வெள்ளி, 30 செப்டம்பர், 2016

சாமிநாத ஆசிரியர்.
ஜெயா டீச்சரைப்பற்றி எழுதியபோதே சாமிநாதஆசிரியர் பற்றித் தனிப்பதிவு எழுத நினைத்தேன். 
ஒரு பதிவில் உபகதாபாத்திரமாக வந்துபோக அவரை விட்டுவிடச் சம்மதமில்லை!

என்னைச் செதுக்கிய முதல் உளி அவர்!

வரமாக வந்த வாத்தியார்!
நிச்சயமாக ஆசான் என்பதற்கு வாழும் அர்த்தம்!

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி என்ற நாமகரணம் பெற்ற கச்சிதமான பள்ளி!
ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புகள்!
ஊர்க்குளத்தின் கரையை ஒட்டிய அழகுக் கட்டிடம்!

அதற்கு பஞ்சகச்சமும் நெற்றியில் ஸ்ரீசூரணமும் சோடாபுட்டி கண்ணாடியுமாக சாமிநாத ஆசிரியர் சைக்கிள் மிதித்து வருவது அப்படி ஒரு அழகு!

எதிர்ப்படுவோர் வைக்கும் அத்தனை வணக்கங்களும் பதில் வணக்கம் - சின்னவர் பெரியவர் பேதமின்றி!

அத்தனை மாணவர்களுக்கும் அவரைப்பிடிக்க ஆயிரம் காரணங்கள். 
அதில் தலையாயது அன்பு!

பள்ளிக்குள் நுழைந்ததும் சாப்ட்டீங்களாடா என்ற பொதுவான கேள்வி வரும்!

எல்லோரும் ஆமென்று சொன்னாலும், சிலர் கண் சொல்லும் செய்தி அவருக்கு மட்டும் புரியும்!

“டேய், நீ போய் சமையல்கட்டுல உப்புமா இருக்கும்! சாப்பிட்டுட்டு வா, ஏய் வள்ளி, நீயும் போ!”

அப்போதெல்லாம் அமெரிக்காவிலிருந்து மக்காச்சோள மாவும், குருணையும் மூட்டை மூட்டையாக வரும்!

காலையிலேயே, குருணை வேகும் மணம் மூக்கைத் துளைக்கும்!
சாமிநாத ஆசிரியர் ஏற்பாடு அது!

காலை முதல் மணி அடிப்பதற்குள் ஒரு ஐம்பது குழந்தைகளுக்கான உப்புமா ரெடியாகவேண்டும்!

யார் என்ற பேதமில்லை! எந்தக் குழந்தை கண்ணில் பசி தெரிகிறதோ, அதற்கு முதலில் சாப்பாடு! அப்புறம்தான் படிப்பு!

பொதுவாக, வாரம் ஒருமுறையோ, இருமுறையோ வரும் நீதிபோதனை வகுப்புதான் அவர் எடுப்பது!

ஊரில் நடக்கும் நல்லது கெட்டது எதற்கும் சாமிநாத ஆசிரியர் இல்லாமல் இருந்ததில்லை!

அந்த ஆள் எதுக்கு கீழவளவு வீட்டுக்குக்கெல்லாம் போறாரு?
இது ஊரில் மற்றவர்களுக்கு பெரும் ஆதங்கம்!

இதை சிலர் நேரிடையாகவும் கேட்டதுண்டு!

"கீழவளவு ஆளுங்க இல்லேன்னா ஊரு நாறிப்போகும் முதலியாரே!
இன்னைக்கு சாயங்காலம் அவங்க கக்கூஸ் க்ளீன் பண்ண வரலேன்னா நாளைக்கு காலைல நீங்க கல்லு பொறுக்கிக்கிட்டு மலங்காட்டுக்குத்தான் போகவேண்டியிருக்கும்!”  
கொஞ்சமும் தாட்சண்யம் இல்லாத பதில் முகத்தில் அறையும்!

ஊரில் எல்லோரும் கூப்பிடுவதுபோல் “டேய் மாதாரி”ன்னுதான் அவரும் கூப்பிடுவார்! ஆனால் அதில் அதிகாரத்துக்குப் பதில் அன்பு வழியும்!

அவர் டேய் என்று கூப்பிடுவது மாதாரியை மட்டுமல்ல, மணியக்காரர், பெருமாள் கோவில் ஐயர் என்று ஊர் கூப்பிடும் பார்த்தசாரதி ஐயங்கார் உட்பட அனைவரையுமே!

(பார்த்தசாரதி ஐயங்கார் பெண்கள், அதிலும் கருடாழ்வார் என்ற நாமகரணி, மூத்தபெண் பற்றி முடிந்தால் பின்னொருநாளில் பேசுவோம்)

அது மட்டுமல்ல உடன் பணிபுரியும் அத்தனை ஆசிரியர்களும், அந்தப் பையன், பொண்ணுதான்!

இத்தனைக்கும் அவருக்கு அப்போது வயது முப்பதுக்குள்தான் இருக்கும்! ஆனால் அறிவை வைத்து வயதைக்கணித்தால், நூறைத் தாண்டும்!

புரோகிதம் என்று யார் கூப்பிட்டாலும் கண்டிப்பாகப் போவார். 
முன்னால் கூப்பிடுபவருக்கு முன்னுரிமை!

சம்பாவணை, மேலவளவு, கீழவளவு எல்லாவற்றுக்கும் ஒன்றுதான்!
வெற்றிலை பாக்கில் வைத்து நாலணா!

“வேதத்தைக் காசுக்கு வித்ததாலதானடா பார்ப்பான் பிச்சையெடுக்கறான்! என்னையும் பிச்சைக்காரனாக்காதீங்க!”

அந்த நாலணாவும் நாமதாரி கடையில் செலவாணி ஆகிவிடும்!

பள்ளிக்கூடத்தில் ஆரஞ்சு மிட்டாய் விநியோகம் நடந்தால், அன்றோ, அதற்கு முந்தின நாளோ, சாமிநாத ஆசிரியருக்கு சம்பாவணை வந்ததென்று அர்த்தம்!

ஊருக்குள் வரும் சின்னச்சின்ன உரசல்களுக்கு சாமிநாத ஆசிரியர் சொல்வதே இறுதித் தீர்ப்பு!

ஊரில் இரண்டு டீக்கடை!
அதில் கொஞ்சம் பெரியது மிலிட்ரியார் கடை!

மிக்ஸர் பொட்டலமும், டீ டம்ளருமாய் உள்ளே நாங்கள் சாப்பிட, கீழவளவு ஆட்கள் வந்தால், வெளியே தொங்கும் தொட்டாங்குச்சியில்தான் டீ! 
அதையும் அவர்களேதான் கழுவி வைக்கவேண்டும்!

சாமிநாத ஆசிரியரை மிலிட்ரியார் டீ குடிக்க அழைத்தால், ஒரே பதில்தான்!

“மணி, ஒண்ணு, அவனுக்கு க்ளாஸ்ல குடு, இல்லைன்னா எனக்கு அந்தத் தொட்டாங்குச்சியில ஊத்து!”

அவருக்கு ஜெயா டீச்சர் மேல அப்படி ஒரு வாஞ்சை!

“அந்த ஜாதில பொறந்து இன்னைக்கு ஐயர்ப்பசங்களுக்கும் உங்க பசங்களுக்கும் சரஸ்வதி ஆனவடா அந்தப் பிள்ளை!”

வருஷம்தோறும் ஈரோட்டிலிருந்து புத்தகம்,நோட்டு வாங்கிட்டு வர்றது சார் வேலை!

மாட்டுவண்டில போட்டு எடுத்துக்கிட்டு வந்து ஒவ்வொரு கிளாஸா வீட்டுக்கு வரச்சொல்லி விநியோகம்!

புதுப் புத்தக மணத்தை ஆசையாய் இழுக்கும்போது சொல்லுவார்!

“நல்லா இழுத்துக்கடா!
அது இங்க் வாசமல்ல, எழுதுபவன் எழுத்து அர்த்தத்தோட வாசனை!”
“இதை நாங்க சொல்ற அர்த்தம், நீங்க புரிஞ்சுக்கற அர்த்தம் எல்லாம் அழுக்குப் பண்ண, வருஷம் முடியறதுக்குள்ள நாறிப்போகும்!”

பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு பாத்தி, ஒரு தோட்டம்!

அதில் அந்தந்த வகுப்பு மாணவர்கள் தக்காளி, கத்திரி, வெண்டை என பொறுப்பு!

விளைச்சலை விற்று வரும் பணம், அந்த வருடம் அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு! 

போனஸாக சாமிநாத ஆசிரியர் தரும் பேனா!

நீதிபோதனை வகுப்பில் அத்தனை கதைகள்! 
எல்லாமே உறுத்தாத போதனையோடுதான் முடியும்!

பாரதி அவர் ஆதர்சம்!
“அந்தக் கிறுக்கன் எங்க ஜாதியில பொறக்காம இருந்திருந்தா, நீங்க, நான் எல்லாருமே கொண்டாடியிருப்போம்!”

அவர் சொன்னது புரியும் வயது வந்தபிறகு அவரை நான் சந்திக்க வாய்க்கவில்லை!

எல்லா வகுப்பிலும் மக்குப் பசங்களுக்கு அவர் வீட்டில் இலவச டியூசன்!
- வெல்லம் போட்ட கடுங்காப்பியோடு!

“ஐயையே, நீங்க ஏன் சார் பொம்பளை மாதிரி சமைக்கிறீங்க?
பேசாம கல்யாணம் பண்ணிக்கலாம்ல?”

“இன்னொரு செல்லம்மா இந்த உலகத்துக்கு வேண்டாம்டா” ன்னு சத்தமா சிரிப்பார்!

சாமிநாத ஆசிரியர் வீட்டில் காப்பி குடிச்சேன் அப்படின்னு எங்க பாட்டிகிட்ட சொன்னா, கண்டபடி திட்டு விழும்!
அந்த ஆள் கீழவளவு புள்ளைகளையும் உள்ள விட்டுக்கிட்டு பொழங்குறான் அவன் வீட்ல காஃபி குடிக்குது பார் இது!
இது சொல் பேச்சு கேக்காமத்தான் அலையப்போகுது!

தீர்க்கதரிசி என் பாட்டி!
அப்படித்தான் ஆச்சு!!

ஒவ்வொரு வருஷமும் முழு ஆண்டுப் பரீட்சை முடிஞ்சதும் தவறாமல் ஒரு காட்சி அரங்கேறும்!

அஞ்சாப்பு முடிச்ச பசங்க பொண்ணுங்க எல்லாம் சாமிநாத ஆசிரியரைக் கட்டிக்கொண்டு அழும்!

சார், நீங்க ஐஸ்கூல் வந்துருங்க ஸார்!

கண்கள் கசிய, சிரித்துக்கொண்டே தட்டிக்கொடுத்து அனுப்புவார்!
இது ஒரு வருடம் கூட தவறாத காட்சி!

ஒருமுறை பள்ளி நாடகத்தில் நேருவும் ஜாக்சன் துரையும் என்று ஒரு நாடகம்! வசனம், சாமிநாத ஆசிரியர்!

சிறப்பு விருந்தாளி, மாவட்டக் கல்வி அதிகாரி சாமிநாத ஆசிரியர் காலில் விழுந்து கும்பிட்டதை ஊரே வியந்து பார்த்தது!

தட்டமுடியாது பாட்டி வீட்டிலிருந்து அப்பா அம்மாவோடு போக நேர்ந்தபோதும், ஒவ்வொரு விடுமுறையிலும் ஊருக்குப் போகும்போதெல்லாம் சாமிநாத ஆசிரியரைப் பார்க்காமல் வந்ததில்லை!

எட்டாவது படிக்கும்போது சார் காங்கேயம் ஸ்கூலுக்கு மாறுதல் வாங்கிப்போய்விட்டார் என்ற தகவல்!

அதற்குப்பின் ஒரு சந்திப்பில் பள்ளித்தோழன் ராஜாமணி சொன்னது 
“சாமிநாத ஆசிரியர், அறுத்துக்கிட்டு வந்த ஜெயா டீச்சரை கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு சிலர் சொல்றாங்கடா!”

இப்போதுபோல் அப்போது தகவல் தொடர்பு வசதிகள் இல்லை.

எனினும் சற்றே மெனக்கெட்டிருந்தால் சாமிநாத ஆசிரியரைத் தேடிப்போய் சந்தித்திருக்கலாம்!

ஆனால், ராஜாமணி சொன்ன செய்தி உண்மை என்றே நம்புவது சுகமாக இருந்தது!

தேடிப்போய் அது பொய் என்று போனால், அதை சந்திக்க எனக்கு  மனமில்லை!வியாழன், 29 செப்டம்பர், 2016

உலகின் முதல் மனிதன்!நிதானமாக நடந்துகொண்டிருந்தான் ஆதாம்.

நேற்றுவரை இந்த உலகமே அவனுக்குச் சொந்தமானதுபோல் இருந்தது!
இன்றைக்கு விடிந்ததுமே எல்லாமே மாறியிருப்பதாகப்பட்டது!

தனக்கு சமமான தோழமையாகப்பட்ட சக உயிரினங்கள் எல்லாமே அந்நியப்பட்டுத் தெரிந்தன!

இவை எல்லாவற்றினும் நான் உயர்ந்தவன். இந்த உயிரினங்கள் எல்லாம் எனக்கு கீழானவை!
இந்த நினைப்பு அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது!

முதலில், எண்ணங்கள் என்பதே புதுமையானதாகத்தான் இருந்தது.

முன்கால்களை ஊன்றி நடக்காமல் பின்னங்கால்களால் மட்டும் நடக்க ஆரம்பித்து ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்கும்!

இப்போது முன்னங்கால்கள் முற்றாக வடிவம் மாறி, வலு குறைந்து தோளிலிருந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன!

ஆனால் இதுவும் வசதியாகத்தான் இருக்கிறது!

நிமிர்ந்து நிற்பதும் நடப்பதும், முன்கால்கள் - சே! இனி இதை வேறு பெயரில்தான் சொல்ல வேண்டும் - கை என்று சொல்லுவோம் - மூலம் எதையும் எடுப்பதும் பறிப்பதும் என்று!

நான்கு கால்களில் நடக்கும் மற்ற உயிரினங்கள் பார்ப்பதைவிட உயரத்திலிருந்து பூமியைப் பார்க்கும் கோணம் மாறியதில் எல்லாமே வித்தியாசமாக, ஆனால் வசதியாக இருக்கிறது!

கொஞ்சம் கொஞ்சமாக உடலில் மயிர் குறைந்து, ஒரு பளபளப்பும் நேர்த்தியும் வந்திருக்கிறது!


ஏன் நான் மட்டும் இப்படி வித்தியாசப்பட்டுப் போனேன்?

இதுதான் மற்ற உயிரினங்களை நான் அடிமைப்படுத்த இயற்கையோ, இறையோ எனக்கு வழங்கிய கொடையோ?

மனம் போன போக்கும் சிந்தனைகளும் முற்றிலும் புதுமையாக இருக்க, காலாற நடந்துகொண்டே இருந்தான் ஆதாம்!

இன்றைக்கு ஏதோ மாறப்போகிறது, ஒரு புதிய அனுபவம் நேரப்போகிறது என்று தோன்றிக்கொண்டே இருந்தது!

பசிப்பதும், புசிப்பதும், செரிப்பதும் கழிவதும் என்று மற்ற உயிரினங்கள் செய்வது எல்லாமே செய்தாலும் நேற்று இரண்டு குரங்குகள் இணை சேர்வதைப் பார்க்க நேர்ந்ததிலிருந்து வேறொரு பசி அவனை வதைக்க ஆரம்பித்திருந்தது!

இந்தப் பசி வேறுவிதம்!

இது உடனே வடிகாலோ மாறுதலோ தேடாவிட்டாலும் இந்த தாபமும் தாகமும் தீராவிட்டால் என்ன ஆவோம் என்பது அவனுக்குப் புரியவில்லை!

தனக்கு நிகரான இன்னொரு உயிரைச் சேரும்வரை இந்த தாகம் தீரப்போவதில்லை!

தன்போல் ஒரு உயிரினத்தை இந்த வனமெங்கும் தேடி சலித்துவிட்டான்!
இதோ, கால்போன திசையில் தன்னைப்போல் ஒரு ஜீவனைத் தேடி நடந்துகொண்டிருக்கிறான்!

அந்த வனத்தில் இன்னொரு கோடியிலிருந்து அவனைப்போலவே இன்னொரு உருவம் சுற்றிலும் தேடிக்கொண்டே நடந்து வந்துகொண்டிருந்தது!

ஆனால் அது பெண் வடிவம்!

அதுவும் அவனைப்போல் தாபத்தோடும் தேடலோடும் வந்துகொண்டிருந்தது!

இடைவழியில் வழிமறித்து உறவுக்குக் கெஞ்சிய ஒரு குரங்கை சீறி விரட்டினாள்.
சீ போ! நான் உன்னிலும் உயர்ந்தவள்!
என்போல் ஒருவன் எனக்காக வருவான். நான் அவனோடு கூடி எங்களைப்போல் ஒரு இனத்தைப் படைப்பேன்!

நினைவுகள் மட்டுமே!
இது எத்தனைதூரம் சாத்தியம்?

பசித்த வயிறும் தகித்த உடலுமாக நடந்துவந்த அவளை விதியோ, இயற்கையோ, இறையோ, தற்செயலோ ஆதாம் இருந்த திசை நோக்கியே தள்ளிச் சென்றது!

தளர்நடை போட்டு வந்த ஆதாமின் கண்களில் திடீரெனத் தட்டுப்பட்டது அந்தப் பெண் வடிவம்!

இதோ, என்னைப்போல் ஒருத்தி!

இனி, என்னால் ஒரு புது உயிரினம் படைக்கமுடியும்!

சூரியன் ஒளியில் தகித்த பெண் வடிவம் அவனை உசுப்பியது!

ஒரே பாய்ச்சலில் ஓடிவந்து, பின்னாலிருந்து அவள் தோளைத் தொட்டான்!
திடுக்கிட்டுத் திரும்பிய ஏவாள் ஆவேசத்தோடு அவன் அணைப்பில் விழுந்தாள்.

இயற்கையும், பிற விலங்குகளும் வேடிக்கை பார்க்க, வெறிகொண்ட மிருகங்களாகப் பிணைந்தன இரு உடலும்!

அப்படியே கழிந்தன சில வருடங்கள்!
பசித்தபோது புசிப்பதும், நினைத்தபோது இணைவதும் என்று மிருக வாழ்வு!
பலன்களும் குறைவில்லை! அடுத்தடுத்து சில குழந்தைகள் குட்டிகளாய் மண்ணில் விழுந்து தன்போக்கில் வளர்ந்தன!

இருந்தும் ஏவாளுக்குள் இன்னதென்று புரியாத ஒரு குறை உறுத்திக்கொண்டே இருந்தது!

ஏதோ ஒன்று இன்னும் நடக்கவேண்டியிருப்பதாய் உள்மனம் கூறியது!
அன்று ஏதும் பேசாமல் வெளிச்சம் பரவ ஆரம்பித்த வேளையில் ஒரு புதிய திசையில் ஓடினாள்! மனதை சுண்டியிழுக்கும் ஒரு  அபூர்வமான வாசனை அந்த திசையிலிருந்துதான் வந்துகொண்டிருந்தது!

ஏதோ ஒரு அபூர்வமான கனி அங்கிருப்பதாய் உள்ளுணர்வு விரட்ட, வேறு எதையும் கண் திறந்து பார்க்காமல் ஓடினாள்! திடீரென்று எதிர்பட்டது அது!
ஒரு அழகிய பழத்தோட்டம்!
இதுவரை அவள் காணாத ஒரு கனி!
எட்டாத உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது!


அதன் வடிவமும் வண்ணமும் வாசனையும், அப்போதே அதை சாப்பிடத் தூண்டியது!

எத்தனை முயன்றும் அது அவளுக்கு எட்டாமலே வேடிக்கை காட்டியது!
பார்க்கப்பார்க்க, அத்தனை தோற்ற முயற்சிக்குப் பின்னும் அதை உண்ணும் ஆவல் கொஞ்சமும் குறையவில்லை!

வெறி பிடித்தவள் போல் ஆதாமைத் தேடி ஓடினாள்!

அவள் வந்த வேகமும் கோலமும் ஆதாமை உலுக்கியது!

எதுவும் சொல்லாமல் ஆதாமை இழுத்துக்கொண்டு செலுத்தப்பட்டவள் போல் ஓடினாள் ஈடன் தோட்டத்துக்கு!

போகும் வழியெங்கும் எதிர்ப்பட்ட எல்லா விலங்குகளும் போகாதே என்று வழிமறித்துக் கதறின.
எதுவும் ஏவாள் காதில் விழவில்லை!

பெண் இழுப்புக்கு ஓடிக்கொண்டிருந்த ஆதாமுக்கு, அவளைத் தவிர ஏதும் தெரியவில்லை!

எப்போது அவளை இணைவோம் என்ற தாபம் செலுத்த, போகுமிடம் தெரியாமலே ஓடிக்கொண்டிருந்தான்!

ஈடன் தோட்டம் வந்தேவிட்டது!

உயரே தொங்கிய கனி இப்போதே எனக்கு வேண்டும் என்ற ஏவாளின் நிபந்தனை அந்த நிமிடக் காமவேட்கைக்கு இடை நின்றது!

பாய்ந்து மரம் ஏறியவனை வளைத்துத் தடுத்தது காவலிருந்த அரவம்!
வேண்டாம் ஆதாம்! அதை உண்ணுவது இந்த உலகின் அழிவுக்கு உன் மூலம் வழிசெய்யும்!”  “தேவையயற்ற அறிவு அழிவுக்கே இட்டுச்செல்லும்- தாமதமாகவேனும்!”
கேட்கும் நிலையில் அவளை வைக்கவில்லை தாபம்!

முரட்டுத்தனமாய் விலக்கி கிளைகிளையாய்த் தாவினான் ஆதாம்!
வெடுக்கென்று கொத்தோடு பழங்களைப் பறித்தவன் ஒரே தாவலில் தரை இறங்கினான்!

ஏவாள் முன் மண்டியிட்டுக் கனிகளை நீட்டினான்!

ஆவலோடு வாங்கிக் கடித்தவள் முகம் சுருங்கியது!

முதல்முறை வெட்கம் என்ற வினோத உணர்ச்சி உந்த, அவள் நிர்வாணம் அவளுக்கே கூசியது!

சட்டென்று கை கொண்டு அவள் தன் நிர்வாணம் மறைக்க,
மர்மப்புன்னகை பூத்தது சாத்தான்!


தோற்றுச் சரிந்தான் தேவன்!

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சர்வாதிகாரி!

உலகத்தின் கடைசி சர்வாதிகாரி!


ஹோலோகிராஃபிக் இன்டெர்ஃபேஸ் உரையாடலில் நோவாவிலிருந்த வைஸ் பிரசிடெண்ட்டுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த ஆத்மாவுக்கு  துருவன் கேள்வி முதலில் புரியவில்லை!

அப்பா, சர்வாதிகாரின்னா யாருப்பா?”
கொத்தடிமைன்னா என்ன?”

நாம் பிறகு பேசுவோம் ஆத்மா, முதலில் குழந்தையின் சந்தேகத்தை தெளிவுபடுத்து சொல்லியபடி கரைந்து காணாமல் போனார் வி பி!

2516ல் முக்கியமான விதி, என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதிலை தேடிக் கண்டுபிடித்தாவது சொல்லவேண்டும் என்பது.

இந்த சில நூற்றாண்டுகளில் எத்தனை மாற்றம்!

ஜனத்தொகை எல்லைமீறி பூமி தடுமாறிக்கொண்டிருந்தவேளை, உயிர்வாழ சாத்தியமுள்ள நோவா, ஆல்ஃபா, ஏவிட்டா கிரகங்களில் எல்லோரும் குடியேற, இப்போது உலகம் என்பதற்கான அர்த்தம் ஏழு கிரகங்களின் தொகுப்பு!

வழக்கிலிருந்த அத்தனை மொழிகளும் அழிந்துபோய், தமிழ் மட்டுமே ஒரே தொடர்பு மொழி!

இன்னும் பண்டைக்காலத்தில் தமிழ்நாடு என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு பிராந்தியம் மட்டும் ஆங்கிலம் என்னும் மொழியை விடாமல் பிடித்து வைத்துக்கொண்டிருப்பதாய் சொல்கிறார்கள்!

இலக்கியம், வரலாறு இவற்றை தன் விருப்பமாகப் படிக்கும் மகன் ஈராயிரம் ஆண்டு தமிழக வரலாறு என்றொரு மின்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறான்.

பத்து வயதுப் பையன் ஆய்வுக்கட்டுரை எழுதுவது முன்னேற்றம் என்றால், இப்படியான தடுமாறவைக்கும் கேள்விகள் அதன் விலை!

கொத்தடிமை என்பது, ஒரு மனிதனை சுய சிந்தனை இல்லாமல், மற்றொரு மனிதனுக்கோ, அமைப்புக்கோ அடிமையாக வைத்திருப்பது. அவர்கள் கேள்வி கேட்கவோ, மறுத்துப் பேசவோ உரிமையற்றவர்கள்.
 “சர்வாதிகாரி என்பவர், தன் முன்னால் யாரும் சரிசமமாக நிற்பதை விரும்பாதவர்.
மாற்றுக்கருத்து, விவாதம் இவை எல்லாம் சட்டவிரோதம் என்று நினைப்பவர்.

இந்த வழக்கம் எந்த ஆண்டுவரை இருந்தது?”

மனிதன் நாகரீகம் அடைய ஆரம்பித்து முதல் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஆரம்பித்த இந்தப் பழக்கம், பத்தொன்பதாம் நூற்றாண்டோடு வழக்கொழிந்து போனது!
உகாண்டா என்னும் ஒரு சிறிய நாட்டை ஆண்ட இடி அமீன்தான் கடைசி சர்வாதிகாரி!
கொத்தடிமை முறை அதற்கு முன்பே ஒழிந்துபோனது!

போப்பா, நீ தப்புத் தப்பாய் சொல்லித்தர்றே!
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுவரை கொத்தடிமை முறை இருந்தது, உலகத்தின் கடைசி சர்வாதிகாரி பெயரும் தப்பு!

இப்போது ஆத்மாவுக்கே ஆச்சர்யம்!

தனக்கு வரலாற்றுத் தேர்ச்சி அதிகம் என்ற எண்ணம் அவனுக்கு எப்போதுமே உண்டு!
மகன் சேகரித்துவைத்திருந்த தகவல்கள் படிக்கப் படிக்க அவனை ஆச்சர்யப்படுத்தியது!

இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி!

நாகரீக வளர்ச்சியும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களும் புது உயரங்களைத் தொட ஆரம்பித்திருந்த காலம்!
உலகின் பல பகுதிகளில் ஜனநாயகம் என்ற ஆட்சிமுறை பரவலாக வேரூன்றி இருந்த காலம் அது!

உலகின் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை பெற்ற அந்த நாட்டில்தான் உலகின் கடைசி சர்வாதிகாரி இருந்தார் என்ற தகவல் ஆத்மாவுக்கு ஆச்சர்ய முரண்!

நம்ப முடியாத அந்தத் தகவல் படிக்கப்படிக்க அதிர்ச்சியையே தந்தது!
ஜனநாயகமும், மக்கள் உரிமைகளும் தழைத்து வளர்ந்த அந்தக் காலகட்டத்தில் ஒரு இருண்ட காலம் அது!அந்தக் குட்டி நாட்டை ஆட்சிசெய்த அந்தச் சர்வாதிகாரிக்கு, தன்முன் யார் நிமிர்ந்து நின்று பேசினாலும் பிடிக்காது.

தன்னுடைய அமைச்சரவை சகாக்கள் யாரையும் அமரவைத்துப் பேசியதே இல்லை என்பதோடு, அவர்கள் அவர் முன் எத்தனைதூரம் குனிந்து வளைந்து நிற்கிறார்கள் என்பது அவர்களின் முக்கியத் தகுதியாக கருதப்பட்டது!

எந்த அமைச்சருக்கும், எந்த அதிகாரிக்கும் பதவிகள் நிரந்தரமில்லை!
நொடிக்கு நொடி மாறும் மாறுதல்களுக்க மக்களுக்கு எந்தக் காரணமும் சொல்லப் படவில்லை!

தன்னால் அமைச்சர் ஆனவர்களைப் பந்தாடும் அதே வேகத்தோடு அரசு அதிகாரிகளையும் பதவி மாற்றம் செய்வது அவருக்குப் பிடித்தமான விளையாட்டு!

அவர் காலத்துக்கு சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பே வழக்கொழிந்துபோன மன்னர் ஆட்சி முறையின் நீட்சியாகவே தன்னை அவர் கருதினார்!

வெயிலே பார்க்காத அவர் வீட்டை விட்டு வெளியே வருவதே திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது!

அவர் வீட்டிலிருந்து வெளியே வரும் பாதை எங்கும் வண்ணவண்ணப் பதாகைகள் வைக்கப்பட்டன!

அவர் காதுபட ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட ராஜகுல திலக என்றவகையான கோஷங்கள் அடுக்கடுக்காய் கூவப்பட்டன!

போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது அடை மொழிகள் உருவாக்கப்பட்டு ஆளுயர எழுத்துக்களில் வழியெங்கும் ஜொலித்தன!

தன் சக அமைச்சர்களின் குனிந்து நிற்கும் முதுகுகளும் பிருஷ்டங்களும் மட்டுமே அவர் கண்ணுக்குத் தெரியும்வண்ணம் நடைமுறைகள் மாற்றப்பட்டன!

அந்த அடிமைகளுக்கு முகங்கள் என்ற ஒன்று தேவையில்லை என்ற பொது விதி உருவாக்கப்பட்டது!

தன்னுடைய பெயரைச் சொல்லும் உரிமை நாட்டில் யாருக்கும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாகவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டது!

அடைமொழிகளால் மட்டுமே தான் அழைக்கப்படவேண்டும் என்பது அவரது விதிமுறைகளில் முக்கியமானது!

மக்கள் பிரதிநிதிகள் கூடும் மன்றத்தில் தனக்கு எதிர் வரிசையில் ஆட்கள் இருப்பதை எப்போதும் அவர் விரும்பியதே இல்லை!

அப்படி அங்கு ஆட்கள் அமர நேரும்போது, அவர்களைக் கூச்சலிட்டு அவமானப்படுத்தி வெளியேற்ற அடிமைகளுக்குள் எப்போதும் போட்டாபோட்டி!

தலைமையைக் குளிர்விக்கும் போற்றிகளும் புகழுரைகளும் அவருக்கு அலுக்க ஆரம்பித்த காலத்தில், மன்னர் அவைகளில் இருந்த விதூஷகர்களை உருவாக்கினார்!

அவர்கள் பாடல்கள் பாடியும் நடனம் ஆடியும் அவரை மகிழ்வித்தனர்!

அந்த உற்சாகத்தில், எதிரே ஆட்கள் இல்லாத சபையில் டான் குவிக்ஸாட் போல வீர வசனம் பேசுவது அவரது விருப்பமான பொழுதுபோக்கு!

தனக்கு முன்னால் ஆட்சி செய்தவர்களையும், தனக்குப் பின் ஆட்சியாளர் ஆக நினைப்பவர்களையும் அவர்களது வயது உடல்நிலை இவை குறித்து மட்டமான வார்த்தைகளால் வசை பாடுவதற்கே சட்டமன்றம் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது!

இதையெல்லாம் கேள்வி கேட்கவேண்டிய மக்களை சிந்திக்கவே விடாமல் எந்தநேரமும் போதையில் வைத்திருக்க, தெருக்கள்தோறும் சாராயக் கடைகளை அரசே திறந்தது!

அரசின் முழு வருமானமும் சாராயம் காய்ச்சி விற்பதில் என்றானது!
அந்த சாராயத்தையும் காய்ச்சி விற்றது அவரும் அவரது கூட்டாளியான நிழல் சர்வாதிகாரியும்!

தனக்கு முன்னால் ஆட்சி செய்தவர் அமல் படுத்திய எல்லா மக்கள் நலத் திட்டங்களையும் தவறாமல் தடை செய்தவர், அவர் காலத்தில் விதைக்கப்பட்ட தீமைகளை மட்டும் உரம் போட்டு விருட்சமாக வளர்த்தார்!

சாராயக்கடையில் மாக்கள் கொண்டுவந்து கொட்டும் செல்வத்தில் ஒரு கடுகளவு பங்கை எடுத்து அவர்களுக்கே இலவசமாகக் கொடுத்தார்!
அதிலும் மறக்காமல் தன்  உருவத்தையும் பெயரையும் பதித்தே கொடுத்தார்!

மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் அத்தனை திட்டங்களுக்கும் தன்  பெயரைச் சூட்டி, ஏதோ தன் பரம்பரைச் சொத்தை மக்களுக்கு தானமாகக் கொடுத்ததுபோல் ஒரு பிம்பத்தை விதைத்தார்!

தட்டிக் கேட்கவேண்டிய எதிர்க்கட்சி, இதையெல்லாம் ஆரம்பித்தது தாங்கள்தான் என்ற குற்ற உணர்ச்சியில் முடங்கிக் கிடந்தது!

ஆனால் அந்த சர்வாதிகாரிக்கும் ஒரு மனக்குறையும், ஒரு மனவருத்தமும் இருந்தது!

சர்வ அதிகாரமும் படைத்த உயரிய ஜீவராசியான தான், ஐந்தாண்டுக்கு ஒருமுறை மக்களை சந்திக்கச் செல்வது அவருக்கு ஒரு அவமானமான மனக்குறையாகவே இருந்தது!

வானத்தில் பறந்தாலும் ஒருமுறையேனும் தரையிறங்கவேண்டும் என்ற இந்த அமைப்பு அவருக்கு சகிக்கமுடியாததாக இருந்தது!

காணொளி மூலமே தான் தரும் தரிசனம் இந்த அடிமைகளுக்குப் போதாதா என்ற குமுறல் அவருக்கு எப்போதுமே உண்டு!
இதைத் தவிர்க்க, தான் அந்த நாட்டின் பிரதான அமைச்சராய் மாறி சட்டத் திருத்தம் மூலம் மீண்டும் தடையற்ற மன்னராட்சி கொணரலாம் என்று ஒருமுறை அவர் குடித்த மனப்பால் ஏனோ ஜீரணம் ஆகவில்லை!

மனவருத்தம் என்னவென்றால், அந்த நாட்டின் அரசியல் அமைப்பு, ஆள்பவர் மீதும் வழக்குத் தொடரும் உரிமையை மக்களுக்கும், அதை விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கும் என்று வகுத்துத் தொலைத்திருந்தது!

தான் ஆட்சியில் அமர்ந்த முதல் சில ஆண்டுகளில், அனுபவக்குறைவு காரணமாக வெளிப்படையாக ஆவணங்கள் மூலம் தான் வாங்கிய சில சொத்துக்கள் தனக்கே சுமையாகிப்போகும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை!

அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டபோது அடிமைக்கூட்டம் அதிர்ந்துபோனது!
உயிரோடு மூன்று பெண்களைக் கொளுத்தித் தன் எதிர்ப்பைப் பகிர்ந்துகொண்டது!

அதன்பின் அவர் அந்த வழக்கை ஒரு சாதனைக்காலம் இழுத்தடித்தும், ஒரு வளையாபதி நீதிபதியால் தண்டிக்கப்பட, கொத்தடிமைக்கூட்டம் மண்சோறு தின்றும், தீக்குளித்தும் தீச்சட்டி எடுத்தும் அலகு குத்தி ஆட்டம் போட்டும் தன் அடிமைச் சிறுமதியை நிரூபித்து அவரைக் குளிர்வித்தது!


இடையில் பிணையத்தில் வெளிவந்த அவரை, வழியெங்கும் பூத்தூவி வரவேற்றது!

பிறகு ஒரு கணக்கியல் மேதை மூலம் அவரது குற்றம் அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கும் குறைவானது என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது!

இருந்தும் ஊழ்வினை உச்சநீதிமன்றம் போனது!
தன் ஆயுட்காலக் கூட்டாளிகள் மத்தியில் ஆட்சியில் இருக்கும் தெம்பு அவரைக் கொஞ்சம் அலட்சியமாகவே இருக்கவைத்தது!
இருந்தும் ஏனோ சில தகவல்கள் கொஞ்சம் கவலை தர,
 சளிப்பிடித்ததென்று மருத்துவமனையில் ஐக்கியமானார்!

இப்போதும் அடிமைக்கூட்டம் பால் காவடியும் தீச்சட்டியுமாய் அலைய, இன்னொரு கொத்தடிமைக்கூட்டம் இரக்கமற்ற சளியைக் கண்டித்து போஸ்டர் அடித்து ஒட்டியது!

அண்டை மாநிலத்தில் ஜனநாயகத்தை அனுபவிக்கும் மக்கள் தங்களைப் பார்த்து கைகொட்டி சிரிப்பதை மறந்து அடிமைக்கூட்டம் ஆஸ்பத்திரி வாசலில் போலிக்கண்ணீர் விட்டு தவம் கிடந்தது!

படிக்கப்படிக்க ஆத்மாவுக்கு ஆத்திரம் பொங்கியது!


இது நிச்சயம் கட்டுக்கதை! ஒரு ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் ஒருபோதும் நடந்திருக்காது!

உலகெங்கும் விஞ்ஞானமும் அறிவும் விருத்தியடைந்து மக்கள் அறிவு தாகம் எடுத்து அலைந்த காலத்தில் ஒரு இன மக்கள் மட்டும் இவ்வளவு மதியற்று அடிமைகளாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை!

அதிலும் உலகத்துக்கே அறிவாளிகளை ஏற்றுமதி செய்த, இன்றும் அழியாத ஒரே மொழியை உருவாக்கி வளர்த்த தமிழினம் இப்படி எந்தக் காலத்திலும் இருந்திருக்காது!

சொன்னபடியே, சரித்திரக் குறிப்புகளைத் தந்த இணைப்புப் பக்கத்தைத் துண்டித்து எறிந்தான் ஆத்மா!

உண்மை அவனைப் பார்த்து கைகொட்டிச் சிரித்தது ஊமையாய்!!