வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

கிறுக்கல்களின் தொகுப்பு!


நீ!கனவுகள் கருப்பு வெள்ளை என்கிறது விஞ்ஞானம்!
என் கனவுகளில் வண்ணத்தோடு வாசனையும் சேர்த்த விதிவிலக்கு - நீ!


என் காதல் வெளிச்சத்தில்
கண் விழிக்கும்
ஈரிதழ்த் தாமரை - நீ!


தகிக்கும் கோடையிலும்
என் ஒற்றை மேகக்குடை!
மண்வாசம் கிளர்த்தும்
முதல் மழைத்துளி - நீ!உன் புன்னகையில் விடியும்
என் பொழுதுகள்!


உன் இதழ்பார்க்கையில்
என் கன்னங்களில் ஈரத்தடம்!கடனாளியாக்காமல், கொடுத்த முத்தத்தை திருப்பி வாங்கிப்போ என, ஆயிரத்தையும் எங்கே அடுக்கிவைக்க என்கிறாய் அநியாய வட்டிக்காரி!நாசியுணர்த்திய மல்லிகைவாசம்
சொன்னதென் கனவில் நீ வந்துபோனதை!


என் நேர்விழிப் பார்வைக்கு
உன் கன்னம் சிவப்பதென்
இச்சை கிளர்த்தும் அனிச்சை!


மையிருளின் சுகந்தம்
கிளர்த்தும் நினைவலைகள்
உயிர்க்கொல்லிகள்!


தேய்தலும் வளர்தலும் அற்றுப்போய்
என்றென்றும் காணக்கிடைக்கும் நிலவு- நீ!


இதழ் சொல்லும் மறுப்பை
மறுத்துக் கொஞ்சுகின்றன
விழிகள்!


மூடிய இமைக்கதவு தட்டி
திறக்கச்சொல்கிறது உன் வாசம்!


என்றேனும் வரம் கிடைக்கும் என்றேதான்
அத்தனை ஆராதனைகளும் –
கடவுளுக்கும், காதலிக்கும்!


ஏற்பது இகழ்ச்சி-
சொன்னவர் மறந்தது
யாசித்துப் பெறும்
காதலின் முத்தம்!

பெண்கள் குளிக்கும் படித்துறையில் உனக்கேனடி இந்த வெட்கமெனக் கடிந்து கேட்கும் தோழிக்கு எப்படிச் சொல்வேன்- நான் பொத்தி மறைப்பது உள்ளிருக்கும் உன் கண்ணை என்று!


கூசித் தொலைக்குதடா என்னுடம்பு 
கொஞ்சம் கண்ணை மூடித் தொலை
கெஞ்சி இறைஞ்சினேன் 
என் மனதுறையும் உன்னை!


உனக்கான தனிமைக் காத்திருப்பில்
பேச்சுத்துணைக்கு
என்னுள் இருக்கும் நீ!


உன் கூந்தல் சொர்க்கம் யாசித்தன
பூஜைக்கு வந்த மலர்கள்!


கொடியுலரும் உன் ஆடை தொட்டுக்
கிறங்கிக் குளிரும் காற்று!


வெளிச்ச விரல் நீட்டி உன் முகம் தொட்ட
வெம்மையில் தகிக்கும் சூரியன்!


வருடங்களாய் வறண்ட நிலம்
விழுந்த முதல் துளி மழையைப் போல்
ஆவேசமாய் உண்டேன்
உன் காதலை!


விழி மீன்களின் தூண்டிலில்
சிக்கிச் சிதைந்தது இதயம்!


பற்றவைத்த ஒற்றை வெடியைப்
பார்க்கும் பதைப்போடு
காத்திருக்கிறேன்!
பதிலைச் சொல்லிப்போ!


பிரகாரம் சுற்றும் உன்
பாதம் தாங்கிக் குழைகிறது
சந்நிதியில் பிரார்த்தனை மறந்த
மனம்!


நிழல் என்பதே குளிர்ச்சிதானே
பிறகேன் உன் நிழல் கடந்த வெப்பம்
தாளாது உருகிக் கரைகிறது என் உயிர் ?


நாம்!காதல் என்று உணர்ந்ததெல்லாம்
காதலே இல்லை என்றறியக்
காதல் கொள்ள வா!


நிலவாடை மட்டும் பூண்டு
நாமிருந்த நேரத்தில் நம்
வேர்வை துடைக்கும் போர்வை
உன் கூந்தல்!


இரவாடைகளில் எத்தனை வகை உனக்கு!
வெட்கமே ஆடையாய்,
இருளும் ஓர் ஆடையாய்,
கண்களே ஆடையாய்.......


எனக்கான இருக்கை,
உன் இருகை!


இச்சைச் செயல் - முத்தம்!
இம்சைச் செயல் - காதல்!

உன் இடையுருளும் வேர்வைத்துளியில்
வழுக்கி விழுந்ததென் விழி!


நிலவில் சுடரும் சூரியன் - நீ
உன் ஒளி விழுங்கி
வளர்ந்து தேயும் மதி
பதி உன் பாதி
 - நான்!எத்தனைநேரம்தான் கோபம்போலவே நடித்துத்தொலைப்பது?
ஒரு வார்த்தை சமாதானம் சொல்லி
அணை உடைத்துப்போயேன் மரமண்டையே!


மெல்லத் தொடங்கி மூர்க்கமாகி
அடித்துப் பெய்து குளிர்விக்கும்
மழைபோல் நம் காதல்!

தனிமை இருட்கூடலில்
நிலவொளியாடை மறைக்கும் வெட்கவேகத்தில் எனையாடையாயாய்ப் பூண்டவளே
நீ நகையாடை பூண்டிருப்பது மறந்தே போனதோ மோகத்தின் தாகத்தில்?


பகல் பொழுது பரவாயில்லை - பரபரப்பில் மறக்கவைக்கிறது! இந்த இரவுதான் படுத்தவுடன் நினைவுப் போர்வையை விரித்துவிடுகிறது!முத்தப்பொறி பற்றவைத்த நெருப்பில்
குளிர்காய்கிறது காமம்!


சம்மதம் கேளாது கொடுத்த முத்தம் தந்த கோபம் தணிக்கக் கொடுத்த முத்தங்களை
நிறுத்தச் சொல்லவே இல்லை அவள்!


உனக்கும் எனக்கும்
பொதுவான ரசனை
ஒன்றுமே இல்லை.
உயிரை உருக்கிச் செய்த இந்த
வெறித்தனமான அன்பைத் தவிர!


உன் ரசனைக்குறைவு பற்றி எனக்கு
ஆயிரம் விமர்சனங்கள் உண்டு!
அன்பின் மிகை பற்றியோ
என்றும் மாளாத பிரமிப்பு மட்டுமே!!


உப்பாய்க் கரைவாய் மனக்குளத்தில் என்றே
விழுங்கித் தொலைத்தேன் உன் நினைவை!
சோப்பாய் நுரைத்துப் பொங்கிப்பெருகிக்
குளம் நிறைக்கும் என்பதறியாமல்!

அங்கெல்லாமா தொடுவாய்
வெட்கம் கெட்டவனே என்ற
பொய்ச் சிணுங்கலுக்கு
சட்டென்று மடக்கிக்கொண்டேன்
என் பார்வைக் கரத்தை!


யுகங்களாய் நீண்ட முத்தச் சங்கமத்தில்,
வெளுத்தன இதழ்கள்,
வெட்கிச் சிவந்தன சொற்கள்!


நீயும்,.... நானும்  நீயும்

கண்மை தொட்டு நீ என் கன்னம் வைத்த
திருஷ்டிப் பொட்டை,
முகம் முழுக்க இழுத்துப் பூசி
நகைக்குது நம் பிரிவு!என்னை விடப் பிடித்தவனைத் தேடாதே!
என்னைவிட உன்னை நேசிப்பான் என்றுணர்ந்தால்,......... போ!
சந்தோஷமாகத் தோற்றுப்போகிறேன்!


எல்லாவற்றையும் கடக்கமுடிகிறது
என் அருகில் உன்னைத் தேடும்
விழிகளின் கேள்விகளைத்தான்....


உன்னை மறப்பதும்,
உயிரைத் துறப்பதும்
ஒரே கணத்தில்!உன்னைக் கண்டபோது தொலைத்த
ஒற்றைத் துடிப்பை இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறது
என் இதயம்!உண்மைக் காதலும் புரியவில்லை,
பொய்க்கோபமும் புரியவில்லை!
அன்றைக்கே என் நேசத்தை
மறுதலித்திருக்கலாம் நீ!
அவிழாத மொட்டிலும்,
உரையாத சந்தனத்திலும்
வாசம் தெரிவதில்லை –
இறவாமல் என் நேசமும் உனக்கு....உன் விழிக்கரை மீறத் துடிக்கும் துளி
என் உயிர் குடித்துப் பசியாறும்!மறந்ததாய் எண்ணும் நினைவுத் திரி
பற்றிக்கொள்ள ஒற்றைப் பொறி உன் பெயர்!


ஓய்ந்து நிற்கும் என் உலகை
உதைத்து நகர்த்திவிட்டுப் போகும்
உன் நினைவு!


கண் தொடாத தூரத்தில்
ஒளிந்துகொண்டதாய் நினைக்கின்றாய்.
மனம் தொடும் தூரம் ஒன்று
இருப்பதை அறியாமல்.சவ ஊர்வலத்தில் சிந்திய அரளியைப்போல் உன் மணமேடையில் சிதறிக்கிடக்கிறது என் மனம்!சுவாசம் போல் அனிச்சையானது உன் நினைவு!
இரண்டும் ஒன்றாய்த்தான் மறந்துபோகும்!
கண்ணீர்த் துளி சுட்டவடு
கடைசிவரை ஆறலயே
கடைக்கண்ணில் வச்சகொள்ளி
குளிப்பாட்டக் குளிரலயே!


கட்டையை எரித்த சாம்பல்
கடலினிலே கரைத்தாலும்
காதலியே உன் நினைப்பு
கடைசிவரை வாட்டுதடி!கட்டைவிரல் கட்டிப்போட்டு
கால் நீட்டிப் படுத்தாலும்
கண்மணியே உன் நேசம்
கருத்தைவிட்டுப் போகலியே!பகல் பொழுது பரவாயில்லை –
பரபரப்பில் மறக்கவைக்கிறது!
இந்த இரவுதான் படுத்தவுடன்
இரக்கமே இல்லாமல்
நினைவுப் போர்வையை
விரித்துவிடுகிறது!மரணத்தைப்போல் பொறுமையாகக்
காத்திருக்கிறேன் உன் காதலுக்காக!
என்றேனும் நீ வந்துதான் தீரவேண்டும்!மறக்கும் எத்தனிப்பில்
மரிக்கும் மனம்!
நலமென்று புன்னகைக்கிறாய் நீ!
நானுமென்று தலையசைத்தேன் நான்!
பரஸ்பரம் துளிர்த்த கண்ணீர் பார்க்காத
போலி பாவனையோடு விரைந்து நகர்ந்தோம் நாம்!!பழைய நாட்குறிப்பு நழுவவிட்ட
ஒற்றை நீள்முடி போதும்
என் கண்ணீர் மதகுடைக்க!நீயாக இருக்ககூடாதென
பதைத்துத் திரும்புகிறேன்
உன்பெயரை யார் விளித்தாலும்!நீர்த்திரையிட்ட விழிகளில் பார்த்த பிம்பமே 
கடைசியானதாக இருக்கட்டும்


தளும்பும் கண்ணீரை வழிய விடாமல்
விழுங்கும் வித்தை
கைவரும் கணங்கள்
உன்னைக் காணும் பொழுதுகள்!
யாருக்கும் எதற்காகவும் காத்திருக்காத காலம்
என் மனதில் உறைந்துகிடக்கிறது
உன் நினைவுகளோடு!


வருகையைச் சொல்ல
வட்டமிட்ட தேவதைகள்
பிரிவைச்சொன்ன நாளில்
தூங்கிப்போயினவோசந்திக்கவேண்டாமென்று
சொல்லிப்போனபிறகான
சங்கடச் சந்திப்புக்களில்தான்
ததும்பி வழிந்தது நம் காதல்!பிரிவில் புரியாத வலி
உன்னைப் பார்க்கையில் கொல்கிறது


உன்னைப் பார்க்க நேருமோ
என்ற பதைப்பிலும்
பார்க்கவே முடியாதோ
என்ற பரிதவிப்பிலும்
ஊசலாடும் என் நாட்கள்!வெளிப்படையாய் ஒரு சின்ன வலியைக் கொடு! மறைத்துவைத்த எல்லா ரணங்களின் வலிக்கும்
அழுது தீர்த்துக்கொள்கிறேன்கரைப்பதற்காய் ஊற்றிய கண்ணீரில்
வேர் பிடித்து விருட்சமாகும்
நியாபகங்கள்!


விழி தீண்டிப் பிரிந்ததே
இத்தனை வலி என்றால்,
விரல் பட்டு விலகியிருந்தால்
உருகிக் கரைந்திருப்பேன் காதலில்!உன் அமைதியின் இரைச்சல்கள்
தாங்கமுடியாமல் தத்தளிக்கிறது
மனம்!


நீயும் நிலவுமற்ற இரவுகளில்
என் உயிரே பெருஞ்சுமை!நீர்த்திரையிட்ட என் விழிகளின் வழியே
என்னைப் படித்துக்கொண்டிருக்கிறது
உன் கடிதம்!


இனி சொல்ல ஏதுமில்லை என்று
மறுதலித்த தலையசைப்பில்
சிதறிய ஒற்றைத் துளி என்
ஆயுளுக்குமான அழுகைக்கு வாயில்!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக