செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

அந்த அப்பாவிப் பெண்ணுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

கணந்தோறும் திசைகளை மாற்றிக்கொள்ளும் பறவையோடு பறப்பது சுலபமல்ல!
நொடிதோறும் மாறும் விருப்பங்களைக் கொண்டவனோடு வாழ்வதும்! 

யாருக்கும் அறிவுரை சொல்லாமலும், யார் அறிவுரையும் கேட்காமலும் வாழும் கதாபாத்திரங்கள் கதைகளுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும்! 
கூட வாழ விதிக்கப்பட்டவருக்கே அந்த சிரமங்கள் புரியும்!

அறிவுள்ளவர் தவிர்த்த பாதைகளைத் தேடிப்போய் பயணிக்கவிரும்புபவனை சக பயணியெனப் பெறுவது சாபம்!

காதல் மனம் சொன்னது கேட்டு நலம் விரும்பிகளின் அறிவுரைகளைப் புறம்தள்ளி ஒரு வலிமிகு முடிவை இதே தேதியில் எடுத்த அந்தப் பெண்ணுக்கு இருபத்தேழு வருடம் கழித்தும் அனுதாபம் மட்டுமே காட்டமுடியும்!

இனிவரும் பிறவிகளிலும் அவளே மனைவியாகட்டும் என்பதே என் பிரார்த்தனை!
கண்டிப்பாக அதற்கு எதிர்ப்பதமாகவே அந்தப் பெண்ணின் பிரார்த்தனைகள் இருக்கக்கூடும் - சற்றேனும் சிந்திப்பாராயின்!

ஆயினும்,
எனக்குச் சாதகமான இரு விஷயங்கள் எப்போதும் இருக்கவே செய்கின்றன!

1. கடவுள் என்றும் நல்லோர் பிரார்த்தனைகளைக் கண்டுகொள்வதில்லை!

2. பைத்தியக்காரத்தனமான காதல் எப்படியும் அந்தப் பெண்ணை இன்னொரு முறை முயன்றுபார்க்கவே சொல்லும்!

நம்பிக்கைதானே வாழ்க்கை! 😊😊

மணநாள் வாழ்த்துக்கள் இணையே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக