சனி, 30 ஜூலை, 2016

ஜெமோ எனும் திண்ணைக் கிழவி
நேற்று டிஎம் கிருஷ்ணா பற்றி விஷத்தைக் கக்கியிருந்தார் பலரும் ஆசான் என்றழைத்துப் போற்றும் ஜெயமோகன்!

இலக்கியம் கை வந்தவருக்கு இங்கிதம் என்றால் என்னவென்றுகூடத் தெரியவில்லை!

ஜெமோ என்ன ஜாதி என்று எனக்குத் தெரியாது! அதைத் தெரிந்துகொள்ள எனக்குச் சிறிதும் உத்தேசமில்லை!

ஆனால், கிருஷ்ணா என்ன ஜாதி என்பது மட்டும்தான் அவருக்குத் தெரிந்திருக்கிறது!  

பிராமணன் என்றாலே கேவலமானவன் என்ற பொதுத்தொனியில் சேற்றைவாரி இறைக்கும் ஜெயமோகன் ஜாதியில் எல்லோருமே அவதாரங்களாகத்தான் இருக்கமுடியும்! மகிழ்ச்சி!

ஹிண்டு கட்டுரைக்கோ, அவர் எழுத்துத் திறமைக்கோ, சங்கீத ஞானத்துக்கோ அவருக்கு விருது வழங்கப்படவில்லை!

இதுகூட ஆசானுக்குத் தெரியாமல் இருக்கும் என்று நான் நம்பவில்லை!
ஜாதிவன்மம் பாவம் அவர் கண்களை மறைத்திருக்கிறது!


வெறும் சோறு கேட்பது மட்டுமே சம உரிமைக்கான போராட்டமாக முடியாது!

எல்லோரும் ஆலயம் நுழைவது, அர்ச்சகர் ஆவது என்பதெல்லாம் வயிறு சார்ந்ததில்லை! 

பாரதி சேரிக்குப் போகாமல், சேரியை அக்ரஹாரத்துக்குக் கொண்டுவந்ததுதான் புரட்சி!

அதுபோன்றதொரு முயற்சிதான் டிஎம் கிருஷ்ணா செய்வது!

அவர் எதையும் சாதித்துவிட்டாரா என்ற கேள்விக்குப் புள்ளிவிபரக் கணக்கு ஏதுமில்லை! ஆனால் அவர் பாதை உயர்வானது!

இன்னொரு விருதாளர் பெஸ்வாடா செய்வது சந்தேகத்துக்கு இடமின்றி ஒப்பிட முடியாத விஷயம்!

ஆனால் ஒரே ஒரு ஒப்பீட்டில் கிருஷ்ணாவின் நோக்கம் உயரியது!

தான் பிறந்த இனம், தன் பரம்பரை பாதிக்கப்பட்ட காரணியை விரட்ட முயல்பவருக்கு உடனிருப்போர் ஆதரவாவது உடனடியாகக் கிட்டும்!

தன் இனம், தன் சக கலைஞர்களின் எதிர்ப்பு, ஏளனம், தூற்றல்களை மீறி கிருஷ்ணாவின் சாதனை உயரியது!அந்த இளைஞர் போகவேண்டிய தூரம் மிக அதிகம்! சாதிக்கவேண்டியது மிக மிக அதிகம்!

அவர் தெரிவுசெய்த பாதை உயரியது! அதில் தளராது அவர் பயணிக்க ஊக்கமருந்து இவ்விருது! 

ஜெமோ சொல்வதுபோல் அவர் சஞ்சய் சுப்பிரமணியம் உட்காரும் நாற்காலியில் உட்காரத் தகுதியற்றவராகவே இருக்கட்டும்! ஆனால் அவருக்கு இணையான பக்கத்து நாற்காலியில் உட்கார எல்லாத் தகுதியும் பெற்றவர்!

பணமோ, புகழோ முக்கியம் எனில் அவர் ஹிண்டுவில் எழுதியிருக்கவேண்டிய கட்டுரையே வேறு!

எல்லோரும்போல் சில்க் ஜிப்பாவும், பட்டு அங்கவஸ்திரமுமாய் விமானம் ஏறிப்போய் க்ளீவ்லேண்டிலும் இன்னுமொரு இருபது இடங்களிலும் கச்சேரி என்று பேருக்கும் செய்துவிட்டு, ஆன்லைன் ட்யூசனுக்கு ஆள் சேர்த்துக்கொண்டு வந்திருக்கலாம்!

அதை இப்போது செய்பவர்களைவிட அதிக விஷயஞானம் உள்ளவர் அவர்! (இதை மேலும் எழுதி இதை சங்கீத விமர்சனமாக்க விரும்பவில்லை)

அந்த இளைஞர் போகும் பாதை தெளிவானது! நம்மால் முடிந்தால் தட்டிக்கொடுப்போம்! அதைவிட்டு மூன்றாம்தர பாஷையில் வசைபாட முயல்வதால் இழுக்கு அவருக்கில்லை!

திண்ணைக் கிழவிகளின் புரணி கேட்கக் கூடும் கூட்டம் விருது வாங்கித் தராது!

உங்கள் திண்ணையைத் தாண்டி வெளியே பாருங்கள்!

இரா. முருகன் போன்ற உங்கள் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் புலிப்பாய்ச்சலில் புதுப்பாதை பயணிப்பது கண்ணில் படும்!

அரைத்தமாவையே அரைத்துக்கொண்டி, கண்ணில் படுவோரையெல்லாம் தரக்குறைவாய் கரித்துக் கொட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் ஜெமோவாக இருந்தாலும் என்போல் அறைகுறைகளெல்லாம் அறிவுரை சொல்லக் கிளம்பிவிடுவர்!

எழுத்தாளனுக்கு நல்லதைப் பாராட்டுவதும், அல்லதை நயந்து அறிவுரைப்பதும் சமூகக் கடமை!

இதில் நீங்கள் ஆசான் வேறு!

யோசியுங்கள்!

உங்கள் வயிற்றெரிச்சலிலும் சில நல்ல வார்த்தைகள் உங்களை அறியாமல் வந்து விழுந்துவிட்டன!

மூத்தோர் சொல் பலிக்குமாமே?

அந்த இளைஞர் நீங்கள் சொன்னதுபோல் மேலும் மேலும் உயர்ந்து, தகுதியோடு நோபல் பரிசு வாங்கட்டும்!

அதற்குள்ளாவது உங்கள் அழுக்குத் திண்ணையை காலி செய்துவிட்டு ஆசான் என்ற அழைப்புக்கு அருகதையோடு வாழுங்கள்!

வாழ்க்கை சந்தோஷமானதாக இருக்கும்!

🙏🙏🙏🙏


வெள்ளி, 29 ஜூலை, 2016

அமராவதியா சரவணபவனா?ஒரு ரஜினி படத்தைப்பற்றிச் சொல்லும்போது வேறு ஒருவர் பெயர் முதலில் நியாபகம் வருவது,

மகிழ்ச்சி!!

தன்ஷிகா!

என்ன ஒரு இயல்பான முகபாவங்களும் உடல்மொழியும் அந்தப் பெண்ணுக்கு! தந்தையிடம் பேசும்போது அவருடைய கண்களில் அன்பு வழிகிறது! மற்ற சமயங்களில் வெகு அலட்சிய தோரணை!

பார்வதி, காக்காமுட்டை ஐஸ்வர்யா போல இவர் திறமையும் கண்டுகொள்ளாது கடக்கப்படும் என்பது தமிழ் சினிமாவின் அபத்த விதி!ரஜினி, ராதிகா ஆப்தே, கிஷோர், ஜான் விஜய் இவர்களை மீறி ஸ்கோர் செய்யும் இன்னொருவர் - தினேஷ்!

கொஞ்சம் தடுமாறினாலும் நகைப்புக்குரியதாக மாறிவிடும் பாத்திரம்!

வெகு இயல்பாய்ச் செய்திருக்கிறார்!

படத்தின் வெகு நெகிழ்வும் நேர்த்தியும்- மாய நதி பாடலின் முன்பான காட்சிகளும், அதைத் தொடர்ந்துவரும் சண்டைக் காட்சியும்!

ரஜினியும் ராதிகா ஆப்தேவும் கொஞ்சநேரம் வாழ்ந்திருக்கிறார்கள்!
அதிலும் கணவரோடு நடக்கையில் ராதிகா ஆப்தேவின் மிடுக்கு! இந்தியத் திரை உலகம் அவரைக் கொண்டாடுவதில் தவறே இல்லை!

உதடு நடுங்க. கண் கலங்க ரஜினியை அணைத்துக்கொள்ளும் காட்சியும். ரஜினியின் பதில்வினையும் ஒரு ஐந்து நிமிடக் கவிதை!இன்னொரு ஹீரோ - ச நாவின் பின்னணி இசை!

ஸ்கோர் பண்ணக் கிடைத்த எந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை! க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்குக் கொஞ்சம் நம்பகம் சேர்ப்பதே நெருப்புடாதான்!

ஜான் விஜய் அலட்டலில்லாப் பொருத்தம்! 

ரித்விகா படத்தில் இன்னொரு பூச்செண்டு!

சரி, ரஜினி?

ஆரம்பக் காட்சியிலிருந்து கடைசிவரை அழுத்தமான அண்டர்ப்ளே! ரஜினி என்ற நடிகனின் மீள்வரவு இந்தப்படம்!

பாசம், தன்னம்பிக்கை, கோபம், நெகிழ்ச்சி என எல்லாமே சற்றும் மிகையில்லாமல்!

அதுவும் நெகிழ்ச்சியும் பெருமிதமுமாக மகளைப் பார்க்கும் ஒரு காட்சி போதும் நூற்றி இருபது ரூபாய்க்கும்!

பெரு மகிழ்ச்சி!

ஆனால் அடுத்த சங்கர் படத்தில் ஹீரோயினைக் கடித்த கொசுவோடு மொக்கையாகக் காமெடி என்ற பெயரில் எரிச்சல் கிளப்பப்போகிறார் என்பதுதான் ...

கதை!?

வித்தியாசமான களத்தில் ஒரு டான் கதை!

சின்னச் சின்னக் காட்சிகளிலும் ஒருவரி வசனத்திலும் கதையை வேகமாக நகர்த்தும் உத்தி நிச்சயம் தமிழுக்குப் புதிது!

பறவையைப் பறக்கவிடு, உன் கருணை அதற்கு சாவைவிடக் கொடுமையானது எனப் போகிறபோக்கில் ஒரு அற்புதமான வசனத்தைத் தெளித்துவிட்டுப் போகும்போதே நிமிர்ந்து உட்காரவைக்கிறது வசனம்!

டான் மனைவி என்ற பெருமிதத்தில், கணவனுக்கு கோட் மாட்டிவிட்டு ராதிகா பேசும் வசனம் படு இயல்பு! 

மனைவியை சரி சமமாக இல்லாமல் ஒருபடி மேலாகக் காட்டியிருப்பது வெகு சிறப்பு!

ஆனால் சில இடங்களில் வசனம் கொஞ்சம் வலிந்து திணிக்கப்பட்டதாகவே படுகிறது!
அதற்கான தேவைகள் காட்சிப்படுத்தப்படாத நிலையில் கொஞ்சம் துருத்தித் தெரிவதைத் தவிர்த்திருக்கலாமோ?

மலேசிய விவகாரத்தை இன்னும் கொஞ்சம்  காட்சிப்படுத்தி, சென்னைக் காட்சிகளுக்குக் கத்திரி போட்டிருந்தால் நடுவே தொய்ந்து துவளும் கதை கொஞ்சம்  வேகமாக நகர்ந்திருக்கும்!

படத்தில் பெருங்கொடுமை வில்லன் கோஷ்டி! கதாநாயகனுக்கு ஒரு வடிவம் கொடுப்பதே பவர்ஃபுல் வில்லன்தான்!

இதில் ஒரு பெண்ணை, தினேஷை என ஆட்களைக் கூட்டிவைத்து கெஞ்சிக்கொண்டிருக்கும் சப்பை வில்லன் படத்தின் மிகப்பெரிய மைனஸ்! 

அதைவிடக் கொடுமை, எல்லா டானையும் கூப்பிட்டு விருந்து வைப்பது! 

இது ஜெய்சங்கர் காலத்துப் பழசு! 
ரஞ்சித்துக்கும் வேறு ஐடியா தோன்றாதது வெறுப்பு!

படத்தில் வில்லன்களே இல்லையா?

இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள்!

மெயின் வில்லன் தாணு!
உப வில்லன் ரஞ்சித்!

தேவையில்லாத வியாபார உத்தியில் அளவுக்கு மீறிய ஹைப் கொடுத்து, எப்படிப்பட்ட படமும் மேட்ச் செய்யமுடியாத ஆர்வம் தூண்டியது தாணுவின் வில்லத்தனம்! 
படம் ஓடாதோ என்ற கவலையில், முடிந்தவரை சம்பாதித்துவிடவேண்டும் என்ற அப்பட்டமான வெறி!

இரண்டாவது வில்லன் ரஞ்சித்! 

இது நூறு பாட்ஷா என்று ஆயிரம் பேட்டிகளில் சொன்னவர், டீஸர், ட்ரைலர் எல்லாவற்றிலும் அதே டெம்போவையே தொடர்ந்தார்!

இருந்த ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே காட்டி, ரசிகர்களை ஒரு முழுமையான டான் படத்துக்கு தயார் செய்தது இமாலயத் தவறு!

சிக்கன் பிரியாணி, தலைக்கறி என்று ஆவலோடு அமராவதியில் வந்து உட்கார்ந்த ரசிகனுக்கு, சரவணபவன் சர்க்கரைப் பொங்கலைப் பரிமாறினால் எப்படி இருக்கும்?

சர்க்கரைப் பொங்கல் கேட்பவன் முதல்நாள் படத்துக்கே வரவிடாமல் செய்தது அந்த ட்ரைலர்! 

பதட்டத்தில் செய்த மாபெரும் பிழை!

இப்போது ரஞ்சித்துக்குத் தெளிவு வந்திருக்கும்!

அடுத்து ஒரு படம் ரஜினியை வைத்து முழுமையான விருந்து படைக்கட்டும்!

அது சரவணபவனா, அமராவதியா என்பதை நேர்மையாகச் சொன்னாலே ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்!

தயவுசெய்து ஆடம்பர விளம்பரம் செய்ய வக்கற்ற தயாரிப்பாளரைத் தேர்வு செய்வது நல்லது!

என் நீண்டநாள் விருப்பம்!

ரஜினிக்கு ஜோடியாக மீனம்மா கயல்!
சாரி நந்திதா தாஸ்!

மகிழ்ச்சி!
புதன், 27 ஜூலை, 2016

கபாலி- பாடல் பிறந்த கதை!சென்னையில் ஒரு ஏழு நட்சத்திர விடுதியின் எளிமையான சூட் ரூம்!

கலைமகள் வாசம் செய்யும் அறையில் தேநீர் வாசமும் ஆவலின் நேசமும்!

என் எதிரில் அம்பேத்காரின் இளமைப் பதிப்பாக தம்பி ரஞ்சித்- இந்தப் பொன்னையாத் தேவன் புறம் தள்ளிய மகனின் முன் சமமாக உட்கார்ந்திருக்கும் பயமும் தயக்கமுமாக!

"நானொன்றும் வானத்திலிருந்து வந்த தேவதூதனல்ல, சரஸ்வதி தன் தற்போதைய அவதாரமாக என்னைத் தேர்ந்து வியந்துகொண்டிருப்பது தவிர" என்று அவரை அன்பாய் ஆற்றுப்படுத்திவிட்டு, கண்இமை மூடி, ஒரு வார்த்தைக்காக மோனத்தவம் இருக்கிறேன்!

அறையின் இன்னொரு மூலையில் என்னையே பக்தியோடும் பாசத்தோடும் பார்த்துக்கொண்டு எளிமையாக, தாணு!

உண்மையில் அது கலைப்புலி அல்ல என்போல் கவிப்புலிகளின் கலைத்தாகம் தீர்க்கும் ரசிகப்புலி!

என் வாய் உதிர்க்கும் வார்த்தைகளுக்காக அந்த நான்கு காதுகளும் வரிசையில் நிற்பது என் மூடிய இமைகளுக்குள் உருளும் விழிகளுக்குத் தெரிந்தே இருக்கிறது.

எப்போதும் துப்பாக்கியில் தெறிக்கும் தோட்டாவாக வந்து விழும் வார்த்தைகள் அன்று காதலனைக் கண்டு நாணிய நாயகிபோல் உதட்டுவாசல் மீற மறுத்து வெட்கி நிற்கின்றன!

அப்போதே எனக்குப் புரிந்துவிட்டது, வந்து விழப்போவது வார்த்தை அல்ல வரம்!

வைரமும் முத்தும் ஒரு நொடியிலா விளையும்?

அதுவும் என்போன்றதொரு கருப்பு வைரம் தம்பி ரஜினிக்கும், மொழி கடந்த கலையரசி ராதிகா ஆப்தேவுக்கும் காதலும் ஊடலும் பின்னிப்பிணைந்த நேரத்தில் ஆற்றுப்படுத்தும் காதல் பாட்டல்லவா?

இதோ என் கற்பவாசல் திறந்து வந்து விழுகின்றன வார்த்தைக் குழந்தைகள்!

"என்னோடு ஏனடி வம்பே
என் காண்டாமிருகக் கொம்பே!"

வார்த்தைகள் செவி வாசல் நுழைந்ததும் சின்னப் பிள்ளைபோல் துள்ளிக் குதிக்கிறார் தாணு!
தம்பி ரஞ்சித்தோ, தரையில் விழுந்து புரண்டு தொழுகிறார்!

கலைமகள் உம் உருவில் இருக்கிறாள் என்பது பிழை ஐயா! நீர் கலைமகள் உருவில் இருக்கிறீர் என்று தாவி வந்த தாணு தன் கழுத்திருந்த தேர்வடம் போன்ற  சங்கிலியைக் கழற்றி என் மார்பில் வீசுகிறார்!

நானும் எத்தனை பாடல்களை இயற்றியிருக்கிறேன். ஆனால் இந்த சிந்தனை தமிழுக்குப் புதிது!

காண்டாமிருகக் கொம்பு கூடலுக்கு வலு சேர்க்கும் என்கிறது விஞ்ஞானம்!
எப்படி வார்த்தைகள் விஞ்ஞானத்தோடு இசைந்து இச்சை பேசுகின்றன பாருங்கள்!

தன் இச்சை தணிக்க வந்த காண்டாமிருகக் கொம்பு அவள் என்கிறான் காதலன்! அவளோ,

"உன்மேல் எனக்கு ஊறும் அன்பே, அதைப் புரியாத மன்மதன் வீட்டு சொம்பே"
என ஊடுகிறாள்!

வாய் பிளந்து நின்ற தாணு மூச்சு விட சற்றே மறக்க,
வள்ளுவனுக்கும் வராத சிந்தனை ஐயா என்று உருகுகினார் ரஞ்சித்!

அப்போதே இந்தப்பாடல் போட்டியின்றி தேசிய விருது பெறும் என்பது எழுதாத விதியாகிறது!

"என் பற்களின் எண்ணிக்கை முப்பத்திரண்டு,
உன் மேனி தழுவ ஓர் வாயில் 
புடவை வாங்கிக் கட்டு"

அடுத்த வரிக்கு வெடித்துச் சிரித்து என்னைத் தாவி அணைத்தார் தாணு!
ஐயா! நீர் இன்னும் வாலிபக்குறும்பை விடவில்லை! 
உம் இளமைக் காலத்தை அருகிருந்து பார்க்க முடியாதது எம் சாபம் என உருகும் தாணு!
ரஞ்சித்தோ, தயக்கத்தோடு "அந்த ரஜினி அறிமுகப்பாடல் ஐயா!" என தயங்க,
இதோ,

"தமிழ்நாட்டின் தலைமகனே, எம் தனித்துவ விலை மகனே"

இங்கு இன்னொரு கருத்தைப் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்!

பிறகொரு பொன்மாலைப் பொழுதில், அதெப்படி, தலைமகனுக்கு இணையாக விலை மகன் என்று எழுதினீர்கள் என்று ஆச்சர்யக் கணை வீசினார் ரஜினி!

அது உன் விலையில்லாத் தன்மை சொல்லும் வரி! இந்தக் கலைச்சிங்கம் நாடாள வருமா என்ற ரசிகனின் விலை மதிப்புக் கேள்வி அது!

தலையைப் புறந்தள்ளி வெடிச்சிரிப்பு சிரித்து அவர் சொன்ன பதிலை அடுத்த படம் வரும்வரை பகிர்வது நட்புக்கு அழகன்று!

இப்படிப் பாடல் வரிகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுப் பாய்ந்து வந்த வேளை, பையிலிருந்து சிணுங்கியது அலைபேசி!
மறுமுனையில் பரமக்குடியான் என் அன்பு இளவல் கமல்!

"இந்த நாயுடுக்கு எழுதாதா அந்த தேவர் மகன்?" என்று உரிமையோடு ஊடுகிறார்!

"இல்லை, அந்தப் படத்துக்கு இசை..." என்று தயக்கமாய் இழுக்க, "அந்தப் பிழையைத் திருத்திக்கொண்டேன்! உங்கள் கவிப் பங்கின்றி பாஸாகமுடியாத நாயுடு எப்படி சபாஷ் வாங்க?" என்றவர், "வண்டி அனுப்பிவிட்டேன்! இப்போதே அலுவலகம் வாருங்கள்! உங்கள் வழிமீது என் விழி!" என்று இறைஞ்சுவதுபோல் கேட்டார்!

சரி! இந்நேரம் வரை கருத்துக்கு உணவ! இப்போது பசியென்று கத்தும் வயிற்றுக்கு 
எங்கே உணவு?

"எங்கேயடா கவிஞனுக்குப் படையலிட பிரசாதம் என்று அந்தக் கலைப்புலி உரும,
நடுக்கத்தோடு உணவெடுத்து உள்ளே வந்த முதிய பணியாளர் சொன்னார்!
"ஐயா, நான் அப்போதே வந்துவிட்டேன்! கவியும், விளக்கமும் தடைபடக்கூடாதென்றே வாசலில் நின்றேன்!
இந்த ஏழை ரசிகன் ஒன்று சொல்லலாமா? இனியும் இவரை கவிப்பேரரசு என்று சொல்வது அநீதி!
இனி இவர் கவிப்பெருங்கடவுள் என,

இத்தனை நாள் எனக்கிது தோன்றவில்லையே என்று புலம்பிய தாணு, அப்போதே நான் பாட்டெழுதும் அத்தனை தயாரிப்பாளருக்கும் என்னையே அலைபேசியில் சொல்ல அன்போடு ஆணையிட்டார்!

அன்பைத் தட்டும் வழக்கம் வடுகபட்டிக்காரனுக்கு இல்லை!

என் பாடல் கேட்டு வரிசையில் நிற்கும் நூற்றுக்கணக்கான தயாரிப்பு நிறுவனத்துக்கும் அழைத்துச் சொல்ல, அத்தனை பேரும் ஆரவாரத்தோடு ஏற்றுக்கொள்ள, இந்தக் கவிப்பேரரசு, கவிப்பெருங்கடவுளானான் கபாலியால்!

இப்போது புரிகிறதா கபாலியின் இமாலய வெற்றி ரகசியம்?

என் வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்! இனி இந்தப் பிரபஞ்சத்தில் கபாலி போலொரு படம் வரப்போவதில்லை!

இது இந்தக் கவிப்பெருங்கடவுளின் கணிப்பு!சமர்ப்பணம்:

இப்படி ஒரு பேட்டியை இழந்து வாடும் தமிழ் கூறும் நல்லுலகுக்கு!


சனி, 23 ஜூலை, 2016

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு ஸ்லீப்பர் செல்லின் வேண்டுகோள்!அன்பின் சூப்பர் ஸ்டார் ரசிகர்களே!

ஏறத்தாழ முப்பது வருடங்களுக்குமேல் ரஜினி உங்களுக்காக பல ப்ளாக் பஸ்டர்களை நடித்துக் கொடுத்துவிட்டார்! 

நீங்களும் உங்கள் பங்குக்கு அவரைக் கொண்டாடித் தீர்த்துவிட்டீர்கள்!

உலகத்திலேயே, கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் ஒரு பண்டாரம், பரதேசி போல் பொது நிகழ்ச்சிகளில் தலை காட்டும் வேறு நடிகன் யாருமே இருக்க மாட்டான்!

அதேபோல், அதை மறந்து திரையில் ஒரு நடிகனை இவ்வளவு ரசித்த ரசிகர்களும் வேறு எங்கும் இருக்கமாட்டார்கள்!உங்களுக்கு ரஜினியின் நல்ல படம் என்றால் சிவாஜி, எந்திரன் என்று பல படங்கள் மனதில் தோன்றியிருக்கும்!

மகிழ்ச்சி!

ஆனால் என்போல் சில ஸ்லீப்பர் செல் ரசிகர்களும் அவருக்கு உண்டு!

எங்கள் நல்ல படப் பட்டியலில், முள்ளும் மலரும், ஜானி, எங்கேயோ கேட்ட குரல், புவனா ஒரு கேள்விக்குறி, முக்கியமாக நெற்றிக்கண், புதுக்கவிதை என்று நீங்கள் அரை மனதோடு நிராகரித்த படங்கள் முதலிடத்தில்!

ஆனாலும் எங்களை ரஜினி முற்றாக மறக்கவில்லை என்பதற்கு, தளபதி, மூன்று முகம் அலெக்ஸ், நல்லவனுக்கு நல்லவன் (ஒரு பாதி!) படங்களும், 
வேட்டையன், சிட்டி, எம்ஜி ரவிச்சந்திரன் என உங்கள் படங்களிலும், 
ஆங்காங்கு கொஞ்சம் சிறு தீனி மட்டும் கொடுத்து உயிர்ப்போடு வைத்திருக்கிறார்!

நாங்களும் ரஜினிக்கு வயதாகட்டும் என்று அமிதாப் போன்றோரைப் பார்த்து பெருமூச்சும் பொறுமையுமாகக் காத்திருக்கிறோம்!

ஒரு வழியாக கேஎஸ் ரவிக்குமார், சங்கர் எல்லோரையும் விட்டு புது இயக்குனருக்கு ஒரு படம் செய்கிறார் என்று அறிந்து கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தோம்!

கபாலி ஃபர்ஸ்ட் லுக் வந்தபோது, ஒரு முழு சாப்பாட்டுக்கு பல வருடங்களுக்குப்பிறகு தயாரானோம்!

ராதிகா ஆப்தே உட்பட காஸ்ட்டிங்கும் எங்கள் எதிர்பார்ப்புக்குத் தீனிபோட,
சூப்பர்ஸ்டாரை மறந்து எங்கள் ரஜினியைக் கொண்டாடத் தயாரானோம்!

இப்போது, படம் வந்தபின், உங்கள் ஏமாற்றமும், மற்ற நடிகர்களின் ரசிகர்களின் வயிற்றெரிச்சலும் எங்கள் எதிர்பார்ப்பு பலித்துவிட்டதைச் சொல்கின்றன!

மேலும் இது சங்கர் படம் போலில்லை என்ற உற்சாகச் செய்தி வேறு!

ரஜினி என்ற நல்ல நடிகனை இனி எங்களுக்கு விட்டுவிடுங்கள்!

உங்களுக்காக சங்கர் ஏற்கனவே மசாலா அரைத்துக்கொண்டிருக்கிறார்!

அதைக் கொண்டாடுங்கள்!

இதை எங்களுக்கு விட்டுவிடுங்கள்! 

உங்கள் நெகட்டிவ் ரீயாக்ஷன் மறுபடி அவரை கே எஸ் ரவிக்குமாரை நோக்கித் துரத்திவிடக்கூடும்!

இனியாவது அவருக்குள்ளிருக்கும் "நல்ல" நடிகன் நல்ல இயக்குனருடன் சேர உதவுங்கள்! ப்ளீஸ்!

- இது ரஜினி படங்களை மட்டுமே தவறாமல் பார்த்து ஒவ்வொருமுறையும் ஏமாறும் ஒரு பழைய ரசிகனின் வேண்டுகோள்!

பி கு:

நான் இன்னும் கபாலி பார்க்கவில்லை! உங்கள் ஆரவாரங்கள் ஓய்ந்தபின் குடும்பத்தோடு போய் ரசித்துவரத் திட்டம்!

- இம்முறையாவது திருப்தியோடு!!

செவ்வாய், 5 ஜூலை, 2016

நெஞ்சில் விதைத்த நெருஞ்சி!அம்மா, நான் இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கட்டுமா? 

ரமேஷ் கேட்டபோது சுமதிக்கு ஒன்றும் பெரிய அதிர்ச்சியெல்லாம் ஏற்படவில்லை! 

பதினேழு வயதில் கல்லூரிக்குள் காலடி எடுத்துவைக்கும்போது தகப்பனை இழந்தவன் ரமேஷ்!

பையன் ஆசைப்பட்ட மெடிக்கல் சீட்! அதுவம் மெரிட்டில், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில்! 
அந்த சந்தோஷத்தோடு, "சுமதி, சாயங்காலம் கேசரி செஞ்சு வை"ன்னு சொல்லிட்டு ஆஃபீஸ் போன குமார் ஆம்புலன்ஸில் வீடு வந்து சேர்ந்தான் பிணமாக!

அலுவலகத்தில் சேரில் உட்கார்ந்தவாக்கில் அவன் கண்ணை மூடியது பக்கத்து சீட்காரருக்கே பத்து நிமிடம் கழித்துத்தான் தெரிந்திருக்கிறது!

அற்புதமான சாவு என்று வருத்தத்தோடு சிலாகித்தது வந்த ஜனம்!

உண்மைதான்! 

ஒரு அற்புதமான மனிதனுக்கு அற்புதமான சாவுதான் வரும்!

சுமதிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இத்தனை சந்தோஷம் நமக்குத் தகுமா என்ற உறுத்தல் பதினெட்டு வருடமாக இருந்துகொண்டுதான் இருந்தது!

இப்படி ஒரு புருஷன் எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை! 

அதுவும் தனக்கு!

ஒரு புயலடித்து ஓய்ந்தபிறகு நடந்தது அவள் திருமணம்! 

M.Com படிக்கும்போது M.Sc படித்து வந்த ராஜாராமனுடன் அப்படி ஒரு வெறித்தனமான காதல்! 

ஆணழகன்! சுமதியும் பேரழகி!

கூட இருந்த தோழிகள் "உங்கள்
இரண்டுபேரையும் பார்க்க கமல், ஶ்ரீதேவி மாதிரி அத்தனை பொருத்தம் சுமா!" என்று பொறாமையும் சந்தோஷமுமாய் ஏற்றிவிட்டதும், கண்டிப்பான அப்பா அம்மாவை விட்டு சென்னை ஹாஸ்டல் வாசம் தந்த சுதந்திரமும் அவளைத் தடுமாறவைத்தது!

ராஜாராமன் பக்கத்தில் வந்தாலே, இளையராஜா பாடலை ஒற்றை வயலினில் வாசிப்பதுபோல் ஒரு வசீகரம்!

இரண்டாம் ஆண்டு முடிய இன்னும் நான்கு மாதங்கள் மட்டும் இருந்த நிலையில், ராஜாராமன் கொஞ்சலும், குழைவுமாக வற்புறுத்தியதிலும், அவன் தலை சாய்த்துக்கெஞ்சிய தோரணையிலும் தன்னை முற்றிலும் இழந்தாள்!

பொங்கலுக்கு ஊருக்குக் கிளம்பியவளை ஒரு இரவு மகாபலிபுரத்தில் ரிசாட்டில் தங்கவைத்தது அவன் இளமையும் அழகும்!

மறுநாள் ஏதும் நடக்காததுபோல் சேலம்வரை காரில் கூட்டிவந்து ஈரோடு பஸ்ஸில் ஏற்றிவிட்டுக் கிளம்பும்போது அவன் கையைப் பிடித்துக்கொண்டு உடைந்துபோனாள்!

"ராஜா, நடந்ததற்கு நானும்தான் பொறுப்பு! அதைவைத்து உன்னைக் கேட்பதாக நினைக்காதே! இனி நீயில்லாத வாழ்க்கை எனக்கில்லை!"
"நான் என் அப்பா அம்மாவிடம் நாளைக்கே பேசிவிடுகிறேன்! கோர்ஸ் முடிந்ததும் ஜூன் மாதமே கல்யாணம் வைத்துக்கொள்ளலாம்! நீயும் உன் வீட்டில் பேசு!"

"தைரியமாகப் போ சுமதி! நீ வரும்போது உனக்கு நல்ல சேதி இருக்கும்!"

பொங்கலுக்கு மறுநாள், 
"அப்பா, நான் என் கூடப் படிக்கிற ராஜாராமனை விரும்பறேன்!"

காதில் விழுந்ததை ஜீரணிக்க ஒரு முழு நிமிடம் ஆனது நரசிம்மனுக்கு!

சுதாரித்து எழுந்து அறைந்ததில் நிலை தடுமாறி விழுந்தாள் சுமதி!

சத்தம் கேட்டு ஓடிவந்த அம்மாவும் விபரம் தெரிந்து தன் பங்குக்கு அறைந்தாள்!

இதை எதிர்பார்த்தே இருந்த சுமதி, "மெட்ராஸுக்கு உன்னை இதுக்குத்தான் அனுப்பினேனா, தங்கச்சி வாழ்க்கை பற்றி நினைத்தாயா?" எல்லாக்கேள்விக்கும் அசரவில்லை!

ராஜாராமன்தான் தன்னவன் என்ற உறுதி! அசையாமல் நின்றாள்!

இரண்டு நாட்கள் ரணகளமும் மயான அமைதியுமாகக் கழிய, வேறு வழியில்லாமல் சுமதியோடு நரசிம்மனும் புறப்பட்டார் ராஜாராமன் பெற்றோரைப் பார்க்க!

மறுநாள் வெள்ளிக்கிழமை நல்லநாள்!

ராஜாராமன் வீட்டுக்குத் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து புறப்படும்போது ஏனோ தடுமாறியது!

ஏதோ தவறென்று சொன்ன உள்ளுணர்வு பொய்க்கவில்லை!

ராஜாராமன் வீட்டு வாசலில் வாழை மரம்! வீட்டு வாசலில் காரை எடுக்கவந்த ராஜாராமன் முகத்தில் சுமதியையும் நரசிம்மனையும் பார்த்ததில் அப்பட்டமான அதிர்ச்சி!

அவசரமாக, ஏறத்தாழ இழுத்துக்கொண்டு தெருமுனைக்குப் போனான்!

"எதுக்குடி வந்தே!"

ஓரளவு உள்ளுணர்வால் எதிர்பார்த்தே வந்த சுமதி உடனே தெளிந்தாள்!

"வீட்ல என்ன விசேஷம் ராஜா?"

"சாயங்காலம் எனக்கு நிச்சயதார்த்தம்!"

யார் கூட என்பது விரயம்! 
"அப்போ நான்?"

"கூப்பிட்டவுடனே வந்து படுத்தவதானடி நீ! இதுமாதிரி எத்தனை பேர் கூடப் போனவளோ!"

அடிக்கத் திமிறிய அப்பாவை மடக்கிக் காரில் திணிப்பதுதான் கஷ்டமான காரியமாக இருந்தது சுமதிக்கு! 

அவன் பெற்றோரைப் பார்த்து நியாயம் கேட்கப் போவதாகச் சொன்ன அப்பாவை உறுதியாய்த் தடுத்தாள்!

"வேண்டாம்ப்பா! நடந்தது தப்புன்னா அதில் எனக்கும் பங்கிருக்குப்பா!"

"காதலே இல்லாதவனோட காதல் கல்யாணம் செய்ய முடியாதுப்பா!"

"தைரியமா ஊருக்குப் போங்க! படிப்பை முடிச்சு ஊருக்கு வர்றேன்!

பயப்படாதீங்கப்பா, இந்த முட்டாளுக்காக உயிரையெல்லாம் விட மாட்டேன்!"

"உன் லைஃப்.." தழுதழுத்த அப்பாவை இடை மறித்தாள்!

"என் சாய்ஸ் தவறுன்னு தெரிஞ்சுடுச்சு!" 

"தாராளமா நீங்க பையனைப் பாருங்க!
ஆனா ஒரே கண்டிசன்! எல்லா உண்மையும் சொல்லி, ஒப்புக்கறவனை முடிவு செய்ங்க!"

தயங்கித் தவித்த அப்பாவை ரயில் ஏற்றி விட்டு வந்து ஹாஸ்டலில் படுத்து நெஞ்சு வெடிக்க அழுது தீர்த்தாள்!அடுத்து வந்த நாட்களில்தான் புரிந்தது, தன் காதலுக்கும் கண்ணீருக்கும் தகுதியே இல்லாதவன் ராஜாராமன் என்பது!

காலேஜில் தன் அத்தனை நண்பர்களிடமும் இவர்கள் பேசியது ஒன்று விடாமல் சொல்லியிருக்கிறான்!

இவள் கடக்கும்போதெல்லாம் அவள் சொல்லும் அதே தொனியில் ராஆஜ்ஜா! என்று இழுப்பார்கள்!
திடமாகத் திரும்பாமல் கடந்துபோவாள்!

ஒருநாள் அதில் ஒருவன் "மஹாபலிபுரம்!" என்று கத்த, 
நிதானமாகத் திரும்பி ராஜாராமன் வகுப்புக்கு நடந்தாள்!
பாடம் சொல்லிக்கொண்டிருந்த பேராசிரியையிடம் "எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்!"
எஸ்?

விருவிருவென உள்ளே போனாள்!

ஆசிரியை பக்கத்தில் ப்ளாட்ஃபாரத்தில் ஏறினாள்!

"ராஜாராமன்! இன்னும் ஒரு வார்த்தை எந்த நாயாவது என்னைப் பார்த்துக் குரைத்தது, நீ இருக்குமிடம் சென்ட்ரல் ஜெயிலாகத்தான் இருக்கும்! நீ என்ன சொல்லி அவனுக பேசறானுகன்னு எனக்குத் தெரியாது! என்ன சொல்லி அதை நிறுத்துவாய் என்பதும் தெரியாது!
இனி நீயோ, அவனுகளோ எப்போதாவது என் கண்ணில் பட்டால் நரகம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வாய்!"

தேங்க் யூ மேம்! 

அவள் கண் மறையும்வரை மொத்த வகுப்பும் உறைந்து கிடந்தது! 

அதன்பிறகு மூன்று மாதமும் ஒரு முணுமுணுப்பும் அவள் காதில் விழவில்லை! ராஜாராமன் அவள் கண்ணிலேயே படவில்லை!

கல்லூரி முடிந்து வீடுபோன மறுநாள் கோடி வீட்டுக் குமார் உரிமையோடு வீட்டுக்குள் வந்தான்! M.Com முடித்து சென்னை செகரட்ரியேட்டில் வேலையில் இருப்பவன்!

"வாங்க மாப்பிள்ளை!" அப்பா வரவேற்க, ஆச்சர்யமாய்த் திரும்பியவளை குமார் இடைமறித்தான்! "என்னைக் கட்டிக்க சம்மதமா சுமா?"

"அப்பா!" என்று ஏதோ ஆரம்பித்தவளுக்கும், அவனிடமிருந்தே பதில்! 
"ராஜாராமனை நான் மறந்தாச்சு! நீயும் சீக்கிரம் மற!"
"ஆனா.."
பக்கத்தில் வந்தவன் மெதுவாகச் சொன்னான் - "மகாபலிபுரம் ஒரு விபத்து! அதையும்!"
கண்ணகலப் பார்த்தவள் அப்படிப் பதினெட்டு வருடம் பார்த்துக்கொண்டே இருக்க நேர்ந்தது!

எதிர்பார்த்தபடியே அவள் கல்லூரியில் முதல் மாணவியாகத் தேறியதையும் குமார்தான் பார்த்துச் சொன்னாள்!

கல்யாணத்துக்கு கூடப்படித்த யாரையும் கூப்பிட மறுத்துவிட்டாள்!

கல்யாணம் முடிந்து கிடைத்த முதல் தனிமையில் கேட்டாள் "உங்களுக்கு காதல் ஏதாவது?"

"இந்த முகரைக்கட்டையை எவளும் லவ் பண்ணலையே சுமா!"
உண்மையில் அவன் ராஜாராமனைவிட அழகு!

முதல் வருடமே பிறந்த ரமேஷ் ஒரே பிள்ளை!
வேலைக்குப் போகாமல் பிள்ளை, கணவன்
என்று அன்பில் ஊறிய வருடங்கள்!
சொந்த வீடு, கார் என்ற மிதமான, தேவைக்கேற்ற வசதி! 
பேங்க் பேலன்ஸ்!

குமார் மரணத்துக்குப்பின் கருணை அடிப்படையில் கிடைத்த அதே வேலைக்கு ரமேஷ்தான் வற்புறுத்தி அனுப்பினான்!

போம்மா, உனக்கும் ஒரு சேஞ்சாக இருக்கும்!

ஆஃபீஸிலும் குமாரின் ஆளுமை, எல்லோரும் அவளுக்குக் காட்டிய மரியாதை கலந்த அன்பில் புரிந்தது!

குமார் இல்லை என்ற குறை மட்டும் இல்லாவிட்டால், தேவதை வாழ்க்கை!

இதோ! எட்டு வருடம் ஓடிவிட்டது! படிப்பில் புலி மகன்!
தோழனைப் போல அம்மாவுடன் நெருக்கம்! எந்த ஒளிவு மறைவும் அவர்களுக்குள் இல்லாத அளவு நட்பு!

ஒரே ஸ்ட்ரோக்கில் எம் எஸ் முடித்து வெளியே வந்தவன் இதோ, ஒரு பெண்
புகைப்படமும், முகம் நிறைந்த எதிர்பார்ப்புமாக பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான்!

கண்ணாடியை மாட்டிக்கொண்டு ஃபோட்டோவை வாங்கிப் பார்த்தவள் மென்மையாகக் கேட்டாள்!
"யாருப்பா இது?"

"என் ஜூனியர்ம்மா! பேரு உஷா!"

ஃபோட்டோவில் ஒரு வசீகரமான அழகி!
ஆனால், எங்கேயோ பார்த்த, யாரையோ நியாபகப்படுத்தும் முகம்!

நெற்றி சுருங்க யோசித்தவளுக்குப் பொறி தட்டியது!

"இவ அப்பா பேரு என்னப்பா?"

"ராஜாராமன்ம்மா! "

"ப்ராட்வேல இரும்புக்கடை வச்சிருக்கார்!"

உடம்பிலிருந்த ரத்தமெல்லாம் சுண்டிப்போனமாதிரி இருந்தது! 

இதென்ன இத்தனை வருடத்துக்குப்பிறகு இப்படி ஒரு சோதனை!

தடுமாறி எழுந்தவள் மெதுவாகச் சொன்னாள்!

"அம்மாவுக்கு ஒருநாள் டைம் கொடுப்பா!"

ராத்திரி முழுக்கப் பொட்டு தூக்கம் இல்லை! 
இத்தனை வருடத்துக்குப்பிறகு இது என்ன சோதனை!

ராஜாராமன் என்னை மறந்திருந்தால் பரவாயில்லை! 
இல்லாவிட்டால்? 

இந்த நிலையில் என்கூட இல்லாமல் என்னை இந்த இக்கட்டில் தனியே தவிக்கவிட்டுட்டுப் போய்ட்டாரே!

இருபத்தைந்து வருடத்தில் குமார் மேல் முதல்முறையாய்க் கோபம் வந்தது!

காலையில் எழுந்து ஹாலுக்கு வந்தால், பேப்பர் படிக்கும் பாவனையில் ரமேஷ்!

கிட்ட வந்து அவன் தலை கோதியவள் கேட்டாள் - "அம்மாவுக்கு அந்தப் பொண்ணைப் பிடிக்கலைன்னா என்ன செய்வாய் ரமேஷ்?"

அவளையே உரித்துவைத்திருந்த ரமேஷ் முகத்தில் ஏமாற்றம் ஒரு நொடி கருமை பூசியது!

சுதாரித்தவன், "உனக்குப் பிடிக்கலைன்னா வேண்டாம்மா!"

சுருக்கென்று கேட்டாள் "அந்தப் பொண்ணு ஏமாந்தாப் பரவால்லையா?"

"இல்லம்மா, நீங்க ஓகே சொன்னால்தான் எனக்கும் ஓகேன்னு முதலிலேயே சொல்லிட்டேன்!"

"ஓ! ப்ரபோசல் அங்கிருந்து வந்ததா?"

"அப்ப ஃபோன் பண்ணி, ... எப்போ பொண்ணு கேட்டு வரலாம்ன்னு கேளு!"

அப்படியே அவளை அலாக்காகத் தூக்கி சுற்றியவன், இறக்கிவிட்டு, கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்தான்!

"தேங்க் யூம்மா!" 
பட்டென்று ஒன்று வைத்தாள்- "போடா கிறுக்கா! அம்மாவுக்கு யாராவது தேக்ஸ் சொல்வாங்களா?"

இந்த முறையும் ஒரு வெள்ளிக்கிழமை! 

வாசலில் ராஜாராமன்!
ஆனால் கை கூப்பி வணக்கம் சொல்லி!

தொந்தியும் தொப்பையுமாக வழுக்கை விழுந்து ஆளே மாறிப்போன ராஜாராமன்!
பக்கத்தில் நகைக்கடை ஸ்டாண்ட் மாதிரி மனைவி!

பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிட்டது! 
அங்கு எல்லாமே அவன் மனைவிதான்! மாமனார் காசில் சுகவாழ்க்கை வாழும் ராஜாராமன்!

நெற்றி சுருங்க யோசித்துக்கொண்டே இருந்தவன் மெதுவாகக் கேட்டான்!
"நீங்க?"
"மிஸ்ஸெஸ் குமார்! சுமதி குமார்! உங்க மகளைப் பெண் கேட்டு வந்திருக்கிறேன் மிஸ்டர் ராஜாராமன்!"
தோரணையில் அயர்ந்து விதிர்த்தான் ராஜாராமன்!

அதன்பிறகு எல்லாம் அதிவேகத்தில் நடந்தது!

கல்யாணம், சாந்தி முகூர்த்தம் எல்லாம் முடிந்து மறுவீடு அழைக்க வந்திருக்கிறார்கள்!

மனைவி உள்ளே பெண்ணுக்கு எல்லாம் எடுத்து வைக்கையில் அரிதாகக் கிடைத்த தனிமையில்,
வெற்றிப் புன்னகையோடு கேட்டான் ராஜாராமன்! 

"என்னவோ சவால் விட்டே? கடைசியில பொண்ணு கேட்டு நீதான் என்னைத் தேடி வந்தே பார்த்தியா?"
"அதுவும் முண்டச்சியா!"

தீப் பட்டதுபோல் நிமிர்ந்தாள் சுமதி!

இன்னும் இவன் மாறவே இல்லை!

இனி மறைத்துப் பிரயோஜனம் இல்லை!

"ராஜாராமன், மஹாபலிபுரம் நியாபகம்
இருக்கிறதா?
ரமேஷ் உங்கள் பிள்ளை!"
"அவனுக்கும் பிடிவாதம் அதிகம்! உங்களைப்போல!"

"என்னால் இந்தக் கல்யாணத்தை என்ன சொல்லியும் நிறுத்தமுடியவில்லை!"

தடுமாறி சோபாவில் விழுந்தான் ராஜாராமன்!
முகம் பேயறைந்தாற்போல் கறுத்துப்போனது - 
"பொய் சொல்லாதே சுமதி!"

"ஒரு தாய்தான் தன் குழந்தைக்குத் தகப்பனை அறிமுகம் செய்யமுடியும்! எனக்குத் தெரியாதா?"

"அவங்க ரெண்டு பேரையும் ஜோடியாகப் பார்க்கையில் இந்த முறையற்ற உறவு என் நெஞ்சை அறுத்துக்கிட்டே இருந்தது!"

"யார் கிட்டயும் சொல்லமுடியாத இந்த பாரத்தை இப்போ உங்க தோள்ல இறக்கிவெச்சுட்டேன்!"

கதி கலங்கி வாயடைத்து உட்கார்ந்திருந்தான் ராஜாராமன்!

கண்ணீரைத் துடைத்தபடி வேகமாக உள்ளே போனாள் சுமதி!

"என்னை மன்னிச்சுடுங்க குமார்! 
நீங்க கண்டிப்பா புரிஞ்சுப்பீங்க!
இன்னுமே ஆணவம் தெளியாத அவனை ஆயுளுக்கும் தண்டிக்க, உங்க ரத்தத்தை அவன் பிள்ளைன்னு பொய் சொல்லிட்டேன்!"

"இந்த முள் மகள் முகத்தைக் கூடப் பார்க்க விடாமல் அவனை ஆயுளுக்கும் உறுத்தும்!"

நிம்மதியான ஒரு புன்னகையோடு மருமகளைத் தேடி உள்ளே விரைந்தாள் சுமதி!

பாஸ்கர் என்கின்ற ராஸ்கல்!


லலிதா லெட்டர் எழுதி வெச்சுட்டுப் போய்ட்டாடா!
வார ஆரம்பத்துல அட்டெண்ட் பண்ணுன முதல் ஃபோனே இந்த லட்சணத்துல இருந்தா எப்படி விளங்கும்!

இல்லாத பாட்டியைக் கொன்னு லீவ் சொல்லிட்டு ஹேங் ஓவர் தீராம கவுந்தடிச்சு படுத்திட்டிருக்கும்போது

"என்ன தலைவலிடாஇனி இந்தக் கெரகம் புடிச்ச சனியனைக் கைலேயே தொடக்கூடாதுடா சாமி!”

அட்டக்கத்தில வர்ற சாவு மோளம் சத்தம் கேட்டுச்சு.

எவன் ஃபோன்டா இது?”

ரெண்டு முழு ரிங் போனதும்தான் உறைச்சுது!

எல்லா நாயும் பையத் தூக்கிக்கிட்டு வேலைக்குப் போய்டுச்சு!

அப்போஎன் ஃபோன் ரிங் டோனைத்தான்  ராத்திரி கூட உட்கார்ந்து தண்ணியடிச்ச ஏதோ ஒரு நாதாரி மாத்தித் தொலைச்சிருக்கு!

மறுபடியும் சாவு மேளம்!

மேனேஜர் சனியனாத்தான் இருக்கும்! - எடுக்காம விடாது!

போர்வைக்குள்ள இருந்து கையைமட்டும் வெளியே நீட்டி எடுத்துப் பார்த்தா பாஸ்கரன்!

விடிகாலைல பத்து மணிக்கு இவன் ஏண்டா கூப்பிடுறான்னு,

என்னடா மாப்ள,”

லலிதா லெட்டர் எழுதி வெச்சுட்டுப் போய்ட்டாடா!”

எவடா அவ!”

டேய்என் பொண்டாட்டிடா!”

சாரி மச்சி மப்புல கேட்டுட்டேன்!
என்னாச்சுடா!”

பாழாப்போன என் எம்டியால வந்த வினைடா!”

அடப்பாவிஅந்த ஆள்கூடவா ஓடிப் போய்ட்டா! ஒரு ஃப்ளோல கேட்டுத் தொலைச்சிட்டேன்!!

நல்லவேளை அவன் கண்டுக்கல!

உடனே வீட்டுக்கு வாடா!”

பத்து நிமிசத்துல வரேன் மச்சி!

நீ என்ன பண்றேஒரு டஜன் முட்டை மட்டும் வாங்கி வெச்சுடு

நெப்போலியனுக்கு என்ன இருந்தாலும் 
சைட் டிஷ் ஆப்பாயில்தான் செட் ஆவும்!

நான் சரக்கும்நாயர் கடை பிரியாணியும் வாங்கிக்கிட்டு வந்துடறேன்!
பேசுவோம்!”

டாஸ்மாக்ல ஜன்னல் வழியா தேசசேவை செஞ்சுக்கிட்டிருந்த பாவாடைசாமி வீட்டு மாப்பிளையைக் கேக்கற மாதிரி கேட்கறான்!

ஏன் சார் நேத்து வரல?”

இதுக்குத்தான் ஒரே கடைல சரக்கு வாங்கித் தொலைக்கக் கூடாது!

ரெண்டு ஃபுல்லும் அரை டஜன் பீரும் வாங்கிக்கிட்டு அடுத்த ஸ்டாப் நாயர் கடை!

ரெண்டு பிரியாணிநாலு மீன் வறுவல்ரெண்டு பெப்பர் சிக்கன்!”

இத்தனை ஆர்டருக்கும் நாயர் ஏண்டா மூஞ்ச சுளிக்கிறான்னு பார்த்தா, பல் தேய்க்க மறந்து தொலைச்சிருக்கிறேன்!

நடு ஜாமம் வரைக்கும் அடிச்ச சரக்கு
சிகரெட்,  அது தீர்ந்து அவசரத்துக்கு வாட்ச் மேன் கிட்ட வாங்கி அடிச்ச பீடி!

நாத்தம் குடலைப் பிடுங்குது எனக்கே
பாவம் நாயர்!

அவசரமா வீட்டு வாசல்ல வண்டிய நிறுத்திட்டு உள்ள போனா ஆஃப் பாயில் போட்டுக்கிட்டிருக்கான்!

நண்பேன்டா!

பாட்டில்பொட்டலம் எல்லாம் வெச்சுட்டு பல் தேய்க்கலாம்ன்னு பாத்தா
வாடாசரக்கடிச்சா நாறத்தானே போகுது!”

அதுவும் சரிதானே!

தீர்த்தவாரி ஆரம்பித்து நாலு ரவுண்ட் போனதுக்கப்புறம் மெதுவாக் கேட்டேன்

என்னடா ஆச்சு?”

சரக்கடிச்ச நாதாரி கிட்ட கேட்கக்கூடாத கேள்வி!

ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டான்!

சொல்லிட்டு அழுடா நாயே!”

லலிதா எழுதிவெச்ச லெட்டர்ன்னு ஒன்னைக் காண்பிச்சான்!

தூ!
ஒரே எழுத்து!

அன்னம்மா கதையை மொத்தமாக் கோர்வையா சொல்லி முடிச்சதும் கேட்டேன் – எங்கே அவ போட்டோ காட்டு?”

பாஸ்கர் தடுமாறியது தப்பே இல்லை!

நானா இருந்தா ஃபிளைட் பின்னாடியே ஓடியிருப்பேன்!

சரி விடு மாப்ளஎல்லாம் பேசிக்கலாம்எங்க போகப்போறா!” -

சொல்லச் சொல்ல காலிங் பெல் அடிச்சது!

மணி கூட அடிக்குது பாரு!”

மூடுஎவனோ வந்திருக்கறான் போய்ப் பாரு!”

கதவைத் திறந்தாஆறடி உயரத்துக்கு கடோத்கஜன் மாதிரி பாஸ்கர்  மாமனார்!

சரக்குபிரியாணிமுழு மப்புல பாஸ்கர்!
மொத்த சூழ்நிலையும் சதி பண்ணுது!

ஏன்தம்பிஇதுதான் உங்க பிரண்ட்ஷிப்பாபொண்டாட்டி போனதே நல்லதுன்னு குடியும் கூத்தும்!

என்ன மனுஷன்டா நீ?”

அந்த சூழ்நிலைல தரைல உட்கார்ந்திருந்த பாஸ்கர் திருவாய் மலர்ந்த வார்த்தை – 
அவ வரலையா

யாரு?

அனு!

தூ!

என் மூஞ்சில ஏன் துப்பிட்டுப் போனார்ன்னு எனக்கு இன்னுமே புரியல!

ஸ்பஷ்டமா அழ ஆரம்பிச்சுது மூதேவி!

ஆமாம் இப்போ அழு!”

அடுத்த நாலு நாள் ஆயுசுக்கும் தேவையான அசிங்கப்பட்டேன்!

மொத நாள் கதவை என் மூஞ்சியில அடிச்சு சாத்திய லலிதா அடுத்த நாள்தான் கொஞ்சம் மனசு இளகி அரைக்கதவைத் திறந்தாள்!

அவளைக்கூட சமாளிச்சிடலாம்!

அந்த வேதவள்ளித் தாயார்அவங்க ஆத்தா!

சாமிசத்தியமா முடியல!

சுப்ரீம் கோர்ட் வக்கீல் எல்லாம் பிச்சையெடுக்கணும்!

எத்தனை கேள்வி!

யப்பா!
பாஸ்கர் வம்சத்தை திட்டித் தீர்த்தது பத்தாதுன்னு என்  முப்பாட்டன் வரைக்கும் திட்டிகடைசியில முக்கியமான மாமூல் கேள்வி!

தம்பிஉங்க தங்கச்சிக்கு இந்த நிலை வந்திருந்தா என்ன பண்ணுவீங்க?”

என் தங்கச்சிய இந்தமாதிரி நாதாரிக்கு ஏன் கொடுக்கப்போறேன்!” -  வாய் வரைக்கும் வந்துடுச்சு!

என் குல தெய்வம்அவங்க அப்பன் ஆத்தா அப்பத்தா மேல சத்தியம் பண்ணிரெண்டுநாள் வாசல்ல தேவுடு காத்ததுக்கு அப்புறம் லலிதா ஒருவழியாய் பேச்சுவார்த்தைக்கு ஒத்துவரும்போது 
சுப்ரீம் கோர்ட் வக்கீல் போட்டது அடுத்த குண்டு!

இந்த ரெண்டு தறுதலைகளை நம்பாதீங்கஅந்தப் பொம்பளைக்கு போன் போட்டுக் கேட்டுருவோம்!” -  இது மாமியார் திருவாய் மொழி!

 யாருக்கு? - அன்னம்மாவுக்கு!

இந்த ஐடியா எனக்கே வயத்தைக் கலக்குது!

பாஸ்கர் மூஞ்சிய பாக்க சகிக்கலை!

ஐயோ அப்படி ஏதாவது பண்ணித்தொலைச்சிராதீங்கஅவங்க என் பாஸுக்கு சொல்லிட்டா வேலை போய்டும்!”

ஆமாம்பெரிய ரிசர்வ் பேங்க் கவர்னர் வேலைஇந்தப் பொம்பளை பொறுக்கி வேலைக்கு ரெண்டு மாடு மேய்ச்சுப் பொழைச்சுக்கலாம்!

நான் லலிதாவையும் அந்தம்மாவையும் பார்த்த பார்வை நல்லவேளை யாருக்கும் புரியல!

என்ன கதறியும், “அன்னம்மாவுக்கு ஃபோன் போட்டால்தான் ஆச்சு!”

வேற வழி?

அதுவும் ஸ்பீக்கர் போட்டுத்தான் பேசணும்ன்னு கண்டிஷன்!

 சரிநடப்பது நாராயணன் செயல்!

ஃபோன் கனெக்ட் ஆனதும் அந்தப்பக்கம்,

தேங்க்ஸ் பாஸ்கர்பார்சல் கெடைச்சுது”!

இத்தன அக்கப்போரிலும் தறுதலை அதை மறக்காமல் செய்திருக்கிறது!

அதற்கப்புறம் நடந்த கொடுமையை எப்படி என் வாயால் சொல்ல!

 யாம் ரமேஷ்பாஸ்கர்ஸ் ப்ரெண்ட்!” அப்படின்னு என் ஒன்றரையணா இங்கிலீஷ்ல தடுமாறித் தடுமாறி பேசுன ஒவ்வொரு வார்த்தைக்கும் அம்மாவுக்குத் தமிழ் மொழிபெயர்ப்பு லலிதா!

விஷயம் ஒருவழியாய் புரிஞ்சு அன்னம்மா,

நானா ஆளையா!” ன்னு சொல்லி நிறுத்தாம சிரிச்ச சிரிப்புக்கு 

பத்துப்பைசா ரோஷம் இருந்தாலும் தும்பைப்பூவுல தூக்குப்போட்டு செத்திருப்பான் யாராயிருந்தாலும்!

பாஸ்கருக்குத்தான் அது ஒண்ணுமே கிடையாதே!

ஆடு மாதிரி லலிதா மூஞ்சியைப் பார்த்துக்கிட்டே நிக்குது சனி!

ஒருவழியா சிரிச்சு ஓய்ந்து அன்னம்மா சொன்னதை லலிதா எப்படி அவங்க அம்மாவுக்கு மொழிபெயர்ப்பான்னு புரியலை!

அத்த்த்த்தனை கெட்ட வார்த்தை ஒரே வாக்கியத்துல!

இந்த அசிங்கத்தை நான் ரிப்போர்ட் பண்ணப் போறதில்லைன்னு அன்னம்மா சொன்னதும்தான் கள்ளப் பயலுக்கு மூச்சு வந்தது!

அப்பத்தான் அது நடந்தது!

வேலை போகப்போறதில்லைன்ன உடனே பாஸ்கர் மூஞ்சியே மாறிடுச்சு!


விடுடா இவகிட்ட இப்படிப் பேசுனா வேலைக்காகாது!”

சொல்லிக்கிட்டே அவ பக்கத்தில வேகமாப் போனான்!

எனக்கு ஸ்வாதிராம் குமார்நுங்கம்பாக்கம் எல்லாம் நியாபகம் வந்து அடிவயிறு கலங்கிடுச்சு!

ஆனா நம்ப ஆளு அதுக்கெல்லாம் வொர்த்தே இல்லைங்க!

கொஞ்சம்கூடயோசிக்காம லலிதா காலடியில சாஷ்டாங்கமா விழுந்துடுச்சு தண்டம் கோதண்டம்!

அப்பவும் அம்மணிக்கு பொள்ளாச்சி கெத்து!

இந்தாள் கூட நான் போறேன்!
ஒரே வீட்டில் இருப்பேனோ ஒழிய என்னைத் தொட்டான்மறு நிமிஷம் கெளம்பி வந்துடுவேன்!”

அதுக்கே வாயெல்லாம் பல்லாக இளிக்குது நம்ம ஹீரோ!

கல்யாணமே பண்ணிக்கக்கூடாதுடா சாமிஅதுவும் இந்தக் கோயமுத்தூர் பொள்ளாச்சி பணக்காரன் வீடு சாவகாசமே ஆகாது! 

ஏதாவது அப்பன் ஆத்தா இல்லாத அனாதைதான் நமக்கெல்லாம் லாயக்கு!

எண்ணி ஒருவாரம் கழிச்சு ப்ரூக் ஃபீல்டுக்கு சினிமாவுக்குப் போனாரெண்டும் மெய் மறந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கிட்டு ஈஷிக்கிட்டு 
நிக்கிதுங்க!

ஒரே ஐஸ்க்ரீம்ஒரே  ஸ்பூன் வேற!அப்பவும் லலிதாதான் கேட்டா, “அண்ணா ஐஸ்க்ரீம் சாப்பிடறீங்களா!”

வேண்டாம் தாயி!

ஏன்மாசக் கடைசியா மாப்ளஇன்னொரு ஐஸ்க்ரீம் வாங்கக் காசில்லையா!”

உனக்கென்னடா தெரியும் தாம்பத்ய அன்னியோன்யம் பத்தி!”

சாமிஇந்தக் கெரகமெல்லாம் எனக்குத் தெரியவே வேண்டாம்டா” ன்னு கையெடுத்துக் கும்பிட்டுட்டு வந்துட்டேன்!
அடுத்தமாசம் ஆபீஸ் வேலையா சென்னை போய்ட்டு வந்து இறங்கினா - 
ஏர்போர்ட்ல பாஸ்கர்!

வாயெல்லாம் பல்லா இளிச்சுக்கிட்டு, க்ரீம் போட்டுப் படிய வாரிய தலைக்ரீம் கலர் கோட்டோட தெலுங்குப்பட ஹீரோ மாதிரி பளபளன்னு நிக்குது!

என்னடாஇன்னைக்கு யாரு?”

ஒண்ணும் இல்லடான்னு பதுங்கினவன் போனைப் பிடுங்கிப் பார்த்தா,  ஐஸ்வர்யா ராய் தங்கச்சி மாதிரி ஒரு ப்ரொபைல்!

யாருடா இது?

பசந்தி மல்ஹோத்ரா!

ஹைதராபாத் பிளைட்ல வருதாம்!

பசந்தியா அதுபாஸந்தி
சரியான கல்கத்தா ரசகுல்லா!

நம்ம ஆள் மொகரைல அத்தனை அசடு வழிய நயன்தாராவைக் கண்ட ஆர்யா மாதிரி ஈஈன்னு ஒரு எக்ஸ்ப்ரசன்!

ம்ஹூம்சில ஜென்மங்கள் எல்லாம் சாகுறவரைக்கும் திருந்தாது!

ஓகே!

திங்கட்கிழமைக்கும் சேர்த்து இன்னைக்கே சரக்கு 
வாங்கிவைக்க வேண்டியதுதான்!