சனி, 11 ஜூன், 2016

யட்சன்!

கால யந்திரம் வரலாற்றை மாற்றுமா?1948 ஜனவரி 30, டெல்லி!

அதிகாலை ஆறுமணி!
இன்னும் விடியாத பனி சூழ் காலை நேரத்தில் டெல்லி ரயில் நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது!
மும்பையிலிருந்து வந்து சோம்பேறித்தனமாக நின்ற ரயிலிலிருந்து இறங்கிய இரண்டு இளைஞர்களும் நேராக ரிடையரிங் அறைக்குச் சென்றார்கள்!
ஆறாம் எண் அறைக்குள் புகுந்ததும் கட்டிலில் அமர்ந்தவாறே பேச ஆரம்பித்தார்கள்!

“இன்னும் அந்தக் கிழவரை விட்டுவைப்பது நம் சந்ததிக்கு நல்லதில்லை ஆப்தே!”
“அடித்து வாங்கும் சுதந்திரத்தை அழுது வாங்கியதிலேயே நம் வீரம் சந்தி சிரித்துவிட்டது!”
“போதாக்குறைக்கு அந்தப் பிடிவாதம் பிடித்த ஜின்னா  அந்தக் கிழவரை நன்கு உபயோகித்துக்கொள்கிறான்”

“உண்மைதான் விநாயக்!
நமக்கு இடமும் வலமுமாக இரண்டு கொள்ளிகளை எரியவிட்டிருக்கிறோம்!
அவை என்றுமே நம்மை இன்னும் பல தலைமுறைகளுக்கும் நிம்மதியாக உறங்கவிடப்போவதில்லை!”

“அதேதான் ஆப்தே! கொண்டாடிக் கொண்டாடி அந்தக் கிழவனாரைக் கடவுளாய் உணர வைத்துவிட்டோம்!
தான் மகாத்மா என்று ஸ்தாபித்துக்கொள்ள இந்த தேசத்தைப் பலி கொடுக்கிறார்!”
இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது இந்த தேசத்துக்கு நாம் செய்யும் துரோகம்!”

“விநாயக்! ஆனால் நாம் எந்த விதமான காரியத்தில் ஈடுபடப் போகிறோம் என்பது உனக்குப் புரிகிறதா?
இந்த தேசமே கொண்டாடும் ஒரு மனிதனை நாம் இல்லாமல் செய்யப்போகிறோம்!”

“இந்த மண்ணில் சிந்திய லட்சக்கணக்கான இந்துக்களின் ரத்தத்துக்கு சக்தியே இல்லை என்று ஆகிவிடாதா ஆப்தே, நாம் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால்?
அந்தக் கதறல்களும் கூச்சலும் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது”

“இருபதாம் தேதி நடந்தது போல் நடந்துவிடப்போகிறது விநாயக்!”

“அன்றைக்கு அந்த முட்டாள் மதன்லாலை மேய்த்துக்கொண்டு போனதுதான் நாம் செய்த முட்டாள்தனம்!
ஆடு மேய்க்க லாயக்கில்லாதவன் கையில் வெடிகுண்டைக் கொடுத்து ஊர்வலம் போல் ஏழுபேர் போனால் கொலையா செய்யமுடியும்?”

“பம்பாய் போன போலீஸ் சலவைக்குறியை வைத்து உன்னைக் கண்டிபிடிக்காது என்று நினைக்கிறாயா விநாயக்?”

“இன்னும் அவ்வளவு புத்திசாலித்தனத்தை நம் காவல்துறை கற்றுக்கொள்ளவில்லை ஆப்தே!
வெள்ளைக்காரனுக்குத் தொண்டூழியம் செய்த கூட்டத்துக்கு அவ்வளவு மூளை வளரவில்லை!”
“மேலும் இன்றைக்கு மாலை நம் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்”

“எதைவைத்துச் சொல்கிறாய் விநாயக்?"

இதை வைத்தும், இதை எடுத்துப்போகும் என்னை வைத்தும்!

விநாயக் கையில் பளபளத்தது அது - முந்தையநாள் மும்பையில் கங்காதர் தண்டவாதே உதவியோடு வாங்கிய பெரெட்டா M 1934 செமி ஆட்டோமேடிக் பிஸ்டல்!

மறைவாய்  நின்று இதைப் பார்த்துக்கொண்டிருந்த யட்சனுக்கு நெஞ்சம் பதறியது!
தான் வந்த நோக்கம் எப்படியாவது நிறைவேறியே ஆகவேண்டும்!

யட்சன்?

காலம்  - 2046!


சென்னையைக் கடல் கொண்டபிறகு தமிழகத்தின் புதிய தலைநகரான காஞ்சிபுரத்தில் அறுபத்து மூன்றாவது தளத்திலிருந்து கடலை வெறித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் யட்சன்!

பின்னாலிருந்து அவன் கழுத்தைச் சுற்றிப் போட்ட கையை விலக்காமலே அவன் மடியில் விழுந்தாள் மாயா!

ஏன் இப்படி மூட் அவுட் ஆகி உட்கார்ந்திருக்கிறது என் செல்லம்? எந்தக் கோட்டை பறிபோனதென்று இத்தனை யோசனை?
கேட்டபடி அவன் காதைச் செல்லமாகக் கடித்தாள்!

அவள் கைகள் தந்த குறுகுறுப்பை ரசித்தவாறு கொஞ்சநேரம் கண்மூடி உட்கார்ந்திருந்த யட்சன் தன்னை அறியாமலே ஒரு பெருமூச்சோடு தலையை உதறிக்கொண்டான்!

ஏய், என்னாச்சு?

நான் அடிக்கடி புலம்புவதுதான் மாயா!

ஏன் என் தேசம் இப்படி அல்லல் படுகிறது? எல்லா வளங்களும் இருந்தும், சுதந்திரம் வாங்கி நூறு ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னும் இலக்கில்லாமல் அலைகிறது என் இனம்?

இன்னுமே கற்கும் கல்விக்கு ஏற்ற வேலைகள் கிடைக்காமல் எத்தனை தேசங்களை வந்தேறிகளாய் வளப்படுதிக்கொண்டிருக்கும் எம் இளைஞர் பட்டாளம்?

மிச்சமிருக்கும் இளைஞர்களோ இன்னும் சினிமாக்காரர்கள் பின்னால் தன்னைத் தொலைத்துவிட்டுச் சுத்திக்கொண்டிருக்கும் நிலை என்று மாறும்?

இந்த தேசம் ஒரு நல்ல தலைமையைக் காணாமலே அழிந்து போகுமா?

இது நீ சொன்ன கதைதான் யட்சா!

ஊர்மிளையின் சாபம்!

இந்த தேசம் முன்னூறு ஆண்டுகள் மிலேச்சர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததும், சுதந்திரம் பெற்ற சந்தோஷத்தை அழிப்பதுபோல் பிரிவினையில் ரத்த ஆறு ஓடியதும், அதன்பின் ஆளவந்த அத்தனை பேரும், கட்டை பிரம்மச்சாரிகளாகவோ, மனைவியை இழந்தவர்களாகவோ விதவைகளாகவோ இருந்ததும், தவறி ஆளவந்த குடும்பஸ்தர்களும் ஒரு விதவையால் ஆட்டிவைக்கப்பட்டவர்களாகவோ, மனைவியைக் கைவிட்டவர்களாகவோ அமைந்துபோனது தற்செயல்தானா யட்சா?

இல்லை மாயா, அது நான் எப்போதோ படித்த கற்பனைக் கதை!

அப்படி நான் நினைக்கவில்லை யட்சா! நடப்பவை அந்தக் கதை உண்மை என்றே எண்ணவைக்கின்றன!

நம் மக்களுக்கு இரத்தினங்களின் மதிப்பு தெரிவதே இல்லை - யுகம் யுகமாக!

ஒரு பெண்ணின் காதலைப் புரிந்துகொள்ளாத பிதாமகனில் இருந்து பாமர மக்கள் வரை அப்படித்தான் இருந்திருக்கிறோம்!

என் மனதில் தோன்றும் நடைமுறைக் காரணம் வேறு மாயா!

ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த மண்ணில் ஒரு மகாத்மாவின் இரத்தம் சிந்தியது
அன்று களங்கமானது இந்த தேசம்!

அந்த மகான் இன்னும் சில ஆண்டுகள் இருந்து இந்த நாட்டை வழி நடத்தியிருக்கவேண்டும்!
சகித்துக்கொண்டாவது அவர் சொன்ன வழியில் நம் தலைவர்கள் நடந்திருந்தால், அன்பும் கருணையும், சீர்தூக்கிப் பார்க்கும் அறிவும் நம் மக்களுக்குக் கிடைத்திருக்கும்!

ஏறத்தாழ அவரை கைது செய்யும் முடிவுக்கு வந்திருந்தார் நம் அப்போதைய உள்துறை அமைச்சர்! அதை அங்கீகரிக்கும் மனநிலைக்குப் பக்கத்தில் இருந்தார் நம் பிரதமர்!
இது வரலாறு யட்சா!

நமக்குக் காரியங்கள் முடியும்வரைதான் மகான்கள் தேவை!
அவர்கள் அறிவுரைகள் நம்மை சீர்திருத்த முயலும்போது நமக்கு வலிக்கவும், அவர்கள் சுமையாகத் தோன்றவும் ஆரம்பிப்பதுதான் இந்த தேசத்தின் உண்மையான சாபம்!

நான் சொல்வது உனக்கு வலிக்கக்கூடும் யட்சா!
ஆனால் காந்தி உயிரோடு இருந்திருந்தால் அவமானப்படுத்தப்பட்டிருப்பார் யட்சா!

தன்னைக் கொண்டாடிய தன் சிஷ்யர்களாலேயே அவர் சிறுமைப்பட்டிருப்பார்!

ஒருவகையில் அவரை மகாத்மாவாகவே நிலை நிறுத்தியது கோட்ஷே என்று எனக்குப் படுகிறது!

எப்படி இவ்வளவு சினிக்கலாக யோசிக்கப் பழகினாய் மாயா?

உண்மை எப்போதும் சுடும் யட்சா!

சரி! நாம் ஏன் இந்த இனிய மாலைப்பொழுதை நூறாண்டுக்கு முன்பு நடந்ததைப் பற்றி விவாதித்து வீணடிக்கவேண்டும்?

வா யட்சா! என்னை ஆண்டு என்னுள் ஒரு குட்டி யட்சனை விதை!

கிறக்கத்தோடு அவனை இழுத்தாள் மாயா!

சற்று நேரம் எல்லாவற்றையும் மறந்து மனித இனத்தின் முதல் போதையில் விழுந்து தேன் குடிக்க ஆரம்பித்தது யட்ச வண்டு!
இதழ் விரித்துச் சிரித்தது மாய மலர்!


1948 ஜனவரி 30, டெல்லி!

சட்டென்று ஏதோ நிழலாடுவதை உள்ளுணர்வு சொல்ல, துள்ளியெழுந்து கதவை நோக்கித் திரும்பினான் கோட்சே!
மறைவிலிருந்து நீட்டிய கையோடு வந்தான் யட்சன்!

யார் நீ! உன் உடைகள் விநோதமாக இருக்கிறதுஎந்த தேசத்தவன் நீ?

பரவாயில்லை கோட்சே! நான் படித்த புத்தகங்கள் பொய் சொல்லவில்லை! இத்தனை பதட்டத்திலும் சில நொடிகளில் என்னை அவதானித்திருக்கிறாய்! புத்திசாலிதான் நீ!

என்னைப் புகழ்வது இருக்கட்டும்! யார் நீ? இங்கு எப்படி வந்தாய்?
என்னை எப்படி உனக்குத் தெரியும்?

எத்தனை கேள்விகள்!
ஆனால் நான் சொல்லும் பதிலை நீ நம்புவாயா என்பதுதான் எனக்குப் புரியவில்லை!

நம்புவதற்கு நீ உண்மை சொல்லவேண்டும்! இல்லையேல் இந்தத் துப்பாக்கிக்கு இப்போதே வேலை கொடுக்கவேண்டி வந்துவிடும்!

நான் சொல்லும் உண்மை உனக்குப் புரிந்தால் என் அதிர்ஷ்டம் கோட்சே!

நான் உனக்கு ஏறத்தாழ நூறாண்டுகள் பிற்பட்டவன்!
இருபத்தோராம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தைச் சேர்ந்த இந்தியன்!
கால எந்திரம் ஏறி இன்று நீ செய்யப்போகும் காரியத்தைத் தடுக்க வந்தவன்!

உன் கதை உண்மையோ பொய்யோ ஆனால் சுவாரஸ்யமாக இருக்கிறது!

நீயல்ல! அந்தப் பரமாத்மாவே வந்தாலும் என் முடிவை மாற்றமுடியாது!

இப்போது என் கவலை எல்லாம் உன்னை இன்று மாலைவரை எப்படி அமைதிப்படுத்துவது என்பதுதான்!

ஏன் என்னைக் கொன்றுவிடேன், உன் துப்பாக்கிக்கும் சிறிது ஒத்திகை கிடைக்கும்!

என் தொழில் கொலை செய்வது என்பதுபோல் பேசாதே!
இன்று மாலை நான் செய்யும் காரியத்தை நான் மனமார வெறுக்கிறேன்! ஆனால் என் தேசம் காக்கும் நோக்கம் அதை என்னைச் செய்யத் தூண்டுகிறது!

என்னைக் கடிக்கும் எறும்பையும் நசுக்கிக் கொல்லத் துணியாதவன் இந்தக் கோட்சே!
இது என் மக்களுக்காக நான் செய்யும் வதம்!

இல்லை கோட்சே
காந்தியின் இறப்புக்குப் பின்னேயான நாட்கள் அவ்வளவு சிலாகிப்பானதாக இல்லை!
ஊழலும் லஞ்சமும் இந்த தேசத்துக்குப் பெரும் தலைகுனிவைத்தான் ஏற்படுத்தியுள்ளன!
இதன் பின்னான நூற்றாண்டு வரலாறு பார்த்தவன் என்ற உரிமையில் சொல்கிறேன்!

அந்த மகான் இன்னும் சில நாள் வாழ்வது இந்த தேசத்துக்கு அத்யாவசியம்!
நூறாண்டு கழித்தும், என் போல் சிந்திக்கத் தெரிந்த இளைஞர்கள் இன்னும் இந்த தேசம் குறித்து வேதனை கொண்டே அலைகிறோம்!

அஹிம்சை, நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை இவற்றை இன்னும் நம் அரசியல்வாதிகளின் மனதில் விதைக்க காந்தி தேவை!
வெள்ளையர்களை விரட்டிய இவர்கள் கொள்ளையர்கள் ஆகாமல் தடுக்க இந்த மனிதரின் போதனைகள் அவசியம்!

இது என்ன பிதற்றல்!

இந்த மனிதனை விட்டுவைத்தால், அந்நியர்களை விரட்டிவிட்டு, இந்தத் துருக்கியர்களிடம் அடிமைப்பட்டுவிடும் இந்த தேசம்!

உலகப் படத்தில் களங்கமாய் முளைத்த இந்த இரு தேசங்களும் சேர்ந்து என் நாட்டை கபளீகரம் செய்துவிடும்!
அதற்கு அஹிம்சை என்ற பெயரில் துணை போவார் இந்தக் கிழம்!


இல்லை கோட்சே! இப்போதே மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்!
இன்று நடக்கும் பிரார்த்தனையை நடக்கவிடு!
இன்றே காந்தி சில முக்கிய அறிவுரைகளை நெறிகளை நம் மக்களுக்கு போதிக்க உள்ளார் 
என்னை நம்பு!

போதனைகள் எங்களுக்குத் தேவையில்லை யட்சா!

நல்ல பெயர் உனக்கு! யட்சன்!

இவர் போதனை செய்யவேண்டியது அந்தப் பேராசை பிடித்த ஜின்னாவுக்கு!அவனை நம்பிப் பிரிவினை கேட்ட அதக் கூட்டத்துக்கு!

சிறுபான்மை இந்துக்களையும் சீக்கியர்களையும் கொன்று குவித்த அந்த முரட்டுக் கும்பலுக்கு அஹிம்சையை போதிக்கட்டும் இவர்!

அதையும் அவர் செய்துகொண்டுதான் இருக்கிறார் கோட்சே!

கிழித்தார்!
என் தேசத்தின் செல்வத்தை அவர்களுக்குப் பிடுங்கிக்கொடுக்கவே உண்ணாவிரத நாடகத்தை இரண்டுவாரம் முன்னால் ஆரம்பித்தார்!

ஆரம்பத்தில் கொடுத்த 20 கோடியே அவர்களுக்கு அதிகம் என்னும்போது, இந்தப் பிடிவாதம் பிடித்த கிழவரின் மிரட்டலுக்கு பயந்து மேலும் ஒரு 55 கோடியைக் கொடுக்க 13ம் தேதி அமைச்சரவை ஒப்புதலை வாங்கியிருக்கிறார் ஜவஹர்லால்!

ஆனால் கோட்சே, நாம் ஒப்புக்கொண்டதுதானே அது?
பிரிவினைக்குப்பின் பாகிஸ்தானுக்கு 75 கோடி கொடுப்பதுதானே ஒப்பந்தம்?

எது ஒப்பந்தம்?
நம் கைவிரலால் நம் கண்ணைக் குத்திக்கொள்வதுதான் ஒப்பந்தமா?
நம் காசை வாங்கி, நமக்கு எதிராக அவர்கள் ஆயுதம் வாங்கவா?
இனிப் பொறுப்பதில்லை! என் தேசம் வாழ இந்த உயிர்ப்பலி தவிர்க்க முடியாதது!

அவர் வாழ்வது நமக்கு அவசியம் கோட்சே!
அதனால்தான், உன் இருபதாம் தேதி முயற்சி தோற்றது
மட்டுமல்ல9.9.1944 அன்று அவரை சேவாக்ராம் வாசலில் ஜின்னாவை சந்திக்க மும்பை புறப்பட்டபோது தடித்து நிறுத்திய உன் கை குறுவாள் ஏன் அவரைக் குத்தத் தயங்கியது?

ஒரு நிமிடம் குறுகுறுவென உற்றுப்பார்த்தான் கோட்சே!

உனக்கு நிறையத் தெரிந்திருக்கிறது இளைஞனே
ஆனால் எல்லாமே தப்புத் தப்பாய்!

அன்று நான் வந்தது கருப்புக்கொடி காட்டவே
அன்று என் கையில் இருந்த குறுவாள் தற்செயலே!

ஆனால், நீ சொன்னபிறகு யோசிக்கத் தோன்றுகிறது!
அன்றே எனக்கு அது தோன்றியிருந்தால், இன்று என்தேசம் பிரிவினையை சந்தித்திருக்காது!

சரி! நீயாக இந்த நாற்காலியில் உட்கார்ந்துகொள்!
உன்னைக் கட்டிப்போட்டுவிட்டு நான் செல்லவேண்டும்!

நான் மறுத்து உன்னைத் தடுக்க முயன்றால்?

என் தேசம் காக்க இன்னொரு பலி அவசியம் என்றால் அதற்கு நான் தயங்கமாட்டேன்!

சொல்லிக்கொண்டே துப்பாக்கியை உயர்த்தினான் கோட்சே!

அவன் கண்ணில் மின்னிய உறுதி, யட்சனை அந்த முடிவை எடுக்க வைத்தது!
மாயாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறும் முடிவை!
இந்த தேசத்தின் வரலாற்றை மாற்றும் முடிவை?


2046 - காஞ்சிபுரம்!

மறுநாள் அதிகாலை!
சோர்வும் திருப்தியுமாய் மார்பில் படுத்திருந்த மாயாவை விலக்கிவிட்டு பக்கத்து அறைக்குள் நுழைந்து, தன் கண்டுபிடிப்பின் இறுதி வடிவத்தை கவனமாகப் பரிசீலிக்க ஆரம்பித்தான்!

இன்னும் இது முற்றுப்பெரவில்லையா யட்சா?
கையில் கோப்பையோடு உள்ளே வந்தாள் மாயா!

இதோ முடிந்துவிட்டது என் கால் யந்திரம்!
இந்த சில பட்டன்கள் என்னைக் காலவெளியில் எங்கு வேண்டுமானாலும் கொண்டுசெல்லும்!

உன் வயது இளைஞர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றாவது உனக்குத் தெரியுமா யட்சா?
நீ எல்லாவற்றையும் விட்டுக் கால இயந்திரத்தை வைத்து சரித்திரத்தை மாற்றுவேன் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறாய்!

இல்லை மாயா! அந்த ஒரு சம்பவத்தைத் தடுத்துவிட்டால், இந்த தேசத்தின் விதி கட்டாயம் மாறும்!
எனக்கு நம்பிக்கை இருக்கிறது!

விதியை மாற்றி எழுத நாம் கடவுள் இல்லை யட்சா!

எனக்கும் தெரியும் மாயா! ஆனால் ..

நீ உன் பிடிவாதத்தை மாற்றிக்கொள்ளப் போவதில்லை யட்சா!
இதுதான் உனக்கு திருப்தி தரும் என்றால், ஒருமுறை, ஒரே ஒருமுறை காலம் மாறிப் போ!

ஆனால், அங்கு உன் வார்த்தைகளால் மாற்றமுடியாததை வன்முறையால் மாற்ற முயலாதே!

இந்த தேசம் எப்படியும் பிழைத்துக்கொள்ளும் ஆனால் நானும், நேற்றிரவு என் வயிற்றில் நீ விதைத்த சிசுவும் நீ வராவிட்டால் அனாதைகள் ஆவோம் யட்சா!
அதை மனதில் கொள்!

எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய் மாயா நீ கருவுற்றதாய்?

இந்த விஷயத்தில் பெண்களின் உள்ளுணர்வு பொய் சொல்வதில்லை யட்சா! நேற்றிரவு உன் மூர்க்கம் என்னுள் விளைய ஒரு விதை விதைத்திருப்பதாய் நான் உணர்கிறேன்!

 அந்த உற்சாகத்தில் உன்னை ஒரே ஒரு பயணத்துக்கு அனுமதிக்கிறேன்!

ஆனால், நீ எனக்கொரு சத்தியம் செய்து தரவேண்டும்!
செல்கையில் எந்த ஆயுதமும் எடுத்துச் செல்வதில்லை என்றும், கோட்சேவைப் பேசிக் கரைக்க முடியாவிடில், விதி விட்ட வழி என்று திரும்பிவிடுவேன் என்றும் சத்தியம் செய்துவிட்டுப் போ!

இதை இருவர் செல்லும்படி நீ வடிவமைத்திருந்தால் உன்னைத் தனியே விடாமல் நானும் வந்திருப்பேன்!

உன்னைத் தடுத்து நிறுத்துவதால் உன் உறுத்தல் இன்னும் வளர்ந்துகொண்டேதான் போகும் அது நம் வாழ்க்கைக்கு நல்லதல்ல!

எனவே,
போய்வா யட்சா!
வரும்போது எல்லாம் மறந்து என் கணவனாக வா!

அவளிடம் ஒன்றே ஒன்று சொல்வதைத் தவிர்த்திருந்தான் யட்சன்!

அப்படி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், யட்சன் என்று ஒருவன் இருந்ததே அவளுக்கு நியாபகம் இருக்காது!
இதைச் சொன்னால், அவள் நிச்சயம் அனுமதிக்கமாட்டாள் என்று தெரிந்தே அதை அவளிடமிருந்து மறைத்திருந்தான்!

எதற்கும் இருக்கட்டும் என்று அந்த லேசர் ஆயுதம், கையில் கட்டிக்கொள்ளும் கடிகார வடிவிலானதை அவள் அறியாமல் எடுத்துக்கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டுக் கிளம்பினான் யட்சன்

1948 ஜனவரி 30, டெல்லி!

கோட்சே கண்ணில் தெரிந்த உறுதி, யட்சனை அந்த முடிவுக்குத் தள்ளியது!
தன் எதிர்காலத்தைவிட பாரதத்தின் எதிர்காலம் பெரியது!

கோட்சேவை முந்திக்கொண்டு அந்த லேசர் துப்பாக்கியை அவன் நெற்றியில் குறிவைத்துச் சுட்டான்!

கோட்சே அப்படியே மடங்கி உயிரற்று விழுவதை திருப்தியோடு பார்த்த நொடி, அவன் மண்டையில்  இறங்கியது ஆப்தேவின் கையிலிருந்த இரும்புத் தடி!

உதட்டில் உறைந்த புன்னகையோடு மூளை சிதற விழுந்தான் யட்சன்!

2046

காஞ்சிபுரத்தில் அதே மாடியில் கணவன் மடியில் படுத்துக்கொண்டு இந்திய வரலாற்றைப் படித்துகொண்டிருந்தாள் மாயா!

எனக்கென்னவோ, இந்த சரித்திரம் மாற்றி எழுதப்பட்டதாகவே படுகிறது எப்போதும்!

ஏன் அப்படிச் சொல்கிறாய்?

பிர்லா மாளிகை பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகையில் மாலை 5.17க்கு மார்பில் குண்டு வாங்கி இறந்தார் காந்தி என்றே என் உள்ளுணர்வு சொல்கிறது!

நம் வரலாற்று ஆசிரியர்கள் பொய் சொல்கிறார்களா மாயா?

டெல்லி ரயில் நிலையத்தில் இரண்டு இந்து இளைஞர்கள் இறந்து கிடந்தது கண்டு எழுந்த கலவரம் தந்த அதிர்ச்சியில் அதே 1948 ஜனவரி 30 மாலை ஐந்து மணி பதினேழு நிமிடங்களுக்கு மாரடைப்பால் காலமானார் காந்தி!
இது வரலாறு!

உன் கற்பனைகளை நிறுத்திக்கொண்டு, நமக்குப் பிறக்கப்போகும் பிள்ளைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சொல் மாயா
என்று கேட்டான்ரவி, அவள் கணவன்!

நிதானமாக, ஆனால் உறுதியாகச் சொன்னாள் மாயா!

“யட்சன்!"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக