என்னைப்போல் ஒருவன்!
“ஐயம் விக்னேஷ்!
நீங்க SREC alumni மீட்டிங்க்குத்தானே வந்திருக்கீங்க? “
குடும்பத்தோட கோத்தகிரி போகும் வழியில் மேட்டுப்பாளையத்தில்
இட்லியைக் கையால் எடுத்து சாப்பிடலாமா, இல்ல ஸ்பூன்லயான்னு தீவிரமா யோசிச்சுக்கிட்டிருந்த என் முன்னால்
கை நீட்டிய முப்பதுகளில் இருந்த அரை டிராயர் மாமா என்னை ஆச்சரியப் படுத்தவில்லை.
இந்த மிஸ்டேக்கன்
ஐடென்டிடி குழப்பம் என்னை முப்பது வருடங்களுக்கு மேல் துரத்தும் விஷயம்தான்!
கூட உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த
மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அப்போதுதான் நான் சொல்லும் கதைகள் உண்மையோ என்று தோன்ற
ஆரம்பித்திருக்கும்!
“இல்லை மிஸ்டர் விக்னேஷ். சாரி!”
“சாரி சார், எங்க காலேஜ்ல ஒருத்தர் உங்கள மாதிரியே இருந்தார்” ன்னு சொல்லி அந்த ஆள் விலகியதும்,
என் மகளின் திருவாய்மொழி,
" பரவால்ல நைனா, உன்னை ஏதோ
ஒரு ஏங்கில்ள பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்குது போல!”
இதுக்குத்தான் நான்
உருகி உருகி தவமிருந்தேன், வரம் அப்படி இப்படின்னு
செண்டிமெண்ட் கதை எழுதிக்கிட்டிருக்கேன்! என்னை .... வேண்டாம் எதில் அடிக்கவேண்டும்
என்பது என் மனைவிக்குத் தெரியும்!
மேலும் இப்போ பிரச்னை
அது அல்ல!
முப்பது வருடங்களுக்கு முன்னால்,
மௌண்ட் ரோட்டில் முதல்முதலாக ஆரம்பித்தது
இந்த விளையாட்டு!
CA ன்ற புதைகுழிக்குள் விழுந்த
முதல் வருஷம்!
அலங்கார் தியேட்டர் வாசலில் ஏதோ ஒரு (வசந்த?) பவன்!
அதில் சப்பாத்தி சைட் டிஷ் எல்லாம் நல்லாருக்கும்! மதியம் லஞ்சுக்கு ஒரு
டஜன் சுருட்டி உள்ளே தள்ளிட்டு, குறைக்கு ரெண்டு வாழைப்பழமும் சாப்பிட்டுவிட்டு, சென்னை வெயிலில் ஆபீசுக்கு நடக்கும்போது ஒருத்தர் வழிமறித்தார்!
“என்ன சார் கண்டுக்காம போறீங்க? நல்லா இருக்கீங்களா? என்ன இந்தப்பக்கம்? இன்னும் அதே டிபார்ட்மெண்ட்தானே?”
நிறுத்தாமல் கேள்வி மழை!
சரி, நமக்கும் கொஞ்சம் பொழுது
போகட்டும்ன்னு, சாரிங்க, உங்கள கவனிக்கல, நல்லா இருக்கீங்களா ன்னு
பொதுவா ஒரு பிட்டைப் போட்டேன்!
எனக்கென்ன சார் உங்க தயவுல நல்லா இருக்கேன்னு கையைப் பிடிச்சு இழுத்துக்கிட்டுப்போய்
ஆவின்ல ஒரு ஐஸ் கிரீம், பாதாம் பால்ன்னு தொண்டை
வரைக்கும் நிரப்பி அனுப்பினார்!
அதுக்கப்புறம் அடிக்கடி கண்ணில் பட்டு, புஹாரி பிரியாணி, சிக்கன் வறுவல்ன்னு ஒரே
உபய மழை!
ஒருநாள் லலிதா ஒரு நியாயமான கேள்வியைக் கேட்டாள்!
“ஏண்டா, ஒருநாள் அவன் நினைக்கற
ஆள் நீ இல்லைன்னு தெரிஞ்சா, குமுறி எடுத்தற மாட்டானா? ஒசித் தீனிக்கு ஆசைப்பட்டு மாட்டிக்காதடா!”
நியாயம்தான்!
அதுவரைக்கும் நான் வாங்கித் தின்னது
ஒரு குத்து மதிப்பா கணக்குப் பார்த்தாலே ஒரு மாசம் முழுக்க சாப்பிடாம கடனைக் கட்டவேண்டி
வரும்ன்னு புரிஞ்சது!
எனக்கு பயம் எதுவும் இல்லை. இருந்தாலும் ஒரு சேஃப்டிக்கு அதுக்கப்புறம் சாப்பாட்டுக்கடையை ஆனந்த விகடன் ஆஃபீஸ் பக்கத்து கையேந்தி பவனுக்கு மாத்திக்கிட்டுப்
போய்ட்டேன்!
அதுக்கப்புறம் ஒருநாள் கோவை ரயில் நிலையத்திலிருந்து வெளியே பராக்குப் பார்த்துக்கிட்டே
வர்றேன், ஒரு டிப்டாப் ஆசாமி வழிமறிச்சு, என்ன சார் நீங்க நடந்து
வர்றீங்க? ன்னு ஒரே ஆச்சர்ய அதிர்ச்சி!
சித்தாபுதுர்ல இறக்கிவிடும் வரைக்கும் அவ்வளவு மரியாதையான உடல் மொழி!
கடைசி வரைக்கும் நான் ட்ரைன், பஸ் இதிலெல்லாம் பயணம் செய்வது ராகுல் காந்தி ஆட்டோ ஓட்டுவதைப் போல ஒரு நம்பமுடியாத
பிரமிப்பு அந்த மனிதரிடம்!
நூறு முறை கேட்டிருப்பார்,
“சார், நீங்க வேணும்னா காரை எடுத்துட்டுப்போங்க, நாளைக்கு டிரைவர்கிட்ட
கொடுத்துவிட்டுருங்க!”
கடைசி வரைக்கும் மனசே இல்லாமல்தான் போனார்!
இந்த லிப்ட் கொடுத்த ஆள்மாதிரி லோக்கல்
அம்பானிங்க யாராவது பொண்ணு கொடுத்து வாழ்க்கையிலும் லிப்ட் கொடுப்பாங்கன்னு ஒரு வாரம்
ரேஸ்கோர்ஸ் பக்கம் சுத்திப் பார்த்தேன்!
ஒரு வாட்ச்மேன் சந்தேகப்பட்டு நாயை
அவிழ்த்து விட்டதுதான் மிச்சம்!
நமக்கு வாய்ச்சது மாமன் மகள் அருக்காணிதான்!
இதுபோக பெருந்துறையில் ஒரு ஹோட்டல், ஒரு மெடிக்கல் ஷாப்காரர்கள் இன்றுவரை காட்டும் ஓவர் மரியாதை
- இது எல்லாம் லோக்கல்!
நம்மள மாதிரி ஒருத்தன் எவனோ செம்மையா வாழ்ந்துக்கிட்டு இருக்கான் - அதில் எனக்கு
ஒரு சந்தேகமும் இல்லை!
ஒருமுறை ஹைதராபாத் ஏர்போர்ட்லிருந்து வெளியே வருகிறேன், ஒரு டாக்ஸி டிரைவர் ஓடிவந்து
பெட்டியைப் பிடுங்கிக்கொண்டு
“பாக உன்னாறா சாரு?”
ன்னு இழுத்துப்போய் வண்டிக்குள் தள்ளி லூலுன்னு ஒரே தெலுங்குலு!
ன்னு இழுத்துப்போய் வண்டிக்குள் தள்ளி லூலுன்னு ஒரே தெலுங்குலு!
எனக்குத் தெலுங்கு,
மராட்டி, ஜெர்மன் எல்லா மொழியும் ஒண்ணுதான்! சுத்தமாத் தெரியாது!
என்ன நடக்குதுன்னு புரியறதுக்குள்ளே அவர் கொண்டுபோய் நிறுத்தின ஹோட்டலில் தங்க
என் சொத்தை விற்றாலும் போதாது!
காசும் வாங்காமல், காலில் விழாத குறையாக ஒரு
பெரிய சல்யூட் அடிச்சுட்டு அந்த டிரைவர் ஓடிப்போனதும், வெளிய வந்து ஒரு ஆட்டோ புடிச்சு, நம்ம ரேஞ்சுக்கு ஒரு லாட்ஜுக்குப் போகும்போதுதான் எனக்கு அந்த முதல் சந்தேகம் வந்தது!
நம்ம நைனா மாசத்துல பாதி நாள் வெளியூர், வெளிநாடு போறவர், நிஜமாவே வேலையாத்தான் போனாரா, இல்லை இதே வேலையா
போனாரான்னு!
போதாக்குறைக்கு தலைவர் கலைஞர் அபிமானி
வேறு!
கருப்பா இருந்தாலும்,
நம்மள மாதிரி இல்லாம ஆறடி உயர அழகன்! டென்னிஸ், புட்பால் ன்னு விளையாட்டு வீரர் கூட!
(எனக்குத் தெரிஞ்ச விளையாட்டு - வேண்டாம் விடுங்க!)
இருபது வருஷம் முன்னாடி அவர் அடிக்கடி சித்ரதுர்க்கா போனது வேறு சம்பந்தமே இல்லாமல்
நியாபகம் வந்து தொலைத்தது!
சரி, சுந்தரத் தெலுங்குல ஒரு
சித்தி இருந்தா வேண்டாம்ன்னா சொல்லப்போறோம்?
என்ன, கொஞ்சம் சொத்தோட இருந்தா
பெட்டர்!
விப்ரோ உபயத்துல ஒரு ஜனவரி ஒன்னாம்தேதி மாலத்தீவில் ஒருவாரம்!
AGM என்கின்ற ஹோதாவில் தனி
காட்டேஜ், தனி பேக் வாட்டர் மிதவையில்
படுத்துக்கொண்டு,.....
கருப்புக்காபி (த்தூன்னு துப்பாதீங்க- நம்ம குடி எல்லாம் அது மட்டும்தான்) குடிக்க போரடிச்சு, மத்த பசங்க என்ன பண்றாங்கன்னு பார்க்க ரெஸ்டாரன்ட் வந்தா,
கருப்புக்காபி (த்தூன்னு துப்பாதீங்க- நம்ம குடி எல்லாம் அது மட்டும்தான்) குடிக்க போரடிச்சு, மத்த பசங்க என்ன பண்றாங்கன்னு பார்க்க ரெஸ்டாரன்ட் வந்தா,
ஒரு பாகிஸ்தானி (!?) ஓடிவந்து மூச்சு முட்டக்
கட்டிப்பிடித்து,
“Happy New Year! Long time it was!”
அடப்பாவி! பாகிஸ்தான் சித்தி வேறையா????
அங்கிருந்து மத்தவங்க சிங்கப்பூர் போலாம்ன்னு சொன்னப்ப பிடிவாதமா போகாம ஊருக்கே
வந்துட்டேன்!
(அப்பா அடிக்கடி சிங்கப்பூர் மலேசியா போவார்!)
அங்க எவனாவது சப்ப மூக்குக்காரன் வந்து கட்டிப்பிடிக்கப் போறான்!
சப்ப மூக்கு சித்தி எனக்கு வேண்டாம்
எவ்வளவு பணக்காரியா இருந்தாலும்!!
போனவாரம் திருப்பூர்ல பெட்ரோல் பங்க்ல “சார், நீங்களா”ன்னு ஒருத்தன் சல்யூட் அடிச்சப்ப
சந்தோஷமா இருந்தாலும் கொஞ்சம் வயத்தக் கலக்குச்சு!
என்னைப்போல இருக்குற மகராசன் யாரா இருந்தாலும் நல்லா இருக்கட்டும்!
ஏதாவது அவனைப் போட்டுத் தள்ளற கும்பல் இருந்தா என்ன விட்டுடுங்க சாமி!
நான் இங்க ட்விட்டர்ல எதையாவது கிறுக்கிக்கிட்டு ஏமாந்த சிலபேருக்கு
CC போட்டு மிரட்டிப்
படிக்கவைச்சு பொழப்ப ஒட்டிக்கிட்டிருக்கிற சாதாரண அப்பாவி!
ஒரு நீண்ட பின்குறிப்பு!
1. எத்தனை நாடு சுத்தி வந்தாலும்
ஒரு கெட்டபழக்கமும் இல்லாமல் இருந்து, இந்த ஐம்பது வயசிலும் நான் என்ன நல்லது செஞ்சாலும் சுப்பிரமணியம் பையன்தானே என்றும், சின்ன தப்பு செஞ்சாலும்
சுப்பிரமணியத்தோட பையனா இப்படின்னும் சொல்ற வயித்தெரிச்சல் காரணமாத்தான் வாத்தியாரைப்
பற்றி இப்படி ஒரு அபாண்டத்தை கிளப்பிவிடுகிறேன் என்பதைப் புரிந்த அறிவாளிகள் இதைப்
படித்ததை மறந்துவிடுங்கள்!
2. எவனையோ நினைத்துக்கொண்டு
சாதாரணமாய் என்னை அடையாளம் காண்பவர்கள் மத்தியில், அப்பார்ட்மெண்ட்டில் என் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடிவந்து, தினமும் பால் வாங்கப் போகையில்
தவறாமல் விஷ் பண்ணிய புண்ணியவான் -
என் கல்லூரி வகுப்புத் தோழன் மோகன்,
என்னை ஒரு முழு வருடம்
கழித்து அடையாளம் கண்டுபிடித்தது - IRONY!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக