ஞாயிறு, 15 மார்ச், 2020

சாதி ஒழிப்புச் சாதனமா காதல்?

சாதி ஒழிப்புக்கு காதல் ஒரு வழியா?ஜாதிகள் இல்லையடி பாப்பா!
இதைச் சொல்லித்தந்த அதே வகுப்பில்தான், 
தச்சு வேலை செய்பவர் தச்சர்.
மண்பாண்டம் செய்பவர் குயவர்,
துணி துவைப்பவர் வண்ணார்,
முடி திருத்துபவர் நாவிதர்,
ப்ரோகிதம் செய்பவர் பிராமணர் இதையும் சொல்லிக்கொடுத்தார்கள்!

இவை சிறு வயதில் பள்ளியில் சொல்லிகொடுக்கப்படுபவை!

இதில் தொழில் பெயரும் ஜாதிப் பெயரும் தவிர்க்கமுடியாமல் ஒன்றாக இருப்பவை போக, இந்தத் தொழில் செய்பவர் இன்ன ஜாதி என்பதையும் சிறுவயது முதல் சொல்லிக்கொடுக்கப்பட்டே வளர்க்கப்படுகிறோம்!

கோனார் தமிழ் உரை வாங்கிப்படிக்க ஆரம்பித்த ஒவ்வொருவரும் ஜாதியை அறிய ஆரம்பிக்கிறார்கள் - அவர்கள் அப்படியான சூழலில் வாழாவிட்டாலும்!

“கோனார்ன்னா என்னப்பா?”
 “ம்ம்.., அது ஒரு ஜாதி!” -  இந்த உரையாடல் நடக்காத வீடு எங்காவது இருக்கிறதா?

“கண்ணுபடப் போகுதையா சின்னக் கவுண்டரே”,
போற்றிப்பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே!”
இதெல்லாம் தமிழர்களின் உயிர் மூச்சான  திரைப்படங்கள்  சொல்லிக் கொடுக்கும் ஜாதி மறுப்பு விஷயங்கள்!

இதுபோன்ற படங்கள், அவர்களின் உயர்வு பிறப்பால் வந்தது என்பதையும், துணி துவைப்பவர், மற்ற ஜாதியினரை அவர்கள் ஒருமையில் விளித்துப் பேசுவதுதான் அவர்களுக்கான தர்மம் என்பதையும் அடிக்கோடிட்டுச் சொல்கின்றன!

சின்னக் கவுண்டரில் விஜயகாந்த், கவுண்டமணி உரையாடல்கள் இதை மிகத் தெளிவாகவே முன்னிறுத்தும்!

முதல் மரியாதையில் செருப்புத் தைப்பவர் தேவரினத்தைச் சேர்ந்த கதாநாயகனைப் பார்க்கும்போதெல்லாம் துண்டை கக்கத்தில் வைத்துக்கொண்டு கும்பிடுவார்!

இதை யதார்த்தம் என்று வாதிடுபவர்களுக்கு என் பதிலும் அதுதான்

இதுதான் யதார்த்தம்!

ஊருக்கு ஒன்றாய் இன்னும் இருக்கும் காலனிகள் போக, கவுண்டனூர், கவுண்டச்சிபாளையம், முதலி பாளையம், செட்டிப்புதூர், வண்ணாரப் பேட்டை இவற்றுக்கு உங்கள் குழந்தைகள் பெயர்க்காரணம் கேட்டதே இல்லையா

கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

வருடம்தோறும் நடக்கும் தேவர் குருபூஜை, தீரன் சின்னமலை விழா, இம்மானுவேல் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், நினைவுநாள் ஆர்ப்பாட்டங்கள் இவை ஜாதி ஒழிப்புக்கா?

இது அத்தனையும் அரசு, சமூக ஒத்துழைப்பு இல்லாமல் காதல் கல்யாணத்தால் மாறிப்போகுமா?

ஜாதி, நம் சமூகத்தில் ஊடும் பாவுமாக இழைந்து இறுக்கியிருக்கிறது!
இதை காதல் கல்யாணத்தின் மூலம் தகர்க்கலாம் என்ற கொம்புசீவல்கள் கொசுவிரட்டும் மட்டையை கையில் கொடுத்து புலி வேட்டைக்கு அனுப்புவது போல!

செய்யும் தொழிலில் உயர்வு தாழ்வும், இந்தத் தொழிலை இன்னார்தான் செய்யவேண்டும் என்ற எழுதா விதியும் இருக்கும் வரை ஜாதிகள் ஒழிப்பு சாத்தியம் இல்லை!

கலெக்டரே ஆனாலும்,  தலித் உள்ளூரில் கக்கூஸ் கழுவும் தோட்டி மகன் என்றே அறியப்படுவார்.
 அவரும் தன் பெற்றோர் செய்யும் தொழிலை வெளியே சொல்லிக்கொள்ள தயங்கவே செய்வார்!
இந்தத் தாழ்வு, உயர்வு மனப்பான்மை நீங்க இன்னும் பல தலைமுறைகள் ஆகும்!
அந்தக் கலெக்டரின் பேரன் காலம்வரை!

இந்த அடிப்படை மாறாமல், காதல் கல்யாணம் ஜாதியை ஒழிக்கும் என்பது அபத்தம்!

இப்போது நான் கேட்கும் கேள்வி என்னைப் பிற்போக்குவாதியாகக் காட்டும் அபாயம் இருப்பினும், என்னால் அதைக் கேட்காமல் இருக்கமுடியவில்லை!

உடுமலை சங்கரோடு, தன மகள் கௌசல்யாவையும் கொல்லத் துணிந்த தகப்பன் தன்னிச்சையாக அதைச் செய்திருப்பானா?
நிச்சயம் இருக்காது!

“நீயெல்லாம் ஏண்டா இன்னும் மீசைய வளர்த்துக்கிட்டு ஆம்பளைன்னு சொல்லிக்கிட்டு திரியறே?”
“என் மக மட்டும் இப்படிச் செஞ்சிருந்தா, தேடிப் புடிச்சு வெட்டி வீசியிருப்பேன்!”
“நீயெல்லாம் என் ஜாதின்னு சொல்லவே வெட்கமா இருக்குடா!”
இந்த வார்த்தைகளை எத்தனை முறை அவர் கேட்க நேர்ந்திருக்கும் ,

அல்லது
இது போன்ற வேறு ஏதாவது முன் நிகழ்வுகளில் அவரே இந்த வார்த்தைகளை யாரைப் பார்த்தும் சொல்லியிருக்க மாட்டார் என்பதும் நிச்சயம் இல்லை!

தன் மகள் செத்தாலும் தவறில்லை, தன் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்பது நம் சமுதாயம் அவர் இரத்தத்துக்குள் கலந்த விஷம்!

ஊடகங்கள் கௌரவக் கொலையை ஆணவக் கொலை ஆக்கியதோடு கடமை முடிந்தது என்று கையை உதறிவிட்டுப் போய்விட்டன
ஆனால் அவற்றின் ஒரே பாராட்டத்தக்க மரபு, கொலை செய்த ஜாதியைச் சொல்லாதது! இது தேவையற்ற ஜாதி மோதல்களைத் தவிர்க்கும்!

ஆனால் இளவரசன் கதையில் திமிரில் ஊறிப்போய் கொன்றவர்களும் மாற்றம் தரப் பிறந்த அவர்கள் தலைவர்களும் அதை மேடைபோட்டுப் பெருமையாய் சொன்னதால், ஊடகங்களால் அதைத் தவிர்க்கமுடியவில்லை!ஓடிப்போனவளை இழுத்துவந்து, தாலியை அறுத்து வீசிவிட்டு மறுதாலி கட்டவைத்து வாழும்(?) பல ஆதிக்க சாதிப் பெண்களை எனக்குத் தெரியும்!

அந்தக் கணவர்கள் அத்தனை பேரும் காதல் திரைப்படக் கதாநாயகிக்கு வாய்த்த கணவர்கள் போல் நளினமான சுபாவம் கொண்டவர்கள் என்றா நம்புகிறீர்கள்?
அந்த மாப்பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்ட விலைகள், அவர்கள் தங்கள் மனைவியை நடத்தும் விதம் இதெல்லாம் அதிர்ச்சி ரகம்!

அவன் என்ன கொடுமை செய்தாலும்,
ஓடுகாலிக்கு வாழ்க்கை கொடுத்தவர்!  நீ செய்த தப்புக்கு நீதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்” என்ற அலட்சியமான தீர்ப்பே அவர்கள் காலத்துக்கும்!

அந்த வாழ்க்கை கொடுத்த மாமனிதன், அந்தப் பெண் யாருடன் ஓடிப்போனாரோ அந்த ஜாதியைச் சேர்ந்த பல பெண்களை வைத்திருந்தாலும் அது கணக்கில் வராது!

இது கொங்கு நாட்டு நிதர்சனம்!
இல்லை என்பவர்கள் - அறியாமல் பேசுகிறார்கள் அல்லது பொய் சொல்கிறார்கள்!

இளவரசனும் சங்கரும் செத்துப்போகாமல், திவ்யாவும் கௌசல்யாவும் செத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?
ஒரு வருடமோ, இரண்டு வருடமோ கழித்து எல்லாமே மறந்து போயிருக்கும்!

ஆனால் இப்போது?
அந்தப் பெண்கள் சாகும்வரை அந்தத் துயரம் அவர்களுக்கு இருக்கும்!

ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரமும் உரிமையும் பெண்களுக்கு இன்னும் நம் சமுதாயத்தில் கிடைக்கவில்லை!

இன்னும் நம் புரட்சித் திரைப்படங்கள் கூட காதல் தோல்வியுற்ற/ மனைவியை இழந்த கணவர்களுக்கு அதையே ஒரு தகுதியாக்கி ஒரு பேரழகியை மனைவியாக்குகின்றன!

காதல் தோல்வியுற்ற பெண்ணோ, கணவனை இழந்த மனைவியோ, அவன் நினைவைச் சுமந்துகொண்டு புனிதமாக வாழ்ந்து செத்துப்போகிறார்!

எனக்குத் தெரிந்த ஒரு மிக அற்புதமான குணவதி, தன் ஜாதியைச் சேர்ந்த ஒரு குடிகாரனைக் கல்யாணம் செய்துகொண்டு, அடி உதை தாங்க முடியாமல் விவாகாரத்து செய்தார்.
அதன்பின் ஒரு மனைவியை விவாகரத்து (அதற்கான காரணம் அவர் சொல்வது மட்டுமே) செய்தவரை மறுமணம் செய்துகொண்டு உயிரோடு இருக்கிறார்- வாழ்கிறார் என்று சொல்ல எனக்குத் தயக்கமாக இருக்கிறது!

இத்தனைக்கும் அந்தப் பெண்ணுக்கு இரண்டு திருமணமும் பெற்றோர் பார்த்துச் செய்துவைத்தது!
இது, சமுதாயத்தில் முன்னேறிவிட்டதாக எல்லோரும் தூற்றும் ஜாதியைச் சேர்ந்த பெண்ணின் கதை!

காதல், கல்யாணம் போன்ற எந்த விஷயத்திலும் தோல்விகளால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே.
நம் சமுதாய அமைப்பு அப்படி.
தங்களால் கனவிலும் தொடரமுடியாத ஒழுக்கவிதிகளைப் பெண்கள்மேல் கூச்சமே இல்லாமல் சுமர்த்தி வேடிக்கை பார்க்கும் சமூக அமைப்பு இது!

ஜாதியை ஒழிக்கும் நோக்கத்தோடு காதலிக்கமுடியாது!

அப்படி ஜாதி மாறித் திருமணம் செய்கையில் இடம் மாறி வசிக்கவேண்டிய சூழல் பெண்ணுக்கு மட்டுமே! வேரோடு இடம் மாறுவதில் ஏற்படும் கலாச்சார அதிர்ச்சி பெண்ணுக்கு மட்டுமே!
அதைத் தாங்க முடியாமல்,
அல்லது
ஆணின் உண்மை முகம் தெரிந்து விவாகரத்து வாங்கும் பெண்கள் எத்தனை பேருக்கு மறுவாழ்க்கை நல்லவிதமாக அமைகிறது?

விவாகரத்து ஆன ஆணுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் பெண்ணுக்குக் கிடைக்கிறதா?

பதினெட்டு வயதில் தன் வாழ்க்கையை முடிவு செய்யும் முதிர்ச்சியை நம் கல்வி, கலாச்சாரம், வளர்ப்பு முறைகள்  நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்றனவா?

பதினெட்டு வயதில், கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் பருவத்தில், முதலில் படிப்பு சார்ந்த முடிவை எடுக்க எத்தனைபேருக்கு உரிமை இருக்கிறது?

பெற்றோரின் விருப்பங்களையும், கனவுகளையும் தலையில் சுமக்கமுடியாமல் தள்ளாடும் குழந்தைகளாகத்தான் அவர்களை நாம் வைத்திருக்கிறோமே தவிர சொந்தக்காலில் நிற்கும் நிலையிலா அவர்களை வைத்திருக்கிறோம்?

எந்தப் படிப்பை முடித்தாலும் வேலை தேடி அலைவதும்,
கிடைத்த வேலையைத் தக்கவைத்துக்கொள்ளத் தடுமாறுவதும் என ஆயிரம் மலைகளைத் தாண்டியபின், தன் காலில் நிற்கும்போது காதலிக்க ஆரம்பித்தால், அதில் ஒரு சின்ன லாஜிக் இருக்கிறது!

பதினெட்டு வயதில் படிக்கும்போது வருவது பெரிதும் இனக்கவர்ச்சியே!
காதல் அந்த வயதுக்குக்  கெட்டவார்த்தை!

அப்படியே எல்லோரையும் எதிர்த்துக் கல்யாணம் செய்துகொண்டு பஸ் ஓனர் ஆவதும், கலெக்டர் ஆவதும் சூரியவம்சத்து லல்லல்லா பாடலில் மட்டுமே சாத்தியம்!
வாழ்க்கை வேறு வண்ணங்களால் ஆனது!

ஒருவேளை பட்டினி அந்த வயதின் எல்லா உறுதிகளையும் தகர்த்துப் போடும்!

திருநெல்வேலியிலிருந்து தன்னைவிட ஐந்து வயது சிறியவனைக் காதலித்து உறுதியோடு வந்து திருப்பூரில் வாழ்ந்த கோதை என்னும் பெண்ணின் எதிர்காலம் என்ன?

அந்தப் பெண் சிறையில் இருக்கும்போது,
அந்தக் காதல் கணவன் பெற்றோருடன் சேர்ந்துகொண்டு,
டீச்சருடன் வாழ்ந்த வாழ்க்கை கசப்பானதுஎன்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்!

வெட்கம் கெட்ட ஊடகங்களும் அதைக் கேள்வி கேட்காமல் பிரசுரித்துப் பரபரப்பைக் காசாக்கிக் கொண்டிருக்கின்றன!

வயிற்றில் குழந்தையோடு சிறைக்கும் போன அந்தப் பெண்ணின் எதிர்காலம் என்ன ஆகும்?

(அந்தப் பையனுக்கு காதலிக்கும்போது பதினேழு வயது என்பதும், புனிதமான டீச்சர் காதலிக்கலாமா என்பதும் என்ன வகையான வாதம் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை)

மொத்தத்தில் இளவரசுகளும் சங்கர்களும் செத்துப் போகிறார்கள்! திவ்யாக்களும் கௌசல்யாக்களும் பிணமாய் வாழ்கிறார்கள்!

சொந்தக் காலில் நின்று, எதையும் எதிர்கொள்ளும் வயது வரும்வரை காத்திருந்து, உடலையும் அழகையும் மீறிக் கொள்ளும் காதல் வெல்லும் வாய்ப்புகள் ஓரளவு எனில்,
 பதினெட்டு வயதில் வரும் கவர்ச்சிக்காதல்கள் நிலைக்கும் வாய்ப்பு என்ன என்பது உங்களுக்கே தெரியும்!

பொருளாதார சுய சார்பு வந்ததும், எதையும் சமாளிக்கும் துணிச்சலுடன், உணர்ந்து, அனுபவித்து, உண்மையாய்க் காதலியுங்கள்!
காதலோ கல்யாணமோ புரட்சி அல்ல- வாழ்க்கை!
காதலிக்கவோ அதை மறுக்கவோ சாதியை காரணமாக்காதீர்கள்!
முக்கியமாக
படிப்பை, தன்னை சேரும் இணை தன் அடிப்படை வசதிகளை தியாகம் செய்யாது வாழ வைக்கும் தகுதியை வளர்த்துக்கொள்ள முயலாமல், சாதியை முக்கிய காரணியாக்கி, கொல்லாதீர்கள்!
ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்தும் நேசித்தும் நூறாண்டு இணை பிரியாமல் வாழுங்கள்!

வாழ்வதற்காய் காதலியுங்கள்!

சமூகத்தைச் சீர்திருத்தக் காதலிக்காதீர்கள்!
அதற்கு ஆயிரம் வேறு வழிகள் இருக்கின்றன!

அதை ஈரோட்டிலிருந்து புறப்பட்ட தாடிக்காரரைப்போன்றோர் பார்த்துக்கொள்வார்கள்!

சாதிப் பாகுபாடுகள் தீர மற்ற வலுவான விஷயங்கள் மாறும்வரை, காதலை ஒரு ஆயுதமாய் எடுக்கச் சொல்பவர்களைவிட்டு கொஞ்சம் விலகியே இருப்பது நல்லது

அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக