செவ்வாய், 5 ஜூலை, 2016

நெஞ்சில் விதைத்த நெருஞ்சி!அம்மா, நான் இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கட்டுமா? 

ரமேஷ் கேட்டபோது சுமதிக்கு ஒன்றும் பெரிய அதிர்ச்சியெல்லாம் ஏற்படவில்லை! 

பதினேழு வயதில் கல்லூரிக்குள் காலடி எடுத்துவைக்கும்போது தகப்பனை இழந்தவன் ரமேஷ்!

பையன் ஆசைப்பட்ட மெடிக்கல் சீட்! அதுவம் மெரிட்டில், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில்! 
அந்த சந்தோஷத்தோடு, "சுமதி, சாயங்காலம் கேசரி செஞ்சு வை"ன்னு சொல்லிட்டு ஆஃபீஸ் போன குமார் ஆம்புலன்ஸில் வீடு வந்து சேர்ந்தான் பிணமாக!

அலுவலகத்தில் சேரில் உட்கார்ந்தவாக்கில் அவன் கண்ணை மூடியது பக்கத்து சீட்காரருக்கே பத்து நிமிடம் கழித்துத்தான் தெரிந்திருக்கிறது!

அற்புதமான சாவு என்று வருத்தத்தோடு சிலாகித்தது வந்த ஜனம்!

உண்மைதான்! 

ஒரு அற்புதமான மனிதனுக்கு அற்புதமான சாவுதான் வரும்!

சுமதிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இத்தனை சந்தோஷம் நமக்குத் தகுமா என்ற உறுத்தல் பதினெட்டு வருடமாக இருந்துகொண்டுதான் இருந்தது!

இப்படி ஒரு புருஷன் எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை! 

அதுவும் தனக்கு!

ஒரு புயலடித்து ஓய்ந்தபிறகு நடந்தது அவள் திருமணம்! 

M.Com படிக்கும்போது M.Sc படித்து வந்த ராஜாராமனுடன் அப்படி ஒரு வெறித்தனமான காதல்! 

ஆணழகன்! சுமதியும் பேரழகி!

கூட இருந்த தோழிகள் "உங்கள்
இரண்டுபேரையும் பார்க்க கமல், ஶ்ரீதேவி மாதிரி அத்தனை பொருத்தம் சுமா!" என்று பொறாமையும் சந்தோஷமுமாய் ஏற்றிவிட்டதும், கண்டிப்பான அப்பா அம்மாவை விட்டு சென்னை ஹாஸ்டல் வாசம் தந்த சுதந்திரமும் அவளைத் தடுமாறவைத்தது!

ராஜாராமன் பக்கத்தில் வந்தாலே, இளையராஜா பாடலை ஒற்றை வயலினில் வாசிப்பதுபோல் ஒரு வசீகரம்!

இரண்டாம் ஆண்டு முடிய இன்னும் நான்கு மாதங்கள் மட்டும் இருந்த நிலையில், ராஜாராமன் கொஞ்சலும், குழைவுமாக வற்புறுத்தியதிலும், அவன் தலை சாய்த்துக்கெஞ்சிய தோரணையிலும் தன்னை முற்றிலும் இழந்தாள்!

பொங்கலுக்கு ஊருக்குக் கிளம்பியவளை ஒரு இரவு மகாபலிபுரத்தில் ரிசாட்டில் தங்கவைத்தது அவன் இளமையும் அழகும்!

மறுநாள் ஏதும் நடக்காததுபோல் சேலம்வரை காரில் கூட்டிவந்து ஈரோடு பஸ்ஸில் ஏற்றிவிட்டுக் கிளம்பும்போது அவன் கையைப் பிடித்துக்கொண்டு உடைந்துபோனாள்!

"ராஜா, நடந்ததற்கு நானும்தான் பொறுப்பு! அதைவைத்து உன்னைக் கேட்பதாக நினைக்காதே! இனி நீயில்லாத வாழ்க்கை எனக்கில்லை!"
"நான் என் அப்பா அம்மாவிடம் நாளைக்கே பேசிவிடுகிறேன்! கோர்ஸ் முடிந்ததும் ஜூன் மாதமே கல்யாணம் வைத்துக்கொள்ளலாம்! நீயும் உன் வீட்டில் பேசு!"

"தைரியமாகப் போ சுமதி! நீ வரும்போது உனக்கு நல்ல சேதி இருக்கும்!"

பொங்கலுக்கு மறுநாள், 
"அப்பா, நான் என் கூடப் படிக்கிற ராஜாராமனை விரும்பறேன்!"

காதில் விழுந்ததை ஜீரணிக்க ஒரு முழு நிமிடம் ஆனது நரசிம்மனுக்கு!

சுதாரித்து எழுந்து அறைந்ததில் நிலை தடுமாறி விழுந்தாள் சுமதி!

சத்தம் கேட்டு ஓடிவந்த அம்மாவும் விபரம் தெரிந்து தன் பங்குக்கு அறைந்தாள்!

இதை எதிர்பார்த்தே இருந்த சுமதி, "மெட்ராஸுக்கு உன்னை இதுக்குத்தான் அனுப்பினேனா, தங்கச்சி வாழ்க்கை பற்றி நினைத்தாயா?" எல்லாக்கேள்விக்கும் அசரவில்லை!

ராஜாராமன்தான் தன்னவன் என்ற உறுதி! அசையாமல் நின்றாள்!

இரண்டு நாட்கள் ரணகளமும் மயான அமைதியுமாகக் கழிய, வேறு வழியில்லாமல் சுமதியோடு நரசிம்மனும் புறப்பட்டார் ராஜாராமன் பெற்றோரைப் பார்க்க!

மறுநாள் வெள்ளிக்கிழமை நல்லநாள்!

ராஜாராமன் வீட்டுக்குத் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து புறப்படும்போது ஏனோ தடுமாறியது!

ஏதோ தவறென்று சொன்ன உள்ளுணர்வு பொய்க்கவில்லை!

ராஜாராமன் வீட்டு வாசலில் வாழை மரம்! வீட்டு வாசலில் காரை எடுக்கவந்த ராஜாராமன் முகத்தில் சுமதியையும் நரசிம்மனையும் பார்த்ததில் அப்பட்டமான அதிர்ச்சி!

அவசரமாக, ஏறத்தாழ இழுத்துக்கொண்டு தெருமுனைக்குப் போனான்!

"எதுக்குடி வந்தே!"

ஓரளவு உள்ளுணர்வால் எதிர்பார்த்தே வந்த சுமதி உடனே தெளிந்தாள்!

"வீட்ல என்ன விசேஷம் ராஜா?"

"சாயங்காலம் எனக்கு நிச்சயதார்த்தம்!"

யார் கூட என்பது விரயம்! 
"அப்போ நான்?"

"கூப்பிட்டவுடனே வந்து படுத்தவதானடி நீ! இதுமாதிரி எத்தனை பேர் கூடப் போனவளோ!"

அடிக்கத் திமிறிய அப்பாவை மடக்கிக் காரில் திணிப்பதுதான் கஷ்டமான காரியமாக இருந்தது சுமதிக்கு! 

அவன் பெற்றோரைப் பார்த்து நியாயம் கேட்கப் போவதாகச் சொன்ன அப்பாவை உறுதியாய்த் தடுத்தாள்!

"வேண்டாம்ப்பா! நடந்தது தப்புன்னா அதில் எனக்கும் பங்கிருக்குப்பா!"

"காதலே இல்லாதவனோட காதல் கல்யாணம் செய்ய முடியாதுப்பா!"

"தைரியமா ஊருக்குப் போங்க! படிப்பை முடிச்சு ஊருக்கு வர்றேன்!

பயப்படாதீங்கப்பா, இந்த முட்டாளுக்காக உயிரையெல்லாம் விட மாட்டேன்!"

"உன் லைஃப்.." தழுதழுத்த அப்பாவை இடை மறித்தாள்!

"என் சாய்ஸ் தவறுன்னு தெரிஞ்சுடுச்சு!" 

"தாராளமா நீங்க பையனைப் பாருங்க!
ஆனா ஒரே கண்டிசன்! எல்லா உண்மையும் சொல்லி, ஒப்புக்கறவனை முடிவு செய்ங்க!"

தயங்கித் தவித்த அப்பாவை ரயில் ஏற்றி விட்டு வந்து ஹாஸ்டலில் படுத்து நெஞ்சு வெடிக்க அழுது தீர்த்தாள்!அடுத்து வந்த நாட்களில்தான் புரிந்தது, தன் காதலுக்கும் கண்ணீருக்கும் தகுதியே இல்லாதவன் ராஜாராமன் என்பது!

காலேஜில் தன் அத்தனை நண்பர்களிடமும் இவர்கள் பேசியது ஒன்று விடாமல் சொல்லியிருக்கிறான்!

இவள் கடக்கும்போதெல்லாம் அவள் சொல்லும் அதே தொனியில் ராஆஜ்ஜா! என்று இழுப்பார்கள்!
திடமாகத் திரும்பாமல் கடந்துபோவாள்!

ஒருநாள் அதில் ஒருவன் "மஹாபலிபுரம்!" என்று கத்த, 
நிதானமாகத் திரும்பி ராஜாராமன் வகுப்புக்கு நடந்தாள்!
பாடம் சொல்லிக்கொண்டிருந்த பேராசிரியையிடம் "எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்!"
எஸ்?

விருவிருவென உள்ளே போனாள்!

ஆசிரியை பக்கத்தில் ப்ளாட்ஃபாரத்தில் ஏறினாள்!

"ராஜாராமன்! இன்னும் ஒரு வார்த்தை எந்த நாயாவது என்னைப் பார்த்துக் குரைத்தது, நீ இருக்குமிடம் சென்ட்ரல் ஜெயிலாகத்தான் இருக்கும்! நீ என்ன சொல்லி அவனுக பேசறானுகன்னு எனக்குத் தெரியாது! என்ன சொல்லி அதை நிறுத்துவாய் என்பதும் தெரியாது!
இனி நீயோ, அவனுகளோ எப்போதாவது என் கண்ணில் பட்டால் நரகம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வாய்!"

தேங்க் யூ மேம்! 

அவள் கண் மறையும்வரை மொத்த வகுப்பும் உறைந்து கிடந்தது! 

அதன்பிறகு மூன்று மாதமும் ஒரு முணுமுணுப்பும் அவள் காதில் விழவில்லை! ராஜாராமன் அவள் கண்ணிலேயே படவில்லை!

கல்லூரி முடிந்து வீடுபோன மறுநாள் கோடி வீட்டுக் குமார் உரிமையோடு வீட்டுக்குள் வந்தான்! M.Com முடித்து சென்னை செகரட்ரியேட்டில் வேலையில் இருப்பவன்!

"வாங்க மாப்பிள்ளை!" அப்பா வரவேற்க, ஆச்சர்யமாய்த் திரும்பியவளை குமார் இடைமறித்தான்! "என்னைக் கட்டிக்க சம்மதமா சுமா?"

"அப்பா!" என்று ஏதோ ஆரம்பித்தவளுக்கும், அவனிடமிருந்தே பதில்! 
"ராஜாராமனை நான் மறந்தாச்சு! நீயும் சீக்கிரம் மற!"
"ஆனா.."
பக்கத்தில் வந்தவன் மெதுவாகச் சொன்னான் - "மகாபலிபுரம் ஒரு விபத்து! அதையும்!"
கண்ணகலப் பார்த்தவள் அப்படிப் பதினெட்டு வருடம் பார்த்துக்கொண்டே இருக்க நேர்ந்தது!

எதிர்பார்த்தபடியே அவள் கல்லூரியில் முதல் மாணவியாகத் தேறியதையும் குமார்தான் பார்த்துச் சொன்னாள்!

கல்யாணத்துக்கு கூடப்படித்த யாரையும் கூப்பிட மறுத்துவிட்டாள்!

கல்யாணம் முடிந்து கிடைத்த முதல் தனிமையில் கேட்டாள் "உங்களுக்கு காதல் ஏதாவது?"

"இந்த முகரைக்கட்டையை எவளும் லவ் பண்ணலையே சுமா!"
உண்மையில் அவன் ராஜாராமனைவிட அழகு!

முதல் வருடமே பிறந்த ரமேஷ் ஒரே பிள்ளை!
வேலைக்குப் போகாமல் பிள்ளை, கணவன்
என்று அன்பில் ஊறிய வருடங்கள்!
சொந்த வீடு, கார் என்ற மிதமான, தேவைக்கேற்ற வசதி! 
பேங்க் பேலன்ஸ்!

குமார் மரணத்துக்குப்பின் கருணை அடிப்படையில் கிடைத்த அதே வேலைக்கு ரமேஷ்தான் வற்புறுத்தி அனுப்பினான்!

போம்மா, உனக்கும் ஒரு சேஞ்சாக இருக்கும்!

ஆஃபீஸிலும் குமாரின் ஆளுமை, எல்லோரும் அவளுக்குக் காட்டிய மரியாதை கலந்த அன்பில் புரிந்தது!

குமார் இல்லை என்ற குறை மட்டும் இல்லாவிட்டால், தேவதை வாழ்க்கை!

இதோ! எட்டு வருடம் ஓடிவிட்டது! படிப்பில் புலி மகன்!
தோழனைப் போல அம்மாவுடன் நெருக்கம்! எந்த ஒளிவு மறைவும் அவர்களுக்குள் இல்லாத அளவு நட்பு!

ஒரே ஸ்ட்ரோக்கில் எம் எஸ் முடித்து வெளியே வந்தவன் இதோ, ஒரு பெண்
புகைப்படமும், முகம் நிறைந்த எதிர்பார்ப்புமாக பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான்!

கண்ணாடியை மாட்டிக்கொண்டு ஃபோட்டோவை வாங்கிப் பார்த்தவள் மென்மையாகக் கேட்டாள்!
"யாருப்பா இது?"

"என் ஜூனியர்ம்மா! பேரு உஷா!"

ஃபோட்டோவில் ஒரு வசீகரமான அழகி!
ஆனால், எங்கேயோ பார்த்த, யாரையோ நியாபகப்படுத்தும் முகம்!

நெற்றி சுருங்க யோசித்தவளுக்குப் பொறி தட்டியது!

"இவ அப்பா பேரு என்னப்பா?"

"ராஜாராமன்ம்மா! "

"ப்ராட்வேல இரும்புக்கடை வச்சிருக்கார்!"

உடம்பிலிருந்த ரத்தமெல்லாம் சுண்டிப்போனமாதிரி இருந்தது! 

இதென்ன இத்தனை வருடத்துக்குப்பிறகு இப்படி ஒரு சோதனை!

தடுமாறி எழுந்தவள் மெதுவாகச் சொன்னாள்!

"அம்மாவுக்கு ஒருநாள் டைம் கொடுப்பா!"

ராத்திரி முழுக்கப் பொட்டு தூக்கம் இல்லை! 
இத்தனை வருடத்துக்குப்பிறகு இது என்ன சோதனை!

ராஜாராமன் என்னை மறந்திருந்தால் பரவாயில்லை! 
இல்லாவிட்டால்? 

இந்த நிலையில் என்கூட இல்லாமல் என்னை இந்த இக்கட்டில் தனியே தவிக்கவிட்டுட்டுப் போய்ட்டாரே!

இருபத்தைந்து வருடத்தில் குமார் மேல் முதல்முறையாய்க் கோபம் வந்தது!

காலையில் எழுந்து ஹாலுக்கு வந்தால், பேப்பர் படிக்கும் பாவனையில் ரமேஷ்!

கிட்ட வந்து அவன் தலை கோதியவள் கேட்டாள் - "அம்மாவுக்கு அந்தப் பொண்ணைப் பிடிக்கலைன்னா என்ன செய்வாய் ரமேஷ்?"

அவளையே உரித்துவைத்திருந்த ரமேஷ் முகத்தில் ஏமாற்றம் ஒரு நொடி கருமை பூசியது!

சுதாரித்தவன், "உனக்குப் பிடிக்கலைன்னா வேண்டாம்மா!"

சுருக்கென்று கேட்டாள் "அந்தப் பொண்ணு ஏமாந்தாப் பரவால்லையா?"

"இல்லம்மா, நீங்க ஓகே சொன்னால்தான் எனக்கும் ஓகேன்னு முதலிலேயே சொல்லிட்டேன்!"

"ஓ! ப்ரபோசல் அங்கிருந்து வந்ததா?"

"அப்ப ஃபோன் பண்ணி, ... எப்போ பொண்ணு கேட்டு வரலாம்ன்னு கேளு!"

அப்படியே அவளை அலாக்காகத் தூக்கி சுற்றியவன், இறக்கிவிட்டு, கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்தான்!

"தேங்க் யூம்மா!" 
பட்டென்று ஒன்று வைத்தாள்- "போடா கிறுக்கா! அம்மாவுக்கு யாராவது தேக்ஸ் சொல்வாங்களா?"

இந்த முறையும் ஒரு வெள்ளிக்கிழமை! 

வாசலில் ராஜாராமன்!
ஆனால் கை கூப்பி வணக்கம் சொல்லி!

தொந்தியும் தொப்பையுமாக வழுக்கை விழுந்து ஆளே மாறிப்போன ராஜாராமன்!
பக்கத்தில் நகைக்கடை ஸ்டாண்ட் மாதிரி மனைவி!

பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிட்டது! 
அங்கு எல்லாமே அவன் மனைவிதான்! மாமனார் காசில் சுகவாழ்க்கை வாழும் ராஜாராமன்!

நெற்றி சுருங்க யோசித்துக்கொண்டே இருந்தவன் மெதுவாகக் கேட்டான்!
"நீங்க?"
"மிஸ்ஸெஸ் குமார்! சுமதி குமார்! உங்க மகளைப் பெண் கேட்டு வந்திருக்கிறேன் மிஸ்டர் ராஜாராமன்!"
தோரணையில் அயர்ந்து விதிர்த்தான் ராஜாராமன்!

அதன்பிறகு எல்லாம் அதிவேகத்தில் நடந்தது!

கல்யாணம், சாந்தி முகூர்த்தம் எல்லாம் முடிந்து மறுவீடு அழைக்க வந்திருக்கிறார்கள்!

மனைவி உள்ளே பெண்ணுக்கு எல்லாம் எடுத்து வைக்கையில் அரிதாகக் கிடைத்த தனிமையில்,
வெற்றிப் புன்னகையோடு கேட்டான் ராஜாராமன்! 

"என்னவோ சவால் விட்டே? கடைசியில பொண்ணு கேட்டு நீதான் என்னைத் தேடி வந்தே பார்த்தியா?"
"அதுவும் முண்டச்சியா!"

தீப் பட்டதுபோல் நிமிர்ந்தாள் சுமதி!

இன்னும் இவன் மாறவே இல்லை!

இனி மறைத்துப் பிரயோஜனம் இல்லை!

"ராஜாராமன், மஹாபலிபுரம் நியாபகம்
இருக்கிறதா?
ரமேஷ் உங்கள் பிள்ளை!"
"அவனுக்கும் பிடிவாதம் அதிகம்! உங்களைப்போல!"

"என்னால் இந்தக் கல்யாணத்தை என்ன சொல்லியும் நிறுத்தமுடியவில்லை!"

தடுமாறி சோபாவில் விழுந்தான் ராஜாராமன்!
முகம் பேயறைந்தாற்போல் கறுத்துப்போனது - 
"பொய் சொல்லாதே சுமதி!"

"ஒரு தாய்தான் தன் குழந்தைக்குத் தகப்பனை அறிமுகம் செய்யமுடியும்! எனக்குத் தெரியாதா?"

"அவங்க ரெண்டு பேரையும் ஜோடியாகப் பார்க்கையில் இந்த முறையற்ற உறவு என் நெஞ்சை அறுத்துக்கிட்டே இருந்தது!"

"யார் கிட்டயும் சொல்லமுடியாத இந்த பாரத்தை இப்போ உங்க தோள்ல இறக்கிவெச்சுட்டேன்!"

கதி கலங்கி வாயடைத்து உட்கார்ந்திருந்தான் ராஜாராமன்!

கண்ணீரைத் துடைத்தபடி வேகமாக உள்ளே போனாள் சுமதி!

"என்னை மன்னிச்சுடுங்க குமார்! 
நீங்க கண்டிப்பா புரிஞ்சுப்பீங்க!
இன்னுமே ஆணவம் தெளியாத அவனை ஆயுளுக்கும் தண்டிக்க, உங்க ரத்தத்தை அவன் பிள்ளைன்னு பொய் சொல்லிட்டேன்!"

"இந்த முள் மகள் முகத்தைக் கூடப் பார்க்க விடாமல் அவனை ஆயுளுக்கும் உறுத்தும்!"

நிம்மதியான ஒரு புன்னகையோடு மருமகளைத் தேடி உள்ளே விரைந்தாள் சுமதி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக