செவ்வாய், 14 ஜூலை, 2015

படவாப் பயலேவும், பஹூத் அச்சாவும்!

படவாப் பயலேவும், பஹூத் அச்சாவும்!தாத்தாவைக் கூட்டிப்போன ராஜீவ் காந்தி!


அக்னி வெய்யில் வறுத்தெடுக்கும் சென்னை!  
சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு மாடிப் போர்ஷன்! 
கடற்கரைக் காற்று! 
எல்லாவற்றையும் ஒன்ஸ் மோர் கேட்கச்சொல்லும் விடியற்காலை முன்பனிநேரம்!

இந்த ஒரு ரொமாண்டிக் விடியலில், கையில் பால் பாத்திரமும், இரண்டு இருபத்தைந்து பைசா நாணயத்தை ஒட்டவைத்ததுபோன்ற டோக்கனுமாய் ஆவின் பூத்துக்குப் போகும் அவலம் இதைப் படிக்கும் பலருக்கும் நேர்ந்திருக்காது!

நடுவில் அலங்கோலமாய் கதவைத் திறந்துவிட்ட கீழ்வீட்டு திமிசுக்கட்டையின் தர்ம தரிசனம் வேறு!

பேசாமல் படியேறிப்போய் புதுப்பெண்டாட்டி காலில் விழலாமா என்று யோசித்தபோது கீழ்வீட்டு மாமா சொன்னார் "பால் வாங்கறதுன்னா சீக்கிரம் போய் வாங்கிண்டுடுங்கோ! இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு எதுவும் கிடைக்காது!"

ஏன் மாமா,  பசுமாடெல்லாம் ஸ்ட்ரைக் பண்ணறதா?”ன்னு மாமியைப் பார்த்துண்டே கேட்டா, சாவகாசமா சொல்றார் "நேத்து ராத்திரி ராஜீவ் காந்திய பாம் வச்சுக் கொன்னுட்டாளாமே"

ஒரு நிமிஷம், ஆஹா, இன்னைக்கு ஆபீஸ் லீவுன்றது மட்டும்தான் மனசுல தோணிச்சு! 
வயசு அப்படி!
சரி, வந்தது வந்தோம், பால் வாங்கிக்கிட்டே போயிடலாம்ன்னு ரோட்டுக்குப் போனா, எப்போதும் அந்த நேரத்துக்கு, மாமி, பீவி, பசுமாடு இந்த மூனும் சரி விகிதத்துல இருக்கற அந்தத் தெருவே வெறிச்சுன்னு இருக்கு!

அதுக்குள்ளே பாதி ஷட்டரப் போட்டுட்ட ஆவின் பூத்காரனைக் கெஞ்சி,ஒரு டோக்கனுக்கு மட்டும் பால் வாங்கிட்டு நேரா வீட்டுக்கு வந்தா, ஹால்ல போன் அடிச்சுக்கிட்டுருக்கு, அம்மணி என்னை கீழே அனுப்பிச்ச கையோட அடுத்த ரவுண்டு அனந்த சயனத்தில்!

அப்போ வீட்டில் டெலிபோன் இருப்பதே ஒரு பெரிய ஸ்டேடஸ் சிம்பல்!

OYT, NON OYT ன்னு ஏகப்பட்ட உபத்திரவம்! 
பொண்ணு பொறந்தவுடனே புக் பண்ணினால், எப்படியும் அவளுக்கு சீமந்தம் நடக்கறதுக்குள்ளே கனெக்சன் கிடைக்க 10% சான்ஸ் இருந்த நேரம்! 

சென்ட்ரல் கவர்மெண்ட்ல ராஜீவ் காந்திக்கு மேல யாரையாவது தெரிஞ்சிருந்தா, அல்லது டெலிபோன் பவன்ல பியூனோட மச்சினி சாவகாசம் இருந்தா கொஞ்சம் சீக்கிரம் கிடைக்க வாய்ப்பு இருந்த காலம்.

மௌண்ட் ரோடு டெலிபோன் பவன் போய் பணம் கட்டி புக் பண்ணிட்டு ஒரு கல்லு விட்டுப் பார்க்கலாம்ன்னு AD ரூமுக்குள்ள நுழைஞ்சப்போ, அதிர்ஷ்டம் வேலை செஞ்சுது!

AD ஒரு லேடி!

நின்னுக்கிட்டு ஏதோ ஒரு பைலை பீரோ மேல இருந்து எடுக்க முயற்சி பண்ணிக்கிட்டிருந்த எசகுபிசகான நேரத்துல கதவைத் தட்டாமல் உள்ளே நுழைந்தது வொர்க் அவுட் ஆயிடுச்சு! (நமக்கு எந்த வயசுலயும் மேனர்ஸ் தெரிஞ்சதில்லைங்கறது வேற விஷயம்)

நீங்க ஒரு டான்சர்தானே அப்படின்னு வீசுன அஸ்திரம் நல்லா வேலை செய்ய, அப்போதே குடிக்க ஒரு காபியும், பத்தாவது நாள் வீட்டுக்கு போனும்!

புதுப் பொண்டாட்டி ராத்திரிப் பகல் பார்க்காம அப்பன் வீட்டுக்கு போன் பண்ணி சொத்தைக் கரைத்தது தனி சோகக்கதை!

விடுங்க, விஷயத்துக்கு வருவோம்!

போனை எடுத்தா, அரை கிலோமீட்டர் தூரத்துல கவர்மெண்ட் எஸ்டேட்ல இருக்குற சித்தப்பா!

"விஷயம் கேள்விப்பட்டல்ல, எங்கயும் ஊர் சுத்தப் போய் மாட்டிக்காத, இப்போவே ரெண்டுபேரும் இங்க வந்து சேருங்க! உங்க சித்தி ரவைக் களி (உப்புமாதான்) செஞ்சு வெச்சிருக்கா!"

சித்தப்பா, நான் தூங்கலாம்னு பார்க்கிறேன்னு சுதாரிச்சா, அடுத்த அஸ்திரம்!

இந்த மாதிரி நியூஸ் வாசிக்க இன்னைக்கு யார் டிவி ஸ்டேஷனுக்கு போவாங்க தெரியுமல்ல?

ஆஹா! நம்ம ஷோபனா ரவி!

சித்தப்பா வீட்டு வழியா, குறுக்கே நடந்தா, டிவி ஸ்டேஷன் பக்கம்! அதனால ஷோபனா ரவி அந்த வாசல்வழியா நடந்துதான் போவாங்க!

ராஜீவ் காந்தியாவது, புதுப்பெண்டாட்டியாவது, அவசரம் அவசரமா, பொண்டாட்டியையும் பைக்கையும் கிளப்பிக்கிட்டு ஒரே ஓட்டம்!

வாசல்ல  முன்னாடி சேர் போட்டு ரோட்டைப் பார்த்து உட்கார்ந்திருக்கார் சித்தப்பா! 
எங்களுக்காகவும், ....!

இதுல, "நீதான்டா உங்க சித்தப்பாவையும் கெடுக்கறது"ன்னு சித்தி புகர் வேற!

எப்படியோ, அன்னைக்குப் பொழுது முழுக்க, டிவில சாரங்கியும் ஷெனாயும் ஷோபனா ரவியும்ன்னு பொழுது ஓடுச்சு!

ராத்திரி பெரிய மனசு பண்ணி சித்தி செஞ்ச பூரியைப் பிச்சு ரெண்டு வாய் போடல! போன் அடிக்குது!

ஊர்ல இருந்து "தாத்தா நெஜமாவே போயிட்டாரு! எப்படியோ வந்து சேரு! பெரம்பூர்ல இருக்கற அத்தை வீட்டுக்கும், தாம்பரத்துக்கும் தகவல் சொல்லி அவங்களையும் கூட்டிக்கிட்டு வந்து சேரு" ன்னு!அத்தை வீட்டில் போன் கிடையாது!

அப்போதைய கலாச்சாரப்படி, ரோட்டில் எந்த வண்டி போனாலும் கல்லடி கன்பார்ம்! என்ன செய்ய?
குருட்டு தைரியத்துல, ஒரு ஆட்டோ பிடிச்சு பெரம்பூர் வரை நெடும்பயணம்!
திருவிக நகர் திரும்பும்போது ஒரு கும்பல் வழி மறிச்சுது! ஏகதேசம் சாராய வாடை!
அன்னைக்குதான் ட்யூப் லைட் கூட ஆயுதமா உபயோகிக்க முடியும்ன்னு தெரிஞ்சது!

ஒருவழியா ஆட்டோ ட்ரைவர் அத்தனை பேர் காலிலும் விழுந்து எழுந்து வீடு கொண்டுவந்து சேர்த்தார் - பாவம்!   
எப்படியோ அவங்கள மறுநாள் கோவைல வரச் சொல்லிட்டு கிளம்பியாச்சு!

ட்ரைன்ல வரவர, தாத்தா நியாபகம்! கண்ணெல்லாம் கலங்குச்சுன்னு கதை சொல்ல  மனசு வரலை!

ஏறத்தாழ எதிர்பார்த்த விஷயம்தான்!

சந்தோஷம்னாலும், கோபம்னாலும் எங்க தாத்தா வாயில வர்ற ஒரே வார்த்தை, படவாப் பயலேதான்! 
மாடுலேசன்தான் மாறும்!

எங்களுக்குப் போட்டி போட்டுக்கிட்டு, செவிடன் கடைல சாக்லேட் வாங்கித் தின்பார்!

தாத்தா, காசு குடுங்க, உங்களுக்கும் எனக்கும் சாக்லேட் வாங்கிக்கிட்டு வர்றேன்னா, உடனே காசு! அதை எங்க ஆயாவுக்குத் தெரியாம சின்னப் புள்ளையாட்டம் மறைச்சு வைச்சு சாப்பிடுவார்!

எங்களுக்கு சரிக்கு சரியாய் விளையாடுவார்!

ஆனா, ஆயா போனதுக்கப்புறம் சாக்லேட் தவிர எல்லாத்தையும் விட்டுட்டார்! எப்பவாவதுதான் அந்த படவாப் பயலே கூட வாயில் வரும்!

ஒரு வருஷமாவே அவர் தூங்கும்போதெல்லாம் யாரோ ஒருத்தர் மூக்குக்கிட்ட கை வச்சுப் பார்த்து, போயிட்டாருன்னு பெஞ்ச் மேல தூக்கிப் போடறதும், சாயங்காலம் அவர் திண்ணைல உக்காந்துக்கிட்டு செவிடன் கடைல ஜவ்வு மிட்டாய் வாங்கி சாப்பிடறதும் வாராந்திர நிகழ்ச்சி!

அதனால வழியெல்லாம் ஜாலியா வேடிக்கை பார்த்துக்கிட்டு ஒருவழியா வேலூர் வீட்டுக்குள்ளே நுழைஞ்ச உடனே, எங்க அருமை சித்தி ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டு அடிச்சாங்க பாருங்க ஒரு ஸ்டேட்மெண்ட் "இந்தப் பாழாய்ப்போன ராஜீவ் காந்தி போறேன் போறேன்னு உங்க தாத்தாவையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டானே!"

அடப்பாவி! 
அந்த ஆளுக்கு போபர்ஸ் பீரங்கியை விடப் பெரிய கெட்டபேரு இதுதான்!
அடுத்த ஸ்டேட்மெண்ட் அஸ்திரம் எனக்கு!

"நீ பணம் அனுப்புன சந்தோஷத்துலதான் அவர் நிம்மதியாப் போய் சேர்ந்தார்!"

இதுக்கு என்னை ஒரு கொலைக்கேஸ் போட்டு உள்ள தள்ளியிருக்கலாம்!

இத்தனை பேரப்பசங்க - ஏறத்தாழ கால் நூறு! - சம்பாதிக்கிறானுக, ஒருத்தனாவது எனக்கு இந்தா தாத்தான்னு ஒரு பத்து ரூபாய் பணம் அனுப்பிச்சிருப்பானா அப்படின்னு உங்க தாத்தா புலம்பறாரு! நீயாவது ஒரு நூறு ரூபாய் அனுப்பு அப்படின்னு எங்க நைனா சொன்னதாலே, நான் ஒரு நூறு ரூபாய் மணியார்டர் பண்ணியிருந்தேன்! 

அதைத் தெருவிலிருக்கும் எல்லா சொந்தக்காரங்க கிட்டயும் காமிச்சு சந்தோஷப்பட்டிருக்கிறார்!

எண்ணி ஒரு வாரத்துல அவர் செத்ததுக்கு, நான் ஏதோ  திட்டம்போட்டுக் கொலை செய்தமாதிரி ஒரு பில்ட் அப்!

இதைப் பக்கத்தில் நின்னு கேட்டுக்கிட்டே இருந்த பக்கத்துவீட்டுப் பங்காளி, அடுத்த மாசமே மெட்ராஸ் வந்து, அவங்க பாட்டிக்கு நூறு ரூபாய் அனுப்பச் சொல்லி, கூட ஒரு நூறு ரூபாய் கமிஷன் கொடுத்ததும், இந்தக் காக்காய் உட்கார, அந்தப் பனம்பழமும் விழ, நான் ஒரு பெய்ட் கில்லர் ரேஞ்சுக்கு கொஞ்சநாள் ஊரிலிருக்கும் பெருசுக்கெல்லாம் அவங்க காசையே வாங்கி மணியார்டர் அனுப்பி சம்பாரிச்சதும் வேறு கதை!

வேலூர் கணேசா தியேட்டருக்கு பெரிய வருமானம், எங்க வீடு இழவுதான்! பாண்டியன் வீட்டுல எழவு உழுந்துடுச்சு, பால்கனியை பூட்டிவைடான்னு சொல்லிடுவாங்க! அன்னைக்கு நைட் ஷோ, அழுது (?) ஓஞ்ச பொம்பளைங்க,கொழந்த குட்டி எல்லாம் பால்கனில உக்கார்ந்து படம் பார்த்து மனசத் தேத்திக்குவாங்க!
சோடா, கலரு, முறுக்கு இப்படி சைட் டிஷ் வேற! 
ஒரு பல்க் பில் பத்துநாள் கழிச்சு வீட்டுக்கு வரும்! 
இந்த ராஜீவ் காந்தி செத்ததுல, கணேசா தியேட்டருக்கு ஒரு வருமானம் போச்சு!

உலகமெல்லாம் பரவியிருந்த எங்க தாத்தாவோட நூத்துக்கணக்கான விழுதுகள்ல பாதி, வரமுடியாத சூழல்! 
பஸ், லாரி, கார் எதுவும் ஓடல! கூர்க் போயிருந்த எங்க அப்பாவே, க்ளைமாக்ஸ்க்குத்தான் வந்து சேர்ந்தார்!

இதில், செத்துப்போனது அவரோட பெரியப்பான்னு ஒரு மிஸ்கம்யூனிகேசன் வேற! 
வீட்டு வாசல்ல பந்தலைப் பார்த்ததும்தான் அவருக்கு போனது யாருன்னே தெரிஞ்சிருக்குது! 
சோகத்தை பெரியப்பால இருந்து அப்பாவுக்கு ஷிஃப்ட் பண்ண கொஞ்சம் கஷ்டப்பட்டார்ன்னுதான் நினைக்கிறேன்!     

ஒருவழியா, வேலூர் ஆத்தங்கரையில ஏறத்தாழ ராஜீவ் காந்திய எரிச்ச அதே நேரத்துக்கு எரிச்ச புகை மேலே போகுது, ஒரு அறிவாளி மேல பார்த்து சொல்லுச்சு!

அதோ, ராஜீவ் காந்தி நம்ம தாத்தாவை கையைப் பிடிச்சு கூட்டிக்கிட்டுப் போறாரு!
அதையும் பாதி ஜால்ரா பார்த்ததாய் சொல்லுச்சு!

தமிழ் தெரியாத ராஜீவ் காந்தி, ஹிந்தி தெரியாத எங்க தாத்தாவை வேலூருக்குத் தேடிவந்து எதுக்கு கையப் புடிச்சு கூட்டிக்கிட்டுப்போனாருன்னு இன்னைக்கு வரைக்கும் எனக்குத் தெரியல!

ஒருவேளை மேல உக்கார்ந்துக்கிட்டு சாக்லேட் வாங்கித்தத்த தாத்தாகிட்ட ராஜிவ் காந்தி பஹூத் அச்சான்னும்
சாப்பிடுற ராஜிவ் காந்திகிட்ட தாத்தா படவாப் பயலேன்னும் 
ரெண்டுபேரும் புரியாமலே பேசிக்கிட்டிருக்காங்களோ என்னவோ!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக