வெள்ளி, 10 ஜூலை, 2015

தொடரின் இறுதிப் பதிவு - வைகோ, மற்றும் பலர்!

என் பார்வையில் வைகோ
இன்னும் பல தமிழக முதல்வர்கள் 2016!


எந்த ஒரு தேர்தலிலும், ஜெயை முதல்வராக்கு, கலைஞரை முதல்வராக்கு என்று வால் பிடிக்கும் தலைவர்களை எனக்கு மதிக்கத் தோன்றுவதில்லை! அவர்களை நான் தேர்ந்தெடுக்க இவர்கள் என்ன சிபாரிசு?

தனித்து நின்று, இவர்களுக்கு நான்தான் மாற்று என்று பொறுமையாகக் கட்சி வளர்க்கும் தன்னம்பிக்கை உள்ள தலைவர்கள் வேறு யாரும் வாய்க்காதது அவர்கள் இருவரின் அதிர்ஷ்டம்.

எனவே, இந்தப்பதிவோடு, இந்தத் தொடர் பதிவை முடித்துக்கொள்ள எண்ணம்!


வைகோ!


2016 முதல்வர் வேட்பாளர்களின் வரிசையை மட்டுமே எழுத நினைத்த தொடர் பதிவில் வைகோவைப் பற்றியும் எழுத நேர்ந்ததே அவரின் வெற்றி.

இன்னொரு நெடுஞ்செழியன், இன்னொரு அன்பழகன் வரிசையில் தானும் சேர்க்கப்பட்டுவிடும் அச்சத்தில் திமுகவை விட்டு வெளியேறிய (வெளியேற்றப்பட்ட?) வை.கோபால்சாமி என்ன காரணத்தாலோ வைகோ ஆனபோது, கண்டிப்பாக நியூமராலஜி காரணமாக இருக்கமுடியாது என்று நம்பினோம்.

தனக்காக உயிரிழந்த தொண்டர்களின் படம் பார்த்துக் கதறிக் கலங்கியபோது மக்களுக்கான தலைவன் என்று பெருமிதம் கொண்டோம்!

கலைஞருக்கும், புரட்சித் தலைவிக்கும் ஒரு நல்ல மாற்றாய் வந்த ஊழல் கறை படியாத தலைவன்.
நல்ல படிப்பாளி, கம்பன் கழகம் வரை புகழும் சிறந்த பேச்சாளர், பாராளுமன்றப் புலி என ஆரம்பகாலத்தில் இவரது நிறைகளே மிக அதிகம்!

என்ன செய்வது, தமிழனுக்குக் கிடைக்கும் தங்கக்கட்டிகள் கூட எக்ஸ்பயரி தேதியோடு வரும் அவலத்தை என்ன சொல்வது?

யாருக்கு மாற்றாக இவரை நாம் கனவு கண்டோமோ, அவர்களுக்கே மாறிமாறிப் பல்லக்குத் தூக்கும் வழக்கமான உதிரிகளின் வரிசையில் ஓடிப்போய் சேர்ந்துகொண்டது இந்தப் புலி.

அதிலும், ஒரு உச்சகட்ட அவலம்.

தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணிகளை மாற்றிக்கொள்ளும் போக்குக்கு எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல.
அதில் வைகோவை நாம் குறை சொல்ல ஏதுமில்லை.

ஆனால், ஓரளவுக்குத் தரம் வாய்ந்த கட்சிகள் எந்த நிலையிலும் இரண்டுபக்கமும் துண்டு போட்டு வைப்பதில்லை!

அந்தத் தேர்தலில் தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதில் தெளிவோடு, ஒத்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி பேரம் நடத்துவது, இன்று தவறில்லை என்று ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறை!

கொள்கை ஏதுமின்றி, காசுக்காகக் கட்சி நடத்தும் கூட்டமும், ஜாதி மதம் இவற்றை வைத்து வியாபாரம் செய்பவர்களும்தான் இரண்டு பக்கமும் அலைமோதுவார்கள்.

யார் அதிகமான சீட்டுக்களோ, பணமோ, வேறு ஏதாவதோ கொடுக்கிறார்களோ, அவர்களை வாழ்த்தியும், தராதவர்களை வசைபாடியும் பிழைப்பு நடத்தும் இவர்களுக்கு கொள்கை என்பதும், மக்கள் நலன் என்பதும் என்னவென்றே தெரியாத விஷயங்கள்!

நிச்சயமாக அவர்களுள் ஒருவராக வைகோவை எந்தநிலையிலும் வைத்துப் பார்க்க அவரது எதிரிகளே நினைத்திருக்கமாட்டார்கள்.

அந்த அசிங்கமான தவறையும் செய்தார் கலிங்கம்பட்டி சிங்கம்!

விழுப்புரம் தேர்தல் மாநாட்டில், கருணாநிதிக்குப் பக்கத்தில் அவருக்கு இணையான கட் அவுட் வைக்கப்பட்டு, மாநாடும் தொடங்கிவிட்ட நிலையில், ஒரு அதிகப்படி சீட்டுக்காக ஜெயலலிதா வீட்டுவாசலில் பூங்கொத்தோடு நின்றார்.

அத்தோடு, அவரின் அரசியல் நம்பகத்தன்மையும் மடிந்துபோனது.

அப்போதும், என்ன நிர்பந்தமோ பாவம் என்றுதான் நினைக்கத் தோன்றியதே அன்றி, எத்தனை பெட்டிகள் கை மாறியதோ என்று நினைக்க வைக்காத நேர்மை ஒன்று மட்டும்தான் இன்றைக்கும் அவரது சொத்து!

மேலும் அரசியலில் அவர் சோபிக்காததற்கு இன்னொரு முக்கியமான காரணம், அவரது பேச்சுக்கள், சிந்தனைகள் எல்லாம், ஏதென்சிலும், பாரீசிலும், ஐரோப்பாவிலும் பின், பறந்துபோய் இலங்கையிலும், இல்லாத ஈழத்திலும் இறங்கியதே!

கொஞ்சம் கொஞ்சமாக, மக்களுக்கு முற்றிலும் அன்னியப்பட்டுப்போனார், கருணாநிதிக்குப்பின் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைப்பற்றும் தகுதி பெற்றிருந்த வைகோ!


புரட்சிக்கலைஞர்!பல்லக்குத் தூக்கிகள் வரிசையில்  தானே போய் இணைந்துகொண்ட இன்னொரு தலைவர்!

தலைவர்களைத் திரையில் தேடும் தமிழ்க் கலாசாரத்தில் எனக்கு உடன்பாடில்லை!

தேர்தல் சமயத்தில் இவரது இலக்கில்லாத பேச்சுக்கள் நகைக்க வைத்தாலும், ஒரு மகத்தான அதிர்ஷ்டம் அடிக்கத்தான் செய்தது இந்தக் கருப்பு எம்ஜியாருக்கு!

பத்திரிகைகள் படம்போட்டுக் காண்பித்த லட்சம் கோடிகளும், வாரிசுகள் செய்த அராஜக அரசியலும், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்ற கவர்ச்சிக் கோஷங்களும் சூரியனை  பாதாளத்தில் தள்ளி,  தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தன!

கிடைத்த வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளத்தெரியாமல், தரையும் தெரியாமல் தண்ணீரிலும் இறங்காமல் தள்ளாடிப்போனார் கேப்டன்!

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், நாக்கை மடித்து, விரல் நீட்டி வசனம் பேசினார் சட்டசபையில்.

கூட்டணிக் கட்சிகளைக் கைகழுவுவதில் மின்னல் வேக சாதனை செய்யும் புரட்சித் தலைவியை, தொகுதி வளர்ச்சிக்காகவும், மரியாதை நிமித்தமாகவும் வரிசை கட்டி சந்திக்க ஆரம்பித்தார்கள் கேப்டனின் வீரர்கள்.

அரசியலின் சூட்டைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வாரிசோடு சகாப்தம் படைக்கப் பறந்துப்போனதோடு அரசியலை மறந்தார் இந்த திடீர் தலைவர்.

கேள்வி கேட்பவனை அடிப்பது, பேப்பர் படிக்கவில்லை என்று பதில் சொல்வது என்று மீம்ஸுக்கு புல்மீல்ஸ் போட்டு வளர்த்தார்.

தேர்தலோடு வைகைப்புயல் காணாமல் போனது.
தேர்தலுக்குப்பின், புரட்சிக்கலைஞர்!

இனி அடுத்த தேர்தலில் பொழுதுபோக்குக்கு மட்டும் இவர் உத்தரவாதம்!

இனி, தமிழர்களின் தலையெழுத்தின் மோசமான பக்கங்கள்!

2016 பொதுத் தேர்தலில், முதல்வர் வேட்பாளர் என்று தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் இரண்டு இளம் சிங்கங்கள்!

முதல் புதுமுக முதல்வர் வேட்பாளர் - அன்புமணி ராமதாஸ்!"வன்னியன் ஒட்டு அந்நியனுக்கில்லை" என்னும் அற்புத கோஷத்தோடு அரசியலுக்குள் நுழைந்து, கருணாநிதியின் தயவால் காலை ஊன்றிய மருத்துவர் ஐயாவின் வாரிசு.

நானோ, என் வாரிசுகளோ சட்டசபைக்குள் நுழைந்தால் சவுக்கால் அடியுங்கள் என்ற முழக்கத்துடன்  வாரிசு அரசியலை எதிர்த்துப் போராடிய போராளியின் கட்சியில், மகனும், மருமகளும் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள்!

சவுக்கை எடுத்து ஒளித்துவைத்துவிட்டு மகனை மத்திய மந்திரியாக்கி அழகு பார்த்த பாசக்கார அப்பாவால் ஊதிப் பெருக்கவைக்கப்பட்ட பிம்பம் அன்பு மணி!

காடுவெட்டி குரு போன்ற அஹிம்சாவாதிகளைத் தளபதியாகக் கொண்ட புத்தபிரான்!

மதுவிலக்கு, புகைக்குத் தடை என்ற முழக்கங்கள் மட்டுமே இவரது பலம்! மாமல்லபுரத்தில் இவர்களது சித்திரைத் திருவிழா நடக்கையில், டாஸ்மாக் விற்பனை உச்சம் தொடும் யதார்த்தம் இவர்கள் பலவீனம்.

ஜாதீய வெறி பிடித்த இந்தக் கூட்டத்தை வளரவிட்டது தமிழர்களின் துரதிர்ஷ்டம்!

அதிலும் இப்போது இவரை ப்ரொமோட் செய்ய, மருத்துவர் ஐயா உதிர்க்கும் முத்துக்கள், அறியாமை, பேராசை கலந்த நகைச்சுவை!

உதாரணத்துக்கு
தமிழக முதல்வர் வேட்பாளர்களில் மிகத் தகுதி வாய்ந்தவர் அன்புமணி! , எம்ஜியாரைவிட அழகானவர் அன்புமணி!
பாவம், முதிர்ச்சியில் தளர்ந்துவிட்டது வன்னிய சிங்கம்!


இரண்டாவது புதுமுக முதல்வர் வேட்பாளர்  - மறத்தமிழன் சீமான்!
பெரியாரின் பேரன் யாரென்று இளங்கோவனோடு மல்லுக்கட்டி, இப்போது பழனி முருகனை முப்பாட்டனாகத் தத்தெடுத்துக்கொண்டு அதே பெரியாரை ஆக்ரோஷத்தோடு வறுத்தெடுக்கும் கொள்கை குன்று!

ஈழ வியாபாரத்தில் நல்ல அறுவடை செய்த சாமர்த்தியசாலி.

மணந்தால் ஒரு ஈழப்பெண்ணைத்தான் மணப்பேன் என்று முழக்கமிட்ட மாவீரனின் அன்றைய சொத்து மதிப்பும், இன்று லேண்ட்ரோவரில் வலம் வரும் வளமையும் இவரது சாமர்த்தியத்துக்கு சான்று.

234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்துவதாக முழங்கும் இந்தப்புலி, அம்மாவைப் பார்த்தால் மட்டும் கால்களுக்கிடையே வாலைக் குறுக்கிக்கொண்டு பதுங்கும் மர்மம் ஒரு புதிர்!

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றும், தம்பி பிரபாகரன் வந்து ஈழம் எங்கே என்று கேட்டால் என்ன சொல்வேன் என்றும், உணர்ச்சிப் பூர்வமாய் ஆதாயக் காமெடி செய்யும் செயல் வீரர்

தன்  வளமைக்கு 2016 தேர்தலை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வார் இந்த வியாபாரி!

இனி, மற்ற பெருந்தலைகள்!இளங்கோவன் -

 எப்போதும் யாரையாவது சீண்டிக்கொண்டே இருக்கும் இந்த விளையாட்டுப்பிள்ளை, இப்போது காங்கிரசைவிட குஷ்புவை வெகுவாகப் ப்ரொமோட் செய்துகொண்டிருக்கிறது

மேலிடம் தரும் உத்தரவின்படி,கோபாலபுரமோ, போயஸ் தோட்டமோ  ஏதோ ஒரு பல்லக்கை முதல் ஆளாய் ஓடிச்சென்று தூக்கிக்கொள்ளும் விசுவாசி!
ஜி கே வாசன்

மத்திய மந்திரி சபையில் பசையுள்ள பதவிகளில் இருந்தாலும் கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் என்பது மட்டுமே இவரது பலம்
அப்பா கைவிட்ட துருப்பிடித்த சைக்கிளை எதற்குத் தேடி எடுத்தார் என்பது இன்றுவரை அவருக்கே விளங்காமல், நின்ற இடத்திலேயே நகராமல் நின்றுகொண்டு இருக்கும் தொந்தரவில்லாத சவலைப்பிள்ளை!மற்ற ஜாதி, மத வியாபாரிகளைப் பற்றியோ, கட்டைப் பஞ்சாயத்தார்களைப் பற்றியோ பேசுவது உங்களுக்குத்தான் நேர விரயம்!

முடிவு?

வேறு என்ன
வழக்கம்போல் இரண்டு தீமைகளில் ஒன்றுதான் இன்னும் சில காலத்துக்கு நம் தலையெழுத்து!

சரி, நம்மால் என்ன செய்யமுடியும்?

1. ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ, எந்த வேட்பாளர் ஓட்டுக்கேட்டு வந்தாலும், இதுநாள்வரை அவர் தன் குடும்ப வளர்ச்சிக்குச் செய்ததென்ன? தொகுதி மக்களுக்குச் செய்ததென்ன என்று கேள்வி கேட்போம்.

2. போன தேர்தலில் தலைக்கு நூறோ இருநூறோ எறிந்துவிட்டுப் போனதுதவிர, சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய ஜனநாயகக் கடமை என்ன என்று கேட்போம்.

3. போன தேர்தலுக்குப்பின் அவர் அடைந்த வளர்ச்சியை நம் வளர்ச்சியோடு ஒப்பிட்டு, அந்த வளர்ச்சிக்கான மந்திரத்தை நமக்கும் சொல்லித்தரக் கேட்போம்.

4. தப்பித் தவறி, தொகுதியில் போட்டியிடும் நல்லவர் எவரேனும்  இருப்பின், கட்சி, வெற்றி வாய்ப்பு எதையும் பாராமல் அவருக்கு வாக்களிப்போம்.

5. நோட்டா என்ற அஸ்திரம் நம் கையில் இருப்பதை உணர்வோம்
இவர்களை, இவர்களின் ஊழலை, திறமை இன்மையை, பிச்சையாய்ப் போடும் இலவசங்களை  நாம் முற்றிலும் நிராகரிக்கிறோம் என்பதை உணர்த்த நோட்டாவுக்கு வாக்களிப்போம்

ஒவ்வொரு தொகுதியிலும் நோட்டாவுக்கு விழும் வாக்குகள் இவர்களை சற்றேனும் யோசிக்கவைத்து, மாற்றத்துக்கான சின்ன விதையை அவர்கள் மனதில் ஊன்றட்டும்!

நாளைய தலைமுறைக்கேனும் நல்லது நடக்க நம்மாலானதைச் செய்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக