ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

இதுதானா மாற்று?

யாரிந்த மக்கள் நலக்கூட்டணியாக இருந்து, கேப்டன் விஜயகாந்த் அணி என்று நாமகரணம் செய்யப்பட்ட அணியினர்?

இத்தனை நாள் இந்த தேவதூதர்கள் எங்கே இருந்தார்கள்?

மக்கள் கண்ணிலேயே படாமல் இவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

இப்படி ஒரு அற்புதமான மாற்று இருப்பதை ஏன் நாம் இதுவரை அறியாமலே இருந்தோம்?

இதுவரை இவர்கள் மக்களுக்கு செய்த சேவைகள் என்ன?
இதை ஏன் யாருமே கேட்க மறுக்கிறார்கள்?
அல்லது ஏன் கேட்கத் தோன்றவில்லை?

தேர்தல் வரும்போதெல்லாம் வீறு கொண்டு எழும் கவுண்டர் பேரவை, முதலியார் முன்னேற்றக் கழகம், செட்டியார் பேரவை, தேவர், அருந்ததியர் .... வேண்டாம் பட்டியல் நீளும்!
போன்ற அமைப்புகள் எல்லாம் தாங்கள் அடைய விரும்பிய ஆதாயத்தை அடைந்து, தங்களிடமிருக்கும் பல்லாயிரம் கோடி வாக்குகளை விற்றுவிட்டுப் போவது கடந்த சில தேர்தல்களாக நடைமுறை!

அப்படி இவர்களும் ஏதாவது வியாபாரம் செய்துவிட்டுப் போயிருந்தால் நாம் அவர்களை விமர்சிக்க வேண்டியதில்லை!
மாறாக, தமிழர்களை ரட்சிக்க வந்த தேவதூதர்களாக இவர்கள் முன்னிறுத்தப்படும்போது இவர்களின் நோக்கங்கள் பற்றி அறிய முயல்வது தவறில்லைதானே!

முதலில் மூலாதார மூர்த்திகள்!கம்யூனிஸ்ட்கள்:

பொது உடமைச் சித்தாந்தத்தில் ஊறித் திளைத்தவர்கள், தீவிர மக்கள் நலவாதிகள்!

ஒரே சித்தாந்தம் பேசிக்கொண்டு உலக்குக்குள் கிழக்கும் மேற்குமாய்  இரண்டாய்ப் பிரிந்து, வேதாந்தம் பேசித் திரிபவர்கள்!

ஒரே மரத்து விழுதுகள் ஆயினும் ஒரே இடத்தில் அண்டிப்பிழைக்க நேர்ந்தாலும், இவர்களின் உச்சபட்ச லட்சியம் ஒருவரைவிட மற்றவர் ஒரு சீட்டாவது அதிகம் பேரம் பேசி வாங்கித் தங்கள் உயர்வை நிரூபித்தல்தான்!

மற்றபடி, ஒவ்வொரு தேர்தலிலும் கொஞ்சம்கூட லஜ்ஜையே இல்லாமல் இரு திராவிடக்கட்சிகளுக்கும் மாறிமாறிப் பல்லக்குத் தூக்கியவர்கள்தான்!

கடந்த ஐந்து வருடங்களில் ஆளும் கட்சிக்கு இவர்கள், அதிலும் இவர்களின் மூத்த விழுது ஐயா நல்லக்கண்ணு போன்றவர்கள் வீசிய சாமரங்கள் அந்தக் கட்சி அடிமைகளின் கூச்சலுக்கு மேல்!விடுதலைச் சிறுத்தைகள்:

இது திருமாவளவனின்  சோல் ப்ரொப்ரைட்டர்ஷிப் கம்பெனி!

“அடங்க மறு அத்துமீறு” என்னும் தாரக மந்திரம், பஞ்சாயத்துக்களில் அத்து மீறவும், எந்த சட்ட வரைமுறைகளுக்குள் அடங்க மறுப்பதும் என்று பொருள்படும்!

சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்கு இவரின் பங்களிப்பு, இரண்டு திராவிடக்கட்சிகளுக்கும் தொண்டு செய்வதுதான்!

அதிலும், கலைஞரின் கடைக்கண் பார்வை படும்போதெல்லாம் கொஞ்சம் அதிகம் சிலிர்த்துக்கொள்வது இவர் வாடிக்கை!

கடந்த ஐந்து ஆண்டுகளிலும், கலைஞர் அபிமானிகளே அவரை விமர்சித்தபோதும், கலைஞரின் பேச்சுக்கெல்லாம் அவருக்கே தெரியாத வியாக்கியானங்கள் கொடுத்து அதை நியாயப்படுத்துவதைத் தன் முழுநேர வேலையாக வைத்திருந்தவர்!

இவர்களுக்கு ஒரு அதிகாலை வந்த திடீர் ஞானோதயம் தாங்கள் இதுவரை செய்து வந்த திருத்தொண்டு பிழையென்று சொல்லியிருக்கிறது 

இனி அந்தத் திராவிடக்கட்சிகளோடு ஒட்டுமில்லை உறவுமில்லை! ஒரு மாற்று அரசியலைக் கையிலெடுப்போம் என்று முழங்க ஆரம்பித்தார்கள்!

வித்தைகளையும் வேடிக்கைகளையுமே பார்த்து வளர்ந்த தமிழினம், இத்தனை நாட்கள் இவர்கள் செய்து வந்தது எல்லாவற்றையும் மறந்தது!
வழக்கம்போல் இப்போதும் கேள்வியே கேட்காமல் வேடிக்கை பார்க்கக் கூடியது!

யாருக்குமே இந்தத் திடீர் ஞானோதயத்துக்குக் காரணம் கேட்கத் தோன்றாததற்கு அந்த இரு கட்சிகளின் நடவடிக்கைகளே காரணம்!
பதவிக்கு வரும்போதெல்லாம் அவர்கள் மாறிமாறிச் செய்யும் அராஜகங்கள் மக்களை எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று ஏங்கும் நிலைக்குத் தள்ளியிருந்தன!

கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த காட்டாட்சி, கருணாநிதி மீதிருந்த மாறா வெறுப்பு இவை தந்த ஆதங்கம் இவர்களை இத்தனை நாட்களாக நமக்கு என்ன செய்தார்கள் என்பதை யோசிக்காமல் நம்பவைத்தது!

குறைந்தபட்ச செயல்திட்டம் என்ற எதுவுமே இல்லாமல் ஆட்சியைப் பிடிப்போம் என்ற அரிய கொள்கையோடு களமிறங்கிய இவர்களை ஆரம்பத்தில் மக்கள் வேடிக்கை பார்ப்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டார்கள்!

அப்போதுதான் இவர்களையும் மக்களையும் பிடித்தது அந்த சனி!

எப்படியும் தன் செயல்பாடுகள், அராஜகம் தன்னை பதவியைவிட்டு இறக்கிவிடும் என்று கணித்த அன்புத்தாய், தன் நிலையைத் தக்கவைத்துக்கொள்ள இதை ஒரு சாதனமாகக் கையில் எடுக்க ஆரம்பித்தார்!

“எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறுவதே தன் தலை தப்ப ஒரே வழி” என்ற சாணக்கியம், இவர்களை மறைமுகமாக ஊக்குவிக்கச் செய்தது!'

அம்மாவின் கண்ணசைவில் ஆடும் ஊடகங்களும், திடீரென்று இவர்கள் மேல் வெளிச்சம் பாய்ச்ச ஆரம்பித்தன!

கருணாநிதியின் அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய நடவடிக்கைகளையும் தோண்டிக் கேள்விகேட்ட ஊடகங்கள்,  இவர்களை, போன மாதம்வரை நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்று கேட்கவும் மறுத்தன!அம்மாவின் போர்வாள் கோபால்சாமி நாயுடு:

கொள்கைக் குன்று இவர்! திமுக வை ஒழிக்கவேண்டும் என்ற ஒரே செயல்திட்டம் கொண்டவர்!

2006 பொதுத் தேர்தலில் ஒரே ஒரு சீட்டுக்காக இவர் அடித்த கடைசிநிமிட கரணங்கள், இவர் மீதான மிகச் சிறிய நம்பிக்கையையும் உடைத்துப்போட்டது!

ஒருநாள், கருணாநிதியை எதிர்த்து சாகும்வரை அரசியல் செய்யமாட்டேன் என்று முழங்குவார்!
மறுநாளே அன்புச் சகோதரிக்கு பாதபூஜை செய்வார்!

கிரேக்கத்திலே, ஏதென்சிலே என்று புரியாமல் பேசும் வாய் ஜாலம் கடைசியில்சிகரெட் குடிப்பவன் ரேப் செய்வதில்லை” என்று தத்துவம் முழங்குவதில் வந்து நின்றது!

ஈழமானாலும், முத்துக்குமார், செங்கொடி,சசிபெருமாள் என்று எங்கு பிணம் விழுந்தாலும் அங்குபோய் ஆதாயம் தேடுவதில் சமர்த்தர்!
பெற்ற தாய் மரணத்தைக் கூட அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும் கை தேர்ந்த வியாபாரி!

ப்ளாக் மெயில் தந்திரங்களையும், ஈழ வியாபார சம்பாத்தியங்களையும் கறை படியாதவர் என்ற கறுப்புத் துண்டில் மூடி மறைக்கத் தெரிந்த சமர்த்தர்!

வீரமாக ஆரம்பிக்கும் எல்லாப் போராட்டங்களையும் பேரம் முடிந்ததும் அப்படியே நிறுத்திக்கொள்வதிலும், மடை மாற்றுவதிலும் சாமர்த்தியசாலி!

அம்மாவின் ஆயுதம், ஊடகங்களின் ஒத்துழைப்போடு, முதல் மூவரோடு இவரை இணைத்தது!

அப்போது ஆரம்பித்தது அதகள ஆட்டம்!

கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையையும் இவர் வருகை தகர்த்தது!


மக்கள் நலக்கூட்டணி விமானம் டேக் ஆப் ஆகிவிட்டது என்று முழங்கிய இந்தப் பைலட் யாருடைய ஆணைப்படியோ, அதை அவசர அவசரமாக கோயம்பேட்டில் இறக்கினார்!

அதுவரை ராமாயண நாயகர்களாக இருந்த மக்கள் நல கூத்தாடிகள், பஞ்ச பாண்டவ வேடம் பூண்டார்கள்!

எந்தக் கொள்கையோ, கோட்பாடோ, குறைந்தபட்சச் செயல்திட்டமோ இல்லாமல், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, தங்கள் பெயரைப் பெருமிதத்தோடும் பூரிப்போடும் கேப்டன் விஜயகாந்த் அணி என்று மாற்றிக்கொண்டு, அவரைத் தர்மராகத் தலையில் தாங்கினார்கள்!

முதலமைச்சர் வேட்பாளரை தேர்தலுக்குமுன் அறிவிப்பது ஜனநாயக விரோதம் என்று கொள்கை முழக்கமிட்ட கம்யூனிஸ்ட்களும் இந்த மகுடிக்கு மயங்கி நாட்டியம் ஆடினார்கள்!

எளிமை, கொள்கை, புரட்சி என்று முழக்கமிட்ட காம்ரேட்டுகள் கேப்டன் வாழ்க என்று தழைந்து போனார்கள்!

பாஜக உட்பட எல்லாக் கதவையும் ரகசியமாகத் தட்டிப்பார்த்த இந்தக் குணவான், தன் மோசமான உண்மை முகத்தை அடிக்கடி காண்பிக்க ஆரம்பித்தார்!

வாய்மொழி, உடல்மொழி எல்லாவற்றிலும் ஒரு தேர்ந்த தாதாவைப்போல் மாறிப்போனார் நாயுடு!

விஜயகாந்தின் பத்து சட்டமன்ற உறுப்பினர்களை அம்மா அடிமைக் கூட்டத்தில் சேர்த்தபோதும், தன் கூடவே வலது கரமாய் இருந்த நாஞ்சில் சம்பத் இன்னோவாவில் ஊர்வலம் வந்து இவர் முகத்தில் ஊளையிட்டபோதும் பொங்காத இந்த எரிமலை, சந்திரகுமார் பிரிந்தபோது பொங்கி வெடித்தது!

வாங்கிய பணத்துக்குக் கணக்குக் காட்டவேண்டிய நிர்பந்தம் கூட்டிய பதட்டத்தில் தன் ஆதிக்க சாதி வெறியைக் கூடச் சேர்த்துக்கொண்டு, கலைஞரை விபச்சாரம் செய்து பிழைக்கும்படி அழுத்தம்திருத்தமாக ஆசீர்வதித்தார்!

அதுவும் போதாமல், அவரது குலத்தொழில் என்ன என்பதை சுத்தமாக விளக்கி, அதைச் செய்யச் சொன்னார்!

நல்லவேளை, இந்த இரண்டையும் தன்னை ஆட்டிப்படைக்கும் அம்மணியைச் செய்யச் சொல்லும் வீரம் வராமல் பார்த்துக்கொண்டார்!

மறுநாள், ஏதோ தாம் பேசியது தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டதாக சாமர்த்தியமாக ஒரு மன்னிப்பைக் கேட்டார்!

இந்தக் கீழ்த்தரமான பேச்சின்போது பக்கத்தில் உட்கார்ந்திருந்த காம்ரேட்டுகள் மறுநாள் சாவகாசமாக இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று ஒரு மறுப்பைப் பதிவு செய்தன!

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுப்பதற்கே அவதரித்த திருமா, இதை தனி நபர் தாக்குதல் என்று குருமா வைத்தார்!

அப்பட்டமான சாதிவெறிப் பேச்சு, திருமாவுக்கு மட்டும் தனிநபர் தாக்குதலாகத் தெரியுமளவு மழுங்கிப்போனார்!

இணைத்துள்ள வீடியோக்களைப் பொறுமையோடு பாருங்கள், நாயுடுவின் ஜாதி வெறியும், கோவில்பட்டி ரயில் மறியலின்போது அரசு அதிகாரியிடம் அவர் நடந்துகொண்ட அநாகரீகமான, ரவுடித் தனமான நடவடிக்கையும் புரியும்!
இவர்தான் இவர்களின் ஒருங்கிணைப்பாளர் - அர்ஜுனன்!
பாவம் பாண்டவர்கள்!


அடுத்து வந்தார் பண்ணையார்:

இவரைப்பற்றி சொல்ல ஒன்றுமே இல்லை!

காங்கிரஸில் கடைசிவரை பதவி சுகம் அனுபவித்துவிட்டு வந்தபின் அப்பா உபயோகமில்லை என்று உதறிப்போன ஓட்டை சைக்கிளை தூசி தட்டப்பார்த்தார்!
அது துருப்பிடித்து நகர மறுக்க, தனிமரங்கள் சிலதை தோப்பென்று விற்கப் பார்த்தார்!

இவரை உதிர்ந்த ரோமமாய்க்கூட மதிக்காத அம்மா வாசலில் தவமிருந்தார்!
இறுகச் சார்த்திய கதவை எத்தனை நாள் வெளியிருந்து வெறிப்பது?

சித்தாந்த ரீதியாகப் பரம எதிரியான பாஜக கதவையும் தட்டிப்பார்த்து, இங்குவந்து அவசரம் அவசரமாகக் கர்ணனானார்!

பாவம்! குருச்சேத்திரம் தாண்டமுடியாத வேடம் ஏற்றாலும், "விஜயகாந்தில் என் தந்தையைப் பார்க்கிறேன்" என்று காமெடி சரவெடி வெடித்தார்!


தமிழகத்தை ரட்சிக்க வந்த தர்மர் விஜயகாந்த்:

எட்டுக்கோடி ரூபாய் இழப்பீடு வாங்கிக்கொண்டு, கல்யாணமண்டபத்தை இடித்துவிட்டார்கள் என்று அரசியலுக்கு வந்த கருப்பு எம்ஜியார்!

மக்களோடும் கடவுளோடும் கூட்டணி போட்டு போணியாகாததால், போயஸ் தோட்டத்தோடு ஜோடி சேர்ந்தார்!
இரண்டாவது தேர்தலிலேயே எதிர்க்கட்சித் தலைவரானார்!

அதன்பின் கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்சி எம் எல் ஏக்களையே காப்பாற்ற முடியாமல் தவித்தவர் இந்தமுறை அம்மாவை அழிப்பதே லட்சியம் என்று ஆரம்பித்து, கருணாநிதியிடம் பேரம் படியாமல், நாயுடு விரித்த வலையில் வசமாக விழுந்தார்!

இவர் கடந்த ஐந்தாண்டுகளாக எதிர்கட்சித் தலைவராக ஆக்கப்பூர்வமாக என்ன சாதித்தார் என்று கேட்பது தேசவிரோதம்!

நாற்பது ஆண்டுகளுக்குமேல் அரசியலில் இருப்பவரை வாரிசு என்று கூசாமல் பேசியவர், கூட வந்த மனைவியையும் மைத்துனனையும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்றார்!

மனைவி இருக்கும்போது அவர் கண்ணசைவுக்கு மட்டுமே கட்டுப்பட்டார்!

நிச்சயம் ஏதோ உடல் நலக் கோளாறால் தடுமாறும் இவர் பேசுவது யாருக்குமே புரிவதில்லை!
இதில் இவர் ஜெயலலிதா உடல் நலிவால் தடுமாறி நடப்பதை நடித்துக்காட்டி விமர்சிக்கிறார்!

இதுதான் இவர் தரம்!

போன தேர்தலிலேயே ஒரே மாதத்தில் மின் தட்டுப்பாட்டைப் போக்கும் வித்தை எனக்குத் தெரியும், ஆனால் சொல்லமாட்டேன் என்று காமெடி கலாட்டா நடத்தியவர்தானே இவர்!

கட்சி யார் கட்டுப்பாட்டில் என்பதை பிரேமலதா திட்டவட்டமாக உணர்த்தினார்!

கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும், தரம் தாழ்ந்து மூன்றாம் தரப் பேச்சாளர் போலப் பேசும் இவர் நாட்டுக்கு எத்தனை தியாகங்கள் செய்திருக்கிறார்?

இன்றுகூட, சதாம் உசேன் போல் சாகப்போகிறார்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் என்று கடையநல்லூரில் பேசியிருக்கிறார் அண்ணியார்!

கூட்டணி வைத்த மறுநாளே, மக்கள் நலக் கூட்டணியை யாருக்குத் தெரியும்? விஜயகாந்த்தான் எல்லோருக்கும் தெரிந்தவர் என்று பட்டாசாய் வெடித்தார்!

மனைவி இப்படி என்றால் கூட்டணி ஆட்சி அமைந்தால், அரசின் தவறுகள் கூட்டணிக் கட்சிகளால் கட்டுப்படுத்தப் படும் என்ற மூட நம்பிக்கையையும் மைத்துனர் தகர்த்தார்!

எல்லாக் கூட்டணித் தலைவர்களையும் மேடையில் வைத்துக்கொண்டு, மக்கள் தலைவர் சுதீஷ், மந்திரிகளையும், அவர்க்கான இலாகாக்களையும் அறிவித்தார்!

அப்படி அவர்களுக்குப் பதவி வழங்குவது தன் கடமை என்றார்!
இதையும் காம்ரேட்டுகள் மறுக்காமல் கைதட்டி ஆதரித்தார்கள்!

இன்னும் தேர்தலே நடக்கவில்லை! அதற்குள் அமைக்கப்போகும் மந்திரி சபையை, முதல்வர் வேட்பாளரின் மைத்துனர் முடிவு செய்கிறார்!
அதைக் கேட்டுக்கொண்டு கைதட்டி ரசிக்கிறார்கள் நூற்றாண்டு கடந்த கூட்டணிக் கட்சியினர்!

இவர்கள்தான் மாற்று அரசியல்வாதிகள்!

இன்னொரு சசிகலா, இன்னொரு சுதாகரனை தமிழகம் தாங்காது!

இவர்களை திராவிடக்கட்சிகளுக்கு மாற்று என்று நம்பி வாக்களிக்க மக்களைத் தூண்டுகின்றன விலைபோன  ஊடகங்கள்!

இதைவிட மோசம், இவர்களுக்கு ஒரு வாய்ப்பளித்துப் பார்க்கலாமே என்ற குருட்டுத்தனமான வாதம்!

இது ஒன்றும் ஹோட்டலில் இட்லி தோசை பிடிக்காமல் சப்பாத்தி சாப்பிட்டுப் பார்ப்பது போல அவ்வளவு எளிய விஷயம் அல்ல!

ஐந்து வருடங்கள் ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் இடத்தில் இந்த சுயநல அரைவேக்காட்டுக் கூட்டத்தை உட்கார வைப்பது தற்கொலைக்கு சமம்!

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படுமானால், இதில் ஒவ்வொருவரும், திமுக, அதிமுக இரண்டு கட்சிகளோடும் தனித்தனியே பேரம் பேச சற்றும் தயங்க மாட்டார்கள்!

இவர்கள் வெல்லும் ஒவ்வொரு இடமும் பேரம் பேசி சம்பாதிக்கவே பயன்படும்!

சுருங்கச் சொன்னால், இத்தனை நாள் பார்த்த அதே வியாபாரம்தான்! விளம்பர உத்திகளை மாற்றிக் கடையை விரிவு செய்திருக்கிறார்கள்!

உண்மையிலேயே மக்கள் நலம் என்பதுதான் இவர்கள் நோக்கம் என்றால்,
இதே ஒற்றுமையோடு, அடுத்த ஐந்து ஆண்டுகளும் மக்கள் பணியாற்றட்டும்!

தங்கள் உண்மையான நோக்கம் அதுதான் என்று நிரூபிக்கட்டும்!

அதன்பின் இவர்களுக்கு வாய்ப்பளிக்க நினைப்போம்!

அதுவரை இவர்களைக் கொஞ்சம் தள்ளியே வைப்போம்!

அதுதான் தமிழகத்துக்கு நல்லது!

உணர்ச்சிவசப்பட்டு புதிய தீமைகளை வளர்த்துவிடாதிருப்பதே நாட்டுக்கு நாம் செய்யவேண்டிய மிகப்பெரிய நன்மை!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக