தங்கராசு!
காதுக்குள் குறுகுறுத்த
கண்ணீரைத் துடைக்கக்கூடத் தோன்றாமல் அப்படியே படுத்திருந்தான் தங்கராசு.
அவன் அழுதான்
என்பதை இந்த ஊரில் யாரும் நம்பமாட்டார்கள்!
ஏன், தங்கராசுக்கே அது நம்பமுடியாத அதிசயம்தான்!
பெத்த
அப்பன் செத்ததுக்கே, எண்ணி ரண்டு சொட்டு
- அதுவும் கொள்ளி வைக்கையில்!
ஊருக்குள் எத்தனை
பேரை அழவைத்திருக்கிறான் - எந்தக் கண்ணீரும் அவனைக் கரைத்ததில்லை!
இந்த இரண்டு நாளில்,
தனக்குள்ளே கரைந்து மருகிக்கொண்டிருந்தவன்,
இப்போது ஆத்தா அத்தனைமுறை
கதவைத் தட்டியும் திறக்காமல் தானே அறியாமல் கண்ணீரில் கரைந்துகொண்டிருக்கிறான்.
காரணம் - மைதிலி!
முதலில் தங்கராசு!
இன்றைக்கு கொங்கு
நாட்டின் சிறு நகரங்களின் ஒரு குறிப்பிட்ட சமூக இளைஞர்களின் மாதிரி பிரதி!
புல்லட் மோட்டார் சைக்கிளில் தங்கராசு விறைப்பாக உட்கார்ந்து வருகையில், அந்த வண்டி அவனுக்கே அளவெடுத்துச்
செய்ததுபோல் இருக்கும்!
ஈரோடு, பெருந்துறை ஏரியாவில் மொடமொடப்பான கதர் சட்டையோடு
வலம்வரும் எந்த இளைஞனை மடக்கித் தொழில் என்ன என்று கேட்டாலும் சொல்லும் பதில் - பைனான்ஸ்!
கந்து வட்டியின் நாகரீக
வடிவம்!
தாறுமாறாய் ஏறிப்போன
பூமியை விற்ற காசில், ஒவ்வொருவரும் குறைந்தது
நான்கு ஐந்து பைனான்ஸ் பார்ட்னர்!
பத்துப் பேரோ,இருபது பேரோ, சேரவேண்டியது, ஒரு பத்துக்குப் பத்து அறை இருந்தால் போதும்,
ஒரு பைனான்ஸ் ஆரம்பம்!
தலைக்கு ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ போட்டால் ஒரு பைனான்ஸ் ரெடி!
இப்படி ஒவ்வொருவரும்
சக்திக்கேற்ப பத்து பைனான்சில் கூட பார்ட்னராக இருப்பதுண்டு!
ஏதோ ஒரு பார்ட்னர்தான்
அதன் முதலாளி ஸ்தானத்தில்!
மாதம் ஒருமுறை பார்ட்னர் மீட்டிங்! லாப நஷ்டக்கணக்கு அலசி
முடித்ததும் தண்ணி, கறி விருந்து!
நிர்வகிப்பவரின் குணத்துக்கு ஏற்ப பைனான்சின் குணாதிசயங்கள் மாறும்.
சாதுவான பார்ட்னர் மேற்பார்வை எனில், ஒழுங்கான ஆட்களுக்கு,
தெளிவான பேப்பர்களுடன் - இதில் வட்டி கொஞ்சம் குறைவு. ரிஸ்கும்!
முரட்டு பார்ட்னர் மேற்பார்வை எனில், கொஞ்சம் முன்னபின்ன இருந்தால் கூட கடன் கிடைக்கும். வட்டி அதிகம்.
வசூல் கறாராக இருக்கும்! கெடுபிடி, அடிதடி என எல்லாம்!
தங்கராசு மேற்பார்வை பைனான்சில் முதலில் அவங்க அப்பாதான் பார்ட்னர்!
அவரே ஒரு முரட்டு ஆள்!
தங்கராசு ஒரே பையன்!
இந்த வட்டாரத்தில் இரண்டாவதாகப் பிறக்கும் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் பிறந்தவுடன்
"குளிர்ந்து போவது" அந்த ஜாதியில் வாடிக்கை!
பள்ளிக்கூடத்தில் தங்கராசை அதட்டிய வாத்திச்சியை வீடுபோய் சாதி சொல்லித் திட்டி
ரணகளம் செய்தவர் அவன் அப்பா!
கல்லூரி – “ஒத்தைப் பையனுக்கு படிப்பெதுக்கு, பைனான்ஸ், வாடகை வசூல் போதுமே நாலு
தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிட! மேலும் எப்படியும் இந்த சொத்துக்கு கட்டிக்கப்போறவ
ஒரு கிலோ நகையும், பொட்டிப்பணம் பத்துலட்சமும்
இல்லாமலா வரப்போறா?” என்ற ஆத்தா அங்கலாய்ப்பை
மீறி படிக்கப்போனதுக்கு காரணம், ஈரோட்டில் இருந்த ஏசி பார் வசதியும் சோக்காளிகளும்!
கல்லூரி காலத்திலேயே அடிதடி, கலாட்டாவுக்கு பஞ்சமில்லை!
லீவு நாட்களில் அப்பனோட பைனான்ஸ் பயிற்சி!
கொஞ்சநாளில் பெரியவர் மேல இருந்த பயத்தைவிட, கடன் வாங்கியவனெல்லாம் சின்னவரைப் பார்த்தால் நடுங்க ஆரம்பித்ததில் அப்பாருக்கு
அத்தனை சந்தோஷம்!
வயசு வித்தியாசம் எதுவும் கிடையாது
“வக்காளி, வாங்கும்போது ஒனத்தியா
வாங்குனல்ல, குடுக்கும்போது கசக்குதா”
என்று ஆரம்பிக்கும் வசவு,
அவன் வீட்டுப் பெண்களில்தான் போய் முடியும் பெரும்பாலும்!
தங்கராசு வசூலுக்குப் போனால், டூவீலரோ, மாடு கண்ணோ, ஏதோ ஒன்னு ஈடு இல்லாமல்
வந்ததில்லை!
அழுகை, கெஞ்சல் எல்லாம் இன்னும்
கொஞ்சம் உசுப்பேத்துமே தவிர, ஒருதுளி இரக்கம் இருக்காது!
தண்ணி மிதப்பில் கடன் வாங்கினவனை கூசாமல் கை நீடும்போதுகூட அவன் பேசும் வார்த்தைகளுக்கு
பயந்து வீட்டுப் பெண்கள் வெளியே வரவே வராது!
அப்பனும் மகனும் ஒரே பாரில் உட்கார்ந்து குடிப்பதும், ஒரே சிகரெட்டை இழுப்பதும் வாடிக்கை!
அந்த நேரங்களில் அப்பன் முகத்தில் பெருமிதம் கூத்தாடும்.
“அவன் சிங்கக்குட்டிடா,
அப்படித்தான் இருப்பான்!”
ரெண்டு வருஷம் முன்னால் குடல் வெந்து அப்பன் போனதும், மொத்த ராஜ்ஜியமும் தங்கராசு கைக்கு!
மத்த பைனான்ஸ்காரங்க கழிச்சுக்கட்டும் ஆட்களை தங்கராசு கிட்ட அனுப்புவாங்க.
“அங்க போ, அவன்தான் உனக்கு ஏத்த ஆளு.
மூடிக்கிட்டு பைசா சுத்தமா செட்டில் பண்ணுவே!” அன்று ஆசீர்வதித்து அனுப்புவது உண்டு!
அந்தமாதிரி ஆட்களுக்கு,
கொடுத்து, மொத்தமாய் வசூலிப்பதில்
தங்கராசுக்கும் ஏகப்பெருமை!
“எப்போதும், தள்ளுபடி இல்லாம கணக்குக்
காட்டறது தங்கராசுதான்டா” - இது எல்லா பைனான்ஸ் மீட்டிங்கிலும் தவறாது கேட்கும் வசனம்!
போதை தலைக்கேற, இருபத்தைந்து வயதில், மீசையை முறுக்கிக்கொண்டு
ஒரு ஐம்பது வயது தோரணையோடு உட்கார்ந்திருப்பான்!
ஒரே ஜாதிக்காரன் என்று உள்ளூர் இன்ஸ்பெக்டர் முதல், டிஎஸ்பி வரையும், எல்லாக் கட்சி வட்டம், மாவட்டம் என்று அரசியல்வாதிகளும்
எந்த வில்லங்கத்தையும் கண்டுகொள்வதில்லை!
மாமன் மச்சான், பங்காளி என்று அவர்களுக்கும் உறவுமுறை வேறு! மேலும் அவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு
பைனான்சில் இவனோடு பார்ட்னர் என்பதும் ஒரு காரணம்!
வாரக் கடைசிகள், ஜம்பு கடையில் பன்றி வறுவலும், கேஸ் கேஸாய் பீரும், பிராந்தியும் விஸ்கியுமாக
நடக்கும் பார்ட்டியில் கடைசியில் வெளியே வருவது தங்கராசுதான்!
எந்நேரமும், போதையும் கோபமுமாக சிவந்தே
கிடக்கும் கண்களில் ஓரளவுக்கு சாந்தம் தெரிவது, மாமன் வீட்டுத் தோட்டத்துக்கு வருகையில் மட்டும்!
காரணம்,
மைதிலி!
துலக்கி வைத்த பித்தளை விளக்குப்போல களையான அழகி!
ஒருமுறை பார்த்து, போதும் என்று திரும்பாமல்
போனவர்கள் அந்த ஊரில் குறைவு!
தங்கராசுவின் அம்மாவின் ஒன்று விட்ட அண்ணன் கதிரேசன்! அவரது ஒரே மகள் மைதிலி!
பதினைந்து ஏக்கர் தோட்டத்துக்குள்ளேயே வீடு.
கதிரேசன் அமைதியான, ஆனால் அழுத்தமான ஆள்!
அநேகமாக ஊருக்குள் எல்லா பைனான்ஸ், ரியல் எஸ்டேட் கம்பெனிகளிலும் பார்ட்னர்!
அநேகமாக ஊருக்குள் எல்லா பைனான்ஸ், ரியல் எஸ்டேட் கம்பெனிகளிலும் பார்ட்னர்!
லோக்கல் ஜாதி சங்கத் தலைவர்!
மனைவி, மகளைவிட ஜாதி மேல் அதிக
பற்று!
தங்கராசு கையில் மகளைப் பிடித்துக் கொடுத்துவிட்டால், இரண்டு சொத்தும் ஒன்றாகிவிடும். மகள் நிம்மதியாக இருப்பாள் என்ற கணக்கு!
குடி, அடிதடி எல்லாம் இல்லாதவன்
என் இனத்தானே இல்லை என்பது அவர் கட்சி! என் ஜாதிக்கு அழகே அந்த முரட்டுத்தனம்தான்டா
என்று கர்வம் பொங்க மருமகனைப் பார்ப்பார்!
மகள் ஆசைப்பட்டாளே என்று கொங்கு என்ஜினீயரிங் காலேஜில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங்
படிக்க வைத்தாலும், அவள் தங்கராசுக்கு என்பது
இரண்டு குடும்பமும் முன்பே முடிவு செய்த விஷயம்!
இவ்வளவு சிக்கல் இல்லாத கதையில் எதிர்பாராமல் வந்து முளைத்தது காதல்!
அதற்கும் காரணி - தங்கராசு!
ஒருநாள் மிதமிஞ்சிய போதையில் வழக்கம்போல் தோட்டத்துக்கு வந்தவன், அப்போதுதான் குளித்து முடித்துப்
படிக்க உட்கார்ந்த மைதிலியின் அழகும், சிந்தால் வாசமும் கிறங்கடிக்க, அத்தையும் மாமாவும் இல்லாத தனிமை தந்த தைரியத்தில், இழுத்து அணைத்து முத்தம் கொடுத்துவிட்டான்!
எப்படியும் எனக்கு சொந்தமாகப்போகிறவள்தானே என்ற நினைப்பு தந்த மிதப்பில் அவன் தொட்ட
இடம் தப்பு!
அன்றுவரை அவன் மீது எந்த விருப்போ, வெறுப்போ இல்லாத மைதிலிக்கு, அன்று அவன் அணைப்பும்,
மதுவின் குமட்டும் நெடியும் தந்த அருவெறுப்பு, இந்தக் குடிகாரனோடா நம் காலம் முழுவதும் என்று ஒரு வெறுப்பை விதைத்துவிட்டது!
அம்மாவிடம் சொன்னபோதும், உன்னைக் கட்டிக்கப்போறவன்தானே என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டாள்.
அன்றைக்கு கல்லூரித் தோழிகளிடம் சொல்லிப் புலம்பியபோது அவர்கள் குடிக்காத பையன்
வேணும்ன்னா நம்ம குமார்தான் உனக்கு லாயக்கு என்று கிண்டலாக சொன்னது அந்த மனநிலையில்
அவள் மனதில் பதிந்து போனது.
குமார், அதே ஊரைச் சேர்ந்த வேறு
ஜாதி இளைஞன்!
கல்லூரி வகுப்புத் தோழன்!
தோழிகள் சொன்ன நேரம்,
தேவதைகள் வானிலிருந்து அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதித்திருக்க வேண்டும்.
அதுவரை கண்டும் காணாதிருந்த நட்பு, காதலாக உருவெடுத்தது!
குமாருக்கு தங்கராசு பற்றியும், மைதிலி அப்பாவின் ஜாதி வெறி பற்றியும் நன்றாகத் தெரிந்தும், மைதிலி வழிய வந்து கேட்ட
காதலை மறுக்க மனம் வரவில்லை!
அரசால் புரசலாக தங்கராசுவுக்குத் தகவல் வந்தபோதும், அவன் நம்பவில்லை!
நம்ம மைது அப்படிப்பட்ட பொண்ணில்லடா என்று ஒரே வார்த்தையில் மறுத்துவிட்டான்.
நம்ம மைது அப்படிப்பட்ட பொண்ணில்லடா என்று ஒரே வார்த்தையில் மறுத்துவிட்டான்.
இதோ, நேற்று முன்தினம் கல்லூரிக்குப்போன
மைதிலி வீட்டுக்கு வரவில்லை! கூடவே அந்தத் துடைநடுங்கி உதவாக்கரை குமாரையும் காணவில்லை!
கதிரேசனும், தங்கராசுவும், நாலாபக்கமும் ஆள் அனுப்பித்
தேடிக்கொண்டிருக்க,
லோக்கல் இன்ஸ்பெக்டர் தன் பங்குக்கு குமாரின் நண்பர்களை தங்கராசு தோப்பில் வைத்து
உரித்தெடுத்தும் ஒன்றும் தகவல் பெயரவில்லை!
கடைசியில், தங்கராசு, தன் நம்பிக்கைக்குரிய அடியாள்
மணிகண்டனோடு அவர்களை விசாரிக்க ஆரம்பித்தான்!
“கொன்னுடாத பங்காளி,
அப்படி கொன்னா, இங்க பொதைக்காத! சத்தியமங்கலம்
காட்டில் வீசி எறிஞ்சுடு” என்ற அறிவுரையோடு, இன்ஸ்பெக்டர் விலகிக்கொள்ள, தங்கராசு நிதானமாகச் சொன்னான்.
“மணி, இவனுக இப்படி கேட்டா சொல்லமாட்டானுக.
அவனுக ஆத்தா, அக்கா தங்கச்சி எல்லாம்
அள்ளிக்கிட்டுவா! அவளுகள உரிச்சா, இந்த நாய் எல்லாம் கக்கீரும்!”
உடனடி பலன்!
அவர்கள் பதுங்கியிருக்கும் இடம் உடனே தெரிந்தது.
அவர்களை இன்னும் இரண்டுநாள், வேலை முடியும்வரை அங்கேயே அடைத்துவைக்கச் சொல்லிவிட்டு, மணிகண்டனோடு வீட்டுக்கு
வந்தான்.
பீரோவைத் திறந்து லைசென்ஸ் வாங்கி வைத்திருக்கும் துப்பாக்கியை அவன் கையில் கொடுத்தவன்,
ஆயிரம் ரூபாய்க் கட்டு பத்தை எடுத்து அவன் கையில் கொடுத்தான்.
“நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும்.
இது உன்னை, என்னைத் தவிர, மாமா உட்பட யாருக்கும்
தெரியக்கூடாது!
சித்தோடு போய் வண்டியை மாத்திக்க, சங்ககிரியில அவங்களைத் தூக்கியவுடன், எங்கேயும் நிற்காமல் கோவா வழியா மும்பை போயிடு!
அங்கே என் ப்ரெண்ட் சங்கர் இருக்கான்.
அவனுக்கு எல்லாம் சொல்லிட்டேன்!
அவன் எல்லாம் செய்துவிடுவான். அதுவரைக்கும் எனக்கும் போன் செய்யவேண்டாம்!
அவங்க போன் ரெண்டையும்,
பிடுங்கி உடனே உடைச்சுப் போட்டுடு!
மாமா, போலீஸ் மூலமா ட்ரை பண்ணிக்கிட்டிருக்கார்!
அவர் என்ன இருந்தாலும் இதுக்கு ஒத்துக்க மாட்டார். அதனால அவர் கண்டுபிடிக்க எந்த வாய்ப்பும்
தரவேண்டாம்.
என் மைதிலி, அந்த நாயோடு சோத்துக்குப்
பிச்சை எடுக்க வேண்டாம்.
வேலையை முடித்தவுடன் என்னைக்கூப்பிடு!
சொன்னவன் இன்னொரு ரெண்டு லட்சத்தை அவன் கையில் கொடுத்தான்!
இது செலவுக்கு!
போ!
போ!
“ஐயா, எதுக்கும் ஒருதடவை நல்லா
யோசிச்சு முடிவு செய்யுங்க,
நம்ம மைதிலி அம்மா....” என்று ஆரம்பித்த மணிகண்டனை ஒரு உறுமலில் அடக்கி அனுப்பினான்.
இதோ, அவன் போயும் ரெண்டு நாள்
ஆகிடுச்சு, எந்த நிமிஷமும் போன் வரும்!
அப்போதுதான் தங்கராசுக்கு உரைத்தது! தாய்ப்பாலுக்கு அப்புறம் அதிகம் குடித்த சாராயத்தை
ரெண்டுநாளா தொடவே இல்லை என்பது!
ஏனோ, மைதிலி இல்லாத உலகில், எதுவுமே பிடிக்கவில்லை!
போன் அடிக்க, எடுத்தால், மணிகண்டன்!
ஏனோ, மைதிலி இல்லாத உலகில், எதுவுமே பிடிக்கவில்லை!
போன் அடிக்க, எடுத்தால், மணிகண்டன்!
ஐயா, நீங்க சொன்னபடி
எல்லாம் நடந்தது.
இப்போதான் சங்கர் சாரைப் பார்த்தோம், அவர் எல்லா ஏற்பாடும் பார்த்துக்கொள்வதாய் சொல்லிட்டார்!
அந்தக் குமார் நாயி,
ரெண்டுநாளா ஒரே அழுகை!
உங்க பொண்ணை நீங்க கொன்னாலும் சரி, என்னை விட்டுடுங்க!
நான்
எங்கேயோ போய் பொழச்சுக்கறேன்! என்மேல எந்தத் தப்பும் இல்லைன்னு!
ஐயா, இப்போவும் ஒன்னும் லேட்டில்லை
நான் அவனைப் பத்தி விட்டுட்டு, அம்மாவைக் கூட்டிக்கிட்டு வந்துரட்டுமா? கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்கையா!
இல்லை மணி! நான் சொன்னதை செஞ்சுட்டு வா!
அதில் எந்த மாறுதலும் வேண்டாம்!
சரிங்கையா
உங்க இஷ்டம்!
நீங்க சொன்னதை இப்போத்தான் செய்யப்போறேன்!
போனை வைத்த தங்கராசுக்குள், அன்று நடந்தது படமாக ஓடியது!
பணத்தை எடுத்துகொடுத்த தங்கராசு சொன்னது,
மணி, மாமா கண்ணுல அவங்க பட்டா
ஒரு நிமிஷம் கூட உயிரோடு விடமாட்டார்!
என் மைதிலி எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும்.
அந்தக் கையாலாகாத நாய் அவளை எப்படிக் காப்பாற்றும்?
என் நண்பன் சங்கரிடம் சொல்லியிருக்கிறேன்.
அவங்களுக்கு மும்பைலயே நல்ல வேலை ஏற்பாடு செஞ்சு கொடுத்திருவான்.
அதுவரைக்கும் செலவுக்கும், அவசரத் தேவைக்கும் இந்தப் பத்து லட்சம்
அவங்களுக்கு உதவட்டும்.
எத்தனை வருசம் ஆனாலும்,
இங்க எல்லாக் கோபமும் அடங்கி, எல்லாம் சரியாகற வரைக்கும் அவங்க இங்க
யார் கூடவும் பேசக்கூடாது! ஊர் பக்கம் வரவும் கூடாதுன்னு சொல்லிட்டு, அவங்கள சங்கர் பொறுப்புல
விட்டுட்டு நீ வந்து சேர்.
இந்த ஊரையும், மாமா, அத்தை, ஆத்தாவைப் பொருத்தவரை, அவங்க கண்டுபிடிக்கமுடியாம, காணாம போனதாகவே இருக்கட்டும்!
ஒரு மணிநேரம் கழித்து மறுபடி போன் அடித்தது!
மணிகண்டன்தான்!
"ஐயா, மைதிலி அம்மா உங்ககிட்ட
பேசணுமாம்"........
No comments:
Post a comment