வியாழன், 5 நவம்பர், 2015

ஹேப்பி தீபாவளி

ஹேப்பி தீபாவளி!நாளைல இருந்து எல்லோரும் லீவுல இருப்பீங்க, அதனால இன்னைக்கே எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்து சொல்லீருவோம்ன்னு மொபைல எடுத்துக்கிட்டு உட்கார்ந்தேன்!

வீட்டம்மா அசரீரி!

என்னங்க, இன்னைக்கு துணிக்கடைக்குப் போயிட்டு வந்துருவமா?”

அன்னைக்குத்தானம்மா ஆன்லைன்ல ஏதோ ஆஃபர்ன்னு சொல்லி பத்துப் பொடவை வாங்குன?

அது வீட்டுல கட்ட,...  தீபாவளிக்கு?

ஓ! தீபாவளிக்கு வீட்டுல இருக்கமாட்டியா?

இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை! மரியாதையா கிளம்புங்க!

காலைல குடுத்த காபி காபிமாதிரியே இருந்தபோதே சுதாரிச்சிருக்கணும்!


சரி, என்னைக்கு இருந்தாலும் சாவு மாதிரி இதையும் ஒருநாள் சந்திச்சுத்தானே ஆகணும்!

கடைக்குப் போகும்போது சண்டை இழுத்தா, அந்தக் கோபத்துல சீக்கிரம் ஏதோ ஒன்ன வாங்கிட்டு வந்திடுவாங்க!

அதனால வேணும்னே, கொஞ்சம் காலை நொண்டிக்கிட்டே போனேன்!

ஏன் காலுல என்ன?”

ஒன்னும் இல்லடி, நேத்து பசங்க யாரோ, நீ செஞ்ச மைசூர்பாக் ஒன்ன வாசல்ல போட்டுட்டாங்க போல, அதுமேல டூ வீலர் ஏறி, ஸ்கிட் ஆய்டுச்சு. அதான்!

(ரெண்டு நாள் முன்னாடிதான், கடலை மாவு, சர்க்கரை, நெய் எல்லாம் கொட்டி, அரை மணி நேரம் கிளறிகெட்டியா ஒரு வஸ்து செஞ்சிருந்தா மகராசி. 
“இப்போ வர்ற கடலை மாவு எதுவுமே சரியில்லை”ன்னு கூசாம பழி வேற!)

சரி, நம்ம வீட்டு டான்ஸுக்கு எப்போதுமே வீதிதானே கோணல்!

நீங்க பக்கத்து வீட்டு மாமிய, ஆர்யா மாதிரி ஆன்னு பார்த்துக்கிட்டே வண்டிய திருப்பிட்டு விழுந்தது தெருவுக்கே தெரியும்! ஏன் என் மேல பழி சொல்றீங்க?”


பேச்சு வேற ட்ரேக்குல போகுதுன்னு சத்தம் போடாம ஸ்கூட்டர எடுத்தா, “மழை வர்றமாதிரி இருக்கு, கார எடுங்க!

இன்னைக்கு கிராஸ்கட் ரோட்டுல காரைப் பார்க் பண்ண இடம் கிடைக்காது, அதுவும் இல்லாம அந்தக் கூட்டத்துல கார் ஓட்றது கஷ்டம்!

எதுக்கு சுத்தி வளைக்கறீங்க, பெட்ரோல் செலவாகும் அதுதானே?”

இந்தமாதிரி கஞ்சத்தனத்த நான் பார்த்ததே இல்ல சாமி,
 மூத்திரத்துல மீன் தேடற வம்சம்!

சரி, நம்ம அப்பன் பாட்டன் எல்லாம் அசிங்கப்பட வேண்டாம்ன்னு காரை எடுத்துட்டுப்போனா, கிராஸ்கட் ரோட்டுக்கு சுமார் ஐநூறு கிலோமீட்டருக்கு முன்னாடியே ஜானவாச ஊர்வலம் ஆரம்பம்!


ஒருவழியா, நூறடி ரோடு கல்யாண் சில்க்ஸ் பக்கத்துல, ரெண்டு ஆட்டோவுக்கு நடுவுல ஒரு அரையடி சந்துல வண்டிய நிறுத்திட்டு படி ஏறும்போது மெதுவா சொன்னேன்,

இன்னும் போனஸ் வரல, அதுனால பார்த்து....

ஒரு ஒன்றையணா பார்வை பார்த்தபடி சொன்னாள், “நான் நேத்தே ஸ்டேட்மென்ட் பார்த்துட்டேன், போனஸ் கிரெடிட் ஆய்டுச்சு! இந்தப் பொய்யெல்லாம் என் கிட்ட வேண்டாம்!

போச்சுடா!

கார்ல நாலு டயரும் அனுஷ்கா கன்னம் மாதிரி இருக்கே, போனஸ் பணத்த வெச்சு மாத்திக்கலாம்ன்னு நெனச்ச நெனப்புல மண்ணு!

சாய் பல்லவி கன்னம் மாதிரி இருக்கற ரெண்டு டயர முன்னாடி மாத்திப் போட்டு இன்னும் கொஞ்சநாள் ஓட்ட வேண்டியதுதான்!எதுக்கும் கேட்டுப் பார்ப்போம்ன்னு, “இல்லம்மா, அது டயர் மாத்தறதுக்கு...

ஏன், ட்ரைன் பாஸ் வாங்கிட்டு ட்ரைன்ல போகவேண்டியதுதானே, பரம்பரைக்கே வெட்டி ஜம்பம்! ஆனா பொண்டாட்டிக்கு செய்ய மட்டும் ஆயிரம் சொணக்கம்!

எனக்குப் பொடவையும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்ன்னு தடதடன்னு எறங்கி காருக்குப் போயாச்சு!

நடுத்தெருவுல அம்மா தாயேன்னு கால்ல விழாத கொறையா கெஞ்சி ஒருவழியா படி ஏற வைக்கறதுக்குள்ள முழி பிதுங்கிடுச்சு!

மொத்தத்தையும் வேடிக்கை பார்த்த சேல்ஸ்மேன் வாங்க மேடம்ன்னு அம்பத்தாறு பல்லையும் காமிச்சான்! 

சில்க் சாரீஸ் ன்னு செந்தமிழ்ல எழுதியிருந்த எடத்துல இருந்த கூட்டத்தைப் பார்த்தா, "இவ்வளவு சுபிட்சமான நாட்லயா நாம இருக்கோம்?"

என் காதுல படற மாதிரி “ஐயாயிரம் ரூபாய்க்குள்ள என்ன இருக்கோ அத எடுத்துப் போடுங்க!” அப்படின்னு சொல்லிக்கிட்டே கூட்டத்துல மேடம் ஐக்கியம் ஆகிட்டாங்க!

ஒரு கையகல ஸ்டூல்ல சர்க்கஸ் யானை மாதிரி உட்கார்ந்து ட்வீட்டரை நோண்ட ஆரம்பித்தேன்!

ஒரு யுகம் கழிச்சு, ஒரு பத்துப் பொடவைய எடுத்துக்கிட்டு ஒரு சேல்ஸ் மேன் பின்னாடி வர, பார்யாள் தரிசனம்!

“இதுல ஒன்ன செலக்ட் பண்ணுங்க!”

இது எப்பேர்பட்ட விஷப் பரிட்சைன்னு கல்யாணம் ஆன அத்தனை ஆம்பளைக்கும் தெரியும்!

அதனால லேசா சிரிச்ச மாதிரி மொகத்த வச்சுக்கிட்டு, “உனக்குப் பிடிச்சத எடுத்துக்கம்மா!”

மறுபடியும் முகம் மாறியதைப் பார்த்தவுடனே, எதுக்கு வம்புன்னு நான் ஒரு அஞ்சு சேலைய செலக்ட் பண்ணி அதுல ஒன்ன எடுக்க சொன்னா,
நான் வேண்டாம்ன்னு ஒதுக்குன அரக்குப் பச்சையைக் கையில எடுத்துக்கிட்டு, “இது எப்படி இருக்கு?”

இந்த எழவுக்கு எதுக்கு என்னை கேட்கணும்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே, “சூப்பர்” அப்படின்னு வழிஞ்சுக்கிட்டே ப்ரைஸ் டேக் பார்த்தா, தூக்கி வாரிப் போட்டது!

அதிகமில்லை ஜெண்டில்மென், என் மொத்த போனஸ் பணமும்!
அதுவும் டிஸ்கவுன்ட் போக!!

முருகன் அப்போ ஒரு மாமி ரூபத்துல வந்தான்!
“என்ன பொடவை வச்சிருக்கானுக, பக்கத்துல PSR ல கலெக்சன் ரொம்ப நல்லா இருக்கு” அப்படின்னு சத்தமா சொல்லிக்கிட்டே எங்களைத் தாண்டிப் போச்சு!

உடனே, உடனே அந்தப் புடவை அம்மணிக்கும் பிடிக்காம போய், “இருங்க பக்கத்துல பார்த்துட்டு வர்றோம்”ன்னு படி இறங்கிட்டா மகராசி!

வீட்ட விட்டு வந்து சரியா நாலு மணிநேரம்!
சரி, ஒரு ஜூஸ் குடிச்சுட்டுப் போலாம் வான்னா,
எனக்கு இளநிதான் வேணும்!”
அதுதானே, நாம சொல்லிக் கேட்கறது ஜாதகத்துலயே கிடையாதே!

அடுத்த ரெண்டு மணிநேரமும் PSR ல ஒன்னும் பிடிக்காம போக,
“ஏங்க, கமல் வர்ற அட்வர்டைஸ்மென்ட் என்ன கடை?"

“போத்தீஸ் டீ!”

“அங்க ஒரு எட்டு போய் பாத்துட்டு வருவமா?”

எங்கேயோ யாரோ பதினாலு கோடி வாங்க, நான் மொட்டை வெய்யிலில் அரை கிலோமீட்டர் நடக்கறதும் கேயாஸ் தியரிதானா?
கமல் கிட்டத்தான் கேட்கணும்!

தலைவிதி!

போத்தீஸ் வாசல்ல திருப்பதி க்யூ!

“ஏண்டீ இந்த சந்தைக்கடைக்குள்ள போய்தான் ஆகணுமா?”
“நல்லா இருக்கற கடைக்குத்தான ஜனம் வரும்? நீங்க சித்த .... வரீங்களா?”

மறுபடியம் அதே ஸ்டோரி!
ஆனா இங்க மூணு மணிநேரம், முப்பத்தி எட்டாயிரம்!

என் நாக்குல நிரந்தர வாசம் செய்யற சனி பகவான் மெதுவா ஆரம்பிச்சார்!
“ஏண்டி, பக்கத்துல காஜல் விளம்பரத்துல வர்ற சென்னை சில்க்ஸ் இருக்கு, அங்க போகலையா?”

இந்தமாதிரி நேரத்துல புருஷன் சொல்ல அப்படியே கேட்பவள்தான் உண்மையான பத்தினின்னு மனு சாஸ்திரத்துல சொல்லீருக்கு!

“சரி! வாங்க அங்கயும் பார்த்துட்டு முடிவு செய்வோம்!”

அங்க அத்தனை பொடவையும் பார்த்தும் எதுவும் திருப்தி ஆகாம, ஏங்க அந்த பொம்மை கட்டியிருக்கற  பொடவை நல்லா இருக்கில்ல, அத அவுத்துக் காமிக்கச் சொல்லலாமா?”

காலையில இருந்து கொலைப் பட்டினியா தேவுடு காத்தவனுக்கு எப்படி இருக்கும்?

“ஏன் அந்த மாமி கட்டியிருக்கிற சாரி அதைவிட நல்லா இருக்கு, அவங்கள வேணும்னா அவுத்துக் காமிக்கச் சொல்லேன்!”

தீவிழி விழிச்சவ ஆனாலும் அந்த பொடவையையும் பார்த்தபின்னாடிதான் முடிவு செஞ்சா,

இதவிட கணபதி சில்க்ஸ்ல நல்லா இருக்கும்!

படிக்கற உங்களுக்கே எரியுதில்ல?

கணபதி சில்க்ஸ்ல ஒருவழியா ஒரு பொடவையை முடிவு பண்ணிட்டு, பரதேவதை ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சப்ப மெதுவாக் கேட்டேன்,
ஏண்டி, வந்தது வந்துட்டோம் எங்க அம்மாவுக்கும் ஒன்னு எடுத்தரலாமே!”

ஏங்க, எனக்கொரு டவுட்டு!
இந்தப் பொம்பளைங்க மொகவாய்க் கட்டையை அப்படி இடிச்சுக்கறாங்களே, தோள்பட்டை வலிக்காது?

சரியா ரெண்டாவது நிமிஷம், செத்த எலியைத் தூக்கிப் போடறமாதிரி ஒரு பொடவைய எடுத்துக்கிட்டு வந்தா!

“ஏண்டி, இது என்னடி கருப்பும் இல்லாம, க்ரேவும் இல்லாம ஒரு கலர்?”

“இது இங்கிலீஷ் கலர்!
உங்க அம்மாதான் நல்ல கலராச்சே! அவங்களுக்கு இது மேட்ச் ஆகும்!”

எங்கம்மாவை விட அவ கருப்புங்கற காம்ப்ளெக்ஸ்!

என்ன செய்ய? ராத்திரிக்கு சோறும் மத்ததும் வேணுமே!

பேசாம அதையே எடுத்துக்கிட்டு, கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, ரேஷன் கார்டு எல்லாத்தையும் நாலு பக்கமும் தேய்ச்சப்புறமும் கையிலிருந்து ஆயிரம் ரூபாயைக் கொடுத்ததுக்கு அப்புறம்தான் ஒரு கட்டைப்பையை கைல தந்தான்!

இன்னும் இந்த மாசம் மிச்சம் இருக்கற நாள் எல்லாம் எப்படி ஓட்டப்போறோம்ன்ற கவலை, பசி எல்லாம் சேர்ந்து காத அடைக்குது!
அன்னபூர்ணாவில் அரைபக்கெட் சாம்பாரும் ரெண்டு இட்லியும் வாங்கி, ரெண்டு விள்ளல் சாப்பிட்டவுடனே, அடுத்த குண்டு!

“ஏங்க, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பக்கத்துலதான இருக்கு? அங்க ஒரு அஞ்சு கிலோ மைசூர்பா வாங்கிட்டுப் போயிடலாம்!”

அஞ்சு கிலோவாஆஆஆ?

“அக்கம் பக்கத்துக்கு ஸ்வீட் கொடுக்கவேண்டாமா? அப்புறம் எங்க அம்மா வீட்டுக்கும் கொஞ்சம்!”

“அப்போ எங்க வீட்டுக்கு?”

“அதுக்கு ஒரு கால் கிலோ தனியா வாங்கிக்குங்க!”

ஸ்வீட் பார்சல், துணி வாங்கின பை, அதுபோக, பிளாட்பாரம் கடைல வாங்குன புண்ணாக்கு, தெருப்புழுதி எல்லாக் கவரையும் தூக்கிக்கிட்டு மறுபடியும் கார் நிக்கற எடத்துக்கு லொங்கு லொங்குன்னு ஓடும்போது ஒரே ஆறுதல், எல்லா ஆம்பளைகளும் அப்படித்தான்!


பாவம் பொம்மனாட்டிங்க எல்லாம் ஒரு ஹேண்ட் பேக் மட்டும் தூக்கிக்கிட்டு, பர்ச்சேஸ் முடிச்ச களைப்போட வந்துக்கிட்டிருந்தாங்க!

ஒருவழியா வீட்டுக்கு வந்து சேர்ந்த ரெண்டாவது நிமிஷம் பக்கத்து வீட்டு மாமி ஆஜர்!

ரெண்டுல ஒரு புடவையை சுமார்ன்னு ஒதுக்கிய மாமி, "ஆஹா, சூப்பர்! என்ன கலர், என்ன துணி, இந்தக் கலர்தான் நான் ரொம்பநாளா தேடிண்டிருக்கேன். உங்களுக்குன்னு கிடைச்சிருக்கு இந்த அழகுக் கலர், இது கட்டுனா உங்களுக்கு அவ்வளவு நல்லா இருக்கும்”ன்னு மூச்சு விடாம பாராட்டித் தள்ளிய புடவை,
அம்மாவுக்கு வாங்குன அந்த செத்த எலி!

“நானும் அதேதான் நினைச்சேன் மாமி! இந்த ரெண்டும் எனக்கு!
இன்னும் எங்க மாமியாருக்குத்தான் நாளைக்குப் போய் ஒரு புடவை எடுக்கணும்!”

கீழ விழாம இருக்க அப்படியே சோபாவுல சரியும்போதுதான் நியாபகம் வந்தது உங்களுக்கு ஏதோ சொல்ல நினைத்தது!..


ம்ம்ம்...... ஹேப்பி தீபாவளி!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக