செவ்வாய், 17 நவம்பர், 2015

ஒரே மழையில் வெளுத்த சாயங்கள்!

பேரிடர் காலமும், மக்களும்!என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புக்களே!
ஊழலை ஒழிக்க, உங்களுக்குத் தொண்டு செய்ய, உங்கள் அன்புச் சகோதரிக்கு வாக்களியுங்கள்!

இப்படித்தான் ஆட்சியாளர்கள் தெருத்தெருவாய் வாக்குக் கேட்டு வந்ததாய் எனக்கு நியாபகம்!

நாமும், ஒவ்வொரு தேர்தலிலும், நமக்கு சேவை செய்ய நம் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் வேலைக்காரர்களுக்கு நம் சர்வ வலிமை வாய்ந்த பொன்னான வாக்கை அளித்துப் புண்ணாகிறோம்!

பிறகெப்படி பதவிக்கு வந்தவுடன் தலைக்குப்பின்னால் ஒரு ஒளிவட்டத்தை அவர்கள் அமைத்துக்கொள்கிறார்கள்? நாமும் அடிமைகளாய் அதை ரசிக்கிறோம்?

ஜனநாயகம் என்பதும், மக்கள் ஆட்சி என்பதும் மக்களால், மக்களுக்காக, மக்களால் என்றுதானே அரசியல் சாசனம் சொல்கிறது?

இது எப்போதிருந்து ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டை விற்கும் அடிமைகளால், வாரிசுகளுக்காகவும்  உ.பி.. கும்பலுக்காகவும், மன்னர்களாலும், மகாராணிகளாலும், என்று ஆனது?

மன்னராட்சி, பின் வெள்ளைத் துரைமார்கள் ஆட்சி என்று ஆண்டாண்டு காலம் அடிமைத் தளையில் உழன்ற நம் ரத்தத்தில் இன்னும் அடிமை மனோபாவம் மாறவில்லை என்பதைத்தான் இந்த இரண்டு நாள் ட்விட்டர் பதிவுகளும் ஊடக மழுப்பல்களும் நிரூபிக்கின்றன!

நமக்கு நம் உரிமைகள் என்ன, கடமைகள் என்ன என்பதை நம் கல்விக்கூடங்கள் சொல்லித் தருவதே இல்லை! அவை கற்பிக்கும் இடங்கள் என்ற நிலைப்பாட்டை மாற்றி பல யுகங்கள் ஆகிவிட்டன!

ஒரு தொடர் மழைக்கு ஒரு மாநிலத் தலைநகரம் தயாராக இல்லாததற்கு யார் காரணம்?

இது ஒன்று புதிய நிகழ்வுமல்ல! ஒவ்வொரு மழைக்காலத்திலும் தவறாது நிகழும் அவலம்தான்!

இதற்கான நிரந்தரத் தீர்வை எந்த அரசாங்கமாவது யோசித்ததா?
இந்தக்கேள்வியை கேட்பது எவ்வளவு எளிமையானது?
ஆனால் இன்னொரு தர்ம சங்கடமான கேள்வி!

இந்த அவலத்துக்கு நாம் பொறுப்பில்லையா?

சென்ற ஜெ ஆட்சியில் மழைநீர் வடிகால் திட்டம் என்ற ஒரு மிகச் சிறந்த திட்டத்தை கட்டாயமாக்கினார்கள்!
அதன்பின் சாராயம் விற்கும் மும்முரத்தில் அதை அவர்களே மறந்தும் போனார்கள்!

பல லட்சம், சில கோடி என்று செலவு செய்து கட்டும் கட்டிடங்களில், மழைநீரை நிலத்தடியில் சேமிக்க சில ஆயிரங்களையும், சில சதுர அடி நிலத்தையும் ஒதுக்க அரசு கேட்டது!
இதை எத்தனைபேர் செய்தோம்?

அந்தத் திட்டம் என்ன ஆனது?

அதை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் இன்றும் உட்கார்ந்திருக்கும் கேடுகெட்ட அதிகாரிகள் என்ன செய்தார்கள்?

சில நூறுக்கு ஆசைப்பட்டு, அந்தத் திட்டம் நம் சந்ததிக்கான நீர் முதலீடு என்பதை மறந்து வெட்கம் கெட்டுப்போய் லஞ்சம் வாங்கிக்கொண்டு நவத் துவாரங்களையும் மூடிக்கொண்டு எல்லா வரைபடங்களையும் அனுமதித்தார்கள்!

பேராசை பிடித்த, எதிர்காலம் பற்றி எந்த சுரணையும் இல்லாத நாமும், ஒரு சதுர அடி நிலத்தை நம் தலைமுறை நலனுக்காக ஒதுக்க மனமின்றி, வீட்டைச் சுற்றி சிமெண்ட் பூசி மெழுகினோம்! டாம்பீகமாக வண்ணக் கற்களைப் பதித்தோம்!

மண்ணைப் பார்த்தால் நமக்கு அப்படிக் குமட்டிக்கொண்டு வந்தது!

பிறகு மழை வந்தால் நீர் எங்கு போகும்?
படியேறி வீட்டுக்குள்ளேதான் வரும்!

மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று ரகம் பிரித்து குப்பைத் தொட்டிகளை அரசு வைக்கவில்லையா? அதை எத்தனைபேர் கடைபிடித்தோம்? முதலில் எத்தனைபேர் "குப்பைத் தொட்டிக்குள்" குப்பையைக் கொட்டினோம்?


குப்பைத் தொட்டி அருகில் போகாமல் மூக்கைப் பிடித்துக்கொண்டு, தூர நின்று  தொட்டிக்கு வெளியே வீசிவிட்டு வரும் நாம்தான், மாலையானால் அதை விடக் கேவலமாக நாறும் சாராயத்தை நம் வயிற்றுக்குள் வெட்கமின்றிக் கொட்டிக்கொள்கிறோம்!


பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம் என்று எத்தனை பிரச்சாரம் செய்கிறது அரசு?
எத்தனை சட்டங்களைக் கொண்டுவந்தது?

எத்தனைபேர் அதை மனச் சான்றுடன் செய்தோம்?

பயணிக்கும் வண்டியில் ஒரு துணிப்பையை எப்போதும் எடுத்துப்போவது கேவலமா?
இதை ஏன் செய்ய மறுக்கிறோம்?

எத்தனைபேர், அப்படி வாங்கிவரும் பிளாஸ்டிக் பைகளைத் தெருவில் எறிகிறோம்?

அக்கம்பக்கத்துக் காலிமனைகளை குப்பைக் கிடங்குகள் ஆக்காதவர்கள் நம்மில் எத்தனை பேர்?

நம் குறைந்தபட்ச ஒத்துழைப்பு இல்லாமல், கடவுளே வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது!

சாக்கடைகளைத் தூர்வாரும்போது வரும் அத்தனை அடைப்புக்களும் பாழாய்ப்போன பாலித்தீன் கவர்களே!

இதை இத்தனை துயர் பட்டபின்பும் நாம் மாற்றிக்கொள்ளப் போகிறோமா?
நிச்சயம் இல்லை!

எனில், இதை நம் அலட்சியத்துக்குப் பரிசு என்று அனுபவிப்போம்!
இத்தனை மழையையும் வெள்ளத்தையும் பார்த்த பிறகும், அடுத்தவாரம் கலர்கலராகக் குடங்களுடன் தண்ணி லாரியைத் துரத்தும்போதாவது நமக்கு உறைக்கிறதா என்று பார்ப்போம்!  

அரசாங்கம் என்பது நாமும்தான் என்பதை நாம் உணரும்வரை இது மாறாது!
அடுத்த புயல் மழை இன்னொரு ஆக்சன் ரீப்ளேயாகத்தான் இருக்கும்!


ஆனால் ஒவ்வொரு மழையிலும் பாதிப்பின் அளவு அதிகரித்துக்கொண்டே போவதில் பொதிந்திருக்கும் எச்சரிக்கையை காலம் கடக்குமுன் உணர்வோம்!

சரி, அரசுக்கு இதில் எந்தப் பொறுப்புமே இல்லையா?
அப்படித்தானே சொல்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

ஒவ்வொரு தேர்தலிலும் மக்களுக்குத் தொண்டு செய்வதாய்க் காலில் விழுந்தோ, காசு கொடுத்தோ ஓட்டுக் கேட்கும் அரசியல்வியாதிகள் வென்றபின் எப்படி அதை மறக்கிறார்கள்?

ஒவ்வொரு வார்டிலும் குப்பைகள் முறையாக அகற்றப்படுகின்றனவா? தெருக்கள் தூய்மையாகப் பராமரிக்கப் படுகிறதா என்று பார்ப்பதற்குத்தானே கவுன்சிலர்கள் முதல் தொகுதி எம்எல்ஏக்கள் வரை?

அம்மா வரும் வழியில் தோரணம் கட்டவும், கையைத் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு, தெருவில் படுத்து உருண்டு கவனம் ஈர்க்கவும்தான் அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது!

மக்கள் முழுநேர கட்சிக்காரர்களாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்வதில் இருக்கிறது அரசியல்வாதிகளின் சாமர்த்தியம்!

தேர்தலின்போது கட்சிக்காகக் கரடியாய்க் கத்துங்கள், நாயாய் உழையுங்கள். ஆனால் ஒரு கட்சி வென்று ஆட்சி அமைத்தபின் பொறுப்புள்ள மனிதர்களாய் மாறுங்கள்.

உங்கள் ஓட்டை வாங்கிப் பதவியில் அமர்ந்தவர்களைக் கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு இல்லாமல் யாருக்கு?

இதில் கட்சி பேதம் பார்த்து, எங்கள் தங்கத்தாயை, தமிழினத் தலைவரைக் கேள்வி கேட்கிறார்களே என்று பொங்கினால், உங்கள் உரிமையை நீங்கள் இழப்பதோடு, அவர்களின் தவறுகளுக்கும் துணை போகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்றைய ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும்போது, முந்தைய ஆட்சி ஒழுங்கா என்று கேட்க ஆரம்பித்தால், எப்போதுதான் ஆள்பவரைக் கேள்வி கேட்பது?

“முப்பது நாள் பெய்ய வேண்டிய மழை மூணே நாளில் பெய்தது” என்று வியாக்கியானம் பேசினால், இந்த ஈரவெங்காயம் எங்களுக்குத் தெரியாதா என்று மக்கள் கேட்கிறார்களோ இல்லையோ, அவரை நம்பி, ஓட்டுப் போட்ட சொந்தக் கட்சிக்காரன் கேட்கவேண்டாமா?

உங்கள் கடமைகளை நீங்கள் செய்துதானே மாத சம்பளமோ, வருமானமோ ஈட்டுகிறீர்கள்? அந்தப் பொறுப்புணர்வு ஆள்பவர்களுக்கு வேண்டாமா?

“இதோ, புறப்பட்டு விட்டார் புரட்சித்தலைவி, பொதுமக்களின் குறை கேட்க” என்று, ஒரு முதல்வரின் தார்மீகக் கடமை செய்யச் செல்கையில் லைவ் கவரேஜில் சொல்லும் மானம் கெட்ட மீடியாக்களை என்ன சொல்ல?

ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓடியோடி உழைத்த அத்தனை அமைச்சர் பெருமக்களும் எங்கு போனார்கள்?

பேரிடர் நிவாரணம் வழங்கும் பையில் அம்மா படம் இருக்கிறதா? என்று பார்ப்பதும் இடர் பாதித்த பகுதிக்குப் போகும்போதுகூட பால் காவடி தூக்குவதுபோல் அம்மா படத்தைத் தூக்கிக்கொண்டு சுற்றுவதும், தொலைக்காட்சியில் அம்மா படம் தெளிவாக வருகிறதா என்று பார்ப்பதும்தான் இவர்களின் மக்கள் பணி.

தரைவழிப் பயணம் என்பது எப்படி இருக்கும் என்பதைக்கூட சுத்தமாக மறந்த, காரின் கண்ணாடியைக்கூட இறக்காமல் தொகுதி உலா வந்த தங்கத்தாரகை, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களிடம் “என் அன்பு வாக்காளப் பெருமக்களே” என்று பிரச்சாரம் செய்கிறார்!
தான் எதற்கு வந்திருக்கிறோம் என்பது கூட மறந்துபோனது அவருக்கு பாவம்!


இதையே விஜயகாந்த் செய்திருந்தால் எப்படிக் கும்மியடித்திருக்கும் இந்த வெட்கம் கெட்ட ஊடகங்களும், ட்விட்டர் புரட்சிக் குழுவும்?

ஸ்டாலின் ரப்பர் ஷூ போட்டிருந்த அதிர்ச்சியில் அவர்களுக்குக் காது கேட்காமல் போய்விட்டது போலும்.

அம்மா வந்தால், தண்ணீரில் இறங்கினால் மழை நின்றுவிடுமா? என்று ஒரு வாதம்!

ஆள்பவர் களத்தில் இறங்கினார் என்றால் அதிகாரப் பம்பரம் வேகமாய்ச் சுழலாதா?

பூட்டிய அறைக்குள் இருந்து காணொளி மூலம் நிவாரணம் வழங்கினால், அவருக்கு நான்கு புகைப்படம் எடுத்து அனுப்பிவிட்டு, கிடைத்ததை சுருட்டிக்கொண்டு ஓடாதா இந்த இழவு வீட்டில்கூட நெற்றிக்காசை உற்றுப்பார்க்குமளவு மன வறட்சி கொண்ட அதிகார வர்க்க கொள்ளைக் கூட்டம்?

இந்தக் காணொளி அரசு செய்த மிகப்பெரும் சமுதாயச் சீர்கேடு, அரசு அதிகாரிகளையும் சோம்பேறிகளாகவும், துதி பாடிகளாகவும், கொள்ளைக் கூட்டமாகவும் மாற்றியதுதான்!

கருணாநிதி வந்தாரா, ராமதாஸ் வந்தாரா என்று ஒரு கும்பல்!

அவர்கள் வந்து என்ன செய்யமுடியும், அதிகபட்சம் உணவுப்பொட்டலம் வழங்க முடியும்.

ஆட்சி அதிகாரம் யார் கையில் இருக்கிறது?

கேட்டால் உடல் நிலை சரியில்லை என்று ஒரு சாக்கு!

இந்த அம்மையார் ஒருமுறை சொன்னார் அத்வானிக்கு செலெக்டிவ் அம்னீசியா என்று. அம்மையாருக்கு செலெக்டிவ் உடல்நலக் குறைவு போலும். தான் விரும்பும் இடங்களுக்குப்போக அனுமதிக்கும் உடல்நிலை, வேண்டாத இடமென்றால் படுத்துகிறது!

ஏரிகளை, குளங்களைத் தூர்வாரவும், நீர்வழிச் சாலைகள் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற நிலையில்தான் தோன்றும்.
அதுவரை சாராயம் விற்று சம்பாதிக்க மட்டும்தான் தோன்றும்!

2008ல் இதுபோல் ஒரு நிலைமை வந்தபோது அப்போதைய மேயரின் செயல்பாடுகளை மனசாட்சி உள்ளவர்கள் இப்போதைய செயல்பாடுகளோடு நடுநிலைமையோடு ஒப்பிட்டுப்பாருங்கள் உங்களுக்கே பிழை எங்கே இருக்கிறது என்று தெரியும்.

விமர்சனங்களைத் தாங்கமுடியாத அரசு என்ன ஆகும் என்பதை நான் சொல்லவில்லை - வள்ளுவன் சொல்கிறான்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக