வெள்ளி, 29 ஜூலை, 2016

அமராவதியா சரவணபவனா?ஒரு ரஜினி படத்தைப்பற்றிச் சொல்லும்போது வேறு ஒருவர் பெயர் முதலில் நியாபகம் வருவது,

மகிழ்ச்சி!!

தன்ஷிகா!

என்ன ஒரு இயல்பான முகபாவங்களும் உடல்மொழியும் அந்தப் பெண்ணுக்கு! தந்தையிடம் பேசும்போது அவருடைய கண்களில் அன்பு வழிகிறது! மற்ற சமயங்களில் வெகு அலட்சிய தோரணை!

பார்வதி, காக்காமுட்டை ஐஸ்வர்யா போல இவர் திறமையும் கண்டுகொள்ளாது கடக்கப்படும் என்பது தமிழ் சினிமாவின் அபத்த விதி!ரஜினி, ராதிகா ஆப்தே, கிஷோர், ஜான் விஜய் இவர்களை மீறி ஸ்கோர் செய்யும் இன்னொருவர் - தினேஷ்!

கொஞ்சம் தடுமாறினாலும் நகைப்புக்குரியதாக மாறிவிடும் பாத்திரம்!

வெகு இயல்பாய்ச் செய்திருக்கிறார்!

படத்தின் வெகு நெகிழ்வும் நேர்த்தியும்- மாய நதி பாடலின் முன்பான காட்சிகளும், அதைத் தொடர்ந்துவரும் சண்டைக் காட்சியும்!

ரஜினியும் ராதிகா ஆப்தேவும் கொஞ்சநேரம் வாழ்ந்திருக்கிறார்கள்!
அதிலும் கணவரோடு நடக்கையில் ராதிகா ஆப்தேவின் மிடுக்கு! இந்தியத் திரை உலகம் அவரைக் கொண்டாடுவதில் தவறே இல்லை!

உதடு நடுங்க. கண் கலங்க ரஜினியை அணைத்துக்கொள்ளும் காட்சியும். ரஜினியின் பதில்வினையும் ஒரு ஐந்து நிமிடக் கவிதை!இன்னொரு ஹீரோ - ச நாவின் பின்னணி இசை!

ஸ்கோர் பண்ணக் கிடைத்த எந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை! க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்குக் கொஞ்சம் நம்பகம் சேர்ப்பதே நெருப்புடாதான்!

ஜான் விஜய் அலட்டலில்லாப் பொருத்தம்! 

ரித்விகா படத்தில் இன்னொரு பூச்செண்டு!

சரி, ரஜினி?

ஆரம்பக் காட்சியிலிருந்து கடைசிவரை அழுத்தமான அண்டர்ப்ளே! ரஜினி என்ற நடிகனின் மீள்வரவு இந்தப்படம்!

பாசம், தன்னம்பிக்கை, கோபம், நெகிழ்ச்சி என எல்லாமே சற்றும் மிகையில்லாமல்!

அதுவும் நெகிழ்ச்சியும் பெருமிதமுமாக மகளைப் பார்க்கும் ஒரு காட்சி போதும் நூற்றி இருபது ரூபாய்க்கும்!

பெரு மகிழ்ச்சி!

ஆனால் அடுத்த சங்கர் படத்தில் ஹீரோயினைக் கடித்த கொசுவோடு மொக்கையாகக் காமெடி என்ற பெயரில் எரிச்சல் கிளப்பப்போகிறார் என்பதுதான் ...

கதை!?

வித்தியாசமான களத்தில் ஒரு டான் கதை!

சின்னச் சின்னக் காட்சிகளிலும் ஒருவரி வசனத்திலும் கதையை வேகமாக நகர்த்தும் உத்தி நிச்சயம் தமிழுக்குப் புதிது!

பறவையைப் பறக்கவிடு, உன் கருணை அதற்கு சாவைவிடக் கொடுமையானது எனப் போகிறபோக்கில் ஒரு அற்புதமான வசனத்தைத் தெளித்துவிட்டுப் போகும்போதே நிமிர்ந்து உட்காரவைக்கிறது வசனம்!

டான் மனைவி என்ற பெருமிதத்தில், கணவனுக்கு கோட் மாட்டிவிட்டு ராதிகா பேசும் வசனம் படு இயல்பு! 

மனைவியை சரி சமமாக இல்லாமல் ஒருபடி மேலாகக் காட்டியிருப்பது வெகு சிறப்பு!

ஆனால் சில இடங்களில் வசனம் கொஞ்சம் வலிந்து திணிக்கப்பட்டதாகவே படுகிறது!
அதற்கான தேவைகள் காட்சிப்படுத்தப்படாத நிலையில் கொஞ்சம் துருத்தித் தெரிவதைத் தவிர்த்திருக்கலாமோ?

மலேசிய விவகாரத்தை இன்னும் கொஞ்சம்  காட்சிப்படுத்தி, சென்னைக் காட்சிகளுக்குக் கத்திரி போட்டிருந்தால் நடுவே தொய்ந்து துவளும் கதை கொஞ்சம்  வேகமாக நகர்ந்திருக்கும்!

படத்தில் பெருங்கொடுமை வில்லன் கோஷ்டி! கதாநாயகனுக்கு ஒரு வடிவம் கொடுப்பதே பவர்ஃபுல் வில்லன்தான்!

இதில் ஒரு பெண்ணை, தினேஷை என ஆட்களைக் கூட்டிவைத்து கெஞ்சிக்கொண்டிருக்கும் சப்பை வில்லன் படத்தின் மிகப்பெரிய மைனஸ்! 

அதைவிடக் கொடுமை, எல்லா டானையும் கூப்பிட்டு விருந்து வைப்பது! 

இது ஜெய்சங்கர் காலத்துப் பழசு! 
ரஞ்சித்துக்கும் வேறு ஐடியா தோன்றாதது வெறுப்பு!

படத்தில் வில்லன்களே இல்லையா?

இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள்!

மெயின் வில்லன் தாணு!
உப வில்லன் ரஞ்சித்!

தேவையில்லாத வியாபார உத்தியில் அளவுக்கு மீறிய ஹைப் கொடுத்து, எப்படிப்பட்ட படமும் மேட்ச் செய்யமுடியாத ஆர்வம் தூண்டியது தாணுவின் வில்லத்தனம்! 
படம் ஓடாதோ என்ற கவலையில், முடிந்தவரை சம்பாதித்துவிடவேண்டும் என்ற அப்பட்டமான வெறி!

இரண்டாவது வில்லன் ரஞ்சித்! 

இது நூறு பாட்ஷா என்று ஆயிரம் பேட்டிகளில் சொன்னவர், டீஸர், ட்ரைலர் எல்லாவற்றிலும் அதே டெம்போவையே தொடர்ந்தார்!

இருந்த ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே காட்டி, ரசிகர்களை ஒரு முழுமையான டான் படத்துக்கு தயார் செய்தது இமாலயத் தவறு!

சிக்கன் பிரியாணி, தலைக்கறி என்று ஆவலோடு அமராவதியில் வந்து உட்கார்ந்த ரசிகனுக்கு, சரவணபவன் சர்க்கரைப் பொங்கலைப் பரிமாறினால் எப்படி இருக்கும்?

சர்க்கரைப் பொங்கல் கேட்பவன் முதல்நாள் படத்துக்கே வரவிடாமல் செய்தது அந்த ட்ரைலர்! 

பதட்டத்தில் செய்த மாபெரும் பிழை!

இப்போது ரஞ்சித்துக்குத் தெளிவு வந்திருக்கும்!

அடுத்து ஒரு படம் ரஜினியை வைத்து முழுமையான விருந்து படைக்கட்டும்!

அது சரவணபவனா, அமராவதியா என்பதை நேர்மையாகச் சொன்னாலே ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்!

தயவுசெய்து ஆடம்பர விளம்பரம் செய்ய வக்கற்ற தயாரிப்பாளரைத் தேர்வு செய்வது நல்லது!

என் நீண்டநாள் விருப்பம்!

ரஜினிக்கு ஜோடியாக மீனம்மா கயல்!
சாரி நந்திதா தாஸ்!

மகிழ்ச்சி!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக