திங்கள், 17 ஆகஸ்ட், 2015

முப்பாலில் இரண்டாவது நூறு!

முப்பாலில் இரண்டாவது நூறு!
இன்றோடு இருநூறாவது நாள்! 

தினம் ஒரு திருக்குறள் - என் பார்வையில்! 

எனக்குத் தெரிந்து 200 நாட்கள் தொடர்ச்சியாய் நான் செய்த முதல் வேலை இதுவாகத்தான் இருக்கும்! 

இன்னும் 1130 நாட்கள் இது இடையூறின்றித் தொடர இறை அருளட்டும்!

இதை #குறள் என்ற tag உடனும் போஸ்ட் கார்ட் வடிவில் தினமும் பகிர்ந்திருக்கிறேன்!

சில குறட்களில் சிகப்பு நிறத்தில் உள்ளது என் மாற்றி யோசிக்கும் முயற்சி! 
உங்கள் நல்லநேரம், தமிழின் புண்ணியம் - அது தொடரவில்லை!

நன்றி!!

1.    மனதில் குற்றம் இல்லாதிருப்பதே உண்மையான அறம். மற்றவை அடுத்தவருக்காகப் போடும் வேடங்களே. (மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற-34)

2.    கல்லாவிடினும் கற்றவரிடம் கேட்டறிவது நடை தளர்ந்தவனுக்கு ஊன்றுகோல் போல் உதவும். (கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற் கொற்கத்தின் ஊற்றாந் துணை-414)

3.    தனிமையில் காதலன் நினைவில் என்னைத் தின்பதுபோல் துன்புறுத்தும் என் நெஞ்சம். (தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு-1296)

 மனச்சிதை விறகாய் என்னை எரிக்கும் உன் நினைவு!

4.    பொறாமை, பேராசை, கோபம், தீயசொற்களெனும் நான்கையும் களைந்து வாழ்வதே அறமாகும். (அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம்-35)

5.    ஒழுக்கம் மிக்கவர் அறிவுரை,வழுக்கும் நிலத்தில் ஊன்றுகோல்போல் நாம் வாழ உதவும் (இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்-415)

6.    காதலனைக் காணாமல் அஞ்சும். அவர் வந்தால், பிரிவாரோ என அஞ்சும் என் நெஞ்சம். (பெறாஅமை அஞ்சும் பெறின்பிரி வஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு-1295)

வாராமலும் வதைத்தாய், வந்தும் பின் செல்வதாய் வதைத்தாய் - உன் காலடி நீளும் என் மனதை!

7.    நாளை எனத் தள்ளாமல் இன்றே அறம் செய்க!அது நம் இறப்பிலும் துணையாய்க் கூடவரும் (அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை-36)

அறம் செய்யத் தயங்காதே மனமே
அஃதுன் இறப்பிலும் கூடவரும் துணையே!!

8.    எவ்வளவு நல்ல விஷயங்களைக் கேட்கிறோமோ நம் வாழ்வில் அவ்வளவு தூரம் மேன்மைகிடைக்கும் (எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்-416)

நல்லதெல்லாம் காது கொடுத்துக் கேளு
உன் வாழ்க்கையிலே நல்லதே நடக்கும் நீ பாரு!

9.    ஊடி, பின் கூடி இன்புறாமல் அவனைப் பார்த்ததும் வழிகிறாயே மட நெஞ்சே. (இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று-1294)

அவனைக் கண்ட மறுகணம் காத்திருக்க மனமின்றி கட்டியணைக்கத் தாவுதென் காதல் மனம்!

10. அறவழி நடப்பவன் பல்லக்கில் செல்வான் தீயவழி செல்பவன் அதைத் தோள்சுமந்து துன்புறுவான் அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை-37)

அறவழி நடத்தை பல்லக்கில் ஏற்றும்
அல்லவையோஉந்தன் தோள்களில் ஏறும்!

11. கூர்ந்த மதியுடையோர், பிழையாகப் புரிந்தவற்றையும் அறிவின்றிப் பேசார். (பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர்-417)

தவறாய்ப் புரிந்ததையும் 
தாழ்த்திப்பேச மாட்டார் 
தரம் வாய்ந்த தன்மையாளர்!

12. துன்பத்தில் விலகும் நட்பென என்னை விலகி அவன்பின் போவதென்ன என் நெஞ்சே? (கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல்-1293)
துயர்வேளை எனை தனியிருத்தி  அவன்பின் 
கூடாநட்பாய் வால் குழைத்தோடினையே மடநெஞ்சே!

13. ஒருநாளும் இடைவிடாது செய்யும் அறம் வாழ்க்கைப் பாதை அமைக்கும் கல்லாகும் (வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்-38)

ஒருநாளும் இடைவிடாது அறவழியில் செல்! அதுன் வாழ்க்கைப்பாதை சுகமாக்க வழியமைக்கும் கல்!!

14. நல்லவற்றைக் கேட்காத செவி மற்றவை கேட்கும் தன்மையிருந்தும் கேளாத செவிட்டுக் காதே. (கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி-418)

நல்லதையே தேடிப்போய்க் கேளு
அதைக் கேட்காத காதுக்கோ செவிடென்றே பேரு!

15. என்மேல் அன்பில்லா அவன்பின்னே, வெறுக்கமாட்டான் என்று நம்பிச் செல்கிறாயே மனமே (உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு-1292)

அன்பிலாதான் பின் ஆட்டுக்குட்டியாய் அறிவின்றிப் போகும் நெஞ்சே, உன் நம்பிக்கைதான் என்ன?

16. அறவழி நடத்தையால் வருவதே உண்மையான இன்பம். மற்ற வழிகளில் இன்பமோ புகழோ ஏதுமில்லை (அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல-39)

அறவழி நடத்தை இன்பம் தரும்
அஃதில் வாழ்க்கை வெறுமையுறும்!!

17. தெளிந்த கேள்வியறிவு அற்றவர் பணிவும் பண்பும் உடையவராவது கடினம். (நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது-419)

நல்லதையே தேடிப்புடிச்சுக் கேளு!
அதனால நீ ஆய்டுவே பண்புடைய ஆளு!!

18. எனை நினையா அவனுக்கு அவன்நெஞ்சு துணையிருக்க,நீ ஏன்அவனுக்கு உருகுகிறாய் நெஞ்சே (அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது-1291)

எனை நினையாக் கல்நெஞ்சன் காலடியில்
வாலாட்டி நின்றனையே நன்றி கெட்ட மட நெஞ்சே!

19. அறம் செய்வது வாழ்வின் நோக்கமாக்கிப் பழிக்கத் தக்கவை தவிர்ப்பது புகழைச் சேர்க்கும். (செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி-40)

அறத்தை விரும்பிச் செய்
அல்லதைத் துரத்தி அடி
புகழோடு புனிதமாகும்
வளமான உன் வாழ்க்கை!

20. செவி உண்ணும் கேள்விச்சுவை அறியாது, வாயின் சுவைக்கு வாழ்வது சாவதற்கு சமம் (செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினு மென்-420)

செவிக்குணவாம் கருத்துண்டு சிறந்து நீ வாழாது,
யிற்றுக்குச் சோறுண்ணும் சவமாய் வீழாதே!

21. பார்வையால் ஊடி, எனைப்பார்த்ததும் என்னைவிட விரைந்து அணைத்தாள் காதலி. (கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று-1290) \

பார்வை எரிப்பதாய் பாவனைகள் செய்தாலும்
பார்த்தவுடன் எனை மிஞ்சிப் பாயந்தணைத்தாள் காதலியே! உள்ளிருக்கும் காதலை என் செயும் ஊடல்?

22. பெற்றவர், மனைவி, குழந்தைகளுக்குத் துணையாய் இருப்பதே நல்வாழ்க்கை அறம். (இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை-41)

பெற்றவர், உற்றவள், பெற்றவை பேணி வாழ் இல்லறம் நல்லறம் காண்!

23. அறிவு நமக்கு அழிவு வராது பகைமையிடமிருந்து காக்கும் அரண் போன்றதாகும். (அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்-421)

அறிவென்னும் கோட்டைகட்டு,
பகை அணுகாமல் நீடு வாழு!

24. மலரினும் மெல்லியது காதல். வெகு சிலரே அதே இயல்போடு அதை நன்கு ரசனையாய் அனுபவிப்பர் (மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார்-1289)

25. துறவிகள், பசித்தோர்,புகலிடமற்றோருக்குத் துணையாவான் இல்லறவாசி. (துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை-42)


26. மனம் போகும் போக்கில் அதைச் செல்லவிடாது தீமை நீக்கி நல்வழியில் செலுத்துவது அறிவு (சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு-422)

27. குடிகாரனுக்கு கள்ளைப்போல, காதலா,வருத்தினாலும் எனை மயக்குதுன் மார்பு (இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு-1288)


28. மூதாதையர், கடவுள், விருந்தினர், உறவு, தனக்கான கடமைகளை செய்வதறம் (தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை-43)

29. யார் எதைச் சொன்னாலும் அதன் உண்மையை ஆராய்ந்து அறிவதே அறிவுடைமை. (எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு-423)


30. அடித்துச்செல்வதறிந்தே நீரில் பாய்தல்போல் தோல்வியறிந்தே ஊடல்கொள்கிறேன் (உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து-1287)

31. பாவம் செய்யாது பொருள் சேர்த்து, பகிர்ந்துண்டவர் பரம்பரை அழிவதில்லை. (பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல-44)


32. சொல்வதை எளிதாய்ப் புரியச் சொல்லி, கேட்பதை நுட்பமாய்ப் புரிவது அறிவு (எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு-424)

33. காதலனைக் கண்டால் அவன் குறைகள் தெரிவதில்லை. காணாதபோதோ குறை தவிர ஏதும் தெரிவதில்லை (காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை-1286)

34. அன்போடும் நல்ல அறத்தோடும் வாழ்வதே பண்போடும் நல்ல பயனோடும் வாழும் இல்வாழ்க்கை. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது-45)

35. உலகில் உயர்ந்தோர் நட்பு ஆரம்பத்தில் மகிழ்வும் பின் வருத்தமும் தராது சீராக இருக்கும் (உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு-425)


36. மைதீட்டையில் மைக்கோல் தெரியாததுபோல் அண்மையில்அவன் குற்றம்தெரிவதில்லை (எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண் பழிகாணேன் கண்ட இடத்து-1285)

37. அறநெறியில் வாழும் இல்வாழ்க்கை தரும் பயனை தவநெறி வாழ்வுகூடத் தராது. (அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன்-46)


38. உலகம் நடக்கும் உயரிய வழி பிறழாமல் அவ்வழி வாழ்வதே நல்ல அறிவுடைமையாகும். எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு-426)

39. அவனோடு ஊடல் செய்யப்போனால் என் நெஞ்சு அவனோடு கூடத் துடிக்குதடி தோழி! (ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதென் னெஞ்சு-1284)

40. அறத்தோடு இல்வாழ்வை வாழ்பவன் நல்வாழ்வை முயலும் மற்றோரைவிட சிறந்தவனாவான் (இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை-47)

41. அறிவுடையோர் ஒவ்வொன்றின் விளைவுகளையும் ஆராய்ந்து செயல்படுவர். அறிவற்றோர் அப்படி அல்ல. (அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்-427)


42. என்னை கண்டுகொள்ளாது அவன் விருப்பம்போல் நடக்கையிலும் என் கண் அவனைக் காணாமல் இராது (பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல் கண்-1283)

43. அறவழி நடந்து பிறரையும் அவ்வழி நடத்தும் இல்லறம் துறவினும் உயர்ந்தது. (ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து-48)


44. அஞ்சத் தக்கதுக்கு அஞ்சாதிருப்பது மடமை. அதற்கு அஞ்சி, தவிர்த்து வாழ்பவன் அறிவுடையோன் (அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில்-428)

45. பனையளவு காதல் வளர்ந்தபோதும் தினையளவும் ஊடல் கொள்ளாதிருத்தல் நன்று. (தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின்-1282)
46. பிறர் பழிக்காதவாறு வாழும் இல்வாழ்க்கையே நல்ல அற வாழ்க்கையாகும். (அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று-49)

47. வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறமுடையவருக்கு நடுங்கவைக்கும் துன்பம் வராது. (எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்-429)


48. நினைத்தாலே இன்பம், கண்டாலே மயக்கம் தரும் குணம் காதலுக்கு-கள்ளுக்கில்லை. (உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு-1281)

49. உலகில் அறநெறி தவறாது வாழ்பவன் வானில் வாழும் தெய்வத்துக்கு இணையாவான் (வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்-50)


50. எல்லாம் பெற்ற அறிவில்லாதவனைவிட ஏதுமில்லாத அறிவுடையவர் பெருமைக்கு உரியவர். (அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனு மிலர்-430)

51. கண்களால் காமம் உணர்த்தி காதலனை இணையக் கெஞ்சும் தன்மை பெண்மைக்குப் பேரழகு. (பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு-1280)
52. நல்ல பண்புகளோடு கணவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்பவளே சிறந்த மனைவி. (மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை-51)

53. அகங்காரம், கோபம், இழிநடத்தை இல்லாதவர்களின் பெருமை உண்மையில் உயர்வானது (செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து-431)


54. பிரிவால் மெலியும் தோளும், கழலும் வளையலும் நோக்கி,எனைத்தொடர காலை நோக்கினாள் (தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண் டவள்செய் தது-1279)

55. பண்புள்ள மனைவி அமையாத இல்லறம் வேறு என்ன சிறப்பு பெற்றாலும் பயனில்லை (மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்-52)


56. கொடையின்மை, பெரியோரை வணங்காத் தன்மை,தீயவற்றில் மகிழ்வு -இவை தலைவனுக்குக் கூடாதவை (இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு-432)

57. நேற்றுப் பிரிந்த காதலனை நெடுநாள் காணாததுபோல் வாடி, நிறம் மாறியது என் உடல் (நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து-1278)

58. நற்பண்புள்ள மனைவி உடையவனுக்கு இல்லாததே இல்லை அப்படி அமையாதவனுக்கோ எதுவுமே இல்லை (இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை-53)

59. பழிக்கு அஞ்சுபவர் தினையளவு குற்றமும் பனையளவாய் எண்ணித் தவிர்ப்பர் (தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்-433)


60. நிலமாளும் காதலன் எனைக் கூடும்போதே பிரிய நினைத்ததை அறிந்து கழன்றது என் கைவளையல் (தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை-1277)

61. கற்பெனும் மன உறுதி பெற்ற பெண்ணைவிடப் பெருமைக்குரிய பரிசு கணவனுக்கு வேறேது? (பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்-54)


62. குற்றமே அரசை அழிக்கும் பகையாகும். எனவே மனதாலும் குற்றம் புரியாமை அரசருக்கு அழகு. (குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் தரூஉம் பகை-434)

63. அன்போடு அவன் கூடும் வேகம், மீண்டும் எனைப் பிரியப்போவதை உணர்த்துகிறது (பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து-1276)

64. கணவனை சக கடவுளென அன்போடு மதிக்கும் மனைவி, பெய் என்று ஆணையிட மழை பொழியும். (தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை-55)

65. தவறு நேருமுன்பே காக்கத்தெரியாத அரசு, நெருப்புமுன் வைக்கோல்போல் அழியும் (வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்-435)


66. வண்ணவளையணிந்த காதலியின் ரகசியப் பார்வை என் துயர் தீர்க்கும் மருந்து (செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன் றுடைத்து-1275)

67. கற்போடு தன்னையும் கணவனையும் காத்து, குலப்பெருமையும் காப்பவள் பெண். (தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்-56)


68. தன் குறை நீக்கிப்பின் பிறர் குறை சொல்லும் அரசுக்கு என்ன குறைவரும்? (தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு-436)

69. மொட்டினுள் மறைந்திருக்கும் மணம்போல் அவள் புன்னகைக்குள் காதலன் நினைவு (முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு-1274)
70. மனக்கட்டுப்பாட்டோடு வாழும் பெண்களைக் காவல் வைத்துக் காக்க வேண்டாமே. (சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை-57)

71. நல்லவை செய்யாமல் சேமிக்கும் கருமியின் செல்வம் பயனின்றிப் பாழ்பட்டுப் போகும் (செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும்-437)


72. மணிமாலை கோர்த்த நூல்போல் வெளியில் தெரியாது அவளோடு என்னைக் கோர்ப்பது காதல் (மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன் றுண்டு-1273)

73. பண்பான கணவனோடு கடமைதவறாது வாழும் பெண்கள் வாழுமிடம் சொர்க்கமாகும் (பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு-58)


74. பொருள்சேர்ப்பதே வாழ்க்கை என வாழும் கஞ்சத்தனமே எல்லாவற்றினும் பெருங்குற்றம் (பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று-438)

75. கண்நிறை அழகும் மூங்கில்தோளும் கொண்ட என் காதலியின் பெண்மை பேரழகு (கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது-1272)

76. நல்ல மனைவி அமையாதவன் பழிபேசுவோர் முன் தலை நிமிர்ந்து நடக்கமுடியாது (புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை-59)

77. எவ்வளவு உயர்ந்தாலும் அகங்காரம், தற்பெருமை, நன்மை தராத செயல் அரசனுக்கு உதவாது. (வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவா வினை-439)


78. எத்தனை மறைத்துத் தடுத்தாலும் உன் மைவிழி எனக்கு உன் காதலைச் சொல்லும் (கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு-1271)

79. நல்ல பண்புள்ள மனைவி இல்லறத்துக்கு அழகு, நன்மக்கள், அதற்கு அணிகலன். (மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு-60)


80. தன் விருப்பத்தைப் பகைவர் அறியுமுன் நிறைவேற்றுபவனிடம் பகைவர் சூழ்ச்சி பலிக்காது (காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல்-440)

81. பிரிவால் உள்ளம்உடைந்தபின் உன்னைப் பெறுவதாலோ கலப்பதாலோ என்னபயன்? (பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால்-1270)

82. பொருள் சேர்த்து வாழும் இல்வாழ்க்கை விருந்தினரைப் போற்றி வாழ்வதற்கே (இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு-81)

83. அறத்தில் சிறந்த மூத்த அறிஞர்கள் நட்பைத் தேடி அடைதல் அரசர்க்கு அழகு. (அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்-441)


84. தூரம் சென்றவன் வரும்நாளுக்கு ஏங்கும் பெண்ணின் ஒருநாள் யுகமாகும் (ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத் தேங்கு பவர்க்கு-1269)

85. விருந்தினரை வெளியிருத்தி அமுதமானாலும் தனித்து உண்பது பண்பாகாது (விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று-82)


86. வந்த துயரம் நீக்கி, மேலும் துயர் வராது காக்கும் தன்மையுள்ளோர் துணை அரண். (உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்-442)

87. இந்தப்போரில் இன்றே வென்று வீடு திரும்பினால் மனைவியை பெருவிருந்தாய் அடைவேன் (வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து-1268)

88. விருந்தினரைத் தினம்தோறும் பேணுபவர் வாழ்க்கை துன்பத்தால் கெடுவதில்லை (வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுத்தல் இன்று-83)

89. பெரியவர்களைப் போற்றி அவர்களைத் தம்மவராக்கிக்கொள்வது எல்லாவற்றினும் பெரிய பேறு (அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்-443)


90. என் கண் போன்ற காதலன் வரின் அவரிடம் ஊடுவனோ, கூடிக் கலப்பேனோ அறியேன். (புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின்-1267)

91. விருந்தினரை முகம்மலர்ந்து உபசரிப்பவர் வீட்டில் திருமகள் வாசம் செய்வாள் (அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந் தோம்புவான் இல்-84)


92. தம்மைவிட அறிஞர்களை உறவாக்கி, அவர்கள் காட்டும் வழி நடப்பது பெரிய வலிமையாகும். (தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை-444)

93. காதலன் திரும்ப வரும்நாளில் என் பிரிவுத்துன்பம் முழுதும் தீர உறவு கொள்வேன். (வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட-1266)

94. விருந்தினர் உண்டபின்எஞ்சியதைஉண்டு வாழ்பவன்நிலத்தில் விதைக்கவேவேண்டாம் (வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்-85)

95. கண்போல் காத்து எதையும் கண்டறிந்து கூறும் அறிஞர் நட்பு அரசனுக்கு நன்மை தரும் (சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்-445)


96. கண்ணாற என் காதலனைக் கண்டால், என் மெல்லிய தோளின் வாட்டம் தானே நீங்கும் (காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்குமென் மென்தோள் பசப்பு-1265)

97. வந்த விருந்தைப் பேணி,வருவோரைவரவேற்பவன் தேவர்களின் விருந்தினன் (செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு-86)


98. தகுதியான அறிவுடையோரின் வழி நடப்பவனுக்குப் பகைவர் தீங்கு செய்ய முடியாது (தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில்-446)

99. என்னைக்கூடிப் பிரிந்தவன் வருகைக்கு என்நெஞ்சம் மரக்கிளையேறிக் காத்திருக்கிறது (கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகோ டேறுமென் நெஞ்சு-1264)


100.   விருந்தினரைப் பேணுதல் பலனை அளக்க முடியாத வேள்வியைப்போல் உயர்வானது (இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்-87)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக