அகல்யா என்றொரு தோழி!
“ச்சீ! கடிக்காதடா வலிக்குது!”
அகல்யாவின் செல்லக் கூச்சலுக்கு மொத்த அலுவலகமும் திரும்பிப் பார்த்தது!
கண் சிமிட்டி
குறும்பாய் புன்னகைத்து நகர்ந்தவளை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ரவி!
அவன் மனதில் இந்த
ஆறுமாத அனுபவம் படமாய் விரிந்தது!
உச்சிவெயில் பொழுதிலும்
குளிர் உறைக்கும் ஹோசூர்!
ஊருக்குள் வரலாமா
வேண்டாமா என்று எட்டிப்பார்ப்பதுபோல் ஊர் எல்லையில் ஒரு PCB யூனிட்.
அங்கு அக்கௌண்ட்ஸ்
ஆஃபீஸர் என்ற கிரீடத்தைத் தலையில் வாங்கிக்கொள்ள ரவியை
வற்புறுத்தி அனுப்பியிருந்தார் அவனுடைய ஆடிட்டர்!
ஏற்கனவே சிலமுறை அந்த
அலுவலகத்துக்குத் தணிக்கைக்குப் போயிருந்தபோதே கண்ணில் பட்ட சில தேவதைகள் என்ற உயரிய
நோக்கம் துரத்த ஒரு சுபயோக சுபதினத்தில் காலடி எடுத்து வைக்கும்போது ரவிக்குத் தெரியாது,
தான் இப்படி ஒரு ஸ்நேகிதியை
சந்திக்கப்போவது!
கம்பெனிக்கு வந்த ஒரு வாரத்தில், பெண்கள் உட்பட, எல்லாமே திகட்டிப்போக, கேண்டீன் பையனை “என்னடா
இது தயிர் கைக்குழந்தை வாயிலெடுத்த மாதிரி” ன்னு சத்தமாய் கத்தியபோது, பக்கத்து டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்த
அந்த ப்ரொடக்சன் டிபார்ட்மெண்ட் தேவதை பாதி சாப்பிட்டுக்கொண்டிருந்த டிபன் பாக்ஸோடு
எதிரில் வந்து உட்கார்ந்தாள்.
"ஹாய்! நான் அகல்யா! ப்ராசஸ்
எஞ்சினீயர்!
அக்கவுண்ட்ஸ்க்கு ஒரு கண்ணாடி போட்ட கடுவன் பூனை வந்திருக்குன்னு சொன்னாங்க!
நீங்கதானா அது?"
சுவாதீனமாகக் கேட்டவாறே டிபன் பாக்ஸில் இருந்த தயிர் சாதத்தை அள்ளியெடுத்து ரவி
இலையில் வைத்தவாறே சொன்னாள் “சாப்பிடுங்க! எங்க வீட்ல கைக்குழந்தை இல்லை!”
அப்படித்தான் ஆரம்பித்தது
அவர்கள் அறிமுகம்!
மிக எளிதாக வசீகரிக்கும்
முகம்!
வார்த்தைக்கு ஒரு சிரிப்பு!
புதிதாய் அறிமுகமானவள்
என்ற சங்கோஜமே இல்லாமல் படபடக்கும் பேச்சு!
கூடவே பேசும் கண்கள்!
பி இ எலெக்ட்ரிகல் எஞ்சினீயர்!
கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆச்சு!
“வீட்டுக்காரர்?”
எங்காத்துல அது டைட்டன்ல இருக்கு!
எலெக்ட்ரானிக் எஞ்சினீயர், சொந்த அத்தை மகன்!
எனிமோர் க்வெஸ்டின்?
நெகுநெகுவென்ற உடல்வாகு, சாட்டைபோல் கூந்தல் பொன்னிறம், படகுபோல் இடுப்பு!
ஹாவென்று பார்த்துக்கொண்டிருந்தான் ரவி!
சென்னையில் அடித்த கொட்டமெல்லாம் மறந்தே போய்விடுமோ என்றிருந்தபோது, இதோ, இன்னொரு சிநேகிதி!
வேண்டாம் தாயே! இப்போதைக்கு இது போதும்.
பரபுருஷனுக்கு எச்சில் சாப்பாடு போட்ட புண்ணியம், உனக்கு தலைப்பிள்ளை ஆணாய்ப்
பிறக்கட்டும்!
மறுநாள் காலை, ரூம் மேட் கேசவன் நாயரோடு
காலையில் கொட்டும் பனியில் வியர்க்க விறுவிறுக்க (இன்றைக்கு ரூட் மாற்றிப் போவோம்)
ஜாக்கிங் போனபோது, ஏழாவது கிலோமீட்டரில் கண்ணில்
பட்டது காமன்தொட்டி!
ஊர்ப் பெயரே வில்லங்கமாக இருக்கிறது என்று ஒரு தெரு திரும்ப,
அந்நேரத்துக்கு குளிச்சு முடித்து, கோலம் போட்டுக்கொண்டிருந்தது... அகல்யா!
“ஹாய் எச்சி சோறு” ன்னு ரவி கூப்பிட, கையைப் பிடித்தே வீட்டுக்குள் இழுத்துப்போனாள்!
தலை துவட்டிக்கொண்டு கட்டிய துண்டோடு வந்த எலெக்ட்ரானிக் எஞ்சினீயர் ஆச்சரியமே
இல்லாமல் பார்க்க,
” நான் சொல்லல, சிடுமூஞ்சி ஆடி, (ஆடிட்டருக்கு ஷார்ட்) இதுதான்!”
“இது ரமேஷ்,
- டைட்டன்ல 372வது மிஷின்!
இருபத்துநாலு மணிநேரமும் எஞ்சினீயராகவே இருக்க நேர்ந்துவிட்ட பிறவி!”
“நீ என்ன அந்த சந்திரசேகர் பொண்ணோட ஓடிப்போகப்போறன்னு நெனைச்சா, இந்த மாட்டுக்கறிகூட ஓடிக்கிட்டிருக்கே!”
வருடக்கணக்கில் பழகியவள் போல் பேசிக்கொண்டே, “ரமேஷ் உனக்கும் செகண்ட்
டோஸ் காப்பி கொண்டுவரேன்” ன்னு யார் அனுமதியும் கேட்காமல் சொல்லிக்கொண்டே உள்ளே போனாள்!
பலியாடுபோல் வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது மலையாள பகவதி!
“இப்படித்தான் ஓயாம ஏதாவது பேசிண்டிருப்பா, ஆபீஸ்ல எப்படி சகிச்சுக்கறேள்?”
அடுத்த பத்து நிமிடத்தில், அகல்யாவைவிட நெருக்கமானான் ரமேஷ்!
உண்மையிலேயே ஒருவருக்கொருவர் அளவெடுத்து செய்ததுபோல் உருவமும் குணமும்!
வீட்டை விட்டு வெளியே வருவதற்குள், ஒரு பத்துத்தடவை சொல்லியிருப்பான் ரமேஷ்! “டைம் கிடைக்கும்போதெல்லாம் வாங்கோ!”
வற்புறுத்தி, ரெண்டுபேரையும் வெஸ்பாவில்
ஏற்றிக்கொண்டுபோய் ஆபீஸ் வாசலில் விட்டுவிட்டே அப்படியே டைட்டனுக்குப் போனான்! ரவிக்குத்தான் வேர்வை வழிய குளித்து சுத்தமாய் புறப்பட்ட
அவனை நெருக்கி உட்கார சங்கடமாக இருந்தது!
வாரத்தில் ஒருநாள் டின்னர் அவர்கள் வீட்டில் என்பது வாடிக்கை!
ரவியும் ரமேஷும் செஸ் விளையாட, சமைத்து முடித்து வந்தவுடன் போர்டைத் தட்டிவிட்டுவிட்டு பேச ஆரம்பித்தால், பத்துமணிக்குத்தான் ஓயும்
அவள் வாய்!
ஆபீஸ் குவார்டர்சில் கொண்டுவந்து இறக்கி விடுவது ரமேஷ் வேலை!
ஆறு மாத காலத்தில் ஜென்ம ஜென்மமாய்ப் பழகியதுபோல் ஒரு நெருக்கம்!
இந்த ஆறு மாதம்தான் ரமேஷ், அகல்யாவின் அடிப்படைப் பொருத்தமின்மையையும் புரிய வைத்தது!
ரமேஷ் கொஞ்சம் ஆச்சாரம் - சில விஷயங்களில்!
அம்மா வளர்த்த பிள்ளை!
சில விஷயங்கள் தப்பு, அசிங்கம் என்றால் அசிங்கம்தான்!
வீட்டு விலக்கான நாட்களில் அகல்யாவைத் தொட்டுப் பேசக்கூட முகம் சுளிப்பான்!
அந்த நாட்களில் கிருஷ்ணகிரியிலிருந்து ரமேஷின் அம்மா வந்துவிடுவார்!
நார்மடிப் புடவையும்,
நெற்றி விபூதியுமாக அவரைப் பார்த்தாலே ஒரு அதிகார தோரணை இருக்கும்.
முதல் மாதம் அவர் வந்தது தெரியாமல் காலை ஜாக்கிங் போது திண்ணையில் உட்கார்ந்திருந்த
அகல்யாவை, என்னடி இங்கே உட்கார்ந்திருக்கே
என்று கேட்க, அவள் உஸ் என்று உதட்டில்
விரல் வைத்துக் காட்டி சுதாரிக்கவும் அந்த அம்மாள் பேச்சுக்குரல் கேட்டு வெளியே வரவும்
சரியாக இருந்தது!
யாருப்பா நீ!
எங்க ஆபீஸ் ம்மா இவரு! ரமேஷுக்கும் பழக்கம்! ராமேஷைப் பார்க்க வந்திருக்கார்!
வேறு ஆளைப் பார்ப்பதுபோல் அவளைப் பார்த்தான் ரவி!
கண்ணில் தெரியும் மிரட்சியும், வார்த்தையில்
தயக்கமுமாக வேறு அகல்யா!
உள்ளே இருந்து வந்த ரமேஷின் முகத்திலும் ஏகத்துக்கு தயக்கம்!
அம்மா, நான் சாரோட போறேன்!
அகல்யா பக்கம் திரும்பாமல் வண்டியை எடுத்த ரமேஷை வித்தியாசமாகப் பார்த்தான் ரவி!
போகும் வழியில் ஆயிரம் சாரி சொன்ன ரமேஷ்,
“எங்க அம்மா கொஞ்சம் அந்தக்
காலத்து மனுஷி! அவளுக்கு இந்த மாத்தமெல்லாம் இன்னும் பழகலே!
தயவு செஞ்சு தப்பா எடுத்துக்காதேள் ரவி!”
அன்னைக்கு மதியம் ரெண்டுமணிநேரம் பர்மிசன் போட்டுவிட்டு, பக்கத்து மலை மேல் சந்திர
சூடேஸ்வரர் கோவிலில் (வாடா! அந்த ஈஸ்வரன் பார்க்காத தீட்டா!)
உட்கார்ந்து கொட்டித் தீர்த்தாள்!
அப்பா அம்மாவே உலகம்ன்னு வாழ்ந்து தொலைச்சவடா நான்!
எங்க வீட்டுல இந்தக் கொடுமையெல்லாம் இல்லை!
இன்பாக்ட் நான் வயசுக்கு வந்ததே முதலில் எங்க அப்பாவுக்குத்தான் தெரியும்!
டீச்சர் போன் பண்ணி சொன்னவுடனே, பள்ளிக்கூடத்துக்கு வந்து, என்னைக் கூட்டிக்கிட்டுப்போனது எங்க அப்பாதான்!
வீட்டுக்குப் போற வழியிலேயே, இது அசிங்கமும் இல்லை,
பயப்படற விஷயமும் இல்லைன்னு புரியும்படி சொல்லிக் கூட்டிக்கிட்டுப்போனார்!
ரெண்டுநாள் வீட்டுல ரெஸ்ட்! எப்பவும்போல அப்பா அம்மா கூடத்தான் படுக்கை!
ஊரிலிருந்து வந்த எங்க அத்தைக்காரிதான் அனாச்சாரம் அது இதுன்னு பொரிஞ்சு தள்ளுனா!
அப்பத் தெரியலடா இந்த ராட்சசிகிட்டத்தான் விதி என்னைக் கொண்டு தள்ளும்ன்னு!
எப்பவாவதுதான் எங்காத்துக்கு வரும் இது!
வந்தாலே எப்போதும் ஒரு புலம்பல்தான்! அப்பாவா இருந்தாலும் ஆம்பளையத் தொட்டுப் பேசக்கூடாது!
பொம்மனாட்டிப் பிள்ளைகள் சத்தமா சிரிக்கக்கூடாது! தெருப்பசங்களோட பேசக்கூடாது, ஆம்பள சட்டை போடக்கூடாது, அது கூடாது, இது கூடாதுன்னு ஆயிரம்
கூடாது!
காப்பி கூட எச்சில் பண்ணிக் குடிக்காதே, அது இதுன்னு எப்பத்தான் கிளம்புமோன்னு
இருக்கும். சின்ன வயசிலேயே குறைப்பட்ட தங்கச்சின்னு அப்பாவுக்கு ஒரு அனுதாபம்
இது மேல!
புருஷனை அம்மைக்கு வாரிக்கொடுத்துட்டு, பையனையும் பெண்ணையும் பரம்பரையாய் வந்த பத்துவேலி நிலத்தில் விவசாய குத்தகைப் பணத்தில்
வசதியாக வளர்த்து, உள்ளூரிலேயே பெண்ணை மணமுடித்துக்
கொடுத்தவள்! கோட்டை போல் வீடு அக்ரஹாரத்தில்!
பொம்பள ராஜ்ஜியம்! அக்ரஹாரத்துப் பெருமைக்கு, பூஜை புனஸ்காரம் சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற குறுகிய வட்டத்துக்குள் ராஜ்ய பரிபாலனம்!
பையனையும் கைப்பிடிக்குள் பொத்திப்பொத்தி வளர்ப்பு!
எங்காத்துல நேர் எதிர்!
ஒற்றைப் பெண் என்று ஓவர் செல்லம்!
ஒரு ராஜகுமாரி மாதிரி வளர்த்து, நான் என்ஜினீயரிங்
முடித்து,
இங்க வந்து வேலைக்கு சேர்ந்த ரெண்டாவது மாசம், இரக்கமே இல்லாம
ஒரு லாரில அடிபட்டு ரெண்டுபேரும் போய்ட்டாங்க!
இப்போ நாங்க இருக்கற வீடு எங்களோடது! கூடவே ஆசையாய் சேர்த்து வைத்த பணம் நகை!!
அத்தைக்காரி கரிசனத்தில் பொங்கி வழிஞ்சு, அடுத்த மாசமே - துஷ்டி நடந்த ஆத்துல ஒரு நல்லது நடக்கணும் அதும் பொம்மனாட்டிக்கு
துணை யாரும் இல்லாதபோது ன்ற சாக்குல இந்த அம்மாஞ்சியை என் தலைல கட்டிவைச்சிருச்சு!
கண்ணீரை சுண்டிவிட்டவளைப் பார்க்க, பரிதாபத்துக்குப் பதிலா சுருக்குன்னு கோபம்தான் வந்துச்சு ரவிக்கு!
“இது என்னடி எல்லாப் பொட்டச்சிங்களுக்கும் பொதுவான வியாதியா எதுக்கெடுத்தாலும்
புருஷனைக் குறை சொல்றது?
ரமேஷ் மாதிரி ஒரு நல்லவனையும் இப்படிப் பேச உனக்கே உறுத்தலையா?”
“போடா முட்டாள் கம்மனாட்டி! எல்லாருக்கும் நல்லவனா இருக்கறவனை
மாதிரி ஒரு மோசமானவன் இந்த உலகத்துலயே இருக்கமாட்டான்!
தயவு செஞ்சு நாளைக்கு நீயும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நியாயம்
புரியாத நல்லவன் வேஷம் போடாதே!”
“அம்மா சொன்னா எல்லாமே வேதவாக்காடா?
ஒரு நேப்கின்
வாங்கிட்டு வந்து தரத் துப்பில்லை!”
“அதெல்லாம் ஆம்படையான வாங்கிட்டுவரச் சொன்னா அசிங்கம்!”
கை காலெல்லாம் இத்துப்போறது, அனுசரணையா கிட்டவந்து
ஏன்னு கேட்கத் தோணாதா ஒரு ஆம்பிள்ளைக்கு?
தீண்டத் தகாதவாளுக்கு ஊத்தறமாதிரி எட்ட நின்னு காப்பி ஊத்தறா
மகராசி! அதை நாய் குடிக்குமாடா?
ஒரு மாசம் அம்மாவுக்கு உடம்பு முடியலைன்னு அவ வரலை!
சரி, மாமியார் வரலைன்னு சுவாதீனமா உள்ளே போனா, நாய் மாதிரி
வெளியே விரட்டுது இது!
அந்த அஞ்சு நாளும் கடைலதான் சாப்பாடு!
கடைல சமைக்கறவன் துஷ்டிக்குப் போய்ட்டுவந்து சமைச்சானா, சமையல்காரி வீட்டு
விலக்கோட காய் வெட்டினாளான்னு தெரியுமான்னு ஆத்திரத்தில் கத்திட்டேன்!
இத விடக்கொடுமை, ஒருநாள் வண்டியில
கொண்டு விடறப்ப கை பட்டுடுத்து!
ஆத்துக்குப் போனவுடனே தலையோட குளிச்சுட்டு வருது!
முண்டச்சி வளத்த பிள்ளைக்கு பரிஞ்சிண்டு வராதே!
ஆம்பளைங்களுக்கு
என்னடா தெரியும் எங்க பிரச்னை!
கோபத்தில் விருட்டென்று எழுந்தவளைக் கைபிடித்து இழுத்து உட்கார வைத்தான் ரவி!
ஸாரிடி! எனக்கு இந்தக் கோணம் புரிபடல!
ஒரு நிமிஷம் ஒன்னுமே சொல்லாம மொறைச்சவ, மெதுவா அவன் கைய எடுத்து தன் கைக்குள்ள வச்சுக்கிட்டு சொன்னா!
“கல்யாணம் பண்ணிக்கிட்டா, பொண்டாட்டிகிட்ட
நீயாவது மனுஷனா நடந்துக்க ரவி!
அவளுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு
தெரிஞ்சுக்க!
அதுபடி முழுக்க இல்லன்னாலும் முடிஞ்சவரைக்கும் நடந்துக்க!”
ரவிக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் அடுத்த பிழையைச் செய்தான்!
“விடுடி! ஒரு குழந்தை பெத்தா எல்லாம் சரியாகிடும்!”
தீவிழி விழித்து முறைத்தவள், கொஞ்சநேரம் தலை குனிந்து உட்கார்ந்திருந்தாள்.
மெதுவாகத் தலை நிமிர்ந்தபோது கண்கள் ஈரத்தில் பளபளத்தன!
ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவள், மெதுவாக அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்!
ரவி, எனக்கு ஏனோ, எந்த பொம்மனாட்டி
கூடவும் நெருங்கின ஸ்நேகம் இல்லை! ஏனோ என் அப்பாவுக்கு அப்புறம் உன்னை மட்டும்தான்
ஒரு சரியான சிநேகிதனா பார்க்க முடிஞ்சது.
எத்தனை கலாட்டா செய்தாலும், எச்சில் பார்வை
இல்லை உன்கிட்ட!
ஆம்பளைங்க பார்வை எந்த முட்டாள் பொம்பளைக்கும் புரிஞ்சுடும்!
இந்தக் கொஞ்சநாள் பழக்கத்துல உன் கண்ணு அலையலைங்கறது எனக்குத்
தெரியும்!
சிஸ்டர் சிஸ்டர்ன்னு பேசிக்கிட்டு, முந்தானை விலகறத
வெறிச்சுப் பார்க்கறவங்கதான் அத்தனை பசங்களும்!
உன்கிட்ட பொம்பளைய எந்த இச்சையும் இல்லாம சிநேகமா பார்க்கற மனசு
இருக்கு!
இத நான் வெறும் முகஸ்துதிக்கு சொல்லல!
உன்கிட்ட ஒரு சிநேகிதிகிட்ட பேசற சுதந்திரம் எனக்கு இருக்கு!
உன்னோட தொடுகையில விரசமோ வித்தியாசமோ இல்லை!
அதனாலயே உன்கிட்ட என்னால இத சொல்லமுடியுது!
எதுக்குடா இத்தனை பீடிகைன்னு பார்க்காத ரவி!
எங்களுக்கு கொழந்தை பிறக்கும்ன்னு எனக்கு நம்பிக்கை இல்லை!
வெறும் விசும்பல்!
ரவிக்கு என்ன கேட்பது என்றே தெரியவில்லை!
ஏதோ கேட்கவந்தவனை, உஷ் என்ற ஒற்றைச் சொல்லில்
அடக்கி, அவளே பேச ஆரம்பித்தாள்.
இதை உன்கிட்ட மட்டும்தான் என்னால் சொல்லமுடியும் ரவி!
எனக்கு அவன் குழந்தையைப் பெத்துக்க மனசே வரலை!
ஒரு பெண்ணைப்
பெற்று இவன் கண்காணிப்பில் வளர்க்கவோ, ஆண்பிள்ளை பெற்று
இவன்போல வளர்க்கவோ எனக்கு இஷ்டமில்லை!
எங்கே உண்டாயிடுமோ ன்ற பயத்துல கட்டை மாதிரி கிடப்பேன்.
அவனுக்கும் ரசனைகள் ஏதும் கிடையாது!
வெறும் பொலிமாடு!
அந்த ஒன்னைத் தவிர மத்தது எல்லாமே அசிங்கம்!
அதுவும் பிரஜாவிருத்திக்கு
மட்டும்தான்!
ஒன்னரை வருஷத்துல அவன் என்னை முழுசாப் பார்த்ததில்லை ரவி!
இதை நான் யாரிடம் சொல்ல!
ஒரு ஐந்து நிமிஷ எந்திர இயக்கத்துக்குப் பேர் கூடல் இல்லை ரவி!
நிழலைப் பார்த்தே கர்ப்பமாக நான் என்ன
ரிஷி பத்தினியா ரவி?
பொம்பளை நீ உருட்டித் திங்கற தயிர் சாதம் கிடையாது!
இதுக்கு பஸ் ஸ்டாண்டு பக்கம்
பத்துரூபாய்க்கு ஒதுங்கறவ போதாதா?
மொத ராத்திரியே எனக்கு எல்லாமே இத்துப் போச்சு ரவி!
கதவை சார்த்திய பத்தாவது நிமிஷம், “சீ அதெல்லாம்
அசிங்கம்” என்று சொன்ன புருஷன்தான் எனக்குன்னு தலையில எழுதியிருக்கான் அந்த ஆண்டவன்!
இதுல குழந்தையாவது இன்னொன்னாவது!
ரெண்டே நிமிஷம்!
“அதுக்குன்னு நீ ஒன்னும் பொண்டாட்டியைத் தின்னவனாட்டம் மூஞ்சிய
வெச்சுக்க வேணாம்! அதே மாதிரி என்னை பாவமாப் பார்த்தே, கடிச்சுக் கொன்னுடுவேன்
பார்த்துக்க! இதெல்லாம் சொல்றாளே, அப்ப நம்ம ஏதாவது நூல் விடலாம்ன்னு
எல்லா ஆம்பளைங்க மாதிரி நெனைச்சே, செருப்பு பிஞ்சுடும்!”
சொல்லிட்டு சிரிச்சவளை வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு பார்த்தான் ரவி!
பத்து நிமிஷம் கழித்து எழுந்தவள்,
தீட்டோட கோவிலுக்கு வந்ததே தப்பு! இதுல ஈஸ்வரனுக்கு இன்னைக்கு
இந்தக் கதையை வேற கேட்கணும்ன்னு தலையெழுத்து! பாவம்!
பரிகாரமா ஒரு பத்து ரூபாய் உண்டியல்ல போட்டுடு ரவி!
நான் ஏண்டி போடணும், உன் தப்புக்கு?
ம்ம்...?
ஏன்னா நீ என்
ப்ரெண்ட்! போட்டுட்டு வாடா மரியாதையா!
அதுக்கப்புறம் அவள் மேல் இன்னும் பரிவும் அன்பும் அதிகமானதோடு, விரசமில்லாத ஒரு அந்நியோன்யம்!
போனமாதம் ஒருநாள் அவங்க வீட்டு கேசட் ஷெல்பில் ரவி எதையோ நோண்டிக்கொண்டிருக்க, ரமேஷ் செஸ் காயின்ஸ் அடுக்கிக்கொண்டிருந்தான்.
N.C. வசந்த கோகிலம் கேசட் ஒன்று தட்டுப்பட, ஏன் ரமேஷ், அகல்யா டான்ஸ் ஆடுவாளோ?
ம், கல்யாணத்துக்கு முன்னாடி
ஆடுவாளாம்!
சுவாரஸ்யம் இல்லாமல் சொன்னான் ரமேஷ்!
கேட்டுக்கொண்டே வந்த அகல்யா, ஏன் ஆடிக்காட்டவா? என்று கேட்டவள்,
முந்தானையை இழுத்துச் சொருகிக்கொண்டு, கேசட்டை ஓடவிட்டாள்!
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி சகியே!
ஆடி முடிக்கும் வரை ரவியும் ரமேஷும் அசையவில்லை!
ரவிதான் கேட்டான் –
பிரமாதம்! இது கலாஷேத்ரா ஸ்டைல் இல்லையே, பந்தநல்லூரா?
சும்மா அலட்டாதடா, உனக்கு என்ன வித்தியாசம் தெரியும்? சொல்லு?
அரை மண்டி பந்தநல்லூர் பாணின்றது தெரியுமளவு எனக்கும் பரதம் புரியும்!
க்ரேட்டா! இது தஞ்சாவூர் பாணி!
அன்றைக்கு ரமேஷிடம் ஏதோ வித்தியாசம் தெரிந்ததுபோல் ரவி உணர்ந்தான்!
கொண்டுவந்து இறக்கிவிட்டவன் அதிகம் நிற்காமல் பறந்தான்!
மறுநாள் காலை பதில் கிடைத்தது அகல்யாவிடமிருந்து!
என்னடா, நேத்து நைட்டு
ஏதாவது சரோஜாதேவி புத்தகம் கொடுத்துவிட்டயா உன் பிரண்டுக்கு?
கொஞ்சம் ஜாஸ்தி விளையாடுச்சு?
போடி வெட்கம் கெட்டவளே என்று சந்தோஷமாகச் சிரித்தான் ரவி!
இதோ, இன்று காலை டேபிள் மேல் சட்டமாக உட்கார்ந்து, ரவி, உன்கிட்ட
ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும், கேண்டீனுக்கு வா ன்னு கூப்பிட்டவளை முறைத்தான் ரவி.
அம்மா தாயே, இப்படி டேபிள் மேல உட்காராதேன்னு எத்தனை தடவை சொல்றது?
உன் இடுப்பு எனக்கு பயங்கர டிஸ்ட்ராக்க்ஷன்!
மொதல்ல எழுந்திரு ன்னு சொன்னதுக்குத்தான் கடிக்காதடான்னு
சிணுங்கி எல்லோரையும் பார்க்கவைத்து குறுஞ்சிரிப்பு சிரித்துப் போனாள்.
கலிகாலம் என்று தலையில் அடித்துக்கொண்ட ஹெட்க்ளார்க் கிழத்தைப்
பார்த்து கண்ணடித்துவிட்டு அவள் பின்னால் எழுந்து போனான் ரவி!
கேண்டீனில் கடைசி டேபிளில் உட்கார்ந்திருந்தவள், கிண்ணத்திலிருந்த
சர்க்கரையை ஒரு ஸ்பூன் எடுத்து அவன் வாயில் போட்டவாறே சொன்னாள் - நான் பிள்ளையாண்டிருக்கேன்டா!
சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனான் ரவி!
ரமேஷுக்குத்
தெரியுமா?
கடங்காரா, முதலில் உனக்குத்தான்டா சொல்றேன்!
மறுநாள் மதியம் ஸ்வீட் பாக்கெட்டோடு வந்த ரமேஷ் முகத்தில் அவ்வளவு
வெட்கம்!
அப்பவும் அடங்கவில்லை அகல்யா - இனி கொஞ்சநாளைக்கு திண்ணையில
வச்சு சோறு போடமாட்டாங்க!
சேதி கேட்டுவந்த மாமியார், பெண்ணும்
உண்டாயிருக்கும் இந்த நேரத்தில் இது தேவையா என்று நொடிக்க, பிழியப்
பிழிய அழுதாள் ரவியிடம்.
அதுக்கும் குத்துக் கல்லாட்டம் உட்கார்ந்திருக்குடா இது! என்ன
ஜென்மமோ!
சமயத்தில், இந்த நாய்
கையால் கொள்ளிகூட வாங்காமல் போயிடலாம்ன்னு தோணுது ரவி!
நீமட்டும் இல்லன்னா எனக்கு சொல்லி அழக்கூட நாதி இல்லடா!
ஒன்பதாவது
மாசத்திலிருந்து வீட்டோட அந்தப் பொம்பள கிட்ட எப்படிக் குப்பை கொட்டப் போகிறேன்னு தெரியலடா!
கொஞ்சம்கூட பிள்ளையாண்டிருக்கும் சந்தோஷம் கூடப் படமுடியாத வாழ்க்கை!
என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாய்த் தலைகோதி ஆறுதல் சொல்வது
மட்டுமே ரவிக்கு முடியும்!
வெள்ளியில எனக்கொரு குங்குமச் சிமிழ் வாங்கிக்கொடு ரவி! வளைகாப்புக்கு
தாய்வீட்டு சீதனம்!
வளைகாப்புக்கு ஆபீஸில் அனைவரோடும் போய் ஒட்டமுடியாமல் நின்றுவிட்டு
வந்த ரவியை,
கோவிலுக்குக் கூட்டிப்போய் பிடிவாதமாய் வளையல் போட்டுவிடச் சொல்லி, காலில் விழுந்து
கட்டிக்கொண்டு அழுதாள் !
எல்லாம் சரியாகும் டி! கவலைப்படாதே என்று ஆறுதல் சொன்னாலும்
ரவிக்குள் ஏதோ தப்பாகப் பட்டுக்கொண்டே இருந்தது!
நல்லவேளையாக சுகப்பிரசவம்!
மூன்றாவது மாதம்தான் புண்ணியவாசம் என்று தகவல் சொல்ல ஸ்வீட்டோடு
வந்த ரமேஷ் சொல்ல, அவனோடே ஆஸ்பத்திரிக்குப் போய் குழந்தையை மடியில் வாங்கிக் கொஞ்சியதைக்
கண் விரியப் பார்த்தாள் அகல்யா!
பக்கத்தில் நின்ற மாமியார் கொஞ்சம் நகர்ந்ததும், எட்டி அவன்
கையைப் பிடித்த அகல்யா தேம்பித் தேம்பி அழுதாள் - தேங்க்ஸ் ரவி!!
சீ போடி! சீக்கிரம் ஆபீஸ் வந்து சேர் என்று சொல்லி, துளிர்த்த
கண்ணீரை மறைத்துக் கிளம்பினான் ரவி!
சரியாக பத்தாவதுநாள், சென்னை ஹெட்
ஆபீஸில், ஜீஎம் ஆக
இருந்த எம்டி மச்சினன் ஆபீஸ் பணத்தையெல்லாம் குதிரை வாலிலும், கோடம்பாக்கத்துக்
குமரிகள் முந்தானையிலும் கட்டித் தொலைத்த கணக்கை சரிபார்க்க உடனே வரச் சொல்லி அழைப்பு
ரவிக்கு!
வர எப்படியும் ஒருவாரம் ஆகும் என்பதால், ரமேஷைப்
பார்க்கும் சாக்கில் அகல்யா வீட்டுக்குப் போனான் ரவி!
அகல்யா முகத்தில் சுரத்தே இல்லை!
பஸ் ஸ்டேண்டுக்கு வலுக்கட்டாயமாக
வந்த ரமேஷ் அம்மாவுக்கும் இவளுக்கும் ஒத்தே போகல ரவி! என்ன செய்யறதுன்னு தெரியல என்று
முதல்முறையாகப் புலம்பினான்!
எல்லாம் சரியாகும் ரமேஷ் என்று மெதுவாக அவன் தோளை அணைத்துவிட்டு
பஸ் ஏறினான் ரவி!
ரெண்டாவது நாள் காலை ஆறு மணிக்கு, மாரிஸ் ஹோட்டல்
அறையில் அடித்த போனை எடுத்தால்,
மறுமுனையில் அகல்யா!
எதுவுமே சொல்லாமல் ஒரு நிமிடம் அழுகை சத்தம் மட்டும்.
இந்த ராட்சஸி என்னைக் கொல்லாமல் விடமாட்டாள் ரவி!
இந்தப் பெட்டைக்குப் பிள்ளை பெற்றதற்குக் கிணற்றில் குதித்திருக்கலாம்!
கவலைப் படாதே அகி, இன்னும் இரண்டே நாளில் நான் வந்துடுவேன்!
ரமேஷ் கிட்ட நான் பேசறேன்!
விடு ரவி! நீ மெல்ல வா!
எனக்கென்னவோ இன்னைக்கு உன்னோட பேசணும்போல தோணிச்சு! அதுதான்
பக்கத்து வீட்டில் வந்து பேசறேன்!
பை ரவி!
அதுதான் அகல்யாவிடம் கடைசியாகப் பேசியது!
ரமேஷ் ஆபீஸ் போனதும் கையில் குழந்தையோடு பத்து மணிக்கு கொளுத்திக்கொண்டு
செத்துப்போனாள்!
மறுநாள்தான் தகவல் தெரிந்தது ரவிக்கு!
ஹோசூருக்கே திரும்பப் போகாமல் வேலையை ராஜினாமா செய்துவிட்ட ரவி, இருபத்தைந்து வருடம் கழித்து
அகல்யாவின் கதையை இன்று எழுதுவான் என்று அப்போது நினைக்கவில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக