சனி, 9 ஜனவரி, 2016

காதல் என்பது எதுவரை???

ஆதலினால் காதல் செய்வீர்!“ஈஸ்வர், இதெல்லாம் தப்பில்லையா?”
கேட்ட அஞ்சலி குரலின்  குழைவே அவள் சம்மதத்தைச் சொன்னது!
ஏசி அறையின் குளிரிலும் தாபத்தில் தகித்துக்கொண்டிருந்தன இரண்டு உடல்களும்!

ஈஸ்வரும், அஞ்சலியும் கோவையின் இருவேறு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள்.

இரண்டு  வீட்டிலும் இவர்கள் வேலைக்குப் போய்த்தான்  அடுப்பெரிக்கும் நிலை இல்லை!
பெருமைக்கு பத்துலட்சம் நன்கொடை கொடுத்து இஞ்சினீயர் ஆக்கப்படும் எத்தனையோ இளவட்டங்களில் இவர்களும் இருவர்!

 இருவரும் ஒரே ஜாதி என்பது மட்டும் ஒற்றுமை இல்லை!
இன்னொன்றும் இருக்கிறது!
இருவர் வீட்டிலும் ஏறத்தாழ ஒரே விஷயத்தை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லி அனுப்பியிருந்தார்கள்!
" இதோ பார், காலேஜுல யார் பின்னாடியாவது லவ்வு கிவ்வுன்னு சுத்தினதா எங்க காதுக்கு வந்தா, ஒரே குழந்தைன்னு பார்க்க மாட்டேன். கொன்னு கெணத்துல வீசீருவேன்! நியாபகம் இருக்கட்டும்!
எப்ப, யாரைக் கட்டிவைக்கணும்ன்னு எங்களுக்குத் தெரியும்! புரிஞ்சுதா?"

புரிஞ்சதுனாலதான் இன்னைக்கு பொள்ளாச்சியில் ரூம் போட்டிருக்கிறார்கள்!

சின்ன வயசிலிருந்தே கேட்டது கிடைக்கும் வாழ்க்கை படிப்பையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள விடவில்லை!

கல்யாணம் வரைக்கும் ஜாலியாகப் பொழுதைப்போக்க காலேஜுக்கு வந்தவர்கள் தற்செயலாக கல்லூரி ஆண்டு விழாவில் சந்திக்க, இருவருக்கும் இடையே பற்றிக்கொண்டது ஈர்ப்பு!

யாரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் கொங்கு நாட்டு வளப்பம் அஞ்சலி என்றால், கறுப்புக் கட்டழகன் ஈஸ்வர்!

பார்த்த முதல் நாளே டாமினோஸ் க்கு அழைத்த ஈஸ்வரின் தைரியம் அஞ்சலிக்கும், கேட்டதும் பிகு செய்யாமல் பைக்கின் பின்னால் ஏறியது ஈஸ்வருக்கும் பிடித்துப் போனது!

அன்றைக்கு ராத்திரி ரூம் மேட் ஸ்வேதா கேட்டாள் " அஞ்சு, சாயந்திரம் எங்க போனே?"
ஓசியில வாங்கித் தர்றேன்னு கூப்பிட்டான், போனேன்!"
"பாத்துடி, லவ்வு கிவ்வுன்னு ஏதாவது ஆரம்பிக்கப் போறே!"
"போடீ நான் ஒன்னும் வாழ்க்கையை காம்ப்ளிகேட் ஆக்கிக்க அவ்வளவு முட்டாள் இல்லை!
இதெல்லாம் ஒரு சின்ன த்ரில், டைம் பாஸ்! அவ்வளவுதான்!”

அடுத்தடுத்த நாட்களில் வந்த குறுஞ்செய்திகள், அழைப்புக்கள், நேரில் தேடிவந்து வாசலில் நின்று மணிக்கணக்காய்ப் பேசிய கதைகள் எல்லாம் அடுத்த கட்டத்துக்;கு நகர்த்திச் சென்றன!
ஸ்வேதாவின் எச்சரிக்கைகள் காற்றில் கரைந்தன!

மூன்றாவது செமெஸ்டர் லீவில் ஊருக்குப் போய்விட்டு வரும்போது அப்பா பஸ் ஏற்றிவிட, பெருந்துறை டோல்கேட்டில் ஈஸ்வரின் பைக்கில் ஏறி கட்டிக்கொண்டு பறந்தாள் அஞ்சலி!

அடுத்துவந்த இரண்டு வருடங்களில் ஊருக்குப் போகாத எல்லா ஞாயிறுகளிலும் கோவையிலிருக்கும் எல்லா தியேட்டர், ரெஸ்டாரன்ட் இருட்டு மூலைகளும் இவர்களின் முத்தத்தில் நனைந்து சூடாகின!

இருவரும் ஒருவரை ஒருவர் உருகிக் காதலிப்பதாக நடித்தாலும், இது வெறும் பொழுதுபோக்குக்கு என்பதை இருவரும் உணர்ந்தே இருந்தார்கள்!


பலமுறை கண்டித்த தோழியும் ஒரே வார்த்தையால் அடக்கப்பட்டாள்.
 " இது ஒரு சின்னத் த்ரில்! உன்னைப்போல பஞ்சாங்கங்களுக்கு இது புரியாது. இதனால்தான் என் கற்பு போகும்ன்னு நெனைச்சா அந்த சோ கால்டு கற்பே எனக்கு வேண்டாம்!
அப்போ பேசாம இவனையே கல்யாணம் பண்ணிக்கோடி!
இவனையா?
இவன் ஈரோடுன்னு தெரியும், எங்க ஜாதின்னும் தெரியும் ஆனா இவனெல்லாம் கல்யாணம் பண்ணிக்கற அளவு ஒர்த் இல்லடி!
இதெல்லாம் காலேஜ் வாழ்க்கைல ஒரு பாடம்ன்னு நினைச்சு மறந்துட்டு, அப்பா பாக்கற வசதியான பையனைக் கட்டிக்கிட்டு நிம்மதியா செட்டில் ஆயிடணும்!
பாவம்டி அவன், உன்னை சீரியஸா லவ் பண்றான்டி!
அதுக்கு?
 நீ வேணும்னா அவனுக்கு ஒரு வாழ்க்கை கொடு!
 போடி, போய் அசைன்மெண்ட் எழுது!

ஏறத்தாழ அதே நேரம் ஈஸ்வர் ஒரு க்வார்டரோடு ரூமில்!

டேய் ஈஸ்வர், அந்த அஞ்சலியை சீரியஸா லவ் பண்றியாடா?
யாரு ? அந்த போண்டா கோழியையா?
மச்சான் இதெல்லாம் சும்மா அப்படியே விட்றணும்டா ! அதை விட்டுட்டு சீரியஸா எடுத்துக்கிட்டா அவ்வளவுதான்!
டேய் அவளும் உன் ஜாதிதானடா? அப்புறம் என்ன?
அவ பெருந்துறைல இருந்து வர்றான்னு தெரியும் அவ்வளவுதான்!
 மத்தபடி அவ யாரு, என்னன்னு எனக்கும் தெரியாது! அப்பன் கிட்ட சண்டை போட்டு ரிஸ்க் எடுக்கற அளவு இதெல்லாம் ஒர்த் இல்லடா!
அடப்பாவி, அவ ஏதாவது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனா என்ன பண்ணுவே?
உன்னை எனக்குத் தெரியாதுடின்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்!
அவ படிச்சவடா!
ஏதாவது ஆதாரம் போலீஸ் கேசுன்னு போய்ட்டா என்ன பண்ணுவே?
ஏண்டா, நீயே போய் சொல்லிக் கொடுப்ப போல!
கோர்ஸ் முடிச்சுப் போனதும் இந்த சிம் கார்டைத் தூக்கிப் போட்டுருவேன்! அவளுக்கு என் முழுப் பேரு கூடத் தெரியாது!

இந்த செமஸ்டரோட படிப்பு முடியுது!

ஏனோ இந்தமுறை ஊருக்குப் போய் வந்ததிலிருந்து அஞ்சலி இவனிடம் ரொம்ப இழைகிறாள்!

இன்றைக்கு ரெண்டுநாள் தங்கலாக பொள்ளாச்சி வந்தது கூட அவள் ஐடியாதான்!

ஏதோ முக்கியமான விஷயம் சொல்லப் போவதாகச் சொல்லிக் கூட்டிவந்திருக்கிறாள்!

இதோ, போன வாரம் ஊருக்குப் போயிருந்தபோது அம்மா சொன்ன விஷயத்தை மனதுக்குள் மறைத்துக்கொண்டுதான் இன்றைக்கு முதல் முறையாக அவளோடு பூட்டிய தனி அறையில்.

 அம்மா தெளிவாகச் சொல்லி அனுப்பிவிட்டாள்.
இந்தத் தை மாதம் பொங்கல் லீவிலேயே காஞ்சிக்கோவில் பண்ணையார் மகளை நிச்சயம் செய்யப்போவதாகவும், சித்திரை மாசம் கல்யாணம்ன்னும்!
பண்ணையாருக்கு ஒரே மகள்! நூறு ஏக்கர் சொத்து!
 கல்யாணத்துக்கு ரெண்டு கிலோ தங்கம், ஒரு ஆடி கார், பத்து லட்சம் பெட்டிப் பணம்!

இதை இந்த லூசுகிட்ட எப்படி சொல்லப்போறோம்? இது வேற ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும்ன்னு சொல்லுது.

பார்ப்போம் ரொம்ப அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சா, சமாதானமாப் பேசி ஊருக்குப் போனதும் எல்லா விஷயத்தையும் மறந்துற வேண்டியதுதான்!
இப்போ சும்மா கிடைக்கிற சுகத்தை ஏன் இழக்கணும்!

ஈஸ்வர், என்று ஈனஸ்வரத்தில் ஏதோ பேசவந்தவளின் வாயை உதட்டால் மூட, அந்த இரண்டு நாளும் அவர்களுக்கு பேச நேரமே இருக்கவில்லை!
இளமை அந்த அறையெங்கும் நிர்வாணமாய் அலைந்துகொண்டிருக்க, ஒருவருக்குள் ஒருவர் முங்கி எழுந்துகொண்டிருந்தார்கள்!

இதோ, கிளம்பும் நேரம் வந்துவிட்டது!

சொல்லு அஞ்சு, ஏதோ சொல்லணும்ன்னு சொன்னே?
ஒன்னும் இல்லடா, இந்த வருஷம் படிப்பு முடியப்போகுது!
வீட்டில் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சுட்டாங்க!
 அதுதான்!!

நிதானமாக ஒரு  சிகரெட்டைப் பற்றவைத்த ஈஸ்வர் ஒரு முடிவுக்கு வந்தான்! கோடி காட்டிவிடுவது நல்லது!

அஞ்சு, நானே இதைப்பத்தி பேசணும்ன்னு நினைச்சேன்!
 இந்தமுறை ஊருக்குப் போனப்ப அம்மா என் கல்யாணத்தைப் பத்திப் பேசுனாங்க!
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல!
நம்ம விஷயம் என் அப்பாவுக்குத் தெரிஞ்சா என்னை வெட்டிப் போட்டுடுவாரு!

அப்போ, என்னை கை விட்டுடுவையாடா?
பெரிய குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் அஞ்சலி!

இதற்கு கொஞ்சமும் தயாராக இல்லாத ஈஸ்வர்  அரை மணி நேரம்  அவள் காலில்  விழாத குறையாகக் கெஞ்சியும் அவள்  கொஞ்சமும்  சமாதானம் ஆகவில்லை!

ஒருமணிநேரம் மெளனமாக அசையாமல் உட்கார்ந்திருந்த அஞ்சலி மூக்கை உறிஞ்சிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
உன்னைப்போல் ஒரு கேவலமான    ஈனப்பிறவியைக்  காதலித்ததற்கு வெட்கப்படுகிறேன்!
இது என் வாழ்க்கையில் ஒரு கெட்ட கனவு.
இனி என் முகத்தில் விழிக்காதே!
 என்னைக்கொண்டுபோய் ஹாஸ்டலில் இறக்கிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் போய்விடு!

ஈஸ்வருக்கு சந்தோஷத்தை முகத்தில்  காட்டாமல் மறைக்க பெரிய சிரமமாக இருக்க, அவசரமாகத் துணிகளை பேக் செய்ய ஆரம்பித்தான்!

இவ்வளவு சுலபமாக இது முடியும் என்று அவன் கனவுகூடக் காணவில்லை.
 அதுவும் இப்படி இரண்டுநாள் ஒரு வெறித்தனமான சந்தோஷ அனுபவத்துக்குப் பிறகு!

ஒரு மணிநேரப் பயணத்தில் ஹாஸ்டலில் போய் இறங்கிய அஞ்சலி அவன் பக்கம் கூடத் திரும்பவில்லை!

அன்றைக்கு ரூம் மேட்டுடன் தண்ணியில் மிதந்த ஈஸ்வருக்கு சந்தோசம் தாங்கவில்லை! அவன்தான் பாவம்டா பாவம்டா என்று புலம்பிக்கொண்டே இருந்தான்!


இங்கே,
வேகமாக ஹாஸ்டலுக்குள் நுழைந்து பையை மூலையில் எறிந்த அஞ்சலி, ஸ்வேதாவைக் கட்டிக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தவள் பத்து நிமிடம் சிரிப்பை அடக்கவே இல்லை!

அவன் மூஞ்சி எப்படிப் போச்சு தெரியுமாடி? நான் என் வீட்டு விஷயத்தை சொல்வதற்குள் அது உளற ஆரம்பித்துவிட்டது!
அவங்க வீட்டில் பெண் பார்க்கிறார்கள் என்று ஆரம்பித்தது!
ஒரே அழுகை ஆர்ப்பாட்டம் செய்து பெரிய சீன் போட்டு அவனைக் குற்றம் சொல்லித் தப்பித்து வந்துட்டேன்!

அருவருப்பாய்ப் பார்த்த ஸ்வேதாஇந்த ரெண்டு நாள் உன் வாழ்க்கையில் உறுத்தவே உறுத்தாதா?”  என்று கேட்க,
நீயெல்லாம் எந்தக் காலத்துலடி இருக்கே?

இன்னும் அம்மாஞ்சித்தனமாவே இருக்கறதுனால உனக்கு காலேஜுல ஒரு சிலை வைக்கச் சொல்றேன்!


பொங்கலுக்கு ஊருக்குபோகும்போது நூறுமுறை சொன்னாள் அஞ்சலி!
கண்டிப்பா நிச்சயதார்த்தத்துக்கு வந்துருடி!
என்னை மன்னிச்சுக்கடி. என்னால அந்தக் கேவலத்தை வேடிக்கை பார்க்க வரமுடியாது!

நக்கலாகச் சிரித்து எழுந்துபோனாள் அஞ்சலி!


பொங்கலுக்கு மறுநாள்!
காஞ்சிக்கோவிலே களைகட்டியிருந்தது!
பண்ணையார் மகளுக்கு நிச்சயதார்த்தம்!

ஈஸ்வர் வீட்டிலிருந்து இருபது காரில் வந்த சொந்தங்கள் பந்தலை அடைத்து உட்கார்ந்திருக்க, ஈஸ்வருக்குப் பக்கத்தில் இன்னொரு அலங்காரச் சேர் போடப்பட்டிருக்க,
 பெண்ணின் வருகைக்கு ஆவலோடு காத்திருந்தான் மூர்த்தி என்று வீட்டில் அழைக்கப்படும் ஈஸ்வரமூர்த்தி!


குனிந்த தலை நிமிராமல் நகை மூட்டையாக வந்து நின்றாள் -

 நித்யா என்று வீட்டில் அழைக்கப்படும் நித்யாஞ்சலி!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக