திங்கள், 28 டிசம்பர், 2015

சரிந்து கிடக்கும் நான்காவது தூண்!ஊடக அறங்களின் இன்றைய நிலை!

முதலில் உங்களுக்கு ஒரு கேள்வி!
உங்கள் வயது எழுபதுகளில்!
உங்கள் உற்ற நண்பர் இறந்து மூன்றாவது நாள்!
அவர் நினைவைப் போற்றும் நிகழ்ச்சி!
இறுக்கமான சூழல்!

அங்கு ஏறத்தாழ நான்கு மணிநேரம் நின்றபடி இருக்கவேண்டிய நிலை! 
அவர் நினைவைச் சுமந்தபடி வீட்டுக்கு வருகிறீர்கள்!

உங்கள் படித்த, அறிவு முதிர்ச்சியுற்ற மகன் உங்களை சாக்லேட் எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்!

முதலில் நீங்கள் அன்பாக மறுக்கிறீர்கள்! 
அவர் உங்கள் உணர்வையே மதிக்காமல் வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார்!

அந்த சூழலில் உங்கள் அன்பு மகனிடம் நீங்கள் குரல் உயர்த்திக் கோபப்படுவீர்களா?

இதற்கு ஆம் என்று பதில் சொன்னால் நீங்கள் சபை நாகரீகம் தெரியாதவர்!

இதுதான் இன்றைய நடுநிலைவாதிகளும் அறிவுஜீவிகளும் சொல்லும் செய்தி!

இன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி, எங்கள் இதய தெய்வம், தமிழர்களின் விடிவெள்ளி, டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பதவியேற்றபோது கொடுத்த பேட்டி பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகவியல் அறிஞர்களுக்கும் சமூக சேவைக்கிடையே மறந்துபோயிருக்கும்!

"உங்களை மாதம் ஒருமுறை நான் சந்திக்கிறேன். உங்கள் கேள்விகளுக்கு அப்போது விரிவாக பதிலளிப்பேன்" - இது ஜெ சொன்னது!

அப்படி எத்தனைமுறை அவர் பத்திரிக்கைக்காரர்களை சந்தித்தார்?

கடந்த நாலரை ஆண்டுகளில் எத்தனை நிருபர்கள் இதுபற்றி அவரிடம் கேள்வி கேட்டனர்?

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் இதுபற்றி எத்தனை அறிக்கைகள் விட்டுள்ளது?

தமிழக சட்டமன்றத்தில் நடக்கும் விவாதங்கள்? பற்றி இதுவரை ஊடகங்கள் விமர்சித்தது என்ன?

எத்தனைமுறை எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்பட்டன?

இந்த நான்கரை ஆண்டுகளாக எத்தனைமுறை மந்திரிசபை மாற்றியமைக்கப்பட்டது?

எத்தனை மந்திரிகளின் பதவி பறிக்கப்பட்டது? 

அதற்கான காரணத்தை எத்தனை ஊடகங்கள் மக்களுக்குக் கேட்டுச் சொல்லின?

விதி எண் 110ன் கீழ் வாசிக்கப்பட்ட எத்தனை திட்டங்கள் அமல் படுத்தப்பட்டன?
இதை ஊடகங்கள் அறியுமா?

முதலீட்டாளர்கள் மாநாட்டில் திரட்டப்பட்ட வரலாறு காணாத முதலீடுகள் வந்துவிட்டனவா?

அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டனவா? அவற்றின் இன்றைய நிலை என்ன?

மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதி கட்டிய நூலகத்தை மூட இந்த அரசு ஏன் சுப்ரீம் கோர்ட் வரை போராடியது?

தமிழகத்தில் இயங்கும் நிலையில் இருக்கும் நூலகங்களின் எண்ணிக்கை என்ன? அவற்றுக்கு எத்தனை புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன?

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் எண்ணிக்கை எவ்வளவு? 
சாராய வியாபாரம் தவிர வேறு ஏதாவது வருவாய் ஈட்டும் வேலைகளை இந்த அரசு செய்துள்ளதா?

சமீபத்திய வெள்ளத்தின்போது, சென்னையிலும் கடலூர் மாவட்டத்திலும் திறந்திருந்த அம்மா உணவகங்கள் எத்தனை? டாஸ்மாக் கடைகள் எத்தனை?

வெள்ள நிவாரணப் பணிகளில் அந்த ஏரியா கவுன்சிலர் முதல், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ன?

முதல் மழை சேதத்துக்குப்பின் அடுத்து வந்த பெருமழை எச்சரிக்கைக்கு இந்த அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

ஏரி நீரைத் திறந்துவிடுமுன் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்ன? எத்தனைபேர் அரசால் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டார்கள்?

இதில் எத்தனை கேள்விகளை நாடாளும் மஹாராணியிடமோ, அவர் காலடி அடிமை அமைச்சர்களையோ, மாநகரத் தந்தையையோ, அதிகாரிகளையோ கேட்டன இந்த ஊடகங்கள்?யாராவது ஒருவர் பதில் சொல்வார்களா?


தள்ளாத வயதில் படகில் ஏறிக்கொண்டு வெள்ளத்தில் நிவாரண உதவி செய்கிறார் ஒரு முதியவர்! அப்போது பேட்டியெடுக்க வந்ததை அன்போடு தடுத்துவிடுகிறார்!

அதன்பின் எத்திராஜ் கல்லூரியில் தன்னார்வலர்களுக்கு தன் கையொப்பம் இட்ட சான்றிதழ்கள் வழங்க அந்த முதியவர் ஏறத்தாழ நான்கு மணி நேரம் நின்றவாரே ஆயிரம் கையெழுத்துப் போட்டதோடு, அவற்றை வழங்கி வெளியே வருகிறார்!

ஒரு அரசு செய்யவேண்டிய வேலையை  அவர் செய்கிறார்!
அதை அவர் செய்யாவிட்டாலும் ஏனென்று யாரும் கேட்கமுடியாது!

இந்த அவலமான சூழலில் ஒரு தறுதலை தன் வக்கிர அரிப்பைத் தணித்துக்கொள்ள ஒரு வக்கிரமான பாடலை, தன் பங்குக்கு வெள்ள நிவாரணமாக வழங்குகிறது!

அதைத் தூக்கிக்கொண்டு ஒரு அறிவு ஜீவி மைக்கைத் தூக்கிக்கொண்டு அந்த முதியவரிடம்போய் பல்லிளித்துக்கொண்டு "... பாடல் பற்றி உங்கள் கருத்தென்ன?"

அவர் முதலில் சொன்ன பதில், "இந்த இடத்தில் இந்தக் கேள்வி தேவைதானா?"

திரும்பத்திரும்ப அவரிடம் அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது!
அவர் கோபப்படுவதை தன் வெற்றி என்று அசிங்கமாய் இளிக்கிறது அந்த ஜந்து!
(இது மிகையாய்ச் சொல்லவில்லை என்பது அந்தப் பேட்டியைப் பார்த்த அனைவரும் ஒப்புக்கொள்வர்)
கூட நின்ற மற்ற நிருபர்களும் அதைத் தடுக்க முயலவில்லை!

அதன்பிறகு அவர் கோபத்தில் வெடிக்கிறார்! "உனக்கு அறிவிருக்கறதா?"

உடனே ஊடக சுதந்திரம் சிலிர்த்து எழுகிறது!

இளையராஜா மன்னிப்புக்கேட்க வேண்டும்!

அந்த அறிக்கையின் கீழ்த்தரமான ஒரு அபத்த வாசகம்!

"சிம்பு இயற்றிய பாடலுக்கு இளையராஜா வருத்தம் தெரிவிக்காமல் நிருபரிடம் கோபித்துக்கொண்டது கண்டிக்கத் தக்கது!"

அடத் தறுதலைகளா!

எவன் எழுதியதற்கு யார் மன்னிப்புக் கேட்பது?

அந்தக் கேள்விக்கு இளையராஜா என்ன பதில் சொல்லியிருந்தாலும் உங்கள் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை ஊரே அறியும்!

"வெள்ள நிவாரண நிகழ்ச்சியில் அனிருத் மீது இளையராஜா பாய்ச்சல்!!"

இதுதானே உங்கள் மானம் கெட்ட நோக்கம்?
ஏன் இந்தக் கீழ்த்தரமான வன்மம்?

இளையராஜாவை கண்டித்த அந்த அறிக்கை ஒரு ஓரத்திலாவது அந்த நிருபரின் செயலைக் கண்டித்திருந்தால் உங்கள் நடுநிலை வேஷம் கொஞ்சமாவது பலித்திருக்கும்!

உங்களைவிட, ராத்திரியில் சந்து முனைகளில் நின்று அழைக்கும் விபச்சாரிகள் மேல்!

சுதேசமித்திரன் என்ற பத்திரிக்கையை நடத்திய பாரதியின் வழி வந்தவர்கள் நீங்கள்தானா?

உங்கள் முதுகெலும்புகளை எந்த விலைக்கு விற்று இந்த எருமைத் தோலைப் பெற்றீர்கள்?

அரசின் தோல்வியை விமர்சிக்க, கேள்வி கேட்க வக்கற்ற பேடிகளின் கூட்டம் ஒரு வெள்ளந்தி முதியவரை சீண்டிப்பார்த்து தங்கள் அசிங்கமுகத்தை மறைக்கப் பார்க்கிறது!

ஊடகங்கள் ஜெயலலிதாவை கேள்வி கேட்கப் பயப்படுவதன் உண்மைக் காரணம் பணமோ, பயமோ என்பதை விட அப்பட்டமான இனப்பற்ற என்பதே முற்றிலும் உண்மை!

பேரிடர் மேலாண்மையில் இந்த அரசின் படுதோல்வியை மறைக்க ஊடகங்கள் கையாளும் கீழ்த்தர யுக்தியே அந்தப் பாடலுக்குத் தரும் முக்கியத்துவமும் போலி எதிர்ப்பும்!

சிம்பு பாடிய பாடல் சத்தியமான கலாச்சாரச் சீரழிவுதான்!
ஆனால் அரசு நடத்தும் சாராயக் கடைகளும், உங்கள் அறிவார்ந்த சீரியல்களும் செய்யும் சீரழிவின் லட்சத்தில் ஒரு பங்கு அது!

இன்றும் தர்மபுரி ஏரியாவில் ஜாதி வன்முறைகள் நடப்பதும், தேவர் ஜெயந்தி, இம்மானுவேல் நினைவுநாள் வெறியாட்டங்களும் ஊடகங்கள் அறியாதனவா?

விஷ்ணுப்ரியா யாரென்பதாவது ஊடகங்களுக்கு நினைவிருக்கிறதா?

மக்கள் மழை, வெள்ளத்தில் உயிரையும் உடமைகளையும் இழந்து வழியின்றி நிற்கையில் முதல்வர் மக்களையோ, செய்தியாளர்களையோ சந்திக்காமல் வாட்ஸ்ஆப்பில் உளருகிறார்!

பெட்டை ஊடகங்கள் பீப் பாடலைத் துரத்தித் திரிகின்றன!

ஒருவேளை ஊடகங்களின் தீட்சண்யம் குறைந்துதான் போனதோ என்று நம்பித் தொலைத்தாலும், கருணாநிதி கையில் சிகப்புக் கயிறை உன்னித்துப் பார்த்து கார்ட்டூன் வரைகிறது தமிழர்களின் நாடித்துடிப்பு!

அந்த தீட்சண்யம் ஏன் ஊடகங்களே அரசின் அவலத்தைப் பார்க்கையில் இல்லை?

இத்தனை கேள்விகளையும் உங்களை ஒற்றை எழுத்தில் கேட்டிருக்கிறார் விஜயகாந்த்!

.....தூ!

அதைக் கேட்கும்போது அவர் கேட்ட நியாயமான கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல், 
எப்போதும் நிதானத்தில் இல்லாதவர் என்று அவரைக் குறிப்பிட்டு, பழக்கதோஷத்தில்  மா'பெறும்' போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிக்கை விட்டிருக்கிறது நிதானம் மிக்க பத்திரிக்கையாளர் சங்கம்!இளையராஜா, விஜயகாந்த் இருவரும் நடந்துகொண்ட முறை தவறு என்று உங்களுக்காக தமிழகமே குரல் கொடுத்திருக்கும் உங்கள் அறத்தை நீங்கள் பேணியிருந்தால்!

அவர்கள் செய்கையை நியாயப்படுத்தியது உங்கள் அசிங்கமான செயல்பாடு!

உங்களைத் துப்பியது விஜயகாந்த் அல்ல! 
ரோஷமுள்ள ஒவ்வொரு குடிமகனும்!

இதைத் துடைப்பது அவ்வளவு எளிதல்ல! 
இனியாவது யாருக்கும் அஞ்சாத நெறிமுறைகளை ஓரளவேனும் மீட்டெடுக்கப் பாருங்கள்!

அதுதான் உண்மையான நேர்மையாளர்கள் செய்ய வேண்டியது!

இயலாதெனில் துப்புவதைப் பொருட்படுத்தாமல் சிம்பு வீட்டுப் படுக்கையறைக்கு ஓடி ஒளிந்துகொள்ளுங்கள்!

இணைப்பு:

தங்கத் தாரகையின் அறிவார்ந்த, பொறுமையான நேர்காணலின் எழுத்து வடிவம்!வியாழன், 24 டிசம்பர், 2015

Merry Christmas

முதல் அற்புதம்!


அந்தக் கோட்டைக் கதவுகளை ஆறு மணிக்கு அடைத்துவிடுவார்கள்.
அதன்பின் உள்ளே இருப்பவர்கள் வெளியேறுவதோ, வெளியே இருப்பவர்கள் உள்ளே வருவதோ இயலாத காரியம்!
கேள்வியே கேட்காமல் அம்பெய்து கொன்றுவிடுவார்கள் அந்தக் கோட்டைக்காவலர்கள்.

உள்ளே பசியும் பட்டினியும் எல்லோருக்கும் பழகிப்போன விஷயம்!
வெளியே பகலில் பக்கத்து ஊரில் எதையாவது விற்று, சாப்பிட ஏதாவது வாங்கிவந்தால்தான் அடுப்பே பற்றவைக்க முடியும் பல வீடுகளில்!
வீட்டில் பாட்டியும் தங்கையும் பசியோடு காத்துக்கொண்டிருப்பார்கள்!
இன்றைக்காவது கொஞ்சம் சோளமாவு வாங்கிக்கொண்டுபோனால்தான் இரவு உணவுக்காவது நான்கு ரொட்டிகளாவது சுட்டுப் பசியாற முடியும்!

இது போதாதென்று அந்தத் தச்சரும் அவரது நிறைமாத கர்ப்பிணி மனைவியும்!

அந்தப் பெண்ணின் முகத்தில் தெரியும் தேஜஸ் ஏனோ அவரைப் பார்க்கும்போதெல்லாம் கையெடுத்துத் தொழத் தூண்டும்!

இந்தக் கொடுங்கோல் துயரத்திலிருந்து மட்டுமல்ல, இனி வரும் காலங்களில் மக்களின் துயரம் யாவும் துடைக்கும் ஒரு மாமருந்தை அந்தப் பெண்மணி இந்த உலகுக்காகச் சுமந்துகொண்டிருப்பதாக டேவிட்டுக்குத் தோன்றும்!

இன்று அந்தச் சோள ரொட்டியை உண்டபின் அந்தப்பெண் சிந்தப்போகும் புன்னகைக்குள் தனக்கான ஆசீர்வாதம் ஒளிந்திருப்பதாகத் தோன்ற, நடையை விரைவாக எட்டிப்போட்டான்!

சந்தைக்குப்போய் தேவையானதை வாங்கிக்கொண்டு வருவதற்குள் இத்தனை நேரமாகிவிட்டது.

ஏறத்தாழ ஓடிக்கொண்டிருந்தவனை வழி மறித்தார்கள் ஒட்டகத்தில் வந்த அந்த வணிகர்கள்.

"தம்பி! அந்தக் கோட்டைக்குள் போக என்ன வழி?"

"ஐயா, இந்த நேரத்திற்குமேல் அங்கு புதியவர்கள் போவது உசிதமல்ல!
நாளை காலை முறையான அனுமதி கேட்டு முடிந்தால் உள்ளே வாருங்கள்!
இப்போது எனக்கு வழி விடுங்கள்!"
"நானே திருட்டுத்தனமான வழியில்தான் உள்ளே போயாகவேண்டும்! அது ஆபத்தான வழி! மாட்டிக்கொண்டால் யோசனையே இல்லாமல் தலையை வெட்டிக் கோட்டைக் கதவில் செருகிவிடுவார்கள்!"
சொல்லிக்கொண்டே நடந்தவனை இரைஞ்சுவதுபோல் கேட்டார் அதில் ஒருவர்.

"தம்பி, இன்றைக்கு இரவில் அங்கு வந்தேஆகவேண்டும்!
இன்றிரவு இந்த உலகை உய்விக்கும் ஓர் அற்புதம் அங்கோர் தொழுவத்தில் நிகழப்போவதாக எங்களுக்கு இறை சேதி!"
"அந்த மூன்று நட்சத்திரங்களும் எங்களுக்கு வழி காட்டி இங்கு இவ்வளவு தொலைவு கூட்டி வந்தன!"

அப்போதுதான் டேவிட் அந்த நட்சத்திரங்களைப் பார்த்தான்! 
அவை அவனுக்கும் ஏதோ சேதி சொல்வதுபோல் கண்சிமிட்டிச் சிரித்தன!

நால்வரும் கோட்டைக்குப் பின்புறத்தில் அந்தக் குறுக்குவழியில் புகுந்து அவன் வீட்டை அடைந்தபோது நகரை முழுமையாக இருள் சூழ்ந்திருந்தது!

அவன் வீட்டையும், ஒட்டியிருந்த தொழுவத்தையும் ஒரு சுகந்தம் சூழ்ந்திருந்தது!

உள்ளிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்க, அந்த மூன்று நட்சத்திரங்களும் பளீரெனச் சுடர்விட அந்த மூன்று வணிகர்களும் அந்தக் குழந்தையின் பாதத்தில் குனிந்து முத்தமிட்டனர்!

அந்தக் குழந்தையின் பாதம் தொட்டபோது உலகை உய்விக்கும் முதல் அற்புதம் நிகழ்ந்துவிட்டதாக உணர்ந்தான்.

அன்றும் இதுபோல் ஒரு டிசம்பர் இருபத்தைந்தாம் நாள்!

இனிய கிறிஸ்துமஸ் 
நல்வாழ்த்துக்கள் !

பி.கு.:
இது Jeffrey Archer எழுதிய The First Miracle சிறுகதையின் நினைவில் நின்ற தமிழ் வடிவம்!

வியாழன், 10 டிசம்பர், 2015

ஒரே ஒரு துரோகம்!

தப்பித்தால் எதுவும் தப்பில்லை!ஜனவரி 16,, 2014
மும்பை நகரம்!

வாட் எ  உமன்!
மைதிலியைப் பார்த்ததும் இதுதான் தோன்றியது வினோத்துக்கு!
என்ன ஒரு அநியாயம்?
கடவுள் ஒரு வினோதமான ஜந்து! யாருக்கு யார் என்பதில் ஒரு சின்ன நியாயம்கூட வேண்டாமா?
ராஜாராமனின் பக்கத்தில் ஒரு தேவதையைப்போல் நின்றுகொண்டிருந்தவளைப் பார்க்கையில் வினோத்தின் கண்கள் சில நிமிடங்கள் இமைப்பதையும் மறந்தன!

வினோத்?
வம்சி சாப்ட்வேர் லிமிட்டட் கம்பெனியின் ஸ்தாபகன்!
முப்பத்துச் சொச்சம் வயதில், சில ஆயிரம் கோடிகளின் அதிபன்!
ஒரு அநாதை ஆசிரமத்தில் வளர்ந்த கம்ப்யூட்டர் நிபுணன்.
இழப்பதற்கு ஏதுமில்லை என்பதே முக்கியமான தகுதியாய் சில ரிஸ்க் எடுத்து இன்று விரல் சுட்டும் கோடீஸ்வரர்களில் ஒருவன்!

வெற்றி ஒன்றே இலக்கு என்றானபின், வழிமுறைகள் அவனுக்கு அனாவசியம்!

எல்லோரும், ஒரு பெட்டிக்கடை அளவில் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் என்று யோசித்துக்கொண்டிருந்த காலத்திலேயே, ஸ்டாக் மார்க்கெட் லிஸ்டிங்கைக் குறிவைத்து ஒரு பப்ளிக் லிமிட்டெட் கம்பனியை தைரியமாக ஆரம்பித்தவன்!

சில உள்ளடி வேலைகள், சில இன்சைட் ட்ரேடிங் என்று தொடர்ந்த விளையாட்டில்இன்று அதன் பத்துரூபாய் பங்குகள், போனஸ், ரைட்ஸ் என்று குட்டிபோட்டு, புத்தக மதிப்பு ரூபாய் ஐந்தாயிரத்து சொச்சம்!

அதன் பெரும்பகுதி ஷேர்கள் வினோத் பெயரில்!
ஐந்து சதவீத பங்குகள், ராஜாராமன் பெயரில்!

ராஜாராமன் அவனைப்போலவே, சொந்தம் பந்தம் ஏதுமின்றி, யாரோ, எங்கோ கொடுத்த பணத்தில் படித்து முன்னுக்கு வந்தவன்.

முதன்முதலில் இவனிடம் இண்டர்வியூவுக்கு வந்ததில், அவனுக்குள் ஒரு ஸ்பார்க் இருப்பது சரியாகப் புரிந்து வேலைக்குச் சேர்த்தான் வினோத். இப்போது வம்சி சாப்ட்வேர் லிமிட்டட் கம்பெனியின் நிர்வாக இயக்குனன்!
இன்று அவனுக்குத்தான் கல்யாணம்!

பொதுவாக வினோத் இதுபோல் விசேஷங்களைத் தவிர்த்துவிடுவான். இன்று ராஜாராமன் என்பதால் ரிசப்ஷனைத் தவிர்க்க முடியவில்லை! 

வினோத் வந்ததிலிருந்து, கை குலுக்கிக் கிளம்பும்வரை, முதுகில் ஊரும் பார்வைகளை உணர்ந்துகொண்டேதான் இருந்தான்! மேடையில் இருந்த அந்த சில நிமிடங்களைத் தவிர்த்து!

எளிய மேடை அலங்காரத்தில் ஒரு மருண்ட மானைப்போல் நின்றுகொண்டிருந்தாள் மைதிலி!

பார்த்த முதல் பார்வையிலேயே, அந்த ராஜாராமனின் ரெட்டை மண்டையும், இவளின் குறை இல்லாத அழகும் ஒட்டாமல் தெரிந்தது!

ராஜாராமனுக்குக் கை கொடுத்துவிட்டு , வேண்டுமென்றே மைதிலியை உரசிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தான் வினோத்!

அவள் கைபட்டு உரசிய இடம் இப்போது காரில் திரும்பிப் போகும்போதும் இனிப்பாய் எரிந்தது!

பணம், பணம் என்று துரத்தித் திரிந்ததில் இந்த காதல், கல்யாணம் இவற்றிலெல்லாம் ஈடுபாடும் நம்பிக்கையும் நேரமும் இல்லாமல் போனவன்!

கொஞ்சம் கரன்சியைத் தூக்கிப் போட்டால், ஒரு நிமிடம் இவள் பக்கத்தில் நிற்கமுடியாதா என்று ஏங்கவைக்கும் அழகிகளும் சில ராத்திரிகளில் இவன் சொன்னதைச் செய்யக் காத்திருக்கையில் ஒரு ஆப்பிள் சாப்பிட சிம்லா வரை போய் ஒரு எஸ்டேட்டை வாங்குவதில் உடன்பாடு இல்லாமல்தான் இருந்தது மைதிலியைப் பார்க்கும்வரை!

கையில் ஸ்காட்ச் கோப்பையோடு கெஸ்ட் ஹவுஸ் பால்கனியில் உட்கார்ந்த்திருந்தவனுக்கு விடிவதற்குள் இந்தக் கல்யாணத்தை நிறுத்தும் சாத்தியக் கூறுகள் என்ன என்பதே யோசனையாக முதலில் இருந்தது!
.
விடியற்காலை மெதுவாக மிதந்துபோய் படுக்கையில் விழுந்தபோது மனதுக்குள் ஒரு தெளிவான திட்டவரைபடம் ரெடி!
ஆபரேஷன் மைதிலி.

ஒரே கல்லில் தான் அடிக்கவேண்டிய மாங்காய்களை மனதுக்குள் கணக்கிட்டவன் ஒரு சின்ன விசிலோடு அன்றைய குளியலை முடிக்கும்போது மாலையாகியிருந்தது!

திடுதிப்பென்று இன்றைக்கு மைதிலிக்கு முதலிரவு என்பது நியாபகம் வந்தபோது ஒரு சின்ன சுருக்!

பரவாயில்லை, இன்னும் மூன்று மாதங்கள்! அதன்பின் மைதிலி என்னவள்!
சில போன் கால்களைச் செய்தபின், ஒரு பாட்டை விசில் அடித்துக்கொண்டே, கதவைத் திறந்தபோது அவள் நின்றாள்! காதர் அனுப்பிய அழகி!

வாடி மைதிலி என்று அறைக்குள் இழுத்துப் போனான்!

நான்கு நாள் மொரீஷியஸ் ஹனிமூன் முடித்து, ராஜாராமன் ஆபீசுக்கு வருவதற்குள் மைதிலிக்கு வினோத் எப்பேற்பட்ட பாஸ் என்பது புலப்படுமளவு போனிலேயே ஆளுமையைப் புரியவைத்தான்!

அன்றிரவு பார்க் ஷெராடன் ஹோட்டலில் வினோத் அளித்த தனி விருந்தில், ராஜாராமனுக்கு மேனேஜிங் டைரக்டர் போஸ்டிங் ஆர்டர் கையில் கொடுக்க, ஆடிப்போய்விட்டான்!

கண்ணீரோடு, ஹோட்டல் என்று பார்க்காமல் அவன் காலில் விழுந்தவனைப் பார்த்த மைதிலி கண்ணில் தெரிந்த சின்ன ஏமாற்றமும், கீர்த்திலாலில் வாங்கிய பிரத்தியோக வைர நெக்லஸை அவள் விரல் தொட்டுக் கொடுத்தபோது முகத்தில் தெரிந்த ஆச்சர்யமும் மூன்று மாதம் என்பது அதிகம் என்பதைப் புரியவைத்தது!

அடுத்தநாளே நடந்த போர்ட் மீட்டிங்கில் ராஜாராமன் மேனேஜிங் டைரக்டர் ஆக அப்ரூவல், வினோத்தின் வீட்டு காம்பவுண்டிலேயே வீடு, என அடுத்தடுத்த காய் நகர்த்தல்கள்!

அடுத்தடுத்த காண்ட்ராக்ட்களில் பேச்சுவார்த்தைக்கு இனி மேனேஜிங் டைரக்டர் என்ற முறையில் ராஜாராமனே சென்று முடிக்கட்டும் என்ற அறிவிப்பில் கிறங்கி, ஏறத்தாழ மாதம் முழுவதும் பறந்துகொண்டே இருந்தான் ராஜாராமன்!

அவள் வாழ்வில் காணாத நகைகள், உயர்தர பர்ப்யூம்கள் என, பத்தே நாளில் வீழ்ந்த மைதிலி!

ஏறத்தாழ அதன்பின் எல்லா இரவுகளும் இருவருக்கும் சொர்க்கபுரி!

விபரம் சற்றும் புரியாமல் புதுப் பதவி தந்த உற்சாகத்தில் மனைவியையும் மறந்து சுற்றிக்கொண்டிருந்த ராஜாராமனுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி!

பதவிப் பொறுப்பேற்ற இரண்டாவது மாதமே அடுத்த பூச்செண்டு!

மேலும் இருபது சதவிகித பங்குகள் ராஜாராமனின் பெயரில் மாற்றப்பட்டன!

இனி, சேர்மேன் என்ற கௌரவப் பொறுப்பில் தான் ஒதுங்கி இருந்துகொள்வதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக எல்லாப் பொறுப்புகளையும் ராஜாராமனே ஏற்றுக்கொண்டு விரைவில் தனக்கு ஓய்வளிப்பார் என்று நம்புவதாகவும் டைரக்டர்களின் அவசரக் கூட்டத்தில் அறிவிக்க, வினோத்தின் உடல்நிலை மற்றும் மனநிலை பற்றி தாறுமாறான யூகங்கள் ராஜாராமன் காது படவே பேசப்பட்டன!

கலங்கிப்போன ராஜாராமன் அன்றிரவே வினோதை வீட்டில் சந்திக்க நேரம் கேட்க
“வாயேன், ஒரு எட்டு மணிக்கு, உன் பெண்டாட்டியையும், அவங்க பேர் என்ன, மாலதியா?”
“இல்லை, மைதிலி சார்!”
“அவங்களையும் அழைச்சுக்கிட்டு வா! Let us talk over a small dinner!”

பிரமாதமாக அலங்கரித்துக்கொண்டு கிளம்பிய மைதிலியை ரசிக்கக்கூட ராஜாராமனுக்குத் தோன்றவில்லை!

அவன் மனதில் வினோத் உடல் நிலை பற்றிய குழப்பமும் பதட்டமும்.
வாசலில் வந்து வரவேற்ற விழிகளுக்கு, கள்ளச் சிரிப்பில் பதில் சொல்லின மைதிலியின் இதழ்கள்!

தயங்கித் தயங்கி விஷயத்துக்கு வந்தான் ராஜாராமன்!

“சார், உங்களுக்கு ஏதும் உடல்நிலை சரியில்லையா?”
“Why Rajaaraam? Am I looking so?”
“இல்ல சார். திடீர்ன்னு நீங்க டோட்டல் நிர்வாகத்தில் இருந்து விலகிக்கொள்வது எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது!”
“Boy! நான் இத்தன நாளும் பணம், பணம்ன்னு பணத்தைத் துரத்தி, எனக்கே அலுத்துப் போச்சு!”
“எனக்கென்ன, சேர்த்து வைக்கப் பிள்ளையா குட்டியா? எனக்கப்புறம் உன் கைல கம்பெனி பத்திரமா இருக்கும் அப்படின்னு எனக்குப் படும்வரைக்கும்தான் நான் காத்திருந்தேன்!”

“இனி கம்பெனிய நீ பார்த்துக்கோ! நான் கொஞ்சநாள் இயற்கை அழகை ரசிச்சுக்கிட்டிருக்கேன்!” சொல்லிக்கொண்டே மைதிலியைப் பார்த்து ஸ்பஷ்டமாகக் கண்ணடித்துச் சிரித்தான் வினோத்!

மாடுபோல் இது எதையும் கவனிக்காத நிம்மதி, சந்தோஷப் பெருமூச்சில் ராஜாராமன்!

ஆனால் மறுநாள் அவ்வளவு சுபிட்க்ஷமாக விடியவில்லை! வினோத்தின் உடல் நலம் பற்றி றக்கை கட்டிப்பறந்த வதந்திகளின் விளைவில் அடுத்தடுத்த நாட்களில் பத்துப்பத்து சதவிகிதமாகக் குறைந்தன வம்சி சாப்ட்வேரின் பங்குகள்!

வாங்க யாருமற்ற நிலையில் பாதாளத்தில் சரிந்த பங்குகளை "யாரோ" மொத்தமாக வாங்கிக்கொண்டிருந்தார்கள்!

மூன்றாவது நாளே ராஜாராமனை இறுகிய முகத்தோடு அறைக்குள் அழைத்தான் வினோத்!

“ஏதாவது செய் ராஜாராமன்! இல்லாவிட்டால் இந்தச் சரிவிலிருந்து நாம் மீள்வது கஷ்டம்!”
“ஆனால், என்ன செய்ய சார்?”
“ஒரு வதந்தியை ஒழிக்க, இன்னொரு வதந்தி!”
“இன்னைக்கே பிரஸ் மீட் வை!”
ஜெர்மனியின் SAP வம்சியின் 51% பங்குகளை வாங்க பேச்சுவார்த்தைகள் முடியும் நிலையில் இருப்பதாகச் சொல்!”
“சார்! இது எப்படி சாத்தியம்?”
“ராஜா, இந்த விளையாட்டு விதிகள் உனக்குத் தெரியாததா என்ன?”
“ஒரு பொய்யை குழிதோண்டிப் புதைக்க, அதை உண்மையாக்குவதுதான் வழி!”
சத்தமாகச் சிரித்தான் வினோத்!

“புரியல சார்!”
“திங்கட்கிழமை நீ ம்யூனிச் போறே! அங்க எல்லாம் நடக்கும்!”

பிரமித்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ராஜாராமன் வாய் விட்டு சொல்லிவிட்டான்!
“சார், நீங்க உண்மையில பெரிய ராட்சசன்! உங்க நிலைக்கு நான் வர இன்னும் நூறு வருஷம் ஆகும்!”

“போ மேன்! போய் பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்! மறக்காம வர்றவங்களுக்கு கவர் கொடுக்க ஏற்பாடு செய்.”
சத்தமாகச் சிரித்த வினோத்தை பிரமித்துப் பார்த்தான் ராஜாராமன்.

பிரஸ் மீட்டும் கவரும் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்ய மறுநாள் முதல் அசுர வேகத்தில் எகிற ஆரம்பித்தன வம்சியின் பங்குகள்!

மாலையில் வீட்டுக்கு வந்து தான் ஜெர்மனி போகப்போவதை சொல்ல வாயெடுத்த ராஜாராமனுக்கு இன்னொரு ஆனந்த அதிர்ச்சி!

“டார்லிங், இந்த நாலு நாள்ல வம்சியோட ஷேர் எல்லாம், வளைச்சு வளைச்சு வாங்கினது யார் தெரியுமா?” - கேட்டது மைதிலி!

“தெரியல! ஆனா வாங்கின அதிர்ஷ்டசாலி இன்ஸ்டண்டா ஒரு கோடீஸ்வரன் ஆய்ட்டான்!”

“வாங்க! உங்களுக்கு அந்த கோடீஸ்வரனை காட்டறேன்!”

தரதர என்று அவனை இழுத்துக்கொண்டுபோய் கண்ணாடி முன்னாள் நிறுத்தினாள் மைதிலி!

“நீங்கதான் அது! நான்தான் அந்த ஷேர் எல்லாம் வாங்கினேன்!”
நம்பவே முடியாமல் அவளை வெறித்துப் பார்த்தான் ராஜாராமன்!

“உனக்கெப்படி...”
“நான் ஷேர் மார்கெட்டில் பலநாளாய் விளையாடுபவள்!”
“இந்தாங்க, இந்த ட்ரான்ஸ்பர் பாரத்தில் கையெழுத்துப் போடுங்க!”

இன்னைக்கு, வம்சியோட மெஜாரிட்டி ஷேர் ஹோல்டர் வினோத் இல்லை! நீங்கதான் மிஸ்டர் ராஜாராமன்!”

சந்தோஷத்தில் திக்குமுக்காடினாலும், “இது இன்சைட் ட்ரேடிங்ன்னு கிரிமினல் குற்றம் மைதிலி!”

“நீங்க ஜெர்மன் போய் வர்றதுக்குள்ள இந்த ஷேர் எல்லாம் வித்துருவேன்!”
“நீங்க வந்ததும் அந்தப் பணத்தை என்ன செய்யலாம்ன்னு மட்டும் சொல்லுங்க!”

அன்னைக்கு முழு ராத்திரியும் சந்தோஷத்தில் தூங்கவே இல்லை ராஜாராமன்!

மைதிலியை ரொம்ப நாளுக்கப்புறம் தன் பக்கம் திருப்பியபோது, அவள் அசந்து தூங்கிக்கொண்டிருந்தது கொஞ்சம் ஏமாற்றம்!

தூங்கிகொண்டிருந்த அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த ராஜாராமனுக்கு, தன் அதிர்ஷ்டம் கொஞ்சம் திகட்டுமளவு மிகையோ என்று பட்டது!
எல்லாமே இந்த தேவதை வந்த நேரம்!

திங்கட்கிழமை ராஜாராமன் ஜெர்மனிக்குப் புறப்படும்போது, வம்சியின் ஷேர் விலை உச்சத்தைத் தொட்டிருந்தது!
எல்லாமே ஒரு திட்டமிட்ட ஒழுங்கோடு நடைபெறுவது கண்கூடாகத் தெரிகிறது!ம்யூனிச் ஏர்போர்ட்டில் வரவேற்ற ஏழடி உயரன் தன்னை SAP ன் பைனான்ஸ் டைரக்டர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, வாசலில் காத்திருந்த மெர்சிடிஸ் வழுக்கலில் “இன்றிரவு ஓய்வெடுங்கள், நாளை பேசிக்கொள்ளலாம்” என்று ஒரு ஏழு நட்சத்திர ஹோட்டலில் இறக்கிவிட்டுப் போனபோது நாளை இந்த டேக் ஓவரை நம்மால் சமாளிக்க முடியுமா என்ற ஒரு பயப் பட்டாம்பூச்சி வயிற்றுக்குள் பறந்துகொண்டே இருந்தது!

மறுநாள் அந்தக் கம்பனியின் டைரக்டர்கள் ஆறு பேர் அவனது அறைக்கே வந்தபோது, அவளாலேயே நடப்பதை நம்ப முடியவில்லை!

அவர்கள் மூச்சுக்கு மூச்சு வினோத் பெயரை உச்சரித்தபோதுதான் வினோத் எவ்வளவு பெரிய ஆள் என்று புரிந்தது.

ரகசியம் என்பதால் அந்த ஹோட்டல் கான்பரன்ஸ் ஹாலில் வைத்தே  ஒப்பந்தம் கையெழுத்து ஆனபோது, தன்னையே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக்கொண்டான் ராஜாராமன்.

உடனே ஒப்பந்த நகலை மெயிலில் அனுப்பியபோது ஜெர்மனியில் மணி எட்டு.

“ஓகே மிஸ்டர் ராஜ்ராம்! நாளை முதல் ஒரு வாரம் ஜெர்மனியில் அரசுமுறை விடுமுறை!
அது முடிந்ததும் உங்களை கம்பெனிக்கு அழைத்துச் செல்கிறோம்! அதுவரை, ஜெர்மனியின் ஒயினையும், பெண்களையும் பருகிக்கொண்டிருங்கள்!”

அந்த நேரத்தில் ஒரு வீடியோ பிரஸ் கான்பரன்ஸ் ஏற்பாடு செய்திருந்தான் வினோத்!
ராஜாராமன் தன் சாதனையை கூடியிருந்த பத்திரிக்கையாளர்களுக்குச் சொல்ல, அப்போதுதான் அதைக் கேட்பதுபோல் ஆர்ப்பரித்தான் வினோத்!

இந்தியாவின் அனைத்து செய்திச் சேனல்களும் இந்த டேக் ஓவர் பற்றி அலற, மறுநாள் முதல் வம்சியின் ஷேர் விலை பதினாயிரங்களில் எகிற ஆரம்பித்தது!

இரண்டே நாளில், ராஜாராமனின் எல்லாப் பங்குகளும் விற்கப்பட, அவன் கனவிலும் நினைத்திராத எத்தனையோ பூஜ்ஜியங்கள் அவன்  அக்கௌண்டில்!

மறுநாளே, ஜூலை 4, 2014  அந்தத் தொகை மொத்தமாக வழிக்கப்பட, மைதிலியின் சாமர்த்தியத்தை எண்ணி வியந்தபோதுதான் அந்த வினோதமான போன் வந்தது!

தன்னை SAP நிறுவனத்தின் பைனான்ஸ் டைரக்டர் என்று அறிமுகம் செய்துகொண்ட குரல் புதிதாக இருந்தது.

படபடப்பான ஜெர்மன் ஆங்கிலத்தில் பேசிய அந்த நபர், இப்போதுதான் இந்தியாவிலிருந்து செய்தி வந்ததாகவும் SAP வம்சியுடன் அப்படி எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை என்றும் சொன்னதோடு, இன்னும் மூன்று நாள் கழித்து அலுவலகம் திறந்தபின், தன்னை சந்தித்து, அதன் பிறகே அவன் நாடு திரும்ப வேண்டும் என்றும் மிரட்டல் கலந்த அதிகாரத்தொனியில் சொல்ல, உறைந்து போனான் ராஜாராமன்.

இரவெல்லாம் யோசித்த ராஜாராமனுக்கு அப்போதுதான் மைதிலியின் பாராமுகமும், அவள் மீது ஜொலித்த புதுப்புது நகைகளும் நியாபகத்துக்கு வந்தது!

தன் படுக்கை அறையில் வீசிய வினோத்தின் செண்ட் வாடையும், மூன்று மாத காலத்தில் தான் அடைந்த உயரங்களும் வம்சியின் ஷேர் விலையின் ஏற்ற இறக்கமும் ஸ்லைட் போல மனத் திரையில் ஓடதான் எவ்வளவு திட்டம் போட்டு ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்பது புரிந்தது!

இந்தியாவில் இப்போது நள்ளிரவு - பரவாயில்லை என்று உடனே வினோத்துக்கு போன் செய்ய, மூன்றாவது ரிங்கிலேயே வினோத்தின் குரல் "ஹலோ!"

நடுங்கும் குரலில் ஜெர்மனியில் நடந்ததை சொல்லிக்கொண்டே, ஹோட்டல் எண்ணிலிருந்து மைதிலியை அழைக்க, மறுமுனையில் பக்கத்தில் அந்த போன் அடிப்பது துல்லியமாகக் கேட்டது!

முகம் இருள இரண்டு இணைப்பையும் துண்டித்த ராஜாராமனுக்கு என்ன செய்வது என்ற பயத்தை விட, இவ்வளவு சுலபமாகத் தான் ஏமாற்றப்பட்டது வலித்தது!

அவசரமாகத் தன் வங்கிக்கணக்கை சரிபார்க்க, வெறும் ஆயிரத்தில் இருந்த இருப்பு அவன் உண்மை நிலவரத்தை சொன்னது!

வெகுநேரம் யோசித்தவனுக்கு, முதலில் தான் விடுபட வேண்டிய இக்கட்டு எது என்பது புலப்பட, முதலில் இங்கிருந்து இந்தியாவுக்குப் போகவேண்டியது அவசியம் என்று புரிந்தது!

இந்தியாவில் எப்போது பத்து மணி ஆகும் என்று போனை வெறித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவனை அழைத்தது கம்பெனியின் இன்னொரு டைரக்டரின் எண்!

பயந்துகொண்டே போனை எடுத்தவன் முகத்தில் அறைந்தது அந்தக் குரல் சொன்ன செய்தி!

தலை குப்புற விழுந்த வம்சியின் பங்குகள் முடக்கப்பட்டு, அவனுக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது!

அதைவிடத் துயரமான செய்தி, போலீஸ் விசாரணைக்காக வினோத்தும், மைதிலியும் சென்ற வண்டி காஸ் டேங்கரில் மோதி, இருவரும் அடையாளம் தெரியாமல் கருகிப் போனது!

இனி என்ன நடக்கும் என்பது ஒரு குழந்தைக்குக் கூடத் தெரியும்! வினோத்தும் உயிரோடு இல்லாத நிலையில், தப்பிக்கும் சாத்தியங்களே இல்லாமல் தான் சிக்கிக்கொண்டது புரிந்தது!

பொருளாதாரக் குற்றங்களை இண்டர்போல் எப்படிக் கையாளும் என்பதும், ஜெர்மனியின் சித்திரவதை முறைகள் என்ன என்பதும் கண்முன் தோன்றி மிரட்ட, பழம் நறுக்கும் கத்தியை எடுத்துக்கொண்டு பாத் டப்புக்குள் விழுந்தான்!

சற்று நேரத்தில் அவன் மணிக்கட்டிலிருந்து வழிந்த ரத்தம், இளஞ்சிவப்பில் தண்ணீருக்குள் கரைய, அடுத்த சிலமணி நேரத்தில் கதவை உடைத்துப் பார்த்தபோது, சிகப்புநிற திரவத்தில், சுத்தமாக வெளுத்து இறந்துகிடந்தான் ராஜாராமன்!

அதன்பின் வம்சியின் ஷேர் விவகாரத்தில் திவாலான சிலர் தற்கொலைகளோடு எல்லோராலும் இந்த விவகாரம் மறக்கப்பட்டது!


ஜூலை 6, 2014.

ஆஸ்திரேலியாவின் ஒரு சிறு நகரத்தின் ஒதுக்குப்புறமான சர்ச்சில், இந்திய வம்சாவளி ஆஸ்திரேலியன் ஆல்பர்ட்டுக்கும், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நெதர்லேண்ட் குடியுரிமை பெற்ற மேரிக்கும் (அப்படித்தான் அவர்களின் பாஸ்போர்ட் சொன்னது) எளிய முறையில் திருமணம் நடந்தது இந்தியாவில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

அன்றிரவு, ஒரு இரைச்சலான ரெஸ்டாரண்டில் ஆல்பர்ட் ஒருவனுடன் கீழ்க் குரலில் பேசிக்கொண்டிருந்தான்!

“ஒகே ரமேஷ், சொன்னபடி அத்தனை பணமும் என் மலேசிய அக்கவுண்டில் கிரெடிட் ஆகிவிட்டது! இனி ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறேன்! மேலும் ஏதும் தேவை என்றால் உன்னை அழைக்கிறேன்! நன்றி.”

“இதில் உன் கமிஷன் - கை மாறிய பெட்டிக்குள் சில மில்லியன் டாலர்கள்!

“பை வினோத்! மைதிலிக்கும் உனக்கும் என் வாழ்த்துக்கள்!”

ஆல்பர்ட்டின் முகம் இறுகியது!
“இன்னொருமுறை அப்படிக் கூப்பிடாதே! என் பெயர் இப்போது ஆல்பர்ட்!”

“என் ஒருவனைத் தவிர!”
சொல்லிக்கொண்டே ஒரு புன்னகையோடு நகர்ந்தவனை யோசனையோடு பார்த்தான் ஆல்பர்ட்!

மறுநாள் செய்தித் தாள்களில், நதியோரம் கிடந்த ரமேஷின் சடலம் மீட்கப்பட்ட செய்தி ஒரு ஓரமாக வந்திருந்தது!

ஜூலை 8 .2014
ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய அந்த இந்தியத் தம்பதிகள் எந்த உறுத்தலும் இல்லாமல் நெதர்லாண்ட் மக்கள் வெள்ளத்தில் கலந்தார்கள்!

ஜூலை 17, 2014

அந்த ஊர் நேரம் மாலை 6.15க்கு திட்டமிட்ட நேரத்தில் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்திலிருந்து 283 பயணிகள், 15 ஊழியர்களோடு  புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் போயிங் 777 விமானத்தின் பிசினெஸ் கிளாஸ் இருக்கைகள் இரண்டில் உட்கார்ந்திருந்த ஆல்பர்ட்டும் மேரியும் ஒருவரை ஒருவர் புன்னகையோடு பார்த்துக்கொண்டனர்!

நாளை காலை கோலாலம்பூரில் காலடி வைக்கும்போது நம் அக்கௌண்டில் இருக்கும் தொகை ஏறத்தாழ தமிழ்நாட்டின் ஒரு வருட பட்ஜெட்!

சொல்லிக்கொண்டே புன்னகையோடு தன் பக்கத்தில் அவளை இழுத்தபோது விமானம் உக்ரேன் எல்லையில் பறந்துகொண்டிருந்தது!
அப்போது மணி இரவு 10.30!


மறுநாள் உலகத்தின் அனைத்து ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் அதுதான் தலைப்புச் செய்தி!