புதன், 13 ஏப்ரல், 2016

என்ன செய்யப்போகிறோம் நாம்?????

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?இதோ வந்துவிட்டது இன்னுமொரு திருவிழா!

தரையில் கால் படாமல் தருமர் ரதம்போல் மிதந்தவர்கள், நம்மையெல்லாம் ஆட்டு மந்தைகளாய் நடத்திய கடவுளின் அவதாரங்கள் எல்லாம் இப்போது நம் வீட்டு வாசல்வரை வருகிறார்கள்!

“இதோ, உன் தாய் வந்திருக்கிறேன், உன் மீட்பர் வந்திருக்கிறேன், உங்கள் தோழன் வந்திருக்கிறேன்” என்று வலை விரிக்கிறார்கள்!

“உங்களுக்கு சேவை செய்யவே நாங்கள் அவதாரம் எடுத்திருக்கிறோம்! உங்கள் கால்களைக் கழுவ, உங்கள் பாதங்களை தலைமேல் ஏற்று உங்களுக்குப் பணிவிடை செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்!”  என்று நம் ஒட்டுக்கோவணம், ஓட்டுக்கோவணத்தைக் களவாட வந்திருக்கிறார்கள்!

தங்கள் கோரைப்பற்களை மறைத்து தேவதைகளாய் அரிதாரம் பூசிவந்து மீண்டும் ஒருமுறை தங்கள் நாடகத்தை அழகாக அரங்கேற்றுகிறார்கள்!

நாம் எல்லாம் ஓர் இனம், நான் உங்கள் அடிமைச் சேவகன்/சேவகி என்று கபட வார்த்தைகளை அள்ளி வீசுகிறார்கள்!

எப்படியும், நிலவைக்காட்டி, நம் சோற்றைப் பிடுங்கத்தான் போகிறார்கள்!
சேவகம் செய்வதாய்க் காலில் விழுந்த அவர்களின் வேடத்துக்கு ஆயுள் இன்னும் சில நாட்களே!

அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர்களின் கோரைப்பற்கள் நில்லாது வளரும்! மற்ற நடிகர்களை நல்லவர்கள், அவர்களே நம் அடுத்த மீட்பர்கள் என்று உணரும்படி நம் ரத்தம் உறிஞ்சப்படும்!

உங்களுக்காக ஒரு மஹாராணியையோ மாமன்னரையோ அவர்தம் சேவக சிற்றரசர்களையோ நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை!

உங்களுக்கான தலைமை சேவகனையும் அவருக்கான உதவியாளர்களையுமே நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதைக் கொஞ்சமேனும் உணருங்கள்!

அவர்கள் அப்படித்தான் சொல்லி உங்களிடம் ஓட்டுப் பிச்சை கேட்பார்கள்!

அவர்கள் சொல்லும் ஆயிரம் பொய்களில் இது ஒன்று மட்டும் நிஜம்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இதை உணர்ந்து சொல்லியும், நீங்கள் மறந்துபோயும் ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன!

இனியாவது விழித்துக்கொள்ள முயலுங்கள்!

கட்சி பார்த்து வாக்களிப்பது நம் கலாச்சாரம்!
இது உடனடியாக மாறப்போவதில்லை!

ஆனால், உங்களைக் கையெடுத்துக் கடைசிமுறையாகக் கும்பிட்டு, வஞ்சகமாகக் காலில் விழும் அந்த நரிகளை நீங்கள் கேள்வி கேட்கவேண்டிய ஒரே வாய்ப்பு இது!

எடுத்த எடுப்பில் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் :

எவ்வளவு நல்லவராக இருந்தாலும்,
பிடித்த கூட்டணியில் இருந்தாலும்

ஜாதிக்கட்சி மற்றும் அமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள்
திடீர் உப்புமா போல் தேர்தலுக்காக முளைத்த கட்சி வேட்பாளர்கள், அடிப்படையில் நல்ல குணநலம் இல்லாதவர்கள்.

முன்பே உம் தொகுதியில் நின்று வென்ற வேட்பாளர் ஆயின்,

குறைந்தபட்சம் கேட்கவேண்டிய கேள்விகள்!

v  சட்ட சபையில் கடந்த ஐந்தாண்டுகளில் நீங்கள் பேசியது என்ன?
v  தொகுதி மேம்பாட்டுக்காக நீங்கள் செய்தது என்ன?
v  தொகுதிக்கு நீங்கள் கடைசியாக வந்தது எப்போது?
v  போன தேர்தலில் நீங்கள் அளித்த வாக்குறுதிகளில் இதுவரை எத்தனை நிறைவேற்றப் பட்டது?
v  நிறைவேற்றப்படாதவைக்கு நீங்கள் எடுத்த முயற்சி என்ன?
v  எதுவுமே நல்லன செய்யாமல் எந்த முகத்தோடு மீண்டும் வந்து ஒட்டுக் கேட்கிறீர்கள்?

முன்பு தோற்ற வேட்பாளர் எனில்,

v  கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்காக நீங்கள் முன்னெடுத்த போராட்டம் என்னென்ன?
v  தொகுதிக்கு எதிர்க் கட்சி உறுப்பினராக நீங்கள் செய்தது என்ன?

எத்தனைமுறை உங்களிடம் பிச்சைக் காசுகளை எறிந்து, ஊர்ப் பொதுவில் வைத்தோ, கோவிலில் வைத்தோ சத்தியம் வாங்கியிருக்கிறார்கள்?
இப்போது உங்கள் முறை!

வேட்பாளர் புதுமுகமோ, பழையவரோ, எந்தக் கட்சியோ, சுயேட்சையோ, எந்தவிதமான பாகுபாடுமின்றி,
கீழ்க்கண்ட உறுதிமொழிகளை அவரிடம் ஊர்ப்பொதுவில் வைத்து நூறு ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி வாங்குங்கள்!


கூட வந்த கைத்தடிகளை அதில் சாட்சிக் கையெழுத்துப் போடச்சொல்லுங்கள்!

1.   நான் உங்களுக்கு சேவை செய்யவே தேர்ந்தேடுக்கப்படுகிறேன் என்பதை என்றும் நான் மறக்க மாட்டேன்!

2.   நான் வெற்றி பெற்றால் நம் தொகுதிக்கு கீழ்க்கண்ட திட்டங்களையும் வசதிகளையும் நிறைவேற்றித் தருவேன்.
(இதில் அந்தத் தொகுதிக்கான தனிப்பட்ட தேவைகளைக் குறிப்பிடுங்கள்)

எல்லாத் தொகுதிக்கும் பொதுவான உறுதிமொழிகள்!

1.   நான் வெற்றி பெற்றவுடன் என் தலையில் கொம்பு முளைக்க அனுமதிக்க மாட்டேன்.

2.   தொகுதி மக்களை மாதம் ஒரு முழுநாள் கண்டிப்பாக சந்திப்பேன்!

3.   என் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எல்லா நாளும் திறந்திருக்கும்.
அதில் பணியமர்த்தப்படும் உதவியாளர், மனு கொடுக்க வரும் மக்களை, கட்சி, ஜாதி,மத வேறுபாடு இன்றி மரியாதையோடு அணுகுவார்.

4.   நீங்கள் கொடுக்கும் மனுவுக்கு உடனைடியாக, கையொப்பமிட்ட ரசீது வழங்கப்படும்.

5.   அந்த மனு, உடனடியாக எனக்கு அனுப்பப்படும்.

6.   அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி உங்களுக்கு உடனடியாக நேரிலோ, தபால் மூலமாகவோ தெரிவிக்கப்படும்

7.   நான் சட்ட சபை நடவாடிக்கைகளில் தவறாமல் பங்கேற்பேன்!

8.   நம் தொகுதி வளர்ச்சிக்கான கேள்விகளை, வேண்டுதல்களை சபையில் கேட்டு நிறைவேற்றுவேன்

9.   அதைவிட்டு என் கட்சித் தலைமையைத் துதிபாடி சுய ஆதாயம் தேடமாட்டேன்.

10. தொகுதி வளர்ச்சிக்கான மத்திய ,மாநில அரசு நிதியை முழுமையாகவும், நேர்மையாகவும் மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவேன்!

11. எல்லா ஊரிலும், அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவேன்.

12. தேவையான அளவு மருத்துவர்களும் ஆசிரியர்களும் பணியில் இருக்கிறார்களா என்பதைக் கண்காணித்து ஆவன செய்வேன்.

13. எல்லா அரசுப்பள்ளிக்கும் ஒரு புதுக் கட்டடமாவது, கல்வி உபகரணமாவது வருடம்தோறும் கிடைக்கச் செய்வேன்.

14. ஆசிரியர்களும், மருத்துவர்களும், தங்கள் பணியை ஒழுங்குறச் செய்கிறார்களா என்பதை அடிக்கடி பார்வையிடுவேன்.

15. தொகுதிக்கு உட்பட்ட ஏரிகளையும் குளங்களையும் தூர்வார அனைத்து ஏற்பாடுகளையும் செய்வேன்!

16. மத, ஜாதி, இன வேறுபாடுகளைக் களைய என்னால் ஆனவற்றைச் செய்வேன்.

17. என் சட்டமன்ற நடவடிக்கைகள் பற்றி ஒவ்வொரு ஆண்டும் அச்சிட்ட கையேடுகளை தொகுதிக்கு வழங்குவேன்.

18. ஒவ்வொரு ஆண்டும், தொகுதி வளர்ச்சி பற்றி, ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவேன்.

19. அதில் தொகுதி வளர்ச்சிக்கு நான் செய்த பணிகளை தெளிவுபடுத்துவேன் நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருக்கும் தடங்கல்களை நேர்மையாக உங்களோடு பகிர்ந்துகொள்வேன்.

20. இரண்டு வருடங்களில் குறிப்பிட்ட அளவு என் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், என் இயலாமையை ஒப்புக்கொண்டு என் சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்வேன் அதன்பின் எனக்காகவோ, நான் சார்ந்த கட்சிக்காகவோ உங்களிடம் வாக்கு சேகரிக்க வரமாட்டேன்.

21. இந்த என் பதவிக்காலத்தில், கழிவறைகள் இல்லாத கிராமமே இல்லாமல் செய்வேன். எல்லோருக்கும் பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் கிடைக்கும் ஏற்பாடுகளை உடனே செய்வேன்

22. வெற்றி பெற்றபின், என்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள், எதிர்க்கட்சியினர் என்ற பாகுபாடில்லாமல் தொகுதி மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, தொகுதி வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன்.

23. நான் தோல்வியடைந்தால், மக்களிடம் பகைமை பாராட்ட மாட்டேன். வெற்றி பெற்றவரை எதிரியாகக் கருதாமல், அவர் கொண்டுவரும் முன்னேற்றத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பேன்.

24. தொகுதி மக்கள் நலனுக்காக அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு, தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்றுத் தருவேன்!

இதை என் குலதெய்வத்தின் மீதும், என் குழந்தைகள் மீதும் ஆணையிட்டு உறுதியளிக்கிறேன்..

இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் என் சுய நினைவுடனும், முழு சம்மதத்துடனும் எந்தவொரு நிர்பந்தமும் இன்றிக் கையொப்பம் இடுகிறேன்.

இந்த உறுதிமொழிப் பத்திரத்தை ஒரு நகல் எடுத்து அவரிடமும் கொடுங்கள்!

இது சட்டப்படி செல்லுமா என்பது விவாதத்துக்கு உரியது.

ஆனால், தொகுதிக்கு பத்துப்பேர் என்போல் கிறுக்குப் பிடித்தவன், இதை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் போனால்
 நிச்சயம் ஒரு நெருக்கடி உண்டாகும்.
சட்டத் திருத்தங்கள் ஏற்பட வாய்ப்புக் கிடைக்கும்.

இதனால் இந்தத் தேர்தலில் உடனடி பலன் கிடைக்காவிட்டாலும்,
அடுத்தமுறை உங்களிடம் வாக்குக் கேட்டு வரும்போது அவர்கள் முகத்தில் வீசியெறிந்து கேள்வி கேட்க இந்தப் பத்திரம் பயன்படும்.

அவர்களுக்கு உங்களைச் சந்திக்க ஏற்படும் அச்சம், ஓரளவு நன்மை செய்யும்.

இதைச் செய்தபிறகு,
கட்சி அபிமானம்,
ஜாதிப் பற்று
இவை கடந்து

உங்களுக்கும் ஊருக்கும் நாட்டுக்கும் யார் வென்றுவந்தால் நல்லது நடக்கும் என்று உங்கள் மனச்சான்று சொல்கிறதோ,
அவருக்கு வாக்களியுங்கள்!


ஜனநாயகம் வெல்லும்!

வாழ்த்துக்கள்!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக