கிருஷ்ணா கிருஷ்ணா!
- இந்திரா பார்த்தசாரதி
வாரம் ஒரு புத்தகம்
என்று புத்தக அலமாரியிலிருந்து நிம்மதியாகக் கையில் கிடைத்த ஏதோ ஒரு புத்தகத்தை
புகைப்படம் எடுத்து, நான்கு வரி கிறுக்கிக்கொண்டிருந்தேன்!
நண்பர் @kkarthic க்கு அது பிடிக்கவில்லை
போலும்.
இந்திரா பார்த்தசாரதியின்
கிருஷ்ணா கிருஷ்ணா பற்றி எழுதச் சொல்லி திரி கிள்ளிப் போட்டுவிட்டு அமைதியாகிவிட்டார்!
சில வருடங்களுக்குமுன்
முதல் வாசிப்பில் ஒரே மூச்சில் படித்துவிட்டு வைத்த புத்தகம்தானே என்று கொஞ்சம் அலட்சியமாக
எடுத்தேன்!
ஒரு பிரம்மராட்சசன்
போல என்னைப் பிடித்துக்கொண்டது!
எனக்கு எப்போதுமே பிச்சமூர்த்தி, திஜா, அசோகமித்திரனை விட மற்ற எல்லோருமே இரண்டு படிகள் கீழேதான்!
இந்தப் புத்தகத்தின்
மறுவாசிப்பு, இந்திரா பார்த்தசாரதி
பற்றிய என் பார்வையை சுத்தமாக மாற்றிவிட்டது.
நல்லவேளையாக எனக்கு
எப்போதும் எழுத்தாளன் பூணூல் போட்டிருப்பதோ, கருப்பாய் இருப்பதோ, மீசை வைத்திருப்பதோ அவன் எழுத்தை அணுகத் தடையாக
இருந்ததில்லை!
இல்லாவிட்டால் இப்படி
ஒரு புத்தக வாசிப்பு அனுபவத்தை இழந்திருப்பேன்!
போதாக்குறைக்கு
அதன் பெயர் வேறு கிருஷ்ணா,
கிருஷ்ணா!
(இரண்டுமுறை! –
(இரண்டுமுறை! –
ஒருமுறை பிடித்த
புலிவாலே இருபத்தைந்து வருடமாகியும் விடவில்லை! சரி, சொந்தக்கதை இங்கெதுக்கு!)
பயந்துகொண்டே
வாங்கிய புத்தகம்!
பெயர் ராசி போலும்! இந்தமுறை கையில் எடுத்தது, மாதக்கணக்கில்
கீழே வைக்க விடவில்லை!
எனக்கென்னவோ, அவதாரக் கதைகளில் ராமனைப் பிடிப்பதில்லை! ஒத்துவராத பல காம்ப்ளிகேட்
ஆன ஐடியாலஜிக்களின் மொத்த உருவம் ராமன்!
புனிதன் என்ற பெயர் வாங்க, பெற்றவர், உடன்பிறந்தோர், ஊர்மிளா, ஊர் மக்கள், மனைவி, தான் பெற்ற மகன்கள் என
எல்லோர் நிம்மதியையும் சந்தோஷத்தையும் காவு கொடுப்பவனை ஒரு அவதார புருஷன் என்று ஏற்க
என் எளிய புத்தி ஒப்புவதில்லை!
சுவாரஸ்யமான,
ரசிக்கத் தகுந்த அவதாரம்,
கிருஷ்ணாவதாரம்!
எந்த hard
and fast rule ம் இல்லாமல்,
வாழ்வின் எல்லாச் சிக்கல்களுக்கும் பேக்கேஜ் தீர்வு சொல்லாத அவதாரம்!
உண்மையில் ஆண் அதிகாரம் செலுத்துவதுபோல்
ஒரு மாய பிம்பம் காட்டும் நம் சமூக அமைப்பில், பெண் எவ்வளவு டாமினன்ட் என்பதுவும் அவள் மன உறுதி,
வாழ்க்கைச் சதுரங்கத்தில்,
பெண்கள் எப்போதும் சிப்பாய்களைப் பலிகொடுத்து,
ராஜாக்களைத் தக்கவைப்பதும் கிருஷ்ணாவதாரம் சொல்லும் மறைமுகக் கதை!
நாம் எல்லோரும் அறிந்ததாய் நினைத்திருக்கும் ராதாவின் கதை, ஒரு மாறுபட்ட பார்வையில்
நம் அறியாமையைச் சொல்கிறது!
ஜிரா என்ற வேடன், நாரதர் இரண்டு வடிவத்திலும் இந்திரா பார்த்தசாரதி இறங்கி அடிக்கிறார்.
கிருஷ்ணாவதாரம் சத்திரியனுமல்ல, பிராமணனும் அல்ல, ஒரு இடையன் என்பது எவ்வளவு வசதியாக இருக்கிறது!
அந்த அட்வான்டேஜை கிருஷ்ணன் ஆரம்பம் முதலே எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறான் என்பது
வியப்பளிக்கிறது.
ஒரு தேர்ந்த மேனஜ்மென்ட் கோர்ஸ் படித்த அனுபவத்தை கிருஷ்ணனின் உரையாடல்கள் தருவது
இந்தக் கதையின் மகத்தான வெற்றி!
சத்ரியர்களையும் பிராமணர்களையும் மகாபாரத காலத்துப் பெண்கள் எப்படிப் பகடையாக்கி
விளையாடினார்கள் என்பதை, தனக்கேயான அங்கதத்துடன் கிருஷ்ணன் சொல்வதாய் நாரதர் பார்வையில் எழுதியிருக்கிறார்
இ பா!
நாம் அறிந்த மகாபாரதக் கதையை அவ்வப்போது தொட்டுக்கொண்டு, இன்னும் சொல்லாத பல பாதைகளில்
பயணிக்கிறது இந்தக் குறு நாவல்!
அவரே சொல்வதுபோல, கிருஷ்ணாவதாரத்தில் வரும்
பெண்கள் எல்லோருமே சிக்கலானவர்கள்!
அவர்களின் புத்திசாலித்தனம் அவதார புருஷனையே ஆட்டுவிக்கிறது!
கண்ணனாக இருப்பதால் மட்டுமே அத்தனை பேரையும் கையாள முடிகிறது.
நாவல் ஆரம்பித்த இடத்திலிருந்து முடிக்கும் இடம் வரை எந்த இடத்திலும் ஒரு நேர்ப்பாதையில்
செல்வதில்லை!
ஒரு கதைசொல்லிக்கான முழு சுதந்திரத்தையும் இந்த வடிவத்தில் பயன்படுத்தியிருக்கிறார்
இ பா!
எந்த இடத்திலும் தன் கருத்தை அடிக்கோடிட முயலாததே அவர் எழுத்தின் வெற்றி!
பிராமணன்,அசுரன், சத்திரியன், ஆதிக்க சாதி என எல்லாவற்றுக்கும்
ஒரு வரி விளக்கம், கதையின் ஊடே மறைந்து நிற்பது
அழகு.
ஒரு வரி தவறவிட்டாலும், ஒரு அனுபவத்தைத் தவறவிட்டதுபோல்!
ஒரு நாள் ஒரு அத்தியாயம் படிக்க முடிந்தால் அதிகம்.
சில ஒற்றைப் பக்கங்கள் வாரக் கணக்கில் மனதில் ஏறி உட்கார்ந்துகொண்டு இறங்க மறுத்து
அடம் பிடிக்கையில், ஒரு ராஜேஷ்குமார் நாவல்
போல ஒரே மூச்சில் படித்து முடிப்பது இந்த எழுத்துக்கு செய்யும் துரோகம்!
இந்த நூற்றுச் சொச்சம் பக்கம் படிக்க எனக்கு ராமாயணம்,.மகாபாரதம், இரண்டாம் இடம், பாகவதம் ஆழ்வார் பாசுரங்கள்
என்ற பல தலையணைகள் தேவைப்பட்டன!
மரணத்தின் வாசலில் கண்ணன் சொன்ன கதை என்பதால், பல இடங்களில் ஒப்புதல் வாக்குமூலமாகவே நகர்கிறது!
வழக்கமான இ பா நாவல்களை எதிர்பார்த்து இதைப் படிக்க ஆரம்பித்தால், ஒரு மாயச் சுழலில் நம்மை
இழுத்துச் செல்லும் வித்தியாசமான கதைக்களம்.
இந்த நாவல் வாசிப்பு ஒரு அனுபவம். இது
பேருக்குப்பேர் வேறுபடும்.
இதை இப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும் என்ற ஒரு கைட்லைன் இல்லாமல், தன்போக்கில், நியாபக அடுக்கில் அவ்வபோது
வருவதை எல்லாம் கண்ணனின் குரலில் சொல்லிச் செல்லும் கதை!
இதற்கு மதிப்புரை,
விமர்சனம் எழுத முயல்வது,
என் அடிப்படைக்கும் கீழான மோட்டார் வாகன அறிவை வைத்துக்கொண்டு
செவ்வாய்க் கிரகத்துக்கு ராக்கெட் ஓட்ட முயல்வது போல்!
இந்த அனுபவத்தை அவரவர் உணரவேண்டும். ஒரே மூச்சில் படிக்க நேர்ந்தால் ஒரு சுகமான
அனுபவத்தை இழக்கிறீர்கள் என்று சொல்வேன்.
No comments:
Post a comment