புதன், 28 அக்டோபர், 2015

முதல் நாடக முயற்சி - ஊர்மிளையின் சாபம்!

ஊர்மிளையின் சாபம்!திரை விலகும்போது, மங்கிய மாலை

இடம்:

அயோத்தி மாநகரத்தின் பறந்து விரிந்த அந்தப்புரம். தசரதனின் ஆயிரம் மனைவியரும் மகிழ்ந்து குலாவிய மாடங்கள். 
இன்று சக்கரவர்த்தித் திருமகன் ராமனும் சகோதரர்களும் வாசம் செய்யும் இடம்.

காலம்:

தேசாந்திரம் போயிருக்கும் அசுவம் வந்து சேரக் காத்திருக்கும் காலம்!

நேரம்:

ஒரு இனிய மாலை வேளை - இளைய திலகம் இலக்குவன் அந்தப்புரம்!


லட்சுமணன்: அடம் பிடிக்காமல் கிளம்பு ஊர்மிளா,நகர்வலத்தில் இன்று அனைவரும் பங்கேற்கவேண்டும் என்பது அண்ணனின் ஆணை!

ஊர்மிளா: உங்கள் "அனைவரும்" என்பதில் நானும் அடக்கம் என்பதே இப்போதுதான் உங்களுக்கு உறைக்கிறதா லக்குமனரே?

பதினான்கு நெடிய ஆண்டுகள் என் நினைவாவது உங்களுக்கு வந்ததுண்டா சுமித்திரை மைந்தரே?

லட்சுமணன்: ஊர்மிளா, அது என் தார்மீகக் கடமை அதை விமர்சிக்கும் உரிமை உனக்கு வழங்கப்படவில்லை!

ஊர்மிளா  நல்லது இளையவரே, இன்று உம்மோடு ஊர்வலம் வர எனக்குச் சம்மதம் இல்லை!

லட்சுமணன்: உன்னை பொறுமையின் சிகரம் என்று அகிலமே கொண்டாடுகிறது ஊர்மிளா, இப்போது உன் இயல்புக்கு மாறான இந்தப் பிடிவாதத்துக்கு என்ன காரணம்உன் விளக்கங்கள் எனக்குத் தேவை இல்லை - இப்போது நீ கிளம்பவேண்டியது உன் கணவனின் கட்டளை!

ஊர்மிளாமனைவியிடம் குரலை உயர்த்துவது நல்ல ஆண்மகனுக்கு  அழகில்லை இளையவரே!

தாளிடப்படாத கதவைத் தள்ளித் திறந்துகொண்டு ராமனின் பிரவேசம்! 

உள்ளே நுழைந்துகொண்டே,

ராமன்: என்ன இங்கு சத்தம் இலக்குமணா? இன்னும் நீ கிளம்பவில்லையா?

ஊர்மிளாவாருங்கள் சக்கரவர்த்தியாரே! தமையனே ஆனாலும் இளவலின் அந்தப்புரத்துக்குள் நுழைய அனுமதி பெறல் மரபு என்பதை கோசலை மைந்தர் மறந்துவிட்டார் போலும்!


லட்சுமணன்: ஊர்மிளா, யாரிடம் பேசுகிறோம் என்று உணர்ந்துதான் பேசுகிறாயா? இன்றோடு நீ இறந்தாய்!
வாளை உருவுகிறான்!

ராமன்: லட்சுமணா, என்ன இது, முதலில் வாளை உரையில் இடு! கட்டிய மனைவியிடமா வீரத்தைக் காட்டுவது?

ஊர்மிளாபெண்களிடம் இரகுவம்சத்து ஆண்கள் வீரம் காட்டுவது ஒன்றும் புதிதில்லையே சக்கரவர்த்தி
தாடகையில் ஆரம்பித்து சீதையிடம் முடித்த தமையன்
யாரென்று தெரியாமல் நியாயமான ஆசைப்பட்ட சூர்ப்பனகையிடம் வீரம் காட்டிய தம்பிக்கு புத்தி சொல்வது வியப்பளிக்கிறது!

லட்சுமணன்:  ஊர்மிளா இன்று உன் நாக்கு வரம்பு மீறுகிறது!

ஊர்மிளா  இன்று மட்டும்தானா மணாளனே, அன்று ஆயிரம்பேர் கூடியிருந்த அரசவையில் கட்டிய மனைவியைக் கானகம் ஏகச் சொன்ன மன்னரைக் கேள்வி கேட்டு என் குரல் மட்டும்தானே தனித்தொலித்தது?

இன்றுவரை என் தமக்கை கணவர் அதற்கு பதில் சொல்லவில்லை!

லட்சுமணன்:  ஊர்மிளா!

ஊர்மிளா கத்தாதீர்கள்! எப்போதும் அடங்கிப்போக நான் மைதிலி இல்லை! அன்றைக்கு என் உடன்பிறந்தாளை கானகம் சென்று விட்டு வரும் ஏவலை நீங்கள் தலை வணங்கி ஏற்றபோதே, என் நேசம், மரியாதை எல்லாம் மடிந்து போனது!

இன்று நான் பேசத்தான் போகிறேன்! நல்லவேளையாக இன்று ரகுவரனும் தனிமையில் சிக்கியுள்ளார்! 

இன்றைக்கு என் உள்ளத்தின் மதகுகள் திறக்கும் நேரம்!

பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போக நேர்ந்தது ராமனின் சாபம்! மலர்ப்பாதை நடந்து அணிச்சம்போல் வளர்ந்தவள் என் தமக்கை! அவளை வற்புறுத்தியேனும் மிதிலை ஏகச் செய்யாது தன்னோடு கானகம் அழைத்துச் சென்ற உம் தமையனுக்கு, என்னை உம்மோடு அழைத்துவர ஆணையிடத் தோன்றாதது என்ன சுயநலம்?

என் சிற்றப்பன் மகள்கள்தாமே பரதனையும் சத்ருக்கனனையும் மணந்திருக்கிறார்கள்?

அவர்களும் சேடிகளும் தசரதன் மனைவிமார்களை கவனித்துக்கொள்ள மாட்டார்களா?

என் கூடப் பிறந்த சீதைக்கு இருக்கும் அதே உணர்வுகள் எனக்கிருக்காதா? கனிந்த இளமை கணவனின் அருகாமை தேடாதா?

பதினான்கு ஆண்டுகள் இளமையைத் தொலைத்த எனக்கு முதுமை வரும் பருவத்தில் இணையவந்த இளையவருக்கு இன்னும் ஏன் மனதில், சிந்தனையில் முதுமை வரவில்லை?

எங்கோ, எவனோ சொன்ன வார்த்தை கேட்டு, ஜனகனின் மூத்த மகளைக் கானகம் ஏகச் சொன்னதை என்னோடு சேர்ந்து தட்டிக்கேட்கும் ஆண்மை இல்லாத இந்தக் கணவனா என்னையும் என் இரு பிள்ளைகளையும் காக்கப் போகிறான்?

கல்லுக்கும், புல்லுக்கும் கூட மாலையிடலாம், நியாயம் புரியாத அடிமைக்கு மனைவியாதல் சாபம்!

ராமன்: ஜானகி கானகம் சென்றது அரச நீதி! ராமனின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாயிருத்தல் அவசியம்.

ஊர்மிளா நன்றாக இருக்கிறது மன்னா உங்கள் நியாயம்!

ஏகபத்தினி விரதம் மட்டும் ஆண்மைக்கு அழகில்லை! ஏகப்பட்ட பத்தினிகள் இருந்தாலும், மனைவிக்குக் கொடுத்த வாக்குக்குக் கட்டுப்பட்டு, உருகி மறைந்தாரே, உமது தந்தை தசரதர், அவர் உம்மிலும் உயர்ந்தவர்!

உமக்கு எத்தனை முறை நிரூபித்தாலும் மீண்டும் ஏதாவது சோம்பேறிக் கயவனின் நாக்கு என் தமக்கையின் கற்பை அழுக்காக்கிக் கொண்டுதான் இருக்கும்!


இனியும் பொறுமை காப்பது மடமை!

என் தமக்கை பத்தினி என்றால், இன்றே உம் யாகப் புரவி சிறைபிடிக்கப் படட்டும்.
அதன் விளைவால், என் சகோதரி நிரந்தரமாய் உம்மைப் பிரியட்டும்!

ஏ இலக்குமணா, என்னை மணந்த இளையவரே, சரயு நதி மூழ்கி உம் மரணம், உமது  தமையன் கண் முன்னாள் நடக்கட்டும்!
அதே சரயு நதி சக்கரவர்த்தி ராமரையும் உண்ணட்டும்!

குவம்சம், எத்தனை வாரிசுகள் இருந்தாலும்,  உடல்கள் எரியூட்டப்படாமலும் நீர்க்கடன் பெறாமலும் அழிந்துபடட்டும்!

இது, பொறுமைசாலியான என் தமக்கை போன்ற பெண்களை சோதிக்கும் எல்லா ஆண்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும்!

தேவர்களே! நீங்கள் இருப்பது உண்மையானால்,

கலியுகத்தில், இந்த ராமன் பிறந்த மண், இந்த பரத கண்டத்தின் மத ஒருமைக்கு பங்கம் விளைவிக்கட்டும்.


ராமனின் பிறப்பு முதல் எல்லா சாதனைகளும் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாகட்டும்!
பாரதத்தின் தென்பாதி இறுதிவரை ராமனைக் கொண்டாடாமல் தவிர்க்கட்டும்!


அப்படியே ஆகட்டும்” என்ற அசரீரியோடு ஊர்மிளை மீது வானிலிருந்து பூமாரி பெய்ய, 

ராம லட்சுமணர்கள் திகைத்து நிற்க, 


திரை விழுகிறது!
1 கருத்து: