செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

அம்மாவுக்கு கார்சினோமா.இரவு முழுவதும் பொட்டு தூக்கமில்லை! பக்கத்தில் நிச்சலனமாய் ஆடை குலைய கொஞ்சமாய் வாயைத் திறந்தபடி தூங்கும் நித்யாவைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது!

ஏதோவொரு முடிவை எடுத்துவிட்டால், அதை ஆண்களின் தலைமேல் போட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கமுடிகிறது இந்தப் பெண்களுக்கு!

பெண்கள் மென்மையானவர்கள் என்று எந்த அளவுகோலை வைத்து முடிவு செய்தார்கள்?

பக்கத்து பெட்ரூமில் அம்மா இருமுவது மெல்லிசாகக் கேட்டது!

அவள் படும் பாட்டிற்கு பேசாமல் செத்துப்போய்விட்டால்கூட நிம்மதி என்று தோன்ற,
கடவுளே! நாமும் மரத்துப்போக ஆரம்பித்துவிட்டோமே என்று பதறிப்போனது மனசு!

ஒரே வருடம்!

வாழ்க்கையை எப்படிப் புரட்டிப்போட்டுவிட்டது!

ரகுவும் நித்யாவும் ஒரே வகுப்பில் படித்தாலும், ரகு அவ்வளவு வசதியில்லாமல் மாமா வீட்டில் ஒண்டிக்கொண்டு எப்படியோ படிப்பை ஓட்டிவந்தான்!

நித்யா, அந்த ஊரின் மெத்தப் பணக்கார வீட்டில் ஒரே பெண்!

தூரத்து சொந்தம்! 
படிப்பில் ஒருவர் மீது ஒருவருக்கு இருந்த போட்டியும் வியப்பும் காதலாக மாறிய நொடி இன்றுவரை அதிசயம்தான்!
நித்யா, அழகி என்பது ஒரு அபத்தமான அண்டர்ஸ்டேட்மெண்ட்!
தூரத்தில் அவள் வரும்போதே வயது வித்தியாசம் இல்லாமல் கண்கள் அகலும்!
ஆனால் படிப்பைக் காதலித்த ரகுவுக்கு அவள் அழகைவிட, வகுப்பில் அவள் கேட்கும் சந்தேகங்களின் கூர்மைதான் முதல் ஈர்ப்பு!

அண்ணா யுனிவர்சிடியில் முதல் பத்து ரேங்குக்குள் அவர்கள் இரண்டுபேருமே வந்தது யாருக்குமே ஆச்சர்யமான விஷயமாகப் படவில்லை. ஆனால் அவர்கள் காதல்தான் ஊரின் ஒட்டுமொத்தப் புருவங்களையும் உயர்த்தவைத்தது!

சொல்லிவைத்ததுபோல் ஒரேநாளில் இருவருக்குமே அமெரிக்காவில் வேலை!

ஊரே அந்தஸ்து வித்தியாசம் காட்டி மூர்க்கமாய் எதிர்த்தபோதும், அம்மா மட்டும்தான் இவர்களின் காதலை உறுதியாக ஆதரித்தார்!
மேலும் பிரசித்தி பெற்ற நித்யாவின் பிடிவாதம் வேறு!

வேண்டாவெறுப்பாய் மலைக்கோயிலில் ஒட்டாமல் நடத்திவைக்கப்பட்ட கல்யாணம்!

அம்மா மட்டும்தான் "கவலைப்படாதே ரகு! எல்லாம் சரியாகும்!" ன்னு நொடிக்கொருமுறை சொல்லிக்கொண்டே இருந்தார்!

அமெரிக்கா போன ஏழு வருடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காக்காரியே ஆகிப்போனாள் நித்யா!

உணர்வுப்பூர்வமான யோசனைகளே அவளுக்கு வராதோ என்று ரகு அவ்வப்போது யோசிப்பதுண்டு! எல்லாமே ப்ராக்டிகலாக, எந்தவிதமான செண்டிமெண்ட்டும் இல்லாமல் யோசிக்க அவளால் முடிந்த அளவு ரகுவால் முடிந்ததில்லை.
இடைப்பட்ட நாட்களில் ரகுவின் மாமாவும், நித்யாவின் அப்பாவும் இல்லாதுபோக, ரகுதான் கலங்கித் தவித்துப்போனான்!

செண்டிமெண்டல் இடியட்!
ரகுவுக்கு நித்யா வைத்த பெயர்!
"செத்துப்போனது உங்க அப்பா நித்தி!"

"சோ வாட்? போனமாசம் ஊருக்குப் போனபோதே தெரிந்ததுதானே!
இப்போ செலவு பண்ணிக்கிட்டு ஊருக்குப்போக முடியாது! மோர்ஓவர் எனக்கு ஆஃபீஸில் ஆடிட்!
இப்போ லீவா! நத்திங் டூயிங்! போனவாளுக்காக நம்ம வாழ்க்கையை மிசரபிள் ஆக்கிக்கமுடியாது!
நீங்க வேணும்னா போய் உங்க மாமனாரை வழியனுப்பிட்டு வாங்க!
நானும் அபிஷேக்கும் இங்கேயே இருந்து பை சொல்லிடறோம்!"

ரகுவுக்கு ஆச்சர்யமாகப் படவில்லை! 

அபிஷேக் பிறந்தபோதும் அவள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கவில்லை!பிறந்து ஆறு மாதக்குழந்தையை டே கேரில் விட்டபோதும் கலங்கவில்லை!
ரகுதான் கண்கலங்கிப் புலம்பினான்! 

சென்ற வருட விடுமுறையில் ஊருக்குப் போனபோது அம்மாவைப் பார்க்க சகிக்கவில்லை!

கறுத்து, மெலிந்து, கண்கள் குழி விழுந்து, பார்க்கச் சகிக்காமல் ரகுதான் என்னாச்சும்மா என்னாச்சும்மா ன்னு துளைத்து எடுத்துவிட்டான்!

ஊருக்குக் கிளம்பும்போது அம்மா தழுதழுத்துவிட்டாள்!
"ரகு, நித்யாக்கு சொல்லுப்பா! நான் அங்கே வந்து கொஞ்சநாள் அபிஷேக் கூட இருக்கேனே!"
வெடுக்கென்று குறுக்கிட்டாள் நித்யா! "அதெல்லாம் இப்ப முடியாதும்மா! போய் ஃபோன் பண்றோம்!"

அமெரிக்கா வந்து நாலு முறை அம்மா ஃபோன் பண்ணியும் நித்யா பிடி கொடுக்கவே இல்லை!
ரகுதான் பிடிவாதமாக விசா, டிக்கெட் எல்லாம் ஏற்பாடு செய்தான்!

போன மாசம் வந்து இறங்கிய அம்மாவைப் பார்த்து நித்யாவே கொஞ்சம் கலங்கித்தான் போனாள்!
ஏதோ வைராக்கியத்தில் உயிரைப் பிடித்து வைத்திருப்பவர்போல் இருந்தவர், என்ன கேட்டும் பதில் சொல்லவில்லை!

மூன்றாம்நாளே தலை சுற்றி விழுந்தவர் ரத்தமாக வாந்தியெடுக்க, ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓட,
டாக்டர் தெளிவாகச் சொல்லிவிட்டார்!

அவருக்கு கார்சினோமா தேர்ட் ஸ்டேஜ்! இனி, அதிகபட்சம் ஆறு மாதம்தான்! மருந்து மாத்திரைகளோ, அறுவை சிகிச்சையோ பலன் தரும் நிலையை அவர் தாண்டிவிட்டார்! வீட்டில் வைத்துப் பராமரிப்பது சிரமம் என்றால் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுங்கள்!

ஒரு நிமிடம்! உடைந்துபோய் அழுத நித்யா உடனே சுதாரித்தாள்!

வீட்டுக்குப் போனதுமே ரகுவிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டாள்! சீக்கிரம் அம்மாவை ஊருக்கு அனுப்பிடலாம்!

"இல்லை நித்யா! நீ என்ன சொன்னாலும் என்னால் அவரது கடைசி காலத்தில் அவரைத் தனித்து விடமுடியாது!
உனக்கு வேண்டுமானால் பாசம் என்பதெல்லாம் வெறும் செண்டிமெண்டாகப் படலாம்! எனக்கு அப்படியில்லை!
எனக்கு நினைவு தெரிய என்மேல் அன்பைப் பொழிந்த ஒரே ஜீவன் அவர்!
அப்படி அவர் ஊருக்குத்தான் போகவேண்டும் என்றால், ஆறு மாதமோ, ஒரு வருஷமோ எத்தனை நாளானாலும் நானும் அவரோடு ஊருக்குப் போய் இருந்துவிட்டு வருகிறேன்!"

"முட்டாள் கணவனே! யூ ஆர் வெய்ட்டிங் ஃபார் வி பி ப்ரொமோசன்!"

"எனக்கு அதைவிட அம்மா முக்கியம் நித்யா!
நாங்கள் எங்கிருப்பது என்பதை நீ முடிவு செய்!"

உறுத்துப் பார்த்தவள், "ஸ்ட்ரேன்ஞ் ஃபெல்லோ" என்று தலையாட்டி நகர்ந்துபோனாள்!

கொஞ்சம் கொஞ்சமாக அவர் வலியில் சுருள்வதும், தாங்கமுடியாது ரத்தமாக வாந்தியெடுப்பதும், ஓயாத இருமலும் என நேற்று டாக்டரிடம் போக, அவர் "ஷீ ஈஸ் அட் டெர்மினல் ஸ்டேஜ்! இனி வெறும் நாள் கணக்குதான்!" என்று சொல்லிவிட, வீட்டுக்கு வந்தவனை தனியே கூப்பிட்டு, தெளிவாகச் சொல்லிவிட்டாள்!
"ரகு, இனி அவர் பயணிக்கும் நிலையில் இல்லை! இருக்கும் காலம் வரை ஆஸ்பத்திரியில் இருக்கட்டும்! அபிஷேக் இதையெல்லாம் பார்க்கவேண்டாம்!"

கல்யாணம் ஆகி, இத்தனை வருடத்தில் முதல் முறை ரகு உறுதியாகச் சொன்னான்!
"இல்லை நித்யா! அம்மா என் கூடத்தான் இருப்பார்!"

"ஓகே ரகு! இதுதான் உன் முடிவு என்றால் நீ இங்கிரு! நானும் என் பையனும் வெளியே போகிறோம்! எல்லாம் முடிந்ததும் சொல்லியனுப்பு! நாங்க வர்றோம்!
என் மகன் இதையெல்லாம் பார்க்கவேண்டாம்!"

"நித்யா! நாளைக்கு உன் மகன் இப்படி நடந்தால் நீ என்ன செய்வாய்?"

"புரிந்துகொள்வேன் ரகு! நான் உன்போல செண்டிமெண்டல் இடியட் அல்ல!"
"நாளைக்குக் காலை உன் முடிவைச் சொல்லிவிடு! குட் நைட்!"

இதோ, ரகு தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருக்கிறான்!

மெதுவாக எழுந்து மணி பார்க்க, நாலு!

இனி தூங்கவும் முடியாது!
கொஞ்சநேரம் வராண்டாவில் உலாத்தியவன்,
மணி ஐந்தானதும் தனக்கும் நித்யாவுக்கும் காஃபி கலந்துகொண்டு வந்து அவளை எழுப்பினான்!
மெதுவாக காஃபியை உறிஞ்சியவாறே கேட்டாள் நித்யா!
"என்ன முடிவு செஞ்சே ரகு?"
சொல்றேன்!

நிதானமாகச் சொன்னான் ரகு! 

"அம்மா, நம்மகூடத்தான் இருப்பாங்க!
இது பிடிக்காமல் நீ போவதாக இருந்தால் அப்படியே போய்விடு! 

இந்த உலகத்திலேயே ரத்து செய்துகொள்ளக்கூடிய ஒரே உறவு கணவன் மனைவி உறவுதான்!

இந்த நேரத்தில் அவரோடு இருக்கமுடியாதவள் எனக்கும் வேண்டாம்!

சிறுவயது முதல் மாமா வீட்டில் ஏச்சும் பேச்சும் கேட்டு அநாதையாக வளர்ந்தவன் நான்!"

"என்மேல் இத்தனை அன்பு காட்டியவர் 'உன்' அம்மாதான்! அதற்காக என் நன்றிக் கடன் இது!"

இதில் உனக்குப் பங்கில்லை என்று நீ நினைத்தால் நிரந்தரமாகக் கிளம்பிவிடு!

சொல்லி முடித்துவிட்டு காஃபிக் கோப்பைகளோடு சமையல்கட்டுக்கு நடந்தான் ரகு!

வெளியே வெளிச்சம் வர ஆரம்பித்திருந்தது!
திங்கள், 15 ஆகஸ்ட், 2016

கொல்லப்பட வேண்டியவள்தானா பெண்?

ஏன்டா இப்படி செஞ்சே?

காலைல பாக்க வந்தப்ப அம்மா இதை நூறாவது தடவையாகவோ, ஆயிரமாவது தடவையாகவோ கேட்டுச்சு!

பாவம்! நைட்டு ஃபுல்லா தூங்காம கெடந்து காலைல வந்து க்யூல நின்னு ஜெயில்ல பாக்க வந்தவளுக்கு அழுகை முட்டிக்கிட்டு வருது. ராஜா மரம் மாதிரிதான் நின்னான்! இப்போ மட்டுமில்லை இந்த ஒரு மாசமா அப்படித்தான் இருக்கிறான்.

இன்னைக்கு வந்த அம்மா வேற இன்னொரு விஷயம் சொல்லி அழுதுட்டுப் போச்சு . நேத்து சாயங்காலம் இருட்டு வேளைல  ப்ளஷர் கார்ல வந்து யாரோ அஞ்சு லட்ச ரூபாய் குடுத்துட்டுப் போயிருக்கறாங்க!

பேச்சு மாறும் பழக்கம் எங்க ஜாதிக்கே இல்லை!

அவன் இன்னைக்கு வரைக்கும் வாயே தொறக்காம இருந்ததுக்கு இந்தப் பணம்! இப்போ மட்டுமல்ல எப்போதுமே அவன் வாயே திறக்கக்கூடாது. கேஸை நாங்க பார்த்துக்குவோம்! குறைவான தண்டனையோட அவன் வெளியே வருவது எங்கள் பொறுப்பு. 

எங்களுக்கு எதிரா அவன் வாயத் திறந்தா, உங்க வீட்டுல ரெண்டு பொண்ணுங்க இருக்கு நியாபகம் இருக்கட்டும்!”

போனவாரம் அந்த மதத்து ஆட்கள் வந்து பணம் கொடுத்திருக்கறாங்க, “எங்க பையனை காட்டிக் கொடுக்கக்கூடாது அதுக்குத்தான் இது!”

“நான் என்ன பண்ணட்டும்? தெருவுல நடக்கவே அவமானமா இருக்கு!
இப்போ இதெல்லாம் வெளியே தெரிஞ்சா இன்னும் அசிங்கமா போய்டும்! கடைசில காசுக்காகவா இப்படி பண்ணுனே?

குடும்பத்துக்கு ஒரே பையன்! இது தெரிஞ்சும் ஏன்டா இப்படி செஞ்சே?”
“உண்மையிலேயே என்னதான் நடந்தது?”

அம்மா போனதுக்கப்புறமும் அதுதான் அவன் மனசுல ஓடிக்கிட்டே இருந்தது!

ஏன் இப்படி செஞ்சேன்? இதை நான்தான் செஞ்சேனா?

உண்மையில் என்னதான் நடந்தது?

சாயங்காலம் வரைக்கும் இப்படியே உலாத்தலாம்!

ஆறு மணிக்கு ரோல்கால்.
அது முடிஞ்சு செல்லுக்குள்ள அடைக்க வரைக்கும் என்ன செய்ய?

நேத்து பொறுக்க முடியாம வார்டன் ரூமுக்கே போய் எனக்கு ஏதாவது வேலை கொடுங்க சார்ன்னு கேட்டா, விசாரணைக் கைதிக்கு வேலை கொடுக்க முடியாது.
வேணும்னா சாமியார் செல்லுக்குள்ள போய் பேசிக்கிட்டு இருன்னு சொன்னார்!

அது யார் சாமியார்ன்னு ரமேஷ் கிட்ட கேட்டா, அந்த ஆளும் ஒரு கொலை செஞ்சுட்டு உள்ளே வந்தவர்தான்!

குற்றத்தை ஒத்துக்கிட்டு ஏழு வருஷ தண்டனை வாங்கிக்கிட்டு உள்ளே வந்தவர்!

ரெண்டு வருஷமா தாடியும் மீசையுமா தானுண்டு தன வேலை உண்டுன்னு இருக்கார்! அவ்வப்போது கைதிகளை கூப்பிட்டு அறிவுரை சொல்லுவார்!

மாசம் ஒருதடவை ஒரு அம்மா வந்து பார்த்துட்டு, அவர் கணக்குல பணம் கட்டிட்டுப் போகும்!

எந்தநேரமும் ஏதாவது படிப்பு, அதை விட்டால் கண்ணை மூடி தவம் செய்யற மாதிரி உட்கார்ந்திருப்பார்!

வார்டன் கார்டு எல்லோருமே அந்த ஆள் கிட்ட மரியாதையாத்தான் பேசுவாங்க!

இன்னைக்கு இருக்கற மனசுக்கு ஏனோ அந்த ஆளைப் போய் பார்க்கலாம்ன்னு தோணுச்சு

நல்லவேளையா போனப்ப அந்த ஆள் தரைல உட்கார்ந்து ஒரு புத்தகம் படிச்ச்சுக்கிட்டு இருந்தார்!

ஐயா உள்ளே வரலாமா?

புத்தகத்த மூடி வெச்சுட்டு ஒரு நிமிஷம் உத்துப் பார்த்தார்!

வா தம்பி! நீதானே ராஜா?
உட்கார்! சொல்லு, ஏன் இப்படி செஞ்சே?

நீங்களுமா?

எனக்கே தெரியல. இன்னைக்கு வரைக்கும் அது எனக்கே குழப்பமாவே இருக்கு!

அந்தப் பொண்ணு என்கிட்ட நல்லாத்தான் பேசுச்சு! எனக்குத்தான் ஏதோ நடந்துருச்சு போல!

இன்னைக்கு எல்லோரும் சொல்றமாதிரி அந்தப் பொண்ண நான் லவ் பண்ணுனேன்னு கூட என்னால நம்ப முடியல!

தினமும் அந்தப் பொண்ணுகூட நடந்து வரும்போது, என்ன தம்பி பண்றீங்கன்னுதான் கேட்கும்!

பேசிக்கிட்டே நடந்துவந்து டீக்கடைல உட்கார்ந்துக்குவேன்!

ரயில்வே ஸ்டேஷன் படி ஏறும்போது திரும்பிப் பார்த்து கை அசைச்சுட்டுதான் போகும்!

அதுதான் வினையாய் போச்சு!

எல்லாப் பயலும் ஏத்தி விட ஆரம்பிச்சாங்க!

பாப்பாரப் புள்ளை என்னை எங்கடா லவ் பண்ணப் போகுது?
அதுவும் அது இருக்கற பவுசுக்கு நான் ஏணி வெச்சாக்கூட எட்டாது!

அதும் இல்லாம அது ஏதோ பாய் பையன லவ் பண்றதா வேற சொல்றாங்க!

நான் சொன்ன எதுவும் அவங்க காதுல ஏறல ஆனா அவங்க ஏத்திவிட்ட எல்லாமே என் மனசுல நல்லா ஏறி உட்கார்ந்துக்கிச்சு!

ஒருநாள், அந்தப் பெண்ணிடம் தைரியமா என் காதலைச் சொல்லிட்டேன்.

உன் மூஞ்சியை நீ கண்ணாடில பார்த்ததே இல்லையான்னு நக்கலா சிரிச்சுட்டுப் போய்டுச்சு!

எனக்கு நாக்கை பிடுங்கிட்டு சாகலாம்ன்னு தோணிச்சு!

அன்னைக்குத்தான் முதல் தடவையா தண்ணியடிச்சேன்!

அவளைக் கொல்லாம விடமாட்டேன்னு சொன்னப்பத்தான் ஒருத்தன் எனக்கு லைன் போட்டுக் கொடுத்தான்!

அன்னைக்கு போன்ல பேசுனவர் அவளைக் கொன்னா பத்து லட்சம் தர்றதா சொன்னார்!

அதோட கேஸையும் தானே பாத்துக்கறதா சொன்னார்!

ஏன்னு கேட்டா துலுக்கப் பயலைக் கட்டிக்கிட்டு என் ஜாதி மானத்த கப்பலேத்தப் பார்க்கற நாயை கொல்லாம விடமாட்டேன்னு சொன்னார்.

ஆச்சர்யமா, மறுநாள் வேற ஒரு சின்ன வயசு ஆள் என்னை வந்து பார்த்தார். சாந்தியை கொல்லப்போறேன்னு சொன்னாயாமேன்னார்!

ஆமாம், அதைப்பத்தி உனக்கென்னன்னு கொஞ்சம் வீரப்பா கேட்டேன்.
திருநெல்வேலிக்காரனாச்சே!

அப்பத்தான் அந்த ஆளும் அதே சொன்னார்!

“கொன்னுடு! என்னை ஏமாத்திட்டு அப்பன் சொல்றவனை கட்டிக்கப் பார்க்கறா! அவளை உயிரோட விட நான் மடையனில்லை!

உனக்கு என்ன வேணுமோ அதை உங்க ஊர்லயே எங்க ஆளுங்க செய்வாங்க”ன்னு சொல்லிட்டுப் போய்ட்டார்!

இத்தனை பேர் அவமேல வெறியா இருக்காங்க
அதுனால யார் கொன்னாங்கன்னு யாருக்கும் தெரியப்போறதில்லைன்னு கூட தண்ணியடிக்க வந்த பசங்க சொல்லசொல்ல எனக்கு தீர்மானமா தோண ஆரம்பிச்சுருச்சு! அப்போதான் அந்த மொதநாள் போன் போட்டுக் கொடுத்த பையன் சொன்னான்!
“திருநெல்வேலில பொறந்துட்டு அரிவாள் எடுக்க இவ்வளவு யோசிக்க வெட்கமா இல்லையா?”
“செய்றண்டா!  இன்னும் ஒருவாரம்!”

மறுநாள் யாரோ கொண்டுவந்து பொறுப்பாக் கொடுத்த அரிவாள் நல்லா பதமா இருந்துச்சு!

“ஸாரிக்கா”ன்னு மறுநாள் போய் நல்ல பையன் மாதிரி சொன்னேன்!
அப்பவும் அந்தப் பொண்ணு சிரிச்சுக்கிட்டே பரவால்ல தம்பின்னு சொல்லிட்டுப் போச்சு பாவம்!

அன்னைக்கு காலைல ரயில்வே ஸ்டேஷன்ல கூட்டமே இல்லை!
பக்கத்துல போய் உட்கார்ந்தேன்!
பேசிக்கிட்டே பையில கை விட்டேன்!

அரிவாளைப் பார்த்து அந்தப் பொண்ணு சுதாரிக்கறதுக்குள்ளே ஒரே போடு!
பாவம்! வாயிலேயே விழுந்தது வெட்டு!
என் மூஞ்சில பட்டுத் தெறிச்சுப்போச்சு ஒரு பல்லு!

நிதானமா நடந்தே ரூமுக்கு வந்துட்டேன்!
இதுதான் நடந்தது!

கொஞ்சம் கூட சலனமே இல்லாமல்தான் சொன்னான் ராஜா!

ஆனா அந்தப் பொண்ணை நான் மட்டும்தானா கொன்னேன்?
எனக்கு அவ்வளவு தைரியம் கிடையாது!

மெதுவாகப் பேச ஆரம்பித்தார் சாமியார்!

“உண்மைதான் இது நீ ஒருத்தன் செய்த கொலை அல்ல!
இது காலகாலமாய் நடக்கும் கொலை!”

“பல யுகங்களாய், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் நடக்கும் கொலை இது!”

பெண் என்பவள் நம் சமூகத்தில் வெறும் பொருளாகத்தான் பார்க்கப்பட்டிருக்கிறாள்!

புனிதம் என்று பூஜித்தே பெண்ணைக் கொன்றிருக்கிறது இந்த சமூகம்!
பெண்ணுக்காகவே போர்கள், பெண்ணைக் கைப்பற்றவே யுத்தங்கள்!

எத்தனை ரத்தம் சிந்தியது இந்த பூமியில் பெண்ணுக்காக?
 பெண்ணை என்றைக்கு சக உயிராகப் பார்த்தது இந்த ஆணாதிக்க சமூகம்?

பெண் புனிதமானவள்!

கற்பு என்ற கற்பிதம் பெண்ணுக்கு மட்டுமே!

பரத்தை வீட்டுக்கு ஆணைத் தூக்கிச் சென்றவள் பெண்!
பரத்தை வீடு சென்று பொருள் இழந்து வந்தவனுக்காக ஊரையே எரித்தவள் பெண்!
தீக்குளித்து கற்பை நிரூபித்தவள் தெய்வப்பெண்!
அம்மா சொன்னதால் ஐந்துபேர் பங்கிப் புசிக்கும் பண்டம் பெண்!

இதைத்தான் போதித்து வளர்க்கிறோம் நம் பள்ளிகளில்!

அதுவும் இப்போதைய காலகட்டம் இன்னும் கொடுமையானது!

இது ஒரு ட்ரான்சிஷன் பீரியட்!

வீட்டுக்குள் அடங்கிக்கிடந்த பெண் இன்று எல்லாத் துறைகளிலும் பாதம் பதிக்க, காலம் காலமாக படி தாண்டாத பத்தினி கதைகள் படித்து வளர்ந்த ஆண்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை!

அவள் சம்பாரித்துக் கொண்டுவரும் காசு வேண்டும்!
ஆனால் அவள் என் ப்ராப்பர்டி என்பதையும் அவள் மறக்கக்கூடாது!

பெண்ணோடு வரும் மோதல்களில் முதலில் சீண்டப்படுவது அவள் கற்புதான்!

இந்தக் கீழான மனநிலைக்கு தீனி போடத்தான் உங்கள் இன்றைய ஒரே அறிவுச் சுரங்கம் சினிமா!

படிக்கும் பழக்கம் வழக்கொழிந்து போன சமுதாயத்துக்கு இன்றைக்கு அறிவுத் தீனி போடுவது உங்கள் சினிமாதானே?

கொஞ்சம்கூட சமூகப் பொறுப்பில்லாமல், ஒரு பெண்ணை சீண்டுவதும், கற்பழிப்பதும்தான் ஆண்மை என்பதும்

ஆண் எத்தனை கொடுமை செய்தாலும் அதைப் பொறுத்துக்கொள்வதும், அவனைத் திருத்தத் தாலி கட்டிக்கொள்வதும்தான் பெண்மை என்பதுவும்தானே உங்கள் திரைப்படம் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்த நாகரீகம்!

அன்றைக்கு மேஜர் சுந்தரராஜனும், சௌகார் ஜானகியும் "களங்கப்பட்ட" தன் மகளை குறைபட்டு வந்துட்டயேடி ன்னு சொல்லி அழுததுகூட ஒரு நியாயம்!

ஆனால், என்னவோ பெரிய நாகரீகம் முற்றிவிட்ட காலத்திலும், உங்கள் இளவரசுவோ சரண்யாவோ இன்னும் ஏன் காதலில் தோற்ற தன மகனை இந்தக் கேள்வியைக் கேட்பதில்லை?

நீ வான்னு சொன்னா வரணும். உட்கார்ன்னு சொன்னா படுக்கணும்! அவள்தான் நல்ல பெண்!

சில நூறு கிராம் சதை இடம் மாறி வளர்ந்திருப்பது தவிர ஆண்  பெண்ணைவிட எந்தவகையில் உயர்ந்துவிட்டான்?

உங்கள் ஆசைக்கு இணங்க மறுத்தால் நீங்கள் கொல்லுவீர்கள், உங்களைக் காதலித்தால், அவளைப் பெற்றவன் கொல்லுவான்!

வெட்கம் கெட்ட உங்களோட குடும்பத்தின், ஆண்மையின், ஜாதியின் பெருமை ஒரு பெண்ணால்தான் காக்கப் படவேண்டும்!

அதை மறுதலித்து, தன் ஆசைகளை ஒரு பெண் நிறைவேற்ற நினைத்தால் ஒழுக்கம் கெட்டவள்!

அவளைக் கொன்று உங்கள் வீரத்தை, ஜாதியை காப்பாற்றிக்கொள்வீர்கள் அப்படித்தானே தம்பி?

பெண்ணின் தேவைகளுக்கு சம்பாதித்துக் கொடுத்து, அவளை நிழலோடு பாதுகாத்துக் காப்பாற்றிய பேராண்மை இப்போது டாஸ்மாக்கில் உருண்டு கிடக்கிறது!

பெண் படித்து, சம்பாதித்துக் கொண்டுவந்து கொடுக்கும் காசில் சாப்பிடும்போது வராத வெட்கமும் ரோஷமும், தனக்கான வாழ்க்கையை அந்தப்பெண் தீர்மானித்துக்கொள்ளும்போது வருகிறது!

ஆபீஸில் மேலதிகாரி பெண்ணென்றால்  “மேடம் மேடம்” என்று குழையத் தயாராகிவிட்ட உங்கள் ஈகோ உங்கள் வீட்டுப் பெண்ணின் உயர்வை, விருப்பத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது!

வேறு வழியே இல்லாமல் பெண்ணை எல்லா இடத்திலும் ஏற்றுக்கொள்ள முடிந்த உங்களால் இன்னும்இன்று இல்லாமலே போய்விட்ட உங்கள் ஆளுமையை அசைத்துப் பார்ப்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளாத முட்டாள்தனம்தான் இன்றும் பெண்ணை ஒரு போகப் பொருளாகவே பார்க்கச் சொல்கிறது!

உங்கள் விருப்பத்தை மீறும்போது அவள் மகளாக, காதலியாக, தோழியாக யாராக இருந்தாலும் பெண் என்பதாலேயே கொல்லப்பட வேண்டியவள்!

பெண் என்பதால் அவள் விருப்பப்படி வாழும் உரிமை மறுக்கப்படும்!
அதைக் கேள்வி கேட்டாலோ, மீறத் துணிந்தாலோ சந்தேகமே இல்லாமல் கொல்லப்பட வேண்டியவள் பெண்!

அதனால்தான் கொன்றவன் ஜாதியோ, கொல்லப்பட்டவள் ஜாதியோ, மதமோதான் விவாதிக்கப்படுகிறதேயன்றி, பெண் கொல்லப்படவேண்டியவள்தானா என்பதை யாரும் விவாதிப்பதே இல்லை - உங்கள் வெட்கம் கெட்ட ஊடகங்கள் உட்பட

இந்தக் கேடுகெட்ட அமைப்பில் ஒரு கருவிதானே நீ!

இப்போது இந்த சிறைவாசம் உனக்கு யோசனை செய்யும் கால அவகாசத்தைக் கொடுத்திருக்கிறது!

நீயாகக் கொன்றாயோ, எவனாவது தூண்டிவிட்டுக் கொன்றாயோ அது உனக்குத்தான் தெரியும்!

 தண்டனையிலிருந்து தப்பிக்க கழுத்தை அறுத்துக்கொள்வதைவிட, இந்தக் கால அவகாசத்தில் இந்த அமைப்பின் கழுத்தை அறுக்கும் வழிமுறையை யோசி!

உன் பாவத்தின் அழுக்கை அன்பால் கழுவு! பெண்ணும் உன்னைப்போல் ஒரு சக உயிர் என்பதை ஒரு நூறு பேருக்காவது புரியும்படி சொல்!

இத்தனை தூரம் அன்பைப்பற்றிப் பேசும் நீங்கள் கூட ஒரு கொலை செஞ்சுட்டுத்தான் ஜெயிலுக்கு வந்தீங்களாமே! அப்புறம் என்ன இப்படி ஒரு சாத்தான் ஓதும் வேதம்?

ஒரு நிமிஷம் அமைதியாக உட்கார்ந்திருந்த சாமியார்ன்னு எல்லோரும் கூப்பிடுற ரவி, நிதானமாகச் சொன்னார்!

ஆமாம்! நானும் ஒரு உயிரைக் கொன்றேன்

அதுவும் ஒரு புனிதமான தொழில் செய்யும் டாக்டரை!

இடுப்புக்குக் கீழே இருக்கும் உறுப்பை எட்டுத் துண்டாய் வெட்டி!

அது கொலை அல்ல! வதம்!

தன் தொழில் தந்த புனிதமான அனுமதியை தவறாக உபயோகித்து வெவ்வெறு காலகட்டத்தில் எட்டுப் பெண்களின் வாழ்க்கையை அழித்து, அவர்களின் தற்கொலைக்கும் அந்தக் குடும்பங்களின் சீரழிவுக்கும் காரணமான அரக்கனை அழித்த வதம்!

ஏன் சாமியாரே, நீங்கள் போதித்த அன்பும் சட்டமும் அங்கு செல்லாதா? அவனை வதம் செய்ததால் தலைவனை இழந்து அவன் குடும்பம் சீரழியாதா?

இல்லை! அது அன்புக்கு அடங்காத மிருகம்!
அது கடைசியில் தன் மகளுக்கு நிகரானவளையும் பெண்டாளத் துணிந்தபோது வேறு வழியில்லாமல் செய்த வதம்!

இன்றும் அதற்கான நன்றிக்கடனாக, எத்தனை முறை நான் மறுத்தும், எனக்கு மாதம் தோறும் பணம் செலுத்துவது யார் தெரியுமா?
சீரழிந்து போகும் என்று நீ சொன்னாயே அந்தக் குடும்பத் தலைவி, அவன் மனைவியான மருத்துவர்!

இது, அந்த வதத்துக்கு அவரே தன் விருப்பத்தில் வழங்கும் காணிக்கை!

மௌனமாகத் திரும்பி நடந்த ராஜாவுக்கு, தலைவலி தீர அப்போதே ஒரு பீடியாவது பிடிக்கவேண்டும் என்று தோன்ற
ஜெயிலில் பகிரங்க ரகசியமாக பீடி சிகரெட் விற்கும் பாண்டியைத் தேடிப்போனபோது, ஜெயில் டிவி ரூமில் அவன் அபிமான ஹீரோ பாடிக்கொண்டிருந்தார்!

"அடிடா அவளை, வெட்றா அவளை!"