சனி, 20 பிப்ரவரி, 2016

ஆணாதிக்க சமுதாயம்!

பெண்களை மாற்றும் திருமண வாழ்க்கை!அடையாறு தியாசஃபிகல் சொசைட்டி!

மெல்லிய ஒளி சூழ்ந்த அமைதியான இருள்!
அந்தப் பிரசித்தமான ஆலமரத்தடி மேடையில் உயர்ந்து வளர்ந்த தும்பைப்பூ போல உட்கார்ந்து மெல்லிய குரலில் உரையாடிக்கொண்டிருக்கிறது அந்த நெடிய உருவம்! (அவர் அதை உரையாடல் என்றே அழைப்பார். பிரசங்கம் என்ற வார்த்தை அவருக்குப் பிடிக்காது)
ஜே கே என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி!

அவர் கலந்துரையாட வரும் நாளெல்லாம் சில வருடங்களாக தவறாமல் வந்து முதலிரு வரிசைகளில் ஏதோ ஒன்றில் இடம் பிடித்து அமர்ந்துகொள்வான் அந்தக் கண்ணாடியணிந்த ஒல்லியான உயரமான இளைஞன்.

பெரிய கூட்டம் ஏதுமில்லை!
நூற்றுக்கும் கொஞ்சம் அதிகமான பெரிய குழு!

மெல்லிய குழல் விளக்கு வெளிச்சம்!
ஒலிபெருக்கி ஏதுமின்றி, எல்லோருக்கும் கேட்கும் மெல்லிய, அழுத்தமான குரல்!
மூச்சுவிடும் ஓசைகூடக் கேட்காத அடர் மௌனத்தில், ஒரு மந்திரம்போல் ஒலிக்கிறது அவர் குரல்!

கேள்வி கேட்பவர்களுக்கு, மெல்லிய குரலில் ஒரு நண்பனைப்போல் பதில் சொல்லிக்கொண்டே வந்தவர், என்ன நினைத்தாரோ, அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்.

“நண்பா, தினமும் வந்து என்னைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் நீ ஏன் உரையாடலில் பங்கேற்பதே இல்லை? உனக்கு ஏதும் கேள்விகளே எழவில்லையா? (Friend, you are present every day, staring at me but not participating in the discussion! Don’t you have any questions to ask?”

“என் பங்கேற்பு கவனிப்பதில் இருக்கிறது! அதில் நான் கற்றுக்கொள்கிறேன்! கேள்வி கேட்கும் அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்ள எனக்கு இன்னும் காலம் இருக்கிறது என்று உணர்கிறேன்!
மேலும் இன்னும் சில நாட்களில் எனக்குத் திருமணம் நடக்க இருப்பதும் ஒரு காரணம்!”
(Sir, my participation is in listening and I’m learning through that. I feel I’m way behind in attaining the basic knowledge to ask questions!
Moreover, I’m getting married in near future and that too is another reason for being a silent observer!)

அந்த சூழலில் எதிர்பாராத அந்த பதிலில் சிறு ஆச்சர்யமான சலசலப்பு எழ, புன்னகையோடு அவனை அருகே அழைத்த அந்த ஞானி,
அவன் தலையில் கைவைத்து

திருமணத்துக்கான முக்கியத் தகுதி உனக்கு வந்துவிட்டது நண்பா! வாழ்த்துக்கள்! (Congrats Friend, you ve attained the major quality for getting married!)  என்று ஆசீர்வதிக்க, மீண்டும் ஒரு சிரிப்பலை!

அந்த இளைஞன்தான் நம் கதை நாயகன் ரவி!

அன்று கலந்துரையாடல் முடிந்தபின், டிராப் செய்வதாய்ச் சொன்னவர்களின் அன்பை புன்னகையோடு மறுத்துவிட்டு, மெதுவாக திருவல்லிக்கேணி நோக்கி நடக்க ஆரம்பித்தான்!

அவனுக்கு நடப்பதென்றால் கொள்ளை பிரியம்!

அதுவும் நிலாக்காயும் இரவு, கடல் காற்று, அலைகளின் மெல்லிய இரைச்சல் இவை இன்னும் மனதை வருட மெதுவாக அன்றைய ஜே கேயின் விளக்கங்களை அசைபோட்டபடியே நடந்தான்!

ஏழு மணிக்கே அடங்கிவிடும் 1980களின் சென்னையின் வெறிச்சோடிய கடற்கரை சாலையில் நடந்துகொண்டே இருந்தவன், காந்தி சிலைக்கு அருகே கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்!

நிலவும், கடலும் இரவும் சொல்லும் கதைகளைக் கேட்டபடி உட்கார்ந்திருந்தவனுக்கு, இரவுக் காட்சிக்குப் போகலாம் என்று சித்தப்பா சொல்லியிருந்தது நினைவுக்கு வர, எழுந்து சற்றே நடையை எட்டிப்போட ஆரம்பித்தான்!

இப்படித்தான் இருந்தன ரவியின் திருமணத்துக்கு முந்தைய நாட்கள்!

வீம்புக்குப் பிடித்த புலிவால் படிப்பு!
(CA எல்லாம் கஷ்டம் தம்பி, யோசிச்சுக்க, நீ வேறு சம்பந்தம் இல்லாத கெமிஸ்ட்ரி படித்த பையன் - இது ஆடிட்டர்!
“இந்தப்படிப்பு எங்க பசங்களுக்குத்தான் வரும்! உங்களுக்கெல்லாம் இது சரிப்படாது என அந்தக் காலத்தில் என்னை சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். நீ படி ரவி! நம்ம பசங்கள்ள உன்னால மட்டும்தான் இது முடியும்! நீ ஆரம்பித்து வை!” - இது அவன் பெரிதும் மதிக்கும் மாமா!
இந்தக் கொம்பு சீவல்கள்தான் அவனை இந்தப் படிப்புக்குத் துரத்தின!)

சென்னை வந்து இறங்கிய ரெண்டாவது மாதமே, அவனுக்கான பாதைகள் புலப்பட ஆரம்பித்துவிட்டன!

தினமும் காலை முதல் மாலைவரை வேறு வழியே இல்லாமல் அலுவலகம் - இன்டர்ன்ஷிப்!

மாலை வீடு வந்ததும், குளித்து, ஜீன்ஸ், முரட்டுக் கதர் ஜிப்பா, தோளில் ஒற்றை நோட்டுப் புத்தகத்தோடு ஜோல்னாப்பை, கோலாப்பூரி செருப்பு என்று கிளம்பினால், லலித் கலா அகாடமி அல்லது நுங்கம்பாக்கத்தில் ஏதோ ஒரு ஹாலில் ஓவியக் கண்காட்சி, அல்லது இலக்கியக்கூட்டத்துக்குப் போகிறான் என்று அர்த்தம்!
அன்று வீடு திரும்ப எத்தனை மணி ஆகும் என்று கணக்கே கிடையாது!
அதுவும் கூடப் படித்த உயிர்த் தோழி லலிதாவோ, உயிர் நண்பன் சபாவோ இருக்கும் பட்சத்தில், நுங்கம்பாக்கம் blow hot blow coldல்  நள்ளிரவு வரை அன்றைய கண்காட்சி பற்றிய விவாதத்தில் ஓடும்!
அல்லது, தீவுத் திடலில் சிற்றரங்கத்தில் நடைபெறும் மாற்று நாடகங்கள், சின்னச் சின்ன ஜுகல்பந்தி இசைக் கச்சேரிகள்!
இதற்குத் தவறாத துணை, லலிதாவின் சித்தி மகள், ஸ்டெல்லா மாரிஸ் மாணவி சுதா!

(இப்போது சிற்றரங்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை!
முற்றிலும் ஓலையால் வேயப்பட்ட சிறிய வட்டவடிவ அரங்கம். ஆங்காங்கு தொங்கவிடப்பட்ட மல்லிகைச் சரம்! தரையில் விரித்து அமர கோரைப்பாய் என்று அவ்வளவு உயிர்ப்பான அரங்கம்!)

ஒய் ஜி மகேந்திரன், சோ, எஸ் வீ சேகர், காத்தாடி ராமமூர்த்தி எல்லாம் கூப்பிடு தூரத்தில் கலைவாணர் அரங்கத்தில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்க,
இங்கு கூத்துப்பட்டறை முத்துசாமி போன்ற ஆட்கள் சந்தடியில்லாமல் நடித்துக்கொண்டிருப்பார்கள்!

ஒப்பனையே இல்லாமல், பார்வையாளர் மத்தியிலிருந்து இயல்பாய் பங்கேற்கும் நடிகர்களோடு மிகக் குறைந்த ஆடியன்ஸ்க்கென்று நடக்கும் மாற்று நாடகங்கள்!

மாதம் ஒருமுறை நடைபெறும் ஒரு ஜுகல்பந்தி.

இதுபோக வெளிநாட்டுக் கலைக்குழுக்கள் நடத்தும் கன்னிமாரா அரங்க ஆங்கில நாடகங்கள்!

தேடித்தேடிப் போய்ப் பார்ப்பான்!

இப்போதுபோல் டிவி, வீடியோ எல்லாம் இல்லாத காலம்! எப்போதாவது அபூர்வமாகக் கிடைக்கும் வெளிநாட்டு வீடியோ கேசட்டுகள் மட்டுமே மாற்று சினிமா!

அந்த நிலையில் Alliance francaise, German hall, British Council, American Consulate  என எல்லாவற்றிலும் உறுப்பினன்!

மாதம் ஒருமுறையேனும் திரையிடப்படும் குறும்படங்கள், கேன்ஸ் திரை விருதுப் படங்கள் பார்த்து, அங்கே வரும் குறுந்தாடி, தலை கலைந்த இளைஞர்களுடன் சுடச் சுட அனல் கக்கும் விமர்சனம்!

வாரத்தில் ஒருநாளாவது, வீட்டிலிருந்து நூறடி தூரத்தில், பெல்ஸ் ரோட்டில் இருந்த கணையாழி அச்சகத்தில் முகாம்!

மை வாசனையோடு சுடச்சுட அச்சாகும் கணையாழியை குழந்தையைக் கையில் வாங்குவதுபோல் வாங்கிப் படிப்பான்!

பாலா, சுதாங்கன், மாலன், சுப்ரமணிய ராஜு, திலீப் குமார் என்று யாராவது ஒருவரோடு சின்ன, மரியாதையான உரையாடல் அப்போது வாய்க்கும்!

எப்போதாவது அதிர்ஷ்டம் இருந்தால், அசோகமித்திரன், சுஜாதா என்று மூலவர் தரிசனமும் கிடைப்பதுண்டு!

குமுதம், விகடன் இவற்றை ஒரு எள்ளல் புன்னகையோடு ஒதுக்கிவிட்டு கணையாழி, கல்குதிரை, கசடதபற என்று இவன் படிக்கும் புத்தகங்களைப் பார்த்து சித்தி தலையில் அடித்துகொள்வார்!

இது ஒரு பக்கம்!

இன்னொரு பக்கம் வேறு நண்பர்கள்!

நல்லவனுக்கு நல்லவன், முரட்டுக்காளை என்று ரஜினி  படத்துக்கு முதல்நாள் முதல் காட்சி! விசிலும் ஆட்டமும் தூள் பறக்கும்!

முட்டுக்காடுசில்வர் சேண்ட்ஸ் என காலை முதல் மாலைவரை சுற்றிவிட்டு, சத்யம் தியேட்டரிலோ, அண்ணா மேம்பாலத்திலேயோ சரியாக நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாட்டம்!

படிப்பு?
அதற்குத்தான் லலிதா இருந்தாளே!

மகராசி எப்போது கூப்பிட்டாலும் முகம் சுளிக்காமல் லைப்ரரிக்கு வருவாள்!
24 மணி நேர இன்ஸ்டிட்யூட் லைப்ரரியில் புத்தகத்துக்குள் முகம் புதைக்கும் நெருப்புக்கோழிகளுக்கு இவர்களைக் கண்டாலே சிம்ம சொப்பனம்!

சிரிப்பும் அரட்டையுமாக இவர்கள் படிக்கும் தோரணையே அவர்களுக்குப் பிடிக்காது!

இரவு ஒருமணி, இரண்டு மணிக்கெல்லாம் யமாஹா பைக்கில் கொண்டுபோய் வீட்டில் இறக்கிவிட்டுத் தனியே வீட்டுக்குப் போவாள் - சித்தப்பா பாஷையில் ஆண்பிள்ளைக் காமாட்சி!

போதாக்குறைக்கு டிசம்பர் வந்தால் தேடித்தேடி மகாராஜபுரம், எம் எஸ், செம்மங்குடி, உமையாள்புரம், எல்.சுப்பிரமணியம் பத்மா சுப்பிரமணியம் சித்ரா விஷ்வேஸ்வரன் என்று வேறு உலகத்தில் சிலநாள் வாசம்!

மூன்றரை வருடம் எப்படி எப்படியோ ஓடியது!

படிப்பும் முடிந்து, ஓசூரில் வேலை!

அப்போதும் வார இறுதிகளில் ஏதாவது நாடகம், சினிமா இருந்தால் தயங்காமல் சென்னைக்கு வந்து பார்த்துப் போவதுண்டு!


அப்புறம் எல்லோருக்கும் நடப்பது அவனுக்கும் நடந்தது!

கல்யாணம்!

கல்யாணத்துக்குப் பின் உடனே சென்னையில் ஒரு வேலையைத் தேடிக்கொண்டு சென்னைக்கு வந்தவனுக்கு சொர்க்கமே மீண்டு வந்ததுபோல் இருந்தது!

வீடு பார்க்கும் இடைவெளியில் எல்லா மெம்பர்ஷிப்பையும் புதுப்பித்துக்கொண்டான்!

சித்தப்பா வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் வீடு!

எல்லாம் எதிர்பார்த்ததுபோல் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது! அந்த வாரம் ஒரு ஓவியக் கண்காட்சிக்கு மனைவியை அழைத்துப்போகும்வரை!

ஐந்து நிமிடத்துக்குமேல் அவளுக்கு அங்கு பார்க்க ஏதுமில்லை!
"வீட்டுக்குப் போலாங்க!"

புது மனைவியின் மனதைப் புண்படுத்த மனமில்லாமல் வீட்டுக்குக் கிளம்பிப் போகும் வழியில் புத்தகக் கடையில் நிறுத்தி, கணையாழியோடு, குமுதமும் விகடனும் வாங்கும்போது சித்தி சிரிப்பது மனசுக்குள் கேட்டது!

அதற்குப் பின் ஒவ்வொன்றும் வரிசைக்கிரமமாக நடந்தது!

“இப்படி ப்ரண்ட்ஸ் பிரண்ட்ஸ் ன்னு தினமும் லேட்டாவே வந்தா என்னங்க அர்த்தம்?”
“நான் எத்தனை நேரம்தான் தனியாக உட்கார்ந்திருப்பது?”
“ஏங்க, வீட்டிலிருக்கும் கொஞ்ச நேரத்திலும் அந்தப் புத்தகத்தைப் படிச்சுக்கிட்டு இருந்தா எப்படிங்க, வாங்க கோவிலுக்குப் போயிட்டு வரலாம்!”
“இன்னைக்கு எஸ் வீ சேகர் ட்ராமாவுக்குப் போலாமா, உங்க சித்தி கேட்கச் சொன்னாங்க!”
“மறுபக்கம் எல்லாம் ஒரு படமாங்க? வேற ஏதாவது நல்ல படத்துக்குப் போலாமே ப்ளீஸ்!”
"அந்த ஜிப்பா நல்லாவே இல்லை உங்களுக்கு! தூக்கிப் போட்டுட்டேன்!"


வளர்த்துவானேன்! ரவி குடும்பஸ்தன் ஆனான்!


இன்றைக்கும் ஏதாவது புத்தகக் கண்காட்சிக்குப் போனால், ஏதாவது இலக்கிய மாத இதழ் கண்ணில் பட்டால், பழைய காதலியைப் பார்ப்பதுபோல் கண்ணோரம் மெலிதாய்க் கசிய ஆசையாய்த் தொட்டுப் பார்த்துவிட்டு நகருவது ரவிக்குப் பழகிப்போனது!
என்றாவது ஒன்றிரண்டு வாங்குவதுண்டு!

ஆனால், இன்றும் வாரம் தவறாமல் குமுதம் விகடனோடு, மங்கையர் மலரும் அவள் விகடனும்!
கர்னாடக இசை?
ம்,,, காரில் தனியே போகையில் எப்போதேனும் கேட்பதுண்டு!


ஆம்!
இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் கல்யாணத்துக்குப்பின் பெண்களின் விருப்பங்கள் மதிக்கப்படுவதே இல்லை!

அவர்களின் உலகமே ஆண்களுக்காக மாறித்தான் போகிறது!


அவர்களின் தியாகங்கள் மதிக்கப்படுவதே இல்லை!

😂😂😂😂😂😂😂😂😂😂