செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

காதல் கதைக்கு எத்தனை முடிவு?


காதல் என்பது எதுவரை?இந்த இரவு விடியாமல் நீண்டுகொண்டே இருக்கக் கூடாதா என்றிருந்தது வந்தனாவுக்கு!

அவனும் அவன் முகரையும் என்று எத்தனை முறை கரித்துக் கொட்டியிருப்பாள் இந்த ரவியை!
இப்போது அவன் வைத்துப்போன கெடுவை யோசித்துக்கொண்டு தூங்காமல் கழிந்துகொண்டு இருக்கிறது இரவு!
காலம் எல்லாவற்றையும் அப்படிப் புரட்டிப் போட்டிருக்கிறது!

ஏறத்தாழ பதினைந்து வருடப் பழக்கம் ரவிக்கும் அவளுக்கும்.

எட்டாவது படிக்கும்போது அந்த ஊருக்கு மாற்றல் ஆகிவந்த ஆசிரியரின் மகன் ரவி!
அவன் வரும் வரைக்கும் எல்லாப் பரீட்சைகளிலும் வந்தனாதான் முதல்! அவன் வந்த முதல் மாதப் பரீட்சையிலிருந்து இழுபறி ஆரம்பம்!

அதுவும் ரவி முதல் மதிப்பெண் வாங்கும் நாட்களில் அவன்  முகத்தில் பிறக்கும் ஏளனப் புன்னகை அவளைக் குத்திக் கிழிப்பதுபோல் இருக்கும். அடுத்த பரீட்சைக்கு விடியவிடியப் படித்து முதல் மார்க் வாங்கினால்தான் நிம்மதி.
ரேங்க் கார்டைக் கையில் வாங்கிக்கொண்டு பெருமிதமாய் அவன் பக்கம் திரும்பினால், அப்போதும் அதே நையாண்டிப் புன்னகைதான்!

வீட்டுக்கு வந்து அம்மாவிடம் எரிச்சலாய்ப் புலம்புவாள். "அவன் முகரையைப் பார்த்தாலே எரிச்சல் வருதும்மா! எங்கிருந்து வந்து தொலைத்தது இந்த சனியன்!"
ஆரம்பத்தில் சமாதானம் சொல்லிப்பார்த்த அம்மா அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் காதிலேயே விழாததுபோல் நகர்ந்துவிடுவாள்!

பிளஸ் டூவில் அவளைவிட ரவி நான்கு மார்க் அதிகம்!

மெட்ராசுக்குப் போய்ப் படிக்க வந்தனாவுக்கு ரொம்ப ஆசை!
அம்மாவும் அப்பாவும் வெளியூருக்குப் பெண்ணை அனுப்ப மனமில்லாமல் உள்ளூர் என்ஜினீயரிங் காலேஜில் சேர்த்தபோது கொஞ்சம் சந்தோஷமாகக்கூட இருந்தது!

இந்த ரவி சனியன் எப்படியும் மெட்ராஸுக்குப் போய்டும். அந்த நக்கல் சிரிப்பை வாழ்நாளில் இனிப் பார்க்கவே நேராது”  என்று இருந்தவளுக்கு அடுத்த இடி!
அவன் பார்வர்ட் கம்யூனிட்டி அதனால் அண்ணா யுனிவர்சிட்டியில் இடம் கிடைக்கவில்லை என்று அவனும், அதே காலேஜுக்கு, அவள் படித்த அதே ட்ரிபிள் என்று வந்து உட்கார்ந்தபோது விதியை நொந்துகொள்வது தவிர என்ன செய்வது என்று தெரியவில்லை!

அப்போது தென்றல்போல் வந்தான் அவளது ராஜகுமாரன்!
சந்திரன்!
உண்மையிலேயே சந்திரனைப்போல அழகு! எந்நேரமும் புன்னகை தவழும் முகம்.
பெண்களைப் பார்த்தால் தலை குனிந்துகொண்டு போய்விடும் சுபாவம்!
“இந்த ரவியைப்போல எந்நேரமும் பெண்களோடு ன்னு இளிச்சுக்கிட்டு நிக்காம எப்படிப்போறான் பாருடி!”
“ரவி என்னைக்காவது பசங்களோட பேசுதான்னு பாரு! இந்த மொகரைக்கு இளிப்பு ஒரு கேடு !”
கரிச்சுக்கொட்டிக்கொண்டேதான் இருப்பாள்!
ஆனால் ரவி மத்த பொண்ணுங்களோட பேசுறதும், இவள் பிரண்ட்ஸ் கிட்டப் பேசறதும் உண்டுன்னாலும், எப்போது இவளைப் பார்த்தாலும் அந்த ஒற்றைச் சிரிப்புதான்!
“பாருடி அவன் சிரிப்புல திமிரை”ன்னு அவள் சொல்வதை அவளோட தோழிகளே ஒத்துக்கொள்ள மாட்டார்கள்!
“ஏண்டி, அவன் பாட்டுக்கு சிரிச்சுட்டுப் போறான்! உனக்கேன்டி அப்படித் தோணுது”ன்னு இவளைத்தான் குற்றம் சொல்லுவார்கள்!

இடையில் சந்திரன் மேல் இவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஈர்ப்பு ஏற்பட, ரவி பற்றிய நினைப்புக்கூடக் குறைந்து போனது. எப்படியும் படிப்பு முடிந்ததும் கல்யாணம் என்ற நிலையில், இவளுக்குப் போட்டிபோட்டு முதல் மார்க் வாங்கும் ஆவல் விட்டுப்போனது!

 வழக்கம்போல் ரவி, லைப்ரரியே கதி என்று கிடந்ததும், எப்படியாவது யூகே போய் எம் எஸ் பண்ணுவது என்று தீர்மானமாய் அலைந்ததும், இவளுக்கும் ரவிக்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது நிஜம்!

நேருக்கு நேர் அவனைப் பார்ப்பதே மாதம் ஒருமுறை என்று குறைந்து போனது!
ரவியும் அவளை சுத்தமாக மறந்து தன் வேலைகளில் மூழ்கிக் கிடந்தான்!
அப்படித்தான் அவள் நினைத்தாள்! - ஒருநாள் ரவியே அவளைத் தேடி வந்து பேசும்வரை!

“வந்தனா, நான் உன்கூடக் கொஞ்சம் பேசணும்” - இப்படிச் சொல்லிக்கொண்டுதான் வந்து நின்றான் ரவி ஒரு மாலை நேரம்!

அன்றைக்கென்று சந்திரனும் அவளிடம் பேசவேண்டும் என்று சொல்லியிருந்தான்!
“இல்லை ரவி, எனக்கு வேறு வேலை இருக்கு!”
“உனக்கு என்ன வேலைன்னு எனக்குத் தெரியும், அது பற்றித்தான் பேசணும். வா பேசிக்கிட்டே போகலாம்!”

கொஞ்சம் கூட அவளுக்கு வாய்ப்பே கொடுக்காமல் ஏதோ உரிமைக்காரியைக் கூப்பிடுவதுபோல் கூப்பிடுகிறானே என்று பொத்துக்கொண்டு வந்தது வந்தனாவுக்கு!

“நீ கூப்பிட்ட உடனே உன்பின்னால ஓடி வர நான் ஒன்னும் உன் பொண்டாட்டி இல்ல ரவி!”
சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்தவள் பின்னால் கேட்டது ரவியின் குரல்!
“சரி, அப்போ நான் மாமாகிட்டப் பேசிக்கறேன்!”
அவன் மாமான்னு சொன்னது வந்தனா அப்பாவை!

இந்த சில வருடங்களிலேயே வந்தனா அப்பாவும், ரவி அப்பாவும் நல்ல நண்பர்கள் ஆனதோடு, ரெண்டு குடும்பமும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகுவது உண்மை!
அப்படியே ப்ரேக் அடித்து நின்ற வந்தனா, “சரி, சொல்லவந்ததை சொல்லித் தொலை!”
அதே குறுஞ்சிரிப்பு இப்போது ரவி முகத்தில், வா பேசிக்கிட்டே போலாம்!”

ஒடம்பு முழுக்கத் திமிரு!
கறுவிக்கிட்டே கூட நடக்கறது தவிர வேற வழி தெரியல வந்தனாவுக்கும்!
“சொல்லித்தொலை ரவி!”

வாய்க்கால் பாலம் தாண்டும் வரைக்கும் அமைதியா வந்த ரவி,
 “நீ அந்த சந்திரன் கூட நெருக்கமாப் பழகறது எனக்குப் பிடிக்கல!”
தீவிழி விழித்தாள் வந்தனா!
“லுக் ரவி, யூ ஆர் க்ராசிங் யுவர் லிமிட்ஸ்!”
“நான் யார் கூடப் பழகணும், பேசணும் இதெல்லாம் நீ முடிவு பண்ண வேண்டாம் ரவி! “
“நான் ஒன்னும் உன் முறைப் பொண்ணுமல்ல, நீ எனக்கு மாப்பிள்ளையுமல்ல.”
நகர முனைந்த வந்தனாவை உற்றுப் பார்த்த ரவி முகத்தில் அப்போதும் அந்தப் பாழாய்ப்போன சிரிப்பு!
“அப்படி சொல்லமுடியாது வந்தனா!”
“நாளைக்கு என்னவேணும்னாலும் நடக்கும்!”
“ஆனா, கண்டிப்பா சந்திரன் உனக்கு ஏத்தவன் இல்லை!”
“ஏன்?”
“அவன் அவ்வளவு நல்லவன் இல்லை! “
“ரவி, உன் பொறாமை எனக்கு ஆச்சர்யமா இருக்கு!
"நீ எப்படி வேணும்னாலும் வெச்சுக்கோ! அது உன் விருப்பம்!”
“ஆனா, அந்த சந்திரனைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? எங்கிருந்தோ வந்து ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறான்! அவன் குலம் கோத்திரம் ஏதாவது தெரியுமா உனக்கு?”
 “தினமும் அவன் குடிக்கிறான். அதுவாவது உனக்குத் தெரியுமா?”
“ரவி, எனக்காக நீ ஆராய்ச்சி செஞ்சதுக்கு நன்றி!
நான் சந்திரனைத்தான் கட்டிக்குவேன்!
உன்னால ஆனதப் பாரு!”
சொல்லிட்டு வேகமா நடந்த வந்தனாவை யோசனையோட பாத்துக்கிட்டே நின்னான் ரவி!

அதுக்கு அப்புறம்தான் சந்திரனோடு ஒரு ஆவேசமான நெருக்கம் வந்தது வந்தனாவுக்கு!
அவனை ஒருநாள் பார்க்காவிட்டாலும் பைத்தியம் பிடித்ததுபோல ஆனது!

ரவி அவள் கண்ணில் படுவது சுத்தமாகக் குறைந்து போனாலும், அவளை யாரோ கவனித்துக் கொண்டே இருப்பதாய் பட்டுக்கொண்டே இருந்தது!
அது எவ்வளவு உண்மைங்கறது ஃபைனல் செமஸ்டர் ஆரம்பித்தபோது தெரிந்தது!ஒருநாள் அப்பா கூப்பிட்டார்!
“வந்தனா இங்க வாம்மா!”
“என்னப்பா?”
“இந்த வருஷம் படிப்பு முடிஞ்சவுடனே, உனக்குக் கல்யாணம் பண்ணிடலாம்ன்னு நினைக்கிறேன்!”
“இப்போ இதுக்கு என்ன அவசரம்ப்பா, நான் படிப்பை முடிச்சர்றேனே!”
“படிப்பு முடிச்சதும்தான் கல்யாணம்!
அதுக்கு முன்னால அடுத்தமாசம் ஒரு நல்ல நாள்ல நிச்சயம் பண்ணிடலாம்!”
“அப்பா! என்னப்பா இது?
என்னைக் கேட்காம நீங்களே மாப்பிள்ளை பார்த்து, நீங்களே முடிவு பண்ணிட்டீங்களா?”
“இது என்னடி புதுசா இருக்கு, உன்னை என்ன பெரிய மனுஷின்னு கேட்கணும்?”
“ரவி இந்த வருஷம் படிப்பு முடிஞ்சு லண்டன் போறானாம்! அதுக்குள்ளே கல்யாணம் பண்ணனும்ன்னு அவங்க அப்பா சொல்றாரு!”
“ரவி கல்யாணத்துக்கும் எனக்கும் என்னப்பா சம்பந்தம்?”
நிஜமாலுமே புரியாமதான் கேட்டாள் வந்தனா!
“ரவிக்கும், உனக்கும்தான் கல்யாணம் முடிவு பண்ணியிருக்கோம்!”

எதுவுமே பேசத் தோன்றாமல் விக்கித்து நின்றவள், எப்படியோ, சாயங்காலம் பேசிக்கலாம்ப்பா ப்ளீஸ், எனக்கு காலேஜுக்கு நேரம் ஆச்சு”ன்னு சொல்லிட்டு எப்படி நடந்து காலேஜுக்கு வந்தான்னு புரியல!

நேராக ரவிகிட்டத்தான் போய் நின்றாள்!
“ரவி, நான் உன்கிட்டப் பேசணும்!”
அதே குறுஞ்சிரிப்பு!
“பேசு வந்தனா!”
ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னாள்! இங்க இல்லை. வெளியேபோய் தனியாப் பேசலாம்!”
“இரு முதல் ரெண்டு பீரியட் முடிஞ்சதும் போலாம்!”
எப்படா மணி ஆகும்ன்னு முள்ளு மேல உட்கார்ந்திருந்தாள்!
"கரெக்டா வந்துட்டயே", சிரிச்சுக்கிட்டே கேட்டவனை ஓங்கி அறையலாமான்னு வந்த ஆத்திரத்தை அடக்கிக்கிட்டு மெதுவாக் கேட்டாள்.
“ரவி, உனக்குத் தெரியுமா?”
“எது?”
“சிரிக்காத ரவி, ப்ளீஸ்!”
“சரி, சிரிக்கல சொல்லு!”
“நம்ம கல்யாண ஏற்பாடு?”
“ஓ! அதுவா? அது பெரியவங்க பேசிக்குவாங்க வந்தனா!”
“நாம ரெண்டுபேரும் முதல்ல படிப்பை முடிப்போம்!”
“அப்போ, இது உனக்குத் தெரியும்!”
“ஆமாம்உண்மையைச் சொன்னா, நான்தான் இந்தக் கல்யாணப் பேச்சை அங்கிள் கிட்ட ஆரம்பித்தேன்!”
“ரவி, உனக்கு வெட்கமாய் இல்லையா இதைச் சொல்ல?
நான் சந்திரனைக் காதலிக்கறது உனக்குத் தெரியும்தானே?”
“அது காதல் இல்லை வந்து! வெறும் ஈர்ப்பு! அது தானா சரியாயிடும்!”
“மொதல்ல என்ன வந்துன்னு கூப்பிடாதே! இன்னொருத்தனை விரும்பற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க நினைக்கறது எவ்வளவு கேவலம் ரவி?”
“இதோபார் வந்து, நான் எட்டு வருஷமாக் காதலிக்கற பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்க நினைக்கறது தப்பா?”
“இதுல நீ ஏதாவது சொல்ல நினைச்சா உங்க அப்பகிட்ட சொல்லு, வெட்டிப் போட்டுருவார்!
போய் ஒழுங்காப் படி! மீதியெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பேசிக்கலாம்!”
சொல்லிக்கொண்டே நகர்ந்தவனை நம்பமுடியாமல் பார்த்தாள் வந்தனா!

அழுகையும் ஆத்திரமுமாய் அன்றைக்குப் பொழுதை ஓட்டியவள் சாயங்காலம் மறுபடி அவனை வழி மறித்தாள்!
“சொல்லு வந்து!”
“ப்ளீஸ் ரவி! விளையாடாதே! தயவுசெஞ்சு அப்பாகிட்டப் பேசு!”
“இந்தக் கல்யாண ஏற்பாடு எனக்குப் பிடிச்சு நடக்கும்போது, நான் எதுக்குப் பேசணும்?
நீ வேணும்னா உங்க அப்பாகிட்டப் பேசேன்!”
நம்பவே முடியாமல் அவன் போவதையே பார்த்துக்கொண்டு நின்றாள் வந்தானா!

அன்னைக்கு ராத்திரி அம்மாகிட்ட மெதுவா ஆரம்பிச்சா!
“அம்மா, எனக்கு ரவியைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை!”
“ஏன்?”
:அம்மா, வந்து, வந்து, நான் ஒரு பையனைக் காதலிக்கறேன்!”
“மெதுவாப் பேசுடி எருமை! அப்பா காதுல விழுந்தா வெட்டிப் போட்றுவார் ஞாபகம் வெச்சுக்க!”
“அம்மா, இது என் வாழ்க்கை! இதில் எனக்கு, என் கருத்துக்கு உரிமை இல்லையா?”
“இதோபாருடி, அந்தப்பையன் என்ன ஜாதி, எந்த ஊரு ஏதாவது தெரியுமா?”
“நம்ம ஜாதி இல்லை அது தெரியும்!”
“அப்புறம் என்னடி இதில் பேச இருக்கு?”
“ரவி மாத்திரம் நம்ம ஜாதியாம்மா?”
“ரவி மாதிரி பையன் கிடைச்சா ஜாதி பாக்கவேண்டாம்!
எங்களுக்கு எல்லாம் தெரியும்! மூடிக்கிட்டு ஒழுங்கா இரு! உங்க அப்பகிட்ட சொன்னா, காலேஜுக்கே போகாம கால ஒடிச்சுப் போட்டிருவார். போய் மரியாதையாப் படு!”

மறுநாள் சந்திரன்கிட்ட எல்லாமே சொன்னாள். அவன் அலட்சியமா சொன்னான்!
“இப்போதைக்கு ஒத்துக்கோ வந்து!
அவங்க நிச்சயதார்த்தம் தாராளமா பண்ணட்டும்!
பரீட்சை முடியட்டும், யாருக்கும் தெரியாம நாம கிளம்பிடலாம்!
அதுவரைக்கும் யாருக்கும் சந்தேகம் வராதமாதிரி நடந்துக்க!”
அப்படித்தான் நடந்தது!
ஊரே கூடி நடந்த நிச்சயதார்த்தத்துக்கு காலேஜ் நண்பர்களோடு சந்திரனும் வந்திருந்தான்!
பரீட்சை முடிந்து மூணாவது நாள், வீட்டிலிருந்த அத்தனை நகையும் எடுத்துக்கொண்டு, சத்தம்போடாமல் சந்திரனோடு கிளம்பிவிட்டாள்!
மறுநாள், சந்தோஷமாக, நான்கு நண்பர்கள் முன்னிலையில் அவர்கள் கல்யாணம் நடந்தது!


ஹூம்! அதுதான் அவள் சந்தோஷமாக இருந்த கடைசி நாள்!

முதல் ராத்திரியிலேயே மூக்குவரை குடித்துவிட்டு வந்து மேலே விழுந்தான்! அதைக் கலவி என்று சொல்வதைவிட, கொலை என்றுதான் சொல்லவேண்டும்.
மனசாரச் செத்துப்போனாள் வந்தனா!

படிக்கும்போது கல்லூரியில் பார்த்த சந்திரனா இது?

அப்போதுதான் இரவானால் ஹாஸ்டலில் குடித்துவிட்டு உருளுவான் என்று ரவி சொன்னது நினைவுக்கு வந்து தொலைத்தது!

விடிந்ததும் தன்மையாகக் கேட்டுப் பார்த்தாள். சரி சரி என்று தலை ஆட்டிப்போனவன் ராத்திரிக்கு மிதந்துகொண்டுதான் வீட்டுக்கு வந்தான்!

கூப்பிட்டவுடன் ஓடிவந்தவள்தானே என்ற அலட்சியமான வார்த்தை அன்றைய கொலைக்குத் துணை!
மறுநாள் மறுத்துப் பேசியவளுக்குப் பொறி கலங்க விழுந்த அறை அவன் யாரென்ற உண்மை சொன்னது!

தானாகத் தேடிக்கொண்ட துயரம்.
வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியம்!

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முதல் மாதமே விழுந்த வித்தில் விளைந்த பிள்ளை!

உயிரை மாய்த்துக்கொள்ள முடியாமல், வேலைக்குப் போய், தன்னையும் பிள்ளையையும் காப்பாற்றுவதற்கும், வாய்க்கரிசி போட வந்தான் சந்திரன்!

நின்றால் சந்தேகம், சிரித்தால் சந்தேகம்!
எவன் கூடவோ படுத்து நீ வயித்துல சுமக்கும் பிள்ளையைக் கலைத்தே ஆகணும்ன்னு அவன் ஒற்றைக்காலில் நின்றபோது ஒரே ஒருமுறை அப்பா நம்பருக்குக் கூப்பிட்டுப் பார்த்தாள்.
“எனக்கு அப்படி ஒரு பொண்ணே இல்லை! நீங்க யாரு பேசறீங்கன்னு தெரியல! சாரி!”

கட்டான மொபைலை வெறித்துக்கொண்டு வெகுநேரம் நின்றுகொண்டிருந்தவளை இடுப்பில் விழுந்த உதை தரையோடு உருளவைத்தது!

அன்றைக்கு ப்ளீடிங் என்று டாக்டரிடம் போனபோதுதான் அவர் சொன்னார்!
“ஒன்னு, உன் புருஷனை விட்டுரு! இல்லாட்டி, இந்தக் குழந்தையை கலைச்சுடு!”
அப்போதே முடிவு செய்தபடி கலைத்துவிட்டாள் - அந்தப் பொருந்தாத கல்யாணத்தை!

அதற்குப்பின், அவள் படிக்க ஆசைப்பட்ட சென்னைக்கே வேலைதேடிப் போனவள்சந்திரன் என்று ஒருவன் தன வாழ்வில் வந்ததையும், தனக்கு ஒரு கல்யாணம் நடந்ததையும் மறந்து மகனே உலகம் என்று வாழ்ந்து வருகிறாள்!

அருணைப் பொறுத்தவரை அப்பா துபாயில் இருக்கிறார்! அருணுக்கு மட்டுமல்ல சென்னையில் எல்லோருக்கும் அப்படித்தான் சொல்லி வைத்திருக்கிறாள். ஒரு டிவோர்சி என்பது தரும் சிக்கல்களும் தேவையில்லாத பார்வைகளும் இல்லாமல் வாழ்க்கை சுலபமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது.
லண்டனிலிருந்து எம் எஸ் முடித்து, இரண்டுவருட வேலையும் முடித்து வந்த ரவி எப்படியோ கண்டுபிடித்து அவளைத் தேடி வரும்வரை!

இந்த ஆறு மாதங்களாக ஏறத்தாழ தினமும் மாலை வேலைகளில் அவளைத் தேடி வந்துவிடுகிறான்!

“எனக்கு நேசத்தை பாலிஷ் போட்டு சொல்லத் தெரியாது! உன்னை நான் காதலித்ததும், காதலிப்பதும் சத்தியம்!
என்னால் உன்னை மறக்கமுடியவில்லை வந்தனா! உன் இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்க எனக்கு மனம் இல்லை.
இடையில் நடந்தது எல்லாம் ஒரு கனவாகவே போகட்டும்!
நாம் புதிதாக ஒரு வாழ்க்கையை ஆரம்பிப்போம்!
நீ, நான் அருண் என்று ஒரு சின்ன உலகம்!”
இதுவரை வந்தனா ஒரு முடிவும் சொல்லவில்லை!

வெறுத்துப்போன ரவி நேற்று மாலை தீர்மானமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
“நாளை மறுதினம் காலை நான் வீட்டுக்கு வருவேன். அப்போது நீ சொல்லும் பதில்தான் முடிவானது.
சரி என்றால் வெள்ளிக்கிழமை நமக்கு ரிஜிஸ்ட்ரார் முன்பு நமக்குத் திருமணம்.
அதன்பின் பத்து நாட்களுக்குள், நாம் மூவரும் லண்டன் கிளம்புகிறோம்! நம் புது வாழ்க்கை அங்கே தொடங்கட்டும்!
இல்லாவிட்டால் அன்று மாலையே நான் மறுபடி லண்டனுக்கே கிளம்புகிறேன். இங்கிருந்து இந்த வேதனையை என்னால் தொடர முடியாது.”

இதோ, விடிந்தால் அவன் தந்த கெடு முடிந்து விடும்.
என்ன பதில் சொல்வது என்ற குழப்பம் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை!

குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்!
இந்தக் கதையை முடிக்க எனக்கு இரண்டு வழி  தோன்றுகிறது!

முதலாவது சுஜாதா, ராஜேஷ் குமார் வழி 
இரண்டாவது ரமணி சந்திரன் வழி 1

சந்திரனை வெறுத்த அளவு ரவியின் ஏளனப் புன்னகையையும் வெறுக்கும் தன்னால் நிம்மதியாக வாழமுடியும் என்று தோன்றவில்லை!

தான் இல்லாதுபோனால் ரவியால் அருணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும்!

நிதானமாக ஐம்பது தூக்க மாத்திரைகளையும் விழுங்கிவிட்டு அருணை அணைத்துக்கொண்டு படுத்தாள் வந்தனா!

டாக்டரிடம் ரவி சொல்லிக்கொண்டிருந்தது தூரத்தில் கேட்பதுபோல் கேட்டது!
“டாக்டர், இவளுக்கு வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை! ஏன் இப்படிச் செய்தாள் என்றும் புரியவில்லை!”

பதட்டப்படாதீர்கள் மிஸ்டர் ரவி, அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார்!

ஆனால் சின்ன வயதில் உங்கள் மீது ஏற்பட்ட அர்த்தமற்ற ஏதோ ஒரு அதீத வெறுப்பால், கடந்த சில வருடங்களாகவே, ஒரு பேரல்லல் உலகத்தை சிருஷ்டித்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்.

உங்கள் எதிர்மறை பிம்பமாய் சந்திரன் என்பவரைக் கற்பித்துக்கொண்டு அவரோடே வாழ்வதுபோல் உங்களோடு வாழ்ந்திருக்கிறார்!

நீங்கள் வெளிநாடு போயிருந்த காலகட்டத்தில் அந்தச் சந்திரனையும் விட்டு விலகி, தனியாக வாழ்வதாக கற்பனை செய்து வாழ்ந்தவருக்கு, நீங்கள் திரும்பி வந்து உங்களோடு அவரையும் கூட்டிப்போவதாய்ச் சொன்னது தாங்கமுடியாத குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

உங்களோடு வரமுடியாத அவஸ்தை இப்படி வெடித்திருக்கிறது!

தொடர் சிகிச்சை மூலம் அவர் மனதில் இருக்கும் இந்தக் குழப்பம் நீங்குமுன் அவரை நீங்கள் தனியே அழைத்துச் செல்வது உசிதமல்ல!
உங்கள் ஒத்துழைப்பு இதில் மிகவும் முக்கியம்!

காத்திருக்கிறேன் டாக்டர்! நீங்கள் சிகிச்சையை ஆரம்பியுங்கள் என்று டாக்டர் அறையை விட்டு தலை குனிந்து வெளியே வந்தான்
ரவிச்சந்திரன்!2
யாருக்கும் காத்திருக்காமல் காலம் நகர, பத்துமணிக்கு சொன்னபடி காலிங் பெல் அடிக்க,
கதவைத் திறந்தால் ரவி!

கை பிடித்து தளர்நடை போட்டுக் கூட வந்த அருண் கேட்டான் மழலையில்!
"யாரும்மா இது?"

"உன்னோட அப்பா அருண்!"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக