வியாழன், 19 நவம்பர், 2015

ஒரு எழுத்தாளன் குடும்பஸ்தன் ஆன கதை!

ஒரு இலக்கியவாதியின் பயணம்!பரமுவுக்கு அப்படி ஒரு சந்தோஷம்!

அவன் வாழ்நாள் ஆசை எப்படியாவது தமிழகத்தின் முக்கிய வார இதழ் குழுமங்களான அமுதம் அல்லது அசடன் இரண்டில் ஏதாவது ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து படைப்பாளி என்று பெயர் வாங்கவேண்டும் என்பது!

அதற்காக, இரண்டு பத்திரிக்கைகளுக்கும் அவற்றின் ஸ்டைலுக்கு ஏற்றவாறு கதைகளையும், கட்டுரைகளையும் துணுக்குகளையும் மாறிமாறி  எழுதி அனுப்பிக்கொண்டிருந்தான். கூடவே, தன்னை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளும்படி விண்ணப்பத்தையும்!

அவையும் சளைக்காமல் அவற்றைத் திருப்பி அனுப்பிக்கொண்டேதான் இருந்தன!

அந்த ஊரில் இன்றைய தேதிக்கு, வாரம் இரண்டு கட்டுக் கடிதங்கள் வரும் ஒரே வீடு அவனுடையதுதான்!

ஒரே பையன் என்பதால் அவன் இலக்கியத் தாகத்தைத் தணிக்க அவனது பெற்றோரும் எந்தத் தடையும் சொல்லாததோடு, அவன் சம்பாதித்து உலை பொங்கவேண்டிய அவசியமும் அங்கு இல்லை! உட்கார்ந்து சாப்பிட்டாலே இன்னும் இரண்டு தலைமுறைக்குக் காணும் சொத்துக்கு ஏக வாரிசு!
அவன் சோக்காளிகளோடு சேர்ந்து சிகரெட், குடி என்று அலையாமல் இப்படி மோட்டுவளையைப் பார்த்து ஏதோ கிறுக்கிக்கொண்டே இருப்பது அவர்களுக்குக் கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது!

எப்படியும் இந்த வைகாசி மாசம் ஜாதகத்தை எடுத்து, நெட்டையோ குட்டையோ, ஒரு பெண்ணைப் பார்த்துக் கட்டிவைத்துவிட்டால், இந்த காகிதப் பைத்தியம் போய்விடும் என்ற நம்பிக்கை!

இந்த நிலையில்தான் நேற்று, வழக்கமாகத் திரும்பிவரும் பண்டிலோடு சொல்லிவைத்தாற்போல் இரண்டு பத்திரிகை அலுவலகத்திலிருந்தும் ஒரு கடிதம் வந்திருந்தது!

பத்திரிக்கை லெட்டர் ஹெட்டில் வழக்கமான பிரிண்டட் லெட்டரில், இவன் பெயரும், தேதியும் மட்டும் பேனாவில் எழுதப்பட்டு, இண்டர்வ்யூ லெட்டர்!
அதுவும் இரண்டு பத்திரிக்கையிலிருந்தும் ஒரே நாளில் காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிக்குள் நேர்காணலுக்கு வரும்படியும், தேர்ந்தெடுக்கப்பட்டாலும், படாவிட்டாலும் பயணப்படி எதுவும் வழங்கப்படாது எனவும்!

பரமனுக்கு அப்போதே, தான் இரண்டு பத்திரிக்கையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது போலவும், அதில் எதைத் தேர்ந்தெடுப்பது தன் திறமைக்கு ஏற்றதாக இருக்கும் என்றும் ஒரே குழப்பம்!

ஊரிலிருக்கும் ஒரே நண்பனான அரிசி மண்டி கணேசனிடம் கேட்டபோது, இரண்டுபக்கமும் இன்டர்வ்யூவுக்குப் போய் சேம்பிள் பார்த்து, எது நல்ல தரமாக இருக்கிறதோ அதில் சேரும்படி சொல்ல, இதோ புறப்பட்டு சென்னை வந்துவிட்டான்!

முதலில் அகர வரிசைப்படி அமுதம் பத்திரிக்கை என்று முடிவு செய்து காலை நேர்காணல்!


அமுதம்! இந்தியாவின் இதயத்துடிப்பு! என்று எழுதிய போர்டுக்குக் கீழ் உட்கார்ந்திருந்த துணை ஆசிரியர் தோழமையோடு சிரித்ததே அவனுக்கு பாதி தெம்பு கொடுத்தது!

சொல்லுங்க பரமா, எங்கள் பத்திரிக்கையில் பணி புரிய வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது?

சார், என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? தமிழ் நாட்டிலேயே அதிக சர்க்குலேஷன் நம்ம பத்திரிக்கைதானே!

அவன் பேச்சோடு "நம்ம" பத்திரிக்கை என்று அழுத்தம் கொடுத்ததை அவர் கண்டுகொள்ளாதது அவனுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்!

ஆனால், அடுத்து, அவர் கேட்ட கேள்வி அவன் உற்சாகத்தை எகிறவைத்தது!

நம்ம பத்திரிக்கை இன்னும் முன்னேற உங்கள் ஐடியா என்ன?
இந்த ஆண்டு நம் தீபாவளி சிறப்பிதழ்கள் பற்றி உங்கள் நேர்மையான கருத்து என்ன?

ஒரு நிமிஷம் நம்மை ஆழம் பார்க்கிறாரோ என்று தோன்றினாலும், ஒரு எழுத்தாளனுக்கு இருக்கும் வித்தை கர்வம், பாக்கெட்டில் இருந்த அசடன் இண்டர்வியூ லெட்டர் தந்த அசட்டுத் துணிச்சல் அவனுக்குள் இருந்த விமர்சகனை தட்டி எழுப்பியது!

சார் உண்மையிலேயே அவை தீபாவளி சிறப்பிதழ்கள்தானா? ஒரே புத்தகத்தை மூன்று நான்காய்ப் பிரித்து நான்கு அட்டை போட்டு விற்பதை சிறப்பிதழ்ன்னு சொல்லமுடியுமா சார்!

சுதாரித்து நிமிர்ந்து உட்கார்ந்த துணை ஆசிரியர் அவனை தீர்க்கமாகப் பார்த்தார்!

பாமரத்தனமாப் பேசாதீங்க! மூன்று அட்டை என்பது ஒன்பது பக்க கலர் அட்டை விளம்பரங்கள் அல்லவா? மூனு நடிகைகள்  அட்டைப்படம்! நம் வாசகர்களுக்கும் வார வாரம் எப்படிப்பட்ட தீபாவளி விருந்துன்னு புரியலையா உங்களுக்கு?

இப்படி ரண்டு பக்கமும் பலன் தர்ற உத்தியப் புரிஞ்சுக்காம எப்படி பத்திரிக்கைல வேலை செய்யப்போறீங்க?   

அத விடுங்க, ஒவ்வொரு வாரமும் கிராமத்துச் சிறப்பிதழ், காலேஜ் சிறப்பிதழ், சினிமா சிறப்பிதழ், டிவி சிறப்பிதழ் ஒருபக்கக் கதை சிறப்பிதழ், இலக்கியச் சிறப்பிதழ்ன்னு விருந்து பரிமாறினதைப் பார்க்கலையா?

சார், உங்க பத்திரிக்கைத் துணுக்கையே ஒரு பக்கத்துக்கு நீட்டி பிரசுரித்ததையும், போனவருஷம் போட்ட அதே வில்லேஜ், காலேஜ் கதைகளையே ஊரும் பேரும் மாத்திப் போட்டதையும் எப்படி சார் ஜனங்க ஒத்துக்குவாங்க?

அட்லீஸ்ட் இலக்கியச் சிறப்பிதழிலாவது வளரும் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கலாமே? - சந்தடி சாக்கில் தன் ஆதங்கத்தையும் போட்டு உடைத்தான் பரமன்!

இதுபோல் எத்தனை பொடியன்களைப் பார்த்திருப்பேன் என்ற தோரணையில்,
ஏன் பரமா, நீங்கள் சொன்னதை எத்தனை பேர் கவனிச்சிருப்பாங்க?
நம்ம வாசகர்கள் நடுப்பக்கத்தையும், சரசு பதில்களையும் தாண்டி இந்த ஐம்பது வருஷத்துல சிந்திச்சதுண்டா, அல்லது நாமதான் அதுக்கு அவங்கள விட்டதுண்டா?

என்ன சார் இப்படி சொல்றீங்க? சரசு பதில்கள் வக்கிரம்ன்னு ஊரே பேசுது!

யோவ், புரியாதவனா இருக்கீறேஅப்படி சொல்றவன் எவனாவது அதப் படிக்காம இருக்கறானா? அசிங்கமா ஏதாவது எழுதிட்டாலும் ஹீ ஹீன்னு போட்டு காமெடி பண்ணீருவம்ல?

அத விடுங்க சார், இந்த சினிமா நியூஸ் போடறீங்கள்ல, அதுல எதுக்கு சார், கீழ ஒரு வரி அபத்தமா இங்க்லீஸ்ல அர்த்தமே இல்லாம போடறீங்க?
போனவாரம் அப்படித்தான் ஒரு நடிகை பூனை வளர்க்கறான்னு போட்டு, கீழ a pussy with a pussy அப்படின்னு போட்டிருந்தீங்க! இது எவ்வளவு ஆபாசம்?

எங்க வாசகன் அதெல்லாம் படிக்க மாட்டான்! அவனுக்கு நாம படிக்கற புக்குல இங்கிலீஷ்ல எழுதியிருக்கு அப்படிங்கறது போதும்!
அது போக சினிமா பொது அறிவுக்கு அனிலைக் கேளுங்கள்! கவர்ச்சிப் படங்களோட நடிகைகள் பேட்டி! இதுக்குமேல யூத்துங்களுக்கு என்ன வேணும்?

சார், உங்க ஜாதிப்பெருமைக்கு மறைமுகமா விழா நடத்தி, அதை வாரம் நாலு பக்கம் போட்டுக்கறதும், தியேட்டர விட்டே ஓடிப்போன கண்ட குப்பைப் படத்தையும் கூசாம நல்லாஇருக்குன்னு விமர்சனம் எழுதறதும் கிசுகிசு ன்ற பேர்ல ஆபாசக் கற்பனைகளைப் போடறதையும் எப்படி சார் ஜனங்க ஏத்துக்குவாங்க?

இத்தனை சொன்ன நீங்க, வாரம் ஒரு கோவிலைப் பத்தி எழுதறத சொன்னீங்களா? இதிலிருந்தே உங்க ரசனை தெரியுது!

ஒரு பத்திரிக்கைங்கறது சூப்பர் மார்க்கெட் மாதிரி!
இங்க கற்பூரமும் கிடைக்கும், காண்டமும் கிடைக்கும்! 
நீங்க எதை எடுத்துக்கறீங்கன்றது உங்க விருப்பம்!

கற்பூரத்த ஒரு மூலைல வெச்சுட்டு, காண்டத்தைக் கடை முழுக்கப் பரப்பி வெச்சிருக்கீங்க சார்!
உங்க பத்திரிக்கையை பொது இடத்துல கைல வெச்சிருக்கவே ஜனங்க அசிங்கப்படறாங்க தெரியுமா ?

தம்பி, நிதானமாப் பேசுங்க! இன்னைக்குத் தமிழ்நாட்டுல அதிகம் விக்கறது எங்க பத்திரிக்கைதான்!
நீங்க கிளம்பலாம்!

வெளிய வந்து ஒரு டீத்தண்ணியக் குடிச்சு மனசத் தேத்திக்கிட்டு, அசடன் அலுவலகத்துக்குப் போனான் பரமன்!

இங்க ஒரு கார்பரேட் ஆபீஸ் லுக் இருந்ததே பரமனுக்கு ஒரு நம்பிக்கை கொடுத்தது!

ஆனா, உட்கார்ந்த உடனே, சொல்லி வெச்ச மாதிரி அதே கேள்வி!எங்க பத்திரிக்கை தீபாவளி மலர் பத்தி?

சார்! அது தீபாவளி மலரா? சினிமா மலரா சார்?
ஒரு சிறப்பு மலர்ல கூடவா நடிகனோட படம் அட்டையில்?
போதாக்குறைக்கு உள்ளேயும் ஒரே சினிமா குடும்பத்து பேட்டி, அஜித் வாழ்க்கை வரலாறு, இதெல்லாம் தேவையா சார்?

சாங்கியத்துக்கு ரெண்டு பழைய கதைய எடுத்துப் போட்டு ஒப்பேத்தி இருக்கீங்க! 
உங்க பழைய தீபாவளி மலர்ல்லாம் கொஞ்சம் எடுத்துப் பாருங்க சார்!
சரி, அத விடுங்க! நம்ம வழக்கமான வீக்லி பத்திப் பேசுவோம்!
தமிழ்ப் பத்திரிக்கைலயே, இத்தனை பத்திரிக்கை வெளியிடறது நம்மதான் தெரியுமா?

தெரியும் சார்! ஆனா அது எல்லாத்துல இருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து சந்தோஷ அசடன்ல போட்டுடறீங்க!

தலையங்கத்துல அம்மாவைத் திட்டினா, தவறாம உள்ள ஒரு ஆர்டிகிள்ல கலைஞர அடிக்கறீங்க!
பயணக் கட்டுரை, வரலாறு எதை எழுதினாலும் அதை ஓவர் சென்டிமெண்டலா போட்டுத் தாக்கறீங்க!

தம்பி, எல்லாத்துலயும் குறை கண்டுபிடிக்கறது சுலபம்ப்பா!
தமிழ் வாரப் பத்திரிக்கைல இவ்வளவு பிரமாதமான லே அவுட் வேற யாருக்காவது இருக்கா?

ஆனா, உள்ள என்ன சார் போடறீங்க!

இந்த ட்விட்டர்ல இருக்கறதுனால, நீங்க அங்கிருந்து எத்தனைய பைசா செலவில்லாம எடுத்துப் போட்டு பக்கத்த நிரப்பறீங்கன்னு தெளிவா தெரியுது!
போதாக்குறைக்கு படு மொக்கையா அவுட் பாக்ஸ்ன்னு ஒரு நாலுபக்கம்!
இப்பல்லாம் அசடன் படிக்கவே பிடிக்கல சார்!

அப்போ, உங்க வயசுக்கு ஏத்தமாதிரி மைண்ட் லாஸ் ன்னு ஒரு குட்டி புத்தகம் போடுறோமே அத வாங்கிப் படிங்க!

சார், அது எங்க அப்பா காலத்து சரோஜாதேவி புத்தகத்தை விட மோசம்!சரி
, சீனியர் அசடன்னு வாரம் ரெண்டுதரம் வருதே, அதை படிச்சு அரசியல் அறிவ வளர்த்திக்குங்க!

அது படிச்சா, அரசியல் பைத்தியம்தான் பிடிக்கும் சார்! நாலு இஸ்யூ தொடர்ச்சியா படிச்சா அதுக்கப்புறம் யாரும் அரசியலே பேசமாட்டான்!


சரி, நீ என்னதான் பண்ணனும்ன்னு இங்க வேலைக்கு சேர ஆசைப்பட்டே? அதச் சொல்லு முதல்ல!

சார், நம்ம பத்திரிக்கை தமிழ்ல ஒரு டைஜெஸ்ட் மாதிரி மாறணும் சார்!

புதிய தலைமுறை, இந்தியா டுடே இதெல்லாம் ஒரு வித்தியாசமான பாதைல போறப்ப, இவ்வளவு பாரம்பரியம் உள்ள நம்ம ஏன் சார் இப்படி கமர்சியல் சீரழிவுல சிக்கி இருக்கோம்?

அமுதம் கூட வாராநதின்னு ஏதோ முயற்சி செய்யுதே!

ஓ! நீங்க அந்தக் கூட்டமா?

ஏன் தம்பி கணையாழி, கல் குதிரை எல்லாம் விட்டுட்டீங்க?
அதெல்லாம் ஒன்னு சேர்ந்து வருஷம் கூடி விக்கிறது, நம்ம ஒரு மாச சர்குலேசனுக்கு கீழ! தெரியுமா?

ஐயா அடிக்கடி சொல்லுவார். ஜனங்க எதைக் கேட்கறாங்களோ அதை மட்டும் குடு! அப்போதான் நீ நல்ல பத்திரிக்கையாளன் அப்படின்னு!

சார், ஜனங்க நல்ல விஷயம் ஜனரஞ்சக இதழ்ல வந்தா படிக்க மாட்டோம்ன்னு எப்போவாவது சொன்னாங்களா?

தம்பி, விஜய், அஜித் இவங்கள விட, விக்ரம் நல்ல நடிகரா இல்லையா?
ஆமா சார்!

ஆனா யாருக்கு கூட்டம் கூடுது?

இல்லை, கலைஞரையும் அம்மாவையும் விட நல்ல அரசியல்வாதியே இல்லையா?

என்னைக்குமே, நம்ம மக்களுக்கு, எம்ஜியார், சிவாஜி, கமல், ரஜினி, விஜய், அஜீத் கலைஞர், அம்மா அவ்வளவுதான்!

மத்ததை திரும்பிக்கூடப் பார்க்க மாட்டாங்க!

அது மாதிரிதான்- அமுதம், அசடன்!

இந்த ரெண்டு பத்திரிக்கையையும் திட்டற எல்லார் வீட்டிலும் போய்ப் பாரு, இது ரெண்டையும் வாங்குவாங்க!

ஏன்னா, இது உங்க பாட்டன் காலத்திலிருந்து தொடர்ற விஷயம்!
இத மாத்தனும்ன்னு முயற்சி பண்ணுனா, வீட்டுல சொல்லி அப்பாவ ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கச் சொல்லுங்க!

வேணும்னா, போறபோது, திசைகள்ன்னு ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்ச மாலன் இப்போ எங்க, என்ன பண்ணிட்டிருக்காருன்னு கொஞ்சம் விசாரிச்சுட்டுப் போங்க!

பேசிக்கொண்டே இண்டர்காமை எடுத்தவர், “யப்பா டேய், இந்த வாரம் அமுதம் அட்டை என்ன போடப்போறாங்கன்னு கேட்டுக்கங்கடா!
ரெண்டும் ஒண்ணா வந்துடப் போகுது!”

“தம்பி, அப்போ நீங்க...”

அவர் கை கூப்பும்போது பரமன் கோயம்பேடுக்கு ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தான்!

போனில் அவன் பேசியது ஆட்டோ சத்தத்தை மீறிக் கேட்டது!


“அம்மா, நாளைல இருந்து அப்பாவோட ஜவுளிக்கடைக்கு வர்றேன்னு சொல்லீருங்க!”“அப்படியே மல்லிகா வீட்டுக்கு ஜாதகத்தையும் குடுத்து விட்ருங்க!”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக