செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

அம்மாவுக்கு கார்சினோமா.இரவு முழுவதும் பொட்டு தூக்கமில்லை! பக்கத்தில் நிச்சலனமாய் ஆடை குலைய கொஞ்சமாய் வாயைத் திறந்தபடி தூங்கும் நித்யாவைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது!

ஏதோவொரு முடிவை எடுத்துவிட்டால், அதை ஆண்களின் தலைமேல் போட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கமுடிகிறது இந்தப் பெண்களுக்கு!

பெண்கள் மென்மையானவர்கள் என்று எந்த அளவுகோலை வைத்து முடிவு செய்தார்கள்?

பக்கத்து பெட்ரூமில் அம்மா இருமுவது மெல்லிசாகக் கேட்டது!

அவள் படும் பாட்டிற்கு பேசாமல் செத்துப்போய்விட்டால்கூட நிம்மதி என்று தோன்ற,
கடவுளே! நாமும் மரத்துப்போக ஆரம்பித்துவிட்டோமே என்று பதறிப்போனது மனசு!

ஒரே வருடம்!

வாழ்க்கையை எப்படிப் புரட்டிப்போட்டுவிட்டது!

ரகுவும் நித்யாவும் ஒரே வகுப்பில் படித்தாலும், ரகு அவ்வளவு வசதியில்லாமல் மாமா வீட்டில் ஒண்டிக்கொண்டு எப்படியோ படிப்பை ஓட்டிவந்தான்!

நித்யா, அந்த ஊரின் மெத்தப் பணக்கார வீட்டில் ஒரே பெண்!

தூரத்து சொந்தம்! 
படிப்பில் ஒருவர் மீது ஒருவருக்கு இருந்த போட்டியும் வியப்பும் காதலாக மாறிய நொடி இன்றுவரை அதிசயம்தான்!
நித்யா, அழகி என்பது ஒரு அபத்தமான அண்டர்ஸ்டேட்மெண்ட்!
தூரத்தில் அவள் வரும்போதே வயது வித்தியாசம் இல்லாமல் கண்கள் அகலும்!
ஆனால் படிப்பைக் காதலித்த ரகுவுக்கு அவள் அழகைவிட, வகுப்பில் அவள் கேட்கும் சந்தேகங்களின் கூர்மைதான் முதல் ஈர்ப்பு!

அண்ணா யுனிவர்சிடியில் முதல் பத்து ரேங்குக்குள் அவர்கள் இரண்டுபேருமே வந்தது யாருக்குமே ஆச்சர்யமான விஷயமாகப் படவில்லை. ஆனால் அவர்கள் காதல்தான் ஊரின் ஒட்டுமொத்தப் புருவங்களையும் உயர்த்தவைத்தது!

சொல்லிவைத்ததுபோல் ஒரேநாளில் இருவருக்குமே அமெரிக்காவில் வேலை!

ஊரே அந்தஸ்து வித்தியாசம் காட்டி மூர்க்கமாய் எதிர்த்தபோதும், அம்மா மட்டும்தான் இவர்களின் காதலை உறுதியாக ஆதரித்தார்!
மேலும் பிரசித்தி பெற்ற நித்யாவின் பிடிவாதம் வேறு!

வேண்டாவெறுப்பாய் மலைக்கோயிலில் ஒட்டாமல் நடத்திவைக்கப்பட்ட கல்யாணம்!

அம்மா மட்டும்தான் "கவலைப்படாதே ரகு! எல்லாம் சரியாகும்!" ன்னு நொடிக்கொருமுறை சொல்லிக்கொண்டே இருந்தார்!

அமெரிக்கா போன ஏழு வருடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காக்காரியே ஆகிப்போனாள் நித்யா!

உணர்வுப்பூர்வமான யோசனைகளே அவளுக்கு வராதோ என்று ரகு அவ்வப்போது யோசிப்பதுண்டு! எல்லாமே ப்ராக்டிகலாக, எந்தவிதமான செண்டிமெண்ட்டும் இல்லாமல் யோசிக்க அவளால் முடிந்த அளவு ரகுவால் முடிந்ததில்லை.
இடைப்பட்ட நாட்களில் ரகுவின் மாமாவும், நித்யாவின் அப்பாவும் இல்லாதுபோக, ரகுதான் கலங்கித் தவித்துப்போனான்!

செண்டிமெண்டல் இடியட்!
ரகுவுக்கு நித்யா வைத்த பெயர்!
"செத்துப்போனது உங்க அப்பா நித்தி!"

"சோ வாட்? போனமாசம் ஊருக்குப் போனபோதே தெரிந்ததுதானே!
இப்போ செலவு பண்ணிக்கிட்டு ஊருக்குப்போக முடியாது! மோர்ஓவர் எனக்கு ஆஃபீஸில் ஆடிட்!
இப்போ லீவா! நத்திங் டூயிங்! போனவாளுக்காக நம்ம வாழ்க்கையை மிசரபிள் ஆக்கிக்கமுடியாது!
நீங்க வேணும்னா போய் உங்க மாமனாரை வழியனுப்பிட்டு வாங்க!
நானும் அபிஷேக்கும் இங்கேயே இருந்து பை சொல்லிடறோம்!"

ரகுவுக்கு ஆச்சர்யமாகப் படவில்லை! 

அபிஷேக் பிறந்தபோதும் அவள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கவில்லை!பிறந்து ஆறு மாதக்குழந்தையை டே கேரில் விட்டபோதும் கலங்கவில்லை!
ரகுதான் கண்கலங்கிப் புலம்பினான்! 

சென்ற வருட விடுமுறையில் ஊருக்குப் போனபோது அம்மாவைப் பார்க்க சகிக்கவில்லை!

கறுத்து, மெலிந்து, கண்கள் குழி விழுந்து, பார்க்கச் சகிக்காமல் ரகுதான் என்னாச்சும்மா என்னாச்சும்மா ன்னு துளைத்து எடுத்துவிட்டான்!

ஊருக்குக் கிளம்பும்போது அம்மா தழுதழுத்துவிட்டாள்!
"ரகு, நித்யாக்கு சொல்லுப்பா! நான் அங்கே வந்து கொஞ்சநாள் அபிஷேக் கூட இருக்கேனே!"
வெடுக்கென்று குறுக்கிட்டாள் நித்யா! "அதெல்லாம் இப்ப முடியாதும்மா! போய் ஃபோன் பண்றோம்!"

அமெரிக்கா வந்து நாலு முறை அம்மா ஃபோன் பண்ணியும் நித்யா பிடி கொடுக்கவே இல்லை!
ரகுதான் பிடிவாதமாக விசா, டிக்கெட் எல்லாம் ஏற்பாடு செய்தான்!

போன மாசம் வந்து இறங்கிய அம்மாவைப் பார்த்து நித்யாவே கொஞ்சம் கலங்கித்தான் போனாள்!
ஏதோ வைராக்கியத்தில் உயிரைப் பிடித்து வைத்திருப்பவர்போல் இருந்தவர், என்ன கேட்டும் பதில் சொல்லவில்லை!

மூன்றாம்நாளே தலை சுற்றி விழுந்தவர் ரத்தமாக வாந்தியெடுக்க, ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓட,
டாக்டர் தெளிவாகச் சொல்லிவிட்டார்!

அவருக்கு கார்சினோமா தேர்ட் ஸ்டேஜ்! இனி, அதிகபட்சம் ஆறு மாதம்தான்! மருந்து மாத்திரைகளோ, அறுவை சிகிச்சையோ பலன் தரும் நிலையை அவர் தாண்டிவிட்டார்! வீட்டில் வைத்துப் பராமரிப்பது சிரமம் என்றால் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுங்கள்!

ஒரு நிமிடம்! உடைந்துபோய் அழுத நித்யா உடனே சுதாரித்தாள்!

வீட்டுக்குப் போனதுமே ரகுவிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டாள்! சீக்கிரம் அம்மாவை ஊருக்கு அனுப்பிடலாம்!

"இல்லை நித்யா! நீ என்ன சொன்னாலும் என்னால் அவரது கடைசி காலத்தில் அவரைத் தனித்து விடமுடியாது!
உனக்கு வேண்டுமானால் பாசம் என்பதெல்லாம் வெறும் செண்டிமெண்டாகப் படலாம்! எனக்கு அப்படியில்லை!
எனக்கு நினைவு தெரிய என்மேல் அன்பைப் பொழிந்த ஒரே ஜீவன் அவர்!
அப்படி அவர் ஊருக்குத்தான் போகவேண்டும் என்றால், ஆறு மாதமோ, ஒரு வருஷமோ எத்தனை நாளானாலும் நானும் அவரோடு ஊருக்குப் போய் இருந்துவிட்டு வருகிறேன்!"

"முட்டாள் கணவனே! யூ ஆர் வெய்ட்டிங் ஃபார் வி பி ப்ரொமோசன்!"

"எனக்கு அதைவிட அம்மா முக்கியம் நித்யா!
நாங்கள் எங்கிருப்பது என்பதை நீ முடிவு செய்!"

உறுத்துப் பார்த்தவள், "ஸ்ட்ரேன்ஞ் ஃபெல்லோ" என்று தலையாட்டி நகர்ந்துபோனாள்!

கொஞ்சம் கொஞ்சமாக அவர் வலியில் சுருள்வதும், தாங்கமுடியாது ரத்தமாக வாந்தியெடுப்பதும், ஓயாத இருமலும் என நேற்று டாக்டரிடம் போக, அவர் "ஷீ ஈஸ் அட் டெர்மினல் ஸ்டேஜ்! இனி வெறும் நாள் கணக்குதான்!" என்று சொல்லிவிட, வீட்டுக்கு வந்தவனை தனியே கூப்பிட்டு, தெளிவாகச் சொல்லிவிட்டாள்!
"ரகு, இனி அவர் பயணிக்கும் நிலையில் இல்லை! இருக்கும் காலம் வரை ஆஸ்பத்திரியில் இருக்கட்டும்! அபிஷேக் இதையெல்லாம் பார்க்கவேண்டாம்!"

கல்யாணம் ஆகி, இத்தனை வருடத்தில் முதல் முறை ரகு உறுதியாகச் சொன்னான்!
"இல்லை நித்யா! அம்மா என் கூடத்தான் இருப்பார்!"

"ஓகே ரகு! இதுதான் உன் முடிவு என்றால் நீ இங்கிரு! நானும் என் பையனும் வெளியே போகிறோம்! எல்லாம் முடிந்ததும் சொல்லியனுப்பு! நாங்க வர்றோம்!
என் மகன் இதையெல்லாம் பார்க்கவேண்டாம்!"

"நித்யா! நாளைக்கு உன் மகன் இப்படி நடந்தால் நீ என்ன செய்வாய்?"

"புரிந்துகொள்வேன் ரகு! நான் உன்போல செண்டிமெண்டல் இடியட் அல்ல!"
"நாளைக்குக் காலை உன் முடிவைச் சொல்லிவிடு! குட் நைட்!"

இதோ, ரகு தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருக்கிறான்!

மெதுவாக எழுந்து மணி பார்க்க, நாலு!

இனி தூங்கவும் முடியாது!
கொஞ்சநேரம் வராண்டாவில் உலாத்தியவன்,
மணி ஐந்தானதும் தனக்கும் நித்யாவுக்கும் காஃபி கலந்துகொண்டு வந்து அவளை எழுப்பினான்!
மெதுவாக காஃபியை உறிஞ்சியவாறே கேட்டாள் நித்யா!
"என்ன முடிவு செஞ்சே ரகு?"
சொல்றேன்!

நிதானமாகச் சொன்னான் ரகு! 

"அம்மா, நம்மகூடத்தான் இருப்பாங்க!
இது பிடிக்காமல் நீ போவதாக இருந்தால் அப்படியே போய்விடு! 

இந்த உலகத்திலேயே ரத்து செய்துகொள்ளக்கூடிய ஒரே உறவு கணவன் மனைவி உறவுதான்!

இந்த நேரத்தில் அவரோடு இருக்கமுடியாதவள் எனக்கும் வேண்டாம்!

சிறுவயது முதல் மாமா வீட்டில் ஏச்சும் பேச்சும் கேட்டு அநாதையாக வளர்ந்தவன் நான்!"

"என்மேல் இத்தனை அன்பு காட்டியவர் 'உன்' அம்மாதான்! அதற்காக என் நன்றிக் கடன் இது!"

இதில் உனக்குப் பங்கில்லை என்று நீ நினைத்தால் நிரந்தரமாகக் கிளம்பிவிடு!

சொல்லி முடித்துவிட்டு காஃபிக் கோப்பைகளோடு சமையல்கட்டுக்கு நடந்தான் ரகு!

வெளியே வெளிச்சம் வர ஆரம்பித்திருந்தது!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக