மிஸ் யூ மாம்ஸ்!
31.10.1984.
"மாப்ள, இந்திராகாந்தியை கொன்னுட்டாங்களாமே,
அப்போ நாளைக்கு உனக்கு பரீட்சை இருக்காதே!"
"மாம்ஸ், தயவு செய்து என்ன விட்ருங்க!
அடுத்தது நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு எனக்குத் தெரியும்!"
"இந்தப் பாழாப்போன கோர்ஸ் ஏன் சேர்ந்தேன்னு நானே மண்டையப் பிச்சுக்கிட்டு இருக்கேன்!
நான் இந்த ரெண்டுநாளும் படிக்கணும்!"
"யாரு, அந்தப் பாப்பாத்தி கூட கம்பைன் ஸ்டடியா?
எங்கிருந்து மாப்ள பிடிக்கறே இதெல்லாம்!
ஆம்பளை மாதிரி அவ பைக் ஒட்டறதும், பொம்பள மாதிரி நீ பின்னாடி உக்காந்துக்கிட்டுப் போறதும்!
ரண்டு பேரும் கதவைச் சாத்திக்கிட்டு என்ன படிக்கறீங்களோ!"
"ராதா, எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு! கடலை மிட்டாய் வேற அதிகம் சாப்பிடுறான்!"
இந்த அசரீரி
எங்க பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த என் சித்தப்பா!
"அதுதான் மாப்ள எனக்கும்
சந்தேகம்!
நான் மெடிக்கல் காலேஜுல படிச்சப்போ, கூடப் படிச்ச எல்லாப் பொண்ணுங்க மேலையும் ஆஸ்பத்திரி
வாடை அடிக்கும்!
மாப்ள குடுத்து வெச்சவன்!
அது அங்க வரும்போதே இங்க மல்லிகைப்பூ மாதிரி வாசம்!
நடத்து மாப்ள!"
ரைட்டு!
ரெண்டுபேரும் சேந்துட்டீங்கள்ள!
இனி நான் உருப்பட்ட மாதிரிதான்
இப்போ என்ன செய்யணும்,
சொல்லித் தொலைங்க!
"இதோபார் மாப்ள! இன்னைக்கு புதன்கிழமை!
நாயர் மெஸ்ல மீன் கொழம்பு சாப்டுட்டு அப்படியே பீச்சுக்குப் போலாம்! இன்னைக்கு வேற போக்கிடம் கிடையாது!
எல்லாக் குட்டிங்களும் பீச்சுக்குத்தான் வந்தாகணும்!"
அதற்கு சில வருடங்களுக்கு
முன்பு!
மாப்ள, சிகரெட் ஸ்மெல் வருதா?
ஆமாம், லைட்டா!
அய்யய்யோ உங்க அத்தை கண்டுபுடிச்சிருவாளே.
இரு வெத்தலை பாக்கு போட்டுக்கிட்டுப்
போவோம்!
இத்தனை அக்கப்போருக்கு,
ஒன்னு, சிகரெட்டை விட்டுத் தொலைங்க
மாமா,
இல்லன்னா அத்தை பக்கத்துல
போய்த் தொலையாம இருங்க!
"என்னது, அத்தை பக்கத்துல போகவேண்டாமா!
உனக்குப் பொண்ணைக் குடுத்துட்டா நானே எல்லாம் சொல்லிக் கொடுக்கணும்போல!"
எத்தனை வருடமானாலும் மாம்ஸ் மாறவே இல்லை!
சாயங்காலம் பீச்சுக்குப் போனால், மழை பொத்துக்கிட்டு ஊத்துது!
ஓரமா நின்ன சைக்கிள் ரிக்க்ஷாக்காரன்கிட்ட நூறு ரூபாய்
(டெபாசிட்?) கொடுத்துட்டு, மாம்ஸ பின்னாடி உட்கார வைத்து அடிக்கிற மழையில வெறிச்சோடின
பீச் ரோட்டுல சைக்கிள் ரிக்க்ஷா ஒட்டிக்கிட்டு ஈரமாய் ஒரு பயணம்.
உழைப்பாளர் சிலைக்கிட்ட பீச்சுக்குள்ள இருக்கும் ரோட்டில் ரெண்டுபேரும் போகும்போது
ஒரு போலீஸ் ஜீப் வந்து மறிக்குது!
இந்த நேரத்துல கொட்டற மழையில இதென்ன ஆட்டம்?
யார் நீங்க ரெண்டுபேரும்?
மாம்ஸ் பதில் சொல்றாரு!
"நான் கோபி கவெர்மெண்ட் ஆஸ்பத்திரி சீப் டாக்டர்!"
ஒரு நிமிஷம் போலீஸ்காரர் திகைச்சுப் போய் பார்க்கிறார்.
பின் மெதுவாக வருது வார்த்தை!
சார்! ஊரே வீட்டை விட்டு வெளியே வராம இருக்கு!
இந்திரா காந்தியைக் கொன்னுட்டாங்கன்னு
அங்கங்கே கல்வீச்சு,
போதாத கொறைக்கு பேய் மழை!
நீங்களே இப்படிப் பண்ணுனா நாங்க யாருக்கு சொல்றது?
இது எங்க மாம்ஸ்க்கு ஒரு சின்ன இன்ட்ரோதான்!
ராத்திரி பதினோரு மணிக்கு வாலாஜா ரோடு நடைபாதை கைப்பிடி சுவற்றில் உட்கார்ந்துகொண்டு
விசிலடித்தால் எதிர் வரிசை நாயர் கடையிலிருந்து
வரும் டீ குடிப்பதிலிருந்து,
இந்தப் பெண்ணைக் கட்டிக்க மாப்பிள்ளை, மெத்தை வாங்கும் செலவு மிச்சம் என்று கூசாமல் அவர் தங்கையை பக்கத்தில் வைத்துக்கொண்டே
பேசும் ஓட்டைவாய் மாரிமுத்து!
வீட்டுக்கு மிக அருகில் இருந்த சென்னை பாரகன் தியேட்டரில் வாரம் ஒருபடம், வெள்ளிமுதல் வியாழன்வரை
போடுவார்கள்!
அந்த வாரம் திருவருட்செல்வர்!
சுசீலா என்று பெண்ணுக்குப் பெயர் வைக்குமளவு சுசீலா குரலுக்கு அடிமை என் சித்தப்பா!
கொஞ்சம் பத்மினி மீதும் காதல்! (சோபனா ரவி போல!)
"என்னடா உங்க பானுப்ரியா! பத்மினி இடுப்புக்கு ஆகுமா" என்று சித்தி செய்த உப்புமாவை
சாப்பிட்டுக்கொண்டே பேசும் தைரியம்!
நானும் அவரும் அந்த ஏழுநாளும், தினசரி இரவுக்காட்சிக்குப் போய், மன்னவன் வந்தானடி பாடல் முடிந்ததும் கிறங்கிப்போய் வந்துவிடுவது வழக்கம்!
ஞாயிற்றுக்கிழமை வேறு வேலையாக சென்னை வந்த தன் அண்ணனிடம் ,
சித்தி "ஒரு IAS கேடர் ஆபீசரும், ஒரு CA படிக்கிற பையனும் செய்யற
வேலையைப் பாருங்க" என்று தீவிரமாகப் புகார் வாசிக்க, வந்தது பாருங்க கோபம் மாம்ஸுக்கு!
என்ன கெட்ட பழக்கம் இது சித்தப்பனுக்கும் பிள்ளைக்கும்!
வியாழக்கிழமையே போன் பண்ணியிருந்தால் நானும் வந்திருப்பேனே!
அடுத்த இரண்டுநாளும் எங்களோடு வந்து படம் பார்த்துவிட்டுத்தான் போனார்!
எதிலுமே தீவிரமில்லாத விளையாட்டுப்பிள்ளை!
மிகுந்த கைராசி டாக்டர் என்று பேர் வாங்கினாலும்
வருமானம் என்னவோ, அவர்கள் கொடுக்கும் கத்தரிக்காயும், வெண்டைக்காயும்தான்!
யாரிடமும்
இவ்வளவு கொடு என்று கேட்டு நான் பார்த்ததில்லை.
சொந்த கிளினிக் வரும் நோயாளிகளையும் அரசு மருத்துவமனைக்கு வரச்சொல்லி மருத்துவம்
பார்க்குமளவு சம்பாதிக்கத் தெரியாத வெகுளி!
ஆனால் எந்த ஊருக்கு மாறுதலில் போனாலும், ஊர்க் கோவில்களில் முதல் மரியாதை!
வாய் மட்டும் கொஞ்சம் நீளம்!
எப்போது எதைப் பேசுவது என்பது தெரியாத முட்டாள் குழந்தை!
ஊமைக்கோபம், விளையாட்டாய் போகும் போக்கில்
அடிக்கும் கமெண்டுகள் என்று கெட்டபெயருக்கும் பஞ்சமில்லை!
உன் மாமனைப்போல் இருக்கிறாய் என்பது என்னைப்பற்றிய, எனக்கு ரசிக்க முடியாத,
விமர்சனம்!
அதற்கும் அவரிடம் பதில்- கவலைப் படாதே
மாப்ள! என் பொண்ணு அவங்க அம்மா மாதிரி! அப்போ ஜோடி சரியாகத்தான் இருக்கும்!
எப்படியோ ஏகப்பட்ட திருப்பங்களுக்குப்பின் ஏற்பாடான என் கல்யாணத்தில் மாப்பிள்ளை
அழைப்புக் கொடுமைகள் எல்லாம் முடிந்து, என்னை ஒருமணிநேரமாகக் காணோம் என்ற புலம்பலைக்
கேட்டு தேடிக்கொண்டு வந்து,
மண்டபத்துக்குப் பின்னால்
சந்தில் பொடியன்களோடு சேர்ந்து வேறொரு பெண்ணுக்கு கையில் பம்பரம் சுற்றச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தபோது மாம்ஸ் கேட்டது
"பேசாம காலைல ரெண்டுபக்கமும் உட்கார வெச்சுடலாமா மாப்ள!
என்ன, இன்னொரு தாலிதானே செலவு!"
அதுதான் மாம்ஸ் என்கின்ற என் மாமனார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக