கோழி காணாத
வைரங்களில் ஒன்று!
1960-70 களில் பாண்டமங்கலம்
அரசுப் பள்ளி!
கீழே கிடந்த குப்பையைக்
காணாததுபோல் நகர்ந்த மாணவி முதுகில் சுருக்கென்று விழுந்தது ஒரு அடி!
“சார்,
அந்தக் குப்பையை
நான் போடல சார்!”
“தெரியும்! ஆனால் இது உன் பள்ளிதானே?”
“ அந்தக் குப்பையை பார்த்தும் எடுத்து குப்பைத்
தொட்டியில் போடாததற்குத்தான் இந்த அடி!”
இன்னொரு காட்சி!
“தம்பி, இங்கே வா! என்ன பையில்
மைக்கறை?”
பேனா ஒழுகுது
சார்!
ஏன் வேறு பேனா வாங்கவில்லை?
அப்பாகிட்ட
காசு இல்ல சார்!
தன் சட்டைப் பையிலிருந்த
பேனாவை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு, அவன் பேனாவை வாங்கிக் குப்பைத்தொட்டியில்
போட்டுவிட்டு நகருகிறார்.
இரண்டு காட்சியிலும்
அந்த "சார்", அந்தப்பள்ளியின் தலைமை
ஆசிரியர் ராஜமாணிக்கம்!
சேலம் கல்வி மாவட்டத்தில் அந்தக் கால கட்டங்களில் சிறந்த பள்ளிகளின்
பட்டியலில் அவர் பணியாற்றும் பள்ளிகள் கட்டாயம் இருக்கும்!
ஆறடி உயரம்!
கனிவும் கண்டிப்புமான
தோற்றம்!
எளிமையான உடை!
எப்போதும் ஆங்கிலம்
கலவாத பேச்சுத் தமிழ்!
மரம் நடுவதும்,
பள்ளியை சுத்தமாக வைப்பதும் மட்டுமன்றி, மாணவ மாணவியர் ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம்!
லட்சக்கணக்கில் பள்ளிக்கட்டணம் வசூலிக்கும் ஆடம்பர மேட்டுக்குடிப் பள்ளிகளிலும், இன்றுவரை சாத்தியப்படாத
ஒன்றை, ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்கு
முன்பே அரசுப்பள்ளிகளில் சாதித்துக்காட்டியவர் அந்தத் தலைமை ஆசிரியர்.
மாணவர்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் என்ற ஆளில்லாக் கடைகள்!
பள்ளியில் மாணவர்களுக்கான நோட்டுப்புத்தகங்கள், தின்பண்டங்கள் முறையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்!
விற்பனைக்கு ஆள் கிடையாது, ஆரம்பத்தில் இருந்த மறைமுகக் கண்காணிப்பும் சில நாட்களே!
அவரவருக்குத் தேவையானவற்றை
எடுத்துக்கொண்டு, "பூட்டப்படாத" கல்லாப் பெட்டியில் அதற்கான தொகையைப் போட்டுவிட வேண்டும்.
மாதம் ஒருமுறை அதில் வரும் லாபம் மாணவர்கள் உதவித்தொகை கணக்கில் வரவு வைக்கப்படும்!
அந்த மாதத்து வரவுசெலவு, நோட்டீஸ் போர்டில் போடப்படும்!
படிக்கவே நம்பமுடியாத இந்த முறை, அவர் பணியாற்றிய எல்லா அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் வெற்றிகரமாக
நடைமுறைப்படுத்தப்பட்டது!
எந்த நேரமும், மாணவர்கள் அவரை அனுகிப்பேசமுடியும்.
எல்லோரிடமும் தோழமையோடு பேசுவார்.
ஆனால் ஒழுக்க விதிமுறைகளில் கடும் கண்டிப்பானவர்.
படிப்பு மட்டுமன்றி, விளையாட்டு, கைத்தொழில் என்று எல்லாவற்றிலும்
எல்லா மாணவர்களின் பங்களிப்பு கட்டாயம்.
சுடிதார் என்றால் என்னவென்றே தெரியாத காலகட்டம்!
மாணவிகள் பாவாடை தாவணி அணிந்துவருவதால் இடுப்பை மறைக்க முடியாத நிலை!
துணிந்து ஒரு விஷயத்தை அமல்படுத்தினார்!
பாவாடை தாவணி அணியும் மாணவிகள் உள்ளாடையாக பனியன் அணிந்துவர வேண்டும்!
அடுத்த அதிரடி,
மாணவிகளுக்கு பள்ளி மாலை நான்கு மணிக்கு விடப்படும். மாணவர்களுக்கு நான்கு பத்துக்கு!
இந்த இரண்டு விதிமுறைகளும்
இன்றைக்கு அபத்தமாகத் தோன்றினாலும், அன்று, அந்த கிராமங்களில்
எட்டாம் வகுப்புக்குமேல் படிப்பைத் தொடரும் மாணவிகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது
உண்மை!
தன்னைப் பற்றிய உயர்வான விஷயங்களை எந்த நிலையிலும் இன்றுவரை யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை!
எனவே அவர் எத்தனை முறை நல்லாசிரியர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதுகூட எங்கள்
யாருக்கும் தெரியாது!
பள்ளியில் மட்டுமின்றி,
வீட்டிலும் அவர் வித்தியாசமானவரே!
தனக்குப்பின் ஒரு டஜன் தம்பி தங்கைகளும், தனக்குமேல் ஒரே தமக்கையுமாய், ஒரு பெரிய குடும்பத்தின் முதல் ஆண்வாரிசு!
தம்பி தங்கைகள் எல்லோருக்கும் வழி காட்டுவதுபோல் M,A.,B.T. படித்து அருகாமை அரசு உயர்நிலைப்பள்ளியிலேயே
தலைமை ஆசிரியர்!
(1950களில் ஒரு கிராமத்து மாணவன் மாஸ்டர் டிகிரி முடிப்பது என்பது பெரிய விஷயம்)
ஆடம்பரம் என்றால் என்னவென்றே தெரியாது!
கோபம் வந்து கத்திப்பேசி இன்றுவரை நான்
பார்த்ததில்லை!
பெரியவர், சின்னவர் என்ற எந்தப்பாகுபாடும்
இல்லாமல் யார் சொல்வதையும் காதுகொடுத்துக் கேட்கும் பண்பு!
எத்தனை மகிழ்ச்சி என்றாலும் எத்தனை பெரிய துயர் என்றாலும் அதிகம் அலட்டல் இல்லாமல்
எதிர்கொள்ளும் தன்மை!
தன், தம்பி, தங்கைகளின் குழந்தைகள் என ஏறத்தாழ பதினைந்து இருபது உருப்படிகளை மாலை வேளைகளில்
ஆற்றுக்குக் கூட்டிச் செல்லும்போது, எனக்கு மற்றவர்களோடு ஆட்டம் போடுவதைவிடவும் அவரோடு பேசிக்கொண்டிருப்பது மிகவும்
பிடித்த விஷயம்.
எந்தக் கேள்வி கேட்டாலும், அந்த வயதுக்குப் புரியும்படியான பதில்கள்!
விதண்டா வாதங்களுக்கும் புன்னகையோடு மறுப்பு!
ஒரு தோழமை உணர்வோடே பழக முடிந்த அற்புத மனிதர்!
குடும்பத்தில் எந்த ஒரு விவாதத்திலும் தன கருத்தை அடுத்தவர்மேல் வலியுறுத்தியதில்லை.
“இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை!”
“இது நடைமுறை சாத்தியம் என்று எனக்குப் படவில்லை!”
இதுதான் அவர் சொல்லும் உச்சகட்ட மறுப்புக்கள்!
தனக்குத் தெரிந்த தீர்வுகளையும் திருத்தங்களையும் சொல்லி, அவரவர் வழியில் விட்டுவிடுவார்.
இறுதியில் அவர் சொன்னதுதான் சிறந்த வழியாக இருக்கும்.
ஆயின், அதற்காக யாரையும் குறை சொல்வதோ, நான் அப்பவே
சொன்னேன் என்று ஆரம்பிப்பதோ, எந்தக்காலத்திலும் இல்லை.
அப்போதைய சிக்கலுக்கான ஆலோசனையையும் சலனமில்லாமல் சொல்லும் இனிய மனம்.
இயற்கை உணவுமுறை அவரது நெடுநாள் வழிமுறை!
சிறுவர்களாக இருக்கையில் பெரியப்பா வருவது ஒருவகையில் எதிர்பார்ப்பில்லாத விஷயம்தான்.
வீட்டுக்கு எந்த விருந்தினர் வந்தாலும் அவர்கள் என்ன வாங்கிவந்திருக்கிறார்கள்
என்று பார்க்கும் வயதில் கடும் ஏமாற்றம் எங்கள் பெரியப்பா!
இனிப்புகளோ, கடையில் விற்கும் பண்டங்களோ
அவர் வாங்கிவந்ததே இல்லை!
பழங்கள் மட்டுமே அவர் வாங்கி வரும் தீனி!
வெளியே போகையில் வேறு ஏதாவது கேட்டாலும் வாங்கித் தருவார்!
ஆனால் அடுத்தமுறை வரும்போதும், திராட்சையோ, சாத்துக்குடியோ, ஆப்பிளோதான்!
குழந்தைகள் ஆசைப்படுகின்றன என்று உடலுக்குத் தீங்கானவை அவர் ஒருபோதும் வாங்கிவந்ததில்லை!
உடலுக்கு ஒவ்வாதவை எல்லாமே கெட்டபழக்கங்கள்தான்
என்ற உறுதி!
சின்ன விஷயமானாலும் பெரிய விஷயமானாலும் தன மனதுக்கு சரி என்று பட்டதை மட்டுமே செய்யும்
எளிய, உறுதியான நெஞ்சுரம்.
தீவிர கடவுள் மறுப்பாளர்.
ஆனால் கோவில்களுக்கு வர மறுத்ததே இல்லை.
என் கொள்கையை உன்னிடம் திணிக்கமாட்டேன்,
உனக்காக அதை மாற்றிக்கொள்ள மாட்டேன்
என்ற தெளிவு.
கர்நாடக சங்கீதம் விரும்பிக்கேட்பதுண்டு. அது பிராமணர்களுக்கு மட்டும் என்று இருந்த
பழைய கோட்பாட்டில் வருத்தமும் உண்டு!
தன்னோடு பணியில் இருந்தவர்களாகட்டும், உறவு வட்டம் ஆகட்டும்,
உயர்வு தாழ்வு பார்த்துப் பழகியதில்லை.
இவரோடு மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும், இவரிடம் முகம் திருப்பிப் போனதில்லை என்பது இவர் பண்புக்கு
உதாரணம்!
சில வருடங்களுக்கு முன் ஒரு மிகப்பெரும்
சோதனையை சந்தித்து மீண்டபோது, என்னை முதலில் சந்தித்து ஆறுதல் சொன்னவர்!
அன்றைய உரையாடல் இன்றும் எனக்கு ஒரு வார்த்தை விடாமல் நினைவிருக்கிறது!
ஒரு வார்த்தை குற்றச்சாட்டுமில்லை,
ஒரு வார்த்தை ஆறுதலுமில்லை!
ஒரு நல்ல நண்பன்
என் துயரத்தில் பங்கு கொள்வதுபோல் என்னைப் பேசவிட்டு, இனி நடப்பது என்ன
என்பதற்குமட்டும் வழக்கம்போல் உறுத்தாத அறிவுரை!
அதற்கு எத்தனை முதிர்ச்சி வேண்டும் என்பது இப்போதும் மலைப்பைத் தரும் விஷயம்!
இத்தனை வருடங்கள் கழித்து இப்போது தோன்றுகிறது.
அவர் ஆலோசனைகளை என் சோதனைக் காலங்களில் கேட்டிருந்தால் எவ்வளவு இழப்புகளைத் தவிர்த்திருக்கலாம்
என்று!
என்னைச் சுற்றி இதுபோல் வைரங்களை இறைத்திருக்கிறான் இறைவன்!
நான்தான் முட்டாள் கோழியாக குருட்டுத்தனமாக குப்பையைக் கிளறிக்கொண்டிருந்திருக்கிறேன்!
என் மகனுக்கும் ஆலோசனை சொல்லும் ஆயுளை அவருக்கு, அவர் நம்பாத இறை அருளட்டும்!
No comments:
Post a comment