வியாழன், 24 டிசம்பர், 2015

Merry Christmas

முதல் அற்புதம்!


அந்தக் கோட்டைக் கதவுகளை ஆறு மணிக்கு அடைத்துவிடுவார்கள்.
அதன்பின் உள்ளே இருப்பவர்கள் வெளியேறுவதோ, வெளியே இருப்பவர்கள் உள்ளே வருவதோ இயலாத காரியம்!
கேள்வியே கேட்காமல் அம்பெய்து கொன்றுவிடுவார்கள் அந்தக் கோட்டைக்காவலர்கள்.

உள்ளே பசியும் பட்டினியும் எல்லோருக்கும் பழகிப்போன விஷயம்!
வெளியே பகலில் பக்கத்து ஊரில் எதையாவது விற்று, சாப்பிட ஏதாவது வாங்கிவந்தால்தான் அடுப்பே பற்றவைக்க முடியும் பல வீடுகளில்!
வீட்டில் பாட்டியும் தங்கையும் பசியோடு காத்துக்கொண்டிருப்பார்கள்!
இன்றைக்காவது கொஞ்சம் சோளமாவு வாங்கிக்கொண்டுபோனால்தான் இரவு உணவுக்காவது நான்கு ரொட்டிகளாவது சுட்டுப் பசியாற முடியும்!

இது போதாதென்று அந்தத் தச்சரும் அவரது நிறைமாத கர்ப்பிணி மனைவியும்!

அந்தப் பெண்ணின் முகத்தில் தெரியும் தேஜஸ் ஏனோ அவரைப் பார்க்கும்போதெல்லாம் கையெடுத்துத் தொழத் தூண்டும்!

இந்தக் கொடுங்கோல் துயரத்திலிருந்து மட்டுமல்ல, இனி வரும் காலங்களில் மக்களின் துயரம் யாவும் துடைக்கும் ஒரு மாமருந்தை அந்தப் பெண்மணி இந்த உலகுக்காகச் சுமந்துகொண்டிருப்பதாக டேவிட்டுக்குத் தோன்றும்!

இன்று அந்தச் சோள ரொட்டியை உண்டபின் அந்தப்பெண் சிந்தப்போகும் புன்னகைக்குள் தனக்கான ஆசீர்வாதம் ஒளிந்திருப்பதாகத் தோன்ற, நடையை விரைவாக எட்டிப்போட்டான்!

சந்தைக்குப்போய் தேவையானதை வாங்கிக்கொண்டு வருவதற்குள் இத்தனை நேரமாகிவிட்டது.

ஏறத்தாழ ஓடிக்கொண்டிருந்தவனை வழி மறித்தார்கள் ஒட்டகத்தில் வந்த அந்த வணிகர்கள்.

"தம்பி! அந்தக் கோட்டைக்குள் போக என்ன வழி?"

"ஐயா, இந்த நேரத்திற்குமேல் அங்கு புதியவர்கள் போவது உசிதமல்ல!
நாளை காலை முறையான அனுமதி கேட்டு முடிந்தால் உள்ளே வாருங்கள்!
இப்போது எனக்கு வழி விடுங்கள்!"
"நானே திருட்டுத்தனமான வழியில்தான் உள்ளே போயாகவேண்டும்! அது ஆபத்தான வழி! மாட்டிக்கொண்டால் யோசனையே இல்லாமல் தலையை வெட்டிக் கோட்டைக் கதவில் செருகிவிடுவார்கள்!"
சொல்லிக்கொண்டே நடந்தவனை இரைஞ்சுவதுபோல் கேட்டார் அதில் ஒருவர்.

"தம்பி, இன்றைக்கு இரவில் அங்கு வந்தேஆகவேண்டும்!
இன்றிரவு இந்த உலகை உய்விக்கும் ஓர் அற்புதம் அங்கோர் தொழுவத்தில் நிகழப்போவதாக எங்களுக்கு இறை சேதி!"
"அந்த மூன்று நட்சத்திரங்களும் எங்களுக்கு வழி காட்டி இங்கு இவ்வளவு தொலைவு கூட்டி வந்தன!"

அப்போதுதான் டேவிட் அந்த நட்சத்திரங்களைப் பார்த்தான்! 
அவை அவனுக்கும் ஏதோ சேதி சொல்வதுபோல் கண்சிமிட்டிச் சிரித்தன!

நால்வரும் கோட்டைக்குப் பின்புறத்தில் அந்தக் குறுக்குவழியில் புகுந்து அவன் வீட்டை அடைந்தபோது நகரை முழுமையாக இருள் சூழ்ந்திருந்தது!

அவன் வீட்டையும், ஒட்டியிருந்த தொழுவத்தையும் ஒரு சுகந்தம் சூழ்ந்திருந்தது!

உள்ளிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்க, அந்த மூன்று நட்சத்திரங்களும் பளீரெனச் சுடர்விட அந்த மூன்று வணிகர்களும் அந்தக் குழந்தையின் பாதத்தில் குனிந்து முத்தமிட்டனர்!

அந்தக் குழந்தையின் பாதம் தொட்டபோது உலகை உய்விக்கும் முதல் அற்புதம் நிகழ்ந்துவிட்டதாக உணர்ந்தான்.

அன்றும் இதுபோல் ஒரு டிசம்பர் இருபத்தைந்தாம் நாள்!

இனிய கிறிஸ்துமஸ் 
நல்வாழ்த்துக்கள் !

பி.கு.:
இது Jeffrey Archer எழுதிய The First Miracle சிறுகதையின் நினைவில் நின்ற தமிழ் வடிவம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக