட்கள் ஓய்வெடுக்கட்டும்! 

தனக்கு மிகவும் பிடித்த புத்தக வாசிப்பின் மூலம், சாந்தமும், முதிர்ச்சியும் பெற்று மீண்டு வரட்டும். 
அம்மா என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் தரும் ஆட்சியைத் தரட்டும். 
அதுவரை
அவருக்கு ஒரு ப்ரேக் கட்டாயம் தேவை!

அதை அடுத்த தேர்தலோ, உச்ச நீதிமன்றமோ அவருக்குத் தரட்டும்.

அதிலும் நமக்கு தண்டனையாக பணிவாய் வேடமிடும் ஓநாயை பொம்மை முதல்வராக்காமல் இருக்கட்டும்.


அவர் ஆரம்பித்த கட்சியை, தனக்குப் பிறகு வழிநடத்த யாரும் இல்லாமல் அழித்ததன்மூலம் தன்னை தண்டித்த எம்ஜியாரை, மிகச்சரியாகத் தண்டித்துவிட்டார்!
அந்த மனத் திருப்தியுடன் கொஞ்சநாள் அவர் ஓய்வில் இருப்பதுஅவருக்கும் பரிதாபத்துக்குரிய தமிழகத்துக்கும் மிக நல்லது!

கீழ்வரும் புகைப்படங்கள் அவர் சாதனைகள் என்றும், அந்த அடிமைகளின் நடிப்பு அன்பும் மரியாதையும் என்றும் நம்புமளவுக்கு அறிவற்றவர் அல்ல மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள்! 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக