வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

பரிணாம வளர்ச்சி!

பரிணாம வளர்ச்சி!இந்த ஆளுக்கு இதே வேலையாகப் போய்விட்டது!
இப்போதென்ன புதுத் திருவிளையாடலுக்கு அச்சாரம்?
ருத்ரனிடமிருந்து அவசர அழைப்பு என்று வந்த ஓலைக்கு அலுத்துக்கொண்டே எழுந்து போனார் கேசவ்!

கொஞ்சம் இரு நானும் வருகிறேன்!” என்று சேர்ந்துகொண்ட சதுர்முகன் முகத்தில் குறும்புப் புன்னகை!

இந்த ஆளுக்கு விஷயம் ஏதோ தெரிந்திருக்கிறது என்ற நினைப்பை தலையசைத்து விரட்டினார் கேசவ்!

இந்த விஷமக்காரக் கிழவனின் பொய் உலகப் பிரசித்தமாயிற்றே!
பிறகேன் மேனுபாக்சரிங் டிபார்ட்மெண்ட்டை இதுவே கட்டி ஆண்டுகொண்டிருக்கிறது?

அடிக்கடி டிசைனை மாற்றி அலுத்துப்போகிறது!
எத்தனையைத்தான் கட்டிக் காப்பாற்றுவது!

ப்ரோடோடைப் வெர்சன் பார்த்தபோது நான் சொன்ன திருத்தங்களைக் காதுகொடுத்துக் கேட்டதா இது
?


அந்த ருத்ரனுக்கு இதன்மேல் என்ன அபிமானமோ, கடைசியில் கிழம் அதன் விருப்பத்துக்குத்தான் எல்லாம் செய்கிறது!

பிரச்னை கை மீறும்போது மீட்டிங் போட்டு என்ன பலன்?

“வாட் மை சன்?”என்ற சதுர்முகனை எரிப்பதுபோல் பார்த்தார் கேசவ்!
குசும்புக்கே ஏதாவது தவறாகத் தயாரித்துவிடுவது, அதன்பின் ஒரு இம்ப்ரூவ்ட் வெர்சன்! இந்தமுறையாவது மாற்றமில்லாத இறுதி வடிவமாய் தயாரிக்கட்டும்.

இன்னும் எத்தனை யுகங்களுக்கு இந்த ஒரே ப்ராஜெக்டைக் கட்டி அழுவது?

மற்ற எல்லா யூனிட்டும் அமைதியாகப் போய்க்கொண்டிருக்கும்போது இந்த சின்ன இடத்தில் இத்தனை மாற்றங்கள் தேவையா?

இனி ஏதாவது மாறுதல், இம்ப்ரூவ்மெண்ட் என்று வரட்டும், இந்த ப்ராஜெக்டையே ஸ்க்ரேப் பண்ணித் தொலைத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம்!

எல்லாம் அந்த கிறுக்குப்பிடித்த ருத்ரன் கொடுக்கும் இடம்!

இது அந்த ஆளின் முதல் ப்ரஜெக்ட்!
அதனால் அந்த குட்டிப் ப்ராஜெக்ட் மேல் ஒரு அபிமானம்!

அம்பானி பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அம்பாசிடர் காரைப்போல!
தன் உவமையை நினைத்துத் தானே புன்னகைத்துக்கொண்டு ருத்ரன் அலுவலகத்துக்குள் நுழைந்தார் கேசவன்!

வா கேசவ்! கோபமாக இருப்பதுபோல் தோன்றுகிறது?
அதே எரிச்சலூட்டும் புன்னகையோடு வரவேற்ற ருத்ரனை வெறுப்போடு பார்த்தார் கேசவ்.

இன்னும் எத்தனை முறை இந்த ஒரு ப்ராஜெக்டை மாற்றி மாற்றி இழுத்துக்கொண்டே போவீர்கள்?'

உங்களுக்கே தெரியும் அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறதென்று!
இப்போது என்ன புதுப் பிரச்னை?

ருத்ரன் முன்பிருந்த திரையில் அந்த ப்ராஜெக்ட் சைட் படமாக விரிந்தது!

பெண்டகன்!
அமெரிக்க ராணுவத் தலைமையகம்!

முப்படைத் தளபதிகளோடு ஒரு அவசரக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் அமெரிக்க அதிபர் பழனிசாமி!

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடியேறிய இந்தியத் தமிழன்!

ஒபாமாவுக்குப் பிறகு வந்த ட்ரம்ப் கொண்டுவந்த, எந்த நாட்டவராக இருந்தாலும் அமெரிக்காவில் குடியேறி மூன்றாவது தலைமுறை அதிபர் தேர்தலில் நேரிடையாகப் போட்டியிடலாம் என்ற சட்டத் திருத்தங்களின்படி அதிபரான முதல் தமிழர்.

தமிழ் என்றுகூட சொல்லத் தெரியாத அவருக்கு தமிழ்நாட்டில் ட்வீட்டரில் வாழ்த்து உலக அளவில் ட்ரெண்ட் ஆனதும், இன்னும் பழனிசாமி என்ன ஜாதி என்று விவாதம் ஓடிக்கொண்டிருப்பதும் வேறுகதை!

ரஷ்யா இருந்த இடத்தில் இன்று நெருப்புக்குழம்பாய் ஒரு பாலைவனம் இருப்பதும், உலகின் அணு ஆயுதங்களில் பாதியை வெடித்துத் தீர்த்தபின், பாதிக்கு மேற்பட்ட நாடுகள் கதிர் வீச்சில் தகிப்பதும், பழனிசாமியின் கவலைக்கு முதல் காரணம்.

இந்த இக்கட்டான நிலையில் அதிபராக யாருமே விரும்பாத நிலையில் ஏறத்தாழ போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்!

காற்றை எரிபொருளாக்கி வாகனங்களும் இயந்திரங்களும் இயங்க ஆரம்பித்தபின் பெட்ரோலியப் பொருள்கள் செல்லாக் காசானதிலிருந்து, வளைகுடா நாடுகள் மீதான அமெரிக்காவின் கவனம் இல்லாமலே போய், இன்று பாதி சண்டைகள் நின்றுபோய் விட்டன!

உலகத்தின் வெப்பநிலை கணிக்கவோ சகிக்கவோ முடியாத அளவு மாறிப்போய், குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 98 டிகிரி!

துருவங்கள் கரைந்துபோய், இன்று கடல்கள் இருந்த இடங்கள்தான் முக்கியமான தரைவழிப் பாதைகள்!

இன்றைக்கு ஒரு காலன் தண்ணீர் 280 டாலர்!

இந்தியாவின் நீர் மேலாண்மை காரணமாக அங்கு மட்டும் 1500 அடி தோண்டினாலே தண்ணீர் கசிவதால், ஒரு ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 100 டாலருக்குக்கீழ் சரிந்து கிடக்கிறது!

ராகுல் காந்தியின் கொள்ளுப்பேரன் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு ஆப்ரிக்க தேசத்தவர்தான் இன்று அங்கு பிரதமர்.

உதயநிதியின் கொள்ளுப்பேத்தி, சென்ற வருடம் வரை சினிமா ஸ்டாராக இருந்த ஜெயகுமாரி தமிழ்நாட்டு முதல்வர்.

அவர் மூலமாகப் பேரம் பேசியதில் இன்றுதான் தண்ணீர் கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதைப்பற்றி செனட் ஒப்புதலுக்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கும்போதுதான் அவசரம் என்ற அழைப்பில் பெண்டகன் வந்திருக்கிறார் பழனிசாமி!

வந்ததிலிருந்து வாயே திறக்காமல் உட்கார்ந்திருக்கும் முப்படைத் தளபதிகளையும் எரிச்சலோடு பார்த்தார் பழனிசாமி!

ஜென்டில்மென், நாம் எதைப் பேச இவ்வளவு அவசரமாகக் கூடியிருக்கிறோம் என்பதை கொஞ்சம் சீக்கிரம் சொன்னால் நன்றாக இருக்கும்!

மிஸ்டர் ப்ரெசிடெண்ட், இது கொஞ்சம் தீவிரமான பிரச்னை!
இதுபற்றி நாங்கள் பேசுவதைவிட, நம் மரபணு விஞ்ஞானி ராபர்ட் பேசுவது சரியாக இருக்கும்.

நீங்கள் அனுமதித்தால், அடுத்த அறையில் காத்திருக்கும் அவரை இங்கு வரவைக்கலாம்!

கோபத்தின் உச்சிக்கே போனார் பழனிசாமி!

மரபணு விஞ்ஞானி என்ன சொல்ல இருக்கிறது, வெப்ப மயமாதல், அணுக்கதிர் வீச்சு என்று பழைய கதைகள் கேட்க எனக்கு நேரமில்லை!

இல்லை மிஸ்டர் ப்ரெசிடெண்ட், இது மிகத் தீவிரமான விஷயம்!
மனித குலத்து தீவிரமான அச்சுறுத்தல் இயற்கையிடமிருந்து!

சரி, வரச் சொல்லுங்கள்! ஆனால் சரியாக ஐந்து நிமிடங்கள்!

உள்ளே வந்த ராபர்ட் எந்த விதமான பீடிகையும் இல்லாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்!

பேறுகால வலியையும் இழப்புக்களையும் தவிர்க்க இப்போதெல்லாம் கரு வளர்ப்பு மையங்களில் மட்டுமே குழந்தைகள் வளர்க்கப்படுவது உங்களுக்குத் தெரியும்!
நேற்று பிரசவ மையங்களில் வைக்கப்பட்டிருந்த கருக்கள் எல்லாமே, பிரசவத்துக்குக் குறிக்கப்பட்ட நாளுக்கு முன்பாகவே இன்குபேட்டரை விட்டுத் தானாகவே வெளியேறியிருக்கின்றன!
அது மட்டுமல்ல, இன்குபேட்டரை விட்டு வெளியே வந்த வேகத்தில் அவற்றுக்கு சிறகுகள் வளர்ந்ததோடு, அவை கூட்டமாகப் பறந்து மறைந்துவிட்டன!

பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் இது என்று எனக்குப் படுகிறது!

உறைந்துபோய் உட்கார்ந்துவிட்டார் அமெரிக்க அதிபர்!

இது என்ன புதுக்குழப்பம்?
இந்த மாற்றங்கள் எப்படி உங்கள் ஸ்கேனர் கருவிகளிலிருந்து தப்பியது!

அதுதான் எனக்கும் ஆச்சர்யமாக இருக்கிறது மிஸ்டர் பிரசிடெண்ட்!

இன்குபேட்டரை உடைத்து வெளியேறும் கணம் வரை அவற்றில் எந்த மாறுதலும் இல்லை!
வெளிக்காற்று பட்டவுடன், காற்றை உள்ளிழுத்து அவற்றின் டிஎன்ஏ மகத்தான மாறுதலை அடைகிறது.

இந்த அசுர மாறுதல் சில வினாடிகளில் நிகழ்வதால் யாரும் சுதாரிப்பதற்குள் எல்லாம் முடிந்து போகிறது!


நேற்று இது நடந்தவுடன், அந்த மையங்களில் இருந்த மற்ற எல்லாக் கருவையும் அழித்துவிட முயன்றபோது, அவை எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை!
நிலைமை மொத்தமாகக் கை மீறிப்போய் விட்டதுபோல் தோன்றுகிறது!

இப்போது நம் மீட்டிங்கையும் யாரோ கண்காணித்துக் கொண்டிருப்பதாய் என் உள்ளுணர்வு சொல்கிறது!

நிச்சயம் மனித இனத்தைவிட அறிவில் மேம்பட்ட ஒரு இனம் உருவாகிவிட்டதாகவே எனக்குப் படுகிறது!

உலகம் முழுதும் இந்த மாற்றம் இன்று பரவிவிட்டது!
ஏறத்தாழ ஆறுகோடி கருக்கள் இன்று வெளியேறியிருக்கின்றன!
இந்த நிலை நீடித்தால்....

பேசிக்கொண்டிருந்த விஞ்ஞானியின் பார்வை நிலை குத்திய இடத்தில்,
பழநிசாமிக்குப் பின்னால்  மனித உருவில் சிறகு முளைத்த ஒரு ஆறடி உருவம் கையில் ஆயுதத்தோடு நின்றுகொண்டிருந்தது!

ஒரே நாளில் ஆறடி வளர்ந்திருந்தது அது!

திரையைப் பார்த்துக்கொண்டிருந்த ருத்ரன் புன்னகையோடு பேச ஆரம்பித்தார்!

கேசவ், இனி நீங்கள் பாதுகாக்க வேண்டிய உயிரினம் இதுதான்!
என் ஆணைப்படி நேற்றிலிருந்து பூமியில் சதுர்முகன் படைக்க ஆரம்பித்த உயிர் இது!

இதற்கு எட்டறிவு!

சராசரி ஆயுள் 150 பூமி வருடங்கள்!

மனிதனின் எந்த ஆயுதத்தாலும் இதற்கு அழிவில்லை!
அணுக்கதிர்வீச்சும் இதை பாதிக்காது!

வருடம் மூன்று முறை இனப்பெருக்கம்!

இனி பூமியை இந்த உயிரினம்தான் ஆளப்போகிறது!

தன்னைக் கடவுளாகக் கருத ஆரம்பித்துவிட்ட மனித இனம் இனி அருகிப்போகும்!


ருத்ரன் புன்னகையோடு, கை குலுக்கிச் சொன்னார்!

மீட்டிங் முடிந்தது கேசவ்!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக