புதன், 27 ஏப்ரல், 2016

இப்படித்தான் நடந்தது அந்த நேர்காணல்!


போனவருடம், திடுதிப்பென்று ஒரு முடிவெடுத்து, கோவைக்கு சட்டிபானை தூக்கியபோது, எல்லாப் பள்ளிகளிலும் கடைசி பெல் அடித்துக் கதவைச் சார்த்திவிட்டார்கள்!

"இந்த ஆள் எப்போ உருப்படியா யோசிச்சு முடிவெடுத்திருக்காரு, 
பேய்க்கு வாழ்க்கைப்பட்டாச்சு. இனி புளியமரத்துக்கு பயந்து என்ன பலன்?"

முந்தைய நாள் சாயங்காலம் வீடு பார்த்து மறுநாள் பால் காய்ச்சும்போது என்னையும் மனசுக்குள்ள காய்ச்சிக்கிட்டிருந்த மாலையிட்ட மங்கை,

இருபத்தஞ்சு வருஷம் முன்னாடி தன்னோடு கல்லூரியில் படித்த ஒரு நண்பரைப் பிடித்து ஓரளவு நல்ல பள்ளியில் மகனுக்கு இடம் வாங்கிவிட்டார்!

வழக்கம்போல பையன் படிக்கற பள்ளிக்கூடம் இருக்கற திசைகூடத் தெரியாமல் ஆஃபீஸையும் டவிட்டரையும் கட்டிக்கொண்டு அழுதே ஒரு வருடத்தை ஓட்டிவிட்டேன்!

அப்படியே இன்னும் நாலு வருஷம் ஓடிடும்ன்ற மூடநம்பிக்கைக்குப் பால் ஊத்தறமாதிரி ஒரு ஃபோன்!

"நாளைக்கு பேரண்ட்ஸ் மீட்! கண்டிப்பா காலைல பத்து மணிக்கு வந்துடுங்க!"
பேசிய தேன் குரல் நயன்தாராவை நியாபகப்படுத்த,
மறுநாள் (எப்போதும்போல்) வேலைவெட்டி இல்லாததால, டக் இன் பண்ணி, ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு ஸ்கூலுக்கு வழி விசாரிச்சுக்கிட்டுப்போனா, மாட்டு மூ.. மாதிரி ஒரு டீயக் கொடுத்தது அறுபது வயசு ஆயா!

நம்மளமாதிரியே, நயன்தாராவப் பார்க்க பெண்டாட்டியை விட்டுத் தனியே வந்த அத்தனை ஆண்களும் பேயறஞ்சு நிற்க, ஏரியாவில் கடும் வறட்சி!

ஏசி ரூம்ல உட்காரவெச்சு, அடுத்த ஆப்பு அழகா எறங்குச்சு!

"அடுத்த வருஷத்திலிருந்து எட்டு, ஒன்பதாம் வகுப்புக்கு மதியம் பனிரெண்டு டு ஆறு மணிவரை வகுப்பு!"

ஏற்கனவே ஏகக் கடுப்பு!

இதில் சாயங்காலம் கிரிக்கெட் விளையாடக் கம்பெனி இல்லாதுபோகும்ங்கற சொந்தக்கவலை!

"போங்கடா! நீங்களும் உங்க ஸ்கூலும்!
எனக்கு இந்த நிமிஷமே டீசி வேணும்"ன்னு மல்லுக்கு நின்னு டீசி வாங்கிக்கிட்டு வீட்டுப்படியேற, வழக்கமான கேள்வி
"உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா?" 

பத்தாயிரத்து சொச்சம் தடவைபோல, இப்பவும் அந்தக்கேள்விய சாய்ஸுல விட்டுட்டு,
"சோத்தப்போடுடி பசிக்குது"

"பையனுக்கு அட்மிஷன் வாங்குவீங்களோ, இல்லை பொழுதுக்கும் கிரிக்கெட் விளையாடுவீங்களோ எனக்குத் தெரியாது!" சோற்றோடு அர்ச்சனையும்!

தெரியும்,நானும் பையனும் கிரிக்கெட் விளையாடத்தான் ப்ரிஃபர் பண்ணுவோம்ன்னு!

மறுநாளே முனகிக்கிட்டே போய் கோவையில் பல கிளைகளைக்கொண்ட, வசந்த அண்ட் கோ இல்லைங்க,  ஒரு பெரிய ஸ்கூலில்  அப்ளிகேசன் வாங்கிட்டுவந்து என் கையில் திணிச்சாங்க!

"ஐயா சாமி! இது வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற நல்ல ஸ்கூல்!"
"சனிக்கிழமை எண்ட்ரன்ஸ் டெஸ்ட். எப்படியோ பையனைக் கூட்டிக்கிட்டுப் போய் அட்மிஷன் வாங்கிட்டு வாங்க!+ -  இது எனக்கு!

"இங்க ஏதாவது லூசுத்தனம் பண்ணி அட்மிஷன் கெடைக்கல, சோறு கிடையாது ஜாக்கிரதை!" - இதுவும் எனக்குத்தான்! பையனுக்குச் சொல்றமாதிரி!

சனிக்கிழமை காலைல ஒன்பதரை மணி டெஸ்ட்டுக்கு நானும் பையனும் வீட்டை விட்டுக் கிளம்பும்போது மணி ஒன்பதே முக்கால்!

வேண்டாவெறுப்பாய்ப் பள்ளிக்கூடம் போனால், அமலாபால் ரேஞ்சுக்கு ஒரு ஸ்டாஃப்!
பையன் ஃபஸ்ட் ஃப்ளோர்ல டெஸ்ட் எழுதட்டும், நீங்க இங்க உட்காருங்கன்னு ஒரு ஹாலைக் காட்ட, அங்கே திருப்பதி தரிசனக் கூட்டம் போல ஒரு ஜனத்திரள்!

இங்க இடம் இல்லை போல, நான் உங்ககூடவே உட்கார்ந்துக்கவா?
சும்மா ஜொல்லி சீ சொல்லிப்பார்த்தேன்!

அதுக்குள்ள ஒரு கிராதகன் ஒரு சேரைக் கொண்டுவந்து போட்டான் படுபாவி!

வெய்ட் பண்ணுங்க! கூப்பிடுவாங்கன்னு சொல்லிட்டு அமலாபால் நகர, சூழ்நிலையே சோகமாய்டுச்சு!

பத்தாவது நிமிஷம், இன்னொரு குயில் கூவுச்சு!
" ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் அட்மிஷன் பேரண்ட்ஸ் எல்லாம் வாங்க!"
பாதி கும்பல் கோவிந்தான்னு எந்திரிச்சுப் போச்சு!

இப்படியே ஒவ்வொரு வகுப்பாய்க் கூப்பிட, எட்டாம் வகுப்புன்னு கூப்பிடும்போது நானும் இன்னொரு மாமாவும் மட்டும்!

அதுக்கு அமலாபால் விளக்கம் வேறு! "பொதுவா எய்த் ஸ்டாண்டார்ட்ல ஸ்கூல் மாத்தற ரிஸ்க் எடுக்க மாட்டாங்க!"
மாமா பாவம் கண்ணுல ஜலம் வெச்சுண்டார்!
அவருக்கும் சாப்பாடு பிரச்னைபோல!

ஒருவழியா எங்களையும் அடுத்த ப்ளாக் போகச்சொன்னாங்க!

அங்கே பெரிய போர்ட்!

Parents interface! 

எங்களுக்கு ஆறாம் எண் அறை!

அப்போதுதான் தெரியும் எனக்கு, எனக்கும் இண்டர்வ்யூன்னு!

மனசுக்குள்ள பெண்டாட்டிக்கு சாபமெல்லாம் விட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்க, முதலில் மாமா உள்ளே போனார்!

கிடைத்த கேப்ல உள்ள பார்த்தா நாலஞ்சு சேலை தெரிஞ்சுது!

சிக்கினான்டா சிவனாண்டின்னு நெனைச்சாலும், கொஞ்சம் டீசண்டா ட்ரஸ் பண்ணிக்கிட்டு வந்திருக்கலாமோன்னு தோணிச்சு!

பெரிய ஆஃபீஸர் ஜெனரல் மாதிரி ட்ரஸ் பண்ணிக்கிட்டு உள்ளே போன மாமா ரெண்டே நிமிஷத்துல சோகமா வந்தாரு!

வாசல்ல இருந்த துவாரபாலகி, "yes! You may go in Sir!"

நடுங்கித் தொலைத்த கையை மறைத்துக்கொண்டு கதவைத் தள்ள..
ஆஹா! என்ன ஒரு காட்சி!


ஐந்து பெண்கள் கொண்ட இண்டர்வ்யூ பேனல் என்முன்னால்!

விதி விட்ட வழி! என்று உள்ளே போனேன்!

இனி, நடந்த உரையாடலின் தமிழாக்கம்!

"பெயர்?"
"T.K. சிவபாலன்!"

"மாணவர் பெயர்?"
"அதுதாங்க!"

"ஓ! அது என்ன இரட்டை இனிசியல்? ஏதாவது நியூமராலஜியா?"
"இல்லை! அப்பா, அம்மா பெயரின் முதல் எழுத்து! எங்கள் கூட்டுத் தயாரிப்புதானே குழந்தை!"

சின்னப் புன்னகைகள் போதுமானதாக இருந்தது எனக்குள் இருக்கும் கிறுக்கன் விழிக்க!

"ஏன் ஸ்கூல் மாத்தறீங்க?"
"போன வருஷம்தான் கோவை வந்தோம்! கடைசி நேரம்ங்கறதால எங்களுக்கு வேறு சாய்ஸ் எதுவும் இல்லை!
உங்க ஸ்கூல் பத்திக் கேள்விப்பட்டதும், இவனை மட்டுமல்ல, இனி ஒரு மகன் பிறந்தாலும் இந்த ஸ்கூல்லதான் சேர்க்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்!
அதுதான்!"

"சரி! வேற காரணம் சொல்லுங்க!"
"அந்த ஸ்கூல்ல ஷிஃப்ட் முறை அறிமுகம் அடுத்த வருடம்!
சாப்பிடுற, விளையாடுற நேரமெல்லாம் ஸ்கூல்ல இருக்கணும்! அந்த டைமிங் எனக்குப் பிடிக்கல!
மேலும் உங்கள் பள்ளி வீட்டிலிருந்து நடந்துவரும் தூரம்!"

"அடுத்த வருஷம் நாங்க ஷிஃப்ட் சிஸ்டம் கொண்டுவந்தா என்ன செய்வீங்க?"
"கண்டிப்பாக வேற ஸ்கூல் பார்த்துடுவேன்! பசங்களோட மற்ற திறமைகளைப் பாதிக்கும் படிப்பு கல்வியில் சேராது என்பது என் கருத்து!"

"பையனைப் பற்றிச் சொல்லுங்கள்!"
"நிச்சயமாக புத்திசாலிப்பையன்!
சராசரிக்கு மேலான மாணவன்!
இசையிலும் ஃபோட்டோகிராஃபியிலும் தற்போதைக்கு ஈடுபாடு! அவனிடமிருக்கும் சிறந்தவற்றை உங்கள் பள்ளி கண்டெடுக்கும் என்று நம்புகிறேன்."

"உங்கள் பையன் என்ன ஆகவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?"
"அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லை! அவன் என்ன ஆக விரும்புகிறானோ அதன் சாதக பாதகங்களை அவனிடம் சொல்லி, அவனை அப்படியே ஆக உதவுவதே என் எதிர்பார்ப்பு!"

"நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"
"ஆடிட்டர்!"

"உங்கள் துறைக்கு உங்கள் மகனை இழுக்கமாட்டீர்களா?"
"இல்லை! அதை எனக்கு என் தந்தை செய்யவில்லை!"

"பள்ளி என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?"
"பையனைப் படிப்பைப் பற்றி பயமுறுத்தாமல்  சொல்லிக்கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்!"

"வேறு ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா?"
"இல்லை! நீங்கள்தான் கேள்வி கேட்குமிடத்தில் இருக்கிறீர்கள்!" "உங்களுக்கு வேறு கேள்வி ஏதும் இல்லையா?"

"இல்லை! எங்கள் பள்ளி பற்றி நீங்கள் என்ன அறிவீர்கள்? புகழ்ச்சிக்காக இல்லாமல் நேர்மையாகச் சொல்லுங்கள்!"
"உங்கள் பள்ளியின் பாடத் திட்டங்கள் நன்றாக இருப்பதாகவும் ஒழுக்க விதிகளும்  நல்ல பண்புகளும் சொல்லித்தரப் படுவதாகவும் கேள்விப்பட்டேன்!"

"வேறு ஏதாவது?"

ஒரு சிறிய மௌனத்துக்குப்பின்..
சொல்லிவிடுவது என்று தீர்மானித்தேன்! வருவது வரட்டும்!

"இங்கு வரும்வரை தெரியாத ஒரு விஷயம், இந்தப் பள்ளி இத்தனை அழகிய ஆசிரியைகளைக் கொண்டிருக்கிறது என்பது! 
அதில் நீங்களும் ஒன்று!"

சின்ன அதிர்ச்சியும் திடுக்கிடலும் தொடர்ந்து ஒரு வெட்கப் புன்னகையும்!

"இங்கு உங்கள் பையனுக்கு இடம் கிடைக்காவிட்டால் வேறு எந்தப் பள்ளி உங்கள் தேர்வு?"
"இல்லை! இங்கேயே இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்!"

"நன்றி! செவ்வாயன்று முடிவுகளை நோட்டீஸ் போர்டில் பார்த்துக்கொள்ளலாம்!"
"அன்று எனக்கு அலுவலகம் இருக்கிறது! முடிந்தால் இன்றே சொல்லமுடியுமா?"

ஆச்சர்யமாக என்னைப் பார்த்தவர், ஒரு சிரிப்போடு சொன்னார்!

"அட்மிஷனுக்குப் பணம் கட்டிவிடுங்கள்! நான் ஆஃபீஸுக்குச் சொல்லிவிடுகிறேன்!"

சொல்லிக்கொண்டே மொபைலைக் கையில் எடுத்தார்!

அப்பாடா! மதியம் வீட்டு சாப்பாடு உறுதி!!!


திங்கள், 18 ஏப்ரல், 2016

சிங்கத்தின் சாபம் முதுமை!ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளின் இறுதி!

சிதம்பரத்தில் இருந்த அந்தக் கல்லூரியில் B.A. படித்துக்கொண்டிருந்த மாணவன் மிக நன்றாகப் படிக்கக்கூடியவன்!

கூடப் படிக்கும்,  உள்ளூரில் வசித்த , அப்போது கல்வியில் ஆதிக்கம் செலுத்திய உயர்ந்த ஜாதி மாணவன் ஒருவர் அவருக்கு மிக ஆப்தர்!
அவர் படிப்பில் கொஞ்சம் மட்டு!

கல்லூரி விடுதியில் அந்த நண்பரிடம் பாடம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவார்!

ஒரு கல்லூரி விடுமுறை நாளில் தன் வீட்டுக்கு வரும்படி நண்பரை அழைத்தார் அந்த உயர் ஜாதி நண்பர்!

அப்போதே, "உன் வீட்டார் இதை விரும்பமாட்டார்கள்" என்று மறுத்தவரை வற்புறுத்தி அழைத்துச் சென்றார்!

மாலைவரை படிப்பு பற்றி உரையாடலுக்குப் பின், அந்த மாணவர் புறப்படும்போது நடந்தது அது!

அந்த உயர் ஜாதி நண்பரின் தாயார் ஒரு பாத்திரத்தில் பசுஞ்சாணம் கலந்த நீரை எடுத்துவந்து அந்த மாணவர் அமர்ந்திருந்த இடத்தில் தெளித்ததோடு
தம்பி, கொஞ்சம் அந்த இடத்தை நீயே கொஞ்சம் துடைத்துவிடேன்”  என்று சொல்ல,

கூட்டிவந்த நண்பரைக் கேட்டார்
 "இப்போது நான் என்ன செய்ய? உங்க அம்மா சொல்வதை நான் செய்யவா?”

பதில் சொல்லாமல் தலை குனிந்து நின்றார் அந்த நண்பர்!

மறுவார்த்தை சொல்லாமல் அந்த இடத்தைத் துடைத்துவிட்டுநிதானமாகச் சொன்னார்!
அம்மா, இதை உங்கள் ஜாதிக்கு பயந்து நான் செய்யவில்லை, உங்கள் வயதுக்கு மரியாதை கொடுத்துச் செய்தேன்!

நீங்களாக எழுதிக்கொண்ட வேதங்களை வைத்து எங்களை விட உயர்ந்தவர்கள் என்று கற்பனையில் வாழ்வது உங்கள் விருப்பம்!

ஆனால், உங்கள் மகனின் மௌனம் என்னால் மன்னிக்க முடியாதது
நாளையிலிருந்து உங்கள் மகன் கல்லூரிக்கு வரும்போது பூணூலை சட்டைக்கு மேல் மாட்டி அனுப்புங்கள்!”

நண்பன் இருந்த திசையில்கூடத் திரும்பாமல் ஹாஸ்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்!

மறுநாள் தேடிவந்து மன்னிப்புக்கேட்ட நண்பனிடம்
ஒருமுறை எங்கள் ஊருக்கு வா!
 எங்கள் வாழ்க்கைத் தரம் உங்களிடமிருந்து எத்தனை மேம்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கமுடியும்!
ஆனால் ஒருமுறை கூட நான் அதைக் காண்பித்துக்கொண்டதில்லை!

நாங்கள் உங்கள் சாஸ்திரப்படி எங்களைவிடக் கீழ் நிலையில் இருப்பவர்களை நடத்தும் முறையைப்பார்!”

“வெறும் பிறப்பால் வந்தது உயர்வு என்ற எண்ணம் இருக்கும்வரை உன் படிப்பு உனக்கு அறிவைத் தராது!

இனி, பழைய சுபாவத்துடன் உன்னோடு நான் பழகுவது முடியாத காரியம்!  என்னை மன்னித்துவிடு”
என்று சொல்லி விலகி நடந்தார்!

இது அநேகமாக அந்தக் காலகட்டத்தில் அந்த ஒரு ஜாதியில் பிறக்காத எல்லோருமே கடந்து வந்ததுதான்!

ஆனால், இதன் எதிர்வினைதான் அவரை மற்ற பெரும்பான்மைகளிடமிருந்து வேறுபடுத்தியது!

இது நடந்த பத்தாண்டுகளுக்குப்பின் நடந்தது இது!

அவருக்குக் கல்யாணம் ஆகி, முதலில் ஆண் குழந்தை பிறந்த மறு வருடமே இரண்டாவதாய் ஒரு பெண் பிறக்க, இரண்டு குழந்தைகளையும் சமாளிக்கமுடியாமல் பாட்டி வீட்டில் வளர்ந்தது முதல் குழந்தை!

பாட்டி மற்றும் திருமணத்துக்குக் காத்திருந்த இரு சித்திகள் அரவணைப்பில் சொர்க்க வாழ்க்கை!

செல்லம் கொடுப்பதில் மூவருக்கும் போட்டி!

ஐந்து வகுப்பு வரை அதற்கு மூன்று அம்மாக்கள்!

 நான்காவதாய் அப்பாவோடு பணியிட மாறுதல்களால் ஊர் சுற்றிக்கொண்டிருந்த  பெற்ற தாய் இந்தக் கணக்கிலேயே இல்லை!

எல்லாமே கடந்து போவதுதானே வாழ்க்கை!

ஆரம்பப்பள்ளி முடிந்து ஆறாம் வகுப்பு உயர்நிலைப்பள்ளி!

அப்பாவும் அம்மாவும் தங்களோடு வந்துவிட அழைக்க, மகன்  பிடிவாதமும், இடைப்பட்ட காலத்தில் உள்ளூரிலேயே வாழ்க்கைப் பட்டிருந்த சித்தியின் கண்ணீரும் வெல்ல,
இன்னும் இரண்டு ஆண்டுகள் அங்கேயே படிப்பைத் தொடருவது என்று முடிவு ஏகமனதாக எடுக்கப்பட, இரண்டுநாட்கள் அம்மாவும் அப்பாவும் அங்கேயே தங்கி தங்கை, தம்பியோடு அவர்கள் மட்டும் ஊருக்குப் போவது என்று முடிவானது!

மறுநாள் நடந்தது அந்த மாற்றம் -  மாதாரி வடிவில்!

“அம்மா, மாதாரி வந்திருக்கிறான்!”  சொல்லிகொண்டே ஓடிய மகனை வழிமறித்து இழுத்தார் அப்பா!

“என்ன சொன்னே?   ‘

“மாதாரி வந்திருக்கிறான்ப்பா!”

சொல்லிக்கொண்டே கையை உதறி ஓடிய மகனை  யோசனையாகப் பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா!

வாசலில் உட்கார்ந்து கையேந்தி வாங்கிச் சாப்பிட்ட மாதாரியை மகன் ஒருமையில் அழைப்பதையும், அவர் (அப்போது அவருக்கு நிச்சயம் அறுபது வயதிருக்கும்) அவனைசின்ன முதலாளிங்க!”  என்று மரியாதையோடு விளிப்பதையும்,
கை படாமல் அவர் ஏந்திய கையில் மகன் உயரத் தூக்கி நீர் ஊற்றுவதையும் அதை எல்லோரும் இயல்பாய் எடுத்துக்கொள்வதையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தவர்
அடுத்தநாள் மாலை ஊருக்குக் கிளம்பும்போது மகனையும் கிளம்பச் சொன்னார்!

“யோசித்துப் பார்த்தேன்! நான் வேலை செய்யும் பள்ளியில் படிப்பதே இவன் எதிர்காலத்துக்கு நல்லது!” அவ்வளவே அவர் சொன்னது!

ஊருக்கு வந்த மறுநாள், வீட்டுக்கு வந்த தோட்டியை” மணி அண்ணா” என்று  தம்பி கூப்பிட்டுக் காபி கொடுத்தபோது விசித்திரமாக இருந்தது!

அக்கம் பக்கத்தினருக்கும் அப்போதைய காலகட்டத்தில் அது ஏற்புடையதல்ல!

ஆனால் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதில் தன்னளவில் உறுதியாக இருந்த அவர் அந்தப் பழக்கத்தை இம்மியும் மாற்றிக்கொள்ளவில்லை!

எனக்குத் தெரிந்து அவர் நட்புவட்டம் எல்லா ஜாதியிலும் வேரோடியிருந்தது! எந்த இடத்திலும் ஏற்றத் தாழ்வை நான் பார்த்ததே இல்லை!

அதைவிடப் பெரிய ஆச்சர்ய அதிர்ச்சி எனக்கு அடுத்தவாரம் நடந்தது!

என்னைவிட அதிக மதிப்பெண் வாங்கிய கணேசனைபாப்பாரப் பயல்” என்று நான் குறிப்பிட, முதல்முறையாக அவரிடம் அறை வாங்கினேன்!

தான் யாரையும் கீழாக நடத்தமாட்டேன் என்பது மட்டுமல்ல, தன்னை சிறுமை செய்த ஜாதியையும் தரக்குரைவாய்ப் பேசுவதை அவர் அனுமதித்ததில்லை!

இப்போது என் பையனிடம் நான் காட்டும் அன்பு, நட்பில் பத்து சதவிகிதத்தைக்கூட வெளிப்படையாகக் காட்டியதில்லை அவர்!

அவரோடு உட்கார்ந்து பெரிதாய் அரட்டை அடித்த நியாபகங்களும் இல்லை!

ஆனால் அவரைப்பற்றி நினைக்கும்போதெல்லாம்  எனக்கு பெரியார், இட ஒதுக்கீடு எல்லாம்தான் நியாபகம் வரும்!

ஒரே வீட்டில் பிறந்த அண்ணன் தம்பி இருவரில், தம்பி நோஞ்சானாக இருந்தால், அவனுக்கு அதிக அக்கறை காட்டவேண்டியது பெற்றவள் கடமைதானே என்பது அவர் வாதம்!

ஆரோக்யமாக வளர்ந்துவிட்ட அண்ணன் கொஞ்சம் விட்டுக்கொடுத்தே ஆகவேண்டியது விதி என்றவரிடம், எத்தனை நாளைக்கு என்று கேட்டால், எப்போதும் ஒரே பதில்தான்!

“தம்பியாய்ப் பார்த்து நான் வளர்ந்துவிட்டேன் என்று அதிகப்படி கவனிப்பை மறுக்கும் வரை!”

இந்த சலுகைகளுக்குக் காலவரம்பு கிடையாது!

தலைமுறைகளாக வாய்ப்புக்கள், உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு காலவரம்பு அமைத்து சலுகைகள் கொடுப்பதால் அவர்களை முன்னேற்றிவிடமுடியாது.

 ஆனால், இரண்டு தலைமுறைகளுக்குப்பிறகு மனசாட்சிக்கு உட்பட்டு சலுகைகளை ஏற்பதும் மறுதலிப்பதும் அதை அனுபவிப்பவர்கள் முடிவு செய்வது தர்மம்.

வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த இந்த உரையாடல்கள் என் மனதில் ஒரு கோர்வையாகப் பதிந்துபோனது என் அதிர்ஷ்டம்!

விருப்பப்பட்டாள் என்பதற்காக மட்டுமல்லாமல், இட ஒதுக்கீடு தேவையில்லாத படிப்பு என்பதே என் மகளை சி படிக்கவைப்பது என்ற என் முடிவுக்கு முதல் காரணம்

இப்போதைக்கு என் மகன் விரும்பும் என்ஜினீயரிங் படிப்பிலும், ஓப்பன் கோட்டாவில் இடம் வாங்குமளவு அவன் மதிப்பெண் பெறவேண்டும் என்பதே என் வேண்டுதல்!

அவனினும் தேவையுள்ள, தகுதி வாய்ந்த மாணவனுக்கு அந்த ஒதுக்கீட்டு இடம் கிடைக்கட்டும்!

இலவசம் என்று ஏதும் இல்லை! அதன் பின் சுயநலங்களே இருக்கும் என்பதோடு மட்டுமல்ல கையேந்தி எதையும்  வாங்கும் நிலைக்கு நாம் நம்மைத் தாழ்த்திக்கொள்ளக் கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்!

எனவேதான், வீடுதேடிவந்து டோக்கன் கொடுத்துப் போன கவுன்சிலரிடம் கலைஞர் கொடுத்த தொலைக்காட்சிப் பெட்டியையோ, அம்மா கொடுத்த லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர் எதையும் நான்  இன்றுவரை வாங்கியதில்லை!

இது எதையும் நான் அவரிடம் சொன்னதில்லை!
ஆனால் இது எல்லாமே அவருக்குத் தெரியும்!

இது மட்டுமல்ல, எவருக்குமே வரக்கூடாத ஒரு மிகப்பெரிய இழப்பை ஒரு காலத்தில் நான் சந்திக்க நேர்ந்தது!

சாவைவிடக் கொடிய நரகம் அது!

சேலத்தை ஆண்ட ஒரு குறுநில மன்னன், தன் கோரமுகத்தை என்னிடம் காட்டியபோது, அதை எதிர்கொள்ளமுடியாது தொலைந்துபோனபோதும், என்னைத் தனியே மீட்டுக்கொண்டு வந்தது அவர்தான்!

எனக்காகத தன் எத்தனையோ கொள்கைகளை மாற்றிக்கொண்ட அந்த சிங்கத்தின் கண்களில் எனக்காக வழிந்த கண்ணீரையும் நான் பார்க்க நேர்ந்தது என் வாழ்வின் மிகப்பெரும் துயரம்!

அப்போதும், இன்று வரையும், என்ன நடந்தது என்றுமுழுக்கத் தெரிந்தபிறகு என் காயத்தைக் கிளறவே இல்லை அந்த மாமனிதர்!

ஆனால் அவர் தந்த பக்குவம், என் தனிப்பட்ட துயரங்கள் பொது நலன் குறித்த பார்வையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த விடவில்லை!

இன்றும் அந்த இழப்பு என் தனிப்பட்ட விஷயம்!
மாநில அரசியல் பற்றிப் பேசும்போது அதன் தாக்கம் இருக்கக்கூடாது என்ற புரிதல் வர, அவர் மட்டுமே காரணம்!

சரி, இப்போது எதற்கு இதெல்லாம்?

சமீப காலத்தில் நடந்த சில விஷயங்கள் தந்த காயம் இந்தப் பதிவு!

அவர் எப்போதும் ஒரு சிங்கம் போலத்தான் வாழ்ந்திருந்தார்!

அரசு வேலையில் இருந்தபோதும், பின் நாடுகள் பல ஓடி வியாபாரம் செய்து செழித்தபோதும்!

தான் பிறந்த காட்டுக்கு மட்டுமல்ல, தான் இணை சேர்ந்த காட்டுக்கும் அந்த சிங்கம்தான் தலைமை என்பதை எல்லோரும் தவிர்க்கமுடியாமல் ஒத்துக்கொள்ளும்படி இருந்தது சிங்கத்தின் ஆளுமை!

எப்போதும் வேட்டையில் எதையும் தனக்கென்று சேமித்துவைத்துக்கொள்ளவில்லை அந்த சிங்கம்!

கொஞ்சம் அதற்கென இருந்ததையும் அறிந்தே அபகரித்தன சில நரிகள்!
அதையும் பொருட்படுத்தாத பெருந்தன்மையோடு சந்தோஷமாகவே எல்லாவற்றையும் எல்லோருக்கும் கொடுத்தது.

எந்தக் காலத்திலும் தன்னால் வேட்டையாடமுடியும் என்றிருந்த சிங்கம் தனக்கும் வயதாகும், வேட்டைக் களத்தின் விதிகள் மாறும் என்பதை மறந்தது.

தனக்கு வயதானதையும், ஓய்வெடுப்பதே இனி விதி என்ற இயற்கையையும் ஏற்க மறுத்தது சிங்கம்.

சில வேளைகளில் அதன் மனம் தான் சிறப்பாய் வாழ்ந்த காலத்துக்கே ஓடிப்போய் நின்று கொண்டு நிகழ் காலத்தை யோசிக்க மறந்தது

காலச்சக்கரத்தை சில வருடங்களுக்குப் பின்னால் தள்ளி, தான் அரசாண்ட வனத்தில் நிலை கொண்டுவிடுகிறது!

முன்போல் எல்லோரும் தான் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவார்கள் என்று நம்பிக்கொண்டு ஒவ்வொருவராய் அலைபேசியில் அழைத்துக் கட்டளைகளை இடுகிறது அன்போடும் உரிமையோடும்!

ஆனால் அந்த எல்லோருக்கும் சிங்கம் இப்போது கிழமாகிவிட்டதும், வாழ்க்கை ஓட்டத்தில் வேகமாகத் தாங்கள் ஓடிக்கொண்டிருப்பதும் தெரிந்திருப்பதுதான் சோகம்!

இப்போது சிங்கம் தங்களை அழைப்பதே தொந்தரவாகப் பட ஆரம்பிக்கிறது!

எல்லா வீட்டிலும் இதுபோல் அரசனாய் வாழ்ந்து வயதான சிங்கங்கள் ஒன்றாவது இருக்கும்!

இதுபோல் உங்கள் ஓட்டப்பாதையில் தடுமாறிவந்து வழி மறிக்கும்!

உங்கள் பயணம் தடைப்படும் அவசரத்தில் தயவுசெய்து உதைத்துவிட்டு ஓடாதீர்கள்!

முடிந்தால் தாண்டி ஓடுங்கள்,
அல்லது தள்ளி ஓடுங்கள்!

பாவம் சிங்கத்துக்கு உங்கள் உதாசீனங்கள் புரிவதில்லை!

நாம் எப்போதாவது சிங்கமாக இருந்திருக்கிறோமா என்பதை யோசியுங்கள்! அந்த அரச வாழ்க்கையை வாழ முயலுங்கள்!

ஏனெனில்,
நமக்கும் முதுமை வரும்!

அப்போது,
ஏதோ ஒரு காலத்தில் சிங்கமாக இருந்திருப்பது ஓரளவுக்கேனும் நல்லது!