வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

காதலின் வண்ணங்கள்!


அவரவர் பார்வையில்!
“சேகர போலீஸ் இட்டுனு பூடிச்சு!”
எதிர்பார்த்ததுதான்,
ஆனாலும் ராணிக்கு தலையில் நெருப்பக் கொட்னாமாரி இருந்துச்சு!

“இப்போ நான் இன்னாத்தப் பண்ணுவேன்டி ஆத்தா”ன்னு தெருவோர மாரியாத்தாள கேட்டுனு பித்துப் புடிச்சா மாரி உக்கந்துக்கினா!

“நான் அப்போவே படிச்சுப் படிச்சுச் சொன்னேன்! கஸ்மாலம் யாரு பேச்சக் கேட்டுச்சு!”
“டானாக்காரன வம்பு வலிச்சு மூஞ்சில குத்துனா உடுவானா!”
 “நாலு வீட்ல பத்துப் பாத்திரம் தொலக்கினு வவுத்தக் கழுவிக்கினு கீற நமக்கெல்லாம் என்னத்துக்கு ரோஷம்!”

ராணி!
பேருக்கு ஏத்தாமாதிரி அந்த சந்துக்கே ராணிதான்!
ஆத்தா வகுத்துல இருக்கச் சொல்லையே அப்பன்காரன் குட்ச்சு  கொடலு வெந்து பூட்டான்!
அஞ்சலைக்கு ராணி வளர வளர மடியில நெருப்பக் கொட்னா மாதிரிதான் இருந்துச்சு!
“பிளாட்பாரத்துல வளர்ற புள்ளைக்கு இம்புட்டு அழகு இன்னாத்துக்கு குட்துச்சு இந்தப் பாழாப்போன சாமி”ன்னு பொலம்பிக்கினே கெடப்பா!

தளதளன்னு வளந்துக்கினே போனா ராணி!
நெகுநெகுன்னு அம்மன் செலையாட்டம் தெருவுல போவச் சொல்ல எல்லாக் கண்ணும் அவ மேலதான் மேயும், இட்லிக்கட ஆயா சட்டிமேல ஈயாட்டம்!

பூக்கட போலீஸ் டேஷன் சைடுக்கா, சேட்டு தெருவுக்குப்போற மொனைலதான் பூக்கட வெச்சுக்கினு குந்திக்கினு கெடப்பா அஞ்சலை!

யார் வம்புக்கும் போவமாட்டா!

தான் உண்டு, பூக்கடை உண்டுன்னு அந்த வருமானத்துல கவுரதையா வவுத்தை கழுவிக்கினு, கார்ப்பரேஷன் இஸ்கோல்ல  ராணிய ஆறாப்பு வரைக்கும் படிக்கவச்சா!
கழுத அதுக்குமேல படிக்கமாட்டேன்னு ஆத்தா காலக் கட்டிக்கினு அழுதுச்சு!

இங்கதான் பூக்கடைல ஒத்தாசையா இருக்கட்டும்ன்னு வெச்சுனு இருந்தா!
ராணி பூக் கட்டுனா அம்புட்டு நெருக்கமா இருக்கும்! அல்லாருக்கும் முன்னால இவ கடைல பூ வித்துப்போவும்!

யாரு கண்ணு பட்டுச்சோ, பூக்கட டேஷனுக்கு புச்சா வந்தான் அந்தப் பாழாப்போன ரங்கசாமி!
ஆளும் அவன் மொகரையும்!

அல்லாப் போலீசுக்காரன மாரிஅஞ்சக்குடு பத்தக்குடு”ன்னு வந்து நிக்கும்போது அவன் கண்ணு அப்புடி அலையும்! அஞ்சலைக்குக் கூசிப்போவும்!

“அந்த நாயி கெடக்குது ஆத்தா! அது கம்பத்துல காயற சீலையக்கோட வெரைச்சுக்கினு பாக்கும் கசுமாலம்” ன்னு காறித் துப்புவா பக்கத்துக் கடை ரஞ்சி!

அந்த நாய் கண்ணுலையா ராணி படணும்?

கார்த்திக மாசத்து நாய் மாதிரி கடையவே சுத்திச் சுத்தி வந்தான்!

ஒருநா நேராவே கேட்ருச்சு நாயி!
“ராணிய அனுப்பு அஞ்சல, நா நெசமா ராணிமாரியே வச்சுக்கறேன்!”

“தூ! பொசகெட்ட நாயே! உன் பொண்டாட்டிய அனுப்புடா, நான் அதவிட ஷோக்கா வெச்சுக்கறேன்” ன்னு அப்போவே எகிறிக்கினு வந்தான் சேகரு!

பக்கத்து ஸ்டேண்டுல ரிக்ஷா வலிச்சுக்கினு கெடக்கற பயலுக்கு இத்தன திமிரான்னு அன்னைக்கு மொரச்சுக்கினு போனான் ரங்கசாமி!

அன்னைக்கே இனிமேல் ராணிய கடையாண்ட கூட்டிக்கினு வரதில்லைன்னு முடிவு பண்ணிட்டா!

மாரியாத்தா சொன்ன ஊட்டுக்கு வீட்டு வேலைக்கு அனுப்பீட்டா!
அது இன்னாமோ ஒரு கம்ப்யூட்டரு கம்பெனி வேலைக்குப் போவுது மூணாவது தெருவுல இருக்கற மாடி வூட்டம்மா - யசோதா!
அதுக்கு ராணின்னா அம்புட்டுப் பிரியம்!

அதும் சின்ன வயசுப் புள்ளதான்!
பெரிய படிப்பெல்லாம் படிச்சுப்போட்டு திருச்சில இருந்து இங்க வந்து வேலைக்குப் போய்க்கினு தனியாத்தான் இருக்குது!

வேள கெட்ட வேளைல வந்தாலும் ராணியைக் கூட்டிக்கினு போய் தோசை ஊத்திக்குடுக்கச் சொல்லித் துண்னும்!
மாசம் ஆனா முள்ளங்கிப்பத்தை கணக்கா ரண்டாயர ரூவா எண்ணிக் குடுத்துரும்!

மகராசிக்கு ஒரு கல்யாணம் ஆகி நல்லா இருக்கட்டும்ன்னு மாரியாத்தாளப் பாக்கறப்பல்லாம் நெனச்சுக்குவா அஞ்சல
!
போன மாசந்தான் கெவருமெண்டு வேலை பாக்கறான்னு  ராணியை
ரமேஷுக்கு பொண்ணு கேட்டு வந்தாங்க அடுத்த தெருவிலிருந்து!

கார்ப்பரேசன்ல குப்பை அள்ற வேலைல இருக்கறவனே அஞ்சு பவுனு போடுன்னு கேக்கற காலத்துல, கெவருமெண்டு ஆபீஸ்ல பியூன் வேலை பாக்கறவன் எதுமே போடவேண்டாம், பொண்ண மட்டும் கட்டிக்குடுன்னு வந்து கேட்டா எப்படி இருக்கும்!

அப்பவே சரீன்னு சொல்லிப்போட்டா அஞ்சல!
ஆனா இந்த ராணிதான் ஏனோ சொணங்கிக்கிட்டே திரிஞ்சா!


அந்த யசோதாப் பொண்ணுகிட்டத்தான் சொல்லிப் பேசச் சொல்லியிருந்தா ராணிகிட்ட!

இதா, அடுத்த மாசம் கண்ணாலம் கட்டிக் குடுத்தரலாம்ன்னு இருந்தப்பத்தான் அது நடந்துச்சு!

யசோதாம்மா வூட்ல வேலைய முடிச்சுக்கினு ராணி வரச்சொல்ல, ரமேஷும் வந்திருக்கறான்!
ரெண்டுபேரும் பேசிக்கினே வந்தப்போ, அந்த நாயி ரங்கசாமி நல்லாக் குடிச்சுப்போட்டு அங்க வந்திருக்குது!

“ஏண்டி, என்ன வேண்டாம்ன்னு சொல்லிட்டு இந்த நாய்கூடத்தான் சுத்தறியான்னு கேட்டுக்கினே, ரமேஷ ஒரு எத்து எத்தியிருக்குது!

அந்தப் புள்ள பாவம் பயந்துக்கினு வாபுள்ள போய்டலாம்ன்னு இஷ்த்திருக்குது!

பொடனியில ஒண்ணுபோட்டு பொத்திக்கிட்டுபோடான்னு பத்தி வுட்டிருச்சு!

“இந்தா புள்ள, இப்போ நீ என் வண்டீல ஏறுல, இந்த எடத்துலயே உன்ன …”
அப்புடின்னு சொல்லிக்கினே கையப்புடிச்சு இஷுத்தப்போ சேகரு வந்திருக்கறான்!

இன்னாம்மே சொல்றான் சில்றப்பயன்னு சேகரு வெரச்சுக்கினு வர, இருடீ உன்ன அப்பொறம் பேசிக்கறேன்னு பூடிச்சு அது!

இன்னா ரமேசு, கட்டிக்கப்போற பொண்ண ஒருத்தன் சீண்டனம் பண்ணிக்கீறான்! அவன நாஸ்தி பண்ணாம மரம் மாறி நின்னுக்கினு கீற?ன்னு கேட்டுக்கினே ரெண்டுபேரையும் ரிச்சாவுல வலிச்சுக்கினு வந்து ஊட்டாண்ட உட்டுட்டுப் போனபுள்ள சொம்மா போவக்கூடாது?

ராத்திரியே, பாரா வந்த ரங்கன வம்பு வலிச்சு மூஞ்சில பூரான் உட்டுட்டு வந்து படுத்தவன இப்போத்தான் போலீசு வந்து கொத்தா அள்ளிக்கினு போவுது!

கையும் ஓடல காலும் ஓடல ராணிக்கு!

ரமேஷ் வூட்டாண்ட போய்க் கேட்டா, “தானாக்காரன்கிட்ட வெறச்சுக்கினு போய் வம்பு இஷுத்தா சொம்மா இருப்பானா! பெரிய ஹீரோ கணக்கா பண்ணுனா இப்புடித்தான்!
உடு! நாலுநாள் களிதுண்ணுட்டு வரட்டும்!”
பொட்டை ஞாயம் பேசுனவன தூன்னு துப்பீட்டுத்தான் வந்தா ராணி!

நேரா யசோதாகிட்ட போனா!
யாரு செஞ்ச புண்ணியமோ, மகராசி ஊட்லதான் இருந்துச்சு!

அழுதுக்கினே மொத்தக்கதையும் சொல்லி மூக்க சிந்துனா ராணி!
ஏதாச்சும் செய்யமுடியுமா தாயீன்னு கால்ல உயுந்தா!

“இன்னைக்கு இது ரெண்டாவது கேஸ்!”
சொல்லிக்கிட்டே யாருக்கோ போன் போட்டுச்சு!

பத்து நிமிஷத்துல அந்த ஐயா வந்துட்டாரு!
“இவர் கூடப் போ ராணி!
இவர் எங்க ஆபீஸ்ல வொர்க் பண்றாரு 
பேரு ராஜேந்திரன்!
இவர் எல்லாம் பார்த்துக்குவார்.
தைரியமாப் போ!”

“நான் ராத்திரி முழுக்கத் தூங்கல! நான் கொஞ்சநேரம் தூங்கறேன்!”
“எந்நேரம் ஆனாலும் என்கிட்டே வந்து சொல்லிட்டுப் போ!”

பிளசர் கார்ல போகச்சொல்லவே  அந்த ஐயா யாருக்கோ போன் பண்ணிச்சொல்ல, இவங்க போகும்போதே வக்கீலு வந்திருந்தாரு!

என்ன பேசுனாங்களோ, ஒரு அவர்ல அனுப்பிச்சுட்டாங்க!

நொண்டிக்கிட்டே வந்த சேகரப் பாத்தா கண்ணுத் தண்ணி பொத்துக்கினு வந்துச்சு ராணிக்கு!

சேகரு மூஞ்சியெல்லாம் கொழுக்கட்ட கணக்கா வீங்கிப் போயிருந்தது!

அந்த ஐயா கால்ல உழுந்து கையெடுத்துக் கும்பிட்டா ராணி!

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்மா! இனியாவது ஜாக்கிரதையா இருங்க! ஏதும் பிரச்னைன்னா என்னைக் கூப்பிடுங்கன்னு நம்பர் குடுத்துட்டு, வாணாம்ன்னு சொல்லச் சொல்ல ரெண்டுபேரையும் அஹமதியாஸ் போய் பிரியாணி வாங்கிக் கொடுத்து வூட்டாண்ட வந்து எறக்கி உட்டுட்டுத்தான் போனாரு அந்த ஐயா!


ராணி வந்து போனதிலிருந்து தூக்கமே பிடிக்கவில்லை யசோதாவுக்கு!

பெண்களுக்கு எல்லாப் பக்கமும் பிரச்னைகள்தான்! அதுவும் உடல் சார்ந்தே!
பெண்ணை வெறும் உடலாகப் பார்க்கும் மனநிலை எல்லா ஆண்களுக்கும் பொதுவோ?

நேற்றிலிருந்து அலுவலகத்தில் நடந்தவை மனதில் படமாய் ஓடியது!

அந்த ஆபீசுக்கு புதிதாக வந்த ப்ராஜெக்ட் மேனேஜர் கோவிந்த்!

அவன் வந்த முதல் நாளே யசோதாவுக்கு அவனைப் பிடிக்கவில்லை!
எல்லோருக்கும் அவனை பழைய மேனேஜர் அறிமுகம் செய்தபோது அவன் யசோதாவைப் பார்த்த இடம் அவ்வளவு கவுரவமானதில்லை!

“சரியான பொம்பள பொறுக்கி”  என்று மாலை ரவியிடம் புலம்பியபோது, “ஹேய் டேக் இட் ஈஸி! சில ஆண்கள் அப்படித்தான்! இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்காத!” ன்னு ஒரே வார்த்தையில் ஒதுக்கிவிட்டு பர்கரைக் கடிக்க ஆரம்பித்தான்!

ரவி, அசிஸ்டன்ட் மேனேஜர்!
அடுத்த ப்ரொமோசனுக்கு காத்திருக்கும் துடிப்பான இளைஞன்!

தானுண்டு, தன வேலை உண்டு என்று இருப்பவனுக்கு யசோதா மேல் ஒரு ஈர்ப்பு!
 போன வாரம்தான் ப்ரொபோஸ் செய்தான்!
யோசித்துச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறாள் யசோ!

பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று பதில் சொல்வதாகச் சொல்லியிருக்கிறாள்!

இடையில் இரண்டு முறை அவளிடம் வழிந்த கோவிந்துக்கு சரியான பதிலைக் கொடுத்ததில் வாலைச் சுருட்டிக்கொண்டு அடங்கிப்போனான்!

அப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தாள்!
அந்த நாய் வேறிடத்தில் வலை விரித்திருக்கிறது! அதுவும் தெளிவாய்!
கண்மணியிடம்!

கண்மணி ஒரு பிள்ளைப்பூச்சி!
அதிர்ந்துகூடப் பேசத் தெரியாத அப்பாவி!
கோயமுத்தூர்  பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து கஷ்டப்பட்டுப் படித்து முன்னுக்கு வந்த ஏழைப் பெண்!
குங்குமச் சிமிழ் போல அடக்கமான அழகு!
வொர்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில் தங்கி, பைசா கணக்குப் பார்த்து ஊருக்கு அனுப்பும் பொறுப்புள்ள பெண்!

அவளிடம் வலையை விரித்திருக்கிறது இந்த ஓநாய்!
ரூமுக்கு வரச்சொல்லி இடுப்பைத் தொட்டிருக்கிறது!
இதுவும் காலில் கிடப்பதைக் கழட்டி அடிக்காமல் தன் ரூமுக்குப் போய் அழுதிருக்கிறது!
போனவாரம் அவளை நேரிடையாகக் கூப்பிட்டு கெஸ்ட் ஹவுஸுக்கு வரச் சொல்லியிருக்கிறது!
அவள் முடியாது என்று மறுக்க, எங்கு அடிக்கவேண்டுமோ அங்கு அடித்திருக்கிறது!

கல்கத்தா கிளைக்கு மாறுதல் உத்தரவு! வரும் 15ம் தேதி ஜாயின் பண்ணச் சொல்லி!

குடும்ப சூழலைச் சொல்லி அழுத கண்மணியை, ஒரே ஒரு ராத்திரி கெஸ்ட் ஹவுஸ் வந்தால், ஆர்டரைக் கேன்சல் செய்வதாகப் பேரம் பேச, சீட்டுக்கு வந்து குமுறி அழுதுகொண்டிருந்தவளை கேண்டீனுக்கு வலுக்கட்டாயமாக இழுத்துப் போய் விசாரிக்க, கொட்டித் தீர்த்துவிட்டாள்!

உடனே ரவியிடம் போய் இதற்கு நாம் ஏதாவது செய்யவேண்டும் ரவி என்று குமுறியவளை விநோதமாகப் பார்த்தான் ரவி!

வா வெளியே போய்ப் பேசுவோம்!
ஒதுக்குபுறமான மேஜையில் இடம் கிடைத்து உட்கார்ந்தவளிடம் ரவி கேட்டான்!

சொல்லு. இதில் நாம் செய்ய என்ன இருக்கிறது?
ரவி, உனக்கு இது தப்புன்னு படலையா?

லுக் யசோ, இதில் தப்பு, சரி முடிவு செய்ய நாம் யார்!
அந்தக் கண்மணி முடிவு எடுக்கவேண்டிய விஷயம் இது!

பிடித்தால் கல்கத்தா போகட்டும், இல்லையானால் வேலையை விட்டுப் போகட்டும். வேறு வேலை கிடைப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை!
என்ன ரவி, இப்படிச் சொல்றே?

அவளுக்கு இந்த வேலை, அதில் கிடைக்கும் பணம் ரெண்டும் எவ்வளவு முக்கியம் என்று எனக்குத் தெரியும்!

தோளை அலட்சியமாகக் குலுக்கிய ரவி சொன்னான்!
அப்போ முடிவு எடுக்கவேண்டியது கண்மணிதான் யசோ! இதில் நாம் தலையிட என்ன இருக்கிறது?
வேலை அவ்வளவு முக்கியம்ன்னா அவள் ஒரு ராத்திரி கெஸ்ட் ஹவுஸ் போகட்டும்!என்ன தேய்ந்துவிடப்போகுது?

அதிர்ந்துபோய் கேட்டாள் யசோதா!
ரவி, அவன் என்னைக் கேட்டிருந்தாலும் இப்படித்தான் சொல்லுவியா?
பீ ப்ராக்டிகல் யசோ?
எல்லோர் பிரச்னையையும் நாம் தலையில் தூக்கிப் போட்டுக்க முடியாது!
உன்னைக் கேட்டிருந்தால் வேலையை ரிசைன் பண்ணச் சொல்லியிருப்பேன்! அவ்வளவுதான்!
சிஸ்டத்தில் எல்லாத்தையும் மாத்த நாம் கடவுள் இல்லை!
அவரவர் விலையை அவர்கள்தான் முடிவு செய்யணும்!

ஓகே! நாம் இதற்கு மண்டையை உடைச்சுக்க வேண்டாமே!
போ! போய் வேலையைப் பார்!
நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன்!

ஆபீஸ் வாசலில் இறக்கிவிட்டுப் போகும்போது, தலையில் தட்டி சொல்லிட்டுப் போனான்!
பீ ஸ்மார்ட்! எல்லா சிலுவைகளையும் நீயே சுமக்க நினைக்காதே!

வெறுப்பாய் ஆபீசுக்குள் நுழைந்த யசோதாவை எதிர்கொண்டான் ராஜேந்திரன்!

"யசோதா, நான் உங்கிட்டக் கொஞ்சம் பேசணும்."
ராஜேந்திரன், அலுவலக ஏணியில் யசோதாவை விட இரண்டு படி கீழே இருப்பவன்!

தயங்கித் தயங்கி வந்து உங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன்! உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா சொல்லுங்க எங்க அப்பாவ உங்க வீட்டுக்கு வரச் சொல்றேன் ன்னு நேரிடையாகக் கேட்டவன்.

என்ன சொல்வது என்று தெரியாமல் ஒருவாரம் டைம் கேட்டிருந்தாள்.

திடீரென இப்போது வந்தவனை எரிச்சலாய்ப் பார்த்தாள் யசோதா!

ராஜேந்திரன், நம்ம விஷயம் பேச இது நேரம் இல்லை!
மன்னிச்சுக்குங்க! நானும் அதுபத்திப் பேச வரலை!
கண்மணி விஷயம்!
வாங்க கேண்டீன்ல போய்ப் பேசுவோம்!

சொல்லுங்க!
கொஞ்சநாளாகவே கண்மணி மொகத்துல ஒரு பயம் இருந்துக்கிட்டே இருந்துச்சு! இன்னைக்கு அழுது கண்ணு வீங்கி உட்கார்ந்து இருந்தவங்க கொஞ்சம் ஆறுதலாக் கேட்டதும் எல்லாமே சொல்லீட்டாங்க!

உங்ககிட்ட சொன்னதையும் சொன்னாங்க!
ரவி என்ன சொன்னார்?
“இதுல நாம தலையிடவேண்டாம் ன்னு  சொல்றார்!” தலை குனிந்தபடி சொன்னாள் யசோதா!

மேடம், நீங்க என்ன நெனைக்கறீங்க?
நாம என்ன செய்யமுடியும் ராஜேந்திரன்?
நீங்க மனசு வெச்சா செய்யலாம் மேடம்!
நானா? என்ன சொல்றீங்க?

அவன் சொன்னதைக் கேட்டுத் திகைத்துப்போய் உட்கார்ந்துவிட்டாள் யசோதா!

நான் இதைக் கண்மணியை வெச்சே செய்ய நினைச்சேன்! அவங்க பயப்படறாங்க
நீங்க தைரியமான பொண்ணு! நீங்க ஹெல்ப் பண்ணுவீங்கன்னு நம்பறேன்!

இது நமக்குத் தேவையா ராஜேந்திரன்?

நான் கூட இருக்கேன் மேடம்! இப்படியே எல்லோரும் பயந்தா யாருதான் பூனைக்கு மணி கட்ட?

ராஜேந்திரனுக்கு ஆபீஸில் கம்யூனிஸ்ட் ன்னு பேரு
எந்தப் பிரச்னையிலும் தலையிட்டுத் தன்னால் ஆனதைச் செய்பவன்!

அவன் சொன்ன திட்டத்தில் இருந்த சவால் அவளை ஒப்புக்கொள்ள வைத்தது!

திட்டப்படி கோவிந்த் சொன்னதுக்கு ஒப்புக்கொள்வதாய் கண்மணி போய்ச் சொல்ல, நேற்று இரவு ஹாஸ்டலுக்கு கார் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறது நரி!

திட்டப்படி வந்த வண்டியில் இருளோடு ஏறியது யசோதா!

பின்னால் டூ வீலரில் தொடர்ந்தது ராஜேந்திரன்!

கேளம்பாக்கம் கெஸ்ட் ஹவுஸில் துப்பட்டாவால் முகத்தை மறைத்துக்கொண்டு இறங்கிய யசோதாவை வரவேற்றது முழு போதையில் இருந்த கோவிந்த்!

வா உள்ளே போவோம்
இடுப்புக்கு வந்த கையை லாவகமாக விலக்கி நகர்ந்த யசோதா கையை எட்டிப் பிடித்த கோவிந்த் முகத்தைப் பார்த்து அதிர்ந்தான்.

என்னது நீ வந்திருக்கே?
ஏன், கண்மணி வருவான்னு ஆசையா இருந்தீங்களோ?
யாரா இருந்தா என்னடி? நீயா ஆசைப்பட்டு வந்திருக்கும்போது எனக்கென்ன, எட்டி இழுத்தவன் பின்னால் நின்ற உருவத்தைப் பார்த்து அதிர்ந்தான்!

ராஜேந்திரன்!

வணக்கம் சார்
என்னை எதிர்பார்க்கல இல்லை?
நீங்க கண்மணிகிட்ட பேசுனது இந்த மொபைல்ல ரெக்கார்ட் ஆயிருக்கு!
இங்க நடந்தது இந்த ஆர் கேமராவிலும்!
இப்போ, இந்த நிமிஷம் நான் சொல்றத நீங்க கேட்கலன்னா, ஆறாவது நிமிஷம் எல்லாம் டெல்லி ஹெட் ஆபீஸுக்கும், லோக்கல் கமிஷனர் ஆபீஸுக்கும் மெயில்ல போய்டும்!
விடியறதுக்குள்ள நீ வேலை இல்லாம உள்ள இருப்பே!

சுத்தமாக வியர்த்துப் போனான் கோவிந்து!

சொல்லு! இப்போ நான் என்ன பண்ணணும்?

அடுத்த ரெண்டாவது நிமிடம், கோவிந்துவின் ராஜினாமா தலைமை அலுவலக மெயிலில்!
கண்மணியின் ட்ரான்ஸ்பர் ஆர்டர் ரிவோக் செய்யப்பட்டது!

எல்லாம் முடிந்து ராஜேந்திரன் யசோதாவைக் கொண்டுவந்து வீட்டில் இறக்கிவிட்டுப் போன ஒரு மணி நேரத்தில்தான் ராணி வந்தது!

ஒரு காபி குடித்தால் நல்லாயிருக்கும் என்று நினைத்தபோது காலிங் பெல் அடித்தது!

கதவைத் திறந்தால், ராணி!

வா ராணி!
என்ன சொல்றார் உன் ஹீரோ?

இருங்கம்மா நான் மொதல்ல காபி போட்டுக்கினு வர்றேன்!

 காபியோடு வந்தவளை யசோதா கேட்டாள்! அடுத்த மாசம்தானே உனக்குக் கல்யாணம்?
ஆமாம்மா! ஆனா மாப்பிள்ளை வேற!
என்னடி சொல்றே?
எனக்காக உசுரையே குடுக்கறேன்னு சொன்ன சேகரத்தான் நான் கட்டிக்கப் போறேன்!
உனக்கு என்னடி கிறுக்கா பிடிச்சிருக்கு? கவர்மெண்ட் வேலை பார்க்கற பையன விட்டுட்டு ரிக்ஷா இழுக்கறவனையா கட்டிக்கப்போறே?

இன்னா யம்மா பெரிய கெவுருமெண்டு வேல?
ஒரு வயித்துக்குத்தானம்மா துன்னப் போறோம்?
அது போதும்மா!
நம்மள நல்லாக் காப்பாத்தற ஆளவிட பணம் என்னம்மா பெருசு?

ஏண்டி, உனக்கு வசதியா இருக்கணும், வண்டியில போகணும் அப்படியெல்லாம் ஆசையே இல்லையா?

என்னம்மா பெரிய வசதி?
 நம்ம மனசுதாம்மா வசதி!
என்னைக்கு எது போதும்ன்னு நெனைக்கப்போறோம்?
சோறு ஒண்ணுதாம்மா மனுஷன் போதும்ன்னு சொல்றது. அதுவும் கொஞ்ச நேரம்தானம்மா?
அதுக்கப்புறம் மறுபடியும் வேணும்ன்னு அலையற பொழப்புதான நாம!
கெடைச்சது புடிச்சதா இருக்கற கவுரதை ஒன்னு போதும்மா!

உங்களுக்கு நான் சொல்லித் தெரியணுமா?

நாளைக்கு இன்னாவோ லவ்வருங்க டேவாமே?
அதுனால நாளைக்கே சென்னமல்லீஸ்வரர் கோயில்ல கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சேகர் சொல்லுச்சு!
ஆத்தாளும் ஒத்துக்கிச்சு!

நீங்க கண்டிப்பா வரணும்! நான் வரட்டுமா  யம்மா?

ரொம்ப நேரம் ராணி சொல்லிப் போனதே மனசுக்குள்ள உறுத்திக்கொண்டு இருந்தது!

படித்த மனது, அலை பாய்ந்தது!

தன் சம்பளம், ரவி சம்பளம் ரெண்டும் சேர்ந்தால் தான் அடையக்கூடிய உயரம், ஊர் வம்பைத் தலையில் சுமந்து அலையும் தன்னைவிட சம்பளம் குறைந்த ராஜேந்திரன் பற்றித் தனக்குள் எழுந்த பயம் எல்லாவற்றுக்கும் மேல் ராணி சொல்லிப்போன ஒரு உலகம் இருக்கிறதோ?

தலையை மறுபடி வலித்தது யசோதாவுக்கு!

சற்றுநேரம் ஷவரைத் திறந்துவிட்டு கீழே நின்றவளுக்கு நிதானமாக ஒரு தெளிவு பிறந்தது!

செல்போனை எடுத்தவள், டயல் செய்து மறுமுனையின் ஹல்லோ என்ற குரல் கேட்டதும் சொன்னாள்!

“எனக்கு சம்மதம் ரவி!”பிப்ரவரி 14, ஞாயிறு!

கவுண்டம்பாளையத்தில் தன் வீட்டு வாசலில் வந்து நின்ற கப்பல் மாதிரி காரிலிருந்து இறங்கிய தம்பதியைக் கேள்விக்குறியோடு பார்த்தார் கண்மணியின் அம்மா!
அம்மா, நான் ராஜேந்திரா ஸ்பின்னிங் மில் ஓனர்!
எங்க பையன் ராஜேந்திரனுக்கு உங்க பொண்ணைக் கேட்டு வந்திருக்கிறோம்!

பி கு
சமர்ப்பணம்!

“உங்களுக்கு இந்த ரமணி சந்திரன் மாதிரி ஃபீல் குட் ஸ்டோரியெல்லாம் எழுதத் தெரியாதாண்ணா?” என்று கேட்ட என் தங்கைக்கு!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக