புதன், 27 ஜூலை, 2016

கபாலி- பாடல் பிறந்த கதை!சென்னையில் ஒரு ஏழு நட்சத்திர விடுதியின் எளிமையான சூட் ரூம்!

கலைமகள் வாசம் செய்யும் அறையில் தேநீர் வாசமும் ஆவலின் நேசமும்!

என் எதிரில் அம்பேத்காரின் இளமைப் பதிப்பாக தம்பி ரஞ்சித்- இந்தப் பொன்னையாத் தேவன் புறம் தள்ளிய மகனின் முன் சமமாக உட்கார்ந்திருக்கும் பயமும் தயக்கமுமாக!

"நானொன்றும் வானத்திலிருந்து வந்த தேவதூதனல்ல, சரஸ்வதி தன் தற்போதைய அவதாரமாக என்னைத் தேர்ந்து வியந்துகொண்டிருப்பது தவிர" என்று அவரை அன்பாய் ஆற்றுப்படுத்திவிட்டு, கண்இமை மூடி, ஒரு வார்த்தைக்காக மோனத்தவம் இருக்கிறேன்!

அறையின் இன்னொரு மூலையில் என்னையே பக்தியோடும் பாசத்தோடும் பார்த்துக்கொண்டு எளிமையாக, தாணு!

உண்மையில் அது கலைப்புலி அல்ல என்போல் கவிப்புலிகளின் கலைத்தாகம் தீர்க்கும் ரசிகப்புலி!

என் வாய் உதிர்க்கும் வார்த்தைகளுக்காக அந்த நான்கு காதுகளும் வரிசையில் நிற்பது என் மூடிய இமைகளுக்குள் உருளும் விழிகளுக்குத் தெரிந்தே இருக்கிறது.

எப்போதும் துப்பாக்கியில் தெறிக்கும் தோட்டாவாக வந்து விழும் வார்த்தைகள் அன்று காதலனைக் கண்டு நாணிய நாயகிபோல் உதட்டுவாசல் மீற மறுத்து வெட்கி நிற்கின்றன!

அப்போதே எனக்குப் புரிந்துவிட்டது, வந்து விழப்போவது வார்த்தை அல்ல வரம்!

வைரமும் முத்தும் ஒரு நொடியிலா விளையும்?

அதுவும் என்போன்றதொரு கருப்பு வைரம் தம்பி ரஜினிக்கும், மொழி கடந்த கலையரசி ராதிகா ஆப்தேவுக்கும் காதலும் ஊடலும் பின்னிப்பிணைந்த நேரத்தில் ஆற்றுப்படுத்தும் காதல் பாட்டல்லவா?

இதோ என் கற்பவாசல் திறந்து வந்து விழுகின்றன வார்த்தைக் குழந்தைகள்!

"என்னோடு ஏனடி வம்பே
என் காண்டாமிருகக் கொம்பே!"

வார்த்தைகள் செவி வாசல் நுழைந்ததும் சின்னப் பிள்ளைபோல் துள்ளிக் குதிக்கிறார் தாணு!
தம்பி ரஞ்சித்தோ, தரையில் விழுந்து புரண்டு தொழுகிறார்!

கலைமகள் உம் உருவில் இருக்கிறாள் என்பது பிழை ஐயா! நீர் கலைமகள் உருவில் இருக்கிறீர் என்று தாவி வந்த தாணு தன் கழுத்திருந்த தேர்வடம் போன்ற  சங்கிலியைக் கழற்றி என் மார்பில் வீசுகிறார்!

நானும் எத்தனை பாடல்களை இயற்றியிருக்கிறேன். ஆனால் இந்த சிந்தனை தமிழுக்குப் புதிது!

காண்டாமிருகக் கொம்பு கூடலுக்கு வலு சேர்க்கும் என்கிறது விஞ்ஞானம்!
எப்படி வார்த்தைகள் விஞ்ஞானத்தோடு இசைந்து இச்சை பேசுகின்றன பாருங்கள்!

தன் இச்சை தணிக்க வந்த காண்டாமிருகக் கொம்பு அவள் என்கிறான் காதலன்! அவளோ,

"உன்மேல் எனக்கு ஊறும் அன்பே, அதைப் புரியாத மன்மதன் வீட்டு சொம்பே"
என ஊடுகிறாள்!

வாய் பிளந்து நின்ற தாணு மூச்சு விட சற்றே மறக்க,
வள்ளுவனுக்கும் வராத சிந்தனை ஐயா என்று உருகுகினார் ரஞ்சித்!

அப்போதே இந்தப்பாடல் போட்டியின்றி தேசிய விருது பெறும் என்பது எழுதாத விதியாகிறது!

"என் பற்களின் எண்ணிக்கை முப்பத்திரண்டு,
உன் மேனி தழுவ ஓர் வாயில் 
புடவை வாங்கிக் கட்டு"

அடுத்த வரிக்கு வெடித்துச் சிரித்து என்னைத் தாவி அணைத்தார் தாணு!
ஐயா! நீர் இன்னும் வாலிபக்குறும்பை விடவில்லை! 
உம் இளமைக் காலத்தை அருகிருந்து பார்க்க முடியாதது எம் சாபம் என உருகும் தாணு!
ரஞ்சித்தோ, தயக்கத்தோடு "அந்த ரஜினி அறிமுகப்பாடல் ஐயா!" என தயங்க,
இதோ,

"தமிழ்நாட்டின் தலைமகனே, எம் தனித்துவ விலை மகனே"

இங்கு இன்னொரு கருத்தைப் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்!

பிறகொரு பொன்மாலைப் பொழுதில், அதெப்படி, தலைமகனுக்கு இணையாக விலை மகன் என்று எழுதினீர்கள் என்று ஆச்சர்யக் கணை வீசினார் ரஜினி!

அது உன் விலையில்லாத் தன்மை சொல்லும் வரி! இந்தக் கலைச்சிங்கம் நாடாள வருமா என்ற ரசிகனின் விலை மதிப்புக் கேள்வி அது!

தலையைப் புறந்தள்ளி வெடிச்சிரிப்பு சிரித்து அவர் சொன்ன பதிலை அடுத்த படம் வரும்வரை பகிர்வது நட்புக்கு அழகன்று!

இப்படிப் பாடல் வரிகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுப் பாய்ந்து வந்த வேளை, பையிலிருந்து சிணுங்கியது அலைபேசி!
மறுமுனையில் பரமக்குடியான் என் அன்பு இளவல் கமல்!

"இந்த நாயுடுக்கு எழுதாதா அந்த தேவர் மகன்?" என்று உரிமையோடு ஊடுகிறார்!

"இல்லை, அந்தப் படத்துக்கு இசை..." என்று தயக்கமாய் இழுக்க, "அந்தப் பிழையைத் திருத்திக்கொண்டேன்! உங்கள் கவிப் பங்கின்றி பாஸாகமுடியாத நாயுடு எப்படி சபாஷ் வாங்க?" என்றவர், "வண்டி அனுப்பிவிட்டேன்! இப்போதே அலுவலகம் வாருங்கள்! உங்கள் வழிமீது என் விழி!" என்று இறைஞ்சுவதுபோல் கேட்டார்!

சரி! இந்நேரம் வரை கருத்துக்கு உணவ! இப்போது பசியென்று கத்தும் வயிற்றுக்கு 
எங்கே உணவு?

"எங்கேயடா கவிஞனுக்குப் படையலிட பிரசாதம் என்று அந்தக் கலைப்புலி உரும,
நடுக்கத்தோடு உணவெடுத்து உள்ளே வந்த முதிய பணியாளர் சொன்னார்!
"ஐயா, நான் அப்போதே வந்துவிட்டேன்! கவியும், விளக்கமும் தடைபடக்கூடாதென்றே வாசலில் நின்றேன்!
இந்த ஏழை ரசிகன் ஒன்று சொல்லலாமா? இனியும் இவரை கவிப்பேரரசு என்று சொல்வது அநீதி!
இனி இவர் கவிப்பெருங்கடவுள் என,

இத்தனை நாள் எனக்கிது தோன்றவில்லையே என்று புலம்பிய தாணு, அப்போதே நான் பாட்டெழுதும் அத்தனை தயாரிப்பாளருக்கும் என்னையே அலைபேசியில் சொல்ல அன்போடு ஆணையிட்டார்!

அன்பைத் தட்டும் வழக்கம் வடுகபட்டிக்காரனுக்கு இல்லை!

என் பாடல் கேட்டு வரிசையில் நிற்கும் நூற்றுக்கணக்கான தயாரிப்பு நிறுவனத்துக்கும் அழைத்துச் சொல்ல, அத்தனை பேரும் ஆரவாரத்தோடு ஏற்றுக்கொள்ள, இந்தக் கவிப்பேரரசு, கவிப்பெருங்கடவுளானான் கபாலியால்!

இப்போது புரிகிறதா கபாலியின் இமாலய வெற்றி ரகசியம்?

என் வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்! இனி இந்தப் பிரபஞ்சத்தில் கபாலி போலொரு படம் வரப்போவதில்லை!

இது இந்தக் கவிப்பெருங்கடவுளின் கணிப்பு!சமர்ப்பணம்:

இப்படி ஒரு பேட்டியை இழந்து வாடும் தமிழ் கூறும் நல்லுலகுக்கு!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக