ஏறத்தாழ முப்பது வருடங்களுக்குமேல் ரஜினி உங்களுக்காக பல ப்ளாக் பஸ்டர்களை நடித்துக் கொடுத்துவிட்டார்!
நீங்களும் உங்கள் பங்குக்கு அவரைக் கொண்டாடித் தீர்த்துவிட்டீர்கள்!
உலகத்திலேயே, கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் ஒரு பண்டாரம், பரதேசி போல் பொது நிகழ்ச்சிகளில் தலை காட்டும் வேறு நடிகன் யாருமே இருக்க மாட்டான்!
அதேபோல், அதை மறந்து திரையில் ஒரு நடிகனை இவ்வளவு ரசித்த ரசிகர்களும் வேறு எங்கும் இருக்கமாட்டார்கள்!
உங்களுக்கு ரஜினியின் நல்ல படம் என்றால் சிவாஜி, எந்திரன் என்று பல படங்கள் மனதில் தோன்றியிருக்கும்!
மகிழ்ச்சி!
ஆனால் என்போல் சில ஸ்லீப்பர் செல் ரசிகர்களும் அவருக்கு உண்டு!
எங்கள் நல்ல படப் பட்டியலில், முள்ளும் மலரும், ஜானி, எங்கேயோ கேட்ட குரல், புவனா ஒரு கேள்விக்குறி, முக்கியமாக நெற்றிக்கண், புதுக்கவிதை என்று நீங்கள் அரை மனதோடு நிராகரித்த படங்கள் முதலிடத்தில்!
ஆனாலும் எங்களை ரஜினி முற்றாக மறக்கவில்லை என்பதற்கு, தளபதி, மூன்று முகம் அலெக்ஸ், நல்லவனுக்கு நல்லவன் (ஒரு பாதி!) படங்களும்,
வேட்டையன், சிட்டி, எம்ஜி ரவிச்சந்திரன் என உங்கள் படங்களிலும்,
ஆங்காங்கு கொஞ்சம் சிறு தீனி மட்டும் கொடுத்து உயிர்ப்போடு வைத்திருக்கிறார்!
நாங்களும் ரஜினிக்கு வயதாகட்டும் என்று அமிதாப் போன்றோரைப் பார்த்து பெருமூச்சும் பொறுமையுமாகக் காத்திருக்கிறோம்!
ஒரு வழியாக கேஎஸ் ரவிக்குமார், சங்கர் எல்லோரையும் விட்டு புது இயக்குனருக்கு ஒரு படம் செய்கிறார் என்று அறிந்து கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தோம்!
கபாலி ஃபர்ஸ்ட் லுக் வந்தபோது, ஒரு முழு சாப்பாட்டுக்கு பல வருடங்களுக்குப்பிறகு தயாரானோம்!
ராதிகா ஆப்தே உட்பட காஸ்ட்டிங்கும் எங்கள் எதிர்பார்ப்புக்குத் தீனிபோட,
சூப்பர்ஸ்டாரை மறந்து எங்கள் ரஜினியைக் கொண்டாடத் தயாரானோம்!
இப்போது, படம் வந்தபின், உங்கள் ஏமாற்றமும், மற்ற நடிகர்களின் ரசிகர்களின் வயிற்றெரிச்சலும் எங்கள் எதிர்பார்ப்பு பலித்துவிட்டதைச் சொல்கின்றன!
மேலும் இது சங்கர் படம் போலில்லை என்ற உற்சாகச் செய்தி வேறு!
ரஜினி என்ற நல்ல நடிகனை இனி எங்களுக்கு விட்டுவிடுங்கள்!
உங்களுக்காக சங்கர் ஏற்கனவே மசாலா அரைத்துக்கொண்டிருக்கிறார்!
அதைக் கொண்டாடுங்கள்!
இதை எங்களுக்கு விட்டுவிடுங்கள்!
உங்கள் நெகட்டிவ் ரீயாக்ஷன் மறுபடி அவரை கே எஸ் ரவிக்குமாரை நோக்கித் துரத்திவிடக்கூடும்!
இனியாவது அவருக்குள்ளிருக்கும் "நல்ல" நடிகன் நல்ல இயக்குனருடன் சேர உதவுங்கள்! ப்ளீஸ்!
- இது ரஜினி படங்களை மட்டுமே தவறாமல் பார்த்து ஒவ்வொருமுறையும் ஏமாறும் ஒரு பழைய ரசிகனின் வேண்டுகோள்!
பி கு:
நான் இன்னும் கபாலி பார்க்கவில்லை! உங்கள் ஆரவாரங்கள் ஓய்ந்தபின் குடும்பத்தோடு போய் ரசித்துவரத் திட்டம்!
- இம்முறையாவது திருப்தியோடு!!
No comments:
Post a comment