சனி, 12 மார்ச், 2016

ஒரு ஆடை உருவான கதை!

அப்பாவின் அன்புப் பரிசு!“சார், படியூர் காதி வஸ்திராலயாவுக்கு உடனே வாங்க!”
காதரின்  குரலில் சந்தோஷத்தைவிட நிம்மதிதான் அதிகம் தெரிந்தது!
அனுபவிச்ச டார்ச்சர் அப்படி!

“அப்பா, எனக்கு ஒரு டாப்ஸ் வேணும்! But it should be unique in design!”
ஒரு மாதத்துக்கு முன் மகள் சொன்னதில் ஆரம்பித்தது இந்த வேலை!

தவமிருந்து பெற்ற செல்ல மகள் கேட்டது மனதுக்குள் உறுத்திக்கொண்டே இருக்க, முதலில் மெடீரியல் முடிவு செய்வதில் ஆரம்பித்தது பிரச்னை!

சுத்தமான பட்டு என்பது முடிவு செய்து, திருப்பூரின் எல்லாக் கடைகளிலும் ஏறி இறங்கினால், காதியில் மட்டுமே சுத்தப் பட்டு கிடைக்கும் என்று முதல் தகவல்!

முதலில் மாட்டிய ஆடு குமார்தான்!
“குமார், வெளிய போகும்போது காதி கறுப்புக் கலர்ல பட்டுத் துணி இருந்தா, கொஞ்சம் ஃபோன் பண்ணுங்க ப்ளீஸ்!”
எப்போதும் வேலை சொல்லாதவர் சொல்கிறாரேன்னு பின்விளைவு புரியாமல் சந்தோஷமாகத்தான் போனார் குமார்!

திருப்பூர், படியூர், காங்கயம் வெள்ளகோவில், (சென்னையும் நியூயார்க்கும்தான் பாக்கி) சுத்துவட்டாரத்தில் இருக்கும் நூற்று முப்பத்தாறு காதி வஸ்திராலயாவிலும் கறுப்புப் பட்டுத் துணி இல்லை!

மறுபடி ஒரு மீட்டிங்!
இதில் தானாக வந்து சிக்கிய ஆடு காதர்!

“சார், ஏன் கறுப்பு துணி வாங்கணும்?
வெள்ளையில் வாங்கி, சாயம் தோய்த்துக் கொள்ளலாமே!”

குமார் காட்டிய எந்த ஜாடையும் புரியாமல் வலிய வந்து மாட்டிய காதர் தலையில் விழுந்தது,
 வெள்ளைப் பட்டுத் துணி வாங்கி, கறுப்பு சாயம் போடும் பொறுப்பு!

வெள்ளைப் பட்டும் அப்படி சுலபத்தில் கிடைக்காமல்,
இதோ, “கண்டேன் சீதையை”  டைப் கதறல் பை காதர்.

வெள்ளைப் பட்டுத் துணி வாங்கியதும் அடுத்து வந்த பிரச்னை,
பட்டுத் துணியில் சாயம் தோய்க்க முடியுமா?
 அப்படியே போட்டாலும் நாலு மீட்டர் துணிக்கு யார் சாயம் தோய்த்துத் தருவார்கள்?

திருப்பூர் முழுக்கத் தேடி, பெருந்துறையில் சாயப்பட்டறை கண்டுபிடித்து வந்து சொன்னது பிரகாஷ்!

ஒருவழியாக கறுப்புத் துணி கையில் வந்து சேர்ந்தது!
(சாயப்பட்டறையிலிருந்து வந்த துணி மாட்டுவாயில் விட்டு எடுத்தது போல் இருந்தது வேறு கதை - அயர்னிங் சௌந்தர் வேலை)

இப்போ, அடுத்த பெரிய வேலை!
டிசைன்!

உமா, லக்ஷ்மணன், பிரகாஷ், அருண் ஷங்கர் - மொத்தம் நான்கு டிசைனர்கள் அந்த எக்ஸ்போர்ட் கம்பெனியில்!

மகளுக்கு மயில் பிடிக்கும் என்பது மட்டும்தான் கான்செப்ட்!இந்த ஆடிட்டர் எப்போது ரிசைன் பண்ணிட்டுப் போவான்னு சிவன்மலையில் பூ வைத்துக் கேட்டார்கள் என்பது பின்னால்தான் தெரிந்தது!

ஒருநாள் அருண் ஷங்கர் வீட்டுக்குப் போனபோது ஆர்வக்கோளாறில் அவங்க அம்மா, தான் வரைந்த ஓவியங்களைக் கொண்டுவந்து காட்ட,
அப்போது விழுந்தது அடுத்த பொறி!

“அருண், அந்த அவுட் ஃபிட் மட்டும் வரைந்து அம்மாவிடம் கொடுத்துவிடுங்கள், பேசாமல் அம்மாவை ஒரு மயில் வரைந்து தரச் சொல்லலாம்!”

“எப்படி சார்ஒரு மயில் மட்டும் வரைந்தால் நல்லா இருக்குமா?”

“இருக்கும் அருண், முன்னாள் ஒரு மயிலும், முதுகுப் பக்கம் ஒரே ஒரு மயிலிறகும்!”
பாவம் -  அந்த அம்மா வரைந்து காட்டிய எந்த அவுட் லைனும் பிடிக்கவில்லை!

ஒருநாள் அவரே தயங்கித் தயங்கிச் சொன்னார்-  ஆடிட்டர் சார், நான் சொந்தமாக ஒரு டிஸைன் போட்டுத் தரட்டுமா?”

சரி என்று அரை மனதாய்த் தலையாட்டிய அடுத்த வாரமே அருண் கொண்டுவந்து கொடுத்த டிசைனில் அழகாய் சிரித்தன இரட்டை மயில்கள்!

எல்லா டிசைனர்களும் ஒருமனதாய், - ரகசியப் பெருமூச்சோடு - பாராட்டித் தள்ள, ஒருவழியாக டிசைன் முடிவானது!

மூன்று மாதம், அந்த ஓவியத்தின் சின்னச் சின்ன முன்னேற்றமும் வாட்ஸ் அப்பில் வர, ஒரு காலை நேரம் அருண் கொண்டுவந்த டிசைன் எல்லோரையும் வாய் பிளக்க வைத்தது!

தற்செயலாய் அங்கு வந்த எம்டி,  வாவ், அற்புதமாக இருக்கிறது இந்த வால் ஹேங்கிங்!”  என்று சொல்ல, ஒவ்வொருத்தராக ஆரம்பித்தார்கள்!

“அற்புதமாக வந்திருக்கிறது சார், நாங்களே சொல்லலாம் ன்னு நினைச்சோம்! இதை தைத்து வீணாக்காமல் பேசாமல் ப்ரேம் போட்டு வீட்டு ஹாலில் மாட்டுங்க சார்!”

எனக்கும் அது நியாயம் என்றே பட்டது!
வீட்டுக்குக் கொண்டுபோய் காட்டியபோது ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் விரிந்த மகளின் முகம் உடனே முடிவை மாற்றச் சொன்னது!

டாப்ஸ் தைப்பது என்று முடிவான பிறகு அடுத்த தேடல் - டைலர்!

எந்த டைலர் தைப்பதும் ஒத்துவராது என்பதில், ஒரு வருடத்துக்குமேல் பீரோவில் தூங்கிக்கொண்டிருந்தன ஜோடி மயில்கள்!

கோவை வந்தபின் எதேச்சையாக நான்கு வீடு தள்ளி ஒரு பெண் தைப்பது தெரிந்து ரெண்டு துணிகள் தைக்கக் கொடுக்க, அற்புதமாய் அமைந்தது ஃபிட்டிங்க்!

இரண்டு வருட அலைச்சல், பலர் உழைப்புக்குப் பின் கச்சிதமாக ரெடியாகி வந்தது டாப்ஸ்!அப்புறம்தான் அந்த கிளைமேக்ஸ்!

“இந்த அப்பாவோட சின்னப் பரிசு!”  அப்படின்னு சின்னதா ஒரு சீன் போடப்போனால்,
“போடா, பெரிய கல்யாண் ஜுவல்லர்ஸ் அப்பான்னு நினைப்பு!”  - அப்படின்னு துப்பீட்டுப் போகுது பெத்தது!
ஹூம்! நமக்கு இந்த ட்ராமால்லாம் செட்டே ஆகாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக