திங்கள், 18 ஏப்ரல், 2016

சிங்கத்தின் சாபம் முதுமை!ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளின் இறுதி!

சிதம்பரத்தில் இருந்த அந்தக் கல்லூரியில் B.A. படித்துக்கொண்டிருந்த மாணவன் மிக நன்றாகப் படிக்கக்கூடியவன்!

கூடப் படிக்கும்,  உள்ளூரில் வசித்த , அப்போது கல்வியில் ஆதிக்கம் செலுத்திய உயர்ந்த ஜாதி மாணவன் ஒருவர் அவருக்கு மிக ஆப்தர்!
அவர் படிப்பில் கொஞ்சம் மட்டு!

கல்லூரி விடுதியில் அந்த நண்பரிடம் பாடம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவார்!

ஒரு கல்லூரி விடுமுறை நாளில் தன் வீட்டுக்கு வரும்படி நண்பரை அழைத்தார் அந்த உயர் ஜாதி நண்பர்!

அப்போதே, "உன் வீட்டார் இதை விரும்பமாட்டார்கள்" என்று மறுத்தவரை வற்புறுத்தி அழைத்துச் சென்றார்!

மாலைவரை படிப்பு பற்றி உரையாடலுக்குப் பின், அந்த மாணவர் புறப்படும்போது நடந்தது அது!

அந்த உயர் ஜாதி நண்பரின் தாயார் ஒரு பாத்திரத்தில் பசுஞ்சாணம் கலந்த நீரை எடுத்துவந்து அந்த மாணவர் அமர்ந்திருந்த இடத்தில் தெளித்ததோடு
தம்பி, கொஞ்சம் அந்த இடத்தை நீயே கொஞ்சம் துடைத்துவிடேன்”  என்று சொல்ல,

கூட்டிவந்த நண்பரைக் கேட்டார்
 "இப்போது நான் என்ன செய்ய? உங்க அம்மா சொல்வதை நான் செய்யவா?”

பதில் சொல்லாமல் தலை குனிந்து நின்றார் அந்த நண்பர்!

மறுவார்த்தை சொல்லாமல் அந்த இடத்தைத் துடைத்துவிட்டுநிதானமாகச் சொன்னார்!
அம்மா, இதை உங்கள் ஜாதிக்கு பயந்து நான் செய்யவில்லை, உங்கள் வயதுக்கு மரியாதை கொடுத்துச் செய்தேன்!

நீங்களாக எழுதிக்கொண்ட வேதங்களை வைத்து எங்களை விட உயர்ந்தவர்கள் என்று கற்பனையில் வாழ்வது உங்கள் விருப்பம்!

ஆனால், உங்கள் மகனின் மௌனம் என்னால் மன்னிக்க முடியாதது
நாளையிலிருந்து உங்கள் மகன் கல்லூரிக்கு வரும்போது பூணூலை சட்டைக்கு மேல் மாட்டி அனுப்புங்கள்!”

நண்பன் இருந்த திசையில்கூடத் திரும்பாமல் ஹாஸ்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்!

மறுநாள் தேடிவந்து மன்னிப்புக்கேட்ட நண்பனிடம்
ஒருமுறை எங்கள் ஊருக்கு வா!
 எங்கள் வாழ்க்கைத் தரம் உங்களிடமிருந்து எத்தனை மேம்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கமுடியும்!
ஆனால் ஒருமுறை கூட நான் அதைக் காண்பித்துக்கொண்டதில்லை!

நாங்கள் உங்கள் சாஸ்திரப்படி எங்களைவிடக் கீழ் நிலையில் இருப்பவர்களை நடத்தும் முறையைப்பார்!”

“வெறும் பிறப்பால் வந்தது உயர்வு என்ற எண்ணம் இருக்கும்வரை உன் படிப்பு உனக்கு அறிவைத் தராது!

இனி, பழைய சுபாவத்துடன் உன்னோடு நான் பழகுவது முடியாத காரியம்!  என்னை மன்னித்துவிடு”
என்று சொல்லி விலகி நடந்தார்!

இது அநேகமாக அந்தக் காலகட்டத்தில் அந்த ஒரு ஜாதியில் பிறக்காத எல்லோருமே கடந்து வந்ததுதான்!

ஆனால், இதன் எதிர்வினைதான் அவரை மற்ற பெரும்பான்மைகளிடமிருந்து வேறுபடுத்தியது!

இது நடந்த பத்தாண்டுகளுக்குப்பின் நடந்தது இது!

அவருக்குக் கல்யாணம் ஆகி, முதலில் ஆண் குழந்தை பிறந்த மறு வருடமே இரண்டாவதாய் ஒரு பெண் பிறக்க, இரண்டு குழந்தைகளையும் சமாளிக்கமுடியாமல் பாட்டி வீட்டில் வளர்ந்தது முதல் குழந்தை!

பாட்டி மற்றும் திருமணத்துக்குக் காத்திருந்த இரு சித்திகள் அரவணைப்பில் சொர்க்க வாழ்க்கை!

செல்லம் கொடுப்பதில் மூவருக்கும் போட்டி!

ஐந்து வகுப்பு வரை அதற்கு மூன்று அம்மாக்கள்!

 நான்காவதாய் அப்பாவோடு பணியிட மாறுதல்களால் ஊர் சுற்றிக்கொண்டிருந்த  பெற்ற தாய் இந்தக் கணக்கிலேயே இல்லை!

எல்லாமே கடந்து போவதுதானே வாழ்க்கை!

ஆரம்பப்பள்ளி முடிந்து ஆறாம் வகுப்பு உயர்நிலைப்பள்ளி!

அப்பாவும் அம்மாவும் தங்களோடு வந்துவிட அழைக்க, மகன்  பிடிவாதமும், இடைப்பட்ட காலத்தில் உள்ளூரிலேயே வாழ்க்கைப் பட்டிருந்த சித்தியின் கண்ணீரும் வெல்ல,
இன்னும் இரண்டு ஆண்டுகள் அங்கேயே படிப்பைத் தொடருவது என்று முடிவு ஏகமனதாக எடுக்கப்பட, இரண்டுநாட்கள் அம்மாவும் அப்பாவும் அங்கேயே தங்கி தங்கை, தம்பியோடு அவர்கள் மட்டும் ஊருக்குப் போவது என்று முடிவானது!

மறுநாள் நடந்தது அந்த மாற்றம் -  மாதாரி வடிவில்!

“அம்மா, மாதாரி வந்திருக்கிறான்!”  சொல்லிகொண்டே ஓடிய மகனை வழிமறித்து இழுத்தார் அப்பா!

“என்ன சொன்னே?   ‘

“மாதாரி வந்திருக்கிறான்ப்பா!”

சொல்லிக்கொண்டே கையை உதறி ஓடிய மகனை  யோசனையாகப் பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா!

வாசலில் உட்கார்ந்து கையேந்தி வாங்கிச் சாப்பிட்ட மாதாரியை மகன் ஒருமையில் அழைப்பதையும், அவர் (அப்போது அவருக்கு நிச்சயம் அறுபது வயதிருக்கும்) அவனைசின்ன முதலாளிங்க!”  என்று மரியாதையோடு விளிப்பதையும்,
கை படாமல் அவர் ஏந்திய கையில் மகன் உயரத் தூக்கி நீர் ஊற்றுவதையும் அதை எல்லோரும் இயல்பாய் எடுத்துக்கொள்வதையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தவர்
அடுத்தநாள் மாலை ஊருக்குக் கிளம்பும்போது மகனையும் கிளம்பச் சொன்னார்!

“யோசித்துப் பார்த்தேன்! நான் வேலை செய்யும் பள்ளியில் படிப்பதே இவன் எதிர்காலத்துக்கு நல்லது!” அவ்வளவே அவர் சொன்னது!

ஊருக்கு வந்த மறுநாள், வீட்டுக்கு வந்த தோட்டியை” மணி அண்ணா” என்று  தம்பி கூப்பிட்டுக் காபி கொடுத்தபோது விசித்திரமாக இருந்தது!

அக்கம் பக்கத்தினருக்கும் அப்போதைய காலகட்டத்தில் அது ஏற்புடையதல்ல!

ஆனால் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதில் தன்னளவில் உறுதியாக இருந்த அவர் அந்தப் பழக்கத்தை இம்மியும் மாற்றிக்கொள்ளவில்லை!

எனக்குத் தெரிந்து அவர் நட்புவட்டம் எல்லா ஜாதியிலும் வேரோடியிருந்தது! எந்த இடத்திலும் ஏற்றத் தாழ்வை நான் பார்த்ததே இல்லை!

அதைவிடப் பெரிய ஆச்சர்ய அதிர்ச்சி எனக்கு அடுத்தவாரம் நடந்தது!

என்னைவிட அதிக மதிப்பெண் வாங்கிய கணேசனைபாப்பாரப் பயல்” என்று நான் குறிப்பிட, முதல்முறையாக அவரிடம் அறை வாங்கினேன்!

தான் யாரையும் கீழாக நடத்தமாட்டேன் என்பது மட்டுமல்ல, தன்னை சிறுமை செய்த ஜாதியையும் தரக்குரைவாய்ப் பேசுவதை அவர் அனுமதித்ததில்லை!

இப்போது என் பையனிடம் நான் காட்டும் அன்பு, நட்பில் பத்து சதவிகிதத்தைக்கூட வெளிப்படையாகக் காட்டியதில்லை அவர்!

அவரோடு உட்கார்ந்து பெரிதாய் அரட்டை அடித்த நியாபகங்களும் இல்லை!

ஆனால் அவரைப்பற்றி நினைக்கும்போதெல்லாம்  எனக்கு பெரியார், இட ஒதுக்கீடு எல்லாம்தான் நியாபகம் வரும்!

ஒரே வீட்டில் பிறந்த அண்ணன் தம்பி இருவரில், தம்பி நோஞ்சானாக இருந்தால், அவனுக்கு அதிக அக்கறை காட்டவேண்டியது பெற்றவள் கடமைதானே என்பது அவர் வாதம்!

ஆரோக்யமாக வளர்ந்துவிட்ட அண்ணன் கொஞ்சம் விட்டுக்கொடுத்தே ஆகவேண்டியது விதி என்றவரிடம், எத்தனை நாளைக்கு என்று கேட்டால், எப்போதும் ஒரே பதில்தான்!

“தம்பியாய்ப் பார்த்து நான் வளர்ந்துவிட்டேன் என்று அதிகப்படி கவனிப்பை மறுக்கும் வரை!”

இந்த சலுகைகளுக்குக் காலவரம்பு கிடையாது!

தலைமுறைகளாக வாய்ப்புக்கள், உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு காலவரம்பு அமைத்து சலுகைகள் கொடுப்பதால் அவர்களை முன்னேற்றிவிடமுடியாது.

 ஆனால், இரண்டு தலைமுறைகளுக்குப்பிறகு மனசாட்சிக்கு உட்பட்டு சலுகைகளை ஏற்பதும் மறுதலிப்பதும் அதை அனுபவிப்பவர்கள் முடிவு செய்வது தர்மம்.

வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த இந்த உரையாடல்கள் என் மனதில் ஒரு கோர்வையாகப் பதிந்துபோனது என் அதிர்ஷ்டம்!

விருப்பப்பட்டாள் என்பதற்காக மட்டுமல்லாமல், இட ஒதுக்கீடு தேவையில்லாத படிப்பு என்பதே என் மகளை சி படிக்கவைப்பது என்ற என் முடிவுக்கு முதல் காரணம்

இப்போதைக்கு என் மகன் விரும்பும் என்ஜினீயரிங் படிப்பிலும், ஓப்பன் கோட்டாவில் இடம் வாங்குமளவு அவன் மதிப்பெண் பெறவேண்டும் என்பதே என் வேண்டுதல்!

அவனினும் தேவையுள்ள, தகுதி வாய்ந்த மாணவனுக்கு அந்த ஒதுக்கீட்டு இடம் கிடைக்கட்டும்!

இலவசம் என்று ஏதும் இல்லை! அதன் பின் சுயநலங்களே இருக்கும் என்பதோடு மட்டுமல்ல கையேந்தி எதையும்  வாங்கும் நிலைக்கு நாம் நம்மைத் தாழ்த்திக்கொள்ளக் கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்!

எனவேதான், வீடுதேடிவந்து டோக்கன் கொடுத்துப் போன கவுன்சிலரிடம் கலைஞர் கொடுத்த தொலைக்காட்சிப் பெட்டியையோ, அம்மா கொடுத்த லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர் எதையும் நான்  இன்றுவரை வாங்கியதில்லை!

இது எதையும் நான் அவரிடம் சொன்னதில்லை!
ஆனால் இது எல்லாமே அவருக்குத் தெரியும்!

இது மட்டுமல்ல, எவருக்குமே வரக்கூடாத ஒரு மிகப்பெரிய இழப்பை ஒரு காலத்தில் நான் சந்திக்க நேர்ந்தது!

சாவைவிடக் கொடிய நரகம் அது!

சேலத்தை ஆண்ட ஒரு குறுநில மன்னன், தன் கோரமுகத்தை என்னிடம் காட்டியபோது, அதை எதிர்கொள்ளமுடியாது தொலைந்துபோனபோதும், என்னைத் தனியே மீட்டுக்கொண்டு வந்தது அவர்தான்!

எனக்காகத தன் எத்தனையோ கொள்கைகளை மாற்றிக்கொண்ட அந்த சிங்கத்தின் கண்களில் எனக்காக வழிந்த கண்ணீரையும் நான் பார்க்க நேர்ந்தது என் வாழ்வின் மிகப்பெரும் துயரம்!

அப்போதும், இன்று வரையும், என்ன நடந்தது என்றுமுழுக்கத் தெரிந்தபிறகு என் காயத்தைக் கிளறவே இல்லை அந்த மாமனிதர்!

ஆனால் அவர் தந்த பக்குவம், என் தனிப்பட்ட துயரங்கள் பொது நலன் குறித்த பார்வையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த விடவில்லை!

இன்றும் அந்த இழப்பு என் தனிப்பட்ட விஷயம்!
மாநில அரசியல் பற்றிப் பேசும்போது அதன் தாக்கம் இருக்கக்கூடாது என்ற புரிதல் வர, அவர் மட்டுமே காரணம்!

சரி, இப்போது எதற்கு இதெல்லாம்?

சமீப காலத்தில் நடந்த சில விஷயங்கள் தந்த காயம் இந்தப் பதிவு!

அவர் எப்போதும் ஒரு சிங்கம் போலத்தான் வாழ்ந்திருந்தார்!

அரசு வேலையில் இருந்தபோதும், பின் நாடுகள் பல ஓடி வியாபாரம் செய்து செழித்தபோதும்!

தான் பிறந்த காட்டுக்கு மட்டுமல்ல, தான் இணை சேர்ந்த காட்டுக்கும் அந்த சிங்கம்தான் தலைமை என்பதை எல்லோரும் தவிர்க்கமுடியாமல் ஒத்துக்கொள்ளும்படி இருந்தது சிங்கத்தின் ஆளுமை!

எப்போதும் வேட்டையில் எதையும் தனக்கென்று சேமித்துவைத்துக்கொள்ளவில்லை அந்த சிங்கம்!

கொஞ்சம் அதற்கென இருந்ததையும் அறிந்தே அபகரித்தன சில நரிகள்!
அதையும் பொருட்படுத்தாத பெருந்தன்மையோடு சந்தோஷமாகவே எல்லாவற்றையும் எல்லோருக்கும் கொடுத்தது.

எந்தக் காலத்திலும் தன்னால் வேட்டையாடமுடியும் என்றிருந்த சிங்கம் தனக்கும் வயதாகும், வேட்டைக் களத்தின் விதிகள் மாறும் என்பதை மறந்தது.

தனக்கு வயதானதையும், ஓய்வெடுப்பதே இனி விதி என்ற இயற்கையையும் ஏற்க மறுத்தது சிங்கம்.

சில வேளைகளில் அதன் மனம் தான் சிறப்பாய் வாழ்ந்த காலத்துக்கே ஓடிப்போய் நின்று கொண்டு நிகழ் காலத்தை யோசிக்க மறந்தது

காலச்சக்கரத்தை சில வருடங்களுக்குப் பின்னால் தள்ளி, தான் அரசாண்ட வனத்தில் நிலை கொண்டுவிடுகிறது!

முன்போல் எல்லோரும் தான் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவார்கள் என்று நம்பிக்கொண்டு ஒவ்வொருவராய் அலைபேசியில் அழைத்துக் கட்டளைகளை இடுகிறது அன்போடும் உரிமையோடும்!

ஆனால் அந்த எல்லோருக்கும் சிங்கம் இப்போது கிழமாகிவிட்டதும், வாழ்க்கை ஓட்டத்தில் வேகமாகத் தாங்கள் ஓடிக்கொண்டிருப்பதும் தெரிந்திருப்பதுதான் சோகம்!

இப்போது சிங்கம் தங்களை அழைப்பதே தொந்தரவாகப் பட ஆரம்பிக்கிறது!

எல்லா வீட்டிலும் இதுபோல் அரசனாய் வாழ்ந்து வயதான சிங்கங்கள் ஒன்றாவது இருக்கும்!

இதுபோல் உங்கள் ஓட்டப்பாதையில் தடுமாறிவந்து வழி மறிக்கும்!

உங்கள் பயணம் தடைப்படும் அவசரத்தில் தயவுசெய்து உதைத்துவிட்டு ஓடாதீர்கள்!

முடிந்தால் தாண்டி ஓடுங்கள்,
அல்லது தள்ளி ஓடுங்கள்!

பாவம் சிங்கத்துக்கு உங்கள் உதாசீனங்கள் புரிவதில்லை!

நாம் எப்போதாவது சிங்கமாக இருந்திருக்கிறோமா என்பதை யோசியுங்கள்! அந்த அரச வாழ்க்கையை வாழ முயலுங்கள்!

ஏனெனில்,
நமக்கும் முதுமை வரும்!

அப்போது,
ஏதோ ஒரு காலத்தில் சிங்கமாக இருந்திருப்பது ஓரளவுக்கேனும் நல்லது!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக